top of page

Nilamangai - 22(2)

Updated: Mar 23

22. வெகுஜன விரோதம்


2.அராஜகம்


முறையான அனுமதி பெறாமல், கிணற்றை ஆழப்படுத்துவதற்காக ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்திப் பாறைகளை வெடிக்க வைப்பதென்பது முற்றிலுமாகச் சட்டத்திற்குப் புறம்பானது.


இது முதல் முறை அல்ல! இதுபோல எத்தனையோ முறை நடந்து விட்டது. அனுமதிகப்பட்ட அளவுக்கு மேலேயே அதிக அளவிலில் இவர்கள் வெடிபொருட்கள் பயன்படுத்துவது பட்டவர்த்தனமாகத் தெரிந்தே இருக்க, இது தொடர்பாக மங்கை பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறாள்! ஆனாலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.


என்ன, இதுவரை இதுபோல மிகப் பெரிய விபத்து எதுவும் நடக்காத காரணத்தால் இது வெளி உலகத்திற்குத் தெரியாமலேயே போய்க் கொண்டிருந்தது. எப்பொழுது இந்த அளவுக்குக் கைமீறிப் போய்விட்டதோ இதைக் கண்டும் காணாமல் விடக்கூடாது என மனதிற்குள் ஆழமாகத் தோன்றியது.


அதுவும், எதையோ சொல்லவந்து அதை முழுவதுமாகச் சொல்ல இயலாமல் கோவிந்தன் இறந்திருக்க, இது தவிர வேறு ஏதோ பெரிதாக இருக்கிறதோ என்கிற சந்தேகமும் அவளுக்குள் கனன்றுகொண்டே இருந்தது. இவர்களது போராட்டம் குறித்தும் அச்சமாக இருந்தது!


புகார் கொடுத்து முறையாக இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள் மங்கை.


இந்த நேரத்தில் இதில் தலை கொடுத்தால் இவர்கள் இருவருமே அமெரிக்கா போவதில் தாமதம் ஏற்படுமோ என்கிற பயம்தான் தாமோதரனுக்கு உண்டானது.


"வெவரம் இல்லாம பேசாத! இதெல்லாம் வேலைக்கே ஆவாது மங்க! போலீஸு கேஸுன்னு போனா, போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு சொல்லி பிரச்சனை இழுத்துட்டே போகும். பெரிய எடத்துல பேசி, தவறி விழுந்து அடிபட்டுடுச்சுன்ற மாதிரிதான், சர்டிஃபிகேட் கொடுக்கச் சொல்லி ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கேன். தேவ இல்லாம பிரச்சனைய வளக்காத" எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான் தாமோதரன்.


"யார் அந்தப் பெரிய இடம்னு எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா தாமு! நீ இந்த அளவுக்கு இறங்குவேன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல" என்று அவள் சண்டைக்குக் கிளம்ப,


"வேணாம் மங்க நீ தேவையில்லாம பிரச்சனையை வளக்காத, தாமு சொல்றதுதான் சரி! ஏதோ நடந்தது நடந்து போச்சு, இனிமேலும் இந்த மனுசனோட உடம்ப கிழிச்சுக் கூறுப் போட்டு இதையெல்லாம் பார்க்கிற தெம்பு எனக்கு இல்ல" இன்று தேவியின் அம்மா இறைஞ்சுதலாகக் கேட்க, "ஆமாம் மங்க, அத்த சொல்றதுதான் சரி" என்று சொல்லிவிட்டான் செல்வமும்.


"தெரியும் செல்வண்ண, இதும்பேச்ச மீறி நீ எப்ப நடந்துட்டு இருக்க?" என்று வருத்தத்துடன் அவள் கேட்க, "வேணாம் மங்க, போதும்! காலைல இருந்து நீ எங்களுக்காக எவ்வளவு அல்லாடிட்டு இருக்கன்னு பாத்துட்டுதான் இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கினு நீ இந்த அளவுக்கு அலைஞ்சதே அதிகம். இதுக்கு மேல எந்தப் பிரச்சனையையும் இழுத்து வுட்டுக்காத" என்றபடி அவளை அணைத்துக் கொண்டு கதறினாள் தேவி.


வேறு வழி இல்லாமல் மௌனமாக அவர்களுக்கு உடன்பட வேண்டியதாகிப் போனது நிலமங்கைக்கு.


எல்லா நடைமுறைகளும் முடிந்து கோவிந்தனின் உயிரற்ற உடலை மருத்துவமனையில் இருந்து முறையாகப் பெற்றுக் கொண்டு அனைவருமாக ஊர் வந்து சேரவே நள்ளிரவாகிவிட்டது.


அமரர் ஊர்தி தேவியின் வீடு நோக்கிக் கிளம்ப, செல்வம் தன் இரு சக்கர வாகனத்தில் வழிக் காண்பித்தபடி வந்தான். மங்கையுடன் கூட தேவியையும் அவளுடைய அம்மாவையும் தன் காரிலேயே அழைத்து வந்த தாமு, அவர்கள் வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டான்.


கூடவே அவனருகில் உட்கார்ந்திருந்த மங்கையும் இறங்க எத்தனிக்க, “வூட்டுக்குப் போயிட்டு காலில வந்தா போதும் மங்க” என்றான் கட்டளையாக.


 ‘நீ என்ன எனக்கு உத்தரவிடுவது?!’ என்கிற இறுமாப்புடன், கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கியவள், “பாவம், தனியா இதுங்க ரெண்டும் இன்னா செய்யும்! நான் கூட இருந்தா தேவிக்கு ஆறுதலா இருக்கும். காலில ஊர்காரங்க ஒரவுக்கரங்க எல்லாரும் வந்ததுக்கு அப்பால நான் வூட்டுக்குப் போய்க்கறேன்” என்று அவர்களை வைத்துக் கொண்டே சத்தமாகச் சொன்னாள்.


அதற்குள் அமரர் ஊர்தியும் அங்கே வந்துவிட, அதற்குமேல் அவனால் ஒன்றுமே பேச இயலாமல் போனது.


உச்சபட்ச ஆத்திரத்துடன் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.


தேவியின் அம்மாவிடமிருந்து சாவியை வாங்கி வீட்டைத் திறந்து உள்ளே சென்றவள், தேவியுடன் சேர்ந்து ஒரு மர பெஞ்சைப் பிடித்து வந்து இரேழியில் போட்டாள்.


செல்வமும், அமரர் ஊர்தியில் வந்த நபருமாகச் சேர்த்து கோவிந்தனின் உடலைத் தூக்கி வந்து அதில் கிடத்தினர்.


அரவம் கேட்டு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் அங்கே வர, அடுத்தடுத்த வேலைகள் அவர்களை இழுத்துக் கொண்டது.


அடுத்தநாள் மாலை அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வரை அங்கிருத்து நகரவில்லை மங்கை.


அவர்கள் வீட்டிலிருந்து, தாத்தாவைத் தவிர வேறு யாரும் அங்கே வரவில்லை. தாமுவின் வீட்டிலிருந்தும் யாரும் வரவில்லை. தாத்தாவும், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, இழவு வீடு என்பதால் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிப் போய்விட்டார்.    


இப்படி அநியாயமாக ஒரு உயிர் பிரிந்ததைக் காட்டிலும் இதெல்லாம்  நிலமங்கையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன உறுதி மட்டுமே உருவாகியிருந்தது!


வீடு திரும்பியவள், பக்கவாட்டு வழியாகப் புழக்கடைக்குச் சென்று, கிணற்றிலிருந்து நீர் இறைத்து தலை முழுகினாள்.


பின்வாசல் வழியாகவே உள்ளே நுழைந்து உடைமாற்றிக் கொண்டு நேராகச் சமையல்கட்டுக்குள் நுழைந்தாள். ஒரு குவளைத் தேநீரைத் தயாரித்து எடுத்துக்கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்.


பலவீனமான தோற்றத்துடன் வேலு மட்டும் ஓரமாகப் படுத்திருந்தான். நல்லவேளையாக தாத்தா அங்கே இல்லை.


அப்பொழுது அங்கே வந்த மகேஸ்வரி வேலுவைப் பார்த்து ஜாடை செய்ய, மங்கையைப் பார்த்துவிட்டு பதறி எழுந்து அமர்ந்தவன், “பாப்பா, கல்யாணம் நெருக்கத்துல இருக்கும்போது துக்க வீட்டுக்குப் போனா ஆவாது! அதுவும் கல்யாண பொண்ணு நீயே போவலாமா?” எனக் கேட்டான் வருத்தம் மேலிட.


 ‘ஓ, அதனாலதான் தாமு வூட்டுல இருந்து கூட யாரும் அங்க வரலியா?’ என்று தோன்ற,


 “பாவம்பா தேவி! அதுக்கு நம்மள வுட்டா வேற யாரு இருக்காங்க! இந்த மாதிரி நேரத்துல இதெல்லாம் பாக்க முடியுமா? அது மனிதாபிமானம் இல்லாத செயல் இல்லையா?” என்று இதமாகவே பதில் கொடுத்தாள்.


 “த, நீ பெத்த பொண்ணுதான இது! ‘நீ இந்த ஆட்டம் ஆடுறது தப்பு’ன்னு இழுத்து ரெண்டு அற உடாம, இந்த மாதிரி கொஞ்சிகினு கிடந்தா இது இப்படித்தான் தல கீழா கவுந்து போவும்!” என ஆவேசம் வந்தவள் போல வேலுவின் மீது பாய்ந்தாள் மகேஸ்வரி. 


வேதனையுடன் அவன் தலையைப் பிடித்துக்கொள்ள, “எனக்கு நீ ஒன்னியும் பாடம் எடுக்க வேணாம் சித்தி! எனக்கு எல்லா நல்லது கெட்டதும் நல்லாவே தெரியும்! நீ என்ன எங்கப்பாவ அதிகாரம் செய்யறது? பாரு எப்படி வருத்தப் படுதுன்னு” எனச் சீறினாள் மங்கை.


“யாரு, என்னால வருத்தப் படுதா, இல்ல உன்னாலயா? கொஞ்சங்கூட மட்டு மரியாத இல்லாம நீதான் எல்லாரையும் ஆட்டிப் படைக்கிற. ராவில்லாம பகலில்லாம ஊர்ல இருக்கறவன எல்லாம் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா இட்டுனு அலைய முடியுது! உங்கப்பனுக்கு நாலு நாளா சீதளம் கண்டுபோயி, சளியும் இருமலுமா காய்ச்சலோட அவதி பட்டுகினு கெடக்குது! என்ன ஏதுன்னு கேட்டயாடி நீயி?” எனப் படபடவென பொரிந்தாள் மகேஸ்வரி.


குற்றவுணர்ச்சி மேலோங்கிப்போனது மங்கைக்கு.


அப்பாவின் அருகில் வந்து உட்கார்ந்து, நெற்றியில் கை வைத்துப் பார்த்தவாறே, “கூடவே இருக்கேன், உனக்கு உடம்பு சரியில்லன்னு கூட எனக்குத் தெரியல பாரேன்! ஒன்ன கவனிக்காம இருந்தது மெய்யாலுமே தப்புதாம்ப்பா! என்ன மன்னிச்சுக்க! வா இப்பவே ஆஸ்பத்திரிக்கு போவலாம்’ என்றாள் கரிசனத்துடன்.


அவன் பதில் சொல்ல எத்தனிக்க, பேச முடியாத அளவுக்கு இருமல் வந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.


 “ஐயோ, என்ன பண்ணுது?” என அவள் பதற,


 “அப்படியே அக்கறை பொங்கி வழியுது போடீ! நீ பாக்கலன்னா நாங்கல்லாம் அப்படியே வுட்டுடுவோமா! எல்லாம், தாமு நேத்து மதியமே வாலஜாவுக்கு இட்னு போயி, டாக்டர் கிட்ட காமிச்சு இட்டாந்துடுச்சு. மருந்து மத்தர எல்லாம் குடுத்திருக்காங்க” என நொடித்துக்கொண்ட மகேஸ்வரி அவனுக்கு அருகில் அமர்து நெஞ்சை நீவி விட்டாள். இதமாக இல்லாமல் ஆத்திரம் மொத்தைதையும் காண்பித்து தம்தம் என அவள் செய்த விதத்தைப் பார்த்து வேதனையாகிப் போனது மங்கைக்கு. 


அருகில் இருந்த தைலத்தை வழித்து எடுத்துக் கொண்டு, “வுடு சித்தி, நான் தேச்சு விட்றேன்” என்றபடி அவளுடைய கையைத் தட்டிவிட்டு அவனது நெஞ்சில் அந்தத் தைலத்தை இதமாகத் தேய்த்துவிட்டாள்.


கழுத்தை ஒரு வெட்டு வெட்டி நொடித்தபடி அங்கிருத்து அகன்றாள் மகேஸ்வரி.


இதுவரை தூர இருந்தாவது அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அதற்கும் வழி இல்லை! மகளைப் பிரியப் போகும் வேதனையில் வேலுவின் விழிகள் கலங்கிவிட, அந்த நொடி கூட அவன் அவள் மேல் வைத்திருந்த பாசத்தை உணரவில்லை மங்கை. இருமலால் கண்கள் கலங்கிப் போனதாகவே எண்ணிக் கொண்டாள்.


தன் தகப்பனுக்கு அருகிலிருந்து இவ்வளவு செய்திருக்கிறான், ஆனாலும் ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்லையே இந்த தாமு என்று எண்ணியவளுக்குத் தன்மேல் உள்ள கோபத்தால் வேண்டுமென்றே அவன் பழிவாங்குவதாகவே தோன்றியது.


இப்படிப்பட்ட நிலையில் அவனைத் திருமணம் செய்துகொண்டால் அந்த வாழ்க்கை அதிக நாட்கள் நிலைக்காது என முற்றிலுமாக நம்பினாள். ஆனால் அதை நினைத்து வருந்தும் நேரம் இது இல்லை, அதற்கு முன் முடிக்க வேண்டிய முக்கிய கடமையைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், அறிவைச் சிதறவிடக் கூடாது எனத் தனக்குத் தானே சொல்லிக்  கொண்டாள்.


இரண்டு நாட்களாக தேவிக்கு உதவப் போக, அதைக் கொண்டே அடுத்து வந்த இரண்டு நாட்களும் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு நிலமங்கைக்கு நெருகடியாகிப் போனது.      


வேறு வழித் தெரியாமல், அவர்கள் இயக்கத்தின் முக்கிய நபர்களுடன் கைப்பேசியில் பேசியபடியே தன்னால் இயன்றதைச் செய்துகொண்டிருந்தாள்.


முக்கியமாக திருவிடம் கோவிந்தன் சொன்னதைச் சொல்லி, காவல்துறை மூலம் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யும்படி எச்சரிக்கவும் அவள் மறக்கவில்லை.


எது எப்படி இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அங்கே வந்துவிடுவதாகத் திட்டவட்டமாச் சொல்லியிருந்தாள்.        எனவே, ‘தமிழக அரசே! நாட்டை நாசமாக்கும் ஆராட்டு நிறுவனத்தை இங்கே அனுமதிக்காதே! என்ற பதாகையைத் தங்கி, அதே வாசகங்களை முழங்கியபடி முன் வரிசையில் திருவுக்கு அருகில் இவள் நிற்பது என முடிவானது.


***


தாமு புதிதாகக் கட்டியிருக்கும் மாடி வீட்டில், அதிகாலை நான்கு மணிக்கே பால் காய்ச்சி, கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம் எல்லாம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.


அது முடிந்த கையுடன், இரண்டு பேரின் வீடுகளிலும் பந்தகால் நடுவதாக முடிவகியிருந்தது.


தேவையில்லாமல் கூட்டத்தைக் கூட்ட வேண்டாம் என, இந்த நிகழ்வுகளுக்கு வேறு யாரையும் அழைத்திருக்கவில்லை.


மருதாணி இலையை பறித்துவந்து அரைத்து, முந்தைய இரவே இவளுடைய கை, கால்கள் முழுவதும் அப்பி வைத்திருந்தாள் வனமலர்.


சஞ்சலத்தில் மனம் முழுவதும் நமநமவெனப் பிடுங்கிக் கொண்டிருப்பது போதாதென்று அது வேறு கசகசத்து அவளது உறக்கத்தைக் கெடுத்து வைத்தது.


ஒரு வழியாக மணி மூன்றானதோ இல்லையோ எழுந்து புழக்கடைக்குப் போய் மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு, கை கால்களைக் கழுவி பல் துலக்கி, வெந்நீர் அண்டாவில் தண்ணீர் நிரப்பி, விறகடுப்பைப் பற்ற வைத்தாள்.


அதன்பின்… மகேஸ்வரி, வனா என ஒவ்வொருவராக விழித்தெழுந்து அங்கே வர, முதலில் போய் குளித்துவிட்டு வந்தவள், அன்றைய தினத்துக்காக அவளுக்காக தாமு எடுத்துக் கொடுத்திருந்த பட்டுப் புடவையை உடுத்தி, முன்னமே தயாராக எடுத்து வைத்திருந்த நகைகளை அணிந்து கிளம்பி வந்தாள்.


தொடர்ந்து ஒவ்வொருவராகத் தயாராகி தாமுவின் புது வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


 “இன்னிக்குன்னு இல்ல, எப்பவுமே இந்த வூட்ட பொறுத்த வரைக்கும் நீதான் எல்லமே, நீயே பால காச்சி, உன் கையால காமட்சி வெளக்க ஏத்தி வெய்யி” என அவள் கையாலேயே செய்ய வைத்தாள் புஷ்பா!      


அதன்பின் எல்லாமே நல்லபடியாக நடந்து முடிய, ஏழு மணி வாக்கில் பந்தக்காலும் ஊன்றினார்கள்.


அந்த நேரம் பார்த்து சத்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.


 “அக்கா, நாம கையெழுத்து இயக்கம் நடத்தி, ஜனங்க கிட்ட வாங்கின கையெழுத்து எல்லாம் சேர்ந்து ஸ்கேன் பண்ணி, பீடீஎப்…பா மாத்தி வெச்சிருக்கேன். அதில்லாம கலெக்டர் ஆஃபீஸ்ல குடுக்க வேண்டிய மனுவ, தமிழ்ல டைப் பண்ணி அதையும் உன் ஈமெயிலுக்கு அனுப்பிட்டேன். போலீஸ் டிபார்ட்மென்ட்ல குடுத்த பர்மிஷன் லெட்டரும் இருக்கு. நீ ஒரு தடவ செக் பண்ணிட்டா, திரு அண்ணனுக்கு அனுபிருவேன்! சரியா இருந்தா அத நம்ம க்ரூப்ல போட்டு எல்லாருக்கும் பார்வர்ட் பண்ணிடுவேன்! பக்கத்துல யார் கிட்டயாவது ஸ்மார்ட் ஃபோன் இருந்தா ஓபன் பண்ணி பாக்க முடியுமா? ” என்று கேட்க,


“சரி” என்று சொல்லிவிட்டாள்.


மிகவும் அவசரமான வேலை இது! இந்த நேரத்தில் வேறு யாரையும் தேடிக் கொண்டு போக முடியாத சூழல். வேறு வழி இல்லாமல் கேசவனை அழைத்து, “தாமு அத்தான் கிட்ட போயி, ஃபோட்டோ எடுக்கணும்னு சொல்லி அதோட ஃபோன நான் கொஞ்சம் கேட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வா” என்று சொல்ல, சில நிமிடங்களில் தாமுவின் கைப்பேசியுடன் திரும்ப வந்தான்.


ஓரமாகப் போய் அமர்ந்தவள், அதில் தன் மின்னஞ்சலைப் பதிவு செய்து, சத்யா அனுப்பியிருந்த கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து, அனைத்தையும் சரிபார்த்தாள். கடைசிப் பிரதி என்பதால், எல்லாமே சரியாக இருக்க, எந்த ஒரு மாற்றமும் தேவைப் படவில்லை.


பார்த்து முடித்த கையுடன், தன் மின்னஞ்சல் கணக்கை அந்தக் கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டு, பதற்றத்தில், அவள் பதிவிறக்கம் செய்த கோப்புகளை அழிக்க மறந்தே போனாள். உடனே சத்யாவை அழைத்து எல்லாம் சரியாக இருபதாகச் சொல்லி, அதை எல்லோருக்கும் அனுபிவிடலாம் என்று முடித்துக்கொண்டாள்.


கையுடன் அந்த செல்போனை கேசவனிடம் கொடுத்து தாமுவிடம் கொடுக்கவும் சொல்லிவிட்டாள்.


 ‘இவ இப்படியெல்லாம் செய்யற ஆளே இல்லையே’ என்கிற வியப்புடன்தான் கேசவனிடம் தன் கைபேசியைக் கொடுத்து அனுபியிருந்தான் தாமு. அவன் திரும்பக் கொண்டு வந்து கொடுத்ததும், அதை திறந்து பார்க்க, ஒரே பார்வையிலேயே அவள் டவுன்லோட் செய்திருந்த ஃபைல்களை கண்டுகொண்டான்.


ஒரு ஆர்வத்தில் அவற்றை திறந்து பார்க்க, உச்சபட்ச அதிர்ச்சியில் ஆடித்தான் போனான் தாமோதரன்.


அவள் கை வைத்திருப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரக் கம்பியில் அல்லவா?


அடுத்த நொடி அவனுடைய மூளை வேகவேகமாக வேலை செய்ய, “உங்கக்கவ நான் அவசரமாக் கூப்டேன்னு சொல்லி இங்க வரச்சொல்லு, கேசவா” என்று அவனை அனுப்பி வைத்தான்.


கேசவன் வந்து சொல்லும்போது வேறு உடை மாற்றி, காலை உணவு சாப்பிட்டு முடித்து, கலெக்டர் ஆஃபீஸ் செல்வதற்காகத்  தயாராகிக் கொண்டிருந்தாள்.


 ‘இவன் ஏன் இந்த நேரத்தில் அழைக்கிறான்?’ என்கிற எரிச்சலுடன் சில நிமடங்களில் தாமோதரன் வீட்டு மாடிக்கு வந்து சேர்ந்தாள் நிலமங்கை.


அந்த நேரம் அவர்கள் இருவரைத் தவிர அங்கே யாரும் இல்லாமல் போக, தாமோதரனுக்கு அது மிகவும் வசதியாகிப் போனது.


அவளைப் பார்த்த நொடியே, “ஏதோ சும்மா கும்பலக் கூட்டி நெலத்த விக்காதீங்க, விவசாய வேலை செய்ங்கன்னு பிரச்சாரம் செஞ்சிட்டு இருக்கன்னு நெனச்சா, என்ன வேலை செஞ்சு வெச்சிருக்க மங்க நீ! அறிவிருக்கா உனக்கு?” என்று காட்டமாகக் கேள்வி கேட்டான்.


 “ஏன் என் அறிவுக்கு என்ன கொறச்சல்?”


 “கொறச்சல் இல்ல, எல்லாமே கொஞ்சம் கூடுதலாத்தான் இருக்கு. நான் ஒன்னப் பத்தி தெரிஞ்சு வெச்சுருக்கறதவிட நீ ரொம்ப அழுத்தம் பிடிச்சவ. வூட்டுல யாருக்கும் தெரியாம, எங்கிட்ட கூட சொல்லாம இவ்வளவு பெரிய விஷயத்த செய்ய ஒனக்கு எப்படிடீ துணிச்சல் வந்துச்சு?”


 “நான் என்ன மூடி மறைச்சா செஞ்சிட்டு இருக்கேன்! நீ கவனிக்காம இருந்துட்டு என்ன கேள்வி கேக்கறியா?”


 “உண்மைதான், எம்புத்தியத்தான் செருப்பால அடிக்கணும்! பெருசா அப்படி என்ன செஞ்சுடப் போறன்னு சொல்லி ஒன்ன ஃப்ரீயா வுட்டது என்னோட தப்புதான்! ஆனா இனிமேலும் அப்புடி ஒன்ன விட மாட்டேன்! நீ இன்னைக்கு அந்தப் போராட்டத்துல கலந்துக்கக் கூடாது, சொல்லிட்டேன்!’


 “அத சொல்ல நீ யாரு?”


 “சட்டப்படி உன்னோட புருஷன்டீ! உன் விஷயத்துல முடிவெடுக்கற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு” அவன் திமிராகச் சொல்ல, அரண்டுதான் போனாள்.


 “இல்ல தாமு, இந்தப் போராட்டத்துக்கான டூல்கிட்ட ரெடி பண்ணாதே நாந்தான். நான் இன்னைக்கு போயே ஆகணும். இல்லன்னா எனக்கு துரோகி பட்டம்தான் கெடைக்கும்! இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தயவு செஞ்சு எம்போக்குல என்ன விட்டுடு!”


 “என்னாது இவ்வளவு பெரிய போராட்டத்துக்கு டூல்கிட் நீ ரெடி பண்ணியா? ஒடம்புல கொஞ்சமாவது பயம் இருக்காடி ஒனக்கு? லூசுத் தனமா நீங்க மோதறது கவர்மன்ட் கிட்ட மட்டுமில்ல! ஒரு மோசமான இண்டர்நேஷனல் கார்பரேட் மாஃபியா கிட்ட! அவனுங்க, இதுல சம்பந்தபட்ட எல்லாரையும் உரு தெரியாம அழிச்சிடுவானுங்கடீ முட்டாளே!  தேசதுரோகின்னு பட்டங்கட்டி, கூட்டத்துல தடியடி நடத்தி, கையக்கால ஒடச்சு ஜெயில்ல போட்டுடுவானுங்க! நீ எந்த ஊர்ல எந்த ஜெயில்ல இருக்கன்னு தேடி கண்டுபிடிக்கக் கூட முடியாது, அங்கேயே வெச்சு சோலிய முடிச்சிடுவானுங்க, தெரிஞ்சுக்க!”


 “எது நடந்தாலும் எனக்கு நிம்மதிதான்! ஒன்ன கட்டிட்டு அமெரிக்கா வரதவிட ஜெயில்லயே சந்தோஷமா கிடந்தது செத்துப் போவேன்”


திமிராக அவள் இப்படி சொன்ன நொடி, அவனது மனம் முழுவதும் வியாபித்திருந்த பயம், ஆத்திரமாக உருவெடுத்து அவனது முகமே விகாரமாக மாறிப்போனது!


 “நீ வாழ்ந்தாலும் எங்கூடத்தான்! செத்தாலும் எங்கூடத்தான்! இப்படி அனாமத்தா போய் உசுர விட, ஒன்ன நான் விடமாட்டேன், அதோட நீ ஒரு பொட்டச்சிங்கறதையும் நெனப்புல வெச்சிக்க!” என்று சொன்னபடி அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் அவனுடைய படுக்கை அறைக்குள் அவளைத் தள்ளி வெளிப்பக்கமாகப் பூட்டியவன், வந்து வரவேற்பறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்.


இதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை! முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, கை வலிக்க வலிக்க கதவைத் தட்டிப் பார்த்தாள்! 


அசரவே இல்லை அவன்.


 “கதவ தொறந்து விடு, தாமு” எனக் கத்திக் கதறிப் பார்த்தாள். எதற்கும் இளகவில்லை தாமோதரன்.


 “இப்ப தொறந்துவிட மாட்டேன்டீ! நீ கண்டி ஜெயிலுக்குப் போனா, அது உன் பஸ்போர்ட்ல ஸ்டாம்ப் ஆகிடும்! விசாவ கூட கேன்சல் செஞ்சிடுவானுங்க! நம்ம எதிர்காலமே பாழாப்பூடும்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.


அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தை அவளை எக்கச்சக்கமாகப் பீதி அடையச் செய்தது!


ஒருக் கட்டத்துக்கு மேல் போராட தெம்பில்லாமல், மனம் இறுகத் தொய்ந்துபோய் கால்களை மடக்கி அப்படியே அமர்ந்துவிட்டாள்.


கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்க, யாரிடமும் தொடர்புகொண்டு தன் நிலைமையை அவளால் சொல்ல முடியாமல் போனது.


தோல்வியும், அவமானமுமாகத் துவண்டுப் போய்க் கிடந்தாள் நிலமங்கை.


அவள் தாமுவுடன்தான் இருக்கிறாள் என்பதால், வீட்டில் யாரும் அவளைத் தேடவில்லை போலும்.


மதியம் ஒரு மணி போல, “அக்காவ சாப்புட வரச்சொல்லி அம்மா கூப்புட சொல்லிச்சு” என்று வந்து நின்றான் கேசவன்.


எப்படியும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும். இதற்கு மேல் அவள் அங்கே சென்றாலும் எந்தப் பிரச்சினையும் வராது’ என்ற எண்ணத்தில் அவன் எழுந்து போய் கதவைத் திறக்க, அசைவே இல்லாமல் அமர்ந்தது அமர்ந்தபடி அப்படியே இருந்தாள் நிலமங்கை.


அவளது விழிகள் மட்டும் கனலை உமிழ, அவனைப் பார்வையால் பொசுக்கினாள்.


அவளது பார்வை அவனது மனதைச் சுட்டாலும், அதைப் பொறுத்துக் கொண்டவன் போல, அவளுடைய கையைப் பற்றித் தூக்கி நிறுத்தி, “எந்தப் பிரச்னையும் செய்யாம, பேசாம வூட்டுக்குப் போ! எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சு, அப்பால பேசிக்கலாம்” என்றான் அசராமல்.


‘அது இந்த ஜென்மத்துல நடக்காது!’ என மனதுக்குள் நினைத்தபடி அங்கிருத்து  அகன்றாள் நிலமங்கை ஓட்டமும் நடையுமாக.


அவள் சென்ற பின்னும் கூட, குற்றவுணர்ச்சியில் மனம் குறுகுறுக்க அப்படியே அமர்ந்திருந்தான் தாமோதரன். ‘இப்படி இவளைக் கசக்கிப் பிழித்து, தனக்கு ஒரு வாழ்க்கை தேவையா?’ என்ற சலிப்புக் கூட ஏற்பட்டது.


அவன் கீழே வராமல் போக, வேலையாள் மூலம் புஷ்பா அவனுக்குச் சாப்பாட்டை அங்கேயே கொடுத்துவிட, தொலைகாட்சியை இயக்கிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.


 ‘ப்ரேகிங் நியூஸ்’ எனத் திரும்பத் திரும்ப அதன் திரையில் ஒளிர்ந்த காட்சிகளைப் பார்த்து ஈரக்குலையே நடுங்கிப்போனது தாமோதரனுக்கு.


இப்படி நடக்கும் என அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லையே! இதற்கு முன் இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டது கூட இல்லையே! நம் மண்ணில் இப்படிக் கூட ஒரு அனர்த்தம் நடக்குமா?


அன்றைய தினம் மங்கைக்கு தான் செய்தது நன்மையா அல்லது தீமையா என்பதே புரியவில்லை அவனுக்கு.   


எது எப்படி இருந்தாலும் அவளிடம் இனி தனக்கு மன்னிப்பு என்பது கிடைக்கவே கிடைக்காது என்பது மட்டும் புரிந்து போனது!


காரணம்…


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, அராட்டு நிறுவன இரசாயனத் தொழிசாலைக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் இடம் நோக்கி சென்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு, குண்டு வெடிப்பு சம்பம் நடந்திருக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர்களைப் பொறுத்தவரை கலவரக் காரர்கள், உண்மையில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரை விட்டிருந்தனர். பலர் படுகாயமடைந்திருந்தனர்.


இறந்துபோனவர் பட்டியலில் முதலாவதாக இருந்த பெயர், கதிர்!


படுகாயமடைந்து உயிருக்குப் போராடுபவர் பட்டியலில், வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் சத்தியாவின் பெயர் இருந்தது.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page