top of page

Nilamangai - 25

Updated: Mar 23


வணக்கம் அன்புத் தோழமைகளே!


ஒரு வழியாக நிலமங்கை நாவல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.


நில மங்கையின் கதாபாத்திரத்திற்கு ஒரு முழுமையை கொடுக்கும் விதத்தில் இன்னும் ஒரே ஒரு சிறிய பதிவு மட்டுமே மீதம்! அதை நாளை பதிவிட இருகிேன்!


உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிலமங்கையைப் போல என்னை வைத்து செய்த கதை வேறு ஒன்றுமே இருக்காது😳.


2020இல் ஒரு முயற்சியாக வழக்கமான ஒரு டெம்ப்ளேட்டுடன் 'என் மனதை ஆளவா' நாவலை நான் எழுதி முடித்த பொழுது அது அவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று நான் நினைக்கவே இல்லை.


அதுவும் புதிதாக ஒரு வலைதளத்தை தொடங்கி, அதில் ஒரு முழு நாவலாக நான் எழுதி முடித்த கதை அது. கதை முற்றுப்பெறும் வரை அதற்கு அதிகளவு வாசகர்கள் இல்லை என்பதே உண்மை.


கதை முற்றுப்பெற்ற பிறகு அதற்கு வந்த பின்னூட்டங்களை பார்த்து வியந்து போனேன்.


அந்த உற்சாகத்தில் அடுத்ததாக நான் தொடங்கிய கதை தான் நிலமங்கை. ஆனால் அந்த உற்சாகம்தான் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.


நிலமங்கை தொடங்கிய பிறகு தான் இரண்டாவது அலை கொரோனா கோரத்தாண்டவம் ஆடி நம்மையெல்லாம் முடக்கிப் போட்டது.


என் கதையின் முதல் வாசகர் என்னுடைய அப்பாதான். எபிசோட் போட்ட உடனேயே படித்து விடுவார்.‌ பதிவுகள் வர தாமதமானால் ஏன் இன்னும் எழுதவில்லை என்று கேட்பார்.


2019 தொடக்கத்தில் அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் கூட என்னுடைய பழைய நாவல்களை படித்துக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு என்னுடைய Support System அவர்.


என் முதல் நாவலான இதயத்தை திருடாதே புத்தகம் வெளிவந்த போது கூட வீ கேன் புக்ஸ் ஸ்டாலுக்கு சென்று அந்த புத்தகத்தை வாங்கி வந்தார்.


நிலமங்கை தொடங்கிய பொழுது வழக்கம் போல மிக ஆர்வமாக வாசித்தார். ஆனால் ஒரிரு அத்தியாயங்கள் எழுதிய நிலையில்தால் எதிர்பாராத விதமாக அவரது மரணம் நிகழ்ந்தது.


ஆர்வத்துடன் அவர் படிக்க தொடங்கிய அந்த நாவல் முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே இப்படியாகவும் அது ஒரு மாதிரி என் மனதை மிகவும் பாதித்தது.


எப்படியோ அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டுவந்து, மறுபடியும் இந்த கதையைத் தொடர முயன்ற பொழுது, என்னுடைய (சித்தப்பா மகள்) தங்கையின் கணவர், என் சித்தி மற்றும் எங்களுடைய பெரிய அக்காவின் கணவர் மூன்று பேரின் மரணங்கள் ஒரே வாரத்துக்குள்ளேயே நடந்து பேரதிர்ச்சியை கொடுத்தது.


அப்பாவைப் போல என்னுடைய அக்காவின் கணவர் தவறாமல் என்னுடைய அத்தியாயங்களை உடனுக்குடன் வாசித்து கருத்து சொல்பவர்.


அதே வாரத்தில் தான் நம் மதிப்புக்குறிய வாசகர் பானும்மாவின் மரணமும் நிகழ்ந்தது.


எல்லாமே மனதை மிக மோசமாக பாதித்தது.


திரும்பத் திரும்ப இதே போல 'Negative Vibes' உண்டாகவே மறுபடியும் அந்த கதையை தொடரவே பயமாக இருந்தது.


அதன் பிறகு அந்தக் கதையைத் தொடவே இல்லை. மீண்டும் ஒரு வருடம் கழித்து அப்படியே விட்டுவிட மனம் இல்லாமல் தொடங்கிய பொழுதும், எங்கள் மிக நெருங்கிய குடும்ப நண்பர் பாபு மாமா, என்னுடைய மைத்துனர் ரவி அண்ணா மற்றும் என்னுடைய சித்தப்பா என மீண்டும் மூன்று தொடர் மரணங்கள் மிக மோசமாக மனம்சலித்து போகும் அளவுக்கு செய்து விட்டது.


இனி இந்த கதையை எழுதவே கூடாது என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன்.


இதற்கிடையில்தான் பூவே உன் புன்னகையில், வலசை போகும் பறவைகளாய், இப்பொழுது காட்டுமல்லி வரை தடையில்லாமல் எழுதி முடித்தேன்.


ஆனால், நிலமங்கையை அதுபோல One Shotஇல் எழுத முடியவில்லை.


வழக்கம்போல, "இந்த கதையோட தொடக்கம் ரொம்ப நல்லா இருக்கு. வாசகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். இதை எப்படியாவது நீங்க எழுதி முடிச்சுதான் ஆகணும்' என என் மச்சி மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.


ஆனால் என் மனநிலையை அவர் புரிந்து வைத்திருப்பதால், "இதுக்காக ஸ்டரெஸ் பண்ணிக்காதீங்க மச்சி… எது வருதோ அதை செய்ங்க" என்று முடித்துக் கொள்வார்


அப்பொழுதுதான் நூர் நூர் அப்துல்லா என்கிற ஐடியிலிருந்து தோழி ஒருவர் youtube சேனலில் கமெண்ட் போட்டு நிலமங்கைக்கு அப்டேட் கேட்டார். அதைப் பார்த்ததும் உண்மையில் சற்று வியப்பாக தான் இருந்தது.


அதன் பிறகு தோழி வித்யா வெங்கடேசனும் கதைக்கான அப்டேட் கேட்கவும் மீண்டும் தொடரலாம் என்கிற எண்ணம் வந்தது.


ஒரு விதத்தில் இந்த கதை முடிவுக்கு வந்ததற்கு இவர்கள் இருவரும்தான் காரணம் என்று சொன்னால் அது மிகை இல்லை.


இந்த நேரத்தில் தோழியர் வித்யா வெங்கடேசன் மற்றும் நூர் இருவருக்கும் எனது நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.


இனி எது வந்தாலும் இந்த கதையை நிறுத்தாமல் எழுதி முடித்துவிட வேண்டும் என்கிற ஒரு உறுதியான எண்ணத்தில் தான் மறுபடியும் தொடர்ந்தேன்.


ஆனால், முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.


கடந்த ஜூன் மாதத்தில் வீட்டில், ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருக்குமே கோவிட் தொற்று ஏற்பட்டு பாடாய் படுத்தி விட்டது.


அதன் பக்கவிளைவாக மாமியாருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் உண்டானது.


அவர் வீடு திரும்பியதிலிருந்து தொடர்ந்து எனக்கு உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருந்தன. ஸ்கேனிங் எம்ஆர்ஐ என்று சோதித்து பார்த்ததில் overian cyst இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, hemoglobin வேறு மிகவும் குறைந்து போய், அதை சரி செய்து சென்ற வாரம் தான் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.


இத்துடன் கூட மழை, புயல், வெள்ளம், கரண்ட் கட், வைஃபை கட், இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையில் தான் இன்றைய பதிவை எழுதி முடித்தேன்.


எப்படியோ நிலமங்கைக்கு ஒரு வழியாக எண்டு கார்ட் போட்டாகிவிட்டது.


ஒரே சீராக எழுத முடியாமல் போனதால் விட்டுவிட்டு எழுதி முடித்திருக்கிறேன். கதை எந்த அளவுக்கு தொடர்ச்சியுடன், விறுவிறுப்பாக வந்திருக்கிறது என்பது எனக்கே புரியவில்லை. எனவே அதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


தொடர்ந்து எனக்கு ஊக்கம் அளித்து துணை நிற்கும் அன்பு வாசகர்கள் அனைவரின் காத்திருப்புக்கும் பொறுமைக்கும் எனது நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.


நட்புடன்


கிருஷ்ணப்ரியா நாராயண்.
25. மக்கள் சக்தி

நிதரிசனத்தில்… 


அவளறியாத கடந்த காலத்தை அறிந்த பிறகு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உணர்ச்சிக்குவியலாக சிலை போல அமர்ந்திருந்தாள் நிலமங்கை.


“இன்னும் என்ன மங்க?” என தாமு கவலையாகக் கேட்க, “எனக்கு பதிலா அங்கப் போன சத்யாவுக்கும், கதிருக்கும் மட்டும் ஒன்னும் ஆவம அவங்க நல்லபடியா இருந்திருந்தா, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம முழு நிம்மதி எனக்கு திரும்பக் கிடைச்சிருக்கும்!”


”என்னைக்காவது கதிரோட நெனவு வந்துட்டா, அன்னைக்கு எனக்கு தூக்கமே போயிடும் தெரியுமா தாமு? பாவம் சத்யா, என்னாலதான சாவார நெலமைக்கு போனான்? அவனுக்கு கண்டி எதுனா ஆயிருந்தா...” என அவள் வேதனையுடன் சொல்லிக்கொண்டே போக, “சத்யாவுக்கு என்ன? அவன் ரொம்ப நல்லாவே இருக்கான்! ஐ.பி.எஸ் முடிச்சிட்டு இப்ப ஏ.சீ.பியா சென்னைலதான் போஸ்டிங்ல இருக்கான்” என இடைபுகுந்தான் திரு.


 “அப்படியா, மெய்யாலுமா?” என அவள் மகிழ, “ஆமாம், பின்ன நான் என்ன பொய்யா சொல்ல போறேன்?” எனச் சிரித்தான்.


“அப்பறம், செத்தவன பத்தி தப்பா எதையும் சொல்லவேணாமேன்னுதான் உன்கிட்ட கதிர பத்தி சொல்லல. ஆனா, நீ இவ்வளவு மோசமா அவன நெனச்சு மனவேதனப்படும்போது என்னால சொல்லாமலும் இருக்க முடியல, மங்க!” என இழுத்தான் தாமு.


“என்ன தாமு சொல்ற?” என அவள் கலவரமானாள்.


“ஆமாம் மங்க, கூட இருந்தே குழிப்பறிக்கறதுன்னு சொல்லுவாங்க இல்ல, அதத்தான் அவன் உன்கூட இருந்தே செஞ்சிட்டு இருந்தான்” என்று சொல்ல, மேலும் அதிர்ந்து, “என்ன தாமு சொல்ற?” என்றாள்.


“பின்ன, அவங்கம்மா அன்னைக்கு தெருவுல நின்னு ஒனக்கு சாபம் உட்டுச்சே, அப்ப அது புளுவின மாதிரி, உம்மேல இருக்கற லவ்வாலதான் அவன் உம்பின்னால சுத்திட்டு இருந்தான்னு நெனச்சியா?” என்று குத்தலாகக் கேட்டவன், “அவனும், அந்த காக்காக்கொளம் ரமேஷும் கூட்டுக் களவாணிங்க! மொதல்ல இருந்தே, உம்பேர்ல இருக்கற நெலம்தான் அவனோட குறி.” 


”கண்ணப்ப நாயக்கர் பெத்த கேனையனுங்க, அவனுங்க குடுத்த துட்ட வாங்கிகினு நெலத்த எழுதிக் கொடுத்துடவும், அந்த ரமேஷ் எங்கப்பாவாண்ட வந்து, எங்க நெலத்துக்கு பேரம் பேசிக்கினு நின்னான்.”


”அதுவா கொடுக்கும்? அவன கழுத்த புடிச்சி வெளிய தள்ளிடுச்சு! அத மனசுல வெச்சுகினு கருவிக்கினே கெடந்தானுங்க.”


”எப்புடியும் நான் ஃபாரின்ல செட்டில் ஆகிட்டா, எங்கப்பா நெலத்த விக்க ஒத்துக்கும்ன்னு அவனுங்களுக்கு ஒரு நப்பாச!”


”அதான் ஒன்ன கட்டிகினு, உம்பேர்ல இருக்கற நெலத்த ஆட்டைய போட்டுட்டா, பின்னால இருக்கற எங்க நெலத்த ஈசியா அடிச்சு கோப்பா புடுங்கலாம்னு பிளான் பண்ணான் உன் சொந்தக்கார பய!”


”ஆனா அத பத்தி அப்ப எனக்கு எதுவுமே தெரியாது! நான் லீவுக்கு வரசொல்ல, எங்கப்பா எல்லாத்தையும் என்னாண்ட சொல்லிச்சு. வேலைய வுட்டுட்டு இங்கயே வந்துரு. பேசாம நம்ம மங்கைய ஒனக்குக் கட்டி வெக்கறேன்! நம்ம நெலத்தோட மதிப்பு தெரிஞ்ச பொண்ணு! அதுங்கூட சேந்து நிம்மதியா  வெவசாயத்த பாருன்னுச்சு, மங்க.”


”அன்னைக்கே அதும் பேச்ச நான் கேட்ருந்தா நல்லா இருந்திருக்கும்! ஆனா, ஒனக்காக மங்கய வேணா கட்டிக்கறேன், விவசாயமெல்லாம் எனக்கு தோது பட்டு வரதுன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்படி ஒரு பேயாட்டம் ஆடிடுச்சு! அதுங்கூட சண்ட போட்டு கோச்சுகினுதான் அமெரிக்கா போனேன்!” என்று அடுக்கிக்கொண்டே போக, அடப்பாவி என அவனைப் பார்த்து வைத்தாள். 


“நீ கதிர கட்டிக்கமாட்டன்னு சொன்னதுக்கு அப்பாலயும், உனக்கு புடிச்ச மாதிரி செஞ்சு ஒன்ன இம்ப்ரஸ் பண்ண முயற்சி செஞ்சுட்டே இருந்துச்சு அந்த பக்கி.”


”நீ எம்மங்கன்னு அதுக்குதான் தெரியாதே! என்னைகவது ஒருநாள் மனசு மாருவன்னு நம்பிட்டு இருந்துச்சு! நமக்கு நிச்சயம் ஆனதும், தோத்துப் போன காண்டுல இருந்தான்.”


”எங்கப்பாவ மெரட்டினவன சும்மா வுட்ருவனா! அமெரிக்காவுக்கு திரும்ப போவரதுகுள்ள அந்த ரமேஷ நாலு தட்டுத் தட்டி அடக்கிவெக்கணும் நெனச்சேன். அவன ஆழம் பாக்கத்தான் கோவிந்தன் மூலமா அவனுங்களுக்கு நெலத்த விக்கற மாதிரி ஒரு செட்டப் செஞ்சேன்.”


”அது மூலமா கொஞ்சம் பெரிய புள்ளிங்க கான்டாக்ட்ஸ் கெடச்சிச்சு. அப்பால” எனத் தயங்கியவன், “அந்த ரமேஷ் ஆளுங்க உந்தாத்தா கழுத்துல கத்தி வெச்சானுங்க இல்ல, அது கூட நான் சொல்லித்தான் செஞ்சாங்க, மங்க. என்ன மன்னிச்சிரு” என மேலும் பேச முடியாமல் தடுமாறினான்.


“இதெல்லாம் இனிமே பேசிக்கினு இருக்காத தாமு, முடிஞ்சது முடிஞ்சதாவே இருந்துட்டு போவட்டும்! கதிர பத்தி இன்னாவோ சொல்ல வந்த இல்ல அத மட்டும் சொல்லு” என்று அவள் அழுத்தமாக சொல்லிவிட, அவனிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.


“அப்ப, அங்க போக வர இருக்க சொல்ல, அந்த அல்லக்கை ரமேஷோட கூட கதிர ஒரு தரம் பார்த்தேன். ஒன்ன ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணவும் இதையே யூஸ் பண்ணி அந்த நேரத்துல ஒன்ன என் பேச்ச கேக்க வெச்சேன்.”


 ”நானே எதிர்பாரத விதமா அன்னைக்கு கதிர் அங்க வரவும், அவனுக்கும் ரமேஷுக்கும் இருக்கற கனெக்ஷன ஊர்ல சொல்லிருவேன்னு சொல்லி அவன மெரட்டி, நம்ம கல்யாணத்துக்குச் சாட்சிக் கையெழுத்துப் போட வெச்சிட்டேன். அப்ப ஊருக்குப் பயந்து வேற வழி இல்லாம அத செஞ்சாலும், நம்ம ரெண்டு போரையும் பழிவாங்க சரியான நேரத்துக்காகக் காத்துட்டு இருந்தான்.”


”தோதா அப்பன்னு பாத்து, திருடங்கைலயே சாவிய குடுத்த கதையா, உங்க பிரொடஸ்ட் பத்தி அவங்கிட்ட போய் சொல்லி தொலச்ச நீயி. அத வெச்சு அந்த ரமேஷோட சேந்து சரியா ஸ்கெட்ச் போட்டுட்டான்.”


”நம்ம ஸ்டேட் மொத்தமும் அங்கங்க போராட்டங்கள் வெடிக்க ஆரம்பிக்கவும், உங்க ஊர்வலத்துக்கு முறையான அனுமதி கேட்டு லெட்டர் கொடுத்ததுமே, அது அந்த ஊழல் அருள் காதுக்கு போயிடுச்சு.”


”அந்த ஊர்வலத்துல கலவரம் பண்ணச் சொல்லி, அவனோட மச்சான், கக்காக்குளம் ரமேஷ் கிட்ட பொறுப்ப கொடுத்துட்டான். அவனும், இந்தக் கதிரும் சேந்து, ஊர்வலத்துக்கு நடுவுல கொழப்பம் செஞ்சு கலவரத்துல வெடிக்க வெக்க, நாட்டு வெடிகுண்ட வாங்கிட்டு வந்து தண்ணி கேன் பேக்டரில வேச்சானுங்க.” 


”அது தெரியாம அன்னைக்கு அங்கப் போனதாலதான், எக்குத்தப்பா ஒரு குண்டு வெடிக்கவும், அதுல மாட்டிட்டு செத்தாரு, அவனுகளுக்கு கூஜா தூக்கின கோவிந்தன். அதுக்கு அப்பால, நல்லவன் மாதிரி அந்த ஊர்வலத்துல கலந்துட்டு, அந்தக் குண்ட வெடிக்க வெச்சதே கதிர்தான். இன்னொரு குண்ட அவம்மேலயே போட்டு அவன போட்டுத் தள்ளினான் காக்காகுளம் ரமேஷ்.” என்று சொல்ல, அவள் அதிர்ந்து போனாள்.


“பின்ன, ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சி, இவன் ஆள் மேலயே கைய வெச்சா சும்மா இருப்பானா!” என தாமு முடிக்க, ‘அப்பாடா, தன்னைச் சுற்றி என்னவெல்லாம் நடந்திருகிறது, எதையும் அறியாமல் கடிவாளம் கட்டிய குதிரை போல இருந்திருக்கிறோமே!’ என்றிருந்தது நிலமங்கைக்கு.


தொடர்ந்து, அவர்கள் செல்வத்தின் நிலத்தைக் கேட்டு அவனுக்கு அன்றாடம் பிரச்சினைக் கொடுத்துகொண்டே இருக்கவும், அதை ஒரு முடிவுக்கு கொண்டுவர, அந்தத் தண்ணீர் கம்பனியை செல்வத்தின் பெயரிலேயே மாற்றி எழுதிக் கொடுக்கச் சொல்லி, அந்த காக்காகுளம் ரமேஷைப் பிடித்து தங்கள் ஆட்களை வைத்து நார்நாராகக் கிழித்தான் தாமு, விக்ரமின் முகமூடியுடன். அந்தச் சமயத்தில்தான் இவனுக்கே இதெல்லாம் தெரிய வந்தது.


இதை இப்பொழுது இவளிடம் சொன்னால், இவனை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டாலும் விட்டுவிடுவாள் என்பதால், அதை மட்டும் சொல்லாமல் மறைத்தான்.


இந்த ஏழு வருடங்களாக அவள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்த குற்ற உணர்ச்சியும் முற்றிலும் நீங்கியதில் முழு நிம்மதியை உணர்ந்தாள் மங்கை. 


எப்பொழுதெல்லாம் அயோக்கியர்களின் கை மேலோங்கி, அக்கிரமம் தலைத்தூக்கி, மனித இனம் அவதிப்படுகிறதோ அப்பொழுதெல்லாம்தான் நல்லவர்களும் இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டப்படுகிறார்கள்.


ஊழலில் திளைக்கும் மோசமான அரசியல் தலைவர்கள், அவர்களை அடிமையாக்கிப் பிழைப்பு நடத்தி மனித வர்க்கத்தைச் சுரண்டும்  வியாபார முதலைகள், தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், சக மனிதர்கள் மேல் அன்போ, அக்கறையோ, இரக்கமோ எதுவுமே இல்லாமல் ஜாதிவெறி மதவெறி பிடித்துப்போய், அற்பப் பெருமைக்காக அவர்களுக்குக் கூழைக்கும்பிடு போடும் சுயநலத்தின் மொத்த உருவமாக மாறிப்போயிருக்கும் பெரும்பான்மையான கூட்டத்தை உள்ளடக்கியிருக்கும் மோசமான இந்தச் சமூகத்தில்தான், நெஞ்சுரம் கொண்ட அறச்சீற்ற உணர்வு நிரம்பிய ஒரு மிகப்பெரிய மனிதக் கூட்டமும் இருக்கிறது.


அதில் ஒரு அங்கமாக, தன் உயிரோடு கலந்தவனும் மாறிவிட்டதில் அப்படி ஒரு பெருமிதம் உண்டானது நிலமங்கைக்கு.


வியப்பு கலையாமல், "சத்தியமா இதையெல்லாம் என்னால நம்பவே முடியல! வாழ்க்கை இப்படி கூட மொத்தமா தலைகீழா மாறுமா என்ன?" என இருவருக்கும் பொதுவாகக் கேட்டு வைத்தாள். 


இதையே பலமுறை தனக்குத்தானாகவும் கேட்டுக் கொண்டாள்.


அவளுடைய இந்த வியப்பு கலந்த மகிழ்ச்சி அருகிலும் எதிரிலும் அமர்ந்திருந்த இரண்டு ஆடவர்களையும் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.


“முக்கியமா பேசணும்னு சொன்னீங்களே, ஊடால பூந்து தொல்ல பண்ண வேணாம்ன்னு சொல்லி கம்முனு இருந்தா, இப்போதைக்கு ஓய மாட்டீங்க போல! போதும், நிப்பாட்டிட்டு சாப்ட வாங்க” எனப் பொறுமை இழந்து அவர்களை வந்து அதட்டினார் செண்பகம்.


அவர் வார்த்தைக்கு மறுப்பேச்சு பேசாமல் எழுந்து அவருக்குப் பின்னால் சென்றனர் மூவரும்.


தடபுடலாக விருந்து தயாராகி இருக்க, எல்லோரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.


ஒருவழியாக தாமுவும் மங்கையும் அவர்களிடமிருந்து விடை பெற்று கிளம்ப, மங்கைக்குக் கொடுப்பதற்காக ஆசையுடன் வாங்கி வைத்திருந்த பரிசை செண்பகம் அவளுக்குக் கொடுத்தார்.


மறுத்துப் பேசாமல் அதைப் பெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பி வெளியில் வர, "நீ கவலையே படாத மங்க, எந்த ஒரு சின்ன மிஸ்டேக்கும் நடக்காம இந்தப் போராட்டத்த நாம நடத்தி முடிக்கிறோம்! வெற்றிகரமா அந்த ஆராட்டுத் தொழிற்சாலையை நம்ம ஊர விட்டு மொத்தமாக விரட்டி அடிக்கிறோம். ஆல் த பெஸ்ட்" என அவளை வாழ்த்தினான் திருவிக்ரமன்.


நெகிழ்ந்து போய், “தேங்க்யூ திருண்ணா” என்றாள் கண்களில் நீர் கோர்க்க.


“அப்படியே இவனையும் கொஞ்சம் பாத்துக்கோம்மா, இந்த பிரொடெஸ்ட் நல்லபடியா நடந்து முடிஞ்சு, நீ வூடு திரும்பற வரைக்கும், சோறு தண்ணி இல்லாம, தூக்கம் இல்லாம டென்ஷனா கெடக்கப் போறான்” என்று சொல்லிவிட்டு அவள் தலையசைக்கவும், “இந்த போராட்டத்த எப்படி சேஃபா நடத்தலாம்னு, நீயே ஒரு டூல்கிட்ட ரெடி பண்ணுடா, பாத்துட்டு நானும் தீபனும் எங்க ஐடியாச ஷேர் பண்றோம்! நம்ம சீ.எம் கிட்டயும் நேரடியா பேசிடலாம்” என்று தாமுவிடம் சொல்ல,


“ஓகேடா, பை” என்று அவனிடமிருந்து விடைபெற்று மங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பினான் தாமோதரன்.


*** 


 சண்டையும் இல்லை சமாதானமும் இல்லை, வீடு திரும்பியது முதலே தீவிர யோசனையுடனேயே அமர்ந்திருந்தான். 


காபி கலந்து வரக் கீழே செல்ல எத்தனித்தவளை, அதை செய்யக் கூட அனுமதிக்கவில்லை. தானே சென்று எடுத்து வந்தான். அதே போல அவளுடைய அப்பாவைப் பார்க்கச் சென்றபோதும் கூட, ஒட்டிக்கொண்டு கூடவே வந்தான்.


ஒரு நொடிக்கூட அவளைத் தனியே விடத் தயங்கும் அளவுக்கு அவளது பாதுகாப்பு குறித்து பயந்துபோயிருக்கிறான் என்பது புரிந்தது.


திரும்ப வந்ததும் நேராகப் போய் இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டுத்தான் மேலே வந்தார்கள்.


வந்ததும் வராததுமாகத் தன் மடிக்கணினியை எடுத்துவைத்துக் கொண்டு ஏதோ செய்யத் தொடங்கிவிட்டான்.


அவளுக்குமே அடுத்த நாளைக்கான பணிகளைப் பற்றி அவளுடைய குழுவினருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்க, அவனுக்கு முன்னால் வந்து அமர்ந்தபடி தன் மடிக்கணினியை உயிர்ப்பித்தாள்.


‘ஒளிச்சு மறச்சு செய்யும்போதே தெனாவெட்டாதான் செய்வா, இப்ப கேக்கவே வேணாம்’ என்று எண்ணியபடி, விழிகளை உயர்த்திப் பார்த்தவன், மீண்டும் வேலையில் மூழ்கினான். 


சிலநிமிடங்களில் மீண்டும் தலையை நிமிர்த்தி அவளை ஒரு பார்வை பார்க்க, இதழ்களில் சிறு புன்னகை படர உற்சாகமாக அவர்களுடன் சேட் செய்து கொண்டிருந்தாள். 


சிறு சிறு இடைவேளைகளில் இது மீண்டும் மீண்டும் தொடர, அவளது கவனம் சிதறியது.


அத்துடன் அந்த உரையாடலை நிறுத்திக் கொண்டு, மடிக்கணினியை மூடிவிட்டு அவனை நோக்கி வந்தவள், “நீயும் உருப்படியா வேலைய பாக்காம, என்னையும் பாக்க விடாம, எதுக்கு இப்புடி என்ன பாத்து மொறச்சிகினே இருக்க? நாளைக்கு என்ன செய்யலாம்னு வில்லன் மாதிரி எதாச்சும் பிளான் பண்றியா?” என்றபடி கோபமாக அவனது மீசையைப் பிடித்து இழுத்தாள்.


“அடிப்பாவி, ஒருத்தன் லவ்வு முத்திப் போயி ரொமான்டிக்கா லுக்கு வுட்டா, மொறைக்கரேன்னா சொல்ற!” என்றபடி அவளை இழுத்து தன் மீது சரித்தவன், “ஒளிவு மறைவில்லாம இம்மாந்தூரம் எல்லாத்தையும் உன்னாண்ட சொன்னதுக்கு அப்பாலயும் இப்புடி பேசறியே, நானில்லடி வில்லன்! நீதான் வில்லி! ராட்சசி!” என்று பதிலிக்குப் பதில் அவளது கன்னத்தில் கடித்துப் பழித் தீர்த்துக் கொண்டான்.


சிறு கூச்சத்துடன் அவனை விட்டு விலகியவள், “நாளைக்குக் கடைசி நேரத்துல, எதையும் செய்ய மாட்டல்ல தாமு” என சந்தேகத்துடன் இழுத்தாள்.


நியாயத்திற்கு அவனுக்குக் கோபம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தெனாலிராமன் பூனைக்குப் பால் வைத்ததைப் போல, அவன் அவளுக்குச் செய்த வினையின் மிச்சம் மீதம்தான் இது என்பது அவனது மனதுக்குப் புரியவே, தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.


“நிச்சயமா மாட்டேன் மங்க! இப்புடி ஒரு சந்தேகமே ஒனக்கு வேணாம்” என்றபடி தன் மடிக்கணினியை அவள் பக்கமாகத் திருப்பியவன், “ஒனக்காக மட்டும் இல்ல, இந்தப் போராட்டத்துல கலந்துக்கற ஒருத்தருக்குக் கூட எந்த ஒரு சின்ன அசம்பாவிதமும் நடக்காம இருக்க, என்னல்லாம் செய்யப் போறோம்னு பாரு” என முடித்தான்.


விக்ரம் சொன்னதுபோல அடுத்த நாள் தொடங்கி நடக்கவிருக்கும் போராட்டத்தில் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டிய பாதுகாப்பு வளையத்துக்கான ஒரு முழுமையான திட்டமிடல் அது.


முதல்வர் கோதண்டராமனிடம் பேசி, கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் ஒரு பெரும் பாதுகாப்புப் படையையே இறக்குவது.


பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமான சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியிலிருக்கும், பயிற்சிப் பெற்ற ஆட்களைக் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைப்பது. 


இந்தப் போராட்டம் தொடங்கி வெற்றிபெறும் வரை, அருட்பிரகாசத்தின் மகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அவரது கூட்டணி கட்சிக்கு சாதகமாக அவரைச் செயற்படவிடாமல் தடுத்து வைப்பது.


தேவைபட்டால், கசகசா நேஷனல் கட்சிக்கு எதிராக கோதண்டராமனையே இவர்களுடைய உண்ணாவிரதப் பந்தலில் அமர வைப்பது என்று இன்னும் சிலவும் திட்டமிடப் பட்டிருந்தது.


மற்ற எல்லாமே திருப்தியாக இருந்தாலும் “ஐயோ தாமு, அதுக்காக அந்தப் பொண்ண கடத்தப் போறீங்களா? இதெல்லாம் ரொம்ப அதிகப்படி ஆமாம்” என அதிர்ந்தாள்.


“த...ச்சீ! எதுக்கு இப்புடி ஓவர் ரியாக்ட் பண்ற! என்னவோ அவள கடத்தி வெச்சு கைய காலையா ஒடைக்க போறோம்! நம்ம ஆளுங்க கஸ்டடில விக்கியோட ரெசார்ட்ல ரெண்டு மூணு நாளைக்கு சொகுசா இருக்கபோறா அவ்வளவுதான்! அவ ஒருத்திக்காகப் பாத்தா இங்க பல உசுருக்கு உத்திரவாதம் இல்லாம போவும். தெரிஞ்சிக்க” என எரிந்து விழுந்தான்.


அதில் அவளது முகம் கூம்பிப்போய், “ஆமா, அந்தப் பொண்ணத்தான ஒனக்கு கல்யாணத்துக்குக் கேட்டதா சொன்ன? அப்புடின்னா அந்தளவுக்கு அவ உங்கூட குளோசா?” எனக் கேட்டாள் ஒரு மாதிரி குரலில்.


“மறுபடியும் எங்கிட்ட கடி வாங்கப்போற” என முறைத்தான்.


“ஓ, நீ மட்டும் அந்தக் கதிரு உம்மேல இருக்கற லவ்லதான் உம்பின்னால சுதினான்னு நெனசியான்னு கேக்கலாமா? நீ பேசினா சரி! நாம் பேசினா தப்பா?” என்றாள் குரலை உயர்த்தி.


பக்கென சிரித்தவன், “நாம் பேசினதும் தப்புதான்டீ, ஒத்துக்கறேன். அதுக்கு நீ வேணா என்ன ஒருதடவ கடிச்சிக்க” என்றான் கிண்டல் இழையோட.  “தாமு” என அவள் அவனை முறைக்க முயன்று தோற்றாள். 


நல்ல வேளை, அவர்கள் திட்டத்தின் முதல் காரியாமாக சிவதாண்டவம் மற்றும் காக்காக்குளம் ரமேஷ் இருவரின் கதையை முடிப்பது என்பதை டைப் செய்து அதை அழித்திருந்தாள்.


அதை மட்டும் அவள் பார்த்திருந்தால் இவனது மற்ற திட்டங்களும் பலனற்றுப் போயிருக்கும். அதை எண்ணி ஒரு ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தது அவனிடம்.


திடீரென அவன் மௌனமாகிவிடவே உள்ளுக்குள்ளே வருந்துகிறானோ என, “கவல படாத தாமு! போன தடவ மாதிரி இந்த தடவையும் அவனுங்களால துணிஞ்சு ஜனங்க மேல கை வெக்க முடியாது! அந்த மாதிரி நடக்கக் கூடாதுன்னு சொல்லித்தான், அமெரிக்கா, லண்டன், ஆஸ்த்ரேலியா, ஆப்பிரிக்கா, பிரான்ஸ், இந்தோனேஷியான்னு வெவ்வேற கன்ட்ரீஸ்ல இருந்து சோஷியல் ஆக்டிவிஸ்ட்ஸ் இங்க வந்துருக்காங்க! 


நான் ஒரு எழுத்தாளர்ன்ற மாதிரி, இதுல ஒரு மாடல், சயின்டிஸ்ட், பாப் சிங்கர் கூட இருக்காங்க.


அதனால மொத்த ஒலகத்தோட பார்வையும் இங்கதான் இருக்கும்! முன்ன செஞ்ச மாதிரி எதையாவது செய்ய முயற்சி செஞ்சாங்கன்னா, நம்ம நாட்டோட மானப் பிரச்சனையா மாறிப்போவும். அதனால மக்களோட வழிக்கு வந்துதான் ஆவணும்! என்ன சுலபத்துல உட்டுக் கொடுக்க மாட்டானுங்க! போராட்டம் கொஞ்சம் கடினமா இருக்கும்!


ஆனா, நம்ம முதல்வரையே துணைக்கு வெச்சு அதையும் நீ சுளுவா மாத்திட்டயே!” என தெளிவாக சொல்லி முடித்தாள் அவனை சமாதானம் செய்யும் முனைப்புடன்.


“ஓ” என்றான் வியந்த பாவத்தில்.


“அனா, இதுல ஒரு சின்ன பிரச்சன, தாமு! எங்க ஆளுங்களுகுள்ளயே யாரோ ஒரு துரோகி ஒளிஞ்சிருக்கானோன்னு சந்தேகமா இருக்கு! இல்லன்னா நாங்க அன்னைக்கு மகாபலிபுரம் வந்தது கூலிப்படை ஆளுங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்? அதோட, வெளிநாட்டுக் காரங்க மேல கை வெச்சா பெரிய பிரச்சனை ஆவும்... அந்த நாட்டு எம்பசிக்கெல்லாம் பதில் சொல்லனும்னு சொல்லி, பக்காவா திட்டம்போட்டுதான் எம்மேல குறி வெச்சிருக்கானுங்க. அதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு” என்றாள்.


“இல்லல்ல மங்க, உங்க ஆளுங்க யாரையும் சந்தேகப்படாத! ஆட்சி அதிகாரம் கைல இருக்கற திமுருல, நாட்டோட நலனுக்காக உருவாக்கின உளவுத் துறைய, இதுக்கெல்லாம் பயன்படுத்தறானுங்க! அதனாலதான், நீங்க எல்லாரும் இந்க வந்து எறங்கறதுக்கு முன்னாலயே, இங்க இருக்கற கூலிப்பட நாயிங்க வரைக்கும் தகவல் வந்துருக்கு. இனிமேல எவனாலயும் உங்க யாரையும் ஒன்னும் செய்ய முடியாது! நியாயத்துக்காக நீங்க முன்னேடுக்கபோற இந்த போராட்டம் வெற்றியிலதான் முடியும்!” என்று சொல்லி நிலமங்கைக்குள் நிம்மதியை விதைத்தான் அவளைத் தன் இதயத்தில் சுமக்கும் தாமோதரன்.


*** 


அதிக பரபரப்பில்லாமல் அடுத்த நாள் அமைதியாய் விடிந்தது.


துயில் கலைந்த பின்னும் கூட தாமுவின் இறுகிய அணைப்பிலிருந்து விடுபட மனமில்லாமல் அவனுடைய மார்பினில் முகம் புதைத்து மௌனமாய் படுத்திருந்தாள்.


காற்று புக இடமளிக்கா கண்டிப்பான அணைப்பு...


காமமில்லா அணைப்பு... 


கரிசனம் நிரம்பிய அணைப்பு...


‘விட்டு விலக முயலாதே!’ எனும் கட்டளையான அணைப்பு... 


காவல் காக்கும் கடினமான அணைப்பு...


காலம் காலமாக அவள் எதிர்பார்த்து ஏங்கித் தவித்த அவளது அன்னையின் அணைப்பு!


இரவு முழுவதும் அவளைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்த அவனது அணைப்பே, அன்று அவன் சொன்னது போல அவளது உயிர் அவனுக்கே சொந்தம் என்பதை அவளுக்கு உணர்த்தியது.


அவனது அசைவில், அவனது உறக்கம் கலைந்ததை உணர்ந்தவள், “தாமு, இப்பவாச்சும் என்ன வுடு” என்றாள் சிணுங்கலாக!


“மதியத்துக்கு மேலதான நீ அங்க போவனும்! மண்ணுளிப் பாம்பு மாதிரி உருளாம இன்னும் கொஞ்சநேரம் பேசாம தூங்குடி” என்ற அதட்டல் வந்தது.


இந்த நேரத்துக்கு இது இதம் கொடுத்தாலும், இருவருக்குமே அவனது இந்த ஆதிக்கம் எந்த ஒரு சூழலிலும் நன்மையைக் கொடுக்காது என்கிற ஒரு குரல் அவளுக்குள் ஒலித்தது.  


“தாமு, ரேனவபிள் ரிசோர்சஸ் பத்தி படிச்சிருக்க இல்ல!” என்று கேட்டாள், எதையோ விளங்க வைக்க முயலும் தொனியில். 


ஓய் பிரொஃபசர், தொணதொணன்னு பேசிப் பொழுதுவிடிய பாடம் நடத்தாதடீ” என்றான்.


“தாமு!” என்கிற அவளது செல்லச் சினுங்கலில், “ப்ச்... தெரியுன்டீ சொல்லு” என்றான் சலிப்பாக.


“நம்ம பூமிய மாதிரியே பெண்களும் கூட தன்னைதானே மறுசுழற்சி செஞ்சுக்கறவங்கதான், தாமு!”


“ஓஹோ”


“ம்ம்... ஆமாம்... நாலு கால்ல நடந்துட்டு இருந்த மனித இனம் என்னைக்கு ரெண்டு காலுல நடக்க தொடங்கிசோ, அப்பதான் மனுஷ பொண்ணுங்களோட பிரசவம் சிக்கலாச்சு! அதனால அவங்களால வேட்டைக்குப் போக முடியாம போச்சு! ஒரு ஆணோட துணை ரொம்ப அவசியமா தேவப்பட்டுச்சு!


ரொம்ப தொலவு பயணம் செஞ்சு ஆண் வேட்டைக்குப் போனான்! ஒரே எடத்துல இருந்து பெண் புள்ளகுட்டிங்கள கவனிக்க ஆரம்பிச்சா! அப்ப ஒரு பொண்ணுதான் மொதமொதல்ல நெலத்த பயன்படுத்தி விவசாயம் செய்ய கத்துகிட்டா!


அந்த விவசாயம் மனுஷங்க மனசுல சுயநலத்தையும் பேராசையையும் கொழுத்துவிட்டு எரிய வெச்சுது!


விவசாயம் செய்யற நெலத்தயும், விவசாயம் தெரிஞ்ச பொண்ணுங்களயும், தங்களோட சொந்த உடைமையா வெச்சுக்கற போட்டில அங்களுக்குள்ள பெரிய பெரிய சண்டைகள் வரத் தொடங்கிச்சு! அதனால ஆண்கள் ரெண்டையுமே அடிமைப்படுத்த ஆரம்பிச்சாங்க!


ஒரு வரைமுறை இல்லாம போய் அது இப்ப நம்ம தலைமுறைல ரொம்ப கேடுகெட்ட நெலைய எட்டிடுச்சு!


அனா, ஒரு நிலமும் சரி, பொன்னும் சரி, சுதந்திரமானவங்க! 


நியாயப்படி பாத்தாக்க, எல்லா வளத்தையும், நமக்கு உணவையும் அள்ளி அள்ளிக் கொடுக்கற நெலத்த மொறையோட பயன்படுத்தி நாம வாழலாமே தவிர அதைச் சொந்தமாக்கி சுரண்டி சுரண்டி அதோட மறுசுழற்சிய மொத்தமா அழிக்கக் கூடாது!


நம்மோட அடுத்த சந்ததிக்கு நம்ம பூமிய பத்திரமா ஒப்படைகணும்ன்ற பொறுப்புணர்வு இல்லாம, பிளாஸ்டிக் குப்பைகளையும், இரசாயனங்களையும் கொட்டிக் கொட்டி நம்ம பூமிய மலடாக்கிட்டோம்.


இந்த ஒலகத்துல மனுஷன் மட்டும் வாழ்ந்தா போதும்னு... காடுகள அழிச்சு, காடு வாழ் உயிரினங்கள அழிச்சு, நீர் வாழ் உயிரினங்கள அழிச்சு, தண்ணிய பாழாக்கி, காத்தைப் பாழாக்கி, மாசை உண்டாகி, நம்ம பூமியோட வெப்பத்த அதிகப்படுத்தி வெச்சிட்டோம்!


அதே மாதிரிதான் பெண்ணும். 


ஒரு பொண்ணுகுன்னு தனிப்பட்ட ஆசாபாசங்கள் இருகுன்றத புரிஞ்சுக்காம, கல்யாணம்ன்ற பேர்ல ஒரு ஆண், தன் வாரிசைப் பெத்துக் கொடுக்கறதுக்காக மட்டும், அவள மொத்தமா உரிமை கொண்டாடறதும் நியாயம் இல்ல! அவளோட விருப்பு வெறுப்புகளுக்கு மரியாத கொடுத்து, அவளைச் சுதந்திரமா வாழ விடணும்!


அந்தப் புரிதல் இல்லாம போனதாலதான், இன்னைக்கு ஆண் பெண் உறவுன்றது ரொம்ப சிக்கலான விஷயமா போச்சு! 


இத ஏன் இப்ப சொல்றேன்னு சொன்னா, நீ என் மேல செலுத்தற அன்பும் சரி, ஆதிக்கமும் சரி, என்ன ஒரு வட்டத்துக்குள்ள கட்டிப் போடக் கூடாது” என்றாள் திட்டவட்டமாக.


“ஒன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியுமா தெரியல! ஆனா என் அன்பு, உம்மேல ஆதிக்கம் செலுத்தாது மங்க! இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியல!” என்றவனை ஆதுரமாக அணைத்து, “யூ ஆர் தி பெஸ்ட்... தாமு! ஐ லவ் யூ!” என அவனது நெற்றியில் இதழ் பதித்தாள். 


பதிலுக்குப் பலமடங்காக அதை அவளுக்குத் திரும்பக் கொடுத்தான் தாமோதரன்! 


அன்று மதியம் வீட்டிலிருந்து அவள் புறப்படும் சமயம், போராட்ட களத்திற்கு அவளை அழைத்துச் செல்வதற்காக க்கிளம்பித் தயாராக நின்றான் தாமோதரன்!


தானும் தயாராகி வந்தவள், “எனக்கு ஒன்ன எவ்வளவு புடிக்கும்னு எனக்கு வார்த்தையால சொல்லத் தெரியல, தாமு! அதனாலதான், அத சொல்ற மாதிரி ஒரு சின்ன கிஃப்ட்!” என்று சொல்லி வெல்வெட்டாலான ஒரு சிறிய சுருக்குப் பையை அவனது உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினாள்.


ஆவலுடன் அதை அவன் திறந்து பார்க்க, சிவப்பு நிறத்தில் பவழ மணிகளைப் போன்ற ஏதோ ஒன்று ஒரு கைப்பிடி அளவுக்கு அதில் இருந்தன.


“இன்னாதிது, மங்க?” என அவன் வியப்புடன் கேட்க,


“இத உன் ஆயாவான்ட காமிச்சு கேளு! இன்னான்னு சொல்லும்! ஆனா இப்ப இல்ல! நான் திரும்ப வந்ததுக்கு அப்பால! இல்லனா நீ அங்க வந்து எம்பக்கதுலயே ஒக்காந்துருவ” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்! 


மலர்ந்த புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்து சென்றான் தாமோதரன்.


***  


ஏற்கனவே நெஞ்சுரம் கொண்டவள், கூடவே தாமோதரன் இருக்கும் துணிவில், அநீதிக்கு எதிரான அந்த அறப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினாள் நிலமங்கை! 


அந்த மக்கள் போராட்டத்தை உலகமே வியந்து பார்த்தது!


அவர்கள் எதிர்பார்த்ததை விட துரிதமாக அவர்கள் கூட்டு முயற்சிக்குப் பெரும் வெற்றி கிட்டியது! அதாவது மக்கள் சக்தி அங்கே நின்று ஜெயித்தது!


போராடி வென்ற மக்கள் கூட்டத்தின் சந்தோஷச் சாரலில் திளைத்துக் குளிர்ந்து போனாள் நிலமங்கை!


வெற்றி பெற்ற மங்கையவளின் மனதை வெற்றிக் கொண்ட தாமோதரனும் மகிழ்ந்து திளைத்தான்.

***

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page