24. பரிகாரம்
நினைவுகளில்…
மங்கையை சமாதானப்படுத்தி இயல்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இனி நடவாத காரியம் என்பது நன்றாகவே புரிந்து போனது தாமோதரனுக்கு.
கண் எதிரே பார்த்த உயிர் பலிகள் அவனை உருக்குலைத்திருந்தது, குறிப்பாக கதிரின் மரணம். அதுவும் அவனுடைய அம்மா நிலமங்கையைப் பேசிய பேச்சைக் கேட்டதற்குப் பிறகு குற்ற உணர்ச்சியில் குன்றிப் போயிருந்தான்.
அதுவும், அவளை அந்த அளவுக்கு வற்புறுத்தி நடத்திக்கொண்ட அந்தப் பதிவு திருமணத்தை, அவள் சொன்னது போல இலகுவாக முறித்துக் கொள்ள அவனுக்குத் துளி அளவு கூட மனமில்லை.
இப்படி ஒரு நிலையில் அமெரிக்காவுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்றாலும் அதற்கும் கூட மனம் வரல்லை.
பதிவு செய்திருந்த விமான பயணச் சீட்டுகளை இரத்து செய்துவிட்டு அடுத்து என்ன என்பது புரியாமல் பித்து பிடித்த நிலையில் இருந்தான்.
இதே நிலையில் உள்ளூரிலேயே அதுவும் அவளைக் கண்களால் பார்த்துக் கொண்டே, சுற்றி நடப்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தால் முற்றிலுமாகப் புத்தி பேதலித்து விடும் என்று தோன்ற, இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான உடைகளை ஒரு பையில் திணித்து எடுத்துக்கொண்டு காரிலேயே பெங்களூரு சென்று விட்டான்.
அங்கே ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கி, பழைய நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க, அப்பொழுதும் கூட மனம் தெளிவடையவே இல்லை.
நான்காவது நாள் பின்மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து மூச்சு முட்டும் அளவுக்கு மது அருந்திவிட்டு விடுதி அறையில் வந்து படுத்தவனுக்கு, அவ்வளவு போதையிலும் கூட உறக்கம் வந்த பாடில்லை. மனம் முழுவதும் நிலமங்கையின் நினைவால் பொங்கி வழிய, அவளுடைய முகத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறி மனதிற்குள் மூண்டது. வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல், அடுத்த நொடியே அறையை காலி செய்துவிட்டு, வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு ஊர் நோக்கிப் பயணப்பட்டான்.
எப்படி அவ்வளவு தூரம் வாகனத்தைச் செலுத்தி வந்தான் என்பதே தெரியவில்லை, கிட்டத்தட்ட பொன்மருதத்தை நெருங்கிவிட்ட நிலையில், கடைசியாக மங்கை பேசிய பேச்சுகள் நினைவில் வர, அதுவும், ‘இந்தக் கல்யாணம் கரமாந்தரம் எல்லாம் நமக்குள்ள என்னைக்குமே ஒத்து வராது! இதுதான் நான் ஒன்ன பாக்கறது, பேசறது எல்லாமே கடைசியா இருக்கணும்! இதுக்கு அப்பால நீ, ஃபோனுலையோ, இல்ல யார் மூலாமா தகவல் சொல்லிவிட்டோ, எந்த விதத்துலயும் என்ன காண்டாக்ட் பண்ணவே கூடாது! இது உங்கம்மா மேல சத்தியம்!’ என அன்று அவள் சொன்னது மூளையில் உரைக்க, அவளது ஆணையை மீறும் தைரியம் சுத்தமாக வடிந்துபோனது. அடுத்த நொடியே கண்கள் இருட்டிக் கொண்டு வர என்ன நடக்கிறது என்பதே புரியாமல் தன் கட்டுப்பாட்டை இழந்தான் தாமோதரன்.
வாகனம் சுற்றிச் சூழன்று, மேடு பள்ளங்களில் இறங்கி, எதிலோ மோதி நின்றது.
போதைத் தெளிந்து அவன் கண்விழித்து பார்க்கும் பொழுது பகலவன் நடுவானத்திற்கு வந்திருந்தான்.
கண்கள் கூச தான் இருக்கும் இடத்தை அவன் ஆராய, ஒரு சிறிய அறையில் இருந்த மர பெஞ்ச் ஒன்றில் தான் படுத்திருப்பது தெரிந்தது. தன் தோள்பட்டையிலேயே முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டு மெதுவாக அவன் எழுந்து அமர, ஒரு கையை அசைக்கவே முடியாத அளவுக்கு வலி உயிர் போனது. நெற்றியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. பெயருக்கு, யாரோ முதலுதவி செய்திருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தான்.
தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றவன் அறையை விட்டு வெளியில் வந்து பார்க்க, அது ஒரு செங்கல் சூளை என்பது புலப்பட்டது. அங்கேயே ஓரமாக நிருத்தி வைக்கப்பட்டிருந்த அவனது காரையும் பார்த்தான்.
அங்கே அமைந்திருந்த சிறிய அலுவலக அறையில்தான் தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது வரை விளங்க, தன்னை இங்கே தூக்கி வந்து இவ்வளவு பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருப்பவர் யார் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் பார்வையைச் சுழற்றினான்.
சரியாக அதே நேரம் அந்தச் சூளையின் பெரிய கேட்டை திறந்து கொண்டு கையில் ஏதோ உணவு பொட்டலத்தைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தான் விக்ரம், அதாவது திரு.
தாமு எழுந்து நிற்பதைப் பார்த்ததும் வேகமாக அவனை நெருங்கி வந்தான்.
வியப்பின் உச்சிக்கே போனவனாக, "ஹே விக்கி நீயா, நீ என்னடா இங்க?" என்று படபடத்தான் தாமு.
அவனுடைய பார்வையோ எரிச்சலுடன் இவன் மீது படிந்தது.
அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், "கொஞ்சமாவது அறிவு இருக்காடா ஒனக்கு. படிச்சவந்தான நீயி!? ட்ரங்க் அண்ட் டிரைவ் தப்புன்னு ஒனக்கு தெரியாது! நல்லவேள, நேத்து நடந்த ஆக்சிடென்ட்ல ஒனக்கு பெருசா எதுவும் ஆவல!
திமிரு பிடிச்சு நீ செஞ்ச தப்பால அப்படியே ஏதாவது நடந்துருந்தாக் கூட உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்க மாட்டேன்!
ஏன்னா யாராவது ஒரு அப்பாவி மேல நீ கார மோதி அவனுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா அத சரி செய்யத்தான் முடியுமா? இல்ல ஆயுசுக்கும் ஒன்னால நிம்மதியா இருக்கத்தான் முடியுமா?" என்று தன் ஆத்திரம் மொத்தத்தையும் அவன் மீது கொட்டினான்.
"உண்மதான் விக்கி, நம்மோட கவனக்கொறவால மத்தவங்க பாதிக்கப்பட்டா, அதோட வலிய ஆயுசுக்கும் மறக்க முடியாதுதான். சரியாதான் சொல்ற" என்றவன், சுற்றுப்புறம் மறந்து தன் முகத்தைப் பொத்திக்கொண்டு, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான்.
உண்மையில் இதை எதிர்பார்க்கவில்லை திருவிக்ரமன். அதிர்ந்து போனவனாக, "சரி உடு தாமு, ஏதோ கோவத்துல பேசிட்டேன்! இனிமேல் இப்படி செய்யாத" என்று இறங்கி வந்தான்.
அப்பொழுதுதான் விக்ரமின் தோற்றத்தையே கவனித்தான் தாமோதரன்.
கசங்கிய உடை அணிந்து சவரம் செய்யாத தாடியுடன், இப்படி ஒரு கோலத்தில் அவனைப் பார்க்கவே சகிக்கவில்லை.
"என்னடா இப்படி இருக்க? அதுவும் இங்க என்ன செஞ்சுட்டு இருக்க?" என்று கேட்டான் அக்கறையுடன்.
முதலில் சற்றுத் தயங்கினாலும், "நாலு நாளைக்கு முன்னால நடந்த கலவரத்த பத்தி ஒனக்குதான் தெரிஞ்சிருக்குமே!" என்று திரு கேட்க, தயக்கத்துடன் தலையசைத்தான்.
"அத ஆர்கனைஸ் பண்ணதே, நான் தொடங்கி நடத்திட்டு இருக்கிற இயக்கத்த சேர்ந்தவங்கதான்" என்று தொடர, மங்கை திருவைப் பற்றி சொன்னது நினைவில் வரவும் அதிர்ந்தவன்,
"அப்ப, திருன்னு யாரையோ சொல்லிட்டு இருந்தாங்களே" என இழுத்தான் தாமு.
"ப்ச், நாந்தானடா திரு, ஃபிரெண்ஸ் சர்கிள்ள மட்டும்தான் இந்த விக்கி கொக்கி எல்லாம்" என்றான்.
"ஓஓஓஓ" என வியந்த தாமுவுக்கு அவனுடைய கடந்த காலம் மொத்தமுமே தெரிந்திருக்க, " இப்ப எனக்கு ஓரளவுக்கு புரியுதுடா… தேங்க் காட், ஒனக்கு எதுவும் ஆகல" என்றான், ஆசுவாச பெரும்மூச்செறிந்து.
"ஆனா என்னால அப்படி நிம்மதியா நெனைக்க முடியல, தாமு. அப்படி ஏதாவது நடந்திருந்தா கூட நான் ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பேன்! ஞாயத்துக்காக போராட என்கூட வந்து நின்னவங்க நிறைய பேர் என் கண்ணெதிருலயே குண்டடிப்பட்டுச் செத்துப் போனாங்கடா. அவங்களுக்கான நீதிய தேடாம இப்படி இங்க வந்து அசிங்கமா தலைமறைவா ஒக்காந்து இருக்கேனே, இதைவிட கேவலம் இருக்க முடியுமா?" எனக் கேட்டான் வேதனையுடன்.
"என்னடா இப்படி பேசற?" என்று தாமு அதிர,
"ஆமான்டா, உண்மையத்தான் சொல்றேன்! என்ன நம்பி வந்த கூட்டத்த ஏமாத்திட்டேன்! ஆட்சி அதிகாரம் கைல இருக்கறதால, பிரச்சன செய்வானுங்க, போலீச வுட்டு கண்ணீர் புகை குண்டு அடிப்பானுங்க, தண்ணிய பீச்சி அடிச்சு கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்வானுங்கன்னுதான் நெனைச்சேன்! ஆனா, காக்கா குருவியைச் சுட்டுத் தள்ற மாதிரி, அப்பாவி ஜனங்கள தொரத்தி தொரத்தி இப்படி துப்பாக்கியால சுட்டுக் கொல்லுவானுங்கன்னு நான் சத்தியமா நெனச்சுக் கூட பாக்கலடா. அதோட முடியல! மிச்சம் மீதி இருந்தவங்க எல்லாரையும் அப்படியே கூண்டோட கைது பண்ணி தூக்கிட்டுப் போயிட்டானுங்க.
ஆனா எங்க இயக்கத்த சேர்ந்த ஆளுங்க சில பேர் போலீஸ் கைல சிக்காம என்ன கூட்டிட்டு வந்து இங்க அடைச்சு வெச்சுட்டாங்க.
அந்தப் போராட்டத்துல கலந்துட்ட அப்பாவி ஜனங்களுக்குச் சட்டரீதியான பிரச்சனைகள் வரும்னு சொன்னா, என்ன மாதிரி முக்கிய தலைங்களுக்கு உயிருக்கே ஆபத்தா போனாலும் போகும்ன்ற பயம் தான்!
கைது செஞ்சவங்கள எங்க எப்படி வச்சிருக்காங்கன்னு கூட தெரியாத நிலைமைதான் இப்ப வரைக்கும் இருக்கு. இதுல நான் கண்டி அவங்க கைல சிக்கி இருந்தா நான் கைதானது கூட யாருக்கும் தெரிஞ்சிருக்காது! கொன்னு, கலவரத்தில் செத்ததா கணக்கு காமிச்சு ஜிஹெச் மார்ச்சுவரில பொணத்தோட பொணமா என்ன தூக்கிப் போட்ருப்பானுங்க” என்றான் நிலைமையின் தீவிரத்தை விளக்கும் விதமாக.
ஆடித்தான் போனான் தாமு.
"உங்க அப்பா செத்துப் போனதுக்கு அப்பால, உன்னோட தங்கச்சியையும் தொலைச்சிட்டு, என்னைக்காவது ஒரு நாள் அவள பாத்திரமா அவங்க முன்னால கொண்டுவந்து நிறுத்துவன்ற நம்பிக்கையோடவே வாழ்ந்துட்டு இருக்கற உங்க அம்மாவுக்காகவாவது நீ நல்லபடியா இருக்கணும்டா" என்று தழுதழுத்தான்.
"அது மட்டும் இல்ல, இங்க நடந்த அநியாயத்துக்கு நீதி கிடைக்கிற வரைக்குமாது நான் நல்லபடியா வாழனும்னு நினைக்கறேன் தாமு" என்றான் வைராக்கியத்துடன்.
பிறகு கொண்டு வந்த உணவைப் பிரித்து வைத்து இருவருமாகச் சாப்பிட்டபடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். பேச்சினூடே மங்கையைப் பற்றிய அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டான் தாமு.
தான் அவளுக்குச் செய்த தவறுகளுக்கெல்லாம் பாவ மன்னிப்பு கேட்பது போல் அனைத்தையும் சொல்லி முடித்திருக்க, தவறை உணர்ந்து பேசுபவனை அதற்கு மேல் ஏதும் சொல்லி வருத்த மனமில்லாமல் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான் திரு.
ஒருவிதத்தில் மங்கையின் பக்கமிருந்த நியாயம் அவனுக்கு முழுவதுமாக புரிந்து போக, ‘கடைசி நிமிடத்தில் இப்படி காலைவாரி விட்டுவிட்டாளே’ என அவள் மீதிருந்த சிறு வருத்தமும் மறைந்து போனது.
"இந்த மங்க பொண்ண பார்க்கும்போதெல்லாம், நிலா குட்டி மட்டும் இப்ப எங்க கூட இருந்திருந்தா இவள மாதிரிதான் இருப்பான்னு தோணும்!" என்று மட்டும் சொன்னான் மனதிலிருந்து.
அந்த நொடி, ஏதோ ஒரு விதத்தில் மங்கைக்கு செய்யும் பிராயச்சித்தமாக, திருவுக்குத் துணை நிற்க முடிவு செய்தான் தாமோதரன்.
அதன் பிறகு தன்னுடைய நண்பன் ஒருவனை இருசக்கர வாகனத்தைக் கொண்டுவரச் சொல்லி அவனைப் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான் திரு.
தாமுவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க அதற்கான வைத்தியம் பார்த்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
அதற்குப் பின்பு அவர்களுடைய சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது.
***
மங்கை சொன்னது போல அவளை எந்த விதத்திலும் அணுக முயற்சி செய்யவில்லையே தவிர அவளது தினசரி செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டே தான் இருந்தான் தாமோதரன்.
வேலுவின் வைத்தியத்திற்காகப் பணத்திற்கு அவளுடைய நிலத்தை விற்கும் முடிவுக்கு அவள் வந்தது தெரியவும், எந்த நிலையிலும் அந்த நிலத்தின் உரிமை அவளுடைய பெயரிலிருந்து மாறவே கூடாது என்கிற எண்ணம் மட்டும் வலுப்பெற்றது.
என்ன சிந்தித்தும் வேறு யோசனை தோன்றாமல் போக, செல்வத்தின் மூலம் அவளுக்குப் பணம் கொடுத்ததும் இவன்தான். அது பற்றி மங்கைக்குத் தெரியாமலும், கவனமாகப் பார்த்துக் கொண்டான்.
அதேபோல மேல் படிப்பு படிக்க அவளுக்குப் பணம் ஒரு தடையாக இருப்பது தெரிய வரவும், நேரடியாக அவளுக்கு ஸ்பான்சர் செய்ய அவளுடைய வாக்கு தடுக்க, திருவின் உதவியை நாடினான்.
அப்பொழுதுதான், இவர்களுடைய போராட்டத்திற்குப் பெரிதும் உதவி செய்த தீபப்பிரகாசனை தாமுவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் திரு.
காரணம், பெண்களின் படிப்புக்காக இது போன்ற பல உதவிகளைச் செய்து கொண்டிருந்தான் தீபன்.
அவன் ஏற்படுத்தியிருந்த அறக்கட்டளைக்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாகக் கொடுத்து, மறைமுகமாக அவளது கல்விக் கட்டணங்களைத் தானே ஏற்றுகொண்டான்.
அந்த சமயம்தான், தீபனும் திருவைப் போன்றே, ஆட்சி அதிகார துஷ்பிரயோக அடக்கு முறைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்து, இந்த மூன்று பேருக்குள்ளும் வலுவான கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்டன.
இடையில் வந்த இந்த ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தாலொழிய விடிவு காலம் பிறக்காது என்பது புரிய, அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர்.
அதன் முதல் படியாக, தீபனின் வழிகாட்டியான காவல் துறை அதிகாரி திவ்யாபாரதியின் மூலமாக முன்னாள் முதல்வர் கோதண்டராமனை நேரில் சந்தித்தனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக இருந்தவர் அவர். மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர். கட்சியில், கூட இருந்தவர்களே குழிப் பறித்ததில், அவர் முன்னெடுத்த பல மக்கள் நலத்திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. அதனால் மக்களிடம் ஒரு கசப்புணர்வு உண்டாகிப் போக அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வி கண்டார்.
மத்தியில் அமைந்த ஆட்சியும் இவர்களுக்கு சாதகம் இல்லாமல் போக, அவர்களுடன் சேர்ந்து எதிர் கட்சிகள் செய்த பொய் பிரச்சாரத்தால் அடுத்த தேர்தலிலும் தோல்வியடைந்தார்.
போதாத குறைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் கசகசா நேஷனல் கட்சி, தங்களுக்கு சாதகமான ஒருவரைப் பதவியில் வைக்கும் முனைப்புடன், அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த ம.ச.ம.ச மாநில கட்சியில் குழப்பம் விளைவித்து செய்த சதியால் முதல்வரானவர்தான் ஊழலின் மொத்த உருவமான அருட்பிரகாசம்.
அருட்பிரகாசத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக… நாட்டிற்குள் இப்படிப்பட்ட துப்பாக்கி சூடு போன்ற கேவலமான சம்பவங்களைக் கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி அவர்கள் அரங்கேற்றினார்கள்.
எந்த வித நவீன சித்தாந்தகளும் இல்லாமல் இது போன்றே தொடர்ந்தால் அடுத்த முறையும் கூட கோதண்டராமனால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பது புரிந்து, அவரை வெற்றி பெற வைக்க பலவாறான மூலோபாயங்களை திருவிக்ரமனும் தாமோதரனுமாகச் சேர்ந்து திட்டமிட்டு வைத்திருந்தனர்.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய இத்தகைய சித்தாந்தங்களைப் பற்றி கோதண்டராமனிடம் பேசிப் புரிய வைத்து, தங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்க, அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
தீபப்பிரகாசனின் செயல்பாடுகள் வேறு விதமாக இருந்ததால், அந்தச் சந்திப்பிற்குப் பிறகு இவர்கள் இருவரையும் முன்னிறுத்தி விட்டு அவன் ஒதுங்கிக் கொண்டான். தேவையான பொழுது தேவையான உதவிகளைச் செய்யவும் அவன் தயங்கியதே கிடையாது.
அதன் பின்வந்த இரண்டு ஆண்டுகள் ஊன் உறக்கம் இன்றி கொதண்டராமனின் வெற்றிக்காக இருவரும் பாடுபட்டனர்.
பட்டபாட்டின் பயனாக அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் கிட்டிவிட, கொஞ்சம் கொஞ்சமாக சூழல் இவர்களுக்கு சாதகமாக மாறிக் கொண்டிருந்தது.
மீண்டும், இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு, ஆளும் கட்சி மூலமாகவே நீதிமன்றம் சென்றனர்.
ஒரு முன்னாள் நீதிபதியின் தலைமையில் அதற்கான விசாரணை கமிஷன் அமைக்கப்பெற்றது.
அதற்கான விசாரணை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் அருட்பிரகாசம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கைக் காண்பிக்க, அவர் குற்றச்சாட்டை இவர் மீது திருப்ப, இப்படியாக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான் அருளுடைய மைத்துனன் சிவதாண்டவம் மூலமாக அவருக்கு உதவி செய்வது போல அவர்கள் கட்சிக்குள் ஸ்டாட்டர்ஜிஸ்ட்டாக நுழைந்தான் தாமோதரன்.
கோதண்டராமனின் ஸ்டாட்டர்ஜிஸ்ட் விக்ரம் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாக தெரிந்திருக்க, தாமோதரனைப் பற்றி யாருக்கும் தெரியாது. எனவே, வாதாபி வில்வலர்களைப் போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதை தங்களுக்கு சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்.
அதன்பின், அருட்பிரகாசத்தின் அருகிலேயே இருந்து கொண்டு அவருடைய ஒவ்வொரு ஊழல்களாகக் கண்டுபிடித்து அதைக் கொண்டே அவர் மீது வழக்குத் தொடுத்து சிறைக்குள்ளே கொண்டு வந்தும் உட்கார வைத்தாயிற்று.
ஓரளவுக்கு எல்லாமே நினைத்தபடி நடந்து கொண்டிருக்க, வேண்டுமென்றே ஆளும் கட்சியைச் சீண்டுவது போல, கிடப்பில் போட்டு விட்டிருந்த அந்த இரசாயன தொழிற்சாலையைத் தொடங்கும் பணியை மீண்டும் தூசித் தட்டியது அராட்டு கெமிக்கல்ஸ் நிறுவனம், கசகசா நேஷனல் கட்சியின் பக்க பலத்துடன்.
இப்படி ஒரு சூழ்நிலையை கருவியாக்கி நிலமங்கையை இங்கே இழுத்துவந்து தாமோதரனையும் அவளையும் இணைத்துவைத்துவிட்டது காலம்.
***
Wow excellent
Adada dhamu evlo nalla velai panra da super,