top of page

Nilamangai - 23

Updated: Mar 23

23. புதிர் அவிழ்ந்தது

நிதரிசனத்தில்…


அடுத்த நாள் இருவருக்கும் அமைதியாக விடிந்தது. 


அதிகாலை வழக்கமான நேரத்திற்கு இருவரும் விழித்துவிட, கீழே சென்று இருவருக்குமாகக் காஃபி கலந்து எடுத்து வந்தாள் மங்கை. தேவையற்ற எந்தப் பேச்சும் இன்றி ஒன்றாக அமர்ந்து அமைதியாக அதைப் பருகி விட்டு, அவள் குளிக்கச் செல்ல, உடற்பயிற்சி செய்யச் சென்று விட்டான் தாமோதரன்.‌


அதன் பின் கீழே சென்று புஷ்பாவுக்குக் காலை சிற்றுண்டி செய்ய கூடமாட உதவியவள், உணவு தயாரானதும் அதை எடுத்துக் கொண்டு போய் வேலுவைச் சாப்பிட வைத்து, பிறகு அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பினாள்


"மாமாவும் தாமுவும் சாப்டாங்களாத்த?" என்றபடி சமயறைக்குள் நுழைய,


“அவங்க துன்னுட்டு வேலைய பாக்க பூட்டாங்க, ஆயாவும் சாப்டு போயிடுச்சு. நீ வந்து துன்னு மொதல்ல” என புஷ்பா பதில் கொடுக்க, அவளையும் உடன் அமர வைத்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்தாள்.


எப்படியும் வனாவைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு தாத்தாவும் மற்றவரும் இங்கே வந்து சேர நள்ளிரவு ஆகிவிடும் என்பதால் இங்கேயும் அங்கேயுமாக அன்றைய பொழுதைத் தள்ள வேண்டும்! அடுத்த நாள் காலையிலேயே இவர்கள் இயக்கம் சம்பந்தமான வேலை அவளை உள்ளே இழுத்துக் கொள்ளும். அதன் பிறகு வேறு எதற்குமே நேரம் இருக்காது!


இந்த தாமோதரனை வேறு சமாளித்தாக வேண்டும்! முதலில் இங்கிருந்து கிளம்புவதற்காவது அவன் தன்னை விடுவானா என உள்ளுக்குள்ளே கலவரம் குடி கொண்டது!


யோசித்தப்படியே அவர்களுடைய படுக்கையறைக்குள் நுழைய, ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து இலகுவான தோற்றத்தில் எங்கேயோ கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான் தாமோதரன்.


அவளைப் பார்த்ததும், "சீக்கிரமா கிளம்பு மங்க, என் ஃப்ரண்டு விக்ரம் வீட்டில் இன்னைக்கு நம்மள சாப்பிட கூப்ட்டுருக்காங்க" என்றான், 'நீ என்னுடன் வந்தே ஆக வேண்டும்' என்கிற பாவனையில்.


"என்ன தாமு நேரம் காலம் புரியாம படுத்துற? எனக்கு நெறைய வேலை இருக்கு?" என்று இலகுவாகவே பதில் கொடுத்தாள்.


"இதுவும் உன் வேலையாதான், சரியா? ஏடாகூடம் செய்யாம, பேசாம கெளம்பு" என்றான் உத்தரவாக.


மீண்டும் ஒரு சண்டை, மீண்டும் ஒரு சமாதானம் என நேரம் கடத்த அவளுக்கு அதிகமாக சலிப்புத் தட்டவும் சில நிமிடங்களில் அமைதியாகக் கிளம்பினாள்.


கீழே வீட்டுக்கு வந்தவன், “யம்மா, இன்னிக்கு விக்கி, அவங்கூட்டுக்கு லஞ்சுக்குக் கூப்டான்! அவங்கம்மாவ பாத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொல்லிக்கினு இருந்தியே! நீயும் வரியா?” எனக் கேட்டான் புஷ்பாவிடம்.


“இல்ல தாமு, இன்னைக்கு மாட்டுக்கு ஊசிப் போட டாக்டர வரசொல்லி இருக்கேன், நீ போய்ட்டு வா! அப்பால பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டாள்.


சரியென்று மங்கையை மட்டும் அழைத்துக்கொண்டு கூழாங்கல்லூரில் இருக்கும் விக்ரமின் வீடு நோக்கிக் கிளம்பினான் தாமு.


சில நிமிட பயணத்துக்குப் பிறகு, அடர்ந்த தென்னந்தோப்புக்கு நடுவில் அமைந்திருந்த வீட்டின் வாயிலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்த, கீழே இறங்கி நின்றாள் மங்கை.


குளுமையான அழகிய அந்தத் தோப்பையும் ‘நிலவு தேசம்’ என்ற பெயரைத் தாங்கிய வீட்டையும் பார்த்த மாத்திரத்திலேயே அவளது மனதிற்குள் ஒரு இதம் பரவியது.


அவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “தம்பி, தாமுவும், நம்ம மங்கையும் வந்துருச்சுங்க பாரு” எனக் குரல் கொடுத்தபடி அவர்களை நோக்கி ஓடி வந்தார் செண்பகம்.


அவருடன் கூடவே புன்னைகை முகமாக அவர்களை நோக்கி வந்தவனைப் பார்த்ததும், மங்கை வியப்பின் உச்சிக்கே போய்விட அவளது கண்களில் நேர் கோர்த்தது. அதிர்ச்சி, வியப்பு, மகிழ்ச்சி என அத்துணை உணர்வுகளும் அணிவகுக்க, “திருண்ணா!” எனக் கத்தியேவிட்டாள்.


ஆம், “வா மங்க, வாடா மச்சான்!” என்றபடி அவர்களை வரவேற்றது வேறு யாருமில்லை திருவேதான்!


அதிர்ச்சி விலகாமல் கேள்வியுடன் அவள் தாமுவையும் திருவையும் மாற்றி மாற்றிப் பார்த்து வைக்க, "உள்ள வா, எல்லாத்தயும் இவனே சொல்லுவான்" என்றபடி, நிதானமாக தாமு அவளது தோளில் கைப்போட்டு அவளை வீட்டிற்குள்ளே தள்ளிச் செல்ல, தாமுவின் செய்கையைச் சுட்டிக்காண்பித்து, ‘நீயும் இருக்கியே!’ என்பதாகக் கண்ஜாடை செய்து மகனைப் பார்த்து மலர்ந்து சிரித்தார் செண்பகம். 


அம்மாவை முறைத்தபடி அவனும் உள்ளே செல்ல, “பிளெசன்ட் சர்ப்ரைஸ் திருண்ணா! இப்ப கூட இது நீதான்னு என்னால நம்பவே முடியல!” எனத் தழுதழுத்தவள், “நான் ஒன்ன நெனைக்காத நாளே இல்ல தெரியுமா?!”


”நான் இந்தளவுக்கு, மேல வந்ததுக்கே நீதாண்ணா காரணம். அன்னைக்கு நான் இருந்த நெலமைல, என்ன ஒரு வர்த்த கூட கொறச்சு பேசாம, எனக்குச் சரியான பாதைய காமிச்சு விட்டுட்டு, அப்புடியே காணாம போயிட்டியே!” என்றாள் கண்களில் நீர் திரையிட.


“ஐயோ, என்னம்மா நீயி” எனத் திரு நெகிழ, “ச்சீ லூசு” என அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் தாமு அவளது கண்ணீரைக் காணச் சகிக்காமல்.


"ஓய், இப்புடி பேசிக்கினே நின்னுகினிருந்தா வேலைக்கே ஆவாது! ரெண்டு போரையும் வூட்டுகுள்ள இட்னு வந்து ஒக்கார சொல்லுடா" என்று மகனிடம் சொல்லிவிட்டு,


"யம்மா சங்கரி, பிரிட்ஜுல கலக்கி வெச்சிருக்கிற ஜூஸ க்ளாஸ்ல ஊத்தி எல்லாருக்கும் எடுத்துட்டு வாம்மா" என உதவிக்கு இருக்கும் பெண்ணைப் பணித்தார்.


அவரது அதட்டலில் உணர்வுக்கு வந்தவர்களாக மூவரும் வந்து கூடத்தில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் அமர, சங்கரியும் பழரசக் குவளையை எடுத்து வந்து தேநீர் மேசை மேல் வைத்தாள்.


அதில் ஒன்றைத் தானே எடுத்து மங்கையின் கையில் கொடுத்துவிட்டு அவளுக்கு அருகிலேயே அமர்ந்தார் செண்பகம்.


அவருடைய பார்வை அவளை வாஞ்சையுடன் வருட, அவரது கண்களில் கசிந்த உணர்வில் அப்படியே உருகிப்போனாள் நிலமங்கை.


அவளை விட்டு தள்ளிச் செல்லவே மனமில்லை என்றாலும், “திரு உங்கூட முக்கியமா ஏதோ பேசணும்னு சொல்லிடு இருந்துச்சு! நீங்க பேசிட்டு இருங்க! நான் போய் என்ன சமையல் செய்யனும்னு சங்கரியாண்ட சொல்லிட்டு, கூட இருந்து கவனிக்கறேன்” என்று அவர்கள்  பேச்சுக்கிடையில் அமர்ந்து சங்கடம் கொடுக்காமல் பழரசத்தை வேகமாக பருகிவிட்டு அங்கிருந்து அகன்றார். 


அதீத உணர்ச்சிவசப்பட்டுப் போயிருந்தவளுக்கு தாமு அவளை விக்ரமுடைய வீட்டிற்கு அழைத்துப்போவதாக சொன்னது நினைவுக்கு வரவும் சட்டென தன்னை மீட்டுக் கொண்டாள்.


"உன் ஃப்ரெண்டு விக்ரம் வூட்டுக்குத்தான போவணும் சொன்ன?" என அவனிடம் கிசுகிசுக்க, "ஆமா, அங்கதான் வந்துருக்கோம், பின்ன இதோ இங்க ஒக்காந்துருக்கானே இவன் யாராம்?" என்றான் சர்வசாதாரணமாக.


எதையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், அவனை முறைத்துப் பார்க்கக் கூட வழி இல்லாமல் அவள் திணற, அதை அணு அணுவாக இரசித்தபடி, "மெய்யாலுந்தான் மங்க, இவந்தான், டவுன் ஸ்கூல்ல எங்கூட பத்தாங்க்ளாஸ் வரைக்கும் படிச்ச என் பெஸ்ட் ஃப்ரெண்டு திருவிக்ரமன். அதாவது மங்க, இவன் உங்க எல்லாருக்கும் திரு, என்னைப்போல ஒரு சிலபேருக்கு மட்டும் விக்ரம்" என்றான் விளக்கமாக.


பேச்சற்றுப் போனாள் மங்கை.   


*** 


"திருண்ணா, என்னைக்கு ஒன்ன நேருல பாத்தாலும், மொதல்ல ஒரு சாரியும், அடுத்ததா ஒரு தேங்க்ஸும் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா இப்ப ஒன்ன கண்ணு முன்னால பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்துடுச்சு! நான் சொன்ன சொல்ல காப்பாத்தாம போனதுக்கு சாரி, அதே மாதிரி என்ன வற்புறுத்தி பிஜி பண்ண சொல்லி கோயம்புத்தூர் காலேஜ்ல சேர்த்து விட்டு எனக்கு ஒரு புது பாதைய காட்டிவிட்டதுக்கு  தேங்க்ஸ்" என்று தழுதழுத்தாள் நிலமங்கை.


"அன்னைக்கு நீ வராம போனதுக்கு உன்னோட சூழ்நெல தான் காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும், மங்க. ஆனாலும் கூட பரவால்ல, ஒன்னோட சாரி அக்செப்டட்! ஆனா தேங்க்ஸ், நாட் அக்சப்டட்! ஏன்னா அதை அக்சப்ட் பண்ற உரிம எனக்குக் கெடையாது" என அவளிடம் புதிர் போட்டுவிட்டு, "முன்ன எப்பவோ நடந்து போனத பத்தி இனிமேல் பேசி பிரயோஜனம் இல்ல, அத வுடு! அதைவிட இப்போதைக்கு முக்கியமா நாம டீல் பண்ண வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு.


 நான் உன்னான்ட இப்ப கேக்கற கேள்விக்கு ஒன்னால ஒளிவு மறைவில்லாம பதில் சொல்ல முடியுமா?" என்றுதான் அவளிடம் பேச்சையே தொடங்கினான் திரு.


அவன் எதைப் பற்றி பேச முனைகிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


தாமுவிடம் மறைக்கத் தோன்றிய விஷயங்களை கூட திருவிடமிருந்து மறைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லை. அதுவும் இப்பொழுது அனைத்தையும் தாமு தெரிந்து கொண்டிருக்க, இனிமேல் சொல்வதில் பிரச்சனை எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.


"கண்டிப்பா திருண்ணா! இனிமேல் மறச்சு இரகசியமா செய்யற அளவுக்கு என்கிட்ட எதுவும் இல்ல" என்றாள் தெளிவுடன்.


"டீபிய எதுக்கு காண்டாக்ட் பண்ண?"


ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவன் கேட்ட இந்தக் கேள்வியில் சட்டென அதிர்ந்தாலும், ஓரளவுக்கு எல்லாம் விளங்கிவிட, "ஓ" என்றபடி தாமுவைப் பார்த்து முறைத்தாள்.


"ஓய் அவன என்ன மொறைக்கற, நாங்களே தில்லாலங்கடி… நீ எங்களுக்கு மேல தில்லாலங்கடியா இருந்துட்டு என் மச்சான மெரட்ட வேற செய்வியா?" என்று சிரிக்க, மூண்ட சிரிப்பை அடக்கினான் தாமு.


"எங்ககிட்ட இருக்கற கம்ப்யூட்டர்ஸ், நெட் கனக்ஷன்ஸ் எல்லாமே, நல்லவன் கேட்டவன்னு எந்த ஒரு பாரபட்சமும் பாக்கம, மொத்தமா ஹாக் பண்ணி, ஒவ்வொருத்தன பத்தின தகவலையும் கொத்தோட சுருட்டி வெரல் நுனில வெச்சுக்க தோதா அசம்பிள் பண்ணதுதான்.”


”அத மொதல்ல நீ தெரிஞ்சுக்கணும். அதனால, அன்னைக்கு நீ டீபீ கூட பேசினத்  தகவலெல்லாம், அவன் ஒட்டுக் கேக்க வேணாம்னு நெனெச்சாகூட அவன் காதுக்குள்ள நுழைஞ்சுடும், ஓகேவா” என நண்பனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தவன், 'எங்ககிட்ட' என அவன் பன்மையில் தொடங்கி சொன்னவற்றின் பொருளை கிரகிக்க முய்றவாறு, இடையில் பேசாமல்  மெல்லிய தலையசைப்புடன் பொறுமையாக அவள் காது கொடுக்கவும் தொடர்ந்தான்.


“ஆக்சுவலி, அன்னைக்கு மகாபலிபுரத்துல உன் ஃபிரெண்ட்ஸ் கிட்ட உன்னை டிராப் பண்ணிட்டு அவன் நேரா என்ன பாக்கத்தான் வந்தான். திடீர்னு இவன் டீபீய நேர்ல மீட் பண்ணனும் சொல்லவும் எனக்கே சர்ப்ரைசிங்கா இருந்துச்சு! அதுவும் நீ டீபீ கூட பேசிட்டு இருந்தன்னு சொல்லவும், அப்புடியே ஷாக் ஆயிட்டேன்! எனக்கே இப்படி இருக்குன்னா அவனுக்கு எப்புடி இருந்துருக்கும்னு நினைச்சு பார்த்தேன்! மெய்யாலுமே இவன் நெலம பரிதாபம்தான்னு நெனச்சு சிரிப்புதான் வந்துச்சு!”


”ஏன்னா சில விஷயங்கள, நீ மத்தவங்க மூலாமா தெரிஞ்சுக்கறத விட, இவன் மூலமா தெரிசுட்டா, அது  உங்க உறவுக்கு நல்லதுன்னு நெனைக்கறான்” என்று சொல்லிக்கொண்டே போனான்.


என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமல் அவள் அவனை ஏறிட, “டீபீக்கும் எங்களுக்கும் எப்படி கனக்ஷன்னு சொல்லி, ஏழு வருஷத்துக்கு முன்னால நடந்த கதையெல்லாம் தெரிஞ்சிகிட்டன்னா உனக்கே புரியும், அத அப்பால சொல்றேன்! டீபீ கிட்ட ஒனக்கு என்ன டீலிங்ன்னு நீ மொதல்ல சொல்லு” என்றான். 


"எல்லாத்தையுமே தெரிஞ்சுகிட்டேதான கேக்கற, திருண்ணா? சரி பரவால்ல, சொல்றேன்” எனப் பிகுவுடனேயே சொல்லத் தொடங்கினாள்.


“அராட்டு கெமிக்கல்ஸ் கம்பெனிக்கு எதிரா ஒரு பெரிய ப்ரொடஸ்ட் செய்ய திட்டமிட்டிருக்கோம். உண்மைய சொல்லனும்னு சொன்னா, நான் இப்ப இங்க வந்திருக்கறதே இதுக்குதான்! இதுக்கான டூல் கிட்ட நாந்தான் ரெடி பண்ணேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல… சரியா?”


”ஜனங்கள சேர்த்து, நம்ம ஈசிஆர் ரோட் மொத்தமும், ரோடோட ரெண்டு பக்கமுமா, ஒரு பெரிய மனித சங்கிலி போராட்டத்த ஆர்கனைஸ் செஞ்சுட்டு இருக்கோம்.”


”இங்க நம்ம ஸ்டேட்ல உள்ள எல்லா டிஸ்ட்ரிக்ட்ஸ்ல இருந்தும் சமூக ஆர்வலர்கள் பலரையும் காண்டாக்ட் செஞ்சோம். நாளைக்கு மதியத்துக்குள்ள… அவங்க குட்டி குட்டி குழுவா இங்க வந்து எறங்கிடுவாங்க.”


”ஆரம்பிக்கும்போது இருபதாயிரம் பேர்ல தொடங்கி முப்பதாயிரம் பேர் வரைக்கும் எதிர்பார்க்கறோம். இது மக்கள் கவனத்த இழுத்துச்சுன்னா, ரெண்டு மூணு நாளைக்குள்ள, இந்த ஆயிரம்... சில லட்சங்கள தொடும்.”


”இதுக்கெல்லாம் பவர்ல இருக்கறவங்களும் கார்பரேட்காரனுங்களும் ஒத்துவரலன்னா… மூணாவது நாள் ஒரு பக்காவான இடம் பார்த்து, பந்தல் போட்டு உண்ணாவிரதத்த தொடங்கிடுவோம். அதுக்கு நான் தான் தலைமை தாங்கப்போறேன்.”


”உண்ணாவிரதம் இருக்கற எட்டு பேர தவிர, அங்க கேதர் ஆகர மக்கள் எல்லாருக்கும் சாப்பாடு, தண்ணி, மெடிக்கல் ஃபெசிலிட்டீஸ் எல்லாத்தையும் பக்காவா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கோம்.


அதுக்கு செலவுக்கெல்லாம் ஒரு பெரிய அமௌன்ட் எங்களுக்கு தேவையா இருக்க, உதவி கேட்டு ஃபண்ட் ரைஸ் பண்ணோம். உலகத்துல பல நாடுகள்ல இருந்தும் தன்னார்வலர்கள் கிட்ட இருந்து டொனேஷன்ஸ் வந்து குவிஞ்சிடுச்சு.”


”இப்ப நாங்க ஏற்பாடு செய்யற இந்த ப்ரோட்டெஸ்ட் கடைசி நிமிஷத்துல தான் வெளி உலகத்துக்கு தெரிய வரும். அதுவரைக்கும் இரகசியமாதான் இருக்கும்.”


”அதனால பணத்த மொபலைஸ் பண்ணி எங்களால இங்க ஒடனே கொண்டு வர முடியாது. அதுக்குதான் தோழர் டீபி கிட்ட உதவி கேட்டிருந்தோம். அன்னைக்கு அவர் ஹெல்போட ஃபினான்ஸியல் ட்ரான்ஸாஷன் எல்லாத்தையும் செஞ்சு, பணத்த இங்க இருக்கற சிலரோட வெவ்வேற பேங்க் அக்கவுண்ட்ஸ்க்கு டிரான்ஸ்பர் செஞ்சு முடிச்சேன்" என விளக்கம் கொடுத்தாள்.


மகாபலிபுரம் சென்ற தினம், தாமு தீபனை சந்திக்கவேண்டும் என விக்ரமிடம் கேட்கவுமே, அவனை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.


வனாவின் திருமண வரவேற்பு நடந்த தினம், விக்ரமனுக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் அவனை நேரில் சந்தித்துப் பேசினான் தாமு.


தாமுவின் மனைவியாக இல்லை, சமூக ஆர்வலர் ‘வெணம்’ என்பளாகத்தான் சில மாதங்களுக்கு முன் மங்கை அவனுக்கு அறிமுகமாகியிருந்தாள், ரெஜினா எனும் வெளிநாட்டவர் மூலம்.


ஏழு வருடங்களுக்கு முன் தாமு இவனுக்கு அறிமுகமான பொழுது, கோவையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் அவள் மேற்படிப்பில் சேர, அவன் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாக கல்விக் கட்டணங்களைச் செலுத்தியதுடன் சரி, அதன் பின் அவளைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள அவனுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.


அதுவும் கூட, அந்த அறக்கட்டளையில் வேலை செய்யும் மேலாளருடன் மட்டுமே அவளது நேரடித் தொடர்பு. அதனால் தீபனைப் பற்றி அவளுக்குமே தெரிந்திருக்கவில்லை.


அதனாலேயே வெணம்தான் நிலமங்கை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


மங்கை சார்ந்திருக்கும் இயக்கம் பற்றி அவன் நன்றாகவே அறிந்து வைத்திருக்கவே, அவள் அவனை அழைத்துப் பேசியபோதும், அவளைப் பற்றி தோண்டித் துருவி ஆராய அவன் முற்படவில்லை.


தாமு மூலம் உண்மையை அறிந்ததும் வியந்துதான் போனான்.


ஆனால், மங்கை ஏன் அவனைத் தொடர்புகொண்டு பேசினாள் என தாமோதரன் கேட்டதற்கு, அது தன் தொழில் தருமத்துக்கு எதிரானது என்பதால் அதற்கு பதில் சொல்ல முற்றிலுமாக அவன் மறுத்துவிட்டான்.


சரியாக அதே சமயத்தில் தாமுவுக்கு  ஒரு அழைப்பு வர, அதை ஏற்றுப் பேசவும், அன்று அவர்கள் காரில் பயணம் செய்த பொழுது விபத்தை உண்டாக்கிச் சென்ற கண்டைனர் லாரியைக் கண்டுபிடித்துவிட்டதாக அவனுடைய பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து தகவல் வந்தது.


அந்த லாரியை ஓட்டி வந்தவன், பணத்திற்காக கொலை செய்யும் ஒரு கூலிப்படையைச் சேர்ந்தவன் என்ற தகவலை மட்டும் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு, உடனே, அவனைக் கட்டி வைத்து, கவனிக்க வேண்டிய விதத்தில் பலமாக கவனித்து…  விசாரிக்கும் காணொளியை தாமுவுக்கு அனுப்பினார் அந்த அதிகாரி.


அவன் பேசுவதைத் தற்செயலாகக் கேட்டுக் கொண்டே இருந்த தீபன் என்ன ஏது என்று விசாரிக்க, அனைத்தையும் சொல்லிவிட்டான்.


காணொளி அவனுடைய கைபேசிக்கு வந்த நொடி அலுவலக அறையில் ஏதோ வேலையாக அமர்ந்திருந்த விக்ரமையும் அழைத்து உடன் வைத்துக்கொண்டு, தனது மடிக்கணினியில் அந்தக் காணொளியை ஓட விட்டான்.


முதலில், தன்னை விசாரிப்பவர் யார் எவர் என்பது கூட தெரியாமல், பணம் படைத்தவர்களும் பதவியில் இருப்பவர்களும் பின் நிற்கும் துணிவில் திமிராகத்தான் பேசினான்.


அதன்பின் வாட்டசாட்டமான தோற்றத்தில், கையில் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு தாமுவின் பாதுகாவலர்கள் நான்கு பேர் அவனிடம் கேட்க வேண்டிய விதத்தில் கேட்க, ஒவ்வொரு உண்மையாகச் சொல்லத் தொடங்கினான்.


பணம் கொடுத்து அவனிடம் இந்தக் கேவலமான செயலைச் செய்ய சொன்னது யார்? என்ற கேள்விக்குச் சுலபத்தில் பதில் சொல்லவில்லை அவன்.


தாமுவின் ஆட்களின் கைவண்ணத்தில் அவனது உடம்பு கொஞ்சம் புண்ணாகவும்தான், தான் காக்காகுளம் ரமேஷின் கூலிபடையைச் சார்ந்தவன் என்றும், இந்த வேலைக்கு தன்னை அனுப்பியது  முன்னாள் முதல்வர் அருட்பிரகாசத்தின் மச்சான் சிவதாண்டவம் என்றும் அவனது வாயிலிருந்து சில பெயர்கள் வந்து வெளியே குதித்தன.  


அன்று ரமேஷ் மகாபலிபுரம் கடற்கரையில் வைத்தே மங்கையை நேரில் அடையாளம் காண்பித்திருக்க, அங்கிருந்தே அவர்களைப் பின் தொடர்ந்து வந்து, சரியான சூழ்நிலை அமையவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு வேகமாகச் சென்று விட்டதாகச் சொன்னான்.


மற்றபடி அவளுடைய பெயர் கூட தனக்கு தெரியாது என்றான். அதற்கு மேல் அவர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. ஓரளவுக்கு மேல் ஆடி தாங்க முடியாமல் அவன் மயங்கிச் சரிய அந்தக் காணொளி முற்றுபெற்றது.


அதற்குமேல் அவனுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நன்றாகவே விளங்கியது.


உண்மையில், இந்தத் தாக்குதல் மங்கைக்காக நடந்தது என்கிறபட்சத்தில், ‘என்னதான் செய்துகொண்டிருகிறாள் இவள்?’ என்கிற கேள்வி எழுந்தது.


அவளுடைய உயிருக்கே ஆபத்து எனும்போது, அவளைப் பற்றிய உண்மையை மறைப்பது தவறு என்று பட, “உங்க வைஃப் ஒரு சோஷியல் அக்டிவிஸ்ட்! சரியா சொல்லனும்னா… அவங்க ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர். ரொம்ப பெரிய ஒரு நோபிள் காஸ்க்காகதான் அவங்க இப்ப இங்க வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டு, “


என் வசுமித்ரா கூட இவங்கள மாதிரி ஒரு டஃப் கேரக்டர்தான், அதனால என்னோட அனுபவத்துல சொல்றேன்… மத்த டீடைல்ஸ் எல்லாத்தையும் நீங்களே உங்க வைஃப் கிட்ட கேட்டு தெரிஞ்சுகங்க, தாமு. அதுதான் நல்லது! மத்தபடி அவங்க பாதுகாப்புக்கு என்ன என்ன செய்யணுமோ, அத பக்காவா செஞ்சுருவோம்” என்று புன்னகையுடன் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் தீபன். 


அவளைப் பற்றி விலகாமல் இருந்த மீதிப் புதிரும் இப்பொழுது அவள் மூலமாகவே அவிழ்ந்துவிட  உண்மையில் நிம்மதியாக இருந்தது தாமுவுக்கு.


“ஷ்..ப்பா… ஒருவழியா என்ன செய்யப்போரான்னு சொல்லிட்டாடா யப்பா! இனிமே இவளோட பாதுகாப்புக்கு என்ன செய்யனும்னு பார்த்தா போதும்” என்று தாமு தீவிரமாகத் தொடங்க,


“திருண்ணா, இதெல்லாம் ரொம்ப போங்காட்டம் ஆமாம்! நீங்க கேட்டதும் நான் எல்லாத்தயும் சொல்லிட்டேன் இல்ல! நீங்க சொல்லுங்க, உங்களுக்கு டீபிய எப்படி தெரியும்? எதையோ அப்பால சொல்றேன்னு சொன்னீங்கல்ல, அத சொல்லுங்க மொதல்ல” என தன் இயல்பான முகத்தைக் காண்பித்தாள் மங்கை.


சட்டென சுதாரித்த இருவரும் மாற்றி மாற்றி, ஏழு வருடங்களுக்கு முன் நடந்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினர்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page