top of page

பூவும் நானும் வேறு-6

இதழ்-6


கால சக்கரத்தைப்  பின்னோக்கி சுழற்றி...

கடந்த கால தீவினையைத் தீர்க்க  தீர்வில்லை என்னிடம்!

மீண்டுமொரு தீய்ந்துபோன கடந்தகாலம் வேண்டாம்என்பதால்! 

கண்கண்ட சாட்சியாக்கும் தீமைகளுக்கு... 

கண்முன்னே தீர்வு காணத் துணிவதால்...

பூவும் நானும் வேறுதான்!


வெகு சில நொடிகளிலேயே அவரது எண்ண ஓட்டம் புரியவும், சுதாரித்துக்கொண்டவனாக, "அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான்; அது கூட அந்த பெண்ணுக்காக என்பதை விட உங்க அக்கா மகனுக்காகதான்னு சொன்னா ரொம்ப பொருத்தமா இருக்கும்" என அவரது குற்றச்சாட்டை அவர் பக்கமே திருப்பினான் தீபன்.


"என்ன திலீப்புக்காகவா! இதுல அவன் எங்க இருந்து வந்தான்?" என பாரதி உள்ளே போன குரலில் கேட்கவும், தீபன் சில தினங்களுக்கு முன் பாரதியை சந்தித்துவிட்டு சென்றதற்கு பிறகு அவன் வசுந்தராவின் வீட்டிற்கு சென்றது, அங்கே திவாகர் அவளிடம் தகராறு செய்தது உட்பட அனைத்தையும் சொன்னான் தீபன்.


"அன்னைக்கு நான் அந்த பெண்ணை என் கார்ல கூட்டிட்டு போகலன்னா, அந்த திவாகர் அவ கிட்ட பிரச்சினையே பண்ணியிருக்க மாட்டான் மேம்.


ஏற்கனவே தொழிலில் நேரடியா என்னால அவனுக்கு ஏகப்பட்ட லாஸ்!


இதுல எங்க ரெண்டுபேரையும் ஒண்ணா பார்க்கவும், அந்த காண்டுலதான் அங்க போயிருப்பான்.


அவனோட வியாபாரத்துல மட்டும் இல்ல, குடும்பத்துக்குள்ளேயும் இப்படி குழப்பம் வந்தாதான், வசு மாதிரி தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கற அப்பாவிங்கள தொல்லைப்பண்ண அவனுக்கு நேரம் இருக்காது!" என அவனது செயல்பாடுகளுக்கான காரணத்தை விளக்கினான் தீபன்.


பாரதியைத் தவிர வேறு யார் அவனிடம் இப்படிக் கேட்டிருந்தாலும் அவன் எந்த ஒரு விளக்கமும் கொடுத்திருக்க மாட்டான் என்பதும் அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் ஒரு புரிதலுடனான ஆழமான அன்பின் அடிப்படையிலேயே அவன் இவ்வளவு பொறுமையுடன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதும் பாரதிக்கு நன்றாகவே புரிந்தது.


தீபன் அவளுடைய வீட்டிற்குச் சென்றது வசுந்தரா சொல்லி முன்பே அவருக்கும் தெரியும்தான், ஆனாலும் தீபன் சொன்ன தகவல்கள் அவருக்குப் புதிது.


அவன் சொன்னவற்றைக் கேட்டு அவர் சிந்தனை வயப்பட்டு அமைதியாகிவிட, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, "திலீப் அந்த பெண்ணை பார்த்து ரொம்பவே பொங்கி வழியறான் மேம்.


அடிக்கடி போன்ல கூட பேசறான்னு நினைக்கறேன்.


இது அவங்க குடும்ப சூழ்நிலைக்கு செட் ஆகும்னு எனக்கு தோணல!


லவ்வு அது இதுன்னு அவன் அந்த பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றதுக்குள்ள, உங்க அக்கா மாமா கிட்ட பேசி அவங்க ஸ்டேட்ஸ்க்கு தகுந்த பெண்ணாக பார்த்து, சீக்கிரம் அவனோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க!


அதுதான் அந்த பெண்ணுக்கு நல்லது!" என அவரை எச்சரிப்பதுபோல் சொல்லி முடித்தான் தீபன்.


அவன் சொன்ன அனைத்தையும் எண்ணிப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவராக, "சரி தீபன்! உன் வார்த்தையாகவே இந்த சந்தேகம் எல்லாத்தையும் தெளிவு படுத்திக்கத்தான் உன்னை இங்க வரச்சொன்னேன்.


கடைசியா ஒரு வார்த்தை, நேரடியாவே உங்கிட்ட கேக்கறேன்; அதுக்கும் தெளிவான ஒரு பதிலை சொல்லிடு!" என்றவர், "திலீப பத்தி ஒரு பக்கம் இருக்கட்டும், உனக்கு வசுந்தராவை பொறுத்தவரை பர்சனலா எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லைதானே?" என அவர் தெளிவாகக் கேட்கவும், தயக்கம் என்பதே கொஞ்சமும் இல்லாமல், "நாட் அட் ஆல்; மேம்! அண்ட் மேரேஜ் பத்தி இப்போதைக்கு எனக்கு எந்த எண்ணமும் இல்ல. அப்படி வந்தாலும் அம்மா அப்பா சொல்ற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்! நீங்க பார்த்து சொன்னாலும் எனக்கு ஓகே தான். பட் நாட் நவ்!" எனத் தெள்ளத்தெளிவாகப் பதில் கொடுத்தான் தீபன்.


இவ்வளவு துரிதமாக அவன் அந்த திவாகருக்கு எதிர்வினையாற்றி முடித்திருக்கவும், தீபனுக்கு வசுந்தராவின்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்திலிருந்த பாரதிக்கு அவன் சொன்ன இந்த தகவல் நிம்மதியையே தந்தது எனலாம்.


ஒரு தெளிவுக்கு வந்தவராக, கைப்பேசியை எடுத்தவர் அதில் அழைத்து, "அக்கா! மாமா எப்ப ஃப்ரீயா இருப்பாங்கன்னு கேட்டு மெசேஜ் பண்ணு! நான் வீட்டுக்கு வரேன்! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.


அதைக் கவனித்துக்கொண்டிருந்தாலும், எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காண்பிக்காமல் அவரிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன்.


***


அடுத்த நாள் காலை வழக்கமான பரபரப்புடன் கிளம்பி பள்ளிக்கு வந்த வசுந்தரா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆசிரியர் ஓய்வறையில் வந்து உட்கார்ந்தாள்.


காலை வழிபாட்டுக் கூட்டத்துக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், அவளை நாடி வந்த மாணவிகள் இருவர், "குட் மார்னிங் மிஸ்!" என்றவாறே, அக்கம் பக்கம் பார்த்து அங்கே யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட நித்திய மல்லிகை சரத்தை அவளிடம் கொடுத்து, எங்க வீட்டுல பூத்தது மிஸ்; தலையில வெச்சுக்கோங்க" என்று மிகவும் ஆசையுடன் சொல்ல,


"இங்க இவ்வளவு டீச்சர்ஸ் இருக்கும்போது, இப்படி கொடுப்பது தப்பு பொண்ணுங்களா; ப்ளே கிரௌண்ட்ல இருக்கற திருவள்ளுவர் சிலைக்கு போடுங்க" என்று வசுந்தரா சொல்ல, "மிஸ்! நேத்து திருவள்ளுவர் சிலைக்குத்தான் மிஸ் போட்டோம்; உங்களுக்கு குடுக்கணும்ன்னு ஆசையா இருந்திச்சு; அதனாலதான்" என அதில் ஒரு மாணவி சொல்ல, மறுக்க மனமின்றி அதை வாங்கிக்கொண்டவள், "இதுவே லாஸ்ட் டைம்; இனிமே இப்படி எடுத்துட்டு வந்தா நான் வாங்கிக்கமாட்டேன்" என்று கண்டிப்புடன் சொன்னாள் வசு.


அவள் அதை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன், "ஓகே மிஸ்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து துள்ளிக்கொண்டு ஓடினர் அந்த புள்ளி மான்கள் இருவரும்.


அவர்களுடைய மகிழ்ச்சியை தானும் அனுபவித்தவளாக, அந்த பூச்சரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவளுடைய அன்னையின் நினைவு வரவும், கண்கள் கலங்கியது.


அவள் பள்ளியில் படிக்கும் காலத்தில், அவர்கள் வீட்டில் பூக்கும் ஜாதி மல்லியை அடர்ந்த சரமாகத் தொடுத்து மகளுடைய கூந்தலில் சூட்டுவர் அவர்.


அவள் படித்த பள்ளியில் மலர்கள் சூடிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே மாலை வேளைகளிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ பூவை சூடிக்கொள்வாள்.


கலை பார்த்துப் பார்த்துப் பராமரித்து வரும் தோட்டத்தில் மலர்ந்த மலர்களைப் பறித்து, அதைப் பொறுமையுடன் தொடுத்து மகளுக்குச் சூட்டி அழகுபார்க்கும் போது, அதில் அவருடைய அன்பும் கரிசனமும் விஞ்சி நிற்கும்.


'அந்த காலம் மீண்டும் கிடைக்குமா!?' என்ற ஏக்கம் மனதில் மேலோங்க, 'பாவி! எல்லாமே அவனால்தானே கெட்டு அழிந்துபோனது! இயல்பான ஒரு வாழ்க்கை கூட வாழ முடியாமல் ஓடி ஒளிய வேண்டியதாக ஆகிப்போனதே!' என்ற கோபமும் கூடவே பொங்கியது.


அவளது அந்த எண்ணத்தைக் கலைப்பதுபோல் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கி இருந்தனர்.


மேலும் வழிபாட்டு கூட்டத்திற்கான நேரம் ஆகிவிட்டதை ‘கிர்ர்ர்ர்’ என ஓங்கி ஒலித்த மணியின் ஓசை அவளிடம் தெரிவிக்க, அவசரமாக அந்த மலர்ச்சரத்தை தலையில் சூடிக்கொண்டு, அங்கிருந்து சென்றாள் வசுந்தரா.


அதன் பின் அவளுடைய வேலை அவளை இழுத்துக்கொள்ள அதில் மூழ்கிப்போனாள் அவள்.


மதிய இடைவேளையின் போது மற்ற ஆசிரியைகளுடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தவளின் கைப்பேசி ஒலிக்க, அந்த அழைப்பை ஏற்றவள், "சொல்லுங்க திலீப் சார்! எப்படி இருக்கீங்க?" என மெல்லிய குரலில் கேட்கவும், "உங்களால ரொம்பவே ஹாப்பியா இருக்கேன் வசுந்தரா டீச்சர்!" என்றவனின் பதிலில், "என்ன நீங்க போய் என்னை டீச்சர்னெல்லாம் கூப்பிட்டுட்டு இருக்கீங்க?" என அவள் கேட்க, "அப்படினா நீங்க மட்டும் என்னை சார்னு சொல்லலாமா?" என அவளையே திரும்பக் கேட்டான் திலீப்.


"ஓ... சார்னு கூப்பிடுறது உங்களுக்கு பிடிக்கல போலிருக்கு. நீங்க பெரியவங்க இல்ல? பேரைச் சொல்லி எப்படிக் கூப்பிட முடியும்?" என அவள் தடுமாற, "சார்னு மட்டும் கூப்பிடாதீங்க! மத்தபடி நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்" எனச் சொல்லிவிட்டு, "அது இருக்கட்டும், நான் எதுக்குக் கால் செய்தேன்னா, வர சண்டே என் கூட லஞ்ச் சாப்பிட உங்களை இன்வைட் பண்ணத்தான்.


நீங்க இதுக்கு சம்மதிச்சா நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணுவேன் வசு!" என்றான் திலீப் குழைந்து ஒலித்த குரலில்.


அவனுடைய அந்த அழைப்பு மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த, கொஞ்சமும் யோசிக்காமல், "இல்ல; அம்மாவுக்கு உடம்பு சரியில்லை; அவங்கள ஒரு ஹோம்ல சேர்த்திருக்கோம்; எவ்வரி சண்டே அவங்களை பார்க்க நானும் அப்பாவும் அங்கே போயிடுவோம்; லஞ்சும் அங்கதான் சாப்பிடுவோம்! சோ சாரி!" என அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் வசு.


"அப்படியா; ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு இருந்தேன்!" என இழுத்தவன், "பரவாயில்ல; அதுக்கான நேரம் இன்னும் வரல போலிருக்கு; நடுவில் எதாவது ஹாலிடே வந்தால், அன்னைக்கு மீட் பண்ணலாம்! பை அண்ட் டேக் கேர் வசுந்தரா!" என ஏமாற்றம் கலந்த குரலில் சொல்லவிட்டு, அழைப்பைத் துண்டித்தான் திலீப்.


அடுத்த நொடியே பாரதியை அழைத்து திலீப் பேசிய அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தாள் வசுந்தரா.


அவள் சொன்ன தகவலைக் கேட்டதும் தீபப்பிரகாசன் சொன்ன வார்த்தைகள் நினைவில் வர, நெற்றியை தேய்த்தவாறே யோசனையில் ஆழ்ந்தார் திவ்யாபாரதி.


***


மாலை பள்ளி முடிந்ததும் அவளுடைய ஸ்கூட்டியை இயக்கி அங்கிருந்து கிளம்ப, பதின்ம வயதில் இருக்கும் அவர்களுடைய பள்ளி மாணவர்கள் சிலர், அந்த சாலையின் திருப்பத்தில் சந்தேகிக்கும் விதத்தில் நின்றுகொண்டு கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது அவளது பார்வையில் விழுந்தது.


அவளது வகுப்பு மாணவர்கள் இல்லை. இன்னும் சிறிய வகுப்பில் படிப்பவர்கள்தான் என்றாலும், அவர்களை நன்றாக அடையாளம் தெரிந்தது அவளுக்கு.


வண்டியிலிருந்து கால்களை ஊன்றி, சற்று தொலைவிலேயே நின்றுகொண்டு அவர்களைக் கவனிக்கத்தொடங்கினாள் வசு.


சில நிமிடங்களில் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய புத்தகப் பையை குடைந்து பணத்தை எடுத்து பொதுவாக ஒருவனிடம் கொடுக்க, இருந்த மூன்று மிதிவண்டியைப் பகிர்ந்துகொண்டு, பின் வேகவேகமாக அங்கிருந்து சென்றனர் அந்த ஆறுபேரும்!


அவளுக்கு எதோ தவறாகத் தோன்றவும், ஒருவேளை மதுபான கடையை நோக்கித்தான் போகிறார்களோ என்ற குறுகுறுப்பில், அவர்களை அப்படியே விட்டுவிட மனமின்றி, அவர்கள் அறியாவண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தாள் வசுந்தரா.


ஆனால் அவள் எண்ணியது போல் இல்லாமல், அந்த ஊரின் எல்லையில்,அமைந்திருந்த இடுகாட்டிற்கு அருகில் சென்ற அந்த மாணவர்கள் மிதிவண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு, தாழ்வாக இருக்கும் அதன் சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து உள்ளே சென்றனர்.


அவர்கள் ஏதோ சமூகவிரோத செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது திண்ணமாக விளங்க, அவளுடைய கைப்பையை ஸ்கூட்டியில் வைத்து, அவசர கதியில் அதைப் பூட்டி விட்டு, அவர்கள் முன்னேறி கண்பார்வைக்கு மறைவாக உள்ளே செல்லும் வரை காத்திருந்தவள், உடுத்தி இருந்த புடவையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு, தானும் அந்த சுற்றுச்சுவரைத் தண்டி குதித்து, அவர்கள் சென்ற திசையில் சென்றாள்.


அங்கே இருந்த ஒருவனிடம் அந்த மாணவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, கைப்பேசியில் காணொளியாக அதைப் பதிவுசெய்தவாறே, அங்கே அடர்ந்திருந்த புதருக்குள் மறைந்துகொண்டாள் வசுந்தரா.


பணம் வைத்திருந்த மாணவன், ஒரு தொகையை சிறு கும்பலுக்கு நடுவில் நின்றுகொண்டிருந்த நபரிடம் கொடுக்க, அதை வாங்கி எண்ணிப் பார்த்தவன், சிறு பொட்டலங்களை அந்த பதின்ம வயதில் இருக்கும் மாணவனிடம் கொடுத்தான்.


அவற்றைப் பெற்றுக்கொண்டு அந்த மாணவர்கள் அங்கேயே ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்ள, அவள் எதிர்பார்க்காத வண்ணம் விபரீதமாக அவளது கைப்பேசி ஒலித்து, அவள் அங்கே ஒளிந்திருப்பதை அவர்கள் அனைவருக்கும் காண்பித்துக்கொடுத்தது.


பதறியவளாக, அவள் அங்கிருந்து ஓட எத்தனிக்க, அந்த மாணவர்களில் ஒருவன், "ஐயோ! வசுந்தரா மிஸ்!" எனப் பெருங்குரலெடுத்துக் கத்தவும், அந்த கும்பலிலிருந்த ஒருவன் பதட்டத்துடன், கூரிய கல் ஒன்றை அவளது முகத்தை நோக்கி வீச, அவள் சமாளிப்பதற்குள் அது அவளுடைய நெற்றியில் பட்டு ஆழமாக வெட்டிவிட்டு கீழே விழுந்தது.


ரத்தம் குபு குபுவென வழியத்தொடங்க, பட்டுத் தெறிக்கும் வலியையும் பொருட்படுத்தாமல், புடவை முந்தானையால் காயத்தை அழுத்திப் பிடித்தவாறு, அவள் அங்கிருந்து ஓடத்தொடங்க, "டேய் கந்தா! சந்திரா! சீக்கிரமா வாங்கடா! இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு பாடிய எடுத்துட்டு வருவாங்க" எனக் கத்திக்கொண்டே வசுந்தராவை நெருங்கி ஓடி வந்தார் அந்த இடுகாட்டின் வெட்டியான் வேலை செய்பவர்களில் ஒருவர்.


அவரது குரலைக் கேட்டு அந்த மாணவர்கள் உட்பட அங்கே இருந்தவர்கள் அனைவரும் தெறித்து ஓட, அவளுடைய கையை பிடித்து, அந்த இடுகாட்டின் முக்கிய வாயில் அருகில் அவளை இழுத்துவந்தவர், "என்னம்மா நீங்கல்லாம் இங்க இப்படி தனியா வரலாமா?


இதுல ரெண்டு மூணு பேரு இங்க கஞ்சா விக்கறவனுங்கம்மா! மீதியெல்லாம் வாங்க வந்த எச்ச நாயிங்க!


போதையில கொலை செய்யக் கூட தயங்க மாட்டானுங்கம்மா.


இவனுங்க இங்க இருந்தானுங்கன்னா, நாங்களே தனியா வரப் பயப்படுவோம்; நீங்க என்னடானா!" என அவர் அக்கறையுடன் குறைபட்டுக்கொள்ள, அவரை கவனித்த வசுந்தரா, நீட் தேர்வில் வெற்றிபெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் அவளுடைய மாணவி செல்வியின் அப்பாதான் அவர் என்பது புரியவும், "என்ன செய்யறது செல்வி அப்பா! அவங்க எங்க பிள்ளைங்களாச்சே!" என்றாள் வேதனை கலந்த குரலில்.


அதற்குள் அவர் கூவி அழைத்த கந்தன், சந்திரன் இருவரும் அங்கே வந்துவிட, "இவங்கள தெரியுதா? நம்ம செல்வி பாப்பாவோட டீச்சர்! பாப்பாவோட கூட டிவில காட்டினாங்களே" என அவளைப்பற்றி விவரித்தவர் தொடர்ந்தது, "அந்த வீணா போன நாதா*ங்க இவங்க மண்டைய உடைச்சிட்டு போயிட்டானுங்க! நிறைய ரத்தம் போய்ட்டு இருக்கு.


டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்!" என்றார் செல்வியின் அப்பா.


அவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வர, குளறலாக, "அங்க என் ஸ்கூட்டி" என்றவாறே அதன் சாவியை நீட்டினாள் வசு. அதுவரையில் மட்டுமே அவளுக்கு நினைவிலிருந்தது.


சில மணிநேரம் கடந்த நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையில் அவள் கண் விழித்தபோது, அவளது கையை பிடித்துக்கொண்டு கவலையுடன் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார் செல்வராகவன்.


அந்த அறையில் சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த கௌச்சில்,முகமெல்லாம் சிவந்து போய் கோபத்துடன் உட்கார்ந்திருந்தான் திலீப்; அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார் திவ்யபாரதி.


அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததும், ஒரு அதீத எதிர்பார்ப்புடன் அவளது கண்கள் அந்த அறையை வட்டமிட்டது.

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page