top of page

Nilamangai - 16

Updated: Mar 16

16. இணையேற்பு

நினைவுகளில்… 


ஒரு தீர்மானமான முடிவுக்கு வர முடியாமல் இப்படியும் அப்படியுமாக ஊசலாடிக் கொண்டிருந்த சந்தானம், எவனோ ஒருவன் அவர் கழுத்தில் கத்தி வைத்த நொடியே படாரென்று தாமுவின் பக்கம் சரிந்துவிட, அதன்பின் மங்கையின் பேச்சு அவரிடம் கூட எடுபடாமல் போய்விட்டது.


அந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகவே தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தன் காரியம் முழுவதையும் சாதித்துக் கொண்டான் தாமு.


அங்கிருக்கும் அவர்களுடைய நிலங்கள் முழுவதையும் அளக்க சர்வேயர் வருவதாக இருந்ததால்தான், சமயமாக அந்த நேரத்தில் அங்கே வந்ததாகச் சொன்னான் தாமு. நல்லவேளையாக, அவன் அங்கே வராமல் போயிருந்தால் நிலைமை நிச்சயம் மோசமாகப் போயிருக்கும் என்ற எண்ணம்தான் சந்தானத்துக்கு.


இதற்கே, இரத்தக் கொதிப்பு எகிறிப்போய் ஆட்டம்கண்டு போய்விட்டார் கிழவர். அவனே காரை எடுத்துவந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துப்போய் வைத்தியம் பார்த்து வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனான். அவளும் கூடவேதான் சென்று வந்தாள்.


விட்டுவிடாமல் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்த படி, "ஐயோ, எனக்கு ஒண்ணு ஆயிட்டா இந்தப் பொண்ணு நெலம என்ன ஆகுமோ. ஏற்கனவே இதுக்கு ஆத்தாளும் இல்ல, அப்பனும் சரியில்ல, மகேசும் பொறுப்பா நடந்துக்க மாட்டேங்குது. நான் என்ன பண்ணப் போறேன்?" என தாத்தாபாட்டிற்குப் பயத்தில் ஏதேதோ அனற்றியபடி வர, "பயப்படாத பெரியப்பா, அப்படியெல்லாம் எதுவும் நடந்துறாது" என அவருக்கு ஆறுதல் சொல்லியபடி உடன் வந்தான் தாமு. அந்த நேரத்தில், அவர் நல்லபடியாக இயல்புக்குத் திரும்பினால் போதும் என்ற எண்ணம் மட்டுமே அவளை அலைக்கழித்துக் கொண்டிருக்க, ஏதும் பேசும் நிலையிலேயே இல்லை மங்கை.


ஒரு ஊசியைச் செலுத்திய பிறகு அவர் சற்றுத் தெளிய, ஒரு வழியாக எல்லாம் முடிந்து அவர்களை வீட்டில் விட வந்தவனிடம், "எல்லா அனர்த்தத்துக்கும் காரணமே இந்தப் பொண்ணுதான். பெரியவங்க சொல்பேச்சுக் கேட்டு ஒழுங்கா கல்யாணத்து சம்மதிக்காம, எங்கப்பாவ கொழப்பி வுட்டுடுச்சு. இப்ப அதோட உசுருக்கே வேட்டு வெச்சிட்டு வந்து கல்லு மாதிரி நிக்குது" என மகேஸ்வரி தன் பங்கிற்கு எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்ற,


"வுடுக்கா, ஏதோ வெவரம் புரியாம நடந்துக்குது, நிதானமா எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கும்" என்று பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல சொல்லிவிட்டு, அவருக்காக வாங்கிவந்திருந்த மருந்து மாத்திரைகளை அவளிடம் கொடுத்துவிட்டு உடனே கிளம்பிவிட்டான்.


அதன்பின் சந்தானத்தையும் மகேஸ்வரியையும் சமாளிப்பதுதான் அவளுக்குப் பெரும் சவாலாகிப் போனது.


மகள் மற்றும் மருமகனை வைத்துக் கொண்டே, "தோ பாரு மங்க, இனிமேல்பட்டு உம்பேச்ச கேக்கற சூழ்நெலயில நான் இல்ல. ஒண்ணு தாமுவ கட்டிக்கோ! அவனைப் புடிக்கல கட்டிக்கமாட்டேன்னு நீ சொன்னா, கதிருக்கு பேசி முடிக்கிறேன்! ஆனா ரெண்டுல ஒண்ணு நீ முடிவுசெஞ்சுதான் ஆகணும்" என அவளிடம் தீர்த்துச் சொல்லிவிட்டார்.


இப்படி சொல்லும்போது அவளால் என்ன மாதிரியான ஒரு முடிவை எடுக்க இயலும்? "தாமுவ கட்டிக்கறேன்" என்று தன் வாயாலேயே சொல்லவேண்டிய கட்டாயம் உண்டாகிப்போனது நிலமங்கைக்கு!


அதற்கு மேல் நாளைக் கடத்த விருப்பமில்லாமல், ஜனா வீட்டிலிருக்கும் நேரமாகப் பார்த்து அன்றே அங்கே போய், மங்கையைத் தாமுவுக்குக் கொடுக்க சம்மதம் என்று சொல்லிவிட்டார். அதோடு, ஏற்கனவே ஜோசியரைப் பார்த்து, திருமணம் பேச நாள் குறித்து வந்துவிட்டதையும் சொல்லிவிட, அதே நாளில் நிச்சயதாம்பூலமே செய்யும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டான் தாமோதரன்.


காரணம், அதுதான் வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம். ஆனி, ஆடி எனத் தொடர்ந்து வந்த இரண்டு மாதங்களுமே சுப நிகழ்ச்சிகள் செய்ய ஏற்றதல்ல என்பதனால், ஆவணியில் திருமணத்துக்கு நாள் குறித்து, பெண் அழைப்போடு சேர்த்து நிச்சயதாம்பூலம் செய்துகொள்ளலாம் என அவர் தன் எண்ணத்தைச் சொல்ல, எல்லோருக்குமே அது சரியென்றுதான் பட்டது.       


ஆனால் திருமணம் செய்ய, மங்கை தாமு இருவரின் ஜாதகத்துக்குத் தோதாக ஆவணி கடைசியில் ஒரே ஒரு முகூர்த்தம் மட்டுமே அமைந்தது.


திருமணம் முடிந்த இரண்டாவது தினம் அவன் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்வது போல் தேதி அமைய, தாமோதரனுக்கு இருப்பே கொள்ளவில்லை.         


ஒரு தாலியைக் கட்டி எப்படியாவது அவளை அமெரிக்காவுக்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டால், அதன்பின் அவளைச் சரிகட்டிக் கொள்ளலாம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.


ஆனாலும் கூட, இந்த ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்த, இந்த மங்கை எந்த நேரத்தில் என்ன செய்து தொலைப்பாளோ என்கிற பயம் அவனுக்குச் சற்று அதிகமாகவே இருந்தது.


பரவாயில்லை ஆடியிலேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால், அது  தகாத காரியம் என, குடும்பத்தில் ஒருவர் கூட அதற்கு உடன்படவில்லை.


இவர்கள் சொல்லும் நாளில் திருமணம் வைத்துக் கொண்டால், தான் மட்டும் தனியாக அமெரிக்கா செல்ல நேரிடும். கல்யாணம் முடித்து, அதன் அடிப்படையில் விசாவுக்கு விண்ணப்பித்து, அது கிடைத்து அவள் அமெரிக்கா வந்து சேருவதற்குள் மாதங்கள் கடந்தோடிவிடும்.


அதுவும் விருப்பம் இல்லாமல் நிர்பந்தமாக திருமண உறவுக்குள் அவளைக் கொண்டுவரும் பட்சத்தில், கைப்பேசியில் கூட தன்னுடன் பேசமாட்டாளே! அவளில்லாமல் எப்படி நாட்களை ஓட்டுவது என யோசித்தவனுக்கு ஒரு சுலபமான யோசனை தோன்றியது.


அதைச் செல்படுத்திவிடும் முடிவுக்கு வந்தவன், சந்தானம் குறித்து வந்திருக்கும் தேதியில் ஊரையே அழைத்து விமரிசையாக நிச்சயதாம்பூலம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டான்.


அதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்பதால், அதற்கு எல்லோருமே ஏகமனதாக ஒப்புக்கொண்டு, தடபுடலாக ஏற்பாடு செய்துவிட்டனர்.


மண்டபம், சாப்பாடு, ஃபோட்டோ, வீடியோ அனைத்தையும் ஏற்பாடு செய்து, ஊரில் ஒவ்வொரு குடும்பத்தையும், நெருங்கிய உறவினர்களையும் நேரில் போய் அழைத்து, இதற்கிடையில் எதுவும் விடுபட்டுப் போகாத அளவுக்கு ஜவுளிகள் நகைகள் வாங்கி வந்தது வரை எல்லோருமாக சேர்ந்து மின்னல் வேகத்தில், நான்கே நாட்களில் செய்து முடித்தனர்.


அந்த நாளும் வந்து சேர்ந்தது.


***


பட்டுடுத்தி, நகைகள் அணித்து தயாராகியிருந்த மங்கைக்கு உச்சி பில்லை வைத்து முடிந்து, குஞ்சலம் வைத்துப் பின்னல் போட்டுவிட்டாள் தேவி. “ஐ… அக்கா, கொள்ள அழகா இருக்க” என்றபடி பட்டுப்பாவாடை தாவணி அணிந்து, குதூகலமாகத் தயாராகி அவர்களுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள், பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருத்த வனா.


"உச்சி பில்லைய சுத்தி மொதல்ல ஒரு சுத்து மல்லி, அப்பறம் கனகாம்பரம், அப்பறம் ஒரு சுத்து மல்லின்னு சுத்திட்டு, ஜடைல  ரெண்டும் கலந்த மாதிரி அடப்பா வெச்சி விடு தேவி போதும்" என்றபடி சரமாகத் தொடுத்த மல்லி கனகாம்பரத்தை அவளிடம் கொண்டுவந்து கொடுத்தாள் மகேஸ்வரி.


அவள் சொன்னது போலவே தேவி செய்ய, இதெல்லாம் கொஞ்சம் கூட இரசிக்கும்படி இல்லை மங்கைக்கு. ஆனாலும் எதையும் மறுக்கும் நிலையிலும் அவள் இல்லை.


இவற்றிலிருந்தெல்லாம் தப்பி ஓட முடியாத நிலையில்ட பொறியில் அகப்பட்ட எலியைப் போல வசமாகச் சிக்கிக் கொண்டிருந்தாள்.


வாலாஜாபாத்தில் இருக்கும் மண்டபத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, எல்லோருமாகக் கிளம்பினர்.


மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்கிற எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் போனதால் ஊர் மக்கள், நெருங்கிய உறவினர் எல்லோரும் இரண்டு பேருந்திலும் ஏறிக்கொண்டனர்.


கடைசியாக தேவி, வனா, மகேஸ்வரி, புஷ்பா எல்லோரும் உடன் வர மங்கை வந்து பேருந்தில் ஏறி அமர, “நான்தான் அக்காவுக்கு பக்கத்துல உக்காந்துபேன்” என ஓடி வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான் கேசவன்.


அங்கே ஏற்பாடுகளைக் கவனிக்க, சந்தானம், வேலுமணி, ஜனா மூவரையும் காரில் அழைத்துக் கொண்டு ஏற்கனவே சென்றுவிட்டிருந்தான் தாமு.


அன்று தாத்தாவை வீட்டில் கொண்டு வந்துவிட்டபோது பார்த்ததுதான், அதன்பின் இந்த நொடி வரை அவள் கண்களில் படவில்லை அவன். ‘அப்படியே நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும் கூட, பேசிக்கொள்ள என்னதான் இருக்கிறது இருவருக்குள்ளும்? அதுதான் தான் நினைத்ததை நினைத்தபடி நடத்திக்கொண்டானே!’ என்ற எண்ணம் மங்கைக்கு உண்டாகிவிட்டிருந்தது.


மேடையில் இருவரையும் அருகருகே உட்கார வைத்து, சடங்குகள் செய்து இலக்கணப் பத்திரிக்கை வாசித்து, அதில் வேலுமணியும், ஜனாவும் கையெழுத்துப் போட்டு முடிக்கும் வரை கூட அவனுடைய முகத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உண்மையில் அவனுடைய முகத்தைப் பார்க்கக்கூட அவள் விரும்பவில்லை என்பதே உண்மை.


ஊருக்காகக் கூட போலியான ஒரு முகத்தைக் காண்பிக்கத் தெரியாமல் அவள் முகம் இறுக்கி உட்கார்ந்திருக்க, அவளது விருப்பமின்மை அப்பட்டமாக வெளியில் தெரிந்தது.


வந்தவர் போனவர் எல்லோருக்கும் இது புரிந்திருந்தாலும், வெளிப்படையாக யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.


இதெல்லாம் தாமுவை எரிச்சலடையச் செய்யாமலா இருக்கும்?! பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தான்.


மற்றபடி வேறெந்தக் குறையும் இல்லாமல் இந்த வைபவம் நல்லபடியாக நடந்து முடிய, அடுத்து வந்த நான்கைந்து நாட்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீராகச் சென்றன.


***


எல்லா வேலைகளையும் பார்க்கத் தோதாக இருக்கும் எனத் திருமணம் முடியும் வரை, மங்கை அவளுடைய அப்பாவுடனும் சித்தியுடனும் அவர்கள் வீட்டில் இருப்பது என முடிவாகியிருந்து.


இயல்பாக எங்கும் போக விடாமால் வரவிடாமல் ஏகப்பட்ட கெடுபிடிகள் வேறு. குறிப்பாக தாமுவின் வீட்டிற்கு அவள் போகவே கூடாது எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் தாத்தா. மகேஸ்வரியின் மூர்க்கத்தனமான கண்காணிப்பு வேறு.


உச்சபட்ச எரிச்சலில் இருந்தாள் மங்கை. அந்த நேரம் பார்த்து எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றவென அங்கே வந்து சேர்ந்தாள் தேவி.


பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சையில் மொத்தமாக நான்கு பாடங்களில் தோல்வி அடைந்திருந்த தேவி, இந்த மூன்று வருடங்களாக முட்டி மோதி மூன்று படங்களில் தேறியிருந்தாள். இந்தக் கணிதம் மட்டும் அவளைப் பாடாகப் படுத்த, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மங்கையிடம் வந்து பயிற்சி எடுப்பாள்.


விரைவிலேயே அடுத்தக்கட்ட பரீட்சைகள் வரவிருக்க, அன்று காலையே வேலைகளைச் சீக்கிரமாக முடித்துக்கொண்டு மங்கையைத் தேடி வந்துவிட்டாள்.


ஏற்கனவே தொட்டதற்கெல்லாம் மங்கையோடு முட்டிக்கொண்டு நிற்க இந்த மாதிரி ஒரு நேரத்தில் அவள் அங்கே வந்தது மகேஸ்வரிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.


"ஏந்தேவி இப்போ இம்மாந்தூரம் மண்டைய ஒடச்சிக்கினு படிச்சு பாஸ் பண்ணி இன்னாத்த சாதிக்க போற நீயி? இந்த செல்வம் பயலெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டான். அவன்...லாம் ஒரு ஆளுன்னு நம்பி, கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு புடிவாதம் புடிச்சுட்டு ஒக்காந்திருக்காத! அதான் உங்க அப்பன் ஒனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடுச்சு இல்ல! பொருத்தமா எவனையாவது பார்த்து கட்டிக்கிட்டு நிம்மதியா குடும்பம் நடத்துவியா, அத வுட்டுட்டு! வுழுந்து வுழுந்து மூணு வருஷம் படிச்சி, தோ டிகிரியும் வாங்க போகுது! இது மட்டும் என்ன சாதிச்சிடுச்சாம்! தாமுவ கட்டிக்கிட்டு அமெரிக்கா போயி, எந்த பிக்கல் புடுங்கலும் இல்லாம சொகுசா இருக்கப் போவுது" என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாசுக்காகக் குத்திக் காண்பித்தாள்.


அவளுடைய இந்தப் பேச்சு தேவியை வேதனைப் படுத்தியதென்றால் மங்கையின் அகங்காரத்தைக் கிளறி, எக்கச்சக்கமாக உசுப்பேற்றிவிட்டது. அதுவும் தேவியின் கலங்கிய கண்களைப் பார்த்ததும் சித்தியின் மேல் அவளுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் உண்டானது.


கூடுமானவரைத் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஏஞ்சித்தி, இவ்வளவு தெளிவா பேசறல்ல? அப்பால ஏன் வனாவ வுழுந்து வுழுந்து படிக்க வெக்கற. நானாவது கவர்மெண்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியத்துலதான் படிச்சேன்! ஆனா உம்பொண்ண நீ பிரைவேட் ஸ்கூல்ல இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்து படிக்க வெக்கற? தேவையா இதெல்லாம்? பேசாம அவ படிப்பையும் நிறுத்தி, அது மேஜரானதும் எவனையாவது பார்த்துக் கட்டி வெச்சுடு! சர்தான நான் சொல்றது?" என அவள் பாணியிலேயே பதில் கொடுத்தாள்.


இதைக் கேட்ட தேவி வேறு மூண்ட சிரிப்பை அடக்க, மகேஸ்வரிக்கு சுறுசுறுவென்று ஏறிப் போனது. மேற்கொண்டு இவளிடம் வார்த்தையை வளர்த்தால், அது சந்தானம் வரையில் போய் பெரிய பிரச்சனையாகும் என்று புரிய, எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றாள்.


"அது கெடக்கு விடு தேவி! எஞ்சித்திய பத்திதான் ஒனக்குத் தெரியுமே" என்று இலகுவாகச் சொல்லிவிட்டு, "நீ புக்கையும் நோட்டையும் எடு! நான் ஒனக்குச் சொல்லிக் கொடுக்கறேன்" என்றாள் மங்கை.


அதற்குள் படிக்கும் ஆர்வம் அவளுக்கு முற்றிலும் வடிந்து போயிருக்க, "ப்ச்" எனச் சலித்துக் கொண்டாள்.


"ஏய் இப்ப என்னடி வந்துடுச்சு?" என்று மங்கை குறைபட, "உனக்குத் தெரியாது மங்க! செல்வத்தோட ஆயா இன்னடான்னா, அப்பனாத்தா இல்லாத புள்ளன்னு சொல்லி, செல்லம் கொடுத்துக் கொடுத்தே அத சீரழிச்சிபுடுச்சு! அதென்னடான்னா பொறுப்போட வேல வெட்டிக்குப் போகாம, யாருக்கும் அடங்காம, பொதி எரும கணக்கா  ஊற சுத்தி ஊர்வலம் வந்துக்கினு கெடக்கு. அதுகண்டி தரவுசான ஆளா இருந்துச்சுன்னா, எப்பவோ வூட்ட விட்டு வெளிய வந்து அதுக்குக் கழுத்த நீட்டியிருப்பேன்" என்றாள் ஏக்கம் ததும்ப.


"நீங்க எல்லாருமே ஏன் இப்படி செல்வண்ணன தப்பாவே பாக்கறீங்கன்னு எனக்குப் புரியவே இல்ல தேவி! நீ நெனைக்கற மாதிரி ஆளில்ல அது. சூதுவாது தெரியாத வெள்ளந்தி! ஆனா நல்ல தெறமசாலி. அதுக்கு தானா போய் ஒண்ணு செய்யத்தெரியாதே தவிர, சொல்றவங்க சொல்ற விதத்துல சொன்னா, வெட்டிகினு வான்னா வேரோட புடுங்கிகினு வரும்! உன் சாமர்த்தியம் கூட சேந்தா, அது நல்லாவே முன்னுக்கு வந்துரும். அத நீ கட்டிக்கினா, ஒன்ன நல்லா பாத்துக்கும் தேவி" என்றாள் செல்வத்தை நன்கு அறிந்தவளாக.


"வேலிக்கு ஓணான் சாட்சியா, உன்கூட சேந்து அது, இயக்கம் அது இதுன்னு சுத்துது பாரு, அதுனாலதான் எங்கப்பாவுக்கு அதக் கண்டாலே ஆவமாட்டேங்குது" என்று சுள்ளென்று சொல்லிவிட்டு, மங்கையின் முகம் கடினமாக மாறவும், பட்டென தன் வாயில் அடித்துக் கொண்டு, "மன்னிச்சிக்கடி, ஒரு வேகத்துல சொல்லிட்டேன்" என்றாள்.


"பரவால்ல தேவி, நாங்க செய்யற வேல ஒண்ணும் தப்பானதும் இல்ல! உங்கப்பா மாதிரி ஆளுங்க செய்யறதும் நல்லதுமில்ல. நாங்க ஊர் நன்மைய நெனைக்கறோம்! உங்கப்பா என்னடான்னா, சேரக்கூடாத ஆளுங்க கூட சேந்து ஊற அடிச்சி ஓலைல போட பாக்குது. அது என்னைக்கா இருந்தாலும் அதும் பக்கமே திரும்பப் போகுது பாரு! அன்னைக்குதான் உங்க எல்லருக்கும் புத்தி வரும்" என்றாள் வருத்தம் மேலிட.


அவள் சொன்னதில் பொதிந்திருந்த நியாயம் மனதச்சுட, தன் தகப்பனின் செயல்கள் ஒவ்வொன்றையும் மனதிற்குள் கணக்கிட்டுப் பார்த்தாள். கடந்த வாரம் கூட அவளுடைய அம்மாவை அழைத்துப் போய் ஐந்து பவுனுக்கு நகை எடுத்து வந்திருந்தார். 'எங்கிருந்து வந்த பணம் அது?' எனப் பலவாறாக எதையெதையோ சிந்தித்தவளின் மனது அப்படியே சுணங்கிப் போனது.


 “நீ சொல்றது கூட ஒரு விதத்துல உண்மதான் மங்க" எனக் குற்றவுணர்ச்சி மேலோங்கச் சொன்னவள், "இம்மாம் துட்டு சம்பாதிக்க என்ன செய்யுது, எங்க போகுது, எங்க வருதுன்னு ஒரு எழவும் புரிய மாட்டேங்குது! இன்னைக்கு காலைல கூட எங்கப்பா யார்கூடயோ பேசிட்டு இருந்தப்ப, தாமுண்ண பேரு அடிபட்டிச்சு. ஏதோ பவரு கிவருன்னு பேசிக்கினு இருந்துச்சு. ஆங், ஏதோ நெலத்த கைமாத்த, 'சரியா பத்து மணிக்கு தாமுவ ரெஜிஸ்டர் ஆஃபீசுக்கு இட்னு வந்துர்றேன்'ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு மங்க. ஆட்ட கடிச்சு மாட்டக் கடிச்சு, கடைசில தாமுண்ணன் தலையிலயே கை வெச்சிடுச்சோ என்னவோ! எவங்கிட்ட கமிஷன் வாங்க என்ன குட்டிக்கரணம் அடிக்குதோ தெரியல!" என்றாள் எதார்த்தமாக.


அந்த விஷயத்தின் தீவிரம் புரியாமல் அவள் என்னவோ வெகு சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் மங்கைக்குத்தான் மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது.


"என்னடீ சொல்ற, தாமு நெலத்த விக்க போகுதா?" எனக் கேட்டாள் அதிர்ச்சி விலகாமல்.


 “அதென்னவோ தெரியலியே, ஏன்டீ என்னாச்சு?" என நிலைமையின் தீவிரம் புரியாமல் அவள் இழுக்க, "ஒண்ணும் இல்ல, நீ பழைய கொஸ்டின் பேப்பர் எதையாவது எடுத்து சால்வ் பண்ணிட்டு இரு, தோ வரேன்" என்று சொல்லிவிட்டு, தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு புழக்கடை நோக்கிச் சென்றாள்.


அவளது கைபாட்டிற்கு வரிசையாக எண்களை அழுத்த, அந்த அழைப்பு ஏற்கப்பட்டது. ஆனால் எதிர்முனை அமைதி காக்க, "தாமு" என்றாள் தயக்கத்துடன்.


அடுத்த நொடியே, "பரவால்ல, என் நம்பரெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்க" எனக் கேட்டான் குதர்க்கமாக.


அதற்கெல்லாம் அசராமல், "நீ இப்ப எங்க இருக்க?" என அதிகாரதொனியில் கேட்டாள்.


தான் போட்ட திட்டம் நன்றாக வேலை செய்கிறது என்கிற அகம்பாவத்தில், "வாலாஜா சப் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்லதான்" என மிகவும் இலகுவாக பதில் கொடுத்தான்.


பட்டென அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, நேராக வந்து தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பி வேகமாகச் செலுத்தத் தொடங்கியவள் அடுத்த சில நிமிடங்களில் தாமுவின் எதிரில் வந்து நின்றிருந்தாள்.


எவ்வளவு வேகமாக வாகனத்தைச் செலுத்தி வந்திருந்தால் இவ்வளவு சீக்கிரமாக வந்திருப்பாள் என்று புரிய, இந்த விஷயத்தில் அவளுடைய தீவிரத்தை எண்ணி அதிர்ந்துதான் போனான் தாமோதரன்.


பரபரப்பான அந்த இடத்தில யார் யாரோ கூடி இருக்க, அங்கிருந்த ஒரு மரத்தடிக்குத் தனியாக அவளை இழுத்து வந்தவன், "அறிவில்ல ஒனக்கு, ஒரு ஓட்ட ஸ்கூட்டிய வெச்சுக்கிட்டு மெயின் ரோட்டுல எவ்வளவு வேகம் வந்திருந்தா இவ்வளவு சீக்கிரம் வந்தருப்ப? வண்டி பொரட்டிக்கினு வுழுந்து மூஞ்சி முகர பேராம தப்பிச்சுதே" என எரிந்து விழுந்தான்.


"என் மேல அவ்வளவு அக்கறையா தாமு ஒனக்கு?"


"பின்ன ஒன்ன மாதிரியா? என் வருங்கால பொண்டாட்டி மேல எனக்கு அக்கற இருக்காதா?"


"இதெல்லாம் மட்டும் நல்லா வக்கனையா பேசு, ஆனா சொன்ன வார்த்தைய மட்டும் காப்பாத்தாத!"


"இல்ல தெரியாமத்தான் கேக்கறேன், நான் என்ன வார்த்தய சொல்லிட்டு அத காப்பாத்தலயாம் இப்ப? நீ தான் கொஞ்சம் சொல்லேன்!"


"தாமு" எனப் பற்களை கடித்த படி, "நீ உன் நெலத்த அசலூர்காரனுக்கு விக்கப் போறியா?" எனக் கேட்டாள் ஆதங்கத்துடன்.


"ஓ அத சொல்றியா? முதல்ல என் ஆயாவும் அம்மாவும் வந்து உங்கூட்டுல பொண்ணு கேட்டுச்சு இல்ல, அப்பவே நீ சரின்னு சொல்லி இருந்தா..தான் நம்ம ஒப்பந்தம் செல்லுபடியாகி இருக்கும். அப்ப வேணாம்னு சொல்லிட்டு, உன் வசதிக்குத் திரும்ப வந்து நீ சரின்னு சொன்னா, அதுக்காகல்லாம் என்னால உன் இஷ்டத்துக்கு வளைய முடியாது” என்றான் காராராக.


 “எப்படி பேசற தாமு நீ... ஆனாலும் இதெல்லாம் ரொம்ப அநியாயம் சொல்லிட்டேன். இனிமேல இந்தக் கல்யாணத்த யாராலயும் நிறுத்த முடியாதுன்ற திமுருலதான இதெல்லாம் செய்யற?”


 “நம்ம கல்யாணத்த யாராலயும் நிறுத்த முடியாது… ஹ்ம்ம்? அப்படியா சொல்ற? அப்பறம் எந்த தெகிரியத்துல கோயமுத்தூர் காலேஜ்ல ரெகுலர்ல படிக்க பீஜிக்கு அப்ளை செஞ்சிருக்கியாம்? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன், கல்யாணம் முடிஞ்சி எங்கூட அமெரிக்கா வர ஐடியாவே இல்லியா ஒனக்கு? இல்ல கல்யாணத்த நிறுத்த ஏதோ ஒரு திட்டம் போட்டு வெச்சிருக்கியா?” என அவன் கேட்ட கேள்வியில் ஆடியே போய்விட்டாள்.


 “அப்படின்னு யார் சொன்னாங்க உன்கிட்ட?” எனத் தன்னைச் சமாளித்தபடி கேட்டாள்.


 “நான் நெலத்த கிரயம் செஞ்சு கொடுக்க இங்க வந்திருக்கற தகவல உங்கிட்ட யார் சொன்னாங்க? எனப் பதில் கேள்வி கேட்டான்.


இரண்டு தினங்களுக்கு முன், என்னவென்று கூட சொல்லாமல் செல்வத்தின் கைப்பேசியை வாங்கி, ஆன்லைன் மூலம் மேற்படிப்புக்கு அவள் விண்ணப்பித்திருக்க, உண்மையில் விவரம் புரியாமல் செல்வம் அரைகுறையாக உளறி வைத்ததில்தான் இந்தத் தகவலையே அறிந்தான்.


அவள் இடக்காக ஏதும் செய்தால், அப்பொழுது உபயோகிக்க இப்படி ஒரு ஆயுதத்தை அவன் தயார் நிலையிலேயே வைத்திருக்க, சமயம் பார்த்து உபயோகப் படுத்திவிட்டான்.


தங்களுடைய நிலங்களை விற்கப் போவதாக செல்வத்திடம் சொல்லப் போக, மங்கையின் பக்கம் நின்று ஆயிரம் கேள்விகள் கேட்டு வருந்தினான்தான். ஆனாலும் ஒரு கட்டத்தில் எந்த கருத்தும் சொல்ல வழி இல்லாமல் விட்டுவிட்டான்.


இன்றைய தினம் பத்திரப் பதிவு வைத்திருக்கும் தகவல் வரை செல்வத்துக்கு நன்றாகவே தெரியும். மங்கை மீது இருக்கும் அக்கறையில், ஒன்று விடாமல் அவளிடம் போய் சொல்லிவிடுவான் எனத் திண்ணமாக நம்பி மங்கையின் வருகைக்காக முந்தைய தினம் முதலே காத்திருந்தான் .


ஆனால், செல்வத்துக்கு இவன்மேல் இருக்கும் அபிமானம், அவனை இவனுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேச விடாது என்பதை அறியாமல்போனான்.


அந்த எண்ணத்தில் இவன் இப்படிக் கேட்க, தேவியின் பெயரைச் சொல்ல விரும்பாமல், “அத இன்னாத்துக்கு நான் இப்ப உன்னாண்ட சொல்லணும்?” எனக் கேட்க,


 “நீ சொல்லாம போனா, யாருன்னு எனக்குத் தெரியாதா?” என்றவன்,


 “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு, எப்பாடுபட்டாவது நம்ம கல்யாணத்த நிறுத்திடலம்னுதான பீ.ஜிக்கு அப்ளை பண்ண?” என அதிலேயே நின்றான்.


உண்மையில், இந்த நொடி வரை அவளிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எதையாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற அசட்டுத் துணிச்சல் மட்டுமே! இவன் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவாள்? ஏதும் சொல்ல வழி இன்றி அசந்துபோய், “அப்படில்லாம் எதுவும் இல்ல, தாமு” என்றாள் உள்ளே போன குரலில்.


அவளது இந்த நிலைமையைத் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டவன், “அப்படின்னா, அத இப்பவே இங்கயே ப்ரூவ் பண்றியா?” எனக் கேட்டான்.


 “அது எப்படி முடியும்?”


 “இப்பவே, இங்கயே என்ன கட்டிக்கறேன்னு சொல்லு! நான் நம்பறேன்”


 “ப்ச்… அத நான் தனியா வேற உன்னாண்ட சொல்லனுமா? அதான் ஊரக் கூட்டி நிச்சயம் செஞ்சாச்சே?”


 “நான் அத சொல்லல, நீ இப்பவே சரின்னு சொல்லு! இந்தப் பத்திரப் பதிவெல்லாம் கேன்சல் பண்ணிட்றேன், இங்கயே, இப்பவே, நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்! நீயும் சரி, நானும் சரி எதுக்காகவும் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணத் தேவையில்ல! உன்னோட விசா ப்ராசஸையும் ஒடனே ஸ்டார்ட் பண்ணிடலாம். நான் யூ.எஸ் போகும்போது உன்னையும் கூடவே இட்னு போக எனக்கு வசதியா இருக்கும்” என அலுங்காமல் நலுங்காமல் ஒரு பெரிய குண்டைத் தூக்கி அவள் தலையில் போட்டான்.


 “அதெப்படி முடியும், தாமு? அதுக்கு, முன்னாலயே நம்ம ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட டாகுமென்ட்ஸ் எல்லாம் கொடுத்துப் பதிஞ்சிருக்க வேணாமா? இன்னும் நிறைய பார்மாலிடீஸ் எல்லாம் இருக்கே?” என உண்மையிலேயே நிலைமை புரியாமல் கேட்டாள்.


 “அத பத்தி உனக்கென்ன கவல? நீ சரின்னு மட்டும் சொல்லு! மத்தத நான் பாத்துகறேன்! இல்லன்னா கோவிந்தன் இட்டுனு வந்திருக்கற பார்டிக்கு எங்க எடத்த பதிவு பண்ணிக் கொடுத்துட்டு, அவன் கொடுக்கற துட்ட வாங்கிக்கினு போயினே இருக்கேன்!” என அவளை ஒரு நெருக்கடியான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தினான்.


மேலும் மேலும் ஆட்டம்கண்டுதான் போனாள்.


அதற்குப் பிறகு அவள் எப்படி எப்படியோ பேசிப் பார்த்தும் பலனில்லாமல் போனது! முடிவான முடிவாக அவனுடைய பிடிவாதமே வென்றது!


ஒரு பூமாலை கூட இல்லாமல், இருவர் குடும்பத்திலும் ஒருவருக்குக் கூடத் தெரியாமல் இவர்களுடைய பதிவுத் திருமணம் நடந்தேறியது.


இவன் பக்க சாட்சியாகக் கையெழுத்துப் போட்டது தேவியின் அப்பா கோவிந்தன் என்றால், மங்கையின் சார்பாகச் சாட்சிக் கையெழுத்துப் போட்டவன்?


வேறு யாருமில்லை, கதிர்தான்!தாமுவை திட்ட வேண்டும் என்று யாருக்கவது தோன்றினால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! அடுத்த எபி படிச்சிட்டு மொத்தமா வெச்சு செய்யலாம்! மற்றபடி இந்த எபி பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்!


1 comment

1 Yorum

5 üzerinden 0 yıldız
Henüz hiç puanlama yok

Puanlama ekleyin
Misafir
09 May
5 üzerinden 5 yıldız

Nice epi.👌

Beğen
© KPN NOVELS COPY PROTECT
bottom of page