top of page

பூவும் நானும் வேறு-2

இதழ்-2


கடந்தகால பாவத்திற்கும்... நிகழ்கால புண்ணியத்திற்கும்...


இடைப்பட்ட தூரத்தைக் கடக்க இயலாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என் எதிர்காலம்;


எல்லா காலத்திலும் நான் மாட்டும் நானாகவே இருப்பதால்;


வாடி உதிர்ந்துபோகும் குணத்தை நான் கொள்ளாமல் இருப்பதால்;


பூவும் நானும் வேறுதான்!


***


மாலை வீடு திரும்பியது முதல் மகளைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் ராகவன். காஃபியை கலந்துகொண்டு வந்து அவருடன் உட்கார்ந்து அதை அருந்தி முடிக்கும் வரையிலும் சரி, அதன் பின் அவருடைய கையை பிடித்துக்கொண்டு, கடைக்கு அழைத்துச் சென்று, காய்கறிகள் வாங்கிவந்த நேரத்திலும் சரி, வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், எதோ சிந்தனை வயப்பட்டவளாக இருந்த மகளின் தோற்றம் அவருடைய மனதைக் கலங்கச் செய்தது.


'எதையாவது கேட்டு அவள் மனதை வருத்த வேண்டாம்!" என எண்ணி இரவு உணவு உண்டு முடிக்கும் வரையிலும் பொறுமை காத்தவர், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், "வசும்மா! ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா? இல்ல ஹோம்ல இருந்து கால் பண்ணி ஏதாவது சொன்னாங்களா?" என கேட்டார் ராகவன்.


அவர் என்னவோ சாதாரணமாகக் கேட்பதுபோல்தான் கேட்டார். ஆனாலும் அவர் மனதில் குடி கொண்டிருந்த பதட்டம், அவரையும் மீறி வெளியில் கொஞ்சம் தெறித்துவிட,


'ஐயோ அப்பாவை கலவரபடுத்திட்டோமோ!' என வருந்தியவள், "ஹோம்ல அம்மா நார்மலாதான் இருக்காங்க. பயப்படாதீங்கப்பா!" என்று சொல்லிவிட்டு அன்று பள்ளியில் நடந்ததை விவரித்தாள் வசுந்தரா.


"அப்பா! முதல்ல அந்த பையன் ட்ரிங்க் பண்ணிட்டு வந்திருக்கான்னுதான் நினைச்சேன். ஹெச் எம் கிட்டேயும் சொன்னேன்.


உடனே அவனைக் கூப்பிட்டு விசாரிச்சாங்க.


ஆனா சாராயத்தையும் தாண்டி அவன் கஞ்சா மாதிரி ஏதோ ட்ரக் கன்ஸ்யூம் பண்ணியிருப்பான் போல இருக்கு. அதுவுமில்லாம அவனுக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கும் போலிருக்கு.


அவனை சஸ்பெண்ட் பண்ணிடலாம்னு ஹெச்.எம் சொன்னார்.


பாவம்பா அந்த பையன். இவ்வளவு சின்ன பையனை எதுக்கு தண்டிக்கணும்னு தோணிச்சு.


அதனால வேண்டாம்னு சொல்லி, அவனை ஸ்ட்ராங்கா வார்ண் பண்ணி விட சொல்லிட்டேன்பா.


இவன் மட்டும் இல்லப்பா, இதுமாதிரி இன்னும் நிறைய பேர் இருகாங்க.


ட்ரிங்க் பண்ணிட்டு ஸ்கூலுக்கே வராங்க. அவங்க இப்படி டீச்சர்ஸையே தப்பான பார்வை பார்க்கும்போது, கூட படிக்கற பொம்பள பிள்ளைங்க நிலைமையை நினைச்சாதான் ப்பா ரொம்ப பயமா இருக்கு!


வேற வழி தெரியாம டீச்சர்ஸே அவங்களைப் பார்த்து பயந்து ஒதுங்கி போறாங்க. இல்லனா அவங்களை தண்டிக்கறாங்க.


அதுல என்ன பிரயோஜனம் இருக்கு சொல்லுங்க.


இந்த மாதிரி போதை வஸ்துக்கள் சின்ன பசங்க கைல கிடைக்க காரணமானவங்களை இல்ல தண்டிக்கணும்.