ஜீவனின் தேடல்.
நினைவுகளில்…
எடுத்துக்கொண்ட பிராஜக்ட் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின் அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்தான் தாமு. ஆனாலும், மேலும் சில தினங்களுக்குப் பிறகுதான் அவனால் பொன்மருதத்திற்கே வர முடிந்தது.
பின் மாலை நேரத்தில் வீடு திரும்பியவனை, "நீயி அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்து பத்து நாளுக்கு மேல ஆவுது. ஊரு பக்கம் வரணும்னு எண்ணமே வரலல்ல உனக்கு. இப்புடி அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் போயிதான் துட்டு சம்பாதிச்சிக் கொட்டணும்னு என்ன தலையெழுத்து நமக்கு.”
”ஒண்ணு ஊர் மேய போனா இன்னொன்னு கிடக்குன்னு தொடச்சு போட்டுட்டுப் போவ உன் ஆயி அப்பன் என்ன மூணு நாலா பெத்துப் போட்டிருக்குதுங்க. நான்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒத்தையா பெத்து வெச்சேன்னா, இதுங்களும் சேர்ந்து ஓரியா பெத்து வெச்சிகினு கிடக்குதுங்க ம்கும்" என வந்ததும் வராததுமாக பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார் அவனுடைய பாட்டி.
பெங்களூரிலிருந்து வாலாஜா வரும் வரை கூட அவனுக்கு அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை. முந்தைய தினம் பொழிந்த மழையால் சேரும் சகதியும் குண்டும் குழியுமாக மாறிப்போயிருந்த சாலைகளால் அங்கிருந்து சில நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை முழுவதுமாக இரண்டு மணி செலவு செய்து வந்து சேர்ந்திருந்தான். போதாதக்குறைக்கு வழியை மறித்து நின்றிருந்த ஆட்டு மந்தைகள் வேறு.
அதில் உண்டான கடுப்புடன் உள்ளே நுழைந்தவனுக்குப் பாட்டியின் இந்தப் பேச்சு நல்லவேளையாகச் சிரிப்பை வரவழைத்துவிட, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு அருகில் போய் நிதானமாக அமர்ந்தான்.
"நீ கவலையே படாத ஆயா! உன்னோட அந்தக் கொறைய நான் போக்கறேன். பையனும் பொண்ணுமா ஒரு ஏழு எட்டுப் பெத்துப் போட்டா போதுமா உனக்கு? வருஷத்துக்கு ஒண்ணா வரிசையா ரிலீஸ் பண்ணி இந்த வூடு முழுக்க ஓட விடல நான் உன் பேரன் இல்ல" என அவன் சூளுரைத்த விதத்தில் வெட்கம் பிடுங்கியது கிழவிக்கு.
முகத்தை மூடிக்கொண்டு சிரித்தவரின் கோபம் மலையேறி இருக்க, "உனக்குப் பொருத்தமா மூணு ஜாதகம் வந்துச்சு. நீ ஊருல இருந்து வரத்துக்குள்ளாற ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் முடிஞ்சி அது முழுவாமயே இருக்குது. இன்னொண்ணுக்கும் பேசி முடிச்சிட்டாங்களாங்காட்டியும். அஆங்" என நொடித்துக்கொண்டவர், "இன்னும் ஒரே ஒரு பொண்ணுதான் இப்ப தோதா இருக்குது. அடியேன்னு சொல்றதுக்கு ஆளக்காணுமாம், அதுக்குள்ளாற நீ இன்னாடான்னா ஏழெட்டுப் புள்ள வரைக்கும் போயிட்ட, ம்கும்..." எனச் சலிப்புடன் முடித்தார்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, இந்த ஆறேழு மாதங்களில் நிலமங்கை பற்றிய நினைப்பை எப்படி மனதிற்குள் அடைத்து வைத்தான் என்றே விளங்கவில்லை.
ஆர்க்டிக் குளிர் பிரதேசங்களில் வாழும் கரடி, வௌவால், அணில் போன்ற சில வகை விலங்குகள், அங்கே குளிர்காலங்களில் நிகழும் பனி பொழிவிலிருந்தும் உணவு பற்றாக்குறையிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொண்டு உயிர் வாழ ஹைபர்னேஷன் எனப்படும் மாதக் கணக்கில் நீடிக்கும் நீளுரக்கத்தைக் கொள்ளும். அந்தச் சமயத்தில் அவற்றின் இதயத் துடிப்பு கூட மிக மெல்லியதாக இருக்கும். அப்பொழுது அவற்றுக்கு உணவின் தேவை கூட இருக்காது.
அப்படிப்பட்ட கடுங்குளிர் காலம் முடிந்து அவற்றின் வாழ்விடங்களில் உஷ்ண நிலை உயரும்போது ஏதோ ஒரு பொந்துக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த மிருகம் புற வெட்பநிலையை உணராது. ஆனால் அது விழித்துக்கொள்வதற்கான அலாரம் அதன் உணர்விலேயே கலந்திருக்கும். அதற்கான வேலையை அவற்றின் மூளையின் அடிப்பகுதியான ஹைபோதலாமசால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரசாயனம் செய்து முடிக்கும்.
அதைப்போலத்தான் சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நொடியே நிலமங்கையின் நினைவும் அவனுக்குள் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. கூடவே கடைசியாக, அவள் 'ராங் நம்பர்' எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்த சம்பவமும்.
உடனே ஊருக்கு வந்து அவளை ஒரு கைப் பார்க்க வேண்டும் என உள்ளே இருந்து பொங்கிய வன்மம், அவனை அழைத்துச் செல்ல காருடன் வந்த செல்வம் சொன்ன ஊர் கதை உலகத்து கதைகளால் அப்படியே அடங்கிப்போனது.
உண்மையில் நேராக பொன்மருதம் வரும் எண்ணத்தில்தான் இருந்தான். அதனால்தான் காரை எடுத்துக்கொண்டு செல்வத்தை விமான நிலையத்திற்கே வரச்சொல்லியிருந்தான். ஆனால் அதுவே அவன் அதீதமாக எரிச்சல் அடையக் காரணமாகிப்போனது.
அவனைக் கண்ட நொடி உற்சாகம் பீறிட, "ண்ணா... எப்டிண்ணா இருக்க?" எனத் தொடங்கி அவன் என்ன பதில் சொன்னான் என்பதைக் கூட காதில் வாங்காமல் அவன் ஊரில் இல்லாத ஆறு மாதங்களில் நடந்த அத்தனை விவகாரங்களையும் அவர்கள் ஊரில் குடியிருக்கும் ஒவ்வொரு தனிநபர் பற்றிய விவரங்கள் உட்பட ஆடு மாடு கன்று போட்டது வரை அனைத்து புள்ளிவிவரங்களையும் விலாவாரியாக அவன் விளக்கி முடிக்க, அனிச்சையாக அதில் மங்கையைப் பற்றிய தகவல்களும் வந்து இணைந்துகொண்டன.
"எப்படியோண்ணா... இந்த மங்க பொண்ணும் என் ஆளுமா சேர்ந்து படியோ படியோன்னு படிச்சு ப்ளஸ் டூ எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சிடுச்சுங்க. பார்க்கலாம் இந்த வருஷமாவது இந்த தேவியோட படிப்ப நிறுத்திட்டு அதோட அப்பன் கல்யாணப் பேச்சை எடுக்கறானான்னு" என அவன் இயல்பாகச் சொல்லப்போக, பேச்சு எதார்த்தமாகத் திரும்புவது போல் மங்கையின் பக்கம் திரும்ப, அவள் எந்த ஒரு போட்டி தேர்வுக்கும் தயாராகவேயில்லை குறைந்தபட்சம் அவள் அவற்றிற்காக விண்ணப்பிக்கக்கூட இல்லை எனத் தெரிந்தது.
அவன் அவ்வளவு தூரம் சொன்னதற்காகவாவது அவள் முயற்சி செய்வாள் என அவன் எண்ணிக்கொண்டிருக்க, வேளாண் பட்டப்படிப்பு என எப்படியோ தன் மனதில் நினைத்ததை நினைத்தபடி அவள் சாதித்துக்கொண்டாள் என்ற எண்ணமே அவ்வளவு கசப்பைக் கொடுக்க, அவனுக்கு ஊருக்கு வரக்கூட பிடிக்கவில்லை. சில நிமிடங்களிலேயே பெங்களூரு செல்ல ஒரு விமானம் தயார் நிலையில் இருக்க அவசர வேலை என்று செல்வத்திடம் சொல்லிவிட்டு அப்படியே கிளம்பிவிட்டான் தாமோதரன்.
கிட்டத்தட்ட பத்து தினங்கள் வேலை... வேலை... வேலை... இடையே இரண்டு தின கோவா பயணம் பார்ட்டி, மது, கேளிக்கைகள் எனத் தன்னை மூழ்கடித்துக்கொண்டவன், மனப் பயிற்சியால் மங்கை மீதான தன் எண்ணப்போக்கைக் கைக்கழுவிவிட்டதாக உறுதியான நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்ட பிறகுதான் பொன்மருதத்தின் எல்லைக்குள்ளேயே காலை வைத்தான்.
அதற்கேற்றாற்போல வரலட்சுமி இப்படி பேசவும், அந்தப் பெண்ணைப் போய் பார்த்தால்தான் என்ன என்ற எண்ணம் தோன்ற, "பொண்ணு எந்த ஊரு ஆயா?" எனக் கேட்டான் ஆர்வமுடன்.
அதை காதில்வாங்கியவளாக அவனை முறைத்தபடியே புஷ்பா காஃபி கோப்பையை லொட்டென அவனுக்கு அருகில் வைத்துவிட்டு கழுத்தை வெட்டி நொடித்தவண்ணம் வாய்க்குள்ளேயே எதையோ முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றாள்.
"கடுப்ப பாத்தியா உன் ஆத்தாளுக்கு? அந்த மங்க பொண்ண மொண்டுக்கினு வரலன்னு அப்படியே கழுத்து முட்டும் கொற இவளுக்கு. ம்கூம்... பாரு கண்ணு, பொழுது விடிஞ்சி பொழுது போனா உங்க அப்பனாண்ட அப்படி ஒரு சண்டைப் பிடிக்குது இது" எனக் குதர்க்கமாக மொழிந்தார்.
'ஐயோ! இந்த கெழவி ஏன் அவள இப்ப நடுவுல இழுக்குது?' என எரிச்சலுடன் அவன் அவரைப் பார்த்த பார்வையில், எப்பொழுதுமே இந்தப் பேச்சு அவனுக்கு இரசிக்காது என்பதாக, "சரி... சரி... அத வுடு" என அக்கறையின்றி சொல்லவிட்டு, "பொண்ண பத்தி கேட்ட இல்ல. எல்லாம் நம்ம உத்திரமேரூர் காரங்கதான், தாமு. உன் தாத்தா வழியில தூரத்து சொந்தமும் கூட. ஆனா போன தலமொறையிலயே மெட்ராஸ்ல போய் குடியேறிட்டாங்க. பொண்ணு பேரு பவியாவோ திவியாவோ சொல்லிச்சு. ஒன்ன மாதிரியே நல்ல படிப்பெல்லாம் படிச்சிருக்குதாங்காட்டியும். மொட்ராசுலயே ஏதோ கம்பியூட்டர் கம்பனில வேலைக்கும் போறாப்பலயாம். பார்க்க, அரண்மனைப் படத்துல பேயா வருதே ஹீரோயினி ஆங்... அஞ்சிகா இல்ல அது கணக்கா கொழுக்கு மொழுக்குன்னு வெள்ள தோலோட இருக்குது" என வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக்கொண்டே போனார்.
'இப்படிப்பட்ட வெள்ளைத் தோல் பெண்ணெல்லாம் நமக்குக் கொஞ்சமாவது தோதாக வருமா?' என்ற கேள்வி எழுந்தாலும் அது தன் திருமண கொள்கைக்கு முரணாக இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் ஜொள்ளும் வழியத்தான் செய்தது.
"நீ எப்ப ஆயா அந்தப் பொண்ண பாத்த?" என்றான் தாமு வியப்பு மேலிட.
"போன தையில உன் தாத்தாவோட சின்னத்த பேத்தி கல்யாணத்துக்குப் போயாந்தோம் இல்ல, அதுக்கு குடும்பத்தோட வந்திருந்தாங்க. பொண்ணோட அப்பனுக்கு ஒன்ன பத்தி முன்னமே தெரியும்போலிருக்கு. அப்படி இப்படி பேச்சு அடிப்படவும் அங்கேயே ஜாதகத்தை எடுத்து நீட்டிப்புட்டான். பொண்ணு கூட எவ்வளவு ஆசையா என்னாண்ட பேசிச்சு தெரியுமா!" என அதிகம் சிலாகித்தார்.
"நீயி இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் என்ன சொல்லப்போறேன் ஆயா. அப்பாகைல சொல்லி பொண்ணு பார்க்க ஏற்பாடு செஞ்சிடு" என்றவன் தன் மாடி அறை நோக்கிப் போக, அழுகையில் அப்பொழுது மூக்கை சிந்த ஆரம்பித்தவள்தான் புஷ்பா, பெண் பார்க்கும் படலம் முடிந்து பரஸ்பரம் இருவருக்கும் பிடித்துப்போய் நிச்சயதாம்பூலத்திற்கு நாள் குறித்தப் பின்பும் கூட அதுதான் தொடர்ந்தது.
புஷ்பா கணவர் மற்றும் மாமியாரின் வாய்க்குப் பயந்து வீட்டுத் தலைவி என்கிற பொறுப்பில் பெண் பார்க்க போய் வர, நிச்சயதாம்பூலத்திற்கு என ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறாளே ஒழிய ஒரே மகனின் திருமணம் கொஞ்சம் கூட சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
நிலமங்கையைத் தவிர வேறு யார் மருமகளாக வந்தாலும் அதை ஏற்கின்ற அளவுக்கு அவருடைய மனம் பக்குவப்படவில்லை என்பதே உண்மை.
முழு உரிமையுடன் கணவரிடம் தன் மறுப்பைப் பதிவு செய்யக்கூட இயலவில்லை என்றால், இந்த விஷயத்தில் துளி அளவு அணுகக்கூட இடமே கொடுக்கவில்லை அவருடைய அருமை மகன். அவருக்கு கரும்பாறையில் போய் முட்டிக்கொள்வதுபோலத்தான் இருந்தது.
சென்னையில் அவர்கள் வீட்டிற்கே போய் பெண்ணை நேரில் பார்க்கும் வரையிலும் கூட எந்த ஒரு தீர்மானத்திற்கும் வராத தாமு, அவளை நேரில் பார்த்து கூடவே சில நிமிடங்கள் தனிமையில் பேசிய பிறகு அப்படியே தலை குப்புற விழுந்துவிட்டான் என்றால் அது மிகையில்லை. அவனுடைய பாட்டி சொன்னதை விட நேரில் இன்னும் அழகாக இருந்தாள் அந்தப் பெண் பவ்யா. அழகு என்றால் ஆளை அசரடிக்கும் அப்படி ஒரு அழகு, காலத்திற்கு ஏற்றாற்போல நவ நாகரிக தோற்றமும் அவள் பேசும் தோரணையும் அவனையும் மீறி அவளைப் பிடித்திருக்கிறது என அங்கேயே அவனைச் சொல்ல வைத்துவிட்டது.
சிந்திக்க சிறிதளவு அவகாசம் கொடுத்தாலும் எங்கே பேரன் மனம் மாறிவிடுவானோ என்கிற பயத்தில் வரலட்சுமி வேறு அவசரப்படுத்தவும் ஊருக்கு வந்ததும் வராததுமாக அவர்கள் குடும்ப புரோகிதரைச் சந்தித்து நிச்சய தாம்பூலத்துக்கு நாளையும் குறித்துவிட்டார் ஜனார்த்தனன்.
ஏனோ தெரியவில்லை அவன் அங்கே வந்த அந்த நான்கைந்து நாட்களில் ஒரு முறை கூட அவனுடைய வீட்டின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை நிலமங்கை. அதனால் அவனுக்கு நேருக்கு நேர் அவளை எதிர்கொள்ளும் சங்கடம் ஏற்படாமலேயே போனது. விடுப்பு முடிந்து பெங்களூருக்கே திரும்பச் சென்றுவிட்டான் தாமு.
***
மறுபடியும் தாமோதரன் பொன்மருதம் வந்தபொழுது ஒரு வாரம் கடந்திருந்தது. அடுத்த வாரத்தில் நிச்சய தாம்பூல விழா நடக்கவிருக்க நீண்ட விடுப்பு எடுத்து வந்திருந்தான்.
அந்த ஒரு வாரமும் வேலை முடிந்து இருப்பிடத்திற்குத் திரும்பிய பிறகு ஒரு முறையேனும் பவ்யாவை அழைத்துப் பேசிவிடுவான். அவன் அழைக்க தாமதமானால் கூட அவளே அழைத்துவிடுவாள்.
பேச்சுகள் பெரும்பாலும் அவர்களுடைய வேலை அதில் இருக்கும் எதிர்கால வாய்ப்புகள், அமெரிக்கா, க்ரீன்-கார்ட் என்பதாகவே இருக்கும்.
சமையல், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுவது, சாப்பாட்டில் விருப்பு வெறுப்பு பற்றி ஏதாவது அவன் கேள்வி கேட்டாலும் சாதுரியமாகப் பேச்சை மாற்றி அவள் அந்தப் பகுதியையே தவிர்ப்பதாகத் தோன்ற தாமோதரனுக்கு எரிச்சல் கூட மூளும்.
ஆனாலும், முயன்றால் தன் விருப்பத்துக்கு அவளை வளைக்க முடியாமலா போகப்போகிறது என்கிற அகந்தையும் சற்று அதிகமாகவே தலைத் தூக்க 'என்ன இருந்தாலும் பெண்தானே ஒரு கைப் பார்த்துக்கொள்ளலாம்' எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வான்.
இன்னும் இரண்டு தினங்களில் காஞ்சிபுரம் போய் நிச்சய புடவை வாங்குவதாக இருக்க, அந்தப் புடவை குறைந்தது ஐம்பதாயிரத்திலாவது இருக்க வேண்டும் அதுவும் தானே நேரில் வந்து தனக்குப் பிடித்ததாகப் பார்த்துத்தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அங்கே அவள் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்க, இங்கே வரலட்சுமி என்னடாவென்றால் திருமணத்திற்கு முன்பாகப் பெண்ணை இப்படி எல்லா விஷயத்திலும் தலையிட வைக்கக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். புஷ்பாவோ பட்டும் படாமல் ஏனோதானோவென்று இருக்க, அவனுக்கு இதையெல்லாம் வேறு பார்க்க வேண்டியதாக இருந்தது.
திருமணத்தை எண்ணி ஒரு இன்பப் பூரிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக மனதோரம் சற்று சலித்துத்தான் போனது. ஒருவித திருப்தி இல்லாத மனநிலையில் சிக்கித்தவித்தான். அவனுடைய உயிரின் தேடலுக்கும் கைக்கெட்டிய எதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி விண்ணுக்கும் மண்ணுக்குமானதாக இருக்கிறதே! அதனால்தானோ?
இத்துடன் நிற்காமல் எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பதாகவே அமைந்துபோனது தொடர்ந்து நடந்த சம்பவங்கள் எல்லாமே.
***
அடுத்த நாள் காலை வழக்கம்போல சீக்கிரமே கண்விழித்து, ட்ராக்ஸ் சூட் அணிந்து நடைப்பயிற்சிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான் தாமு.
அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்திருந்த நவீன இரக கேமராவை உபயோகிக்க ஏதுவாக முந்தைய இரவுதான் தயார் செய்திருந்தான். மறக்காமல் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டவன் கீழே இறங்கி வர, வீடே பரபரப்பாக இருந்தது.
"என்ன ஆயா, உம் மருமவ இங்கயும் அங்கேயும் ஓடிக்கினு இருக்குது. நிச்சதாம்பூலத்துக்குதான் இன்னும் ஒரு வாரம் இருக்குதே, இன்னைக்கு என்ன விசேஷம்?" என அவன் கிழவியின் காதைக் கடித்தான்.
"உட்டா இன்னைக்கே அந்த பவியா பொண்ண இட்டாந்து குடும்பம் நடத்துவ போல!" என விஷமமாக மொழிந்தார் பாட்டி.
"என்ன கெழவி... முடியலையா உனக்கு' என அவன் கடுப்பாகவும், "பின்ன அசலூர்காரன் மாதிரி கேள்வி கேட்டா வேற எப்படி பதில் சொல்லுவாங்களாம்?" என நொடித்துக்கொண்டு, "கோட மழை பெஞ்சுதில்ல... அதான் இன்னைக்கு நாள் நல்லா இருக்கவும் பொன்னேர் பூட்டப்போறாங்களாங்காட்டியும். அதுக்குதான் அவ தயார் செஞ்சிட்டு இருக்கா" என விளக்கம் கொடுத்தார்.
"சரி... சரி... ஆள வுடு. நான் கிளம்பறேன்" என வெளியே செல்ல எத்தனிக்கவும்,
"இந்தா தாமு, இந்த டீய குடிச்சிட்டுப் போ" என அவனைத் தடுத்த புஷ்பா, "அதிசயமா இன்னைக்கு ஊர்ல இருக்க! எப்படியும் பூஜ போட இன்னும் கொஞ்ச நேரம் ஆவும். முடிஞ்சா அங்க வாயேன்" என வாஞ்சையுடன் அவனை அழைத்தாள்.
ஏனோ ஒரு பரிதாபம் வந்து ஒட்டிக்கொண்டது அவனுடைய மனதில். 'திருமண விஷயத்தில்தான் அவர் பேச்சை மதிக்கவில்லை, குறைந்தபட்சம் இதையாவது செய்வோம்' என அந்த நொடி அவன் எடுத்த முடிவு, உண்மையில் ஒரு விபரீத முடிவு. காலம் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் ஒரு முக்கிய நகர்வு.
***
Comments