top of page

Nilamangai-3

நிலமங்கை-3

நிதரிசனத்தில்...


வாகனம் அவர்கள் வீடுகளிருக்கும் வீதியில் நுழையவும், அவளுடைய அன்னை வாழ்ந்த வீடு திருமணக்கோலம் பூண்டிருந்ததை தூரத்திலிருந்தே கவனித்துவிட்டாள் மங்கை.


வாயிலில் வாழைமரம் கட்டி, முகப்பு வைக்கப்பட்ருக்க, , ஆதவனின் கிரணங்கள் பூமி முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டதால் ஒளி மங்கி தெரிந்தாலும் கூட, அதில் தொங்கிக்கொண்டிருந்த 'சீரியல்' விளக்குகள் தங்கள் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. கூடவே அதில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் பெருந்தன்மையுடன் அமைதி காத்தன.


அவளுடைய தாத்தா அங்கே இருப்பதினால் முதலில் அவள் அங்கே செல்லத்தான் விரும்புவாள் என்பதினால் அவளைக் கண்களால் அளந்தவாறே நிலமங்கையின் வீட்டின் வாயிலில் காரை நிறுத்தினான் தாமோதரன்.


"மா... தாமு அத்தானோட வண்டி வர சத்தம் கேக்குது. அக்கா வந்துடுச்சு போல" என்ற ஒரு இளம் பெண்ணின் குரலும் தொடர்ந்து வீட்டுக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அவளுடைய செவிகளைத் தீண்டவும், ஒரு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவளை யாரோ திடீரென்று அடித்து எழுப்புவதுபோன்று அவளுடைய உடல் தூக்கிப்போட, அவனை நோக்கி, "தேங்க்ஸ்" என்கிற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டுத் தன் கைப்பையை வசதியாக தோளில் மாட்டிக்கொண்டு மகழ்ச்சியும் தயக்கமும் போட்டி போட வாகனத்திலிருந்து இறங்கி தீவிர யோசனையுடன் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க, தன் தொண்டையை செருமிக்கொண்டவன், "இத பாரு மங்க, மதியம் வரைக்கும் உனக்கு டைம் தரேன். இங்க எவ்வளவு சீராடணுமோ சீராடிட்டு நீ நேரா நம்ம வீட்டுக்குத்தான் வரணும். இனிமே நீ அங்கதான் இருக்கப்போற ரைட். இனிமேலும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியதுங்கறத நெனப்புல வெச்சுக்க" என மிரட்டலாக ஆரம்பித்துத் தழுதழுக்கும் குரலில் அவன் முடிக்கவும், திரும்பிய மங்கை அவனை ஒரு உணர்வற்ற பார்வை பார்க்க, அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து அவளுடைய தங்கை, தம்பி சித்தி என ஒவ்வொரு தலையாகத் தெரியவும் 'காரை' அப்படியே 'ரிவர்ஸ்'இல் ஓட்டிவந்து அவன் வீட்டின் வாயிலில் நிறுத்தி இறங்கினான் தாமு. அதற்குள் வீட்டிற்குள் சென்றிருந்தாள் மங்கை.


அப்பொழுது அவசரமாக அவனை நோக்கி ஓடி வந்த செல்வம், "குடுங்கண்ணா... வண்டிய ஷெட்ல போட்டுட்றேன்" என்றவாறு அவன் கையிலிருந்த சாவியை வாங்கிக்கொண்டு காரை நோக்கிப் போக, "என்னடா தாமு! இம்மாம் வருஷம் கழிச்சு அந்த பொண்ணு இங்க வந்துருக்குது. நம்ம வூட்ட திரும்பி கூட பார்க்காம இப்புடி போவுதே. நல்ல வார்த்தையா பேசி... சமாதானப்படுத்தி அதை நேரா இங்கதான இட்னு வந்திருக்கணும் நீ" என வருத்தமும் ஏமாற்றமுமாகச் சொன்னார் புஷ்பா.


அவன் மனத்திலிருந்த ஏக்கமும் அதுதான் என்பதால் அவருக்குப் பதில் சொல்ல இயலாமல் அவன் விட்ட பெருமூச்சின் உஷ்ணத்தில், அவன் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த வளைவில் மொத்தமாகப் படர்ந்திருக்கும் பச்சை பசேலென்ற கொடியும் அதில், சிவப்பு வெள்ளை பிங்க் என மூன்று நிறங்களும் கலந்தவாறு கொத்துக்குத்தாக பூத்துக் குலுங்கி கண்களை பறிக்கும், நிலமங்கைக்கு மிகவும் பிடித்தமான ரங்கூன் மல்லிகை மலர்களும் கூட அவனைப் பார்த்து பரிதாபமாக ஏக்கத்துடன் புன்னகைத்தன ‘உன் நிலமங்கையின் பார்வை எங்களையும்கூட தழுவவில்லை’ என்பது போல!


***


படபடவென்ற சத்தத்துடன் ஓட்டிவந்த தனது 'புல்லட்'டை தாமோதரனுக்கு அருகில் நிறுத்தி காலை ஊன்றியபடியே, "எப்ப வந்த தாமு? மங்க பொண்ண இட்டாந்துட்டதான? பிரச்சன ஒண்ணும் இல்லையே?" என இயல்பாக அவனிடம் விசாரித்தார் ஜனார்த்தனன், தாமுவின் தந்தை.


அவர் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. "ஹா.. ஹா... அது என்ன மங்கையோட சேர்த்து எல்லாரும் ஏதோ பிரச்சனைய எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கற மாதிரியே கேள்வி கேக்கறீங்க?" என விளையாட்டாகவே கேட்டான்.