Nilamangai-2
நிலமங்கை-2
நினைவுகளில்...
அது, ஒரு அழகிய பறவை தன் சிறகுகளை விரித்துப் பறப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அவளுக்குக் கொடுக்க, அதற்குமேல் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சேற்றில் கால்கள் புதையப் புதைய அவனை நோக்கிக் கிட்டத்தட்ட அவள் ஓடவும்,
"ஏ... மங்க! அப்படி என்னடி அவசரம். சேத்துல விழுந்து வாற போற. கொஞ்சம் நிதானமா போ. சின்னவரு நேத்து ராவுக்குத்தான் வந்திருக்காரு போல. அதுக்குள்ள பட்ணம் வண்டிய புடிக்க ஒண்ணும் ஓடிப்போயிட மாட்டாரு" என கத்திக்கொண்டிருந்தார் பூங்காவனத்தம்மா கிழவி.
அதையெல்லாமல் காதில் வாங்காமல் வேக வேகமாக அவள் தாமுவை நோக்கி வரவும், அவளது அந்த வேகம் அவள் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த, கூடவே அத்தகைய பரவசம் அவளுக்குத் தன்னைப் பார்த்ததால் வந்ததா அல்லது தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்துவிட்டதினால் வந்ததா என்ற குழப்பம் மேலோங்க பார்வையை விலக்காமல் அவளையே பார்த்திருந்தான் தாமு.
மூச்சு வாங்க அவனருகில் வந்து நின்றவள், "நான் கேட்ட புக்குதான தாமு… ப்ச்... அத்தான். நீ அன்னைக்கு அப்படி சொல்லிட்டு போனத பார்த்து எங்க வாங்கிட்டு வர மாட்டியோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?" என்றவாறே தன் பாவாடையில் கைகளைத் துடைத்துக்கொண்டு அந்த புத்தகத்தை அவனுடைய கையிலிருந்து பிடுங்காத குறையாக அவள் இழுக்கவும், அவளது மொத்த பரவசத்திற்குமான காரணம் அந்த புத்தகம்தான், புத்தகம் மட்டுமேதான், தான் இல்லை என்பது தெளிவாக விளங்கவே எரிச்சல்தான் உண்டானது அவனுக்கு.
புத்தகத்தை அழுத்தமாகப் பற்றியவன், "என்ன மங்க... ஒருத்தன் வேலை வெட்டியெல்லாத்தையும் விட்டுட்டு, உனக்காக, நீ கேட்ட புக்க வாங்கிட்டு வந்திருக்கேன். அத்தான் எப்படி இருக்கன்னு ஒரு வார்த்த கூட விசாரிக்கணும்னு தோணல இல்ல உனக்கு? ஸோ, நான் உனக்கு முக்கியமே இல்ல, அப்படித்தான?" என அவன் காரமாகக் கேட்க, தன் தவறை உணர்ந்து ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தியவள், "சாரி தாமு! புக்க பார்த்ததும் எனக்கு இந்த உலகமே மறந்து போச்சு. பாரு, நட்டுட்டு இருந்த நாத்த கூட அப்படியே வுட்டுட்டு ஓடியாந்துட்டேன்" என்றவள், "சொல்லு தாமு நீ எப்படி இருக்க?" எனக் கேட்க, அதுவும் கூட அவனுக்குத் திருப்தி அளிக்காமல் போக, "அது என்ன ஓரொண்ணு ஒண்ணுன்னு ஒண்ணாங்கிளாஸ் பசங்க வாய்ப்பாடு ஒப்பிக்கற மாதிரி இப்படி ஒப்பிக்கற. ஒரு அக்கறை வேணாம்? அதோட விடாம, தலைல அடிக்கற மாதிரி பேர சொல்லி வேற கூப்பிடற!" என கொஞ்சம் அதிகப்படியாகவே அவளை கடிந்துகொண்டான்.
உண்மையிலேயே அவளிடம் என்னதான் எதிர்பார்க்கிறான் என்பது கொஞ்சம் கூட புரியவில்லை. 'ஐயோ தாமு இப்படியெல்லாம் பேசாதே! இன்னைக்கு என்ன ஆச்சு இதுக்கு?' என அவள் விழிக்கவும், "பொழுது விடிய என்னை ரொம்பவே இரிட்டேட் பண்ணிட்ட. ஸோ, இந்த புக்க இப்ப உங்கிட்ட குடுக்க மாட்டேன். வேணும்னா வூட்டுக்கு வந்து வாங்கிக்க" என்று சொல்லிவிட்டு, ஒரு நொடி கூட நிற்காமல் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான் தாமு.
முகம் ஏமாற்றத்திலும் கோபத்திலும் சிவந்து போக, சுரத்தே இல்லாமல் மீண்டும் தன் வேலையைத் தொடரச் சென்றாள் நிலமங்கை.
கூட வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது புரியாமல் போனாலும் மங்கை முகத்தை தொங்கபோட்டவாறு வரவும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.
ஆனாலும் அவளிடம் விளக்கம் கேட்டு ஏதாவது ஒரு இடக்கான பதிலை வாங்கி கட்டிக்கொள்ள அங்கே யாரும் தயாராக இல்லை. பூங்காவனத்தம்மாள் கூட சற்று தயங்கியே இருக்க, "ஏய் மங்க... என்னாடி ஆச்சு? மூஞ்சிய தூக்கி வெச்சிருக்க" என தேவி கிசுகிசுக்கவும், "ப்ச்... தாமு கிட்ட 'எந்நாடுடைய இயற்கையே போற்றி' புக்கு கேட்டிருந்தேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல. அந்த புக்கதான் வாங்கிட்டு வந்திருக்கு. நீ எப்படி இருக்க மகாராசான்னு நானு விசாரிக்கலியாம். அதான் அந்த புக்க கண்ணுல கூட காமிக்காம வீட்டுக்கு வந்து வாங்கிக்கோன்னு சொல்லி முறுக்கிக்கிட்டு போயிடுச்சு" என்றாள் மங்கை இறங்கிய குரலில்.
"அதான் வாங்கிட்டு வந்துடுச்சு இல்ல. அப்பறம் எதுக்கு இந்த பொலம்பல் பொலம்பற. பேசாம நடவு முடிஞ்சதும் நேர போய் அத வாங்கிட்டு உங்கூட்டுக்கு போ. உன் தாத்தா வக்கணையா சோறாக்கி வெச்சிருக்கும். நல்ல கொட்டிக்கிட்னு, கயித்து கட்டில வேப்பமரத்தடில இஸ்த்து போட்டுகினு படுத்துட்டே படிச்சி முடி" என தேவி அவள் அடுத்து செய்யவேண்டியதை பட்டியலிட,
"அடி போடி இவளே. எங்கத்த வூட்டுக்கு போனா, தாமு வண்டி வண்டியா அட்வைஸ் மழையே பெய்யும். ‘உனக்குத்தான் மேத்ஸ் பிசிக்ஸ் ரெண்டும் நல்லா வருது இல்ல. ஐ.ஐ.டீ எண்ட்ரன்ஸ்கு ப்ரிப்பேர் பண்ண புக்ஸ் வாங்கிட்டு வரேன். டைம் வேஸ்ட் பண்ணாம அதை படி. அத வுட்டுட்டு இந்த புக்கெல்லாம் கேக்கற. இனிமேல் வர காலகட்டத்துல நம்ம ஊர்ல வெவசாயம் செஞ