top of page

பூவும் நானும் வேறு-3

இதழ்-3


குற்றமிழைத்தது என் விதியென்று கொண்டால்...


என் அறியாமையும் பெறுங்குற்றமே!

அக்குற்றமிழைத்தவள் நானேயென்றால்...


என் நீதியரசன் நீயேயாவாய்!

தண்டனைகள் முடிந்தபின்னும் கூட...


உன் தீர்புக்காக தலை நிமிர்ந்து நிற்பதால்...


நீ புயலென்றறிந்தே உன் பாதையில் நான் நடப்பதால்...


பூவும் நானும் வேறுதான்!


***


கட்சி தொண்டர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் சிலர்; அவர்களுக்குள் கலந்து இருந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வாயிலில் குழுமி இருக்க, காலை நேரத்திலேயே வெகு பரபரப்பாக இருந்தது சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த ஆடம்பர பங்களா.


அந்த பரபரப்பில் தன்னை புகுத்திக்கொள்ளும் முன், கொஞ்சம் நிதானமாகக் காலை உணவை உண்டுகொண்டிருந்தார் அமைச்சர் புஷ்பநாதன்.


வேலை ஆட்கள் பயபக்தியுடன் உணவைப் பரிமாறிக்கொண்டிருக்க, அவருக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு, உரத்த குரலில் எதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவரது சகதர்மிணி லலிதா.


உறக்கம் அகலாமலோ அல்லது அவன் முந்தைய தினம் அருந்திய மதுவின் போதை தெளியாமலோ, மந்த கதியில் அங்கே வந்து உட்கார்ந்தான் அவர்களுடைய செல்வப் புதல்வன் ஜவஹர்.


அவனைப் பார்த்த அடுத்த கணம், "ஏண்டா ஒரு வாரமா எங்கடா போயிருந்த! கண்ணுலயே படல! நைட் பார்ட்டினு கும்பல் கும்பலா பசங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணற செய்தியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அல்லு விட்டு போகுது!


அதுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?


எதையாவது செஞ்சு வெச்சு கட்சியிலே என்ன அசிங்கப் படுத்திடாத.


கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ.


வாரத்துக்கு ஒரு தடவ அமைச்சரவைய மாத்திக்கிட்டே இருக்காங்க. எங்க பதவி போயிடுமோன்னு அப்படியே பக்குனு இருக்கு எனக்கு!" என அவர் பொரிந்து தள்ள,


"அதுதான் மூத்தவன் வியாபாரத்தை எல்லாம் பொறுப்பா கவனிச்சுக்கறான் இல்ல; இவனையும் ஏன் இப்படி நொய்யி நொய்யின்னு புடுங்கறீங்க?


அவன் வயசு; அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான்!


நீங்க ரொம்ப யோக்கியமா என்ன? எதுக்கும் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க, எதிர்க் கட்சி காரனுங்க செம காண்டுல இருக்கானுங்க!


என்னமோ சொல்ராங்களே மீமீயோ கீமியோ அதுல போட்டு உங்களைக் கிழிக்க போறானுங்க!" என உரத்த குரலில் நன்றாக மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அவனுக்குப் பரிந்து வந்தார் லலிதா.


வீட்டில் வேலை ஆட்களுக்கு முன் அவர் அப்படி ஆரம்பிக்கவும், கோபத்தில் புஷ்பநாதனின் முகம் விகாரமாக மாற, "ஏய்! என்ன பத்தி இப்ப என்னடி பேச்சு! எங்க எப்படி நடந்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். முதல்ல உன் பிள்ளையை அடக்கிவை! மானம் போனா கூட பரவாயில்ல! *சுரே போச்சுன்னு தொடைச்சி போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். பதவி போனா உசுரே போயிடும்! எப்படா கவுக்கலாம்னு அவன் அவன் காத்துட்டு இருக்கான்; நீ வேற *** எடுக்காத!" என்றவாறு ஆத்திரத்துடன் அவரை பிடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.


தன்னை சமாளித்துக்கொண்டவராக, "கண்ணு அப்பா சொல்றதையும் கொஞ்சம் கேளு ராசா! நீதான அவரோட அரசியல் வாரிசு!


உங்க அண்ணி வேற சாக்கு கிடைக்கும்போதெல்லாம் உன்னைச் சாடை மாடையா நக்கல் பண்றா கண்ணு!


கொஞ்சம் புரிஞ்சிக்கோ!" என லலிதா மகனுக்கு அறிவுரை வழங்க, "மா! நீயுமா! விடும்மா; எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்!" என அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு, சாப்பாட்டில் கவனமானான் ஜவஹர்.