top of page

Nilamangai -4 (FB)

Updated: Feb 7

4. பாராமுகம்

நினைவுகளில்…


நிலமங்கை கோபத்துடன் சென்றதும், அவள் தானாகவே தன்னை நாடி வருவாள் எனக் காத்திருந்தான் தாமோதரன்.


அது நடக்காமல் போக, இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தவனுக்கு, அன்று இரவு பெங்களூரு திரும்ப வேண்டியிருந்ததால் சிறு ஏமாற்றமும் கோபமும்தான் உண்டானது.


'அவ முன்ன மாதிரி இன்னும் சின்ன பொண்ணு இல்ல தாமு! வயசுக்குத் தகுந்த மெச்யூரிட்டி அவளுக்கு வந்துடுச்சு போல. அதனாலதான் அவ உன்னைத் தேடி வரல. நீ இப்படியே ஈகோ பார்த்துட்டு நிக்காம, நேரா போய் அந்த புக்க கொடுத்துட்டு வா. அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது" என அவனது மனசாட்சி இடித்துரைக்க, மேற்கொண்டு யோசிக்காமல் அவளுடைய வீட்டிற்குச் சென்றான்.


மல்லிகை, செம்பருத்தி, கனகாம்பரப் பூச்செடிகள், சிறியதாக ஒரு முருங்கை மரம், இரண்டு பெரிய வேப்பமரங்கள், மூன்று கொய்யாமரங்களுடன் கூடிய சிறு தோட்டம், இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கப்படும் தொழுவம், இவற்றுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஏற்றக் கிணறும் , பூசணிக் கொடிகளால் மூடிய,  கூரை வேய்ந்த வீடும்தான் மங்கையும் அவளுடைய தாத்தாவும் வசிக்குமிடம்.


ஒரு கூடம் அதை ஒட்டிய ஒரு சிறிய அறை மற்றும் சமையலறை மட்டும்தான் அங்கே.


தாமுவின் அம்மா புஷ்பாவுடைய பெரியம்மாவின் மக்கள்தான் வேலுமணி, பூங்கொடி இருவரும். அதனால் சந்தானம் அவனுக்குப் பெரியப்பா முறை என்பதால், வாயிலிலிருந்தே "பெரியப்பா" எனக் குரல் கொடுத்தான் தாமு.


"வா தாமு! எப்படி இருக்க?" எனக் கேட்டுக்கொண்டே வெளியில் வந்த சந்தானம், "உட்காருப்பா" எனத் திண்ணையை காண்பிக்க, அவர் உள்ளே அழைக்கமாட்டார் என்பது நன்றாகவே அவனுக்குத் தெரியும் என்பதால், அவர் சுட்டிக் காண்பித்த இடத்தில் அமர்ந்து, "நல்லா இருக்கேன் பெரியப்பா... மங்க வூட்ல இல்ல?" என்று கேட்டான்.


"அது கழனி வரைக்கும் போயிருக்கு! வர கொஞ்ச நேரம் ஆவும்" என்றவர்,  "டீ கொதிக்க வெக்கறேன் குடிக்கறியா?" என்று அவனை உபசரிக்கும்வண்ணம்  கேட்டார்.  


கையில் வைத்திருந்த புத்தகத்தை அவரிடம் நீட்டியவாறு, "பரவாயில்ல பெரியப்பா. இந்த புக்க மங்க கேட்டுதுன்னு வாங்கியாந்தேன். அதாண்ட கொடுத்துரு" என்று சொல்லிவிட்டு, "இன்னைக்கு இரவைக்கு ஊருக்குக் கிளம்பறேன். அதான் நானே கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என விளக்கம் வேறு கொடுத்தான். 


'இந்தப் பொண்ணு ஏன் இப்படி செய்யுது?' என்கிற எண்ணத்தில் அவருடைய முகம் கடுத்துப்போக, அதை மறைக்க முயன்று, "ரொம்ப சந்தோசம் தாமு!" என்றபடி அதைப் புரட்டி அதன் விலையைப் பார்த்துவிட்டு, வேட்டியில் சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணி அவனிடம் நீட்டினார்.


கொஞ்சம் கடுப்பானாலும் மறுக்க வழியின்றி அதை வாங்கிக் கொண்டவன், "நேரம் ஆச்சு. நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம்.


வேலுமணியைக்  கொண்டு, தாமு, மங்கை இருவருக்குள்ளும் அத்தை மகன், மாமன் மகள் உறவுதான். இராஜேஸ்வரி அவனுக்கு அக்கா என்பதால், ஒரு முறைக்கு அவன் தாய்மாமனும் கூடத்தான். திருமணம் செய்யும் முறைதானென்றாலும் சந்தானத்துக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.


பேத்தி விஷயத்தில் கொஞ்சம் அதிக எச்சரிக்கையாகத்தான் இருப்பார் அவர். அவளுடைய விருப்பத்திற்கு மாறாகச் சிறு துரும்பு கூட அசையாது அங்கே என்ற நிலையில் அவர் அவளைப் போற்றிப் பாதுகாக்க, அவளைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.


தாமோதரனைப் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால், இருவரும் இரு வேறு துருவங்கள் என்பதை உணர்ந்தவராதலால் எப்பொழுதுமே நிலமங்கையிடமிருந்து அவனைச் சற்றுத் தள்ளியே நிறுத்துவார்.


ஆனால் தாமுவின் வீட்டில் நிலையே வேறு. அந்த ஊரிலேயே அதிக வசதி படைத்த குடும்பம் அவனுடையது. சொந்தம் என்று பார்த்தால் ஒன்றுக்குள் ஒன்று என இருந்தாலும், என்னதான் எல்லோருடனும் இயல்பாகப் பழகுவதுபோல தோன்றினாலும் வரலட்சுமிக்கும் சரி அவருடைய மகன் பேரன் இருவருக்கும் சரி 'தான்' என்கிற அகங்காரம் கொஞ்சம் அதிகமாகவே உண்டுதான்.


இதில் புஷ்பா மட்டுமே விதிவிலக்கு. சூதுவாது தெரியாத வெள்ளந்தி குணம் படைத்தவள். இராஜேஸ்வரி இறந்த சமயம் மங்கையை முழுவதுமாக தன் கைக்குள் வைத்து பாதுகாத்தவள் அவள். அவளைப் பொறுத்த வரை மங்கையும் அவர்களுக்குள் ஒருத்திதான்.


அவளை தன் மருமகளாக்கிக் கொள்ளும் ஆசை புஷ்பாவிள் மனம் முழுவதும் தளும்பி நிற்க, எந்தவித கட்டுப்படும் இல்லாமல் அவர்களுடைய வீட்டில் மங்கை வளையவரும் அளவுக்கு இடங்கொடுத்து மறைமுகமாக அதற்குத் தூபம் போடுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆனால். அத்தகைய இடத்தை தாமோதரனுக்குக் கொடுக்க சந்தானம் விரும்பவில்லை. சமயத்தில், ஏதாவது விஷயத்தில் அவள் தாமுவிடம் அதிகம் சலுகை எடுப்பதாக அவர் மனதில் பட்டால், மங்கையைக் கண்டித்துக் கடிவாளமிடுவார். அதையும் மீறி சில சமயம் இப்படி நடந்துவிடுவதும் உண்டு.


என்னதான் அணைப் போட்டுத் தடுத்தாலும் அதை உடைத்துக் கரை மீறத்துடிக்கும் வேகமும் பிடிவாதமும் கொண்டவன் தாமோதரன் என்பதை அந்த நேரத்தில் அவர் உணரவில்லை பாவம்.


அதேபோல, எதுவாக இருந்தாலும் முடிவெடுக்க வேண்டிய இடத்திலிருப்பவள் நிலமங்கைதான் என்ற உண்மையை இந்த இரு ஆண்களும் உணராமல் போனதுதான் பிரச்சனை இங்கே.


***


தாமோதரன், பெங்களூரு வந்து இரண்டு தினங்கள் கடந்திருந்தன. காலை முதல் நெட்டித் தள்ளிய அலுவலக வேலைகள் அனைத்தும் ஒரு வழியாக முடிவுக்கு வரவும், இருக்கையிலிருந்து எழுந்து உடலை முறுக்கி நெட்டி முறித்தவன் தன் மடிக்கணினி பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, எதிர்பட்டவர்களையெல்லாம் நோக்கி சிறு புன்னகையைப் படரவிட்டவாறு  நேராக வந்து மின்தூக்கியில் நுழைந்தான்.


ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்து வந்து, ஒரு நொடியில் அவனை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்து, தாமோதரனை உரசியும் உரசாமலும் நின்று, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஒரு யுவதி.


அலுவலகம் என்கிற காரணத்தினால், அவர்களுடைய டிரஸ்-கோடுக்கு உட்பட்டு வேறு வழி இல்லாமல்  ஜீன்ஸ் - ஷார்ட், டாப்தான் அணிந்திருந்தாள். ஆனால் இரவை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் கூட கண்களைப் பறிக்கும் அளவுக்கு அவளுடைய முகத்தில்  மிகையாகத் தெரிந்த ஒப்பனையும், உதட்டுச் சாயமும், மூச்சு முட்டும் அளவுக்கு அவளிடமிருந்து கிளம்பிய சென்ட்டின் மணமும் அப்பொழுதுதான் கொஞ்சம் அதிக சிரத்தையெடுத்து அவள் தன்னை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்ல, பதிலுக்கு நாகரிகம் கருதிய ஒரு செயற்கை புன்னகையை சிந்தினான். 


அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டவள், "லாஸ்ட் வீக் என்ட் பார்ட்டிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் மிஸ்டர் தாமோதர்! பட் உங்க நேடிவ்க்குப் போயிட்டிங்களாமே! சந்தோஷ் சொன்னான்" என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள் அந்தப் பைங்கிளி.


அதற்கும் கூட ஒரு புன்னகையையே அவன் பதிலாகக் கொடுக்கவே, தலைதூக்கிய எரிச்சலை மறைக்க முயன்று, இன்னும் கொஞ்சம் புன்னகையின் நீளத்தைக் கூட்டியவள், "இப்ப லாங் வீக் எண்ட் வருதில்ல. ஸோ... எங்க டீம்ல எல்லாரும் கோவா ட்ரிப் பிளான் பண்ணியிருக்கோம். நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?" எனக் குழையவும் தரை தளம் வந்து சேரவும் சரியாக இருந்தது. 


மின்தூக்கியிலிருந்து வெளியேறியவாறே, அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், "வில் ட்ரை மிஸ்..." என்றவாறு அவளுடைய பெயரை மறந்தவன் போல அந்தப் பெண்ணின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, "மமதி" என்று முடித்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து அகன்றுவிட, கொதிநிலைக்கே போனாள் அவள்.


அவனுடைய அலட்சியம் தந்த ஆத்திரம் மேலோங்க, "வாட் எ *** பார்க்க இப்படி இருக்கும்போதே இவனுக்கெல்லாம் இந்தத் திமிரு. இன்னும் நல்ல ஃபேரா மட்டும் இருந்தான்னா இவனையெல்லாம் கைலயே பிடிக்க முடியாது. ஆளும் இவனும். சரியான காட்டான்" என முணுமுணுக்க, அதற்குள்ளாகவே சில அடிகள் அவளைக் கடந்து முன்னேறியிருந்தவன், ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்தத்  திரும்பிப்  பார்த்தான்.


அவள் எதையோ முணுமுணுப்பது புரிந்தது. அது என்னவென்று அவன் செவிகளுக்கு எட்டவில்லையென்றாலும் அகத்திலிருந்ததை அவளுடைய முகம் அவனுக்குக் காண்பித்துக் கொடுக்க, இதெல்லாம் அவனுக்கொன்றும் புதிதில்லை என்பதனால் ஒரு நக்கல் சிரிப்பு தானாக அவன் முகத்தில் படரவும் அதை உணர்ந்தவளின் முகம் அப்பட்டமாகப் பயத்தைத் தத்தெடுத்தது.


அது அவனுடைய மனதிற்கு அப்படி ஒரு உவகையைக் கொடுக்க, வேகமாக வாகன நிறுத்தத்தை நோக்கிச் சென்ற தாமோதரன் தலை கவசத்தை அணிந்தபின் தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அவனுடைய இருப்பிடம் நோக்கிச் செலுத்தினான்.


பதினைந்து நிமிட பயணத்தில் அவனுடைய ஃபிளாட்டுக்கு வந்து சேர்ந்தான். தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கும்படி அந்த ஃபிளாட்டை பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்தான். வாடகை சற்று அதிகம்தான் என்றாலும் அவன் வாங்கும் ஆறு இலக்க சம்பளத்துக்கு அது ஒன்றும் அதிகமில்லை.


நிலபுலன்கள், வீடு, பசு-எருமை என நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் என்பதாகக்  குடும்ப சொத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. வாலாஜாபாத்தில் முக்கிய பகுதியில் அவர்களுக்குச் சொந்தமாக ஹார்டவேர் கடை ஒன்றும் ரைஸ் மில் ஒன்றும் வேறு இருக்கிறது. அதில்லாமல் விவசாயமும் ஓரளவுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது.


உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவன் இப்படி வேலைக்குப் போய் சம்பாதித்துதான் ஆக வேண்டும் என்று ஒன்றுமில்லை. உள்ளதை நல்லபடியாகக் கட்டிக் காப்பாற்றினாலே போதும். அவனுடைய ஆயா மற்றும் அப்பாவின் அதீத விருப்பமும் இதுதான்.


ஆனாலும் அவனுடைய சுய விருப்பத்தில் கணினித் துறையைத் தேர்ந்தெடுத்து, பொறியியலில் முதுகலை வரையிலும் படித்தான். கேம்பஸ் செலெக்க்ஷனில் வேலையும் கிடைத்துவிட, பெங்களூரு வந்துவிட்டான்.


சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவே மாட்டான் தாமு. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சத்துள்ளதாகவும் அதே சமயம் வாய்க்கு வக்கணையாகவும் இருக்க வேண்டும். 


வேலை நாட்களில் காலை மதியம் இரு வேளையும் உணவை அலுவலக உணவகத்திலேயே முடித்துக்கொண்டு, எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு உணவை மட்டும் வீட்டிற்கு வந்து தானே தயாரித்துக் கொள்வான். எனவே வீட்டைப் பராமரிக்க மட்டுமே ஆள் போட்டிருந்தான்.


அன்றும் அதுபோல் உள்ளே நுழைந்து, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் நேராக சமையலறை நோக்கித்தான் போனான்.


ஒரு அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டவன் அதில் ஆம்லெட் தயாரிக்க, மற்றொன்றில் மணிமணியாக இருக்கும் பொன்னி அரிசியை அளந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதைக் களைந்து வைத்தான்.


ஊரில் அவர்களுடைய நிலத்தில் விளைவித்த நெல்லைப் பக்குவமாய் புழுக்கி மில்லுக்கு அனுப்பி, பின் அதைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்துப் பார்த்து பதப்படுத்தப்படுத்திய அரிசியை, வேண்டாம் என்றாலும் கேட்காமல், அவன் ஒருவனுக்குத்தான் என்பதால் சிறு மூட்டையாகக் கட்டி, ஊரிலிருந்து அவனுடைய காரை எடுத்துவரும் சமயங்களில் திணித்து அனுப்புவார் ஜனா.


கூடவே காரக்குழம்பு அல்லது மீன் குழம்பு, பருப்புப் பொடி, பூண்டுப் பொடி, வடகம் எனப் பாட்டியும் அம்மாவுமாகச் செய்து நிரப்பி அனுப்புவார்கள்.


அம்மா, பாட்டி இருவரின் நச்சரிப்புக்கும் பயந்து மாதத்தில் ஒரு வார இறுதியை மட்டுமே ஊரில் செலவிடுவான். மற்றபடி மீத விடுமுறைகளெல்லாம் வீக் எண்ட் ட்ரிப்ஸ் அல்லது பார்ட்டி என மதுவின் போதையுடன் இனிதே முற்றுபெறும்.


தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்கிற வகை மக்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்தாலும், இதற்குத்தான் வாழ்க்கையே என்கிற ரீதியில், களியாட்டம் ஆடித் தீர்க்கும், தாமுவையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமே உண்டு அங்கே.


மற்ற விஷயங்களில்தான் அப்படியே தவிர பெண்களைப் பொறுத்தவரை 'ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும்' என்கிற ரீதியில் சகஜமாக நெருங்கிப் பழகுவதுபோல் காட்டிக்கொண்டாலும் சற்றுத் தள்ளிதான் இருப்பான்.


காரணம், சற்று முன் அந்த மமதி சொல்லிவிட்டுச் சென்றதுபோல் அவனுடைய இந்த வட்டத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களில் எண்ணப் போக்கு  அவனைப் பொறுத்தவரையில் அப்படிதான் இருக்கும்.


அவள் சொன்னதைப்போலப் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் மோசமான தோற்றதிலெல்லாம் இருக்கமாட்டான்தான்.


அளவான உயரம், இவர்களைப் போன்றோரின் வாயை அடைக்கவென, உடற்பயிற்சி செய்து கச்சிதமாக வைத்திருக்கும் உடல்வாகு, இயற்கையாகவே அமைந்திருக்கும் களையான முகம் எனச் சராசரிக்கும் சற்று அதிகமாகவே நன்றாகத்தான் இருப்பான்.


ஒரே ஒரு குறை என்றால் அது, பலருடைய தாழ்வுமனப்பான்மைக்கு முக்கிய காரணமாக விளங்கும், நம் சமூகத்தில் மக்கள் மனதில் வேரூன்றிப் போயிருக்கும் நிற வெறிக்குத் தீனி போடும், கருமை என்றால் தொட்டு மையிடும் அளவுக்குக் கருமை நிறம் கொண்டவன்.


ஊரில் இருக்கும் அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்துக்கொண்டிருந்தவன், நாமக்கல் விடுதியில் ஆங்கிலவழிக் கல்வியில் போய்ச் சேர்ந்தபொழுது தன் தோற்றம் மற்றும் ஆங்கில மொழி அறிவைக் குறித்து உண்டான தாழ்வுமனப்பான்மையை மிக மிகப் போராடிதான் வெற்றிக் கொண்டான்.


திக்கல் திணறலின்றி, வெகு சளரமாக உரையாடும் அளவுக்கு தன் ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொண்டதுடன், தன்னை விட மேன்மையாக அவன் நினைத்தவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிப் படிப்பிலும் விளையாட்டிலும் முதல் இடத்தில் வந்து,  அவன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அந்த இடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டான்.


அலுவலகத்திலும் கூட அந்த முதன்மைத்தன்மை என்பது அப்படியே தொடர்கிறது. 'தாமுன்னா ஜீனியஸ்' என்கிற பார்வைதான் அனைவருக்கும் அவனிடம்.


உடை, கைக்கடிகாரம், காலணி, அவனுடைய கருமை நிறத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக டால் அடிக்கும் பிளாட்டினம் செயின், அவன் வைத்திருக்கும் பைக்கிலிருந்து கார் வரைக்கும் ஒவ்வொன்றும் அவனுடைய செல்வச்செழிப்பைப் பட்டவர்த்தனமாக வெளிக்காண்பிக்க,  அனைத்தையும் கடந்த அவனுடைய 'ஜீனியஸ்' அந்தஸ்து, அவனுக்காகப் பிரகாசமாகக் காத்திருக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் எனப் பல பெண்கள் அவனைச் சுற்றி வரக் காரணமாக அமைந்தன.


அதை நன்றாகவே உணர்ந்தவனாக இருப்பதால், இப்படிப் பட்ட பெண்களைக் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே தள்ளிதான் நிறுத்துவான். இவர்களைப் போன்றோரிடம் எந்த வித நாட்டமும் இல்லை ஈடுபாடும் அவனுக்கில்லை.


திருமணம் என்கிற விஷயத்தைப் பொருத்தமட்டும் சராசரி இந்திய ஆண்மகன்களுக்குள் வேரூன்றிப் போன அடிப்படை எதிர்பார்ப்புகள் அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு.


முதலாவதாக, அவனுக்கு அருகில் நிற்கும்பொழுது, நம் ஆட்கள் போகிற போக்கில் வழக்கமாகச் சொல்லிவிட்டுப் போவது போல், 'பொண்ணுக்குப் பக்கத்துல நிக்கும்போது நம்ம தாமு கொஞ்சம் சுமார்தான்/மட்டுதான்' போன்ற வார்த்தைகள் வரவே கூடாது. எனவே அவனை ஒற்ற நிறத்தில்தான் இருக்க வேண்டும்.


வசதி வாய்ப்பில் அவர்களுக்கு இணையாகவோ அல்லது கூடவோ இருக்கவே கூடாது. படிப்பில் கூட தன்னை விடச் சற்று குறைவாகத்தான் இருக்க வேண்டும்.


அம்மா, அப்பா, பாட்டி என அனைவரையும் அனுசரித்துப்போகும் விதமாகவும், அவர்கள் சாதி சனத்திற்குள்ளேயும் இருக்க வேண்டும்.


மற்றபடி எதிர்காலத்தில் அவன் ஏதாவது ஒரு வெளிநாட்டில் போய் குடியேற நேர்ந்தால் அதற்குத் தகுந்தபடியும் இருக்க வேண்டும்.


அனைத்தையும் விட மிக முக்கியமாக, எக்காரணம் கொண்டும் விவாகரத்து என்கிற வார்த்தை அவளுடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது.


இவை அனைத்திற்கும் உட்பட்ட ஒரு பெண் மட்டுமே அவனுக்கு மனைவியாக முடியும் என்கிற உறுதியிலிருந்தான்.


மொத்தத்தில் அவனுடைய மனதின் ஓரத்தில் மீதமிருந்த அவனுடைய தாழ்வுமனப்பான்மை தாமுவை இப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.


***


அவன் வேலையில் சேர்ந்து ஓராண்டை நெருங்கிக்கொண்டிருக்க, புஷ்பாவின் ஆசையைப் புறந்தள்ளி, தாமுவுக்கு அசலில் பெண் தேட ஆரம்பித்தார் ஜனார்த்தனன், அவருடைய அம்மா வரலட்சுமியின் தூண்டுதலால்.


"நம்ம மங்க பொண்ணுக்கு என்ன கொரன்னு உங்கப்பன் இந்த ஆட்டம் ஆடுது. எல்லாம் உன் ஆயாவைச் சொல்லணும். அதுதான் தூபம் போடுது. நானு வளர்த்த பொண்ணு அது. அது கண்டி எனக்கு மருமவளா வந்தா, ஒரு கொரவும் இல்லாம பெத்த மக கணக்கா என்னைப் பார்த்துக்கும்.


ப்ளஸ் டூ படிக்குது, இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இஸ்கூல் படிப்பு கூட முடிஞ்சிரும். அதுக்குள்ளாற, அது என்னவோ சொல்லுவாங்களே, மேஜர் கீஜர்னு அது போல கல்யாணம் கட்டிக்கற வயசும் அதுக்கு வந்துடுங்காட்டியும். போலீஸ் கேசுன்னு பிரச்சனையும் வராது.


பொண்ணு கேட்டா, சந்தானம் அத்தான்தான் வேணான்னுமா இல்ல வேலுதான் குடுக்கமாட்டேன்னு சொல்லிப்புடுமா?" எனச் சென்ற முறை அவன் ஊருக்கு வந்ததும் வராததுமாக மகனிடம் புலம்பித் தீர்த்தார் புஷ்பா.


எப்பொழுதும் பேசும் பேச்சுதான், அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு இதுவரை ஒருமுறை கூட அந்தக் கோணத்தில் அவன் யோசித்ததே இல்லைதான். ஆனால் அன்று ஏனோ புதிதாக அவளைப் பற்றிய ஒரு கணக்கீடு மனதில் எழுந்தது.


அவனை விட ஏழு வயது சிறியவள். நிறத்தில் அவனை விட ஒரே ஒரு 'ஷேட்' கொஞ்சம் கூடுதலாக, களையாக அழகாக இருப்பாள். இன்னும் கூட உடல் வளர்ச்சி இருப்பதால், அவனுடைய தோளை எட்டும் உயரம் அவள் வளரக்கூடும்.


அவர்கள் ஊரிலேயே இருக்கும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறாள். ஆனாலும் ஆங்கிலம் பேசும் ஆர்வத்துடன் ஸ்போக்கன் இங்லீஷ் புத்தகங்களை வாங்கி வரச்சொல்லி, சிறிது சிறிதாகப் பயிற்சியும் எடுக்கிறாள்.


வாயில் நுழையாத வார்த்தைகளைக் கூட வரிசையாக எழுதி வைத்து, அவன் ஊருக்கு வரும் வரையிலும் காத்திருந்து அவனை உச்சரிக்கச் சொல்லி, மறுபடி மறுபடி சொல்லிப்பார்த்து அது துல்லியமாக வரும் வரை விடமாட்டாள்.


பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேறியிருந்தாள். பதினொன்றாம் வகுப்பில்,பொறியியல் படிக்க ஏதுவான பாடத்திட்டத்தில்தான் சேர்ந்திருந்தாள்.


அவனுக்குக் கிடைத்த வாய்ப்புகள் மட்டும் அவளுக்குக் கிடைத்திருந்தால் அவனையே மிஞ்சியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


சமையலைப் பொறுத்தவரை அவளது கைப்பக்குவத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. சிறு வயது முதலே பழகியிருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய சமையல் அனைத்தையும் அனாயாசமாகச் செய்வாள்.


சமீபமாக ஒருமுறை ஊர் சென்றிருந்த சமயம் புஷ்பாவிற்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று மங்கைதான் அவர்களுடைய வீட்டிற்கு வந்து சமையல் செய்திருந்தாள். உண்மையிலேயே சாப்பிட்டுவிட்டு அசந்துதான் போனான் தாமோதரன். அதுவும் ஒரு கூடுதல் தகுதி ஆகிப்போனது நிலமங்கைக்கு.


சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அவனைப் பொறுத்தவரை அவன் விரும்பும் வடிவத்தில் பிடிக்க ஏதுவான பச்சை மண் அவள் என்றே நம்பினான் தாமு.


ஆனால் அவனுடைய அம்மா சொல்வது போல் உடனடியாக, அதுவும் ஒரு குறைந்தபட்ச கல்வித் தகுதி கூட இல்லாமல் அவளை மணக்க அவனால் இயலாது.


அதனால், அவள் இளங்கலை படிப்பை முடிக்கும் வரையாவது காத்திருக்க வேண்டியிருக்கும்.


அது எந்தளவுக்குச் சாத்தியம் என்றே அவனுக்குப் புரியவில்லை. காரணம், திருமணத்திற்கான அனைத்து தகுதிகளும் அவனுக்கு வந்திருக்க, போவோர் வருவோருக்கெல்லாம், 'கல்யாண சாப்பாட எப்ப  போட போற?' என்பதுதான் சூடான, சுவையான கேள்வியாக இருக்கிறது. அது வீட்டில் அனைவரிடமும் அப்படியே எதிர்வினையாற்றுகிறது.


'சரி, வேற எதாவது நாம டிமாண்ட்ஸ்கு தகுந்த மாதிரி செட் ஆகுதா பார்க்கலாம். நிலமங்கையை செகண்ட் ஆப்ஷனா வெச்சுக்கலாம்' என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் அவனுக்குத் தூக்கமே வந்தது.


ஆனால், 'இவ நமக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகமாட்டா' என்ற முடிவுக்கு அவன் வரும் அளவுக்கு அடுத்த நாளே அவனை எரிச்சல் படுத்தினாள் நிலமங்கை.


***


அடுத்த நாள் மாலை அவனுடைய அறையில் உட்கார்ந்து புதிதாக வந்திருந்த ஆங்கில திகில் படம் ஒன்றை மடிக்கணினியில் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான் தாமு.


ஜல்ஜல் என்ற கொலுசொலி மாடிப்படிகளைக் கடந்து அவனுடைய அறை நோக்கி வர, அது மங்கைதான் என்பது புரியவும், "ப்பா... ஏற்கனவே பேய் படம் பார்த்துப் பயந்து போயிருக்கேன்... நீ வேற இப்படி மோகினி பிசாசு மாதிரி ஜல்ஜல்ன்னு வந்து நின்னா என்ன ஆவும்?" என அவளைக் கிண்டல் செய்தான்.


"யாரு... நானு மோகினி பேயி... என்னைப் பாத்து  நீயி அப்படியே பயந்துபூட்டாலும்" என்று நொடித்தவள், "நம்ம ஊருல கண்டி இந்த மோகினி... காட்டேரி... இதெல்லாம் இருந்துச்சுன்னு..வை உன்னைப் பார்த்து அதுங்கதான் பயந்து ஓடும் தாமு" என்று சிரிப்புடன் சொன்னவள், "சுத்தி சலங்கை வெச்ச கெட்டிக் கொலுசு, போனவாரம் பட்ணம் போயி போயி எனக்காக அப்பா எடுத்துட்டு வந்துச்சு, ஜீ.ஆர்.டில" என்று சொல்லிக்கொண்டே அவள் தன் பாதங்களைக் காண்பிக்க, அந்தப் புதிய கொலுசைக் கொண்டாடவோ என்னவோ சில தினங்களுக்கு முன் மருதாணி வேறு அரைத்து காலில் பூசியிருப்பாள் போலும், அதன் நிறம் சற்று மங்கியிருக்க அவளுடைய மாநிற கால்களுக்கு அந்தப் புத்தம்புதிய வெள்ளிக் கொலுசு உண்மையிலேயே அழகாகத்தான் இருந்தது..


அரசுப்பள்ளி சீருடையன சுடிதார் அணிந்திருந்தாள். நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். மடித்துக் கட்டிய இரட்டைச் சடையுடன், சிறுமியாகவே தோன்றினாள் மங்கை. அவளுடைய முகத்தில் இன்னும் கூட கள்ளம் கபடமில்லாத  குழந்தைத்தனம் மீதம் இருக்க, 'இவளைப் போய் திருமணம் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பதா?' என்ற குற்ற உணர்ச்சியில் அவனுடைய மனதில் சுரீர் என முள் தைத்தது.


அதற்குள், "தாமு! பேச்சு வாக்குல நீ வந்திருக்கன்னு பூங்காவனம் கிழவி சொல்லிச்சு" என்ற பீடிகையுடன் அவள் ஆரம்பிக்க, முதன்முறையாக, அவள் தன்னைப் பெயரிட்டு அழைத்தது ஏனோ பிடிக்கவில்லை தாமுவுக்கு.


"ஏய்... அது என்ன எப்பவும் பேர் வெச்சே கூப்புட்றது... மரியாதையா அத்தான்னு கூப்புடு" என அவன் சீற, "என்னாது... அத்தானா?  காமடி பண்ணாத தாமு" என அவள் சட்டென பதில் சொல்லிவிட கடுப்பானவன், "புக்கு வாங்கிட்டு வர சொல்லி கேக்கதான இங்க வந்திருக்க. இனிமேல் நீ என்னை அத்தான்னு கூப்ட்டாதான் புக்ஸ் வாங்கிட்டு வந்து தருவேன்... இல்லனா வேற யார் கிட்டயாவது கேட்டுக்க" என தாமு கண்டிப்புடன் சொல்ல, உறுத்து விழித்தவள் சரி என்பதுபோல் தலையசைத்தாள்.


அவளுடைய பாவனையில் சற்று இலகுவானவன், "என்ன புக்கு வேணும் சொல்லு... கிடைச்சா வாங்கிட்டு வரேன்" என்று இறங்கி வந்தான். 


"எந்நாடுடைய இயற்கையே போற்றி" என்றாள். அவள் ஏதோ தவறாகச் சொல்கிறாளோ என்கிற ரீதியில், "என்ன... தென்னாடுடைய சிவனே போற்றியா?" என அவன் இழுக்க, "தாமு..." எனச் சிணுங்கியவள், "நான் சரியாதான் சொன்னேன்... எந்நாடுடைய இயற்கையே போற்றி..தான்" என அவள் மறுபடி சொல்லவும், அவள் பெயரைச் சொல்லி அழைத்ததையே கவனிக்காமல், "ஆமா... அது என்ன புக்?" என அடுத்த கேள்விக்குத் தாவினான். 


“அது, நம்மாழ்வார்ன்னு ஒரு வேளாண் விஞ்ஞானி இருக்காரு தெரியுமா? அவர் எழுதின இயற்கை விவசாயம் பத்தின புக்கு" என அவள் விளக்கம் கொடுத்தாள். 


"இதையெல்லாம் படிக்கறதுக்கு, ஜெ.ஈ.ஈ என்ட்ரன்ஸ் சம்பத்தப்பட்ட புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன். அதை படி. ஹயர் ஸ்டடிஸ்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான் காட்டமாக.


"ஐய... தாமு... நான் ஒன்னும் ஐ.ஐ.டிலாம் போகப் போறதில்ல. நான் பி.எஸ்.சி. அக்ரீதான் பண்ண போறேன். எனக்கு இந்த புக் போதும்" என அவள் தீவிர பாவத்தில் சொல்ல, சப்பென்று ஆகிப்போனது அவனுக்கு.


'செயற்கை நுண்ணறிவு - இராக்கெட் தொழிற்நுட்பம்' என அவனும் 'இயற்கை விவசாயம் - செயற்கை உரங்களால் விளையும் கெடுதல்கள் என அவளும் ஒருவருக்கொருவர் புரியவைக்க முயல, பின் அது ஒரு காரசாரமான விவாதத்திற்கு இருவரையும் இட்டுச்சென்றது.


"நம்ம ஊரு போற போக்குல, வருஷம் பூராமும் கொளுத்தற வெயிலுக்கும், விக்கர வெலவாசிக்கும், நஷ்ட பட்டுப் போயி, வாங்கின கடன கட்ட முடியாம அவனவன் நெலத்தையெல்லாம் வந்த வெலைக்கு வித்துபுட்டுக் கூலி வேலைக்குப் போறான் இல்லனா தூக்குல தொங்கறான். இனிமேல் இங்க விவசாயம் பண்ணி ஒருத்தனாலயும் பொழைக்க முடியாது. இப்படி லூசுத்தனமா ஒளரிட்டு இருக்கறத வுட்டுட்டு, ஒழுங்கா படிச்சி உருப்புடற வழிய பாரு" என ஒரு கட்டத்தில் அவனுடைய குரல் உயரவும், "நீயும் இந்த ஊருல பொறந்தவந்தான? என்ன கொறஞ்சுபுட்ட இப்ப? இதே மாதிரி ஒவ்வொரு விவசாயியும் சொன்னான் வைய்யி... இனி வர காலத்துல நாம கல்லையும் மண்ணையுந்தான் ஆக்கி துன்னணும்?" என முணுமுணுத்தவளின் கண்கள் கலங்கிவிட, சற்றுத் தணிந்தானவன்.


'இவளுக்கெல்லாம் சொல்லி விளங்க வெக்க ட்ரை பண்றது, கிரிமினல் வேஸ்ட்டு! இந்தப் பட்டிக்காட்டுல இருந்துட்டு இதுக்கு மேல இவளால யோசிக்கவே முடியாது. மூளையே வளரல... இவ நமக்கு செட்டே ஆகமாட்டா' என்ற முடிவுக்கு வந்தவனுக்கு, 'இவ எந்த புக்க படிச்சா நமக்கு என்ன வந்தது' என்ற எண்ணம் வந்துவிட, "கிடைச்சா வாங்கிட்டு வரேன்" என்று ஒரு வழியாக முடித்துக்கொண்டான் தாமு. 


அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவள் வேகமாக கீழே இறங்கிச் சென்றுவிட, அவளுடைய பாத கொலுசொலி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கரைந்தது.


அதற்கு மேல் மங்கையை பற்றியெல்லாம் அதிகம் சிந்திக்கவேயில்லை தாமோதரன். அடுத்த முறை அவன் ஊருக்குச் செல்லும்பொழுது வழக்கத்துக்கு மாறாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. அவள் சுணக்கத்துடன் சென்றது மனதை விட்டு அகலாமல் போக, மனம் கேட்காமல் மங்கைக் கேட்ட புத்தகத்தையும் வாங்கித்தான் வந்திருந்தான்.


அவன் வந்து சேரவே இரவாகியிருந்தது. அடுத்த நாள் காலை நடைப்பயிற்சிக்காகக் கிளம்பியவன், அப்படியே அவள் கேட்ட புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் கையுடன் அதை எடுத்து வந்தான்.


அன்றைய விடியலின் இதமான குளுமையை அனுபவித்தவாறே அவன் வரப்பில் நடந்துவர, அங்கே சூழ்ந்திருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவளுடைய இனிய குரல் செவியில் தீண்ட, அவளுடைய முகத்தைக் காணும் ஆவல் அவனையும் மீறி மேலெழுந்தது தாமுவின் மனதில்.


சில நிமிடங்கள் தலை நிமிராமல் அவனது தவிப்பைக் கூட்டி, பின் நிமிர்ந்து நிலமங்கை அவனுடைய முகத்தைப் பார்க்கவும், அவளுடைய அந்தப் பரவச பார்வை ஒரு புத்தம் புதிய உணர்வுக்குள் அவனை இழுத்துச் சென்றது.


அவள் அவனை நெருங்கி வர வர அவனுடைய சிந்தைக்குள் ஏதேதோ இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.


அவனை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், வழக்கம்போல அவள் தன்னியல்பாக நடந்துகொள்ள, தாமோதரனுக்கு அது கொஞ்சம் கூட இரசிக்கவில்லை.


தான் எடுத்த முடிவுக்குச் சற்றும் பொருந்தாத தன் எண்ணப்போக்கை உணர்ந்து குழம்பியவனாக, அவனுக்கு தன் மீதே கோபம் உண்டாக, அதை அப்படியே அவள் புறம் திருப்பி எரிந்து விழுந்தவன் அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டான்.


வீட்டிலும் இதுவே தொடர, கோபித்துக்கொண்டு சென்றாலும் அவள் தன்னைத் தேடி வருவாள் என அவன் காத்திருக்க, அதையும் பொய்யாக்கினாள் நிலமங்கை. ஊருக்குச் செல்லும் முன் அவளுடைய முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று தலைத் தூக்கிய அவனது வேட்கையும் நிறைவேறாமல் போனது.


அவளைப் பற்றிய நினைவுகளுடனேயே இரவு உணவைத் தயாரித்து, சாப்பிட்டும் முடித்தான் தாமு.


அவளிடம் பேசவாவது செய்யலாம் என்ற எண்ணம் தலைதூக்கினாலும், அதுவும் சாத்தியப்படாது என்றே தோன்றியது.


காரணம், தாத்தாவுக்கும் பேத்திக்கும் பொதுவாக ஒரே ஒரு கைப்பேசிதான் அவர்களிடம் உண்டு. அதுவும் பழைய இரக பட்டன் ஃபோன்தான்.


சந்தானத்துக்கு ஆங்கிலம் படிக்க வராது என்பதால் எண்களை வைத்துத்தான் யாருடைய அழைப்பு என்பதையே அடையாளம் காணுவார்.


அதனால் பெயரைக் கூட பதிந்து வைத்திருக்க மாட்டார்கள். யாருக்காவது அழைக்க வேண்டும் என்றாலும் எழுதி வைத்திருக்கும் எண்களை அழுத்தித்தான் அவர்களுக்குப் பழக்கம். அவர்களுக்கு என்றில்லை அவர்கள் ஊரில் பெரும்பாலும் இப்படித்தான்.


இவனுடைய அழைப்பை அவர் ஏற்க நேர்ந்தால், எண்ணைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்வார். மங்கையிடம் பேசும் வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.


'செல் ஃபோனை கூட லேண்ட் லைன் மாதிரி எப்படி யூஸ் பண்ணனும்னு இவங்ககிட்ட இருந்துலாம்தான் கத்துக்கணும்' என்று கடுப்புடன் எண்ணியவனுக்கு ஒரு யோசனை வர, அவனது இரண்டாவது சிம்மிலிருந்து அந்த எண்ணுக்கு அழைத்தவன், 'ஐ ஆம் காலிங் ஃப்ரம் *** பேங்க்' என்று ஆங்கிலத்திலேயே தொடங்கி நீளமாக ஏதேதோ சொல்ல, பதட்டத்துடன் "கண்ணு மங்க! இங்க வா... ஏதோ விளம்பர காலு போல... இங்கிலீசுலயே பேசறான்... கொஞ்சம் என்னான்னு கேளு" என பதைத்தார் சந்தானம்.


“இந்த நேரத்துல விளம்பர காலா? இன்னா தாத்தா சொல்ற நீயி” எனக்கேட்டபடி கைப்பேசியை அவரிடமிருந்து வாங்கி, "எஸ்... ப்ளீஸ்" என்றாள் தயக்கத்துடன்.


அவளுடைய குரல் அவனுக்குள் அப்படி ஒரு பரவசத்தை ஏற்படுத்த, "மங்க... நான்தான் தாமு" என்றவன் அவள் பேச இடைவெளியே விடாமல், அவசரமாக, "நான்தான்னு பெரியப்பாவுக்கு தெரிய வேணாம்... கொஞ்சம் தள்ளி வந்து பேசேன்" என்றான் அவளை நிர்ப்பந்திப்பதுபோல்.


‘தாமு இப்படில்லாம் செய்யாதே… இதுமாறிலாம் பேசாதே’ என்ற எண்ணம் தோன்ற அவள் அமைதி காக்கவும், "யாரு மங்க? என்னவாம்?" என தாத்தாவும், “என்ன மங்க லைன்லதான் இருக்கியா?” என தாமோதனும் சேர்ந்தாற்போல் ஒரே நேரத்தில் கேட்டு வைக்க, மனம் முழுவதும் கிலி பரவியது. 


"சாரிங்க... ராங் நம்பர்" என்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு பட்டெனத் துண்டித்தாள் நிலமங்கை, அந்த அழைப்பை மட்டுமல்ல தாமோதரனையும்தான்.


அவள் காண்பிக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் பாராமுகம்தான், இன்னும்... இன்னும்... நெருக்கமாக அவளிடம் இழுத்து வந்தது தாமோதரனை, அவனுடைய பிடிவாதத்தை மிகைப்படுத்தி.


***


அடுத்த நாள் வழக்கம்போல அலுவலகம் வந்திருந்தான் தாமோதரன்.


முந்தைய இரவு 'சாரிங்க... ராங் நம்பர்' என்று சொல்லி நிலமங்கை அழைப்பைத் துண்டித்தப் பிறகு மறுபடியும் அவளை அழைக்க அவனுடைய தன்மானம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் அதனால் உண்டான ஏமாற்றத்தால் மனதிற்குள் ஒரு சிறு சினம் மட்டும் ஆறாமல் கனன்றுகொண்டே இருந்தது.


போதாத குறைக்கு அந்த மமதி வேறு மனதிற்குள் தோன்றி அவனைப்  பார்த்து எள்ளலாகப் சிரித்து வைக்க, உடனே கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தினான்.


"ஹாய் டியூட்... குட் மார்னிங்" என எதிர்முனையில் உற்சாகமாக ஒலித்தது அவனுக்குக் கீழே வேலை செய்யும் சந்தோஷின் குரல்.


"குட் மார்னிங்!" என சம்பிரதாயமாக மறுமொழிந்து, "நெக்ஸ்ட் யூ.எஸ் ஆன்சைட் லிஸ்ட்ல உன் டீம்ல யாரெல்லாம் இருகாங்க?" என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.


என்னவோ ஏதோ என பதற்றமடைந்தவனாக, "என்ன தாமோதர், எனிதிங் இம்பார்ட்டன்ட்?" என எதிர்முனையிலிருந்த சந்தோஷ் தயக்கத்துடன் இழுக்க,


"சும்மா சொல்லேன்" என்றான் அவனுடைய மனநிலை புரிந்திருந்தும்.


தாமோதரனுக்கு மேலிடத்திலிருக்கும் செல்வாக்குப் புரிந்தவன் என்பதால், மறுக்க இயலாமல் அவன் கேட்ட தகவலை சந்தோஷ் சொல்ல, அவன் எதிர்பார்த்தது போலவே அதில் மமதியின் பெயரும் இருக்க,


"குட்... ஆனா அந்த மாமதியை மட்டும் இந்த லிஸ்ட்ல இருந்து தூக்கிடு" என்றான் தாமோதரன் வெகு சாதாரணமாக.


"ஆனா ஏன்... பேசிக் ரிக்கொயர்மென்ட்ஸ் எல்லாமே பக்கவா இருக்கே?" எனக் கேட்டுவிட்டு, "பாவம் தாமு அவங்க..." என சந்தோஷ் தன்னையும் அறியாமல் அந்தப் பெண்ணுக்குப் பரிந்து வந்தான்.


"அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது. இந்த செட்ல வேணாம். கொஞ்சம் டென்சன் ஆகி, கெஞ்ச விட்டு அப்பறம் அடுத்த செட்ல அனுப்பிக்கலாம். இது உன்னால முடியலைன்னா சொல்லு நான் பார்த்துக்கறேன்" என தாமு விடாப்பிடியாகக் கிட்டத்தட்ட அவனை நிர்ப்பந்திக்கவும், வேறு வழி தெரியாமல் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த அழைப்பிலிருந்து விலகினான் சந்தோஷ்.


மனதை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் உணர்ந்தான் தாமோதரன்.


மனம் கொஞ்சம் இலகுவாகிவிடவே, அந்த வார இறுதியிலேயே ஊருக்குச் சென்று நிலமங்கையை நேரில் பார்க்க வேண்டும், முடிந்தால் அவள், 'ராங் நம்பர்' என்று சொல்லி அழைப்பைத் துண்டித்ததற்கு அவளை ஒரு வழி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டுக்கொண்டான்.


ஆனால் அடுத்து வந்த ஆறு மாத காலம், வேலை நிமித்தம் அவன் அமெரிக்கா சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டாகிப்போனதால் அவனால் ஊர் பக்கமே போக முடியாமல் போனது.


2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page