சரித்திரம் திரும்புகிறதோ?
நிதரிசனத்தில்…
தாமோதரனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியவாறே, "நமக்கு நடந்ததா நீங்க சொல்ற கல்யாணத்துக்கே எந்த அர்த்தமும் இல்ல. அப்பால எதுக்கு இந்த மிஸ்ஸஸ்... கிஸ்ஸஸ் எல்லாம்... விடுங்க என்ன" என்ற மங்கையின் குரல் நடுங்கியது.
"ங்க... ம்... நல்லவேள நெனவு படுத்தின மங்க... ஹா... ஹா...” என்று சிரிப்புடன் சொன்னவன், “என்னால என் மிஸ்ஸஸையும் விடமுடியாது... நம்ம கிஸ்ஸஸையும்" என அவள் அவசரத்தில் தன்னை மறந்து, விட்ட சாதாரண வார்த்தையைக் கூட தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, அசராமல் அவளுடைய காது மடலில் மென்மையாக இதழ் பதிக்க, கொதித்தே போனாள்.
தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி நிறுத்தி, தன்னை விடுவித்துக்கொண்டு நேருக்கு நேராக அவனுடைய முகத்தைப் பார்த்தவள், "நீ எந்த உரிமைல இப்படியெல்லம் செய்யறன்னு எனக்குத் தெரியும் தாமு. இதுனாலதான் நான் நம்ம ஊர் பக்கமே வராம இருந்தேன்" எனப் படபடவெனப் பொரிந்தாள்.
அவளுடைய இந்த உரிமையான பேச்சைக் கேட்கத்தானே அவன் இப்படி எல்லைமீறி அவளிடம் நடந்துகொண்டதே!
"இந்த உரிமை இருக்கவேபோய்தான ஒன்ன உன் விருப்பப்படி விட்டுவெச்சிருக்கேன் மிசஸ் நிலமங்கை. அத புரிஞ்சிக்கோ மொதல்ல" என்றான் ஒரு குறுஞ்சிரிப்புடன்.
"இனிமேல்பட்டு இந்த உரிமையெலாம் எப்படி காணாம போக போகுதுன்னு நீயே பாரு! இந்த வனா பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் மொத வேலையா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண போறேன்" என காரமாக பதில் கொடுத்தாள் மங்கை.
"என்னாது டிவோர்ஸா... அவ்ளோ ஈஸியா எங்கிட்ட இருந்து உன்னால டிவோர்ஸ் வாங்கிட முடியுமா? ஹா... ஹா... வருஷக்கணக்கா வெளிநாட்டுல இருந்துட்டுல்ல வந்திருக்க. அதனால ஒனக்கு தெரியல போல. இப்பல்லாம் நம்ம நாட்டோட சட்டம் பொண்ணுங்களுக்குக் கொஞ்சம் கூட ஃபேவரா இல்ல... அது தெரியுமா? ஒரு படத்துல விவேக் காமடில வரும் நெனவு இருக்கா... அதுல மைனர் குஞ்சுமணிக்குப் பஞ்சாயத்துல ஒரு தீர்ப்பு சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பெல்லாம் நம்ம நாட்டுல வந்துட்டு இருக்கு. இன்னும் சொல்லப்போனா மேரிட்டல் ரேப்ப கூட கோர்ட்டே அங்கீகரிக்குது! ஸோ... நீ இதையெல்லாம் நம்பாத. என்ன மட்டும் நம்பு, அதுதான் உனக்கு நல்லது" என அவன் கொஞ்சம் கூட அசராமல் அவளுக்குப் பதில் கொடுக்க, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் நிலமங்கை.
பதிலுக்கு, அசராமல் அவளைப் பார்த்து கண் சிமிட்டி நிலமங்கையின் இரத்தக் கொதிப்பை எகிறவைத்தான் தாமோதரன்.
கோபம் எல்லையைக் கடக்க, "தாமு நல்லவன் வல்லவன்னு என்னோட தாத்தாவையே பேசவெச்சிட்டியே, ஒரு வேளை நீ மெய்யாலுமே மாறிட்டியாங்காட்டியுன்னு உன்னைத் தப்பா நினைச்சுட்டேன் தாமு! கிழக்கால உதிக்கற சூரியன் மேக்கால உதிச்சாலும் உதிக்கும், நீயாவது மாறுறதாவது" என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே, அவளுக்கும் அவனுக்கும் இடையிலிருந்த தூரத்தை அதிகரிக்க எண்ணிப் பின்னோக்கி சில எட்டுகள் வைத்தாள் நிலமங்கை.
அவளுடைய புகைப்படமே அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு எதிராகச் செயல்பட, அவள் கூட்டிய தூரத்தை நொடியில் குறைத்து, தன் இரு கரங்களையும் அந்தப் புகைப்படத்தின் மீதே பதித்து சிறிதும் நகர வழியின்றி அவளுக்குத் தடுப்பு வேலி அமைத்து, "ப்ச்... நான் மொத்தமா என்ன மாத்திக்கிட்டேன் மங்க. எல்லாம் ஒனக்காக. எனக்கு நீ வேணுன்றத்துக்காக. என்ன நீ நம்பித்தான் ஆவணும்" என அவளுடைய விழிகளில் கலந்தபடி, கிசுகிசுத்தவன், “இப்படியெல்லாம் சொல்லி சொல்லி விளங்க வெக்க முடியுமா மங்க? கூட வாழ்ந்து பாத்து நீயே தெரிஞ்சுக்க” எனக் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு, அவளிடமிருந்து விலகி தன்னுடைய அறை நோக்கிப் போக, அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவள், விட்டால் போதும் என்பது போல் வாயிலை நோக்கிப் போனாள்.
"ஓய்... மங்க!" என்ற தாமோதரனின் அவசர அழைப்பில் திரும்பியவள், 'என்ன?' என்பதுபோல் அவனை கேள்வியுடன் பார்க்க, "பார்த்து தெரிஞ்சிக்கோன்னு சொன்னேன் இல்ல? என்ன நீ பாட்டுக்குப் போயினே இருக்க! கொஞ்சம் உள்ள வந்து பார்த்துட்டுதான் போறது..." என அவளை அழைத்தான்.
"இல்ல... எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு" எனத் தயக்கத்துடன் சற்றுத் தடுமாறினாள்.
"ப்ச்... இந்த ரூமுக்குள்ள வந்ததே இல்லையா நீ... சும்மா ஓவர் சீன் போடாம உள்ள வா. ஒன்ன ஒன்னும் கடிச்சு துன்னுட மாட்டேன்" என்றான் அவன் எகத்தாளமாக.
"ப்ச்... தாமு” என அவள் பற்களைக் கடிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் அவள் வந்தே ஆக வேண்டும் என்பது போல் அவன் தன்னுடைய அறைக்குள் செல்ல, முறைப்புடனேயே அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் மங்கை.
எந்த வித மாற்றங்களும் இல்லாமல் முன்பிருந்தது போல அப்படியே இருந்தது அவனுடைய அறை. 'இதை காண்பிக்கவா உள்ளே அழைத்தான்?' என்கிற விதத்தில் அவள் சலிப்பான பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச, தன் புருவங்களை உயர்த்தியவன் அங்கே இருந்த ஒரு கதவைத் தன் பார்வையாலேயே சுட்டிக்காண்பிக்க, இப்பொழுது அவளுடைய புருவங்கள் உயர்ந்தன.
ஏதோ ஒரு உந்துதலில் அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் உள்ளே செல்ல, அங்கே மிக மெலிதாகப் பரவியிருந்த மலர்களின் கதம்பமான நறுமணம் அவளை இதமாக வரவேற்றது.
புதிதாக அவன் ஏற்படுத்தியிருந்த அந்த அறை முழுவதுமே புத்தகங்களால் நிரம்பியிருந்தது.
அந்த அறையின் மூன்று புறமும் சுவர்களே தெரியாவண்ணம், கண்ணாடி-நெகிழ் கதவுகளால் பாதுகாப்பாக மூடப்பட்ட, மர தட்டுக்களாலான அலமாரிகளில் அந்தப் புத்தகங்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் படிப்பதற்கு ஏதுவாக மேசையுடன் நாற்காலிகள் போடப்பட்டிருக்க, அறையின் நான்காவது புறம், கண்ணாடி கதவுடன் கூடிய, கண்ணாடியினாலேயே ஆன தடுப்பு அமைக்கப்பட்டிருக்க அதற்கும் அப்பால் பல வண்ண மலர்களாலான மாடித் தோட்டம் அவளது கண்ணையும் கருத்தையும் அப்படியே கொள்ளை கொண்டது.
சுருக்கமாகச் சொன்னால் புத்தகங்களாலும் மலர்களாலும் சிறு சொர்க்கத்தையே அங்கே சிருஷ்டித்திருந்தான் தாமோதரன்.
வியப்பின் உச்சிக்கே போனாள் நிலமங்கை!
சில நிமிடங்கள் யோசித்த பிறகே, அவர்களுடைய பழைய வீட்டுப் பின்கட்டின் மொட்டைமாடியுடன் இந்தப் புதிய கட்டிடத்தை இணைத்திருக்கிறான் என்பது புரிந்தது.
'முதலில் தொலைந்து போவது எவற்றுள்? புத்தகங்களா அல்லது மலர்களா, எதனைத் தேர்ந்தெடுப்பது?' புரியவேயில்லை. இரண்டுமே அவ்வளவு பிடித்தமான விஷயங்கள் என்பதால் ஸ்தம்பித்துப்போய் நின்றாள்.
வியப்பு, மகிழ்ச்சி எனக் கலவையான பாவங்கள் அவளுடைய முகத்தில் பிரவாகித்துக்கொண்டிருக்க, தெள்ளத்தெளிவாக இல்லையென்றாலும் கூட அந்தக் கண்ணாடி தடுப்பு அதை அப்படியே நேரலையாக அவளுக்குப் பின்னால் நின்றவனுக்குப் படம் பிடித்துக் காண்பித்தது.
வழக்கம் போல அவளது அந்தப் பரவசம் அவனைத் தன்வசமிழக்கச் செய்ய, அவளது தடைகளை உடைத்து மேலும் முன்னேறாமல் எப்படியோ தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவன் மௌனமாக அந்த நொடிகளை அனுபவிக்க, புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை நோக்கிச் சென்றாளவள்.
வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் புத்தகங்கள் அனைத்தும், நம் பாரம்பரிய நெல் வகைகளைக் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள், இயற்கை விவசாயம் குறித்தப் புத்தகங்கள், சர் டேவிட் ஆட்டன்பரோவின் 'அவர் நேச்சர்'ரில் தொடங்கி, தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுற்றுச்சூழலியல் சம்பந்தமான எண்ணற்ற புத்தகங்கள், ரிச்சர்ட் டாக்கின்ஸுடைய 'த செல்ஃபிஷ் ஜீன்' தொடங்கி பரிணாம வளர்ச்சி பற்றிய பலவேறு புத்தகங்கள், வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தவளின் கண்களில் விழுந்தது, 'ரெஸ்பெக்ட் நேச்சர்! ஷி ஒன்லி சேவ் அஸ்!' என்கிற புத்தகம்.
தன்னை மறந்து அதை அனிச்சையாகக் கையில் எடுத்தவள், அதன் பக்கங்களைப் புரட்டி அதைத் தன் முகத்தில் புதைத்து அந்தப் புத்தகத்தின் வாசத்தைத் தன் நுரையீரல் முழுவதும் நிரப்பிக்கொண்டாள். பின் அதை மூடியவள் 'வெனம்' என்று அட்டைப்படத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த நூலின் ஆசிரியருடைய பெயரை விரல்களால் வருடியவாறு, "இந்த ஆத்தரோட புக்ஸெல்லாம் கூட படிப்பியா?!" என்று கேட்டாள் வியப்பு மேலிட.
"நீ கூட படிப்பியா?" எனக் கேட்டவன், "வெனம், அந்த நேம்ல மட்டும்தான் விஷம் இருக்கு. ஆனா ஆளு அமுதமாதான் இருக்கணும். அப்படி எழுதியிருக்காரு மனுஷன். ஒவ்வொரு வரிலயும் இந்த உலகத்தோடவும் இயற்கையோடவும் அவருக்கு இருக்கற அக்கறை தெரியும்" எனச் சிலாகித்தான் தாமு.
'நீயா இதையெல்லாம் பேசுவது!' என்பது போல அவள் அவன் முகத்தையே பார்த்திருக்க, அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன், "பரவாயில்ல... இவன கொஞ்சமா நம்பலாம்னு தோணுதா மங்க” என அவன் தன் காரியத்திலேயே குறியாக இருக்கவும், 'இதுக்கெல்லாம் நான் உன்னை நம்பமாட்டேன்' என்பதுபோல அவனை ஒரு பார்வை பார்த்தவள், கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு பூந்தோட்டத்தை நோக்கிச் சென்றாள்.
அறைக்குள் லேசாகச் சுழன்று கொண்டிருந்த நறுமணம், அந்தத் தோட்டத்திற்குள் வந்தவுடன் மொத்தமாக அவளை ஆக்கிரமித்துக் கொண்டது. இதமான நறுமணத்துடன் பன்னீர் ரோஜாக்கள், வெள்ளை ஆரஞ்சு வாடாமல்லி நிறங்களில் பட்டு ரோஜாக்கள், விதவிதமான வண்ணங்களில் பால்சம் மலர்கள், செவ்வந்திப் பூக்கள் எனப் பலவித மலர்ச்செடிகள் அணிவகுத்து அங்கே நின்றிருந்தன.
ஒவ்வொரு செடிகளையும் அது தாங்கியிருக்கும் மலர்களையும் பார்த்துக்கொண்டே நடந்தவள் அந்த மாடித் தோட்டத்தின் எல்லை வரை வரவும், அவர்கள் வீட்டின் முகப்பில் இரங்கூன் மல்லிகை படர்ந்திருப்பது போலவே ஜாதிமல்லிக்கொடி மொத்தமாகப் படர்ந்து அவர்கள் வீட்டுப் பின்புற வாயிலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
மலரத் தயாராக அரும்புகள் கொடிகளில் காத்திருக்க, முந்தைய மாலை மலர்ந்த மலர்கள் வாடி உதிர்ந்து அந்த இடம் முழுவதும் கொட்டிக் கிடந்தன.
அங்கிருந்து அகல முடியாவண்ணம் அவளைக் கட்டிப்போட்டது அந்த சூழ்நிலை. எந்த ஒரு சிந்தனையும் மனதை ஆக்கிரமிக்காமல், அந்த நிமிடங்களை அப்படியே அனுபவித்தவாறு உறைந்துபோய் நின்றாள் நிலமங்கை.
அவளுடைய அந்த மனநிலையைக் கலைக்க விரும்பாமல் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்றவாறு, 'பொண்ணுங்கள கரெக்ட் பண்ணணும்னாக்கா அவனவன் பூ கொடுப்பான் இல்லன்னா பொக்கே கொடுப்பான்... இவளுக்குப் பூந்தோட்டமே இல்ல கொடுக்க வேண்டியதா இருக்கு. பொண்ணுங்க புடவை நகைன்னு அட்ராக்ட் ஆனாக்க, இவ என்னடான்னா புக்ஸைப் பார்த்தாதான் அட்ராக்ட் ஆகுறா... என்ன டிசையனோ போடா தாமோதரா!' என மனதிற்குள் புலம்பியவாறு அவளைத் தன் பார்வையால் பருகிக்கொண்டிருந்தான் தாமோதரன்.
இருவரின் மோன நிலையையும் கலைப்பது போல அவனுடைய கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தவனின் தோரணையே மாறிப்போனது.
தொண்டையை செருமிக்கொண்டவன், "சொல்லுங்க அய்யா" என்று வெகு இயல்பாகச் பேச்சைத் தொடங்கினான்.
"ஒரு முக்கியமான விஷயம் டீ.ஜே, நேர்லதான் பேசணும். உடனே வர முடியுமா?" என கனிவான குரலில் எதிர்முனையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, "இப்பவே கிளம்பி வரேன்" என்றான் அவன் அந்த 'முக்கியமான விஷயம்' என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலுடன்.
அவன் பேசிய வார்த்தைகள் அவளுடைய செவிகளில் விழவே, 'அப்பாடா... எங்கேயோ வெளியில புறப்பட்டுப் போகப்போகுது போலிருக்கு... நாம தப்பிச்சோம்' என்கிற ரீதியில் அவள் அவனைப் பார்த்து வைக்க, "ஏதாவது நல்ல காட்டன் பொடவையா இருந்தா எடுத்துக் கட்டிட்டு வா, நாம உடனே பொறப்படணும்" என்றான் அவசர கதியில்.
"என்னாது... நான் புறப்பட்டு வரணுமா? அதுவும் உங்கூட! என்னால முடியாது. மணி கணக்கா ட்ரேவல் பண்ணி வந்திருக்கேன். டைம் ஸோன் செஞ்... ஜெட் லாக்குன்னு இப்பவே கண்ண கட்டுது" என படபடத்தாள்.
"இன்னைக்கு ஃபுல்லா இப்படியே ஓட்டிட்டு, ஒரு வழியா நைட்டே தூங்கிங்க. அப்பத்தான் நம்ம ஊர் டைம்க்கு உன் சாப்பாடு தூக்கம் எல்லாம் செட் ஆகும்" என வெகு சாதாரணமாகச் சொன்னவன், "கிளம்பு மங்க, முக்கியமா ஒருத்தர்கிட்ட உன்னை அறிமுகப்படுத்தணும்" என்று தான் சொன்னதிலேயே குறியாய் இருந்தான்.
"தாமு, நீ என்ன ரொம்ப ஓவரா டாமினேட் பண்ற" என அவள் குரலை உயர்த்த, "இருந்துட்டு போகட்டும்... வா" என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
"ப்ச்... அங்க, என்னோட லைஃப் ஸ்டைல்க்கு தோதா வாங்கின பேண்ட்-சட்டை இதெல்லாம்தான் இருக்கு. எங்கிட்ட காட்டன் பொடவல்லாம் இல்ல” என அவள் அவனுடன் செல்வதைத் தவிர்க்க சாக்குச் சொல்ல, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தவாறு அவனுடைய அறைக்குள் வந்தவன் வார்ட் ரோப்பை திறந்தான். அதில், விதவிதமாக நிறங்களில், லேட்டஸ்ட் டிசைன்களில் காட்டன், கிரேப், ஷிபான் என வகைக்கு நான்காக புடவைகள் தொங்கிக்கொண்டிருந்தன.
"சட்டுன்னு இதுல ஒண்ண எடுத்துக் கட்டிட்டு வா. ஜாக்கெட் இல்ல அது இதுன்னு சாக்குப் போக்குச் சொல்லாத. அது என்னவோ பிரின்சஸ் கட் ஜாகெட்டாமே... அதுல ரெண்டு மூணு சைஸ்ல, செல்வம் பொண்டாட்டிய கூட இட்னு போய் அம்மாதான் வாங்கியாந்துது. பொருத்தமா இருக்கற ஒண்ணா பார்த்துப் போட்டுனு உடனே வந்து சேரு" என்றான் விடாப்பிடியாக.
'ஐயோ... இப்படி ஒணணு இருக்கா?' என அவள் அதிர்வுடன் பார்க்க, அதை உணர்ந்து, "திருத்தமா புடவைக் கட்ட தெரியுமா... இல்ல ஏதாவது ஹெல்ப் தேவையா?" என்று நக்கலும் நையாண்டியுமாக அவன் கேட்கவும், பதட்டமடைந்தவள், "ஹான்... அதெல்லாம் தெரியும். என்ன கொஞ்சம் லேட் ஆவும் அவ்ளோதான்" என்று படபடவெனத் தன்னை மறந்து பதில் கொடுத்துவிட, முகம் முழுவதும் புன்னகையை அப்பிக்கொண்டு அங்கிருந்து அகன்றான் தாமு.
எழுந்த பெருமூச்சுடன் ஒரு பக்கம் மட்டுமே திறந்திருந்த அந்தத் துணிகளை அடுக்கும் அலமாரியை முழுவதுமாக அவள் திறக்க, புடவையுடன் உடுத்த தேவையான அனைத்தும் அதிலிருந்தன, கூடவே சில நகைப் பெட்டிகளும்.
இதையெல்லாம் பார்க்கும்பொழுது தாமோதரன் ஏதோ ஒரு பேராழியின் சுழலுக்குள் அவளை இழுத்துப் போவதுபோல் தோன்ற, அனிச்சைச் செயலாக அவளது கைப்பாட்டிற்கு மேலே இருந்த நகைப் பெட்டியை எடுத்து அதைத் திறந்தது.
அதில், குறைந்தது பத்து சவரனாவது இருக்கக்கூடிய தடிமனான தாலிச் சரடும் அதில் கோர்க்கப்படாத அவர்கள் முறை தாலியும் இருக்க, ‘சரித்திரம் திரும்புகிறதோ?!’ என்ற அதிர்வுடன், மன ஆழியில் உண்டான பேரலையில் அவளுடைய உடல் நடுக்கம் கண்டது.
'சரித்திரமாவது திரும்புறதாவது? முடிஞ்சி போன எந்தச் சரித்திரமும் திரும்புனதா எந்தக் காலத்துச் சரித்திரமும் இல்ல! ஆனா உன்னோட பூகோளத்தின் எல்லைதான் கண்டு சொல்ல முடியாத தூரத்துக்குப் பறந்து விரிஞ்சு கிடக்கு மங்க. உன்னைக் கட்டுப்படுத்தற சக்தி எந்தச் சரித்திரத்துக்கும் இல்ல... எந்த தாமோதரனுக்கும் இல்ல! அதனால நீ இப்படி உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியமும் இல்ல' என அவளுடைய ஆழ்மனம் அவளுக்கு அறிவுறுத்த, நொடிகளுக்குள் தன்னை மீட்டுக்கொண்டாள் நிலமங்கை.
ஒரு வழியாகக் கிளம்பி அவள் கீழே வீட்டிற்குள் வரவும், தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அவனது பாட்டியுடன், அவருக்கு அருகில் கீழே அமர்ந்து, கையில் தட்டை ஏந்தி சாப்பிட்டவாறே ஏதோ வளவளத்துக்கொண்டிருந்தான் தாமோதரன்.
பார்த்து பார்த்து அவளுக்காக வாங்கப்பட்டிருந்த பிங்க் நிறத்தில் கருப்பில் கரைப் போட்ட பருத்திப் புடவை அவளைப் பாந்தமாகத் தழுவியிருக்க, அதில் அவளுடைய கம்பீரம் கூடித் தெரிய, அவளைப் பார்த்ததும் அவளிடமிருந்து அவனது விழியைப் பிரிக்கவும் முடியவில்லை, அதில் அவனுடைய முகத்தில் பூக்கும் மலர்ச்சியை மறைக்கவும் முடியவில்லை அவனால்.
உண்டான உவகையில், வாயில் வைத்திருந்த உணவு தொண்டைக் குழிக்குள் இறங்க மறுக்க, கைப்பாட்டிற்கு அந்தரத்திலேயே அசைவின்றி நிற்க உறைந்துபோயிருந்தவனை, அவனுடைய திடீர் அமைதி புரியாமல், கிழவி ஒரு உலுக்கு உலுக்கவும்தான், தன் நினைவுக்கு வந்தான்.
"ஏதோ கொஞ்சம் லேட்டாவும்ன்னு சொன்னியேன்னு பார்த்தாக்க, முழுசா முக்கா மணி நேரம் ம்..." என தன்னை மறைத்து மங்கையை அவன் வம்புக்கு இழுக்கவும்தான், அவள் அங்கே வந்து நிற்பதையே கவனித்த கிழவிக்கும் மனம் விம்ம, கையை ஊன்றி எழுந்து அமர்ந்தவர், "அடியே இவளே... ஓடியா... ஓடியா... நீ ஆசாசையா வாங்கியாந்த பொடவைய உம்..மருமக கட்டிகினு வந்து நிக்கிது பாரு" எனக் கூக்குரலிட்டு அவர் தன் மருமகளை அழைக்கவும், அடுத்த நொடியே அங்கே பிரசன்னம்மானார் புஷ்பா.
அவளை அப்படி பார்த்ததும் கண்களெல்லாம் கலங்கிப்போனவராக, "ரொம்ப நல்லா இருக்குது மங்க!" என அகமும் முகமும் மலரச் சொன்னவர், அப்படியே குனிந்து அவளுடைய புடைவைக் கொசுவத்தின் மடிப்புகளைச் சரி செய்தார் அனிச்சையாக. நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிப் போனது மங்கைக்குமே.
"ஐய, இது என்ன வெறுங்கழுத்தா? பாக்கவே சகிக்கல" என்றபடி பேரனின் தோளைப்பற்றி எழுந்து நின்ற வரலட்சுமி, "ஏன்டா, போவும்போது வரும்போதெல்லாம் சவரன் சவரானா வாங்கியாந்து அடுக்கி வெச்சிருக்கியே, அதுல ஒண்ண எடுத்து இதான்ட குடுத்து மாட்டிகினு வரச்சொல்லக்கூடாது?" எனப் பேரனையும் அர்ச்சித்தபடி, தன் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வடம் சங்கிலியைக் கழற்றி மங்கையின் கழுத்தில் போட்டுவிட, அதில் அவரது அன்பும் அக்கறையும் மட்டுமே மேலோங்கி இருக்க, மறுக்கவே இயலவில்லை. 'இங்கே வந்திருக்கவே கூடாது' என்ற எண்ணம் மட்டும்தான் மீண்டுமொருமுறை உண்டானது நிலமங்கைக்கு.
தூரத்தில் நின்றவாறு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஜனார்த்தனனும் ஒரு கலவையான மனநிலையில்தான் இருந்தார். 'எது எப்படியோ எல்லாம் சரியாகி ரெண்டும் சுமுகமா வாழ்ந்தா போதும்' என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது அவரது மனதில்.
இவற்றுக்கிடையில் தன் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவன், "ஐயோ... டைம் ஆயிடுச்சு... அவரு அங்க எனக்காகக் காத்துக்கினு இருப்பாரு" என்றவன், "யாரு தாமு!" என்ற கிழவியின் கேள்வியில் கூட கவனமின்றி, கையில் வைத்திருந்த காலி தட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டமாக ஓடிப்போய், துலக்குவதற்காக முற்றத்தில் சேர்ந்திருந்த பாத்திரங்களுடன் அதை வீசிவிட்டுக் கையை கழுவி வந்தான்.
அதே அவசர கதியில் அங்கிருந்த யாரைப் பற்றிய எண்ணமும் இன்றி நிலமங்கையின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு வெளியில் சென்றான்.
மங்கைதான் சற்று நிலைதடுமாறிப் போனவளாக, "கைய விடு தாமு... நானே வரேன்" என்று பற்களைக் கடிக்க, எங்கே விட்டால் தன்னுடன் வரமாட்டாளோ என்கிற அவநம்பிக்கையில் அதற்கான வாய்ப்பையே அவளுக்கு அளிக்காமல் வேண்டுமென்றே தந்திரமாகச் செயல்படுபவனுக்கு எப்படி அவள் சொல்வது செவிகளில் ஏறும்?
வெளியில் செல்வம் காருடன் காத்திருக்க, பின்புற இருக்கையில் அவளைக் கிட்டத்தட்டத் திணித்தவன், சுற்றி வந்து, ஒரு முறைப்புடன் உட்கார்ந்திருந்த அவனுடைய நாயகிக்கு அருகில் உட்காரவும், செல்வம் வாகனத்தை ரிவர்ஸ் எடுத்தான்.
மங்கையின் வீட்டில் அவளை உடன் அழைத்துச் செல்லும் தகவலைச் சொல்ல வேண்டும் என்ற நினைவு அவனுக்கு வர, "செல்வம், ஒரு செகண்டு இவங்க வூட்டுக்கா வண்டிய நிறுத்தி ஹாரன் அடி" என்று சொல்லவும் செல்வமும் அப்படியே செய்ய, உள்ளிருந்து ஓடி வந்தாள், வனமலர்.
கண்ணாடியை இறக்கி, "வனா, உங்கக்காவை எங்கூட கூட்டினு போறேன்... வூட்டுல சொல்லிடு" என்று சொல்லிவிட்டு, தாமுவைத் தாண்டி சகோதரியிடம் சென்ற கேள்வியான பார்வையுடன், "சரிங்க அத்தான்" என்ற அவளது பதிலைப் பெற்றுக்கொண்டு அந்தப் பயணத்தைத் தொடங்கினான் தாமு நிலமங்கையுடன்.
பின்புறக் கண்ணாடியைச் சரி செய்வதுபோல் கண்களில் ஒரு சிரிப்புடன் இருவரையும் பார்த்த செல்வத்தை உணர்த்தவனுக்கு மடை திறந்ததுபோல் சிரிப்பு பீறிட்டுக் கிளம்ப, 'ஐயோ! டேய் தாமோதரா, இந்த மாரியம்மா மட்டும் இதைப் பார்த்துச்சு கார் கதவைப் பிச்சு எரிஞ்சி கீழ குதிச்சாலும் குதிச்சிடும், உஷாரு' என்ற எண்ணம் தோன்ற வெளிப்புறம் திரும்பி வேடிக்கை பார்ப்பதுபோல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
சில நிமிடங்கள் கடந்து, மறுபடியும் அவன் தன் பார்வையை அவள் புறமாகத் திருப்ப, அயற்சியில் அப்படியே சாய்ந்து உறங்கியிருந்தாள் மங்கை.
சட்டென செல்வத்தின் அருகில் குனித்தவன், 'இந்த ரியர் வியூ மிரர்ல பின்னால பாக்கறது, லேசா ஓரக்கண்ண திருப்பி நைஸா பாக்கறது இந்த வேலையெல்லாம் வேணாம், ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டு. இல்லன்னு வை... நான் இங்க வெக்கற குண்டு உன் வூட்டுல வெடிக்கும் பார்த்துக்க" என அவனை எச்சரித்தவன், அதற்கு பதிலாக சத்தமில்லா சிரிப்பில் அவனது உடல் குலுங்கவும், "அடங்குடா" என அவனை முறைத்தவாறே பின் பக்க 'ஏசி'யின் அளவைக்கூட்டிவிட்டு மங்கையிடம் நன்றாக நெருங்கி உட்கார்ந்தான்.
அடுத்த நொடி அவள் அப்படியே சரியவும் அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டான்.
ஆழ்ந்த உறக்கம் என்பதையும் தாண்டிய ஒரு நிலைக்கு அவள் சென்றிருக்க, அவனது நீண்ட வருடத்தைய ஏக்கம் தந்த அந்த அணைப்பை நிலமங்கையால் உணர முடியாமலேயே போனதுதான் சோகம்.
சில மணித்துளிகள் கடந்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரவும், அந்த வாகனம் நின்றது.
நன்றாக இருள் கவிழத் தொடங்கியிருக்க, தன் கை வளைவுக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மங்கையின் கன்னத்தை லேசாகத் தட்டி அவன் எழுப்பவும், அவள் கண்களைத் திறக்கவே சில நிமிடங்கள் பிடித்தது. அதன் பின் அவளது கண்கள் மலர்ந்தாலும் காட்சிகள் தெளிவாகத் தெரிய, தானிருக்கும் சூழ்நிலையை அவள் உணர்ந்துகொள்ள மேலும் சில நிமிடங்கள் பிடிக்க, 'நீ அடங்கவே மாட்டியா?' என்ற ஒரு முறைப்புடன் அவனிடமிருந்து விலக்கியவள், "நாம எங்க வந்திருக்கோம்?" என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கேட்டாள்.
அவ்வளவு அவசரமாக அவள் தன்னிடமிருந்து விலகிய கடுப்பிலிருந்தவன், "ஆங்... ஜெயிலுக்கு" என்றானவன் நக்கலாக.
அவன் கிண்டல் செய்கிறான் என்று எண்ணியவள், தன் விழிகளைச் சுழலவிட, அங்கே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த '*** மத்திய சிறைச்சாலை' என்ற பெயர்ப்பலகையைப் பார்த்ததும் உண்மையில் அதிர்ந்துதான் போனாள் மங்கை.
சட்டென, "டைம் என்ன ஆவுது?" என்று கேட்க, "ஏழரை" என்றான் செல்வம். 'இவ்வளவு நேரமா இப்படியேவா தூங்கிப்போயிருக்கோம்?' என்ற யோசனையில் உறைந்துபோனாள் மங்கை.
"செல்வம், நீ வண்டிய பார்க்கிங்ல போட்டுட்டு வெயிட் பண்ணு. முடிச்சிட்டு சீக்கிரமே வந்துடறோம்" என்றவன் வாகனத்திலிருந்து இறங்க, தானும் இறங்கி அவனுக்கு அருகில் வந்து நின்றவள், "நாம இங்க யாரைப் பார்க்க போறோம்? யாரவது போலீஸ் ஆஃபீஸரா? என அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
"ஆஃபீசரெல்லாம் இல்ல, ஒரு கைதிய?" என்று அவன் பதில் சொன்ன விதத்தில் கடுப்பானவள், "என்னவோ இங்க இருக்கற எக்ஸ் சி.எம்ம பார்க்க வந்திருக்கிற மாதிரி பில்ட் அப் கொடுக்கற? அரசாங்க இரகசியமெல்லாம் டிஸ்கஸ் பண்ணபோறீங்க போல!" எனக் கேட்டாள் நிலமங்கை கிண்டல் வழிய. ஏனென்றாரால் அது உண்மையும் கூட. ஊழல் வழக்கில் கைதாகி முன்னாள் முதல்வரான 'அருட்பிரகாசம்' அங்கேதான் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
"ஆமாம்" என ஒற்றை வார்த்தையில் அவளுக்குப் பதில் கொடுத்தான் தாமோதரன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.
"ஆங்..." என வியப்புடன் அவனைப் பார்த்தவள், "அது சரி... ஆனா வெளிநாட்டுல இருந்து வந்ததும் வராததுமா, அரக்கப்பரக்க என்னை ஏன் இங்க கூட்டிகினு வந்த?" எனத் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அவள் கேட்டு வைக்க, "அவரோட பொண்ண கட்டிக்கச் சொல்லி மனுஷன் என்னைப் பயங்கரமா நச்சரிச்சிட்டு இருக்காரு. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா கூட நம்பமாட்டேங்கறாரு. அதான், 'பாருங்க இவதான் என் பொண்டாட்டி'ன்னு அவர் கண்ணுல உன்னை காமிக்கலாம்னுதான். வேற எதுக்கு?" என்றான் தாமோதரன் அசரவே அசராமல்.
"என்னாது?" என மலைத்தே போனாள் நிலமங்கை.
Comentários