top of page

Nilamangai - 22(1)

Updated: Mar 23


பொறுப்புத் துறப்பு (Disclaimer)

இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி இருப்பின் அது முற்றிலும் தற்செயலானது.



22. வெகுஜன விரோதம்


1. சதி


நினைவுகளில்...


ஆவணிப் பிறந்ததோ இல்லையோ, மங்கை மற்றும் தாமு இருவரின் வீடுகளிலும் கல்யாணக்களைக் கட்டிவிட்டது.


ஆனி, ஆடி முடிவதற்காகவே காத்திருந்து, நல்ல நாள் பார்த்துக் கும்பலாகக் திநகர் கிளம்பிப் போய் ஜவுளி, நகைகள் எல்லாம் வாங்கி வந்தார்கள். பாஸ்போர்ட் வாங்க, அமெரிக்க விசா நடைமுறைகளுக்காக என தாமுவுடன் சிலமுறை வெளியூர் சென்று வந்ததுடன் சரி, மற்றபடி நிச்சய தாம்பூலம் முடிந்த பிறகு மணப்பெண்ணை எதற்கும் உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் அவர்களிடம் இல்லாத காரணத்தால் மங்கை நிம்மதியாகக் கழன்று கொண்டாள்.


இரு வீட்டார் அழைப்பாகப் பத்திரிக்கை அடித்து, அறிந்தவர் தெரிந்தவர், சொந்தக்காரர் எல்லோரையும் நேரில் போய் அழைக்கும் வேலையையும் சுறுசுறுப்பாகத் தொடங்கி இருந்தனர்.


நடுநடுவே, பூவாடைக்காரி கும்பிடுவது, குலதெய்வ கோவிலில் பொங்கல் வைப்பது பொன்ற சிறு சிறு சடங்குகள் சம்பிரதாயங்கள் என அது ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது. இவை எல்லாமே பகல் நேரத்தில் அதுவும் உள்ளூரிலேயே இருந்ததால் மங்கையின் வேலைகளுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் ஏற்படாமல் தப்பித்தாள்.


கல்யாணத்தைப் பற்றிய எந்த ஒரு பெரிய கனவும் இல்லாமல் கடமைக்காக எல்லோருடனும் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க, தனிப்பட்ட கல்லூரி தோழர்கள் யாரையும் அழைக்க வேண்டும் என்கிற எண்ணமே தோன்றவில்லை. அவளது கவனம் மொத்தமும் அவர்கள் மேற்கொள்ளப் போகும் போராட்டத்திலேயே இருந்தது.


இதற்கிடையில் தாமு மாடியில் கட்டிக் கொண்டிருந்த புதிய பகுதியின் வேலைகள் முடிவடைந்திருக்க, பெரியவர்களின் நிர்பந்தத்திற்காக அங்கே சிறிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான்.


அவர்களுடைய திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக அதற்கு நாள் குறித்திருக்க, சரியாக அதற்கு மூன்றாம் நாள் அதாவது அவர்களுடைய திருமணதிற்கு முந்தைய தினத்தில் அந்த இரசாயன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவிருப்பதாகச் செய்திகள் வெளியானது.


பொதுவான தகவல் எதையாவது பெறவோ அனுப்பவோ வேண்டுமென்றால் சத்யாவுக்கு கால் செய்து அவன் மூலமாகவே செயல்படுத்த வேண்டியதாக இருக்க, நவீன இரக கைப்பேசி ஒன்று இல்லாமல் பெரும் அவதியாக இருந்தது நிலமங்கைக்கு. மற்றபடி அவர்கள் திட்டமிட்டபடி வேலைகளை ஆரம்பித்து, சத்யாவின் துணையுடன் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தாள்.


அதுவும், நாள் நெருங்க நெருங்க, அவர்களுடைய தீவிரம் இன்னும் அதிகமானது.


வீடு வீடாகச் சென்று அந்தத் தொழிற்சாலையால் ஏற்படவிருக்கும் விபரீதங்களைப் பற்றி, ஒவ்வொருவரிடமும் இயல்பாகப் பேசுவது போலப் பேசிப் புரிய வைப்பது, உள்ளூரிலேயே வழக்கமான இடத்தில் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி இதுபற்றிய சிந்தைனைகள் மக்கள் மனதிலிருந்து மறைந்துபோகாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பது,  அட்டவணைப் போட்டு அக்கம்பக்கத்து ஊர்களில் போய் கூட்டங்கள் நடத்துவது, கூடவே, வாரம் ஒருமுறை கரிகிலியில் எல்லோரும் கூடி, இதுவரை செய்து முடித்தவை, இனிமேல் செய்யவேண்டியவை அனைத்தையும் விவாதிப்பது எனப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது.


அதுமட்டும் இல்லாமல், கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி வீடு வீடாகச் சென்று கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு மேல் கையெழுத்து வாங்கியிருந்தனர். பெயருக்குக் கையெழுத்து போட்டவர் என ஒருவர் கூட கிடையாது என்கிற அளவுக்கு அனைத்தையும் ஒவ்வொருவரிடமும் தெளிவாக விளக்கி, தீவிரத்தைப் புரிய வைத்து, ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் அவரவருடைய தனிப்பட்ட தகவல்களையும் இணைத்துக் கையெழுத்துப் போடும்படி செய்திருந்தனர்.           இணையதள வழியில், வாட்ஸப் மற்றும் முகநூல் குழுக்கள் மூலம் மக்களை இணைப்பது என அதுவும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது.


இவர்களது பதிவுகளை யார் யார் படிக்கிறார்கள், எத்தனை பேர் பகிர்கிறனர், இது எவ்வளவு பேரைச் சென்றடையும்? இந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்கப்போகிறார்கள் என எந்த ஒரு அனுமனமும் ஒருவருக்கும் இல்லை. 'கடமையைச் செய்வோம்... வருவது வரட்டும்... வெற்றி கிட்டும்வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்' என்கிற முன்னெடுப்பு மட்டுமே!


ஆனால்... கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஐ டி கம்பெனி ஊழியர்கள், சமூக சிந்தனையுள்ள யூடியூபர்ஸ் என அதிகளவில் இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட, அவர்களே எதிர்பாராவண்ணம் இந்த நோக்கம் அதிக மக்களைச் சென்றடைந்துவிட, 'கெட் அவுட் அராட்டு கெமிக்கல்ஸ் கம்பெனி' என்கிற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் தீப்பிடித்துக் கொண்டது.


மக்கள் திரளாகச் சென்று கலெக்டர் ஆஃபீசில் மனு கொடுத்துவிட்டு, பனந்தோப்புப்புதூரில் அந்த இரசாயன தொழிற்சாலையைத் தொடங்கவிருக்கும் இடம் வரை ஊர்வலமாகச் சென்று, அங்கே முற்றுகை இட்டு  தங்கள் போராட்டத்தைத் தொடருவது என ஏற்பாடாகியிருக்க, இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய இவர்களே எதிர்பாராத வண்ணம், இவர்கள் திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே சிறு சிறு குழுக்களாக மக்கள் நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே போராடத் தொடங்கிவிட்டனர்.


இதிலிருந்து அரசாங்கம் பின்வாங்கத் தயாராகவே இல்லை. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இன்றி, போலீசார் தடியடி, கண்ணீர் குண்டு வீச்சு என நாடே பரபரப்பாகிக் கொண்டிருந்தது.


இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் போராட்டம் உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியிருந்தது.


சமுதாய சிந்தனை என்பதே ஒரு துளி அளவு கூட இல்லாமல், இதன் பாதிப்பு எதுவுமே இல்லாமல், தன் வேலை மட்டுமே பிரதானம் என்பதுபோல, திருமண வேலைகளிலும், அமெரிக்கா செல்ல தேவையான ஏற்பாடுகளிலும் மும்முரமாக மூழ்கியிருந்தான் தாமோதரன்.


அதே சிந்தனையில் இருந்தாலோ என்னவோ, முழு நேரமும் இந்தப் போராட்டம் சம்பந்தமாகத்தான் மங்கை இயங்கிக்கொண்டிருகிறாள் என்பதையே கவனிக்கத் தவறினான்! அது அவனுடைய கவனத்துக்கு வரும்போது எல்லாமே கைமீறிப் போயிருந்தது!


***


"யக்கா, உங்கல்யாணத்துக்கு கையில மெஹந்தி வச்சுக்கப் போறியா இல்ல, அழவோண எலைய பறிச்சிட்டு வந்து அரைச்சு வெச்சி வுடட்டுமா?" என்று கேட்டாள் வனமலர்.


'ஐயோ, இப்படி வேற ஒன்னு இருக்கா? கையில வச்சுக்கிட்டு மணிக்கணக்கா வெட்டியா ஒக்காந்து இருக்கணுமே! வேணாம்னாக்க, இதுங்க நம்மள விடாதே!' என மனதிற்குள்ளேயே சலித்தபடி தங்கையை ஏறிட்டள் நிலமங்கை.


"இல்லக்கா, ஜவுளி எடுக்க போவ சொல்லவே ஆறு மெஹந்தி கோன் வாங்கியாந்து வெச்சிருக்கேன். நம்ம தேவிக்கா, சூப்பரா டிசைன் வரையும். ஃபோன் பண்ணி, அத இப்ப வர சொல்லட்டுமா? நீ வச்சிக்கிறியா?"


"ஏன்டி,  கெடக்குறது கெடக்க கெழவிய தூக்கி மடியில வெச்ச கதையா இப்பவே என்னடீ இதுக்கு அவசரம்?"         


"அதில்லக்கா, கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சாறு நாள்தான இருக்கு? அதோட நாளான்னிக்கு தாமு அத்தான் வூட்டுப் புதுமனைப் புகுவிழா வேற இருக்கில்ல! இப்பவே வெச்சாதான் நல்லா கலர் வரும்"


எப்படி இருந்தாலும் இதற்காக நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அடுத்த நாள் காலையில் தொடங்கி அவளுக்கு முக்கிய வேலைகள் வரிசையாக நிற்க, ‌இன்றைய ஒரு நாள் பொழுதுக்கு மட்டுமே அவளுக்கு இதற்கெல்லாம் நேரமிருந்தது. எனவே, "ஆகக்கூடி யாரும் என்ன நிம்மதியா வேலையைப் பாக்க வுட மாட்டீங்க, அப்படித்தான? என்னவோ செய்… போ" என்று சொல்லிவிட்டாள் மங்கை.


அதற்காகவே காத்திருந்தவளாக, உடனே கைப்பேசியை எடுத்து தேவிக்கு அழைத்த வனா, "ஹலோக்கா, இன்னைக்கு நீ ஃப்ரீயா?" என்று உற்சாகத்துடன் தொடங்கினாள்.


அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளே மூளை முழுவதும் நிரம்பி இருக்க, வேறெந்த சிந்தனையும் இல்லாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தாள் மங்கை.


சட்டென, "அய்யய்யோ தேவி அக்கா, எதுக்கு இப்படி அழுவற?" என்று வனா பதறவும், உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது நிலமங்கைக்கு.


"ஏய் என்னடி ஆச்சு?" என்று தானும் பதறியபடி தங்கையின் கையில் இருந்து ஃபோனைப் பறித்தவள், "ஏ தேவி என்னடி ஆச்சு?" என்று படபடத்தாள்.


"தண்ணி கம்பெனி காரங்க, கெணத்துக்கு வெடி வெக்குற நேரமா பாத்து அப்பா அங்க போயிருந்துருக்கு போல, மங்க. எக்கு தப்பா வெடி வெடிச்சதுல மாட்டிகிட்டு அப்பாவுக்கு உடம்பு முழுக்க காயமாயிடுச்சாம்! அவசர அவசரமா ஏதோ ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிட்டானுங்களாம்? எங்க என்னன்னு தாக்கு தகவல் எதுவும் தெரியலடீ? ரொம்ப பயமா இருக்கு மங்க" என்று அழுது துடித்தாள் தேவி.


"நீ இப்ப எங்கடி இருக்க?"


"கேள்விப்பட்டு தண்ணி கேன் கம்பனிக்குதான் ஓடியாந்தேன்! ஆனா இங்க பூட்டுத் தொங்குது.  ஒரு ஈ காக்கா கூட இல்ல! நானும் அம்மாவும் இப்போ செல்வத்தோட கழனிலதான் நின்னுக்கினு இருக்கோம்! பூங்காவனம் கெழவி மட்டும்தான் இங்க இருக்கு. செல்வத்துக்கு ஃபோன் போட்டு தகவல சொல்லிட்டேன், வந்துகினே இருக்கு" என்று விவரமாகப் பதில் சொல்லி முடித்தாள்.


போனைத் துண்டித்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் சிந்திக்காமல் தன்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அங்கே சென்றாள் நிலமங்கை.


அந்த தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற்சாலைக்குள் சென்று விசாரிக்கலாம் என்று பார்த்தல், அதன் உள்ளே நுழையவே முடியாதபடி அதன் பெரிய இரும்பு கேட் பூட்டுப் போட்டுப் பூட்டபட்டிருந்தது.


அதற்குள் செல்வமும் அங்கே வந்துவிட இருவருமாக அக்கம் பக்கத்தில் யார் யாரையோ விசாரித்து, செல்வமும் தேவியின் அம்மாவும் ஒரு வண்டியிலும் மங்கையும் தேவியும் ஒரு வண்டியிலுமாக ஒரு வழியாக கோவிந்தன் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தார்கள்.


அதற்குள்ளாகவே ஐந்து மணி நேரம் விரையமாகி இருந்தது.


அரசு மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றால், காவல்துறை விசாரணை அது இது என்று பெரிய பிரச்சினையாகிவிடும் என்கிற காரணத்தினால் அங்கு நடந்த அந்த விபத்தை மூடி மறைக்கும் நோக்கத்துடன் ஊர் பேர் தெரியாத ஒரு சிறிய மருத்துவமனைக்கு அவரைத் தூக்கி வந்து போட்டுவிட்டு, பணத்தை மட்டும் கட்டிவிட்டு, துணைக்கு கூட ஒருவரும் இல்லாமல் அம்போவென அவரை விட்டுவிட்டுச் சென்றிருந்தனர் தண்ணீர் கேன் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் சிலர்.


இதுதான் சாக்கென்று ஒன்றுக்கு இரண்டாக பணத்தை வாங்கிக்கொண்டு மருத்துவம் என்கிற பெயரில் ஏதோ முதலுதவி மட்டும் செய்து, அவரை ஒரு கட்டிலில் கிடத்தியிருந்தனர்.


தலையில் கட்டுடனும் உடம்பு முழுவதும் இரத்தக் காயத்துடனும் மயக்க நிலையில் கிடந்த கோவிந்தனைப் பார்த்ததும் துக்கம் தாளமுடியாமல் தேவியும் அவளுடைய அம்மாவும் கதறித்துடிக்க, அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது மங்கைக்கும் செல்வத்துக்கும்.


இப்படியே இங்கேயே கிடந்தால் ஒன்றும் வேலைக்காகாது என்று புரிய, மங்கையும் செல்வமுமாகப் பேசி அவரை வேறு ஒரு நல்ல மருத்துவமனைக்கு மாற்றலாம் என முடிவு செய்தனர்.


"மங்க, எதுவா இருந்தாலும் தாமு அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்றதுதான் நல்லது. இல்லாம போனா அது தப்பாப்பூடும். அதோட அது கிட்ட தகவல் சொன்னா எந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்னு சொல்லிடும்" என்றான் செல்வம்.


அதில் அவனுக்கு தாமுவின் மேல் இருந்த உச்சபட்ச பயம் வெளிப்படையாகத் தெரிய, சரி என்று ஒப்புக் கொண்டாள் நிலமங்கை.


உடனே அவன் தாமுவுக்கு அழைத்துத் தகவலைச் சொல்லிவிட, எடுத்த எடுப்பில், "முன்னுக்கு முன்னாலயே எதையும் என்கிட்ட சொல்லித் தொலைக்ணும்ன்ற அறிவே இல்லாம, ஏன்டா இப்படி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு என் உசுர எடுக்கறீங்க?" என்றுதான் எரிந்து விழுந்தான்.


"ண்ணா சாரிண்ணா" என்ற செல்வம் கெஞ்சவும், சென்னை புறநகரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொன்னவன், "ஆம்புலன்ஸ் வச்சு அங்க தூக்கிட்டு போயிடுங்க. நான் நேரா அங்கயே வந்துட்றேன். நூத்தியெட்டுக்கு ஃபோன் பண்ணா, அதுவும் இந்த மாதிரி கேசுக்கு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாங்க. அதனால அந்த ஆஸ்பத்திரியிலேயே பேசி பிரைவேட் ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணிக்க.  எவ்வளவு பணம் செலவானாலும் பாத்துக்கலாம்" என்றபடி அழைப்பைத் துண்டிக்கப் போனவன்,


"ஆங், மங்கையோட வண்டிய அங்கயே பார்க்கிங்ல போட்டுட்டு, பொம்பளைங்க மூணு பேரையும் ஆம்புலன்ஸ்லயே அனுப்பிடு, நான் ஆள அனுப்பி அவ வூட்டுல கொண்டு போய் வுட சொல்றேன்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அழைப்பிலிருந்து விலகினான்.


இந்த அளவுக்காவது அவன் ஒத்துழைக்கிறானே என்கிற ஆசுவாசத்துடன் மங்கையும் அதற்கு இணங்க, அங்கேயே ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து, கோவிந்தனை ஏற்றிவிட்டு பெண்களையும் கூடவே ஏற்றி அனுப்பிவிட்டு, பின்னாலேயே தன் இரு சக்கர வாகனத்தில் அந்த ஆம்புலன்ஸைத் தொடர்ந்தான் செல்வம். அதற்குள் மேலும் சில மணிநேரங்கள் கரைந்துவிட்டது.


காது கிழியும் சைரன் சத்தத்துடன் அந்த ஆம்புலன்ஸ் வேகமாகச் சென்று கொண்டிருக்க, கோவிந்தனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்து கொண்டிருந்தது.


கண் திறந்ததும் அவர் முதலில் பார்த்தது மங்கையைத்தான். அதை எதிர்பாராத பாவத்தில் அவரது முகத்தில் ஒரு அதிர்வு தெரிந்தது.


எங்கே இருக்கிறோம் என அவர் சுற்றிலும் பார்வையைச் சுழற்ற, அம்புலன்ஸில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. தன் மகளும்  மனைவியும் உடன் இருப்பது கண்டு உண்டான நிம்மதியில் அவரது விழியின் ஓரம் கண்ணீர் வழிந்தது.


அதைப் பார்த்துவிட்டு  தேவியின் அம்மா அவசரமாக தன் புடவை முந்தானையால் அவரது விழிகளைத் துடைத்து விட, ஜாடை செய்து மங்கையை அருகில் அழைத்தார் கோவிந்தன்.


என்ன ஏது என்று புரியாமல் அவளும் அவருக்கு அருகில் வர, தேவியின் அம்மா வழிவிட்டு நகர்ந்துகொண்டாள்.


"இந்த நேரத்துல நான் ஒன்ன பார்த்தது சாமி செயல்தான்!” என மூச்சை இழுத்துவிட்டு,


 “என்ன மன்னிச்சிடு மங்க!” என்றவாரை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.


 “நீ இந்த ஊருக்கு எவ்ளவோ நல்லது செஞ்சுட்டு இருக்க! ஆனா நானு துட்டுக்கு ஆசப்பட்டு, சேரக்கூடாத காவாலி பசங்க கூட எல்லாம் சேர்ந்துட்டு உனக்கு எதிரா நிறைய கெடுதல் செஞ்சுட்டேன். அதனாலதான் சாமி எனக்கு இப்படி ஒரு தண்டனைய குடுத்துடுச்சு.”


”முன்ன ஒரு நாள்  நீ ரெஜிஸ்டர் ஆஃபீஸ் வந்தல்ல, அன்னைக்கு மெய்யாலுமே நெலத்த கிரயம் செஞ்சி கொடுக்க எந்த ஏற்படும் செய்யல. ஒன்ன அங்க வரவைக்க செஞ்ச செட்டப்புதான் அது! ஒனக்கு தகவல் வரணும்னு சொல்லி, மொத வேலையா செல்வதாண்ட நெலத்த விக்கப்போறதா சொல்லி வெச்சுது தாமு.”


”செல்வம் சொல்லித்தான் வந்தியோ இல்ல எப்புடி அங்க வந்து சேந்தியோ, ஆனா அது நெனஞ்ச மாதிரியே நீ சரியான நேரத்துக்கு அங்க ஓடியாந்த! அத வெச்சி சூட்டோட சூடா கல்யாணத்த பதிவு செஞ்சுடுச்சு”


”ஆனா, தாமு வூட்டு நெலத்த தண்ணி கம்பனிகாரனுக்கு விக்கப் போறாங்கன்னுதான் தோணுது, மங்க!  தாமுவோட நெலத்த வாங்க முதல்ல அவனுங்க என் மூலமாகதான் கேட்டானுங்க. நாந்தான் ஜானாவையும் தாமுவையும் அவனுங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சேன்.”


”இங்க நம்ம ஊர்ல இருக்கிறவன் எல்லாம் வெறும் அல்லக்கைங்க மட்டும்தான். இவனுங்களுக்கு எல்லாம் காக்காக்குளம் ரமேஷுன்னு ஒருத்தன்தான் தலக்கட்டு. அவன் எப்பவாவதுதான் நம்ம ஊர் பக்கம் வருவான்.”


”அவந்தான், யாரோ ஒரு பெரிய அரசியல்வதியோட மச்சான் சிவதாண்டம்ணு ஒருத்தனோட முக்கியமான அடியாளு. அந்த அரசியல்வாதி யாருன்னு கூட எனக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனா, நானே சிவதாண்டவத்த நேருல பார்த்ததில்ல. பேச்சுவார்த்த எல்லாமே ரமேஷாண்ட மட்டும்தான்.


ஆனா, சிவதண்டவத்துகு ஏனோ தாமுவ ரொம்ப புடிச்சி போச்சு! தாமு அடிக்கடி அந்த ஆள நேர்ல பார்த்துப் பேசிட்டு இருக்கறதா கேள்வி! தாமுவோட நெலத்த விக்கிறது சம்பந்தமா தொடர்ந்து பேச்சுவார்த்தைப் போய்க்கினேதான் இருக்கு போல. இன்னும் சரியான பேரம் படியலங்காட்டியும்! ”


”எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், தாமு கேக்கற தொகைக்கு அவங்க  ஒத்துகினா, அந்த நெலத்த பூராவும், ஜனா அண்ணன் அந்த ஆளுக்கு கிரயம் பண்ணி கொடுத்தாலும் கொடுத்துடும். அவங்க கண்டி அத செய்யலன்னா தாமு குடும்பத்துல யாராலயும் நிம்மதியா வாழ முடியாது. அந்தளவுக்கு செஞ்சிருவான் அந்த சிவதாண்டவம்.”


”இதெல்லாம் தெரியாம தாமு இதுல எறங்கல. இன்னும் சொல்லப்போனா உந்தாத்தா கழுத்துல அன்னைக்கு அவனுங்க கத்தி வெச்சது கூட தாமு சொல்லிதான்னு கேள்விப்பட்டேன்”


”எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குது மங்க. படுபாவி பசங்க, நீங்க நல்லதுக்காகச் செய்யப் போற இந்தப் போராட்டத்துல கூட கலகம் செய்ய ஏதோ பெருசா திட்டம் போட்டு வெச்சிருக்கானுங்க! அத பத்தி இன்னைக்கு அங்க போகும்போதுதான் எனக்கே தெரிஞ்சிச்சு! ஆனா என்ன செய்யப் போறாங்கன்னு மட்டும் என்னால முழுசா தெரிஞ்சிக முடியாம போயிடுச்சு.


எதுக்கும் நீயும் ஜாக்கிரதையா இரு, தாமுவையும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு. ஏன்னா எந்தப் பழிப்பாவத்துக்கும் அஞ்சாத கொலைகார கூட்டம் இது" என தன் மூச்சை இழுத்துப் பிடித்து சொல்லிக் கொண்டே போனார்.


மங்கை அவருக்கு மிகவும் அருகில் இருக்கவும் அவளுக்கு மட்டுமே, திக்கித் திணறி அவர் பேசியது ஓரளவுக்குப் புரிந்தது. அதுவும் அவர் சொன்னவற்றைக் கேட்டு உச்சபட்ச அதிர்ச்சியில் அவளது உடல் தடதடக்கத் தொடங்கியிருந்தது. இந்த அளவுக்கு இறங்கி தனக்கு ஒரு துரோகத்தை தாமு செய்வான் என அவள் கனவிலும் எண்ணவில்லை. என்ன இருந்தாலும் இந்தத் திருமணம் என்ற ஒப்பந்தமே இந்த நிலங்களின் பெயரில் எழுதப்பட்டதுதானே?!


அருகிலேயே இருந்த தேவிக்கும் அவளுடைய அம்மாவுக்குமே, கோவிந்தன் என்ன சொன்னார் என்பது தெளிவாகப் கேட்கவில்லை.        "ஒண்ணுமே புரியலையே, என்ன சொல்லுது மங்க?" என்று கேட்டாள் தேவியின் அம்மா கண்ணீருடன்.


அவர் சொன்ன எதையும் வெளியில் சொல்ல மங்கைக்கு மனமில்லை. "ஒன்னும் இல்ல அத்த, வலியில என்னவோ முனகுது" என்று சமாளித்தாள்.


கோவிந்தன் இருக்கும் நிலையில் அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்பது கூட புரியாமல், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "நீங்க எதுவும் கவலைப்படாதீங்க மாமா! நான் தாமு கிட்ட இதையெல்லாம் சொல்லி புரிய வெக்கறேன்" என்று அவரது காதின் அருகில் மென்மையாகச் சொல்ல,


"இன்னைக்கு அங்க வெடிச்ச வெடி கிணத்துல வைச்ச" என்று எதையோ சொல்ல வந்தவருக்கு அதற்கு மேல் எதையும் சொல்ல முடியாதபடி தொண்டை அடைத்தது. மேற்கொண்டு எதையும் பேச முடியாத நிலையில் மீண்டும் மயக்க நிலைக்கே போய்விட்டார் கோவிந்தன்.


குழப்பத்துடன் கையால் தலையைத் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் நிலமங்கை. ஆம்புலன்ஸ் அந்த மருத்துவமனையை அடைந்ததும் துரிதமாக அவருக்கான மருத்துவம் தொடங்கப்பட, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


அவர் தலையில் பலமாக அடிபட்டிருந்தது. அதற்கான அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாய நிலை. அதிகபடியாக இரத்தம் வெளியேறியிருக்க, இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை வேறு!


மருத்துவமனை ஊழியர்கள் அனைத்தையும் விளக்கி, தேவியின் அம்மாவிடம் அறுவை சிகிச்சைக்கு  ஒப்புக்கொள்வதாக, அதற்கான படிவத்தை நிரப்பிக் கையெழுத்து வாங்கினார்கள்.


எவ்வளவு பாடுபட்டும், இரத்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு இதெல்லாம் முடித்து வருவதற்குள் அதிகப்படியாக தாமதமாகிவிட, அவரை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே கோவிந்தனின் உயிர் பிரிந்துவிட்டது.


சரியாக அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் தாமு. அவனுடைய முகத்தைப் பார்க்கவும் பிடிக்கவில்லை, அப்படி ஒரு சூழ்நிலையில் அவனிடம் எதையும் கேட்கும் மனநிலையிலும் இல்லை நிலமங்கை. அவனை எண்ணி அவளது மனம் முழுவதும் தீயாகத் தகித்துக் கொண்டிருந்தது.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page