22. வெகுஜன விரோதம்
3. குற்றவுணர்ச்சி
உச்சபட்ச சுயநலத்துடன், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த தாமோதரனின் மனசாட்சி இந்த மோசமான சம்பவத்தால் பதறித் துகில் கலைந்தது.
இனி நிலமங்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்கிற பீதியுடன் தலையைத் தாங்கிப் பிடித்தபடி, அரை மணிநேரத்திற்கு மேலாக கற்சிலை போல அசையாமல் உட்கார்ந்தது உட்கார்ந்த வாக்கில் அப்படியே அசைவற்றுக் கிடந்தான்.
அடுத்து என்ன என்று யோசிக்கக்கூட அவனுக்குப் பயமாக இருந்தது.
அப்பொழுது வேகமாக உள்ளே நுழைந்த செல்வம், "ண்ணா… கதிரோட அம்மாவும் தங்கச்சியும் அவங்க ஊர் ஆளுங்க சிலபேர இட்னு வந்து மங்க வீட்டு முன்னால கூடி நின்னு கலாட்டா பண்ணிக்கினு இருக்குதுங்க. நம்ம ஊரு சனம் மொத்தம் இப்ப அங்கதான் கூடி நிக்குது.”
”அந்தப் போராட்டத்துல கலந்துகிட்ட நம்ம ஊரு ஆளுங்க நாலு பேருக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னே தாக்கு தகவல் இல்ல. ஆளாளுக்கு மங்கய வாய்க்கு வந்தபடி பேசிக்கினு கெடக்குதுங்க.”
”அது கண்டி வெளிய வந்துச்சுன்னா ஏதாவது செஞ்சுருவாங்களோனு பயந்து, அவங்க தாத்தா அத பின் கட்டு ரூமுக்குள்ளயே வெச்சு பூட்டி வச்சுருக்குது. வேலு சித்தப்பாவுக்கு வேற ஏதோ உடம்புக்கு முடியல போலருக்கு”
”வெளிய வர பயந்துகினு, மகேஷ் சித்தி வூடு கதவ தாப்பா போட்டுக்கினு புள்ளைங்களோட உள்ளயே இருக்குது. தாத்தா மட்டும் வெளிய வந்து அவங்கள சமாதானப்படுத்த படாத பாடு பட்டுனு கெடக்குது. நாம்போய் பேசிப் பார்த்தும் ஒருத்தனும் காது கொடுத்து கேக்கல. நீ வந்து என்னான்னு கேளுன்னா! அப்பத்தான் அடங்குவானுங்க" என்றான் பதற்றத்துடன்.
கோவிந்தன் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு வந்தவன்தான், அதன்பின் தேவியை விட்டு அங்கே இங்கே அகலவில்லை செல்வம். கோவிந்தனுக்கு இறுதிச் சடங்குகள் செய்து அவருடைய உடலுக்குக் கொள்ளி வைத்தது கூட இவன்தான். அடுத்த நாள் பால் ஊற்றி, அவருடைய இறப்பு சான்றிதழ் வாங்க என அலைந்து கொண்டிருந்ததில் அவனாலும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனது.
அவனது சூழ்நிலை உணர்ந்து மங்கை அவனைத் தொடர்புகொள்ளவே இல்லை. எனவே, செல்வத்துக்கு நடத்த எதுவும் உடனுக்குடன் தெரியாமலேயே போய்விட்டது. செய்தி அறிந்து அவளைத் தேடி அவன் வரும் நேரம், இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாகிப் போனது.
செல்வம் சொன்னதைக் கேட்டதும் 'நான் மட்டும் இப்ப போகலன்னா எனக்குத் துரோகி பட்டம் கட்டிடுவாங்க' என்று மங்கை சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர, தாமுவின் உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது.
ஒரு நொடி கூட தாமதிக்காமல் பதைபதைக்க எழுந்து மங்கை வீடு நோக்கி ஓடினான்.
அங்கே வந்து பார்க்க வீட்டு வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழைமரம் முகப்பு சீரியல் செட் விளக்குகள் எல்லாம் பிய்த்து எரியப்பட்டு, வீதியே அலங்கோலமாகக் கிடந்தது. ஏதோ நல்ல காலம், சந்தானத்தின் வயதை மனதில் கொண்டு யாரும் அவர் மீது கை வைக்கவில்லை போலும். ஆனால் மங்கை மட்டும் அவர்கள் முன் வந்து நின்றிருந்தால், அவளுக்கும் இதே கதி தான் ஏற்பட்டிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது .
"எம்புள்ள, உன் மேல மனசு நிறைய ஆசையை வெச்சிக்கிட்டு மொறப்படி உன்னைக் கட்டிக்கிறேன்னு வந்து கேட்டான்! உன் தாத்தா பேச்சுக்குக் கூட மதிப்பு கொடுக்காம, முடியாது, புடிக்கலன்னு நீ மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னதுக்கு அப்பால கூட, என்னைக்கா இருந்தாலும் மனசு மாறி அவனைக் கட்டிப்பன்னு நம்பி காத்துக்கினு கிடந்தான். போதும் போறாத கொறைக்கு, என்னல்லாம் செஞ்சா ஒனக்குப் பிடிக்குமோ அதையெல்லாம் செஞ்சுக்கினு இருந்தான்.”
”எப்பப்பாரு ஊருக்கு நல்லது செய்யறேன்னு சொல்லிகினு கண்ட கண்ட ஆம்பளைங்க கூட ஊர் மேஞ்சுக்கினு கெடக்கறா, இவள்லாம் குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா, அவ பின்னால போவாத… போவாத…ன்னு நாங்கல்லாம் படிச்சி படிச்சி புத்திமதி சொன்னத கூட கேக்காம, ஒன்ன மாதிரி உத்தமிய ஊர் ஒலகத்துலயே பாக்க முடியாதுன்னு சொல்லி ஒன்ன நம்பி உம்பின்னால வந்தான்! ஆம்பளைங்கள இப்புடி உம்பின்னால அலையவுடறதுல அப்படி ஒரு சொகம் இல்ல ஒனக்கு, தே*மு*ட?”
”இவ்வளவு செஞ்சும், அவன் கண்ணெதிரயே வேற ஒருத்தன் கூட ஒனக்கு கல்யாணம் முடிவானதும், அதிர்ச்சில அப்பவே அரவுசரா பூட்டான். உன் பேச்சைக் கேட்டுகினு விவசாயத்தைக் காப்பாத்துறேன் போராட்டம் செய்யறேன்னு போயி இன்னைக்கு மொத்த உசுரையும் கொடுத்துட்டான். உம்பேச்சை நம்பி ஏமாளி ஜனங்க மொத்தம் அந்தப் போராட்டத்துல போய் கலந்துகினு, அடிப்பட்டு மிதிப்பட்டு உசுர உட்டு… சுத்துப்பட்டு ஊரே சுடுகாடா மாறி கெடக்கு.”
”உன் வூட்டுல மட்டும் பந்தக்கால் நட்டு மேளம் கொட்டி கல்யாணம் நடந்திருமா? நீ நல்லா வாழ்ந்துடுவாயா பார்க்கிறேன்!" என்றபடி தரையில் இருந்த மண்ணை வாரித் தூற்றிய கதிரின் அம்மா, "ஊர் ஊராப் போயி, வாய் கிழிய மீட்டிங் போட்டுப் பேசி, அப்பாவி ஜனங்கள போராட்டத்துல கலந்துக்க வச்சியே! நீ மட்டும் அங்க போவாம ஏண்டி வூட்டுக்குள்ளேயே கெடந்த? இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாலேயே தெரியுந்தான? அதான் அடுத்தவன சாவ வுட்டுட்டு, நீ மட்டும் நல்லபடியா வூட்டுக்குள்ளயே பதுங்கினு இருக்கியா?”
”கதிரு மட்டுமில்லாம இன்னும் எத்தனையோ பேரு சாவுக்குக் காரணமா இருந்துட்டு, ஊர் சனங்க கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லாம, வூட்டுக்குள்ளேயே ஒக்காந்துகினு இருக்கியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லயா? ஏ மானங்கெட்டவளே வாடி வெளிய" என்று அடிவயிற்றில் இருந்து கத்தினார்.
கூடவே ஊர் மக்கள் சிலரும் அவர் சொல்வதை ஆமோதித்து மங்கையைக் கண்டபடி பேச, "இதோ பாருங்க, இதெல்லாம் எதிர்பாராதவிதமா நடந்து போன விஷயம். இந்தப் போராட்டத்துல கலந்துக்கினவங்க யாரும் புத்தி தெரியாத ரெண்டும் கெட்டன் மனுஷங்க கிடையாது. நம்ம அரசாங்கம் இவ்வளவு மோசமாக நடந்துக்கும்னு சொல்லி, யாருமே எதிர்பாக்கல! தேவையில்லாம இங்க கூடி சத்தம் போட்றத உட்டுட்டு, போயி ஆவர வேலைய பாருங்க" என்று தாமு முன் வந்து குரல் கொடுக்க,
"வாடா… வா… பெரிய வூட்டு புள்ளை இல்ல நீ?! யார் வாழ்ந்தா ஒனக்கென்ன, யார் செத்தா ஒனக்கு என்ன? நினைச்சது நெனச்சபடி இந்த மங்க பொண்ணக் கட்டிக்கப் போற இல்ல! வெளிநாட்டுல போய் வேல பாத்து இலட்ச இலட்சமா சம்பாதிக்கிற திமிருல நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ! போன உசுர உன்னால திருப்பிக் கொடுக்க முடியுமாடா?”
”எனகென்ன போச்சுன்னு சொல்லி கு*டி மண்ண தட்டிட்டு, இந்த மங்கப் பொண்ணக் கட்டி மத்தா நாளே அமெரிக்கா கூட்டிகினு போவப்போற! உசுரு போயி, கை கால் போயி, அன்னாடம் பொழப்புக்கு வழி தெரியாம கெடந்து அல்லாடப் போறது இந்த ஊரு சனங்கதான? " என்று அந்தப் பெண்மணி ஏகவசனத்தில் அவனுக்குச் சரிக்குச் சரியாக நிற்க, அவமானத்தில் நெக்குருகிப் போனான்.
‘அரசாங்கத்த கேக்க வேண்டிய கேள்விய, நீ என்ன பார்த்து கேக்கறியே! அறிவில்ல ஒனக்கு? போ, போய் ஊழல் செய்யற கேடு கெட்ட அரசியல்வாதிங்களயும் அவனுங்களுக்குத் தொண போன அதிகாரிங்களயும், சுட்டவனயும் நிக்க வச்சு கேள்வி கேளு’ என்று சொல்லத்தான் தோன்றியது.
ஆனாலும், மகனை இழந்து விட்டு இந்தத் தாய் கேட்கும் கேள்வியில் இருக்கும் நியாயம் மனதைச் சுட, அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக் கூட நா எழவில்லை தாமோதரனுக்கு!
அதுவும் கதிரை இவன் நேருக்கு நேர் மிரட்டி இருக்க, குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது.
இருந்தாலும் கூட இவர்களை இப்படியே விட முடியாதல்லவா? ஒருவாறாக செல்வத்திடம் சொல்லி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களை வரவழைத்து அனைவரையும் மிரட்டி அங்கிருந்து கலைத்து அனுப்பினான்.
அதன்பின், உடல் தடதடக்க, அவமானத்தில் குன்றிப்போய் திணையில் அமர்ந்திருந்த சந்தானத்தை சமாதானம் செய்துவிட்டு கதவைத் தட்டி மகேஸ்வரியை அழைத்தவன், அவள் வந்து கதவைத் திறந்ததும் உள்ளே சென்றான்.
மங்கை இருக்கும் அரை நோக்கி ஒவ்வொரு அடியாக எட்டு வைத்து அவன் நெருங்க அவனுடைய இதயம் துடிக்கும் ஓசை அவனது செவிகளுக்கே கேட்டது.
ஆனாலும் அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் இல்லாமல் போய் அந்தக் கதவைத் திறக்க, அழுதழுது கண்கள் சிவந்து முகமெல்லாம் வீங்கி அங்கே மூலையில் அமர்ந்திருந்த மங்கை, இவனைப் பார்த்ததும் வெறி பிடித்தவள் போல எழுந்து வெளியில் வந்தாள்.
"ஆரம்பத்துல இருந்தே ஒனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு சொல்லிக்கினே இருந்தனே, கேட்டியா நீ?! அத்த இத்த செஞ்சு, அப்புடி இப்புடி நகர முடியாத அளவுக்கு என்ன மொடக்கி அமரிக்கா கூட்டிட்டுப் போயிட்டா போதும்னு சொல்லி, என்னல்லாம் செஞ்ச? என்னால அங்க வந்து, உங்கூட நிம்மதியா குடும்பம் நடத்த முடியுமான்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா தாமு நீயி? ஒரு மீன தண்ணியில இருந்து தூக்கித் தரையில போட்டா எப்படி துடித்துச்சிச் செத்துப்போவுமோ அப்படி மனசு புழுங்கி ஒரு நடபிணமா போயிட மாட்டேன்?”
”ஒருத்தர நமக்கு புடிக்குதுன்னா, அவங்கள காலம் பூராவும் நம்ம கூடவே வெச்சி, சாகடிக்கறது எந்த விதத்துல நியாயம்? இன்னைக்கு காலைல என்ன ரூமுக்குள்ள போட்டுப் பூட்டி வெச்சியே, இதத்தான என் ஆயுசுக்கும் செய்ய நெனச்ச? ஆனா என்ன நடந்துச்சு பாத்தியா?
என்ன இம்ப்ரஸ் பண்ண, வேணாம்… வேணாம்…ன்னு சொல்ல சொல்ல கேக்காம எனக்குப் புடிச்சதா செய்யணும்னு நெனச்சு ஒரு முட்டாள் அவனோட உசுரையே வுட்டுட்டான்!”
”போராட்டத்துல, நான் நிக்க வேண்டிய இடத்துல நின்ன சத்யா, என் நெஞ்சுல பாய வேண்டிய தோட்டாவ அவம்மேல வாங்கிக்கினு இப்ப சாகக் கெடக்கறான்!"
மனக்குமுறலின் வெளிப்பாடாக, இப்படி அவள் பேசப் பேச, அசைவற்று கல்லென நின்றான் தாமு. அருகிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்த சந்தானமும் வேலுவுமோ அதிர்ச்சியில் உறைந்துபோயினர்!
"பாவம் தாமு, அவன் தகப்பன் இல்லாத புள்ள. அவன நம்பி, அவனோட அம்மா தங்கச்சிங்கன்னு சொல்லி மூணு உசிரு இருக்குதுங்க! அவனுக்கு கண்டி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஏதாவது ஆச்சுன்னு வெய்யி, அதோட நானும் செத்தே போயிருவேன்" என்றபடி, அப்படியே மடிந்து உட்கார்ந்து கதறி அழ, அவளை எப்படி தேற்றுவது என்று கூட புரியவில்லை தாமுவுக்கு.
"மங்க" என்றபடி குனிந்து அவளது கையைப் பற்ற, "சீ என்ன தொடாத" என்றபடி பற்றிய அவனது கரங்களை உதறி ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
"இந்த கல்யாணம் கரமாந்தரம் எல்லாம் நமக்குள்ள என்னைக்குமே ஒத்து வராது! இதுதான் நான் ஒன்ன பாக்கறது, பேசறது எல்லாமே கடைசியா இருக்கணும்! இதுக்கு அப்பால நீ, ஃபோனுலையோ, இல்ல யார் மூலாம தகவல் சொல்லிவிட்டோ, எந்த விதத்துலயும் என்ன காண்டாக்ட் பண்ணவே கூடாது! இது உங்கம்மா மேல சத்தியம்!" எனச் சொல்லிக்கொண்டே வந்தவளுக்கு அவர்களுக்கு நடந்த பதிவுத் திருமணம் நினைவில் வந்தது.
பயத்துடன் விழிகளை விரித்து அவனைப் பார்த்தவள், "இல்ல, நீ என்ன மெரட்டி செஞ்ச ரெஜிஸ்டர் மேரேஜுக்கும் எந்த அர்த்தமும் இல்ல! அத வெச்சி என்ன உரிமை கொண்டாட நீ முயற்சி செய்யவே கூடாது! அத சட்டப்படி முறிக்க எங்கெங்க கையெழுத்துப் போடணும் சொல்லு, போட்டுட்டு மொத்தமா உன்கிட்ட இருந்து விலகிக்கறேன்" என அவள் சொன்ன நொடி, வேரறுந்த மரம் போல மயங்கி கீழே சரிந்தான் வேலுமணி!
அவனுடைய மூக்கிலிருந்து இரத்தம் வழிய, "அப்பா" எனப் பதறி அவனருகில் ஓடினாள் நிலமங்கை.
தாமுவும் ஓடிவந்து அவனைத் தூக்க எத்தனிக்க, "வேணாம், தொடாத! நீ தள்ளியே நில்லு! எங்கப்பாவ பார்த்துக்க எனக்குத் தெரியும்?" என சீரியபடி வேலுவை ஆராய்ந்தவள், தன் கைப்பேசியை எடுத்து ஆம்புலன்சுக்கு அழைத்துவிட்டு நிமிர்ந்தாள். என்ன செய்வது எனப் புரியாமல் தாமு அப்படியே நின்றிருக்க, "தயவு செஞ்சு என் கண்ணு முன்னால நிக்காம, போயிரு தாமு! ஒன்ன பாக்க பாக்க என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு" என இறங்கிய குரலில் அவள் கெஞ்சலாகச் சொல்ல,
‘தனக்குத் தெரியாமல் இவ்வளவு நடந்துவிட்டதே! அவளுடைய சுபாவத்தைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தும், நியாயமான அவளுடைய மறுப்பை அலட்சியம் செய்து, இவனுடனான திருமணத்தை ஏற்பாடு செய்தது பெரும் தவறு’ என்று உணர்ந்து வருந்தினார் சந்தானம்.
பேத்தியின் இத்தகைய நிலையைக் காணச் சகிக்காமல், அதுவும் மருமகன் இப்படி கிடக்கும்போது எந்த ஒரு இரசாபாசமும் வேண்டாம் என்கிற எண்ணத்தில், "போதும் தாமு, நீ இங்கயிருந்து போயிரு" எனக் கையெடுத்துக் கும்பிட்டார்!
அதற்கு மேல் எதையும் செய்ய இயலாமல் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து அகன்றான் தாமு.
நடக்கும் அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்தபடி வனாவும் கேசவனும் மகேஸ்வரியின் பின்னால் பதுங்கி நிற்க, அவளுடைய கண்களில், குரோதம் பொங்கி வழிந்தது, கணவனின் இந்த நிலைமைக்குக் காரணமான மங்கையின் மீது.
***
ஆம்புலன்ஸ் வரவும், வேலுவை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவனைப் பரிசோதித்துவிட்டு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவனது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சைத் தேவைப் படும் என்றும், அதற்கான வசதி இராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மட்டுமே இருப்பதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலுவை அங்கே எடுத்துச் செல்லும்படியும் பரிந்துரைத்தனர்.
மீண்டும் அம்புலன்ஸ் வைத்து அவனை அங்கே எடுத்துச் செல்ல, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
அதேபோன்ற மூளை அறுவை சிகிச்சைக்காக, அங்கே காத்திருப்போர் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. வேலுவுக்கான அறுவை சிகிச்சையைச் சீக்கிரம் செய்ய, சிபாரிசுக்காக எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தான் செல்வம்.
காத்திருப்போருக்கான பிரிவில் மங்கையும் மகேஸ்வரியும் அமர்ந்திருக்க, அவர்களுக்குச் சாப்பிட ஏதும் வாங்கிவரச் சென்றிருந்தார் சந்தானம்.
அப்பொழுதுதான் சற்றுத் தள்ளி அங்கே சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் சத்யாவின் அம்மா. அவள் தோளில் தலை சாய்த்து இரண்டு சிறுமிகள் கண்கள் மூடி சரிந்திருக்க, அந்தக் காட்சியை பார்த்ததுமே அடிவயிறு கலங்கிப் போனது மங்கைக்கு.
அருகில் சென்று சத்யாவைப் பற்றி இவளிடம் விசாரித்தால், கதிரின் அம்மாவைப் போன்றே இவளும் உணர்ச்சிவசப்பட்டுக் கோபமாக ஏதாவது தூற்றுவாளோ என்ற பயம் உண்டானாலும், சற்றும் யோசிக்காமல் அவள் அந்தப் பெண்மணியை நோக்கிப் போக, இவளைப் பார்த்ததும் அப்படியே தாவி அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கிவிட்டாள்.
ஒருவாறு அவளை சமாதனப் படுத்தி, "இப்ப சத்யா எப்படி இருக்கான், சத்யாம்மா" என்று விசாரித்தாள்.
"நல்ல வேள மங்க, யார் செஞ்ச புண்ணியமோ... குண்டு தோளுலதான் பாய்ஞ்சிருக்கு! ஆபரேஷன் செஞ்சு அத வெளியில எடுத்துட்டாங்க! நெறைய ரத்தம் போனதால கொஞ்சம் சீரியஸ் ஆயிடுச்சு! இப்ப இரத்தம் ஏத்திட்டு இருக்காங்க. அவன் நல்லபடியா கண்ண தொறந்தா கொலதெய்வத்துக்கு மொட்டை போடறதா வேண்டிட்டு இருக்கேன்! எம்புள்ள நல்லபடியா பொழைச்சு வந்துருவான்' என்றார் அவர் வெள்ளந்தியாக.
அவன் மட்டுமில்லாமல் அன்றைய கலவரத்தில் பாதிப்படைந்த பலரும் அங்கே அனுமதிக்கப் பட்டிருப்பது தெரிந்தது.
வேண்டுமென்றே, அந்த ஊர்வலத்தில் கலகம் உண்டாக்கும் நோக்கத்தில் சமூக விரோதிகள் சிலர் செய்த குண்டு வெடிப்பிலும், அதையே சாக்காக எடுத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் மேலதிகாரிகளின் தூண்டுதலின் பெயரில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர் என்பதை அந்தப் பெண்மணி சொல்லி அறிந்துகொண்டாள் மங்கை.
சத்தியாவைப் போய் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என முயன்றால், அதற்கான அனுமதி அவளுக்குக் கிடைக்கவே இல்லை.
அதற்குள் வேலுமணியின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போக, வேறு வழி இல்லாமல், ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.
கையில் இருக்கும் தொகையைத் துடைத்து அங்கே அனுமதித்துவிட்டு, அறுவை சிகிச்சைக்காக விசாரிக்க, மொத்தத்தில் பதினைந்தில் இருந்து இருபது இலட்சங்கள் வரை செலவாகும் எனத் தெரிந்தது.
தாமுவிடம் உதவி கேட்கலாம் என மகேஸ்வரி சொல்ல, கூடவே கூடாது என்று நின்றாள் மங்கை.
"உங்கப்பன் மேல ஒனக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல மங்க! அதான் இப்படி நெஞ்சுல ஈரமே இல்லாம பேசற?" எனப் பாய்ந்தாள் மகேஸ்வரி.
"ஏன் சித்தி புரியாம பேசற" என வேதனையுடன் மங்கை கேட்டதற்கு, "பின்ன, அம்மாம் பெரிய தொகைக்கு எங்க போய் நிக்க முடியும்? வேணா உம்பேர்ல இருக்கற நெலத்த வித்து பணம் கட்டு" என்று முகத்தில் அறைந்தாற்போன்று வெடுக்கென்று பதில் வந்தது.
மகேஸ்வரியின் பங்காகக் கொடுத்த நிலத்தை, கொஞ்சம் கொஞ்சமாக விற்று, ஏற்கவனே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாள். இப்பொழுது பணத்திற்கு ஏற்பாடு செய்ய இதைவிட்டால் வேறு வழி இல்லை என்கிற நிலைதான்.
அப்பாவின் உயிரைக் காக்க, தன் நிலத்தை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவள், சந்தானத்திடம் அனுமதி கேட்க, மறுப்பேச்சில்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டார்.
ஆனால், இவ்வளவு துரிதமாக அதை வாங்க, தண்ணீர் கம்பெனி காரனைத் தவிர வேறு ஆளில்லாமல் போக, செல்வத்தின் மூலம் அதை அவர்களிடம் விற்க ஏற்பாடு செய்துவிட்டாள்.
அவர்கள் கொடுப்பதாகச் சொன்ன முப்பது இலட்சத்துக்கு ஒப்புக்கொண்டு, பாதித் தொகையைப் பணமாகவும், மீதித் தொகையை வங்கி கணக்கிலும் வாங்கிக் கொண்டாள்.
எந்தத் தேதியில் அவளுக்கும் தாமுவுக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்ததோ அதே தேதியில் வேலுவின் அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தனர்.
நிலம் வாங்குபவர்கள் சொன்ன தேதியில் அவளால் சார்பதிவாளர் அலுவலகம் செய்ய இயலாது என்று தோன்ற, நிலத்தை விற்கும் உரிமையைக் கொடுத்து செல்வத்தின் பெயரில் அதிகார பத்திரம் அதாவது பவர் எழுதி, அடுத்த நாளே பதிவு செய்து கொடுத்துவிட்டாள்.
தானே நேராகப் போய் தன் நிலத்தை விற்கக் கையெழுத்து போட்டுக் கொடுக்க, அதுவும், யாரை முழு மூச்சுடன் எதிர்த்து நின்றாளோ, அவர்களிடம் முற்றிலுமாகத் தோற்றுப்போய், அந்தக் காக்காக்குளம் ரமேஷை நேருக்கு நேர் எதிர்கொள்ள அவளுக்குத் திராணி இல்லாமல் போனதும் ஒரு முக்கியக் காரணம்.
வேலுவின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தாலும், அவனுடைய உயிரைக் காக்க முடிந்ததே தவிர, அவனது முழு ஆரோக்கியம் திரும்பவே இல்லை. கை கால் செயலிழந்து போய், அவனுக்குப் பேச்சும் வராமல் போனது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையிலேயே கழித்துவிட்டு ஒரு வழியாக வீடு திரும்பினான் வேலு.
அதற்குள், தன் நிலத்தைத் தண்ணீர் கம்பெனி காரர்களுக்கு மங்கை விற்றுவிட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியிருக்க, ஏற்கனவே அவள் மீதிருந்த கசப்புணவு, ஊர் மக்களுக்கு இன்னும் அதிகமாகிப் போயிருந்தது.
அவளுக்கு என்ன வேண்டுமானாலும் விபரீதமாக நடக்கலாம் என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டிருக்க, வீட்டை விட்டுத் தனியே வெளியில் வரவே கூடாது என அவளை எச்சரித்து வைத்திருந்தான் செல்வம்.
பைத்தியமே பிடித்துவிடும் நிலையில் அவள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க, ஏதோ ஒரு புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
இதே போல ஏதேதோ எண்ணிலிருந்து அவளை அழைத்து அருவருக்கத் தக்க விதத்தில் யார் யாரோ பேசுவது வழக்கமாகி இருக்க, அச்சத்துடன்தான் அந்த அழைப்பை ஏற்றாள்.
ஆனால், நல்ல வேளையாக அப்பொழுது அவளை அழைத்தது திருதான், வேறு யாரும் இல்லை.
ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றி யார் யாரிடமோ விசாரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சரியான பதில் இல்லை.
மருத்துவனைத் தொடங்கி பிணவறை வரை அவனைத் தேடிவிட்டார்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் பட்டியல் வரை, அவன் பெயர் எங்கேயும் இல்லவே இல்லை. அவனுக்கு என்ன ஆனதோ என்று எண்ணி அவள் கவலைப் படாத நாளே இல்லை!
"எப்படி இருக்க மங்க, அப்பா நல்லா இருக்காங்களா?" என அவனுடைய குரலைக் கேட்டதுமே அவளது கண்களில் நீர் நிரம்பிவிட்டது.
"நான் நல்லா இருக்கேன் திருண்ணா? இந்த ஒரு மாசமா ஒன்ன பத்தின தகவலே இல்லாம, ஒனக்குதான் என்ன ஆச்சோ, ஏதாச்சோன்னு பயந்துட்டே இருந்தேன்! நீ சேஃப்தான?" என்று கேட்டாள் உளமார்ந்த அக்கறையுடன்.
"இப்போதைக்கு சேஃப்தான், போலீஸ்ல சிக்காம இருக்க, தலை மறைவா இருக்கேன் மங்க! இதுக்கு மேல எங்கிட்ட எந்தக் கேள்வியும் கேக்காத?" என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு, "ஒன்ன பத்தி கேள்விப்பட்டேன் மங்க! நல்ல வேளையா நீ அன்னைக்கு அந்தப் போராட்டத்துல கலந்துக்கல, இல்லனா உன் நிலைமையும் சிக்கல் ஆகி இருக்கும்" என்றான்.
"அதுக்காக என்ன பெரும பட சொல்றியாண்ணா?" எனக் கேட்டாள், குற்றவுணர்ச்சி மேலோங்க.
"அதில்ல மங்க, நீயாவது பத்திரமா இருக்கியேன்னு நிம்மதில சொன்னேன்" என்றவன், "கொஞ்ச நாளைக்கு நீ இங்க இருக்க வேணாம் மங்க! பீ.ஜீ படிக்க கோயம்பத்தூர் காலேஜுக்கு அப்பளை பண்ணியிருக்க இல்ல, பேசாம அத செய். அதுதான் ஒனக்கு நல்லது" என்றான்.
"அதெல்லாம் வேலைக்கே ஆவாதுண்ணா. படிப்பு செலவுக்கு எங்கைல பணம் இல்ல. அப்பா வைத்திய செலவு கை மீறிப் போயிட்டு இருக்கு" என்றாள்.
ஒரு நீண்ட மௌனத்துக்குப் பிறகு, "அத பத்தி நீ கவலையே படாத மங்க! ஒனக்கு ஸ்பான்சருக்கு ஏற்பாடு செய்யறேன்" என்றான் திரு.
"பரவால்லண்ணா, நான் இங்க இருந்து போயிட்டா, தம்பி தங்கைங்க படிப்புக்குக் கூட கஷ்டப்படுவாங்க. இப்ப நெலம் வேற கைய வுட்டு போயிடுச்சு! அது இருந்தாலாவது தாத்தா பாத்துக்கும்னு நிம்மதியா இருக்கலாம்" என்று மறுதலித்தவள், சொல்லும்போதே அழுகை வந்துவிட, "நீ நல்லபடியா இருக்கன்ற நிம்மதியே போதும், பை...ண்ணா" என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அதே நேரம் வாயிலில் ஏதோ அரவம் கேட்க, அவசரமாக அங்கே ஓடினாள்.
யார் எவர் என்றே தெரியாத அடியாட்கள் போன்ற சிலர் கூடி நின்று, அவளைக் கொச்சையாக ஏசியடி, கற்களைத் தூக்கி வீச, அதில் ஒன்று அவளுடைய நெஞ்சின் மீது பட்டுப் பெருவலியைக் கொடுத்தது. அதிலிருந்து அவள் சுதாரிப்பதற்குள் அவளை நோக்கி கண்ணாடி பாட்டில் ஒன்று பறந்து வர, பதறி திண்ணையின் மீது தாவி ஏறினாள்.
அது தரையில் உடைந்துச் சிதற, அதிலிருந்து கிளம்பிய புகையும், நெடியும் மூச்சை அடைத்தது.
"ஐயோ மங்க, ஆசிட் ஆடிக்கறானுக, சீக்கிரமா உள்ள போ" எனக் கத்தியபடி தாமு அவளை நோக்கி ஓடி வர,
"இவன் ஏன் இன்னும் அமெரிக்கா போவல?" என்ற கேள்விதான் அவளது மூளையை நிறைத்தது.
அதற்குள் தாமுவின் ஆட்கள் சிலர் ஓடி வந்து, அங்கே கலகம் செய்துகொண்டிருந்தவர்களைத் தாக்கத் தொடங்க, எல்லோரும் சிதறி ஓடியே போனார்கள்.
அன்றுதான் அவள் தாமுவைக் கடைசியாகப் பார்த்தது!
இந்த சம்பவத்துக்குப் பிறகு, சந்தானமே அவளை அந்த ஊரிலிருந்து அப்புறப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார்.
அதற்கேற்றாற்போல, அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் அவர்கள் வீட்டிற்கே வந்து, தாத்தாவிடம் திரு அவளுடைய மேற்படிப்புக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்கிறான் என்பதை சொல்ல, எப்பாடு பட்டும் தானே குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, இரண்டு வருடம் அவளைக் கோயம்பத்தூர் போகச் சொல்லிவிட்டார் தாத்தா. மறுக்க வழியில்லாமல், திருவின் உதவியுடன், மேற்படிப்புக்காக கோவை சென்றாள் மங்கை.
அதன்பின் அவளுடையத் திறமையால், உதவித் தொகையுடன் வெளிநாட்டில் ஆராய்ச்சிப் படிப்பு உட்பட, வரிசையாக அவளைத்தேடி வந்த வாய்ப்புகள் அதிகம். குடும்பமும் சிரமில்லாமல் இருப்பது தெரிந்து, விட்டுவிடாமல் அனைத்தையும் பற்றிக் கொண்டாள் நிலமங்கை.
மீண்டும் அவள் தன் சொந்த மண்ணில் கால் வைக்கும் பொது, முழுவதுமாக ஏழு வருடங்கள் கடந்து போயிருந்தன.
Emotional update pa dai dhamu analum adamgama dan iruka da nee ava vandathum pondatti nu solli kudave kutitu poita da