top of page

Nilamangai - 14 (4)

Updated: Mar 11

14. மங்கையின் போராட்டங்கள்


4. பயம்


நேராக வீட்டிற்கு வந்து பார்க்க, வேப்பமரத்தின் அடியில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார் தாத்தா. அருகினில் கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது அவரது பார்வை நிலைத்திருந்தது.


இவளைப் பார்த்ததும் வலியின் வேதனையுடன் குரல் கொடுத்த பசு அப்படி இப்படியும் நடக்க, "அச்சச்சோ, செவப்பிக்கு வலி கண்டுடுச்சாங் காட்டியும்" என்றபடி ஓடிப்போய் அதன் கழுத்தில் தடவிக் கொடுத்து மெதுவாக வயிற்றையும் தடவினாள்.


அவளது ஸ்பரிசத்தில் சற்று அமைதி கொண்டது அந்தப் பசு.


"எல்லாம் நார்மலாதான் இருக்கிற மாதிரி தெரியுது தாத்தா. அதுவாவே ஈந்துடும்னுதான் தோணுது. இல்லன்னா எதுக்கும் டாக்டர வரச் சொல்லி ஃபோன் பண்ணிடலாமா?" என்று கேட்டபடி அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.


"டாக்டர்லாம் தேவையில்ல, தானாவே கன்னு போட்டுடும். தேவன்னா அப்பால கூப்டுக்கலாம்" என்றார் தாத்தா.


"நம்மூடுங்கள்ல எல்லாம் ஒரு பசுமாடு கண்ணு போட இருந்தா, ஒரு கல்யாணங்காட்சிக்குக் கூட போவாம வீட்டோட இருந்து எவ்வளவு கவனமா பாத்துக்கறோம்? அது கண்ணு போட்டதுக்கு அப்பால, அத்தோட நச்சுக்கொடிய கூட நாய் நரி தீண்டாம பத்திரமா எடுத்துட்டுப் போய் பச்சை மரத்துல கட்டி வச்சி, தண்ணி சுட வச்சு அதும் இடுப்புல ஊத்தி, பார்த்து பார்த்து ஆகாரம் கொடுத்து, கண்ணு குட்டிக்குக் கஞ்சி வச்சு ஊத்தி கவனமா பாத்துக்கறோம். ஆனா வூட்டுல பொறந்த பொண்ணுங்களோட விருப்பு வெறுப்பு பத்தி மட்டும் கவலப்பட மாட்டேங்கறோமே! ஏந்தாத்தா?" எனக் கேட்டாள் குரலில் அப்படியே பரிதாபத்தைத் தேக்கி.


அதுவரை இருந்த இலகு நிலை மாறி, "நீ இப்ப இன்னா சொல்ல வர மங்க?" எனக் கேட்டார் தாத்தா கண்டனமாக.


"நான் இப்ப இன்னா சொல்லிட்டேன்னு உனக்கு இம்மாம் கோவம் வருது, அஆங்? நீ கண்டி சித்தியோட விருப்பத்துக்கு மதிப்பு குடுத்து, அது இஷ்டப்படி கட்டிக் கொடுத்திருந்தா, இப்படி திருப்தி இல்லாம, பொழுதன்னிக்கும் அது மனசு குமஞ்சிட்டு கிடந்திருக்காதில்ல" என்று எதைச் சொன்னால் பதில் சொல்ல முடியாமல் அவர் திணறுவார் என்று தெரிந்து, சரியாக அதைச் சொல்ல,


அவள் எதிர்பார்த்தது போலவே, "அதுனால, நீ செய்யறது எல்லாம் சரி, நான் செய்யறது மட்டும் தப்பு அப்படின்னு சொல்ல வரியா?" என்று புகைந்தார் ஆற்றாமையுடன்.


"அம்மாவோ பாட்டியோ கண்டி இப்ப இருந்திருந்துச்சுன்னா என் மனச புரிஞ்சுக்குமோ என்னவோ? உனக்குதான் புரியவே மாட்டேங்குது" என அவர் மனதை மேலும் பலவீனப்படுத்தினாள்.


"எனக்கு ஒன்ன புரியாம இல்ல, நீ தான் மங்க என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்கற" என்றார் வருத்தம் மேலிட.


தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதரைப் பார்த்து அவளுக்குமே வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் தாமோதரன் தன் இஷ்டப்படி எல்லோரையும் வளைப்பது அப்படி ஒரு கோபத்தைக் கொடுக்க, எக்காரணம் கொண்டும் தன் பிடியை நழுவ விடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.


"தாத்தா இந்த நத்த இருக்குல்ல நத்த, அது வேக வேகமா நகந்து மரத்து உச்சியில் போய் உக்காந்துக்குமாம், நீ எப்பயாவது பார்த்து இருக்கியா?" என்று கேட்டாள் எதையோ விளக்க முற்படும் பாவத்தில்.


"என்ன மங்க, இப்படி குடாக்கு மாதிரி பேசற? நத்த எங்கையான வேகமாக நவுருமா? அதுவும் மரத்து உச்சியில போய் உக்காருமா?" என்று கேட்டார் சலிப்புடன்.


"தானா அப்படி நவுறாது தாத்தா, ஆனா, லூகோகோரிடியம் பாராடாக்சம்ன்னு ஒரு ஒட்டுண்ணி தட்டை புழு இருக்குது. அது பறவை எச்சம் மூலமா நத்தையோட வயித்துக்குள்ள போயி அங்க ஒக்காந்து முட்ட வெச்சி நிறைய புழுவ உற்பத்தி செய்யும். அந்த ஒட்டுண்ணியில ஆம்பள பொம்பளைன்னு தனித்தனியா ரெண்டு பாலினம் கிடையாது. ஒரே புழு ஆம்பள பொம்பள ரெண்டும் சேர்ந்ததா இருக்கும். அதனால அதோட இனப்பெருக்கம் அந்த நத்தைக்குள்ள சுலபமா நடந்துட்டே இருக்கும்.”


”அப்பால, புழுக்களோட எண்ணிக்க கூடிட்டே போயி, அந்த நத்தையோட ஒடம்பு முழுக்க ஆக்கிரமிச்சிடும்.


கொஞ்சம் கொஞ்சமா அந்த நத்தையோட மூளை குள்ள போயி அத வசியம் செஞ்சி, தன் விருப்பத்துக்கு ஆட்டி வைக்க ஆரம்பிக்கும். அதாவது, அந்த நத்த உசுரோட இருக்கற மாதிரி தெரிஞ்சாலும்,  கிட்டத்தட்ட அது செத்துப்போன மாதிரித்தான், ஆச்சா" என்று அவர் கவனிக்கிறாரா என அவரது முகத்தைப் பார்த்தாள்.


"ஏம்மங்க, இதெல்லாம் உம்பாட புத்தகத்துல இருக்கா, இல்ல வாங்கிக்கினு வந்து குவிக்கிறியே அந்தப் புத்தகத்துல படிச்சி தெரிஞ்சிக்கினியா? நீ சம்பாதிக்கற பாதி துட்டு இந்த புக்கெல்லாம் வாங்கவே போயிடுது" எனப் பெருமூச்சு விட்டபடி, 'இந்தப் பொண்ண படிக்க வெக்காமயே இருந்திருக்கலாம், எல்லாம் அதால வந்த கொடைச்சல்தான்' என எண்ணிக் கொண்டார்.


அவரது முகம் போன போக்கிலேயே அவரது எரிச்சல் புரிந்தாலும், "அதெல்லாம் இருக்கட்டும், நீ முழுசா கேளு தாத்தா" என விடாப்பிடியாகத் தொடர்ந்தாள்.


மாட்டின் மீது ஒரு பார்வையை வைத்தபடி, அவருமே கடனே எனக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.


"அதாவது நம்ம ஆளுங்க மூளைல ஏதாவது பாதிப்பு உண்டானா, கோமாக்குப் போடுவாங்க இல்ல, அது போலத்தான் தாத்தா இது. அதாவது அந்த ஒடம்பு மட்டும் நத்தையோடது, உசுரு அந்த தட்ட புழுவோடது" என்றவள், "தாத்தா, நத்தைக்குக் கண்ணு எங்க இருக்கும் தெரியுமா ஒனக்கு? எனக் கேட்டாள்.


அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது லேசாகப் பிடிபட, தலையில் அடித்துக்கொண்டே, "அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்றார்.


"ப்ச்... தாத்தா, அதோட தலைல ரெண்டு கொம்பு மாதிரி இருக்கும் இல்ல, அதோட நுனியிலதான் நத்தைக்குக் கண்ணு இருக்கும். இந்த புழுங்க, சரியா அந்த கொம்புக்குள்ள போய், அந்த நத்தய வேகமா மரத்தோட உச்சிக்குப் போக வைக்கும்.


அப்ப அந்த கொம்புக்குள்ள இருக்கற புழுங்க, பச்ச செவப்புனு கலர் காலரா உள்ளுக்குள்ளேய நெளிஞ்சினு இருக்கும். இந்த நத்த மரத்தோட உச்சிக் கிளைக்கு வந்த உடனே, அப்படி டாலடிக்கற அந்த நத்தய பார்க்கற பறவைங்க அத கப்புன்னு புடிச்சி துன்னுப்புடும். அப்பால, அது வேற எங்கயாவது போய் எச்சம் போடும். அத துன்னுட்டு நத்தைங்க, அதுங்களுக்கே தெரியாம தன்னையே அழிச்சிட்டு இந்தப் புழுவோட இனத்த பெருக்கும்” என முடித்தவள், எந்தளவுக்கு தான் சொன்னதை அவர் உள்வாங்கிக்கொண்டார் என்கிற யோசனையுடன் அவருடைய முகத்தை உற்று நோக்கினாள்.


ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது சந்தானத்திடமிருந்து.


"நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுதா தாத்தா" எனக் கேட்டாள்.


"தாமுவ ஒட்டுண்ணின்னு சொல்ற, அதான?" எனக் கேட்டார், 'நான் ஒன்னும் முட்டாள் இல்லை' என்கிற பாவனையில்.


"சரியா புரிஞ்சிகிட்ட தாத்தா, அத மட்டும் நான் கட்டிக்கிட்டா, இந்த ஒடம்பு மட்டும்தான் எந்தா இருக்கும், மத்தபடி என் உசுரு... என் அறிவு... எல்லாத்தையும் அதோட கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிக்கும். நீயே சொல்லு, என்னால அப்படி ஒரு வாழ்க்க வாழ முடியுமா? நான் நடைப்பிணம் மாதிரி ஆகிப்புட மாட்டனா தாத்தா?" எனக் கேட்டாள் ஆணி அடித்தாற்போல.


"உங்கைல இருக்கற கட்டப் பார்த்தலே எனக்கு வவுத்த கலக்குது மங்க. இன்னும் கூட காச்சல் அடிச்சிக்கினு கெடக்கு பாரு! இயக்கம் கியக்கம்னு சொல்லிக்கினு கொஞ்சமும் அடங்காம நீ சுத்துறதால, உன் பாதுகாப்புக்காக என்னால இத விட்டா வேற என்ன முடிவுக்கு வர முடியும் சொல்லு?" எனக் கேள்வி கேட்டார்.


"தாத்தா, முந்தாநா, அவனுங்க என்ன வேணும்னே வெட்டல தெரிஞ்சிக்க. அது எக்குத்தப்பா நடந்த விபத்து. உண்மையில அவனுங்களே பயந்து போயி கெடக்கறானுங்க. செல்வண்ண கிட்ட வேணா கேட்டுப் பாரு! திரு அண்ணனை மீறி எம்மேல கை வெக்க எவனுக்குத் துணிச்சல் வரும் சொல்லு.”


”அன்னைக்கே அது எனக்கு ஃபோன் பண்ணிச்சு. வுட்டா கெளம்பி வந்திருக்கும். தாமுக்குப் பயந்துட்டுதான் நான் அத இங்க வரவேணாம்னு சொல்லி வெச்சிருக்கேன். அது கண்டி இங்க வந்துச்சுன்னா தாமுக்கும் அதுக்கும் முட்டிக்கும். அது இருக்கற தெகிரியத்துலதான் சொல்றேன், நீ பயப்படாத, எனக்கு ஒன்னியும் ஆவாது" என்றாள் அதீத நம்பிக்கையுடன்.


அதற்கு அவர் பதில் சொல்லக் கூட அவகாசம் கொடுக்காமல், மாடு அவர்களைப் பார்த்தபடி சத்தமாகக் கத்த, கன்று வெளியில் வந்துவிட்டது புரிந்தது.


அதை நோக்கி வேகமாகப் போன மங்கை, வெளியில் வந்த அதன் கால்களைப் பக்குவமாகப் பிடித்து இழுக்க, வழுக்கிக் கொண்டு முழுவதுமாக வெளியில் வந்து விழுந்தது.


அதன்பின் அவர்கள் கவனம் முழுவதும் கன்றுடனும், அதனை ஈன்ற மாட்டுடனும் சென்றுவிட, அந்தப் பேச்சு அப்போதைக்குத் தடைபட்டது.


ஆனால் சந்தானம் மட்டும் நன்றாகக் குழம்பிப் போய்விட்டார் என்பதே உண்மை.


***


அடுத்த நாள் மாலை, தயார் செய்து வைத்திருந்த சீம்பால் கட்டிகளை இரண்டு தூக்குச்சட்டிகளில் போட்டு எடுத்துக் கொண்டு, முதலில் மகள் வீட்டிற்கு வந்த சந்தானம் அதை அவளிடம் கொடுத்துவிட்டு, பொதுவாக சில நிமிடங்கள் பேசிவிட்டு, பின்  தாமுவின் வீட்டிற்கு வந்தார்.


கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த வரலட்சுமி அவரைப்  பார்த்ததும், "வா சந்தானம்" என்று அழைக்க, அருகில் வந்து உட்கார்ந்தவர், "எங்க புஷ்பாவ காணும்?" என்றபடி தூக்குச்சட்டியை அவரிடம் நீட்டினார்.


"எதோ வாங்கணும்னு சொல்லி ஜனாவோட கூட பெரிய காஞ்சீவரம் வரைக்கும் போயிருக்குது" என பதில் சொல்லிக்கொண்டே அந்த தூக்குச்சட்டியை வாங்கி அதை திறந்து பார்த்தவர், "அட, சீம்பாலு! மாடு கன்னு போட்டுருக்காங் காட்டியும்? என்ன கன்னு?" எனக் கேட்டார் மகிழ்ச்சியுடன்.


"பொட்ட கன்னுதான் சித்தி"


"நல்ல சமாச்சாரம்தான? அத சந்தோஷமா சொல்லாம, ஏன் ஆளே டல்லடிக்கற, வேல அதிகமா?"


"ப்ச்... அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தி, எல்லாம் இந்த மங்க பொண்ண பத்தின கவலதான். நம்ம சொல் பேச்சு கேட்டுட்டு, எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குது. எதையெதையோ பேசி மனச கொழப்புது"


"அட நீ போ சந்தானம், ரெண்டுகெட்டான் பொண்ணு, அதுக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்ன்னு அதும்பேச்ச கேட்டுக்கினு கெடக்க? நாமதான் எது சரியோ அத பாத்து செய்யணும்"


"அப்படிலாம் இல்ல சித்தி, அது வயசுக்கு அது தெளிவாத்தான் பேசுது. நாமதான் புள்ளைங்கள புரிஞ்சிக்க மாட்டேங்கறோம். அன்னைக்கும் மகேசு இப்புடித்தான் புடிவாதம் புடிச்சிது. இதே மாதிரி 'இதுக்கு என்ன தெரியும்?'ன்னு இந்த பூங்கொடிதான் சொல்ல சொல்ல கேக்காம அத அவ தம்பிக்குக் கட்டி வெச்சுது! கடைசில என்ன நடக்குதுன்னு பாக்கறோம் இல்ல! ஒரு தடவ பட்ட சூடே போதும் சித்தி, ஆனா இத எப்படி உன்னாண்ட சொல்றதுன்னுதான்" என இழுத்தார் ஆற்றாமையுடன்.


அவர் பேசியதையெல்லாம் கேட்டபடி, அவருக்குப் பின்னே வந்து நின்ற பேரனைப் பார்த்த வரலட்சுமிக்கு முகத்தில் ஈ ஆடவில்லை!


அவரது பார்வை சென்ற திசையில் சந்தானமும் திரும்பிப் பார்க்க, "பரவால்ல பெரிப்பா, அவ ஆட்டமா ஆடினா நீதான் என்ன செய்வ? வுடு நடக்கறது நடக்கட்டும்” என்றான் தாமு வெகு இயல்பாக.


அவனது இந்த இலகுவான பேச்சில் சந்தானம் சற்று ஆசுவாசம் அடைந்தார் என்றால், உள்ளுக்குள்ளே பதைபதைத்தார் வரலட்சுமி பேரனை அறிந்தவராக.


***


என்னதான் மங்கைக்காக யோசித்தாலும், அவளது நடவடிக்கைகள் எதுவுமே சந்தானத்துக்குப் பிடிக்கவில்லை. அவளது பாதுகாப்பைப் பற்றிய அச்சம் வேறு! அதனால் அவளிடம் முகங்கொடுத்துப் பேசுவதையும் தவிர்த்தார். தாமுவும் அவள் கண்ணெதிரில் வராமல் போக, அப்படியும் இப்படியுமாக இரண்டு நாட்கள் அமைதியாகச் சென்றன.


மூன்றாம் நாள் விடியலில், அவர்கள் கழனியில் கொஞ்சம் வேலை இருக்கக் கிளம்பி வந்திருந்தார் சந்தானம். அவருக்கு உதவியாக மங்கையும் வந்திருக்க, வயல்வெளியில் உழவு மாடுகளை மேய விட்டுவிட்டு, அவற்றை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வரப்பைச் சீர்செய்து கொண்டிருந்தாள் மங்கை.


எதிர்ப்பக்கமாக ரோட்டைத் தாண்டியிருந்த பூங்காவனத்தின் கழனியில் ஏதோ சலசலப்பு உண்டாகியிருப்பது தெரியவும், இருவருமாக அங்கே சென்றனர்.


அன்று போலவே ஒருவன் அவர்கள் வரப்பைத் தள்ளிக் கொண்டிருக்க, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார் பூங்காவனம்.


"எத்தன தடவ சொன்னாலும் அடங்கவே மாட்டியா அண்ண நீயி? அன்னைக்கே கொலை முயற்சின்னு சொல்லி உம்பேர்ல கேஸ் கொடுக்காம விட்டது தப்பா போச்சு" என அவள் ஆத்திரத்தில் எகிற, அவளை இழுத்துப் பிடித்தார் சந்தானம்.


சரியாக அதே நேரம் பின்னாலிருந்து வந்த மற்றொருவன், சந்தானத்தைப் பலமாக இழுத்து அவர் கழுத்தில் அரிவாளை வைத்தபடி, "எங்க வேணா போய் கம்பளைண்ட் குடு, நாங்க பார்த்துக்கறோம்... கொல முயற்சின்னு கம்பளைண்ட் கொடுக்கறத விட, இந்த ஆள இப்படியே ஒரே சீவா சீவிப் போட்டுட்டுப் போறேன்... கொலன்னு சொல்லியே கம்பளைண்ட் குடு" என்றான் திமிராக.


பதற்றத்தில் சந்தானத்துக்கு கண்கள் சொருகிக் கொண்டு வர, என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்து நின்றாள் நிலமங்கை.


செல்வத்துடன் தற்செயலாக அங்கே வந்த தாமோதரன் இதைப் பார்த்துவிட்டு, நொடி கூட தாமதிக்காமல் அவன் மீது பாய்ந்து கழுத்தில் பலமாகத் தாக்கினான்.


அந்தத் திடீர் தாக்குதலில் தடுமாறிப்போன அந்த அடியாளின் பிடி தளர, அப்படியே கையை வளைத்துக் கத்தியைப் பிடுங்கினான்.


பிடிமானம் இல்லாமல் சந்தானம் அப்படியே சரிய, செல்வம் ஓடிவந்து அவரைத் தாங்கிப் பிடித்தான்.


அரை மயக்கத்திலிருந்த சந்தானத்தைத் தரையில் படுக்க வைத்து அவர் தலையை அவன் மடியில் தாங்க, “தாத்தா!" என்று அலறிய நிலமங்கை, பயம் என்றால் என்ன என்பதை முழுமுற்றிலுமாக உணர்ந்தாள்.



வணக்கம் அன்புத் தோழமைகளே!


சென்ற பதிவுக்கு Likes & Comments கொடுத்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்.


'யாருடா அது புதுசா திருன்னு ஒருத்தன்?' என்ற கேள்வி உண்டாகிறதா?


அவன் வேற யாரும் இல்லைங்க, நிலமங்கையின் Spin-off 'நிலவின் தேசத்தில் நான்' கதையின் முக்கிய கதாபாத்திரம்தான்!


அந்தக் கதையின் நாயகன் விக்ரம் ஏற்கனவே என்ட்ரி கொடுத்துவிட்டான்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page