top of page

Nilamangai - 20

Updated: Mar 16

20. போராளி


நினைவுகளில்…


"எதுவா இருந்தாலும் ஒரு கைப் பார்த்திடுவோம்! நான் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுண்ணா போதும்" என மங்கை ஆக்ரோஷமாகச் சொல்லவும், "என்ன செய்யணும்னு என்ன கேட்டா? எங்கிட்ட இப்போதைக்குத் தெளிவான எந்த பிளானும் கிடையாது. ஏதோ ஒரு நியூஸ் சேனல்ல, முக்கியச் செய்தி அது இதுன்னு பெரிய பில்ட் அப் எதுவும் குடுக்காம, பத்தோட பதினொன்னா வந்த இந்தச் செய்திய பாத்துட்டு அப்படியே ஷாக் ஆகி உங்க எல்லாரையும் இங்க வரச் சொல்லி இருக்கேன்"


"இனிமேதான் நம்ம எல்லாரும் சேர்ந்து என்ன செய்யறதுன்னு பர்ஃபெக்ட்டா பிளான் பண்ணனும். அதுவும் இந்தத் தடவை நீதான் நம்ம போராட்டத்த கோ-ஆர்டினேட் பண்ணும் மங்க" என்று மொத்த பொறுப்பையும் தூக்கி அவள் தலையிலேயே போட்டான்.


மங்கைக்கு வியப்பு தாளவில்லை. கொஞ்சம் பயம் கூட வந்தது. "நானா? என்னண்ணா என்ன கிண்டல் பண்றியாண்ணா நீயி?" என அதிர்ந்தாள்.


"என்ன மங்க, இப்படி ஜெர்க் ஆவுற? நம்ம இந்தக் கூட்டத்துலயே நீயும் சத்யாவும் மட்டும்தான், 'தி யங்கஸ்ட்!' அதுவும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்! அதனால நீங்க ரெண்டுபேரும்தான் இந்தத் தடவை மக்களை எல்லாம் ஒன்றிணைக்கனும்!" என மங்கையிடம் சொல்லிவிட்டு,


 “என்ன புரிஞ்சுதா சத்யா?” எனக் கேட்டான்.


அவன் ஆர்வமுடன் தலை அசைக்கவும், மங்கையை அவன் ஏறிட, “செஞ்சிருவோம்ண்ணா?” என்றாள் தன்னம்பிக்கையுடன். அந்த நொடிப் பொழுது தாமு என்பவன் அவளது நினைவை விட்டே அகன்றிருந்தான்.


"வழக்கத்தை விட இந்த தடவ கூட்டம் ரொம்ப பெருசா இருக்கணும்! எவ்வளவு பேர நேர்ல பார்த்து பேச முடியுமோ பேசி, நிலைமையோட தீவிரத்த புரிய வைக்கணும்! நாம என்ன செய்யப் போறோம் அப்படிங்கற விஷயத்த எல்லாருக்கும் தெளிவா புரிய வைச்சு, வாட்ஸ் ஆப் மூலமா இந்தத் தகவல எவ்வளவு பேருக்குப் பரப்ப முடியுமோ அவ்வளவு பேருக்குப் பரப்பணும்! 


இந்த ப்ரொட்டஸ்ட நாம எங்க தொடங்கி எப்படி எடுத்துட்டுப் போக போறோம்..ன்ற தெளிவு இதுல பார்ட்டிசிபேட் பண்ற ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும். அதைவிட ரொம்ப முக்கியம் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படக் கூடாது!"


”மங்கையும் சத்யாவுமா சேந்து ஒரு பக்கா டூல்கிட் ரெடி பண்ணட்டும். என்ன இருந்தாலும் சின்ன பசங்க. ஆர்வ கோளாறுல எதையும் சொதப்பக் கூடாது. அதனால சீனியர்ஸ் எல்லாரும் அவங்கள மானிட்டர் பண்ணிடே இருங்க. எதாவது சேஞ்சஸ் ஆர் இம்ப்ரூமென்ட் தேவையா இருந்தா சொல்லுங்க! எல்லாருமா சேர்ந்து எக்சிக்யூட் பண்ணுவோம்” என எல்லோருக்குமாகச் சொல்லிவிட்டு, “எதாவது டவுட் இருக்கா?” என்று கேட்க, எல்லோரிடமிருந்தும், ‘இல்லை’ எனற பதில்தான் வந்தது.


"ரொம்ப நல்லது, பனந்தோப்புப்புதூர்ல, இந்த இரசாயன தொழிற்சாலையை ஆரம்பிக்க என்னைக்கு அவங்க அடிக்கல் நாட்ட போறாங்களோ, அதுக்கு நாலஞ்சு நாள் முன்னால நம்மளோட போராட்டத்தை ஆரம்பிக்க ரெடியா இருக்கணும்! அதுக்கு எப்படியும் இன்னும் அம்பதுல இருந்து அறுவது நாளாவது ஆகும். அதுக்குள்ள நம்மளோட மக்களுக்கு எல்லா தகவலும் போய் சேர்ந்து இருக்கணும், அதுவும் ரொம்ப ரொம்ப இரகசியமா" என்று என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கி முடித்தான் திரு.


அந்த நொடி, இதே போன்றதொரு சமுதாய நலனுக்காகப் போராடி தன் உயிரையே கொடுத்த அவனுடைய அப்பா அன்பானந்தனின் நினைவு வந்து அவனது கண்கள் பனித்தன.


அடுத்து செய்யவேண்டியனவற்றைக் குறித்துப் பேச்சுக்கள் வளர, ஒவ்வொருவரும் தங்கள் யோசனைகளைச் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர். ஒருவாறு இந்தக் கூட்டம் முடிந்து அவள் கிளம்பவே மணி ஏழைத் தொட்டுவிட்டது.


இவ்வளவு கூத்துகளுக்கு நடுவில் வண்டிக்கு பெட்ரோல் போடவே மறந்திருக்க, பாதி வழி வரும்போதே நின்று போனது.


வரிசையாக செங்கல் சூளைகளும் ஓர் இரண்டு பால் பண்ணையும் மட்டுமே இருக்கும் அந்த அத்துவான காட்டுப்பாதையில் பெட்ரோலுக்கு எங்கு போக? அதுவும் இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் எல்லாமே அடைக்கப்பட்டு ஆள் அரவமற்று கிடந்தது. குறைந்தது ஐந்து  கிலோ மீட்டராவது சென்றால்தான் பெட்ரோல் பங்க் இருக்கும்.


வேறு வழி இல்லை யாரையாவது அழைத்து உதவி கேட்டாக வேண்டிய சூழ்நிலைதான்.


கதிரும் செல்வமும்தான் நினைவுக்கு வந்தனர். தனக்குத் தெரியாமல் தாமுவுடன் சார்பதிவாளர் அலுவலகம் வரை சென்றதற்குப் பிறகு கதிரின் மேல் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்க, அதன்பின் அவனுடன் பேச்சே வைத்துக் கொள்ளவில்லை நிலமங்கை.


கைப்பேசியில் தொடர்ந்து சிலமுறை அழைத்துப் பார்த்துவிட்டு, ஒருமுறை கூட அவள் அழைப்பை ஏற்காமல் போகவும் தானே ஓய்ந்து போய் அழைப்பதையே நிறுத்திவிட்டிருந்தான்.


செல்வத்தை அழைத்தாலும் நேராக போய் தாமுவிடம் சொல்லி விடுவானோ என்ற சந்தேகம் எழுந்தாலும், 'சொன்னால் சொல்லி விட்டு போகிறான், என்ன செய்து விடுவான் இந்த தாமு' என்கிற அலட்சியம் தோன்ற, பர்ஸில் வைத்திருந்த கைப்பேசியை வெளியில் எடுத்தாள்.


பார்த்தால், தாத்தா மற்றும் சித்தி இருவரின் எண்களில் இருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தன.


அங்கே அவர்கள் பேச்சுக்கு எந்தத் தொந்தரவும் வரக்கூடாது என சைலன்ட்டில் போட்டுவிட்டு அதை மறந்தும் போயிருந்தாள்.


'இது வேறயா?' எனத் தலையில் தட்டிக் கொண்டு தாத்தாவின் எண்ணிற்கு அழைத்தாள்.


"ஏம்மா, ஏம்மா இப்படி என் உசுர வாங்கற? போனா நேரத்தோட திரும்ப வரணும்னு தெரியாதா ஒனக்கு?" என வெகுவாக அவளைக் கடிந்து கொண்டார்.


"கோச்சுக்காத தாத்தா, சுவாதியோட அம்மாவ பாத்துட்டு, அவ கூட பேசிட்டு இருந்ததுல நேரமாயிடுச்சு. இன்னும் ஒரு அரை மணியில வூட்டுக்கு வந்துற்றேன்" என அவரை ஒரு வழியாக சமாளித்து அழைப்பைத் துண்டித்து விட்டு செல்வத்திற்கு அழைத்தாள்.


அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கே வந்து சேர்ந்தான் செல்வம். 


பின்னாலேயே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கதிரும் வர, 'இவன் எங்க இந்நேரத்துக்கு இங்க வந்தான்?' என்று அவனைப் பார்த்து வைத்தாள்.


ஆனாலும் அவனைச் சற்றும் கண்டு கொள்ளாமல், "எப்புடி செல்வண்ண அதுக்குள்ள வந்து சேந்த?" என்ன வியப்புடன் கேட்க,


"இங்க, கணேச நாயக்கர் பால் பண்ணைல பணம் வாங்க வந்திருந்தேன், நான் வர சொல்ல கதிரும் அங்கதான் இருந்தான்! நேரங்கெட்ட நேரத்துல நீ இங்க தனியா நின்னுட்டு இருக்கியே, துணைக்கு இவனை வெச்சிட்டுப் போய் பெட்ரோல் வாங்கிட்டு வரலாம்னு இவனையும் கையோட இட்டாந்துட்டேன்" என விளக்கம் கொடுத்தான்.


கதிர் அவளைப் பரிதாபமாகப் பார்த்து வைக்க, செல்வத்தின் வெள்ளந்தி குணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது மங்கைக்கு. மறுத்து ஏதும் சொல்ல இயலாமல் அமைதி காத்தாள்.


"ஒரு பத்து நிமிஷத்துல வந்துர்றேன், பத்திரமா பார்த்துக்கோ, கதிரு. எதுனா ஒண்ணுன்னா தாமு அண்ணனுக்குப் பதில் சொல்ல முடியாது" என்று வேறு சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் செல்வம்.


அதற்காகவே காத்திருந்தார் போல, "சாரி மங்க, அன்னைக்கு தாமு அண்ணன மீறி என்னால ஒண்ணுமே செய்ய முடியல! அவங்க பக்கத்துலயே இருந்ததால என்னால உன்கிட்ட எதையும் சொல்லக்கூட முடியாம போச்சு" என்றான் கதிர் படபடவென்று.


'என்ன சொல்கிறான் இவன்' என நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தாள்.


"மெய்யாலுந்தான் சொல்றேன் மங்க, அவுங்க நெலத்தையெல்லாம், தண்ணி கேன் கம்பனி காரங்களுக்கு விக்கப் போறதா ஒரு புரோக்கர் மூலமா தகவல் வந்துச்சு. அதுவும், சரியா ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சிருந்தாங்க அன்னைக்கு காலைல"


”உண்மையா பொய்யான்னு தெரியாம உன்கிட்ட எப்படி சொல்றது? அதுவும் அவங்களுக்கும் உனக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கற நேரத்துல நான் எதையாவது சொல்லப் போய், அது தப்பான தகவலா இருந்தா, ஒன்ன எனக்கு குடுக்கலங்கற பொறாமைல, நான் ஏதோ கத காட்றேன்னுதான ஒனக்கு தோணக்கூடாதில்ல?”


"அதான் நேர்ல போய் விசாரிச்சிட்டு உனக்குத் தகவல் சொல்லலாம்னு சொல்லி, இந்தச் சமாசாரத்தைச் சொன்ன அந்த ஆளையே கூட இட்னு அங்க போனேன்"


"ஆனா அந்த ஆளு, தாமுண்ணன் கைக்கூலின்னு அங்க போனதுக்கு அப்பாலதான் தெரிஞ்சுச்சு மங்க. தாமு அண்ணன் கிட்ட நேருக்கு நேரா அவன் என்ன நல்லா கோத்து வுட்டுட்டான்"


"எப்புடியும் இவ்வளவு தூரத்துக்கு வந்திடுச்சு, முழுக்க நெனைஞ்சதுக்கு  அப்பால முக்காடு போடுவானன்னு... 'இதெல்லாம் மங்கைக்குத் தெரியுமா'ன்னு அவங்ககிட்ட நேரடியாவே கேட்டுட்டேன் மங்க" என்றான்.


இடையில் எந்தக் கேள்வியும் கேட்கத் தோன்றவில்லை. ஒரு திடுக்கிடலுடன் அவனைப் பார்த்து வைத்தாள். இவனைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என இவள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட பிறகும், 'இஷ்டம் இல்லனா வுட்ருங்க, யாரும் இவள தொல்ல செய்யக்கூடாது' என்று சொல்லிவிட்டவன், அதன் பிறகு நல்ல நண்பனாகவே நடந்துகொள்கிறான். அவனுக்கென்று தனிக் கொள்கைகள் இல்லை என்றாலும் இவளது செயல்பாடுகளில் இவளுக்குப் பக்கபலமாகவும் நிற்கிறான். அதனால் கதிரைச் சந்தேகிக்கவில்லை நிலமங்கை. தாமுவை எண்ணித்தான் உள்ளம் கசந்தது.


அவள் பார்வையே, 'அடுத்து என்ன?' என்று கேட்டு வைக்க, தொடர்ந்தான் கதிர்.


"உம்மேல அவ்ளோ அக்கறையான்னு நக்கலா கேட்டாங்க. 'உங்க எல்லாரையும் விட மங்கய எனக்கு நல்லாவே தெரியும்! இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து நிப்பா பாரு'ன்னு சொன்னாங்க, மங்க! எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு!"


"நான் இந்த நெலத்த விக்கக் கூடாதுன்னு உனக்கு எண்ணம் இருந்தா, நான் சொல்ற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு பேசாம கெளம்பு! அதுதான் நீ மங்கைக்குச் செய்யற நல்ல காரியம்' அப்படினு சொன்னாங்க. என்னவோ ஏதோன்னு ஆடிப் போயிட்டேன் மங்க! நல்லவேளையா, அது உங்க கல்யாணத்த பதிவு பண்ணதான்னு தெரிஞ்சதுக்கு அப்பாலதான் எனக்கு மூச்சே வந்துச்சு" என்றவன்,  "நான் ஒன்ன கட்டிக்க கேட்டது அவங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல மங்க! அத மனசுல வெச்சிட்டுதான் என்ன கூப்பிட்டு இப்படி பழிவாங்கிட்டாங்கன்னு நெனைக்கறேன். உன் முகத்தைப் பாக்கக் கூட எனக்கு அவ்வளவு சங்கடமா இருக்கு, மங்க!"


"முன்ன மாதிரி நீ என் ஃப்ரெண்டா இல்லன்னாக் கூட பரவால்ல, தயவு செஞ்சு என்ன தப்பா மட்டும் நினைச்சிடாத, மங்க!" என கண்களில் நீர் கோர்க்கக் கெஞ்சினான்.


மனம் அப்படியே கரைந்துபோய்விட்டது மங்கைக்கு.


"சரி விடு கதிரு, அது திமிரு புடிச்சி ஒவ்வொண்ணும் செய்யும்போது நீயுந்தான் என்ன பண்ணுவ?" எனச் சொல்லிக்கொண்டிருக்க, தூரத்தில் தெரிந்த ஹெட் லைட் வெளிச்சத்தைப் பார்த்து, ஏதோ கார் வருகிறது எனத் தங்கள் வாகனங்களை நகர்த்தி ஓரமாக நின்றுகொண்டனர்.


வெளிச்சம் நெருங்கி வர வர, இரண்டு இருசக்கர வணக்கங்கள் என்பது புரிந்தது.


முதலில் செல்வம் அவர்களை நெருங்கி வந்து தன் வாகனத்தை நிறுத்த, அவனுக்குப் பின்னாலேயே வந்து, தன் வாகனத்தை நிறுத்தி, காலை ஊன்றி நின்றான் தாமு!


ஒரு நொடி மங்கைக்குத் திக்கென்றானது. அவள் கேள்வியாகச் செல்வத்தைப் பார்க்க, "பெட்ரோல் பங்க்ல வெச்சு அண்ணன பார்த்தேன் மங்க" எனத் தகவல் சொன்னான்.


உதவிக்குத் தன்னை அழைக்காமல் அவனை அழைத்தில் எவ்வளவு காண்டாகிப் போயிருப்பான் என்பதை எண்ணிப்பார்த்தாள்.


அதற்கு மேல் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அவன் ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லலாம் என மனதிற்குள் ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.


ஆனால் அவள் எதிர்பார்த்தபடி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை தாமு. அதற்குள் செல்வம் அவளது வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப, "இந்த நேரத்துல இங்க நிக்கறது நல்லது இல்ல.‌ கருநாகம் புரளற இடம். சீக்கிரம் கிளம்பு!" என்றான் குரலிலும் சரி முகத்திலும் சரி எந்த ஒரு பாவத்தையும் வெளிக்காண்பிக்காமல்.


ஆனால் அவள் கிளம்பிய நொடி அவனது பார்வை கதிரை ஆழமாகத் துளைத்தது. சங்கடமாக நெளிந்தபடி கதிர் தன் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு எதிர்திசையில் சென்றுவிட்டான்.


இதழில் பூத்த ஒரு கோணல் சிரிப்புடன் தன் வாகனத்தை அவனும் கிளப்ப, "ண்ணா, மங்க பொண்ணு கூப்ட்டுச்சேன்னு பார்த்துட்டு இருந்த வேலைய பாதிலயே வுட்டுட்டு வந்துட்டேன். போயி முடிச்சிக்கினு வந்துறேன். அதான் மங்கைக்குத் தொணையா நீங்க இருக்கீங்கல்ல?" என்று சொல்லிவிட்டு செல்வமும் அங்கிருந்து அகன்றான்.


தாமு அவளை நெருங்கிவருவதற்குள் அவனுடைய பார்வையில் சிக்காமல் எப்படியாவது வீடு போய் சேர்ந்துவிடும் முனைப்பில் வேகமாக வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்ற மங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னே, அவனது புல்லட்டின் வேகத்துக்கு அவளுடைய ஓட்டை ஸ்கூட்டரால் எங்காவது ஈடு கொடுக்க முடியுமா?


அவன் தன்னை நெருங்கி வருவது தெரிந்தும் அவள் தன் வேகத்தைக் குறைக்காமல் செல்ல, அவளைத் தாண்டி வந்து சற்றுத் தள்ளி, அவள் பாதையை மறித்துக் குறுக்காக தன் வாகனத்தை நிறுத்தி நின்றான்.


வேறு வழி இல்லாமல் போக, தன் வாகனத்தை நிறுத்தினாள் நிலமங்கை.


"என்கிட்டயிருந்து தப்பிச்சு ஓடி எங்க போயிடுவ மங்க நீ?" என்று கேட்டான் குதர்க்கமாக.


பதில் சொல்ல இயலாமல் அவனை முறைத்து வைத்தாள்.


"இந்த மொறைக்கற வேலையெல்லாம் என்னாண்ட வேணாம் சொல்லிட்டேன். நல்லபடியா நடத்துட்டா சரி! இல்லன்னா வூட்ட விட்டே வெளிய வர முடியாதபடிக்குச் செஞ்சுருவேன்" என்றான் கறாராக.


"இப்புடி மெரட்டி மெரட்டியே எத்தன நாளைக்குக் காரியத்த சாதிச்சிக்க முடியும்ன்னு நெனைக்கற? ரொம்ப வளைக்காத தாமு, அப்பால மொத்தமா ஒடிச்சிக்கும்" என்றாள் சலிப்புடன்.


"அப்புடி ஓடிச்சிக்கிட்டாலும், அத ஒட்ட வெக்க எனக்கு நல்லாவே தெரியும் போடி" என்றவன், "நேரத்தோட வூடு போய் சேர்ற வழியப் பாரு" என்றான் கர்வமாக.


மேலே மேலே பேசி வார்த்தையை வளர்க்க மனமில்லாமல் சலிப்பு மிஞ்ச வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சென்றாள் மங்கை.


வீடு வரை அவளைத் தொடர்ந்து வந்தவன், அவள் வாகனத்தை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே சென்றபிறகுதான் தன் வீட்டை நோக்கிப் போனான்.


வீட்டுக்குள்ளே நுழைந்ததுமே தாத்தா சித்தி அப்பா மூவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிலுபிலுவெனப் பிடித்துக் கொள்ள, பதில் சொல்ல இயலாமல் தவித்துப் போனாள்.


அவசரமாகப் போய் முகம் கழுவி வந்தவள் தட்டில் சாப்பட்டைப் போட்டு சாப்பிட்டுவிட்டு, நேராகப் போய் படுத்துவிட்டாள்.


உறக்கமே பிடிபடவில்லை. வீட்டில் இருப்பவர் ஒவ்வொருவரும் இப்படி இருக்க, இவ்வளவு பிக்கல் பிடுங்கலை வைத்துக்கொண்டு தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய பொறுப்பை, பிசகில்லாமல் எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என மலைப்பாக இருந்தது.


மற்றவர்களை ஒப்பிடும்போது ஒருவிதத்தில் தாமுவே பரவாயில்லை என்ற எண்ணம் தோன்ற, சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே தேவலாம் என்று தோன்றியது.


அவன் மட்டும் தனக்காக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மற்றவர் தொல்லை இருக்காது என்ற நப்பாசை உருவானது.


அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தநாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாக அவனைத் தேடிச் சென்றாள்.


***


முந்தைய தினம் சந்திப்பு கூட்டத்திற்காகச் செல்வதற்காக உடுத்திருந்த பளிச் நிறப் பருத்திப் புடவையில் இருந்தாள். விழித்து எழுந்ததுமே கூந்தலை உதறிக் கொண்டையாக முடித்து முகம் கழுவி வந்திருந்தாள். முந்தைய தினம் வைத்த சிறிய மெரூன் நிற ஒட்டுப்பொட்டு உதிராமல் பத்திரமாக நெற்றியில் இருந்தது.


அவனுடைய படுக்கை அறைக்கு முன்பாக ஒரு பெரிய கூடத்தின் கட்டுமானம் நடந்து கொண்டிருக்க, தளம் போடப்பட்டு அதற்கு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த சாரக் கொம்புகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்தன. அவற்றுக்கு இடையில் நுழைந்து வந்து அவனது அறைக் கதவை தட்டினாள்.


இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் சிவந்த கண்களுடன் களைத்தத் தோற்றத்திலிருந்தாலும்  பேரெழியிலே உருவாக அவன் கண்களுக்குத் தரிசனம் தந்தவளைப் பார்த்து ஒரு நொடி கிறங்கித்தான் போனான், கதவைத் திறந்த தாமோதரன்.


சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "கல்யாணத்துக்கு முன்னால என்ன தேடி வரவே மாட்டியோன்னு நெனச்சேன்" என்றான் கிண்டல் இழையோட.


நாவடக்கம் இல்லாமல் வாயைக் கொடுத்து ஏதாவது வில்லங்கத்தை விலைக்கு வாங்க கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன், "அது எப்படி வராம இருக்க முடியும்? அதான் உந்தயவில்லாம என்னால எதையும் செய்ய முடியாதுன்ற நெலமயில கொண்டு வந்து நிறுத்தி வெச்சிருக்கியே?" என்றாள் அதே கிண்டல் தொனியில்.


"அப்படின்னா, என்னால உனக்கு ஏதோ வேல ஆக வேண்டியதா இருக்கு அப்படித்தான?" எனக் கேட்டான் அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி.


"இல்லன்னு சொல்லி பூசி மொழுவர வேலையெல்லாம் செய்ய எனக்கு புடிக்காதுன்னு உனக்குதான் நல்லா தெரியுமே! உன்னோட தயவ எதிர்பார்த்துதான் வந்திருக்கேன்" என்றாள் சுள்ளென்று.


எப்பொழுதுமே மங்கையின் சுபாவம் இதுதான் என்பதை நன்று அறிந்தவன் ஆயிற்றே! அதுவும் தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களுக்கெல்லாம் அவள் இந்தளவுக்குக் கூட நடந்து கொள்ளவில்லை என்றால்தான் வியப்பே என்ற எண்ணம் தோன்ற, சிறு புன்னகை அரும்பியது அவனது முகத்தில்.


நகர்ந்து அவளுக்கு வழி விட்டு, "உள்ள வா, ஒக்காந்து பேசலாம்" என்றபடி நேராக போய் தன் கட்டிலில் அமர்ந்தவன், அருகில் தட்டி அவளையும் அமருமாறு ஜாடை செய்தான்.


அவனை முறைத்துக் கொண்டு ஓரமாக கிடந்த நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு அதில் அமர்ந்தவள் தொண்டையைச் செருமி, சொல்ல வந்த விஷயத்தை கோர்வையாகச் சொல்ல தன்னைத் தயார்செய்துகொள்ள, மௌனமாக அவளையே பார்த்திருந்தான்.


அவனுடைய பார்வையில் தடுமாறிப்போய், "அது வந்து, தாமு" என அவள் இழுக்க,


 “அதான் நமக்கு கல்யாணமே முடிஞ்சிருச்சே, இப்ப கூட நம்ம ஊர் வழக்கப்படி, அத்தான்னோ மாமான்னோ நீ என்ன கூப்புட மாட்டியா மங்க” எனக் கேட்டான். அவன் விளையாட்டுப் போல கேட்டாலும் அதில் பொதிந்திருந்த தீவிரம் அவள் மனதுக்குப் புரிய, ஆயாசத்துடன் இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிப் பிடித்துகொண்டாள்.


 “சரி… சரி…” எனத் தொடங்கியவனை மேலும் பேச விடாமல், கைக் காண்பித்துத் தடுத்து, “உனக்கு எல்லாமே விளையாட்டா இருக்கில்ல? மாமன்… மச்சான்… அத்தான்… இப்படியெல்லாம் ஏதோ ஒரு சொந்ததுக்குள்ள ஒன்ன வெச்சி என்னைக்குமே நான் பாத்ததில்ல, தாமு! எப்பவுமே என் மனசுக்கு நெருக்கமான சினேகிதனா ஒன்ன நெனைக்கறதாலதான், என்னால எந்த உறவையும் மொறையும் வெச்சு ஒன்ன கூப்புட முடியல. அது கூடவா ஒனக்குப் புரியல?" என்றாள் வருத்தத்துடன்.


ஐ லவ் யூ… நான் உன்னை காதலிக்கிறேன்… போன்ற வார்த்தைகளின் வேறு மாதிரியான வெளிப்பாடுதான் இது என்பது அவன் மனதிற்குள் உரைக்க உண்மையில் மின்சாரம் தாக்கியது போலத்தான் உணர்ந்தான் தாமோதரன்.


இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது கூட புரியாமல் போக, "சாரி மங்க, நீ சொல்ல வந்தத சொல்லு" என்று இறங்கி வந்தான்.


 “அதில்ல தாமு, நமக்குள்ள எல்லாமே இம்மாந்தூரத்துக்கு வந்ததுக்கு அப்பால, ஒன்ன மீறி என்னால என்ன செய்ய முடியும்னு நெனைக்கிற? எப்புடி இருந்தாலும் நீ அமெரிக்கா போவும்போது நானும் உம்பின்னாலயே ஓடியாரத்தான் போறேன்?" என்று சொல்லிக் கொண்டே போக, "பின்னாலயே இல்ல மங்க, கூடவே! அதுக்குத்தான நீ சொன்ன மாதிரி இம்மாந்தூரத்துக்கு எறங்கி வேல பாத்துட்டு இருக்கேன்" என்றான்.


அதைத் தெளிவாக அவளுக்கு உணர்த்தும் தீவிரத்துடன் அவன் சொல்ல, அவனை எரிப்பது போல பார்த்தவள், "நான் சொல்ல வந்தத சொல்லவா, இல்ல அப்புடியே எழுந்திரிச்சிப் போயிறவா?" எனக் குரலை உயர்த்தினாள்.


"தச்சீ... ஆவுனா எண்ணைல போட்ட கடுகு மாதிரி குதிக்காத! நான் இப்ப உங்கூட சுமுகமாத்தான பேசிகிட்டு இருக்கேன். நீ ஏன் தொட்டதுக்கு எல்லாம் இப்படி எரிஞ்சு விழுந்துகினு கெடக்க" என்றான் தன் நிதானத்தைக் கைவிடாமல்.


செய்யும் அனைத்து வில்லத்தனங்களையும் செய்துவிட்டு நல்லவனைப் போல இவன் பேசுவதைப் பார்த்து உண்மையில் உள்ளுக்குள்ளே கொதிக்கத்தான் செய்தது.


ஆனாலும் இவன் சொல்வது போல கொந்தளித்துக் காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தவள் ஆழ்ந்த மூச்சு எடுத்துத் தன்னை சமன் செய்து கொண்டு, "நீ சொல்ற மாதிரியே எப்படி இருந்தாலும் உன் கூட நான் அமெரிக்கா வரத்தான் போறேன். ஆனா அதுவரைக்கும் நான் இங்க செஞ்சிட்டு இருக்குற இந்தச் சின்ன சின்ன வேலைகள தடங்கல் இல்லாம என்ன நீ செய்ய வுட்டா போதும். அதுதான் என் வாழ்க்கைலயே நீ எனக்குச் செய்ற பெரிய உபகாரமாக இருக்கும். தயவு செஞ்சு நம்ம கல்யாணம் முடியற வரைக்கும் என் போக்குல என்ன வுட்டுடு தாமு. கல்யாணத்துக்கு அப்பால நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கறேன்" என்றாள் மன்றாடுதலாக.


உண்மையில் அவளுடைய இந்த வார்த்தைகள் தாமோதரனின் மனதை மிகவும் சுட்டுவிட்டது.


அவள் கோபமாகவோ திமிராகவோ பேசி இருந்தால் கூட அவனுடைய மனசாட்சி விழித்திருக்காது. அவளுடைய இந்தக் கெஞ்சல் அவனை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது.


அவள் வழக்கமாக செய்யும் சின்ன சின்ன செயல்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறாள் என்கிற நினைப்பில், "நான் என்னவோ உன் கைய கால கட்டி வச்சிருக்கற மாதிரி பேசற! நம்ம கல்யாணத்துக்கு எடஞ்சல் வராத அளவுக்கு நீ என்ன செஞ்சாலும் எனக்கு கவலை இல்ல. நான் ஏன் உனக்கு குறுக்க நிக்கப் போறேன்" என்று இறங்கிய குரலில் பதில் கொடுத்தான்.


ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது நிலமங்கைக்கு. "அப்படின்னா நீயே என் தாத்தாவாண்ட ஒரு வார்த்த சொல்லி வெச்சிடு. அப்பத்தான், 'நீ எங்க போற எங்க வர'ன்னு என்ன கேள்வி கேட்டு அது என்ன கொடையாம இருக்கும். சித்தியும் என்ன தொந்தரவு செய்யாது" என்றாள் கட்டளையாக.


தன்னிடம் அவள் எடுத்துகொள்ளும் சலுகை ஒருவித போதையைக் கொடுக்க, “ஓய், என்னோட சப்போர்ட் ஒனக்கு இவ்வளவு தேவையா இருக்கில்ல! அப்பால எப்புடிடீ ஒன்னால என்ன இப்புடி மெரட்ட முடியுது? பொண்டாட்டின்ற உரிமைய எடுத்துக்கற மாதிரி தெரியுதே!” என்றான் மயக்கத்துடன்.


அவனுடைய குரலில் வெளிப்பட்ட கொஞ்சலில் தடுமாறி முகம் சிவந்து போனாள் நிலமங்கை.


புதிதாக, அவனுடைய அருகாமை ஒருவித படபடப்பையும் பயத்தையும் அவளுக்குள் கொண்டு வந்தது. அவனை ஆணாகவும், அவனருகில் தன்னைப் பெண்ணாகவும் உணர்ந்தாள் முதன்முதலாக! 


வணக்கம் அன்புத் தோழமைகளே!


முதலில் மிகத் தாமதமான இந்த பதிவுக்கு மன்னிக்கவும்.

அடுத்த இரு அத்தியாயங்கள், Flash Back கதையின் Climax என்று கூடச் சொல்லலாம். அதை மட்டும் விரைவாகக் கொடுக்க முயல்கிறேன்.


நான் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இனி பதிவுகள் சற்று தாமதமாகத்தான் வரும். பொருத்தருள்க.


எப்படி இருந்தாலும் டிசம்பர் மத்தியில் நிலமங்கைக்கு 'முற்றும்' போட்டுவிடுவேன் என்பதை நம்பலாம்!


(பெரிதாக வருந்தும் அளவுக்கு எதுவும் இல்லை. நாற்பதுகளின் தொடக்கத்தில் பல பெண்களும் சந்திக்கும் சிறு பிரச்சனைதான். இரும்புச் சத்து சற்று குறைவாக உள்ளதால், அறுவைசிகிச்சை சற்று தாமதம் ஆகிறது அவ்வளவுதான். மற்றபடி சுலபமாகக் கடந்துவந்துவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஒரு சிறிய வேண்டுகோள்! யாரும் Get well soon! stay Strong! போல Comments போடவேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


அன்புடன்

KPN0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page