top of page

Nilamangai - 7 (C)

Updated: Feb 11

7. ஏக்கம்

நிதரிசனத்தில்…


நிலமங்கையுடன் அந்தச் சிறைச்சாலையின் அலுவலகப் பகுதிக்குள் நுழைந்தான் தாமோதரன்.


அவனைப் பார்த்த நொடி, "வாங்க மிஸ்டர் டீ.ஜே, வாங்க... வாங்க... உங்கள வரச்சொல்லியிருக்கறதா அருளய்யா சொல்லிட்டு இருந்தாங்க" என்றபடி  வாயெல்லாம் பல்லாக அவனை எதிர்கொண்டார் அங்கே பணியிலிருந்த அதிகாரி.


அவர் அவனை டீ.ஜே என்று அழைத்ததில் மங்கையின் முகம் காண்பித்த வியப்பை மனதில் குறித்தவண்ணம், "இப்ப போய் அவரைப் பார்க்கலாம்தான" என அவரிடம் தோரணையாகக் கேட்டான். 


"தாராளமா" என்றவர் முன்னே செல்ல, நிலமங்கை உடன் வர அவரைப் பின்தொடர்ந்து முன்னேறிச் சென்றான் தாமு.


அருட்பிரகாசம் இருக்கும் வீ.ஐ.பி செல்லுக்குள் நுழைந்து அவரிடம் சொல்லிவிட்டு தாமுவை அங்கே விட்டு நிலமங்கையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே அந்த அதிகாரி அங்கிருந்து அகன்றுவிட, அங்கே போடப்பட்டிருந்த கட்டிலில் வசதியாக உட்கார்ந்திருந்த அருள் வேறு அவளைக் கேள்வியாக ஏறிட்டார். 


அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே, "கேட்டுட்டே இருந்தீங்களே அய்யா... இவங்கதான் என் வைஃப், நிலமங்கை. வெளிநாட்டுல பீ.ஹெச்.டீ பண்ணிட்டு இருந்தாங்க. படிப்பு முடிஞ்சு இன்னைக்குதான் இங்க வந்திருக்காங்க. உடனே உங்க கிட்ட அறிமுகப்படுத்தலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்" எனப் புன்னகை முகமாக தாமோதரன் சொல்ல, அவனுக்கு முன்னே இருந்தவரின் முகம்தான் சற்று இறுகிக் கறுத்தது.


தனக்கெதிரில் அமர்ந்திருப்பவன் தன் சிந்தனைக்குள் கூட ஊடுருவும் ஆற்றல் கொண்ட தாமோதரன் என்பது உரைக்க நொடிக்குள் தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார் பக்கா அரசியல்வாதியான அருட்பிரகாசம்.


உள்ளுக்குள்ளே வன்மத்துடன் குமுறினாலும், "ஒன்ன சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்...மா” என்றவர், “உங்க மனைவின்னா அவங்களும் எனக்கு மக மாதிரிதான், தம்பி. என்னோட ஆசி உங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே உண்டு." என்றார் உதட்டில் படர்ந்தப் போலிப் புன்னகையுடன். ஆனால் அந்த வன்மத்தின் ஒரு சொட்டுக்கூட தன் மங்கை மேல் சிந்த அவன் அனுமதிக்கமாட்டான் என்பதே உண்மை!


"தேங்க்ஸ், பிரகாசம் அய்யா. எனக்கு உங்கள பத்தி தெரியாதா என்ன? அதனாலதான் இவங்கள இங்க கூடிட்டே வந்தேன்." எனப் பொடி வைத்து பதில் சொன்னவன், "மங்க, நேராப் போய் லெஃப்ட்ல திரும்பினா நாம வரும்போது பார்த்தோம் இல்ல அந்த வெயிட்டிங் ஏரியா இருக்கும். அங்க உட்கார்ந்துட்டு இரு. பேசிட்டு ஒரு அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்" என அவன் இயல்பாகச் சொல்ல, அருள் அறியாவண்ணம், கண்களால் அவனை எரித்தபடி மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து அகன்றாள்.


மிக ஒல்லியான உடல்வாகும், பாய் கட் தலைமுடியும், களைத்த முகமுமாக இருந்த அவளது தோற்றம் கண்டு, 'என்னடா இது, இந்தப் பொண்ணு இப்படி இருக்கு! இவளை எப்படி இந்த தாமோதரன் திருமணம் செய்தான்?' என்ற சிந்தனையுடன் அவள் சென்று மறைந்த பின்னும் அந்தத் திக்கையே வெறித்திருந்தார்.


தன் மகளுடன் அவளை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவரால் இருக்கவே இயலவில்லை.


தாமோதரனின் விழிகளுக்குப் பேரழகியாகத் தெரியும் இந்த மங்கையை அழகி என ஒப்புக்கொள்ள மறுத்தது அவரது மனம். அவளது மாநிறம்தான் அவரது மகளைக் காட்டிலும் இவளைக் குறைவாக நினைக்க வைத்ததோ என்னவோ.


அவரது மகள் சுப்ரியா! செல்வச்செழிப்பிலேயே பிறந்து வளர்ந்தவள். அழகே வடிவானவள். அழகு என்பதைக் காட்டிலும் தன் அழகைத் திறமையாக மெருகேற்றத் தெரிந்தவள். போற்றிப் பாதுகாக்கத் தெரிந்தவள்.


அழகில் மட்டுமில்லை, பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைத்திருக்கிறார். அவரது தொழில்களைத் தனித்துக் கவனிக்கும் அளவுக்கு வல்லமை பெற்றவளும்தான் சுப்ரியா.


எந்த ஒரு விஷயத்திலும் இருவரையும் ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லைதான். ஆனாலும், இதையெல்லாம் கடந்து, அவளது ஜொலிக்கும் விழிகளுக்குள் தென்பட்ட ஏதோ ஒரு பாவம், ஒரு வித அச்சத்தை அவருக்குக் கொடுத்தது.


தலையைக் குலுக்கித் தன்னை சமன் செய்துகொண்டவர், "என் மகள பிடிக்காம, சும்மா ஏதோ பேச்சுக்குச் சொல்றீங்கனு நினைச்சேன் தம்பி, பார்த்தா மனைவின்னு சொல்லி நிஜமாவே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்திடீங்க!" என்றார் தன் ஏமாற்றத்தைச் சகிக்க முடியாமல்.


"ஈஸியா எடுத்துக்கோங்க அய்யா, என்னை விட பெட்டரா நல்ல மருமகன் உங்களுக்குக் கிடைப்பான்" என்றான் தாமு அழுத்தமாக. 'இனி இதை பற்றி நீ பேசவே கூடாது' என்கிற கட்டளை தொனிக்க.


சற்றுச் சுதாரித்தவர், மேற்கொண்டு அவனுடன் வாதிடத் தயங்கி, 'உன்னை விட பெட்டரா ஒருத்தன் மட்டும் கிடைச்சுட்டன்னா முதல்ல உன்னைத்தான்டா தூக்குவேன்' என மனதிற்குள் கருவிக்கொண்டார்.


அவருடைய மௌனத்தையும் கூட மொழிப்பெயர்த்தவனாக, "கவலையே படாதீங்க, உங்க மருமகனாத்தான் என்னால ஆக முடியாது, ஆனா அரசியல் ஆலோசகனா என் இடத்த யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எவனாலயும் என்ன தூக்க முடியாது" என்றான் அழுத்தம் திருத்தமாக.


உண்டான பதற்றத்தில் அவர் பேச்சின்றி திணற, "என்ன முக்கியமான விஷயம்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே" என அவனே எடுத்துக்கொடுத்தான்.


சில நிமிடங்கள் நீண்ட அழுத்தமான மௌனத்துடன், மனதிற்குள்ளேயே வார்த்தைகளைக் கோர்த்தவர், “சென்ட்ரல்ல அப்ரூவ் பண்ணி, அராட்டு குரூப்ஸ் இங்க தொடங்கப்போற கெமிக்கல் ஃபேக்டரிய முடக்க, இன்டர்நேஷனல் லெவல்ல சமூக ஆர்வலர்னு சொல்லிட்டு ஒரு கும்பல் நம்ம நாட்டுக்குள்ள வந்து இறங்கியிருக்காம், மேலிடத்துல இருந்து தகவல்! அதுவும் அது ஒரு சீக்ரட் சொசைட்டிங்கறாங்க. அதுல முக்கியமானவங்க எட்டு பேர் இருக்காங்களாம். என்ன பிரச்சனன்னா, அவனுங்க யாரு... என்ன...ன்னு யாருக்கும் தெரியாது. அதுல ஒருத்தன் சோஷியல் மீடியால வாயைத் திறந்தா கூட, இங்க பத்திட்டு எரியும்! அவங்கள அடையாளம் கண்டுபிடிச்சு அடக்கி வைக்கணும், டீ.ஜே. முடிஞ்சா போட்டுத் தள்ளினாக் கூட சரி! மத்த டீடைல்ஸ் எல்லாம் ஒவ்வொண்ணா நமக்கு வரும். நீங்கதான் இந்த விஷயத்தை டீல் பண்ணனும், டீ.ஜே. இதை மட்டும் சரியா செஞ்சிட்டோம்னா, அடுத்த எலெக்ஷன்ல முதல்வர் சீட்டு எனக்குதான்" என்றார் அதீத வேட்கையுடன்.


கூர்மையாக அவரைப் பார்த்தவன், "புரியலையே, உங்களுக்கே மேலிடம்னா அது யாரு அருளய்யா?" எனக் கேட்டான் குத்தலாக. 


பதிலின்றி அவர் தலை குனிய, 'ஒன்ன மாதிரி ஆளுங்க கிட்டயெல்லாம் நம்ம நாடு மாட்டிட்டு சின்னாபின்ன படணும்னு இருக்கு. எல்லாம் காலக் கொடும' என மனதிற்குள் கொதித்தவன், "சரி, பார்த்துக்கலாம்... வேற" என்றான் உள்ளே கனன்ற உஷ்ணத்தை மறைத்து.


"தம்பி என்னால உள்ள இருக்கவே முடியல, எப்படியாவது சீக்கிரம் வெளியில எடுக்க ஏற்பாடு செய்ங்க, இதை உங்களைத் தவிர வேற யார் கிட்டையும் என்னால கேட்க முடியாது. ஜெயில்லயே கிடந்தது சாகட்டும்னு சொல்லி விட்டுடுவானுங்க. இப்ப இருக்கற அரசியல் சூழ்நிலைல, எதிர்க்கட்சிகாரன பத்திகூட எனக்கு கவலை இல்ல. இன்னும் சொல்லப் போனா அந்தக் கட்சி மொத்தமா க்ளோஸ்னு கூட சொல்லலாம். ஆனா நம்ம கட்சிக்குள்ள இருக்கறவனுங்கள நினைச்சாத்தான் பயத்துல எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. கூட்டணி கட்சிக்காரங்களைக் கைக்குள்ள வெச்சிட்டு, பதவிக்காக என்னவும் செய்யறானுங்க”


”அதுவும் இந்த தயாளன் இருக்கானே! வேற கட்சியில இருந்து உள்ள வந்து, இப்ப ஸ்ட்ராங்கா உட்கார்ந்துட்டான். அவன்தான் எனக்கு எதிரா எல்லா ஆதாரத்தையும் கலெக்ட் பண்ணி கொடுத்திருப்பான்னு தோணுது. கட்சில அவன் கை மட்டும் ஓங்கிடுச்சுன்னு வைங்க, என்னை இங்கயே முடிச்சாலும் முடிச்சிடுவான்" என புலம்பித் தள்ளினார்.


“ரொம்பல்லாம் யோசிச்சு மண்டையைச் சூடாக்கிக்காதீங்க, பார்த்துக்கலாம். இந்த ஊழல் கேசையெல்லாம் உடைச்சு, முதல்ல உங்களை எப்படி வெளியில எடுக்கறதுன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். டிலே ஆக உங்க மச்சான் சிவதாண்டவம்தான் காரணம், வேற யாரும் இல்ல. முதல்ல அந்த ஆளை அடக்கி வைங்க. பிரஸ் மீட்ல எல்லாம் லூசு மாதிரி உளறிட்டு இருக்காப்ல" என இளக்காரமாக முடித்தான்.


திணறிப்போய் அவர் ஒரு பார்வை பார்கக, " இதையெல்லாம் நீங்க என்னை நேர்ல கூப்டு சொல்லணும்னு இல்ல, எனக்கே தெரியும்! நான் தினமும் ஒரு தடவ இங்க நேர்ல வந்து வாயால வட சுட்டுட்டு இருந்தாதான் இன்னும் டிலே ஆகும் புரிஞ்சிக்கங்க. நீங்க ஒண்ணும் மக்கள் சேவை செஞ்சிட்டு இங்க வந்து உக்காந்துட்டு இல்ல. மக்களா தேர்ந்தெடுக்காம, பை லக் உங்களுக்கு கிடைச்ச ஒரு பெரிய வாய்ப்பைத் தப்புத்தப்பா பயன்படுத்தி, நீங்க குவிச்சு வெச்சிருக்கிற சொத்துக்கு இதைக் கூட அனுபவிக்கலன்னா எப்படி?" எனக் குதர்க்கமாகச் சொல்லிவிட்டு, "பார்த்துக்கலாம் விடுங்க. பர்சனலா முடிக்க வேண்டிய வேலை எனக்கு நிறைய இருக்கு, இப்ப நான் கிளம்பட்டுமா" என்று கேட்க, அவரும் வேறு வழி இல்லாமல் தலை அசைக்கவும் அங்கிருந்து கிளம்பினான்.


வெளியில் வரவும், அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் மங்கை கண் மூடி சாய்ந்திருக்க, மென்மையாக அவளது தோளில் கை வைத்து அழுத்தினான். அதில் திடுக்கிட்டு அவளது உடல் அதிர, அவளது முகம் வேறு பேய் அறைந்ததைப் போல் ஆகியிருக்க, "ஓய் எதுக்கு இந்த ஜெர்க், என்னைத் தாண்டி எவன் ஒன்ன டச் பண்ண முடியும்?" என அதிகாரமாகக் கேட்டவனுக்கு, இதழ் ஓரத்தில் சுழிக்க அவள் பார்த்த பார்வையின் பொருள் சுத்தமாக விளங்கவில்லை.


"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என முணுமுணுத்தவன், "சரி வா கிளம்பலாம்" என்றழைக்க, எழுந்து அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள். களைப்பில் கால்கள் வேறு துவண்டுபோயிருக்க, அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் மூண்ட எரிச்சலில், "கார்ல தான வந்திருக்கோம், அவசரமா ஏதோ டவுன் பஸ்ஸ புடிக்க போற மாதிரி ஓடற" என முணுமுணுத்தவளை ஒரு விஷமச் சிரிப்புடன் பார்த்து வைத்தான். 


"என்ன மேடம்மால என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலையா? வேணா, கையில் மிதக்கும் கனவா நீ...ன்னு உன்னைத் தூக்கிட்டுப் போகட்டுமா?! 'ஹவ் ரொமான்டிக்...  *** மத்திய சிறைச்சாலைக்கு வெளியில் தன் மனைவியைக் கையில் தூக்கிச் சென்ற பொலிட்டிகல் ஸ்டேட்டர்ஜிஸ்ட் டீ.ஜெ'ன்னு எல்லா மீடியாவும் நாளைக்கு ஜெகஜோதியா கொண்டாடும்" என்றான் மெல்லிய குரலில்.


"வேணாம் சொல்லிட்டேன்" என முறைத்தாலும், அவன் சொன்னதைக் கேட்டு வியப்பும் அதிர்ச்சியும் கலவையாகத் தோன்றி அவள் முகம் காண்பித்த வர்ண ஜாலத்தை வஞ்சனை இல்லாமல் இரசிக்க மட்டுமே முடிந்தது தாமோதரனால்.


பார்வைகளாலேயே முட்டி மோதியபடி சிறைச்சாலையை விட்டு இருவரும் வெளியில் வரவும், ஒரு நொடிக்கூட அவர்களைக் காத்திருக்க வைக்காமல் காரை அவர்களுக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்தினான் செல்வம்.


இருவரும் உள்ளே வந்து அமரவும், 'என்னண்ணா, சாப்பாட்டுக்கு வண்டிய நிறுத்தட்டுமா? என்று கேட்டான். 


"பின்ன? பசி உயிர் போகுதுடா" என்றான் தாமு மங்கையின் முகத்தை ஆராய்ந்தபடி. வீம்புக்காகவேணும் மறுத்து அவள் ஏதாவது சொல்லுவாள் என அவன் எண்ணியிருக்க, ஆமோதிப்பாக அவள் அமர்ந்திருக்கவும் ஆச்சரியம் தாளவில்லை. அவளுமே நல்ல பசியில் இருக்கிறாள் என்பதை உணரவும் தாமுவின் மனம் அப்படியே கரைந்துபோனது.


சில நிமிட பயணத்தில், அவர்கள் வழக்கமாகச் சாப்பிடும் மெஸ் ஒன்றின் வாயிலில் வாகனத்தை நிறுத்தினான் செல்வம்.


சற்றுப் பெரிய டீக்கடை போன்று, இரண்டே இரண்டு உணவு மேசைகள் போடபட்டு, மிக எளிமையாக இருந்தது அந்த உணவகம். அதிலும் ஒரு மேசையில் மூன்று பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பார்சல் வாங்கிச் செல்ல ஒரு சிறு கும்பல் காத்திருந்தது.


செல்வம் முதலில் இறங்கி காத்து நிற்க, 'இங்கயா?' என்பதுபோல் தயக்கத்துடன் அவள் அப்படியே அமர்ந்திருக்கவும், "வா மங்க, சாப்ட்டு வந்துடுவோம்" என அழைத்தான் தாமு.


 "பரவாயில்ல தாமு, நான் இங்கயே உட்கார்ந்திருக்கேன், நீ முதல்ல துன்னுட்டு எனக்கும் எதாச்சும் வாங்கிட்டு வா" என அவள் மென்மையாக மறுக்க, தன் பார்வையைச் சுழல விட்டவன், "அப்படில்லாம் தனியா விட முடியாது மங்க, செக்யூரிட்டி ப்ராப்ளம், சொன்னா புரிஞ்சிக்க" என்றான் கட்டளை தொனிக்க.


'ஆமாம், பெரிய இவன்னு நினைப்பு!' என்று சட்டென அலட்சியமாகத் தோன்றினாலும், அவனுக்கிருக்கும் அரசியல் தொடர்பு நினைவுக்கு வரவும், அதுவும் மற்றவர் அவனை டீ.ஜே என்றழைத்தது வேறு அவளுடைய நினைவில் வர, அவன்தான் பிரபல டீ.ஜே என்பதும் மூளைக்குள் உரைக்க, அதற்கு மேல் பிகு செய்யாமல் இறங்கி அவனுடன் நடந்தாள்.


செல்வம் முதலில் உள்ளே நுழைய, அவனைப் பார்த்ததும் கல்லாவில் அமர்ந்திருந்தவர் போட்டது போட்டபடி அப்படியே எழுந்தோடி வந்தார். அவ்வளவுதான், அதன்பின் அங்கே வேலை செய்துகொண்டிருந்த மற்ற மூவரும் கூட பரபரப்பகிவிட, அவர்களுக்கு அப்படி ஒரு இராஜ உபச்சாரம்தான். 


உள்ளே சமையல் செய்பவரே வந்து, 'அதை செய்யவா, இதை செய்யவா?' என தாமுவை விழுந்து விழுந்து கவனிக்க, 'பார்ரா!' என உள்ளுக்குள்ளேயே வியந்தாள் நிலமங்கை.


ஒருவழியாக சாப்பிட்டு முடித்து அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு வெளியில் வரவும், "ஸ்டார் ஹோட்டல் தவிர வேற எங்கயும் சாப்பிடமாட்டேன்னு ஓவர் பந்தா பண்ணுவ! அது எப்டி தாமு இப்புடி தல குப்பற மாறிப் போயிட்ட?" என வியப்பில் தன் மனதிற்குள் எழுந்த கேள்வியை வாய் விட்டே கேட்டுவிட்டாள் மங்கை.


நக்கல் நையாண்டி எதுவும் இல்லாமல், மனதில் பட்டதை அவள் அப்படியே கேட்பது அவனுக்கும் புரிய, "நெனச்ச நேரத்துல நெனச்ச இடத்துக்குப் போறோம், வரோம், எங்க என்ன கிடைக்குதோ அத சாப்பிட்டுப் பழகிட்டேன் மங்க! அதை விட முக்கியமான மேட்டர் என்னன்னா, கூட்டம் முண்டி அடிக்கற ஹை கிளாஸ் ரெஸ்டாரன்ட்ஸ் உள்ள போனா தேவை இல்லாத செக்யூரிட்டி சிக்கல்! இந்த மாதிரி இடம்னா நம்மள சுத்தி யார் நடமாடறாங்கன்னு ஒரு கன்ட்ரோல் இருக்கும்" என விளக்கம் கொடுத்தான்.


பேசியபடியே இருவரும் காருக்குள் வந்து உட்கார, அலுங்காமல் குலுங்காமல் வேகம் எடுத்தது அந்த வாகனம்.


மேற்கொண்டு எதையும் தோண்டித் துருவாமல், வெளிப்புறமாகத் திரும்பி அவள் வேடிக்கை பார்க்கத் தொடங்க, மங்கிய அரைகுறை வெளிச்சத்தில் வரி வடிவமாக தெரிந்த அவனது மங்கையையே பார்த்தபடி உட்கர்ந்திருந்தந்தான் அதையே தன் வாடிக்கையாக வைத்திருக்கும் தாமோதரன்.


அவர்கள் ஊர் வந்து சேர நள்ளிரவாகிப் போனது.


"செல்வண்ணே, வண்டிய எங்க வீட்டாண்ட நிறுத்து. நான் அங்கயே எறங்கிக்கறேன்" என அதீத முன்னெச்சரிக்கையுடன், வாகனம் அவர்களுடைய வீதியை அடைவதற்கு முன்பே சொல்லிவிட்டாள் நிலமங்கை.


செல்வம் திரும்பி, அனுமதிக்காக தாமுவைப் பார்க்க, ஆமோதிப்பாக அவன் விழி அசைத்த விதத்திலேயே அவனுடைய கள்ளத்தனம் புரிந்து போக, பக்கெனச் சிரித்துவிட்டான் செல்வம்.  காரணம் புரியாமல் மங்கை எரிச்சலுடன் அவனுடைய முகத்தை ஏறிட, தாமுவோ நன்றாக முறைத்து வைக்க, அப்படியே புரையேறி இருமுவதுபோல் பாவனை செய்து சமாளித்து தாமுவை அமைதிப்படுத்தி ஒரு வழியாகத் தப்பித்தவன், நல்லவன் போல மங்கையின் வீட்டு வாயிலில் காரை நிறுத்த, அவள் இறங்கவும், மறுபக்கமாக இறங்கினான் தாமோதரன்.


'இவன் ஏன் இங்க இறங்கறான்?' என மங்கை யோசிக்க, "கார ஷெட்ல வுட்டுட்டு நீ ஊட்டுக்குக் கிளம்பு செல்வம். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு மதியத்துக்கு மேல நீ வேலைக்கு வந்தா போதும்" என்று அவன் சொன்ன அடுத்த நொடி அந்த வாகனம் அங்கிருந்து பறந்தது.


ஊரே அடங்கிப்போய், சந்தடி சத்தம் இல்லாமல் இருக்க, வாயிற் திண்ணையிலேயே கயிற்றுக் கட்டிலைப் போட்டு, கம்பளியால் இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்த சந்தானம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.


முகத்துக்கு நேராகப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் எனும் அளவுக்குச் செவித்திறன் முற்றிலும் குறைந்துபோயிருக்க, தாமுவின் வாகனத்தின் ஓசை கூட அவரை எழுப்பவில்லை.


வீட்டு இரேழியில் போடப்பட்டிருந்த சிவப்பு நிற இரவு விளக்கின் ஒளி கீற்றாக வெளியில் கசிய, நிலைக்கதவு திறந்தே கிடப்பதும் புரிந்தது. எந்த நேரம் வந்தாலும், காத்திருக்காமல் அவள் வீட்டிற்குள் செல்ல ஏதுவாக தாத்தா செய்து வைத்திருக்கும் ஏற்பாடு என்பது புரிந்து மங்கையின் மனம் நெகிழ்ந்து போனது.


தாமு தன் வீடு நோக்கிச் சென்றுவிடுவான் பின்பு தான் வீட்டிற்குள் செல்லலாம் என அவள் அங்கேயே தேங்கி நிற்க, "என்ன விடிய விடிய தெருலியே நிக்கப் போறியா? உள்ள போ மங்க" என்றான் அதிகாரமாக.


அதில் மூண்ட எரிச்சலுடன், "எங்கூட்டுக்குள்ள போக நீ ஒண்ணும் எனக்கு வழிச் சொல்லத் தேவையில்ல. மொதல்ல நீ இங்க இருந்து கிளம்பு" என்றாளவள் அவனை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக.  


அவளது ஒவ்வொரு சிறு செய்கையும் கூட அவனை உவகைக் கொள்ளச் செய்ய, "நீ உங்கூட்டுக்குள்ள போறதும் போவாததும் உன் இஷ்டம். நான் எங்க போவணும்னு நீ சொல்லாத" என வம்பை வளர்த்தவன், அவளுடைய வீட்டை நோக்கி எட்டு வைக்க, வேகமாக ஓடி வந்து அவனை வழி மறித்து நின்றவள், "ஹேய்... என்ன இந்நேரத்துக்கு இங்க நுழையற" எனக் கேட்டாள் பதட்டத்துடன்.


"ஹேய், நானும் பார்த்துகினே இருக்கேன், ரொம்பத்தான் ஓவரா போய்கினு இருக்க. இத என் மாமியார் வூடுன்னு சொல்லலாம்னா, அதுக்குத்தான் உட மாட்ட. ஆனா எங்க சின்னக்கா வூட்டுக்குப் போக நான் யாரைக் கேக்கணும். சர்தான் போடீ" என அவன் அடாவடியாகப் பதில் சொல்ல, தலையைப் பிடித்துக் கொண்டாள் மங்கை.


"ரொம்ப டயர்டா இருக்கு. தூக்கம் கண்ணைப் பிடுங்குது. தாமு, ப்ளீஸ் தாமு, என்னை உட்டுடு. எதுனாலும் நாளைக்கு காலில பேசிக்கலாம்" என் அவள் கெஞ்சலில் இறங்க, உண்மையில் பாவமாகிப்போனது தாமுவுக்கு. ஆனாலும், நொடி நேரம் கூட அவளை விட்டு விலகக் கொஞ்சமும் மனம் வரவில்லை.


மெல்லிய நிலவொளியில், ஏக்கத்துடன் அவளுடைய முகத்தைப் பார்க்க, வாடி வதங்கிப் போயிருந்தாள். அதற்கு மேலும் அவளை வாட்டி வதைக்க மனம் வராமல், மௌனமாகத் திரும்பி, தன் வீடு நோக்கி நடந்தான் தாமு.


அவனைத் திரும்பியும் பார்க்காமல் நடந்தவள், கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.


அவளுடைய பாராமுகம் மனதைக் குத்திக் கிழிக்க, தன் அறைக்குள் போகக் கூட பிடிக்காமல், காலை உதறி காலணிகளை வீசியவன், வாயிற் திண்ணையிலே சரிந்து படுத்தான்.


'தன் மங்கையைத் தன்னுடனேயே தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?' என்கிற யோசனை மட்டுமே அவனது மூளை முழுவதும் சுழன்றடிக்க, மெல்லிய ரீங்காரத்துடன் சுற்றிச் சுற்றி வந்து அவனைத் துளைத்து அவனது இரத்தத்தை உறிஞ்சிய கொசுக்களால் கூட அவனது சிந்தனையைக் கலைக்க இயலவில்லை.


அந்தளவுக்கு தாமோதரனது உணர்வு மொத்தமும் நிலமங்கையிடம் அடிமைபட்டுப்போய் கிடந்தது என்பதே உண்மை.



1 comment
© KPN NOVELS COPY PROTECT
bottom of page