Nilamangai - 9
நிலமங்கை - 9
நிதரிசனத்தில்...
வெதுவெதுப்பான சூரிய ஒளி உடலைத் தீண்டி ஒரு இதத்தைக் கொடுக்க பொழுது புலர்ந்துவிட்டது என்பது மட்டும் மூளையில் உரைத்தது. ஆனாலும் கூட சுகமான உறக்கத்தைக் களைந்து விழித்தெழ மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை.
கனவின் தாக்கத்தில், அதுவரை செவிகளில் ரீங்காரமிசைத்துக் கொண்டிருந்த பூச்சிகளின் ஒலியும், எங்கோ தூரத்தில் உறுமும் சிங்கங்களின் கர்ஜனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இன்னதென்று பிரித்தறிய இயலாவண்ணம் கலவையான பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்க, செந்தமிழ், அதுவும் அவர்களது வட்டார வழக்கில் வந்து செவிகளை சூடாக்க, ‘இந்த இடத்துல மனுஷங்க குரல் எப்படி?!' எனக் கொஞ்சமாகப் பிரக்ஞை எட்டிப்பார்த்து குழப்பத்தைக் கொடுத்தது நிலமங்கைக்கு.
கைப்பேசியை தேடி கைகள் அனிச்சையாகப் படுக்கையைத் தடவ, வந்தவாசிப் பாயின் சொரசொரப்பு மூளையில் உரைத்தது. 'டென்ட்டுக்குள் எப்படி பாய்?' என்கிற அடுத்த கேள்வி முளைக்க, "அப்பா, வம்பு பண்ணாதப்பா, இந்த மாத்தரைய போட்டுக்க, இல்லன்னா கால் நரம்பெல்லாம் இழுக்குதுன்னு தூக்கம் வராம அவஸ்த படுவ" என வனமலர் தந்தையை கண்டிப்பது தெளிவாகச் செவிகளைத் தீண்ட, , தான் இருப்பது இருளடர்ந்த ஏதோ ஒரு கானகத்துக்குள் இல்லை, தன் சொந்த வீட்டில் என்கிற அளவுக்கு சூழ்நிலை பிடிபட்டது. ஆனாலும் விழிகளை திறக்கவே இயலவில்லை. நள்ளிரவு வரை அவளைப் பிணைக் கைதி போல பிடித்து வைத்திருந்த தாமோதரனின் நினைவு வேறு வந்து தொலைக்க , முணுமுணுவென மனதிற்குள் எரிச்சல் பரவியது.
அதற்குள், மகளுடன் மல்லுக்கட்ட முடியாமல் வேலுமணி மாத்திரைகளைப் விழுங்கி முடித்திருக்க, அவளுக்கு அருகில் வந்தமர்ந்த வனா அவளது கையில் மென்மையாகத் தட்டி, "அக்கா, அக்கா" என்றழைக்க, உறக்கம் அகலாமலேயே எழுந்து அமர்ந்தவள், தலையைக் குலுக்கி, அழுந்த கண்களை மூடி, விரல்களால் கசக்கி சில பல முயற்சிகளுக்குப் பின் விழிகளைத் திறந்தாள்.
அவளுடைய நிலை உணர்ந்து சங்கடமாகிப்போய், "சாரிக்கா, அம்மாதான் எழுப்ப சொல்லிச்சு. இன்னைக்கு பேக்கடையானுக்கு பொங்கல் வெக்க போறாங்க... இப்பவே மணி பத்தாகுது. இப்ப எழுந்து குளிச்சு ரெடி ஆனயின்னாத்தான் சாமி கும்புட்டு நேரத்துக்கு சோறு துன்ன முடியும்" என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.
பல் துலக்காமல் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள் மங்கை. ஆனாலும் அவளது சங்கடம் உணர்ந்து, "பரவாயில்ல வனா, இதுல என்ன இருக்கு" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.
திருமணத்திற்காக வந்து தங்கியிருக்கும் அவளுடைய ஒன்றுவிட்ட மூன்று அத்தைகள், ஒரு பெரியம்மா, இரண்டு சித்திகள் எல்லோரும் காய்கறிகள் நறுக்குவது, மசாலா அரைப்பது என ஒன்று கூடி வேலை செய்தவண்ணம் இருக்க, மதிய விருந்து தயாரிப்பில் வீடே தடபுடல் பட்டுக்கொண்டிருந்தது. மகேஸ்வரி சமயலறையில் அடுப்பை பிடித்துக்கொண்டு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, ஆண்களெல்லாம் வாயிற் திண்ணையில் அமர்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர். நாலைந்து பொடிசுகள் வேறு இங்கேயும் அங்கேயும் ஓடி வீட்டையே இரண்டாக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவாறு, இவளை கவனித்து அவர்கள் கேள்வி கணைகளை தொடுக்கும் முன், அவசராவசரமாக புழக்கடை நோக்கிச் சென்றாள்.
அங்கேயிருந்த வேப்பமரத்தின் அடியில் மூன்று செங்கற்களைச் சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தார் பூங்காவனத்தம்மாள். மூப்பு காரணமாக அவரது செவித்திறன் குறைந்துபோயிருக்க, அவள் அங்கே வந்த சந்தடி கூட உணராமல் அவர் வேலையில் மும்முரமாக இருக்க, நேராகப் போய் கிணற்றடி பிறையிலிருந்த பற்பொடியை எடுத்து பல் துலக்கி முகம் கழுவியவள், அந்த மூதாட்டியை நெருங்கி வந்து, பின்னாலிருந்து அவரை அணைத்தாள்.
முதலில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அவளை உணர்ந்தவர், முகத்தில் ஒரு போலியான கடுமையைப் படரவிட்டு, உடலை வளைத்து அவளை உதறியபடி தன் வேலையைத் தொடர, "ஏய் கிழவி, இந்த மெதப்புதான வேணான்றது. இந்த பொண்ணு இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்குதே, அதுவும் ஆசையா வந்து கட்டிக்குதே, என்ன ஏதுன்னு விசாரிப்போம்னு தோணுதா உனக்கு" என அவள் குழைய, "போடி சொத்த வாயாடி, அப்புடியே வந்துட்டா நீட்டி மொழகிட்டு, கட்டிக்க வேண்டியவன கிடப்புல போட்டுபுட்டு கிழவிய தூக்கி மடியில வெச்சிக்கறாளாம்" என அவர் நொடிக்க, அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்து அவளது உடல் இறுகியது.
அவளது நீண்ட மௌனத்தில் திகைத்துத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்ததுமே அந்த கிழவியின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியாமல் போய்விட, "என்ன மங்க இது, இப்படி எளச்சு போய் கிடக்கற? குலதெய்வத்துக்கு வேண்டுதல் வெச்சு மொட்ட போட்டுட்டியா, எம்மா நீளமா இருக்கும் உன் தலமயிறு" என அடிவயிற்றிலிருந்து ஆதங்கப்பட்டார்.
முந்தைய தினம் அவள் உடுத்திருந்த அதே புடவையிலிருக்க, நல்லவேளையாக உடை பற்றிய கேள்வியெதையும் அவர் எழுப்பவில்லை.
"போதும் விடு கிழவி, நான் நல்லாத்தான் இருக்கேன், நீ எப்படி இருக்க? உன் பேரன் பொண்டாட்டி உன்னை எப்படி பார்த்துக்குது? வேளாவேளைக்கு சோறாக்கி போடுதா, இல்ல சோம்பேறி மாதிரி உக்காந்துட்டு உன்ன வேல வாங்குதா? அத சொல்லு முதல்ல!" என எள்ளல் தொனியில் கேட்டு அவரது வாயை பிடுங்கினாள்.