top of page

Nilamangai - 18

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Mar 16, 2024

18. ஆக்ரோஷம்

நினைவுகளில்...


கழுத்தில் கத்தி வைக்காத குறையாக இந்தப் பதிவு திருமணத்தை அவன் நடத்தி முடித்திருக்க, நிலமங்கைக்கு மனம் ஆறவே இல்லை.


அவனிடம் சொல்லிக் கொள்ள கூட இல்லை, எல்லா நடைமுறைகளும் முடிந்தகையுடன் விறுவிறுவென்று, சார் பதிவாளர் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவள் தன்னுடைய இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு, எப்படி அங்கே வந்தாளோ அதே வேகத்திலேயே திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாள்.


இங்கே வந்தால், தாத்தா, அப்பா, சித்தி, போதாதகுறைக்கு தேவி என ஆளுக்கு ஒரு பக்கமாக அவளைக் கேள்வி கேட்டுக் குடைய, எந்த பதிலும் சொல்லக் கூடிய மனநிலையிலேயே அவள் இல்லை.


இதை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தாமோதரனுக்கு இல்லை போலும், வீட்டில் போய் இதையெல்லாம் சொல்ல வேண்டாம் என எதையும் அவளிடம் சொல்லவில்லை. தெரிந்தால் தெரிந்து விட்டுப் போகட்டுமே என்கிற திமிர்தான். இருந்தாலும் அவனுடைய அகங்காரத்திற்குத் தீனி போட இவளுக்குதான் விருப்பமில்லை. வேண்டுமானால் தானே சொல்லிக் கொள்ளட்டுமே என்று வீம்புடன் இருந்துகொண்டாள்.


 “நான் எங்க போறேன் எங்க வரேன்னு எல்லாத்தையும் உங்க கைல சொல்லிக்கினு கிடக்கணும்னு எந்த அவசியமும் கெடையாது. அதுதான் நீங்க எல்லாரும் நினைச்சது நினைச்ச படி நடக்குது இல்ல, அப்பால ஏன் என்ன நொய்யி நொய்யினு புடுங்கறிங்க” என எரிந்து விழுந்து விட்டு பின் கட்டில் இருக்கும் சிறிய அறையில் போய் முடங்கினாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் கதவைத் தள்ளிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான் தாமோதரன்.


காலையிலிருந்தே எதுவும் சாப்பிடவில்லை. இங்கிருந்து வாலாஜாவரை சென்று வந்த அலைச்சல் வேறு. போதாத குறைக்கு அங்கே வேறு அதிக நேர விரையமாகியிருந்தது.


கொலைப்பசியுடன் வீட்டிற்குள் நுழைந்தவள், மாறி மாறி ஒவ்வொருவராகக் கேள்வி கேட்டு, அறிவுரைகளை வேறு வாரி வழங்கியதில் கொலை காண்டாகிப்போய் அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு வந்து படுத்துவிட்டாள். கை, கால்கள் வெலவெலத்துப் போயிருக்க இப்பொழுது எழுந்து அமரக் கூட உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை.


கயிற்றுக் கட்டிலில் கவிழ்ந்து, தன் கரத்தில் முகம் புதைத்துப் படுத்திருந்தவள், கதவு திறந்த சத்தத்தைச் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. வீட்டில் இருப்பவர் யாரோதான் என்ற எண்ணத்தில் பிடிவாதமாக அசைவற்றுப் படுத்திருக்க,"மங்க" எனக் குரல் கொடுத்தான்.


அதில் உடல் இறுக, ஏனென்று கூட கேட்காமல்  பதில் கொடுக்காமல் அழுத்தமாக அவளிருக்க, அவள் உறக்கத்தில் இல்லை என்பது பார்க்கும்பொழுதே அவனுக்குத் தெரிந்தது.


"ஆனாலும் ஒனக்கு இவ்வளவு வீம்பு ஆகாது, மங்க!  இது நல்லதுக்கே இல்ல" என்றான் கண்டிக்கும் தொனியில்.


அதில் அப்படி ஒரு எரிச்சல் மூள, "ஏன் தாமு, இன்னைக்குப் பொழுதுக்கு இன்னும் வேற ஏதாவது மிச்சம் மீதி வெச்சிருக்கியா? இப்ப எதுக்கு இங்க வேற வந்து என் உசுர எடுக்கற?" என அவனுடைய முகத்தைக் கூட திரும்பிப் பார்க்காமல் எரிந்து விழுந்தாள்.


"ஆமாம், மிச்சம் மீதிக்கு இன்னும் கொஞ்சம் ஃபார்ம்ஸ்ல கையெழுத்து வாங்க வேண்டியிருக்குதான்! ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருந்து என்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பியிருந்தா நான் ஏன் இங்க வரப்போறேன் போறேன். நான் முடிச்சிட்டு வரதுக்குள்ள, சர்ருன்னு நீ பாட்டுக்கு விட்டேன் சவாரினு பொறப்பட்டு வந்தா, என் நேரம் உன் பின்னாலேயே வந்து நிக்க வேண்டியதா கெடக்கு" என்றான் குதர்க்கமாக.


அதில் வெடுக்கென எழுந்து உட்கார்ந்தவள், "என்ன, இன்னும் வேற ஃபார்ம்ல எல்லாம் சைன் போடணுமா?" எனக் கேட்டாள் சீற்றமாக.


பசியில் கோபம் முற்றி, அது ஆற்றாமையாக வெடித்ததில் அவளது உடல் தடதடத்தது. சரியான உறக்கம் இல்லாமல், தலைக் கவசம் கூட போடாமல் வண்டி ஓட்டி வந்ததில் தூசு வேறு விழுந்து, எரிச்சலில் கண்கள் ஜிவுஜிவுயென சிவந்துபோயிருந்தன.


அவளை அளவுக்கு அதிகமாக வாட்டி வதைக்கிக்கிறோமோ என அவனுக்கே கூட சற்றுக் குற்றவுணர்ச்சி உண்டாகவே செய்தது. ஆனாலும் இவளை விட்டுவிட்டால் பின்பு பிடிக்க முடியாது என மனதைக் கல்லாக்கிக் கொண்டு, கையில் வைத்திருந்த படிவங்களை அவளிடம் நீட்டிவிட்டு, பேனாவுக்காக சட்டைப்பையைத் தடவிப் பார்த்தான்.


அதற்குள் அவள் அந்தப் படிவத்தில் பார்வையை ஓட்ட, பாஸ்போர்ட் விண்ணப்பம் என்பது தெரிந்தது.


"ஐயோ" என்ற ஒரு சலிப்புடன் அவனைப் பார்த்து வைக்க, அதைக் கண்டுகொள்ளாத பாவத்தில் அறையை விட்டு வெளியில் வந்தவன்,           "ஓய் ஒழக்கு, கருப்பு மை பேனா இருந்தா கொண்டா" என்றான், ஓரமாக உட்கார்ந்து கைப்பேசியில் பாம்பை விரட்டிக் கொண்டிருந்த வனாவிடம்.


ஒரு தலை அசைப்புடன் அவள் எழுந்து செல்ல, "யக்கா, மங்கைக்குத் துன்ன எதுனா எடுத்துட்டு வா" என, சமயலறையில் இருந்த மகேஸ்வரிக்கு குரல் கொடுத்தவன், "அன்னைக்கு மாதிரி களி, கூழுன்னு கொண்டு வந்து ஊத்தாத! சுடு சோறு இருந்தா எடுத்தா, இல்லன்னா எங்கூட்டுல இருந்து எடுத்தாற சொல்றேன்" என்றான், அவளுடைய குணமறிந்து.


அதில் கடுப்பாகி ஒரு வெட்டு வெட்டி நொடித்தலும், "இங்கயே இருக்கு, போட்டுக் கொடுக்கறேன்" எனப் பதில் கொடுத்தாள் மகேஸ்வரி.


வனா பேனாவைக் கொண்டு வந்து கொடுக்க, "உள்ள போயி உங்கக்காவுக்குச் சோறு வாங்கிட்டு வா" என அவளை அனுப்பிவிட்டு, மறுபடியும் மங்கை இருந்த அறைக்குள் வந்தான்.


அந்த பேனா சரியாக எழுதுகிறதா எனச் சுவரில் மாட்டியிருந்த கேலன்டரில் கிறுக்கிப் பார்த்துவிட்டு மங்கையிடம் நீட்டினான்.


அவள் அந்தப் படிவத்தில் அவன் நிரம்பியிருந்த ஒவ்வொரு தகவலையும் கவனமாகப் படிக்கத்தொடங்க, முகவரி உட்பட தகவல்கள் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. அதில் அவளுடைய முகம் போன போக்கைப் பார்த்து அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.


வாய் விட்டே சிரித்தவனை அவள் வஞ்சத்துடன் பார்க்க, "பின்ன, மேரிட்ன்னு சொன்னா, ஸ்பவுஸ் நேம் என்னோடதுதான வரும்? என் வூட்டு அட்ரஸ்தான குடுக்கணும்?" என்று கிண்டலாகவே கேட்க, குறுக்கு வழியில் போய், திருமண சான்றிதழ் முதல் அனைத்தையும் தயார்செய்து விட்டான் என்பது புரிந்தது.


"பணம் பாதாளம் பாயுது, வேற என்ன?" என எரிச்சலுடன் முணுமுணுத்தபடி பெருக்கல் குறி அடையாளம் வைத்திருந்த இடங்களில் எல்லாம் கையெழுத்தைப் போட்டுவிட்டு, அந்தக் காகிதங்களை அப்படியே கீழே வைத்தாள்.


பாஸ்போர்ட் வரை அவளுக்கு அருகில் அவன்தான் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டல்லவா செய்திருக்கிறான்! உண்மையில் அந்த வார்த்தைகள் அவனது அகம்பாவத் தீயில் எண்ணைதான் ஊற்றியது.


அதற்குள் வனா சாப்பாட்டுத் தட்டுடன் வர, அதைக் கையில் வாங்கிக் கொண்டு, "சரி நீ போ" என்று அவளை அனுப்பிவிட்டு தட்டில் இருந்த சோற்றைப் பிசைந்தான்.


சோறு சூடாக இருக்க, அதன் மேல் ஊற்றி இருந்த கருவாட்டுக் குழம்பு மணமணத்தது. கூடவே வெண்டைக்காய் வதக்கலும் இருக்க, கொஞ்சமாக எடுத்து சுவைத்தவன், "அவிச்ச முட்ட, கத்திரிக்கா, மொச்சக்கொட்டை எல்லாம் போட்டு நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் உன் கைப்பக்குவம் உஞ்சித்திக்கு வரல" எனக் குறைபட்டபடி, ஒரு உருண்டைச் சோற்றை எடுத்து அவளுடைய வாய்க்கு அருகில் கொண்டு செல்ல,       "ஒன்னியும் தேவையில்லை, நானே துண்ணுக்கறேன் குடு" என வெடுக்கெனத் தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.


கையில் வைத்திருந்த சோற்றைத் தட்டிலேயே போட்டுவிட்டு, "எப்படியோ பட்டினி கெடந்து ஒடம்ப கெடுத்துக்காம இருந்தா சரி. நம்ம கல்யாணத்தன்னைக்குக் கொஞ்சமாவது பாக்கற மாதிரி இருக்கணும் இல்ல, அதோட நிச்சயத்தாம்பூலத்தன்னைக்கு நின்ன பாரு அந்த மாதிரி, ஒரு மொழத்துக்கு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூடாது, இப்பவே சொல்லிட்டேன். எப்படி இருந்தாலும் நடக்கிறது நடந்துதான் தீரும் அதனால, இப்படி சுடு சிடுன்னு இருக்கறது எல்லாத்தையும் விட்டுட்டு, எப்பவும் போல கலகலன்னு இருக்கற வழியப் பாரு" என்று முடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான். ஆனால் இனிமேல் அது தனக்கு இயல்பாக வாய்க்கப் பெறுமா என்பது அவளுக்கே புரியவில்லை.


மனசாட்சியை மொத்தமாக கழற்றி வைத்துவிட்டு ஒவ்வொன்றையும் செய்து முடித்து, இப்படி பேசிவிட்டுச் செல்பவனைப் பார்த்து நிலமங்கைக்கு ஆயாசமாக இருந்தது.


***


இதெல்லாம் நடந்து முடிந்து சரியாக பத்தாவது நாள் கடவுச்சீட்டு அவளுடைய கைகளில் இருந்தது. கூடவே திருமணச் சான்றிதழும். வீட்டு வாயிலில் நின்றபடியே கைப்பேசியில் அவளை அழைத்தவன், அவள் வெளியில் வரவும், சாவகாசமாக வாயிற் திண்ணையில் அமர்ந்தபடி இவற்றையெல்லாம் அவளிடம் காண்பித்து விட்டு, கையோடு அதைத் திரும்ப பெற்றுக் கொண்டு தன் வீடு நோக்கிப் போய்விட்டான்.


தனக்குத் திருமணம் முடிந்து விட்டது என்பதையே அவளால் நம்ப முடியவில்லை. கணவன் என்கிற உணர்வு கூட தாமுவிடம் இம்மி அளவும் ஏற்படவில்லை. ஒருவேளை முறையான திருமணம் நடந்து உற்றார் உறவினர் முன், தன் கழுத்தில் அவன் தாலி கட்டிய பிறகுதான் அவனைக் கணவன் என்கிற இடத்திலேயே தன்னால் வைத்துப் பார்க்க முடியுமோ என்னவோ என்றுதான் தோன்றியது அவளுக்கு.


திருமணத்திற்குப் பின்னான நாட்களை நினைத்துப் பார்க்கக்கூட பயமாக இருக்க, மனதிற்குள் அப்படி ஒரு சிந்தனையையே அனுமதிக்கவில்லை நிலமங்கை. அப்படி ஒரு நிதரிசனம் கண் முன் வரும்பொழுது என்ன செய்யப் போகிறோமோ என மனம் பதறியது. இப்படியான யோசனையுடன் அவள் அமர்ந்திருக்க, அவளது கைப்பேசியில் தகவல் வந்த ஒலி அவளைக் கலைத்தது.


அனிச்சையாக அதை எடுத்துப் பார்க்க, "ஃப்ரீயா இருக்கியா மங்க? அவசரமா பேசணும்" என்ற குறுந்தகவல் வந்திருந்தது திருவிடமிருந்து.


அவனுடைய எண்களை அழுத்தியவள்,  "ஏதாவது முக்கியமான வேலையில இருக்கியா மங்க?" என அந்த அழைப்பு ஏற்கப்படவும், "இன்னாண்ணா, எதுனா முக்கியமான சமாச்சாரமா? ஃபோன்ல பேசக்கூடியதா இருந்தா சொல்லுண்ணா! இல்லனா நேர்ல வந்துர்றேன்" என்று பரபரப்பானாள்.


"ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்தாம்மா! எதையுமே ஃபோன்ல சொல்றதுக்கில்ல. உன்னால வர முடியும்னு சொன்னா சரியா நாலு மணி போல நம்ம வழக்கமா மீட் பண்ற இடத்துக்கு வந்துடு, நேர்ல பேசிக்கலாம்" என்று சொல்ல வேண்டிய விஷயத்தைப் பளிச்சென்று சொல்லிவிட்டு அழைப்பில் இருந்து விலகினான் திரு.


அங்கே சென்று வந்தால் எப்படியும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் ஆகிவிடும், சித்தியிடமும் தாத்தாவிடமும் என்ன சொல்லி சமாளிப்பது என்கிற யோசனைதான் அவளுக்கு மூளைக்குள் ஓடியது.


தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயம் கூட திருவுக்குத் தெரியுமா என்பது இவளுக்குத் தெரியாது. மற்றபடி இதுவரை எதையுமே இவள் அவனிடம் சொல்லவில்லை. எதையாவது சொல்லப் போக ஏதாவது சங்கடம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சினாள். இங்கே இருக்கும் வரையிலாவது தன்னால் ஆனதை தன் மக்களுக்குச் செய்ய வேண்டும் எனவே அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.


பக்கத்து ஊரில் இருக்கும் கல்லூரி தோழியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அவரைப் பார்க்க வேண்டும் என்று சாக்குச்சொல்லி, வீட்டில் இருப்பவரிடம் கெஞ்சிக் கூத்தாடித்தான் ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.


திருவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமானவர்கள் என்று பார்த்தால், இவள் உட்பட ஒரு ஏழெட்டு பேர் இருப்பார்கள்.


சுற்றுப்பட்டு பல கிராமங்களில் இருந்து ஒவ்வொருவரும் வர வேண்டி இருப்பதால், எல்லோருக்கும் பொருத்தமான இடமாக கரிகிலி பறவைகள் சரணாலயத்தை இவர்களுடைய சந்திப்பு முனையமாக வைத்திருந்தனர்.


அங்கே இருக்கும் ஏதாவது ஒரு நிழற்பாங்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து தரையிலேயே அமர்ந்தபடி தங்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்துவது தான் அவர்களது வழக்கம்.


மிக முக்கியமான விஷயமாக இருந்தாலே ஒழிய இப்படி இவர்கள் ஒன்று கூடுவது கிடையாது.


இதிலிருந்தே விஷயம் பெரிது என்பது அவளுக்குப் புரிந்து போக, தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள்.


அவள் வருவதற்குள்ளாகவே எல்லோருமே அங்கே வந்து அமர்ந்திருக்க எல்லோரையும் பார்த்து புன்னகைத்தபடி தானும் வந்து அமர்ந்தாள்.


"வரவேண்டியவங்க எல்லாரும் வந்தாச்சுண்ணா!" எனக் கூழாங்கல்லூரைச் சேர்ந்த சத்யா திருவிடம் சொல்ல, "அப்ப பேச வேண்டிய விஷயத்தை பேசலாம்தான?" என்று கேட்டான் திரு.


எல்லோரும் ஆமோதிப்பாக தலையசைக்கவும், தான் பேச வேண்டிய விஷயங்களை மனதிற்குள்ளேயே அசைப் போட்டபடி தெளிவாகப் பேச ஆரம்பித்தான்.


"நம்ம பழைய முதலமைச்சர் உடம்பு சரியில்லாம இறந்துபோனதுக்குப் பிறகு, போன ரெண்டு மூணு மாசமாவே இங்க அரசியல் சூழ்நிலை சரியில்ல. அதுவும் இப்ப தற்காலிக முதல்வரா பதவி ஏத்திருக்கற அருட்பிரகாசம், ரொம்ப மோசமான ஊழல் பேர்வழியா இருக்காரு. ஏற்கனவே நமக்கு அமைஞ்சிருக்கற மத்திய அரசாங்கம் மக்கள் கிட்ட இருந்து எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவையும் சுரண்டுறாங்க! அவங்க தாளத்துக்கு ஆடாம மக்களுக்காக யோசிச்ச முதல்வர நாம இழந்துட்டோம்! இப்ப இருக்கிற இந்த அருட்பிரகாசம் மக்களுக்கு எதிரான பல திட்டங்கள்ல கண்ண மூடிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு இருக்காரு. அதுல ஒண்ணுதான் நம்ம பணந்தோப்புப்புதூர்ல ஆரம்பிக்கப் போற இரசாயன தொழிற்சாலை!" என்று கோபமும் ஆதங்கமுமாக தான் சொல்ல வந்ததை அவன் சொல்லத் தொடங்க, இப்படி ஒரு தொழிற்சாலை இங்கே வருவதால் ஏற்படவிருக்கும் விபரீதங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும் என்பதால் பதறித்தான் போனார்கள்.


"மக்களுக்கு நல்லது செய்யறோம் நல்லது செய்யறோம்னு சொல்லிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆட்சில இருக்கும்போது கொண்டுவர திட்டங்கள் எல்லாமே, நல்லது செஞ்சத காட்டிலும் அதிகமா மக்களுக்குக் கெடுதலத்தான் விளைவிச்சிருக்கு.விறகு தட்டுப்பாடு வராம இருக்க சீமைக் கருவேல மரத்த பூமி முழுக்க வளர வச்சாங்க. அதோட பலனா நம்ம நிலத்தடி நீர் எல்லாம் வத்திப் போனதுதான் மிச்சம்.


பசுமைப் புரட்சின்னு சொல்லி, இரசாயன உரங்களைக் கொண்டு வந்து நம்ம பூமியையும் உணவையும் விஷமா மாத்தினாங்க.”


”பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கிறோம்னு சொல்லி நம்ம நாட்டுக்குள்ள வந்து உட்கார்ந்து எத்தனையோ ஆயிரம் மக்களோட உயிரைப் பறிச்ச போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை நம்மால இப்பவும் மறக்க முடியாது.”


”மெர்குரி தெர்மாமீட்டர ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்ததால, நம்ம கொடைக்கானல் கெட்டுச் சீரழிஞ்சது நம்ம எல்லாருக்குமே தெரியும்.”


”இப்ப நம்ம ஊரைச் சுத்தி இருக்குற சின்னச் சின்ன தண்ணி கேன் ஃபேக்டரில ஆரம்பிச்சு, கூல் ட்ரிங்ஸ் தொழிற்சாலை, பீர் தொழிற்சாலைன்னு எல்லாமே நமக்குப் பெரிய தலைவலியாத்தான் இருக்கு. அதுல இப்போ நம்ம தலைக்கு மேல தொங்குற பெரிய கத்தி, இந்த இரசாயன தொழிற்சாலை.”


”இது மட்டும் நம்ம ஊருக்குள்ள வந்துடுச்சுன்னா, நம்ம மக்களுக்கு வேலை கிடைக்குதோ இல்லையோ நிறைய வியாதிகள் கிடைக்கும்.  அது நம்ம டிஎன்ஏ உள்ளுக்குள்ளேயே போய் உட்கார்ந்து, எதிர் வர சந்ததிகள் வரைக்கும் பாதிக்கும் அபாயம் இருக்கு. அதனால இந்த தொழிற்சாலைய இங்க வர விடாம தடுக்க, ஆரம்பத்துலயே முழு மூச்சோட எதிர்க்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். இப்பவே நாம இத செய்யாம போனா, தும்ப விட்டுட்டு வாலைப் பிடிக்கிற கதையா போயிடும்.”


”இந்தப் போராட்டத்தில் நாம ஒவ்வொருவரும் தீவிரமா இறங்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். இதை ஒரு பெரிய போராட்டமா முன்னெடுக்க உங்க ஒவ்வொருத்தரோட பங்களிப்பும் எனக்குத் தேவ. பர்டிகுலர்லி நம்ம நிலமங்கை மாதிரி, சத்யா மாதிரி காலேஜ் ஸ்டூடண்ட்ஸோட உதவி எனக்கு ரொம்ப ரொம்ப தேவ! கூட இருந்து சப்போர்ட் குடுப்பீங்களா. அண்ட் ரொம்ப முக்கியமான விஷயம் இதுல இறங்கியாச்சுன்னா முன்ன வைக்கிற கால பின்ன வைக்கிறதுன்ற ஒரு ஆப்ஷன் கிடையவே கிடையாது" என்று திட்டவட்டமாகப் பேசி முடித்து அனைவரின் முகத்தையும் அவன் பார்க்க, நிலமங்கைக்கு மற்ற எல்லாமே மறந்து போனது.


"எதுவா இருந்தாலும் ஒரு கைப் பார்த்திடுவோம்! நான் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுண்ணா போதும்" என்றாள் ஆக்ரோஷமாக.


0 comments

Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page