top of page

Nilamangai - 26 (FINAL)

Updated: Mar 23

மரங்களின் தாய் எனப் போற்றப்படும், பெருமதிப்பிற்குரிய வங்காரி மாத்தாய் அவர்களுக்கு இன்றையப் பதிவு சமர்ப்பணம்!




26. நிறைவு


சில தசாப்தங்களுக்குப் பிறகு…


நார்வே நாட்டின் தலைநகரத்தில் இருக்கும், பாரம்பரியப் பெருமைமிக்க ஓஸ்லோ சிட்டி ஹால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.


டிரம்பெட் இசை முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று அந்த அரங்கினுள் நுழைந்தாள் நிலமங்கை.


அந்த அரங்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளை நிறைத்து அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று அவளை வரவேற்க, தலையசைத்து அந்த அன்பையும் மரியாதையும் ஏற்றுக் கொண்டபடி மேடையில் மீது வந்து நின்றாள்.


பச்சை பருத்திப் புடவை அணிந்து மிக மிக எளிய தோற்றத்தில் இருந்தாலும் குறையாத கம்பீரத்துடன் நின்ற அந்த மங்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாமோதரன்.


இந்த வாழ்க்கையின் ஓட்டத்தில், அசாதாரண துணிச்சலுடன், எந்தச் சூழ்நிலைக்கும் பணிந்து விட்டுக் கொடுக்காத பிடிவாதத்துடன் இவள் செய்த சாதனைகள் அதிகம்.


தன் வாழ்நாளில் மூன்று கோடி மரங்களை நட்டுப் புரட்சி செய்த, மரங்களின் தாய் என்று போற்றப்படும் வாங்கரி மாத்தாய் அவர்களின் பாதையில் அவரது சாதனையைக் கடந்து மேலும் பல கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்கிற முனைப்பில், அவள் ஏற்படுத்தியிருக்கும் அறக்கட்டளையின் மூலமாக பல தன்னார்வலர்களின் உதவியுடன் தன் கடைசி மூச்சு வரை அதைச் செய்து கொண்டிருந்தாள்.


அழிவின் விளிம்பில் நின்ற, வெள்ளை காண்டாமிருகம் உட்பட இன்னும் சில உயிரினங்களை மீட்டு, அதன் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் முயற்சியில் அரசாங்கத்துக்குத் துணை நின்று அதில் வெற்றியும் கண்டாள்.


இந்த உலகில் எந்த மூலையில் இயற்கை வளங்களுக்கு எதிராக சுரண்டல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் நிலமங்கையின் குரல் ஒலித்தது.


இயற்கையைப் பாதுகாக்க மட்டும் அல்ல, வசதி வாய்ப்பற்ற பெண்களின் கல்விக்கும், பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கவும், பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கவும் என தனியே ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, பெண்களின் நிலையை மேம்படுத்தவும் தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாள்.


பற்பல இடர்பாடுகளைச் சந்தித்தாலும் மக்கள் மத்தியில் உலக அரங்கில் 'பசுமையின் காவலர்' என்று போற்றிப் புகழப்பட்டாள்.


இதற்காக பல பட்டங்களும் விருதுகளும் இவளைத் தேடி வந்து குவிந்திருந்தாலும் அதில் உச்சபட்சமாக, 'நோபல் பீஸ் பிரைஸ்' அதாவது அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பற்பல படி நிலைகளைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள்.  


அதற்காகவே காலம் அவளை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.


இந்தியாவிலிருந்து பலரும் பல துறைகளில் நோபல் பரிசுப் பெற்றிருந்தாலும் அன்னை தெரேசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெரும் மற்றும் ஒரு பெண் இவள்தான்.


ஒரு பதக்கம் மற்றும் பட்டயத்துடன் கூடிய குறிப்பிட்ட தொகையும் அடங்கிய அந்தப் பரிசை, ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் பத்தாம் தேதியன்று, நார்வே நாட்டின் அரசர் முன்னிலை வகிக்க, இந்த நோபல் பரிசு வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளைக் குழுவின் தலைவர் வழங்க, முகம் எங்கும் பெருமையும் பூரிப்பும் படர்ந்திருக்க மங்கை அதைப் பெற்றுக் கொண்டாள்.


அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனின் விழிகளில் நீர் நிறைந்தது.


தொடர்ந்து, "இப்படி ஒரு பெருமையை எனக்கு அளித்த என் சக மனிதர்களுக்கும், என் சக உயிரினங்களுக்கும், பல அதிசயங்களைத் தன்னோடு பொத்தி வைத்திருக்கும் இயற்கைக்கும், நம்முடைய ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் இந்தப் பூமிக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என, "நோபல் லெக்சர்' என பெருமையாகப் போற்றப்படும் சொற்பொழிவை மங்கை தொடங்கவும் தன்னை மறந்து கைதட்டினான்.


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இங்கிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும், எதிர்வரும் சந்ததியினருக்கும் இதில் பரிபூரண உரிமை உள்ளது.


இந்தப் பூமியை மிகப் பத்திரமாகப் போற்றிப் பாதுகாத்து அதிலிருந்து கிடைக்கும் பலன்களை மட்டுமே எடுத்து பயன்படுத்த நமக்கு அனுமதி உள்ளது. 


நாம் வாழும் இந்தச் சொற்ப காலத்துக்குள் இந்த உலகம் முழுவதையும் நம் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் அதைவிட இரக்கமற்ற கொடிய அரக்கச் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது.


ஒவ்வொரு செடி, கொடி, மரம், காடுவாழ் உயிரினங்கள், நீர்வாழ் உயிரினங்கள், அனைத்தின் பாதுகாப்பும், நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்.


பசித்தவனுக்கு உணவளிப்பதும், கல்வியில் பின்தங்கி இருக்கும் சமூகத்துக்குக் கல்வி கொடுப்பதும், இங்கே வாழும் ஒவ்வொரு உயிரின் ஆரோக்கித்தையும்  பேணிப் பாதுகாப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதற்காக நம்மால் ஆனதை நாம் செய்தே ஆக வேண்டும்" எனத் தொடர்ந்தது அவளது உரை.


அப்பொழுதென்று பார்த்து கைப்பேசி ஒலிக்கவும், சுற்றுப்புறம் உரைக்க மடிக்கணினியில் இருந்த தன் மனைவியின் காணொளியை அப்படியே நிறுத்திவிட்டு அந்த அழைப்பை ஏற்றான்.


"ஹாய் ஜீ…ப்பா ஹொவ் ஆர் யூ?" என ஒலித்தது அவனுடைய மகன் வாயிற்றுப் பேத்தியின் இளம் குரல்.


"ஐ அம் பர்ஃபக்ட்லி ஆல்ட்ரைட் பேபி… ஹவ் ஆர் யூ?, உன்னோட அம்மா அப்பா எப்படி இருக்காங்க?" எனக்கு கொஞ்சிக் குழைந்தது தாமோதரனின் குரல்.


"அஸ் யூஸ்வலி, தே ஆர் டேம் பிஸி… ஜீ…ப்பா!  பெட்டர் லீவ் தெம். வாட் அபவுட் யூ? நான் அங்க வந்து உங்க கூட ஸ்டே பண்ண போறேன் இல்ல? நான் கேட்ட எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் செஞ்சிட்டியா?" என உரிமையுடன் மிரட்டினாள்!


"டன் பேபி, வேணா உன்னோட ரூம நான் வீடியோ கால்ல காமிக்கட்டுமா? பாக்கறியா?" என்று தாமு கேட்டதற்கு,


“நோ… நோ… நோ… ஜீ..ப்பா! நான் அத நேர்ல வந்து பார்க்கிறேன்! ஐ நோ, நான் கேட்டத விட நீ பெட்டராதான் ரெடி பண்ணி இருப்ப" என்று அவசரமாகப் பதில் கொடுத்தவள், "எனக்கு கொஞ்சம் பேக்கிங் வேலை எல்லாம் இருக்கு, இன்னும் ஃபைவ் டேஸ்ல அங்க வந்து ஒன்ன நேர்ல பார்க்கறேன்… லவ் யூ, பை" என அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள் பிரித்வி.


அவனது மாலை நடை பயிற்சிக்கு நேரமாகிவிடவே, மடிக்கணியை அப்படியே அணைத்து வைத்துவிட்டு, அவன் அணிந்திருந்த கலர் வேட்டி டீ ஷர்ட் சகிதமாகவே வீட்டிலிருந்து கிளம்பினான்.


எதிர்பட்டவரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டே நடக்க,  அவனுடைய கால்கள் அனிச்சையாக நிலமங்கையுடைய கழனியில் அவனைக் கொண்டு வந்து  நிறுத்தியது.


மங்கையின் நினைவில் அன்று ஏனோ அவனுக்கு அதிகம் களைப்பு உண்டாக அங்கே இருந்த ஒரு மரத்தின் அடியில் வந்து அமர்ந்தவன் அப்படியே சரிந்து கைகால்களை விரித்து அந்த மரத்தின் உச்சியைப் பார்த்தபடி படுத்துவிட்டான்.


மங்கை, தாமுவின் காதல் உறவின் சாட்சியாக இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.


மரபணு சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவன், அதன்பின் இந்தியா திரும்பவே இல்லை.


நாசாவில் மரபணு விஞ்ஞானியாகப் பணியில் இருக்கிறான். பல்கலைக்கழகத்தில் அவனுடன் படித்த வடக்கு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.


அவர்களுடைய ஒரே ஒரு மகள்தான் பிரித்வி.


மகனைப் பொருத்தவரை மங்கைக்கும் சரி… தாமோதனருக்கும் சரி… தங்கள் அன்பை காண்பித்துக் கட்டிப்போட்டுத் தங்களுடன் வைத்துக் கொள்ளும் எண்ணம் கிடையவே கிடையாது.


அவரவர் வாழ்க்கை அவரவர் தீர்மானம் என்ற கொள்கையில் இருந்ததால் தேவையில்லாமல் தாங்களும் வருந்தி அவனையும் வருத்தவில்லை.


மகன் தங்களுடன் இல்லையே என்கிற சிறு ஏக்கம் இருந்தாலும், இதையே நினைத்து தினம் தினம் உட்கார்ந்து ஏங்கித் தவிக்க நேரமில்லாத அளவுக்கு பொது வாழ்க்கையில் அவர்களது ஈடுபாடு அதிகமாக இருந்தது.


அத்திப்பூத்தாற் போல எப்பொழுதாவது குடும்பத்துடன் இங்கே வந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்துவிட்டுப் போவான்.


கடைசியாக மங்கை இறந்தபோது வந்ததுதான், அதன் பிறகு ஒரு முறை கூட அவன் இங்கே வரவில்லை.


ஆம், மங்கை அவனை விட்டுச் சென்று நான்கு ஆண்டுகளும் சில மாதங்களும் கடந்துவிட்டன.


கோடை மழை பொழிந்து இந்த பூமியே குளிர்ந்துபோயிருந்த ஒரு சுகமான நாளின் விடியல் அது!


வழக்கம் போல தன் கைகளாலேயே பூஜை செய்து, உழவு மாடுகளுக்குப் பொட்டு வைத்து, கற்பூரம் காண்பித்து பொன்னேறு பூட்டி சில அடிகள் உழுதவள், "என்னவோ செய்யுது தாமு, கொஞ்சம் இங்க வாயேன்" என அவனை அழைத்தாள். அவளை நோக்கி அவன் வந்த சொற்ப வினாடிகளுக்குள்ளாகவே தொய்ந்து போய் அந்த மண்ணிலேயே சரிந்தாள்.


வேகவேகமாக வந்து தாமு மங்கையை மடி தாங்க, அவனைப் பார்த்த விழி பார்த்த படி, வாடாத புன்னகையுடன், அவள் அதிகம் நேசிக்கும் இந்த இயற்கையுடன் இலகுவாகக் கலந்துபோனாள்.


நோவில்லை நொடி இல்லை, முழு ஆரோக்கியத்துடன் வலம் வந்தவளின் உயிர் அவளது அறுபத்தி ஏழாவது வயதில் பிரிந்தது.


அவளது பிரிவில் ஆரம்பத்தில் சற்றுப் பரிதவித்து போனாலும், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறான்.


அவனுக்காக அவள் விட்டுப் போயிருக்கும் பொறுப்புகள் இங்கே அதிகம் இருக்கிறதே! கூடவே அவனது அரசியல் சார்ந்த தொழிலும் இருக்க, சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல் நாட்கள் நகர்ந்தன.


எனவே அவள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன அறக்கட்டளைகளைப் பொறுப்பான ஒரு நபரிடம் ஒப்படைக்கும் வரை கடமையாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். 


அதற்காகத்தானோ என்னவோ பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக அவனுடைய பேத்தி பிரித்வி இங்கேயே வந்துவிடப் போகிறாள்.


சில தினங்களுக்கு முன்பாக இவனைத் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, தன் மகளுக்கு இந்தியாவில் வசிக்கத்தான் விருப்பம் என்பதால் மேற்படிப்புக்காக அவளை அங்கேயே அனுப்பி விட முடிவு செய்திருப்பதாகவும், அவளைத் தனது பாதுகாப்பில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியுமா என்றும் தாமோதரனிடம் கேட்டான் அவனுடைய மகன்!


பிரித்வியிடம் நிலமங்கையின் சாயல் அதிகமாகத் தெரிவதுபோல அவன் மனதுக்குப்பட்டது. கரும்பு தின்ன கசக்குமா என்ன, உடனே சரி என்று சொல்லிவிட்டான்!


நிலமங்கையின் நினைவில்லாமல் ஒரு நொடி கூட அவனால் வாழ முடியாது. கூடவே பேத்தியின் நினைவும் ஒட்டிக்கொண்டிருக்க படுத்திருந்தவனின் நெற்றியில் வந்து பட்டென விழுந்தது பவழம் போன்றே தோற்றமளிக்கும், அந்த மரத்தின் விதை ஒன்று.


உண்டான சிறு வலியில் எழுந்து அமர்ந்தவன், நெற்றியை தேய்த்துவிட்டபடி அந்த விதையை எடுத்து உள்ளங்கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.


மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தினம் நிலமங்கை இவனுக்குப் பரிசளித்ததும் இதைதான்.


வரலட்சுமியிடம் அதைக் காண்பித்துக் கேட்டதற்கு, அதை 'யான குந்துமணி’ என்றார். பழங்கலத்தில் பொன்னை எடை போட இதைத்தான் பயன்படுத்தினார்களாம். நிறைய மருத்துவ குணம் நிறைந்தது யானை குன்றின்மணி மரம், இதற்கு சாகா மரம் என்ற பெயரும் உண்டு என விளக்கம் கொடுத்தார்.


ஆனாலும் அதில் திருப்தியுறாமல், அதைப் படம்பிடித்து… கூகுள் லென்ஸ் வழியாக ஆராய்ந்து பார்க்க, திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே மரம் இதுதான் என்பதும் அதற்கு ‘ரெட் லக்கி சீட்ஸ்’ என்ற பெயரும் இருப்பதும் தெரிந்தது. 


சீனாவில் இந்த விதையைக் காதலின் சின்னமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து, அப்படியே பூரித்துப் போனான். 


‘எந்நாடுடைய இயற்கையே போற்றி’ புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி என்று மங்கையின் மனதைப் படித்தானோ, அன்றே அந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடித்திருக்க, நம்மாழ்வார் அவனை வெகுவாக தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டார்.


எந்த விவசாயத்தைத் தனக்கு ‘தோதுபட்டு வராது’ என்று சொன்னானோ, ஏழாண்டுகள் மங்கையைப் பிரிந்து தவித்தத் தவிப்புக்கு, அந்த விவசாயம் மட்டுமே அவனுக்கு மருந்தாக அமைந்தது.


அவள் இங்கே திரும்ப வருவதற்குள் அந்த ஊரையே பச்சைப்பசேல் என்றாக்கி பல அதிசயங்களை நிகழ்த்தி இருந்தான். 


அந்த ஒரே காரணத்தினால் மட்டுமே நிலமங்கையின் ஆவேசம் தணிந்து அவள் அமைதி பெற்றாள் என்பதை அவன் நன்றாகவே உணர்ந்திருந்தான்.


அவளுடான அவனது வழக்கை மிக இனிதாக மாற, அவன் தன்னையே விட்டுக் கொடுத்தான் என்றாலும், அதை விரும்பியே செய்தான் என்றால் அது பொய்யிலை.


அதற்கு இந்த இயற்கை மட்டுமே அவனுக்குத் துணை நின்றது என்றால் அதுவும் மிகையில்லை.


ஒரு ஆடவனை மணந்து, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, பதிவிரதா தர்மத்துடன் நடந்தால் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்கை முழுமை பெறுகிறது என நம் புராண இதிகாசங்கள் சொல்லுகின்றன.


அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிப் போதனை செய்து வளர்க்கப்படும் பல கோடி ஆண்மகன்களில் ஒருவனாகத்தான் இருந்தான் தாமோதரனும்.


ஆனால், அவனே மனம் மாறும் அளவுக்குப் பெண்களில் உண்மையான ஆசாபாசங்கள் எப்படிப் பட்டவை, அவர்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கி வைப்பதென்பது எவ்வளவு பெரிய பாதகம் என்பதை அவனுக்குப் புரிய வைத்தாள் நிலமங்கை.


அதே போல, அவளுடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து, ஒரு தடையாக நிற்காமல், அவள் விருப்பபடி அவளைச் செயலாற்ற இவன் உறுதுணையாக் நின்றதால் மட்டுமே, ஒரு மிகப் பெரிய உயரத்தை அடைந்தாள் நிலமங்கை என்றால், அதுவும் மிகையில்லை. 


இவர்கள் வாழ்கையில் காதல் பேசி கலந்த தருணங்களைக் கடந்து, இயற்கையின் பேரதிசயங்களைப் பற்றி வியந்து விவாத்தித்த தருணங்கள் அதிகம்.


‘எப்பவுமே ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைட், கார்பன் மோனோ ஆக்சைட் பத்தில்லாம் பேசிக்கினு இருக்கோமே, நாம ஏன் நைட்ரஜன் பத்திப் பேசறதே இல்ல’ என அவள் தொடங்கினாலே பற்றிக் கொண்டு வரும் அவனுக்கு, அந்தப் பேச்சு எங்கே போய் முடியும் எனத் தெரிந்ததால்.


அப்படித் தொடங்கினால், நைட்ரஜன் சுழற்சிப் பற்றி ஒரு சிறிய வகுப்பெடுத்துவிட்டு, “மண்ணுல இருந்து நைட்ரஜன் நம்ம அட்மாஸ்பியர்ல கலந்துடும். அதனால எனக்கு எதுனா ஆயிட்டா, என் ஆயா, அம்மா மாதிரி எம்பூமிலயே என்ன பொதச்சிடு, தாமு! ஆனா சிமிண்ட்டு செங்கல்லு வெச்சு சமாதியெல்லாம் கட்டக்கூடாது! அடையாளத்துக்கு வேணா, அங்க ஒரு மரக்கண்ண நட்டுடு!”


”என்னோட ஒடம்பு இந்த மண்ணோட மண்ணா மக்கி, இந்த மண்ணுக்கே ஓரமாகி, இந்த நெலத்தோட கலந்து, நைட்ரஜனா மாறி, நம்ம இயற்கையோட இயற்கையா கலந்துடனும்” என்பாள், சும்மா இல்லை, உணர்ந்து, இரசனையுடன்.


இதைக் கேட்கும்போது வேதனையாக இருந்தாலும், நிஜத்தில் நிகழ்ந்தவுடன், அவளது அந்த ஆசையை நிறைவேற்றினான்.


அவளை விதைத்த இடத்தில், அவள் காதலுடன் கொடுத்த விதைகள் சிலவற்றை முளைக்க வைத்து, அந்தக் கன்றுகளில் ஒன்றை நட்டு வைத்தான்.


அதுவே, ஒரு விருக்ஷமாக மாறி, இன்று மலர்களையும், பவழம் போன்ற விதைகளையும் அவன் மீது வாரித் தெளிக்கிறது, மங்கை அவன் மீது பொழியும் காதலைப் போலவே!.


இங்கே வந்து இந்த மரத்தினடியில் இப்படி படுக்கும் தருணங்களில், அவளது சுவாசம் முகத்தில் மொத, அவளுடைய மடியில் தலை வைத்துப்படுத்த இதம் கிடைக்கிறது அவனுக்கு.


ஒரு அரை நூற்றாண்டு காலமாவது உன்னுடன் வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே என்னை விட்டு போய்விட்டாயே என்று எண்ணிக்கொண்டான்.


இவர்கள் வாழ்கை ஒரே நேர்கோட்டில் இணைந்த பிறகு, சிறு சிறு பிரிவுகள் இவர்களுக்கு ஏற்பட்டாலும், அந்த ஏழு வருடப் பிரிவவைப் போல அதன்பின் நிகழவே இல்லை.


அந்த ஏழு ஆண்டுகளை எப்படிக் கடந்தனோ, அதேபோலத்தான் தன் தனிமையை இப்பொழுதும் இயற்கையின் துணையுடன்  கழிக்கிறான்.


அதே போல மீண்டும் ஒரு ஏழு ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே இயற்கையுடன் இயற்கையாக கலந்து காலம் தன்னை நிலமங்கையுடன் இணைத்து விடும் என்கிற அதீத நம்பிக்கையில் அப்படி ஒரு நாளுக்காகக் காத்திருக்கிறான் தாமோதரன்.


ஒரு நொடியில் கற்பூரம் போல கரைந்து போகும் இந்த வாழ்க்கை விளையாடும் இப்படிப்பட்ட விளையாட்டைப் பற்றி எல்லாம் சிறிதும் எண்ணிப் பார்க்காமல், காட்டாற்று வெள்ளம் போன்றவளைத் தன் உள்ளங்கைக்குள் பொத்தி வைக்க வேண்டும் என என்னவெல்லாம் செய்துவிட்டோம் என்று ஒரு நொடி நினைக்கும்போது தான் செய்த முதிர்ச்சியற்ற செயலை எண்ணிச் சிரிப்பு வந்தது தாமோதரனுக்கு.


ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


என் கண்ணே ஆராரோ ஆரிரரோ…


 


பாலாத்தங் கரையோரம் பட்டுப்போல நம்மூரு…


பச்ச கம்பளம் விரிச்சு வெச்ச பட்டுப்போல நம்மூரு…


 


ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


என் கண்ணே ஆராரோ ஆரிரரோ…


 


பொன்மருதம் நம்மூரில் நீ வந்து பொறந்ததால…


எனக்கும் அது பெருமையாச்சு உனக்கும் அது பெருமையாச்சு…


 


ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


என் கண்ணே ஆராரோ ஆரிரரோ…


 


நம்மூர மட்டுமில்ல ஒலகத்த மொத்தமுமே  


நேசிக்க கத்துக்க, நேசிக்க கத்துக்க…


இயற்கை வளங்களை அழிக்காத ஒரு வாழ்க்கை


வாழத்தான் கத்துக்க, வாழத்தான் கத்துக்க…


 


ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


என் கண்ணே ஆராரோ ஆரிரரோ…


நான் சுமந்து பெத்த கண்மணியே!


என் உசுரான பொன்மனியே!


          (இந்தத் தாலாட்டுப் படலை இயற்றியவர் கிருஷ்ணப்ரியா)


நிலமங்கை தன் மகனுக்காகத் தானே உருவாக்கிப் பாடிய அந்தத் தாலாட்டுப் பாட்டு இன்று வரை இந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருக்க, யாரோ ஒரு பெண் தான் பெற்ற பிள்ளைக்காக அதைப் பாடிக்கொண்டிருந்தாள்.


இனிமையான அந்தப் பாடல் தென்றலில் மிதந்து வந்து மெல்லியதாக அவனது செவிகளில் புகுந்து, பழைய நினைவுகளை மீட்டியது.


அது தந்த இதத்தில் அவனுடைய விழிகள் தானாகச் சொருகியது.


உடலால் பிரிந்துபோய்விட்டால் என்ன? உயிருடன் கலந்து அவனுடைய நினைவுகளில் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாள் அம்மங்கை?


தாமோதரன் வேறு நிலமங்கை வேறா என்ன?  


மூடிய அவனது இமைகளுக்குள் புன்னகை பூத்தபடி வந்து நின்று நிறைந்துபோனாள் நிலமங்கை.


தனது நினைவுகளால் அவளை ஆரத் தழுவிக்கொண்டான் தாமோதரன்!


🌸நிறைவு🌸



4 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page