top of page

Nilamangai 9(2) (C)

Updated: Sep 27

நிலமங்கை 9 (2)


கல்யாண கனவுகளுடன் சேர்த்து பகடிப் பேச்சின் குதூகலத்தில் தேன் குடித்த நரியின் கிறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, தாமோதரனைப் பார்த்ததும் தேவியைப் போல தயங்கியெல்லாம் நிற்கவில்லை வனா. நொடி கூட தாமதிக்காமல், "தாமுத்தான், மத்தவங்க பேசறத சத்தமில்லாம ஒட்டு கேட்டுட்டு நிக்கறவங்க, அடுத்த ஜென்மத்துல பல்லியா பொறந்து செவுத்துல ஒட்டிட்டே அலைவாங்களாம்" எனத் துடுக்காகச் சொல்லிவிட, நிலமங்கையின் நிலையோ இன்னும் சங்கடமாகிப்போக, சத்தமில்லா சிரிப்பில் குலுங்கினாள் தேவி.


'மங்கையோட தங்கையா இருந்துட்டு இவ இந்த பேச்சு கூட பேசலன்னாதான் அதிசயம்!' என அவளை ஒரு கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவன், "ஓய் ஒழக்கு, யாரப் பார்த்து ஒட்டு கேக்கறேன்னு சொன்ன, நடு கூடத்துல ஒக்காந்து நீங்க பேசற பேச்சு, மைக் செட் இல்லாமையே எங்க வூட்டு பேக்கட வரைக்கும் கேக்குதாங்காட்டியும், போற வரவங்கல்லாம் காதை பொத்திட்டு போறாங்க! அதான் உங்கள தடுத்து நிறுத்த இங்க ஓடியாந்தேன்" என அவளைப் பதிலுக்கு வாரினான்.


"இந்த கதையெல்லாம் என் கிட்ட உடாத அத்தான். காலைல இருந்து உன் பொண்டாட்டிய பாக்காம உன் தலையே வெடிச்சி போயிருக்கும், அத நேரடியா சொல்ல முடியாம வேற சாக்குபோக்கு சொல்லிட்டு இங்க ஓடியாந்திருக்க" என அவள் விடாமல் வாயாட, தன்னை நேரடியாக இழுக்கவும் ஒரு மாதிரியாக ஆகிப்போனது மங்கைக்கு.


தேவி வேறு சத்தமாகவே சிரித்து வைக்க, பட்டென தங்கையின் முதுகில் ஒரு அடி போட்டவள், "கல்யாணம் ஆகி வேற வூட்டுக்கு போகப் போறவ, யார் என்னன்னு பார்த்து பேசவேணாம். வாய அடக்கு வனா" என்றாள் காட்டமாக.


"ஆவ்" என எட்ட முடியாமல் எட்டி தன் முதுகைத் தேய்த்தபடி, "பாரு ஆத்தான் உம்பொண்டாட்டிய, கல்யாண பொண்ணுன்னு கூட பாக்காம என்ன அடி அடிக்குது" என மூக்கால் அழுதபடி வனா அதற்கும் அவனிடமே பஞ்சாயத்துக்குப் போக, 'இவனிடம் இப்படியெல்லாம் கூட பேசுவாளா இவள்' என அதிர்ந்து மங்கை தேவியின் முகத்தை ஏறிட, "இதுங்க ரெண்டும் இப்படித்தான் மங்க, கண்டுக்காத! தாமுண்ணன் இதுக்கு ஃபுல் சப்போர்ட்டு. இல்லாம போனா அசலூர் காரன லவ் பண்றேன்னு வூட்டுல வந்து தெகிரியமா சொல்லியிருக்குமா? இல்ல உங்க தாத்தாவுந்தான் அதுக்கு சுளுவா ஒத்துக்கினிருப்பாரா?" என்றாள் கிசுகிசுப்பாக.


'என்னாது, வனாவோடது லவ் மேரேஜா' என உள்ளுக்குள் வியந்தவள், அதற்கு மேல் அங்கே இருக்க தயங்கி, விசுக்கென்று எழுந்து அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அதுவும் அவன் அங்கே நிற்பதால் மற்றொரு தூணின் பக்கமாக அவள் ஒதுங்கி நடக்க, வேகமாக வந்து வழி மறித்தவன், "தேவி, எம்பொண்டாட்டிக்கு எடுக்க வேண்டிய அளவெல்லாம் எடுத்து முடிச்சிட்டியா" எனக்கேட்டான் பார்வையை மங்கையின் முகத்தில் பதித்தபடி.


"ஆங், ஆயிடுச்சு அண்ணே" என அவள் பதில் கொடுக்க, "அவசரத்துல தெக்கறேன் பேர்வழியேன்னு போனதும் வந்ததுமா தெச்சு வெச்சிட போற. அளவெல்லாம் கச்சிதமா இருக்கனும் ஆமாம், அத விட முக்கியம், நாளைக்கு காலைல எல்லாம் ரெடியா இருக்கணும்" எனக் கிண்டலாகவே சொன்னவன், அவளது முகம் முகம்போன போக்கை ரசித்தபடி, "உன்கூட முக்கியமா பேசணும், மங்க. எங்கூட நம்ம வூட்டுக்கு வா" என்று குரலைத் தழைத்து சொல்ல, அதைக் கண்டுகொள்ளாத பாவனையில் தூணுக்கும் சுவற்றுக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் புகுந்து இலாவகமாக அவனைக் கடந்து செல்ல அவள் எத்தனிக்கவும், "தோ பாரு மங்க, நீ இப்படி சும்மா சும்மா ஓடி புடிச்சு விளையாடிகினு இருந்தயின்னா எனக்கு எந்த கவலையும் இல்ல. மெய்யாலுமே இதை எனக்கு சாதகமா மாத்திப்பேன் புரிஞ்சிக்க" என்று கிசுகிசுக்க, புரியாத பாவனையில் அவள் அவனைப் பார்க்கவும், "உன்ன அப்படியே அலேக்கா தூக்கி ஆட்டுக்குட்டி கணக்கா தோள்ள போட்டுகினு போயினே இருப்பேன், எவனும் என்னை தடுக்கவும் மாட்டான் சொல்லிட்டேன்" என அவன் கொடுத்த எச்சரிச்சையில் கடுப்புடன் அவனை ஏறிட்டவள், "ரொம்பவே ஓவரா போற தாமு" என்று சீறினாள்.


"ஹேய், நான் உன்ன ஒண்ணுமே செய்யலியேடி, இதுக்கேவா? எங்க என் மொகத்த பார்த்து சொல்லு, நானா ஓவரா போறேன்? ஏழு வருசமா உன்ன விட்டுத் தள்ளியே நிக்கறேன். தோ, நீ இப்படி கைக்கெட்டுற தூரத்துல நிக்கும் போது கூட உன்ன ஒண்ணும் செய்ய முடியாம, மிரட்டுற மாதிரி கெஞ்சிட்டு இருக்கேன், என்ன பார்த்து ஓவரா போறேன்னு சொல்ற" என, அதையும் கொஞ்சல் மொழியிலேயே அவன் சொல்ல, அதில் பொதிந்திருந்த உண்மை மனதை குழப்ப உள்ளுக்குள்ளே இறுகிப் போயிருந்த ஏதோ ஒன்று லேசாக இளகத் தொடங்க, எங்கே முழுவதுமாக கரைந்துபோய்விடுவோமோ என்ற பயம் அவளை மொத்தமாகப் பீடித்துக்கொள்ள, அப்படியே உறைந்து நின்றாள். அவளது நிலையைச் சாதகமாக்கி அவளது கைப்பற்றி அவளை தன் இழுப்புக்குச் செலுத்தியபடி தங்கள் வீடு நோக்கிச் சென்றான் தாமு.


அவனுடைய பிடியிலிருந்து ìவிடுவித்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தவளின் கரத்தை விட்டுவிடாமல் இரங்கூன் மல்லிகை கொடிவளைலில் நுழைந்தான்.


அதில் பூத்து குலுங்கிய மலர்களை பார்த்ததும் அவளுக்கு அனைத்தும் மறந்துபோக, அலைகடலென அமைதியின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவளது மனத்துக்குள்ளேயும் ஒரு இதம் பரவியது. அதனுடன் சேர்ந்து வீட்டிற்குள்ளிருந்து கமழ்ந்து வந்த ஜாதிப்பூவின் அழுத்தமான மணம் அவளைக் கட்டி இழுக்க, "கைய வுடு தாமு, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. வூட்டுக்குள்ள போயி அத்த, ஆயா, எல்லாரையும் பார்த்துட்டு வரேன்" என அவள் சலிப்புடன் சொல்ல, "ரொம்பதான் பண்றடீ" என அவளது விரல்களில் ஒரு அழுத்தம் கொடுத்து மெதுவாக அவளை விடுவித்தபடி, "ரொம்ப நேரம் பேசிட்டு நிக்காம, சீக்கிரமா மேல வந்து சேரு" என்றவன், எங்கே விட்டால் அவளுடைய வீட்டுக்கே திரும்பப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தில், "நீ அங்க வரல, நான் சொன்னத நிச்சயமா செய்வேன்" என அழுத்தமாக எச்சரித்துவிட்டே மேலே சென்றான்.


இவ்வளவு வருடங்கள் கடந்த பின்பும் துளி அளவு கூட மாறாத அவனுடைய இந்த பிடிவாதம் அவளை வியக்க வைத்தது, சலிக்க வைத்தது, தடுமாற வைத்து பயம் கொள்ளவும் வைத்தது.


அவள் இங்கே வந்த பிறகான இரண்டே இரண்டு தினங்கள், அவளுக்கென்னவோ இரண்டு யுகங்களை கடத்தியது போன்ற பிரமையை கொடுத்தது.


எப்படியும் ஆட்டமாக ஆடுவான் என்று தெரிந்தேதான் இங்கே வந்தாள். ஆனால் அவனது இந்த ஆட்டம் அவளையே ஆட்டம் காண வைக்கும் என அவள் கனவிலும் எண்ணவில்லை. அவனுடைய ஆதிக்கத்துக்குப் பணியவே கூடாது என்கிற அவளது வைராக்கியத்தைப் பொடிப் பொடி ஆக்கி, தான் நினைத்ததைச் சாதிக்கிறானே என ஆயாசமாக இருந்தது.


இங்கே உடனடியாக அவள் ஆற்ற வேண்டிய மிக முக்கிய கடமையைக் காரணமாக்கி, காலம் அவளை இங்கே கட்டி இழுத்து வந்திருக்கிறது. இல்லாமல் போனால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாள். உண்மையில் வனாவின் கல்யாணம் ஒரு சாக்குதான், அவள் வராமலேயே போனாலும் அது நடந்தேறும். அவளுடைய நம்பிக்கை இப்படியாக இருக்க, அவளே அறியாத ஒன்று, அவளது கடமை அவளை இப்படிக் கட்டி இழுத்து வராமல் போயிருந்தாலும் கூட தாமோதரன் இங்கே அவளை இழுத்து வந்திருப்பான். உடலாலும் உயிராலும் இரண்டாக இருந்தாலும் உணர்வுகளால் இவளுடன் இரண்டற கலந்து கிடப்பவனாயிற்றே அவன்!


சிந்தனையில் கட்டுண்டு, தொலையியக்கி கொண்டு செலுத்தப்பட்டவள் போல ஜாதிப்பூவின் மணத்தை தொடர்ந்தபடி அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தாள். தாழ்வாரத்தில் உட்கார்ந்தபடி கூடை பூவை தரையில் கொட்டி அதனைத் தொடுத்துக் கொண்டிருந்தார் புஷ்பா.


இவளைக் கண்டதும், "வாடியம்மா வா... வா... மதியமே உன்ன சும்மா பார்த்துட்டு போகலாம்னு உங்கூட்டுக்கு வந்தேன். அசந்து தூங்கிட்டு இருந்தியா. அப்படியே திரும்ப வந்துட்டேன்" என்றார் எதார்த்தமாக.


மூச்சை இழுத்து மலரின் மணத்தை நுரையீரல் முழுவதும் நிரப்பிக்கொண்டவள், "என்னா வாசன, பின்னால ஏத்தி விட்டிருக்கியே, அந்த கொடில பூத்ததா...த்த இம்மாம் பூவும்" என்றபடி அவருக்கு அருகில் உட்கார்ந்தவள், தொடுக்க வாகாக பூவை அடுக்கி அவரிடம் நீட்ட, "என்ன இருந்து என்ன பிரயோசனம்? ஆம்பள கணக்கா இப்படி கிராப்பு வெச்சிட்டு வந்து நிக்கற? ஒரு நாலு பூவையாச்சும் ஸ்லைடு பின் வெச்சு சொருவி உன் தலைல வெக்க முடியுமா சொல்லு?" என அவர் அலுத்துக்கொள்ள, "ஐயோ அத்த, இது கிராப் இல்ல, பிக்ஸி கட்" என அவள் கிண்டலாக மொழிய, "என்ன பேரா இருந்தா என்ன, எதோ ஒரு கன்றாவி. என் மருமகளுக்கு இப்ப தல நெறைய பூ வெச்சு அழகு பார்க்க முடியல வுடு" என்றார் கடுப்புடன்.


"ஏன் அத்த, மாமாக்கு விஷ ஜுரம் வந்து முடியாம போனப்ப, சாமிக்கு நேந்துகிட்டு நீ மொட்ட போடல. இப்ப பாரு, பழைய மாதிரி முடி வளந்துடுச்சு இல்ல? இதுவும் அப்படிதான்" என அவள் பதில் சொல்ல, "அப்ப இனிமேல் இப்படி முடி வெட்டிக்க மாட்ட இல்ல மங்க" எனக்கேட்டார் பாவமாக.


அவருக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தவள், "ஆயா எங்க காணும்" என பேச்சை மாற்ற, "மாமாவோட ஒட்டிக்கிட்டு கழனி வரைக்கும் போயிருக்குது. அங்க போய் எல்லார் வாயையும் புடுங்கலன்னா அதுக்கு தூக்கம் வராது" என்று சொல்லி சிரித்தவர், "டீ குடிக்கறியா மங்க" என்று கேட்க, "இல்லத்த, இப்பதான் குடிச்சேன்" என்றவளுக்கு தாமு சொன்னது நினைவில் வரவும், "அத்த, தாமு என்ன வர சொல்லிச்சு" என்றாள் தயக்கத்துடன்.


அவரது மனதிற்குள் ஏதேதோ கற்பனைகள் ஊற்றெடுக்க, உண்டான மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்த பயந்து, அதை மறைக்க முயன்று, "சரி... சரி... நீ போ" என அவசரமாக அவளுக்கு அனுமதி கொடுத்தவரின் முகத்தில் தோன்றிய பாவனையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ள இயலவில்லை மங்கையால்.


நிதானமாக நடந்து மாடி வரை வந்தவளுக்கு, உள்ளே நுழைய அவ்வளவு தயக்கமாக இருந்தது. வேறு வழி இல்லாமல் உள்ளே நுழைந்தவள், அவன் தனது அறைக்குள் இருப்பதை உணர்ந்து தயக்கத்துடன் கதவை தட்டினாள்.


படாரென கதவை திறந்தவன், "இந்த மாதிரி தள்ளி எட்ட நிக்கற வேலையெல்லாம் வெச்சுட்டேன்னு வை, மவளே கொன்றுவேன்" என்றவன், நகர்ந்து அவளுக்கு வழி விட, பட்டு புடவைகள், நகைகள் என அங்கே இருந்தா கிங்-சைஸ் கட்டில் முழுவதிலும் கடைபரப்பி வைத்திருந்தான் தாமு.


அவஸ்தையுடன் அவள் அவற்றையெல்லாம் பார்த்து வைக்க, "இதையெல்லாம் வனா கல்யாணத்துக்காக நான் உனக்கு வாங்கியிருக்கேன்" என்றவன், "இது நலங்குக்கு, இது பெண் அழைப்புக்கு, இது முகூர்த்தத்துக்கு, இது ரிசப்ஷனுக்கு, அப்பறம் அவளை மருவீட்டுக்கு நாம ரெண்டுபேரும்தான் கூட்டிட்டு போகணும் உந்தாத்தா சொல்லியிருக்கு, இது அதுக்கு, அப்பறம் புடவைக்கு மேட்சிங் ஜூவல்லரி" என பட்டியலிட்டவன், அவற்றுக்கு நடுவில் தேடி ஒரு நகை பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியபடி, "நீயே போட்டுட்டாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா இதை நீ கழுத்துல போட்டுட்டே ஆகணும் மங்க, இல்லன்னா நிறைய கேள்வி வரும். உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா அதை என்னால தாங்க முடியாது, அப்பறம் பெரிய ரசாபாசமா போயிடும், புரிஞ்சிக்க" என அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு தொண்டை வறண்டது.


கைகள் நடுங்க அவள் அந்த பெட்டியை திறக்க, முந்தைய தினம், அவள் பார்த்த தாலி, முகப்பு வைத்த தங்க சரட்டுடன் கோர்க்கப்பட்டு,அவள் அணிய தயாராக இருந்தது.


ஏழு வருடங்களுக்கு முன் இருந்த நிலமங்கையாக அவள் இருந்திருந்தால் கூட, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது? காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருப்பவளுக்கு கல்லணையாக இந்த தாமோதரன் தடை போட்டு நிற்பது போல் தேங்கி நின்றாள்.


ஆனால் அவன் அவளுக்கு தடை போட்டு நிற்கும் அணை அல்ல, அவளது தேடல் முற்று பெரும் பெருங்கடல் என்பதை நிலமங்கை உணரும் காலமும் விரைவிலேயே கைகூடலாம்!


"நம்ம ஊர்ல, பெரிய கவுர போட்டு கட்டி மாட்ட மேய உடுவாங்க இல்ல, அங்க இருக்கற புல்ல எல்லாம் ஆச தீர மேயும், தன்னோட இஷ்டத்துக்கு சுத்தி சுத்தி வரும், ஆனா அந்த கயிறோட நீளத்துக்கு மட்டும்தான் அதோட சுதத்ந்திரம். அந்த மாடு மாதிரி என்னையும் நினைச்சிட்டியா தாமு" என்றாள் மனம் வெதும்பி.


மனதை குத்தி கிழித்தது தாமோதரனுக்கு. "சீ.. என்ன பேச்சுடீ பேசற நீ? உன்னை நான் கண்ட்ரோல் பண்ற மாதிரித்தான் உனக்கு தோணுதா? நீ இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும், என்னோட உரிமையா இருக்கணும்னுதான நான் நினைக்கறேன்?என் மனச புரிஞ்சுக்கவே ட்ரை பண்ண மாட்டியா நீ?" எனக் கலங்கினான் அவன்.


"இந்த எண்ணமே அபத்தமா தெரியல உனக்கு? அந்தளவுக்கு உனக்கு என் மேல அன்பு இருந்தா, நீ இப்படி உரிமை கொண்டாட மாட்ட தாமு! கல்யாணம், இதோ இந்த தாலி எல்லமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்தரங்க உறவுக்கான அங்கீகாரம் மட்டும்தான? அதுவும் இந்த சமுதாயத்துக்காக மட்டும்தான? இப்படி ஒரு லீகல் ரிலேஷன்ஷிப் குள்ள நீ என்ன கொண்டுவந்ததும் அதுக்காகத்தான?" என்று அவள் நேரடியாக கேட்க, சற்று தடுமாறித்தான் போனான்.


"இது உலக நியதிதான, அதுல என்ன தப்பிருக்கு மங்க? ஆனா எனக்கு அது மட்டும் காரணமில்ல! உன்ன தவிர வேற எந்த ஒரு பெண்ணும் என் வாழ்க்கைக்குள்ள வர முடியாது! என்னால வேற எவளையும் தொட முடியாது! இதை நான் சொல்லி உனக்கு புரிய வைக்க முடியாது! அதை உணர நீ தாமோதரனா மாறனும்" என்றான் கர்வமாக.


ஆயாசமாக இருந்தது அவளுக்கு.


"புத்தி தெரியாத சின்ன புள்ளைல இருந்து நாம ஒண்ணாதான இருந்தோம், திடீர்னு எப்படி தாமு உனக்கு என்ன பத்தி இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு? அதுக்காக நீ எதையெதையோ செஞ்சு, நடக்க கூடாததெல்லாம் நடந்து முடிஞ்சுது. வெறுத்து போய் தான நான் இங்க எல்லாரையும் விட்டு விலகி போனேன்? இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறியே?" எனக்கேட்டாள் மனம் பொறுக்காமல்.


"நீ விலகிப் போனதா நினைச்சா, அதுக்கு நானா பொறுப்பு! நீ மனசு மாற நான் உனக்கு கொடுத்த ஒரு பிரேக் இந்த ஏழு வருஷம். அதுக்கு உன் படிப்பும் காரணமா அமைஞ்சு போச்சு, அவ்வளவுதான். மத்தபடி, நீ என்னை உணரலையே தவிர, நான் இங்க நிலமங்கையாதான் வாழ்ந்துட்டு இருக்கேன், சீக்கிரமே நீ தாமோதரன் இடத்துல இருந்து உண்மையை புரிஞ்சுப்ப" என்றான் அழுத்தம் திருத்தமாக.


அவள் பேச்சற்று அவனை பார்க்க, "எனக்கு மங்கையோட மனசு மட்டும் தனியாவோ இல்ல உடம்பு மட்டும் தனியாவோ தேவையே இல்ல! ரெண்டும் இணைஞ்சு என்னை புரிஞ்சு அவ வரணும் அவ்வளவுதான்" என்றபடி அவளை தன்னுடன் சேர்த்தனைத்தவன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தான். அவனது கண்களில் இருந்து கசிந்த ஈரம், அவனது நெஞ்சின் ஈரமாக அவளை அசையவிடாமல் கட்டிப்போட்டது.



© KPN NOVELS COPY PROTECT
bottom of page