top of page

Nilamangai - 17 (1) FB

நிலமங்கை - 17 (1)


நினைவுகளில்…


தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் எண்ணி நிலமங்கையின் மனதிற்குள் ஏற்கனவே ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருக்க, ஜுரத்தின் வேகமும் சேர்ந்துகொண்டு, 'எனக்கு தாமுவ கட்டிக்க கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல' என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிடவும், கண்ணீரே வந்துவிட்டது புஷ்பாவுக்கு.


"இன்னா மங்க உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சாங் காட்டியும்? வெண்ண திரண்டு வர நேரத்துல பானைய ஒடைச்ச கதையா இப்டி பேசித் தொலைக்கற? எம்புள்ள, எல்லாம் உன்ன நல்லபடியா வெச்சி குடும்பம் நடத்துவான். சரினு சொல்லுடி" என அழுகையும் ஆத்திரமுமாகத் தொடங்கி கெஞ்சலாக முடித்தாள்.


"அத்த, ஆயிரந்தான் இருந்தாலும் ஒம்புள்ள ஒனக்கு ஒசத்திதான? அதனாலதான் அது செய்யற அடாவடி தனத்தையெல்லாம் நீ கண்டுங்காணாத மாதிரியே பேசற" என இவளும் சளைக்காமல் பதில் கொடுத்தாள்.


அது பொறுக்காத வரலட்சுமி, "த ச்சீ, இதுங்கைல போய் கெஞ்சிக்கினு கெடக்க! ஏன் அவன் மட்டும்தான் அடாவடியாமா, இவ இல்லையா? ஆயிரம் சொன்னாலும் அவன் ஆம்பள, அவன் அடாவடியா இருந்தாதான் மதிப்பு. ஆனா இது, பொட்ட புள்ளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா ஊட்டோட கெடக்காம, ஆம்பள கணக்கா ஊர் வம்புக்குனே அலஞ்சிக்கினு, இதோ இப்புடி வெட்டு வாங்கினு வந்து நிக்குது. இதுல வாயப் பாரு, வாய!" என நொடித்தவர், "தோ பாரு சந்தானம், அத்தையும் இத்தயும் யோசிச்சினு நாள கடத்தாத சொல்லிப்புட்டேன். சீக்கிரமே முடிவு பண்ணி நல்ல சேதி சொல்லு! சீமைலேயே இல்லாத சிங்காரின்னு சொல்லி, அந்த கம்மினாட்டி என்னவோ கட்டினா இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கறான். மறுபடியும் முறுக்கிக்கினு அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு பூட்டான்னு வை, பொறவு அவனை மலை எறக்கி திரும்ப இட்டாறதுக்குள்ள நானே போயி சேந்தாலும் சேத்துப்புடுவேன்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு மருமகளுடன் கிளம்பி போய்விட்டார்.


அதன் பின், "தாத்தா, இந்த கெழவி என்ன பேச்சு பேசுது பாரு! இதும்பேச்சயெல்லாம் கேட்டுட்டு நீ எந்த முடிவுக்கும் வந்துராத, ஆமாம்" என சலிப்புடன் மங்கை சொல்லப் போக, "மொதல்ல நீ இப்புடி வாயாடறத நிறுத்து, மங்க! வரவர எனக்கே சலிச்சு போகுது. கொஞ்சமாவது பெரியவங்க பேச்ச மதிக்க கத்துக்க" என்றார் சுள்ளென .


தாத்தாவுக்குமே வரலட்சுமி பேசிய பேச்சு பிடிக்கவில்லைதான், ஆனாலும் முந்தைய தினம் தாமு நடந்துகொண்ட விதத்தில் அவனுக்கு மங்கையை திருமணம் செய்து கொடுப்பதில் குற்றமொன்றும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது.


அதுவும் இவள் இப்படி பேசப் போக, வரலட்சுமி பேசியவை பின்னுக்குப் போய்விட்டது. உடனே கிளம்பிபோய் மகள் மற்றும் மருமகனிடம் தாமு வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்ததைச் சொன்னர்.


முந்தைய தினமே தாமுவின் செய்கைகளால் மகேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்க, “தாமுவுக்கு நம்ம மங்க மேல ஒரு விருப்பம் இருக்கற மாதிரி தெரியுது” என தான் நினைத்ததை நாசூக்காக வேலுவிடம் சொல்லவும் செய்திருந்தாள். அவனுக்கு பயம் பிடித்துக்கொள்ள, “அய்ய, இப்படியெல்லாம் பேசாத மகேசு! நீயே இப்படி பேசினாக்க, ஊர்ல அவ-அவன் கண்ணு மூக்கு வெச்சி கத கட்டி வுட்டுடுவானுங்க” என்று பதறினான்.


“தோ பாரு மாமா, நான் அதுக்காக சொல்லல! நெருப்புன்னாக்கா வாயி வெந்துபுடுமா, ஒரு வேள, கட்டிகறேன்னு அவன் வந்து சொன்னான்னு வையி, கொஞ்சமும் யோசிக்காம சரின்னு சொல்லிபுடுன்னு சொல்ல வந்தேன்! அதுதான் அவளுக்கு பாதுகாப்பு தெரிஞ்சுக்க” என அதற்கு ஒப்புக்கொள்ளும்படி அவனிடம் அழுத்தமாக சொல்லிவைத்திருந்தாள்.


எனவே இதை எதிர்பார்த்தே இருந்ததால், “ஓ, அப்படியா” என்றான் வேலுமணி உள்ளே போன குரலில். தன மகளை பெண்கேட்டு நேராக தன்னிடம் வரவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு.


மகளும் அழுத்தமாக உட்கார்ந்திருக்க, எந்த வித வியப்பையும் அவர்கள் காண்பிக்காமல் இருந்ததே அவர் மனதை நெருடியது. அவர் மனதிற்கு புரிந்த விஷயம் அவர்களுக்கு புரியாமலா இருக்கும் என்பதை அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “ஆமாம், என்ன ஒ அப்படியாங்கற. நீ பெத்த பொண்ண பத்திதான பேசிட்டு இருக்கேன்” எனச் சுள்ளென விழுந்தார்.


“ஓ, அந்த நெனப்பெல்லாம் கூட உனக்கும் உம்பேத்திக்கும் இருக்கா?” என மகேஸ்வரி எகிறிக் கொண்டு வர, “ச்சீ… நீ வாய மூடு, அவ இவனுக்குதான் பொண்ணு, உனக்கில்ல. நீ அவளுக்கு அம்மாவா அனுசரணையா இல்லான்னா கூட பரவால்ல, ஆனா சித்தியா கூட நடந்துக்கல. மாத்தாந்தாய் புத்திய நல்லாவே காமிச்சிட்ட. அதான் பிரச்சனையே” என அவள் வாயை அடக்கியவர், “இந்த விஷயத்துல நீ உம்மூக்க நீட்டிட்டு வராத” என அவள் பேச இடமே கொடுக்காமல், “நீ சொல்லு வேலு, எனக்கு உன் வார்த்ததான் முக்கியம்” என்றார், ‘எங்கே மறுப்பு சொல்லித்தான் பாரேன்!’ என்கிற தோரணையில்.


பெற்ற மகளுக்கு அவர் கொடுத்த சூட்டில் தானும் சுதாரித்தவன், “உங்களுக்கு சம்மதம்னு சொன்னா நான் மட்டும் இன்னா சொல்லிடபோறேன்? எனக்கும் சம்மதம்தான் மாமா” என்று சொல்லிவிட்டான்.


அதற்குமேல் பேச்சை வளர்கத் தயாராகவே இல்லை அவர். கையேடு ஜனார்தனனை நேரில் போய் பார்த்து திருமணத்தை முடிவு செய்து விடலாம் என, ஜோசியரை சந்தித்து, அந்த வாரத்திலேயே ஒரு நாளையும் குறித்துக்கொண்டு வந்துவிட்டார்.


இதெல்லாம் இவ்வளவு வேகமாக நடந்தேறும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை மங்கை.


அவரிடம் மருப்பகப் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோனவள், ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காரன் காலில் விழுவதே மேல்’ என நேரடியாக தாமுவிடமே பேசிவிடலாம் என முடிவு செய்தாள்.


***


தாமோதரனின் வீட்டின் முன்பக்கமாக அமைந்திருக்கும் வேலியை முழுவதுமாக ஆக்கிரமித்து, மாடிப்படிக்கு பக்கவாட்டில் காரை நிறுத்துவதற்காக அவன் கட்டி வைத்திருந்த ஷெட்டின் தகரக் கூரை மேல் ஏறி படர்ந்து விரிந்திருந்த ரங்கூன் மல்லிகை கொடிகளை அடியோடு வெட்டி கழித்துக் கொண்டிருந்தனர் அவன் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் சிலர்.


அவனைப் பார்த்து பேசியே தீர வேண்டும் என வந்து கொண்டிருந்த மங்கையின் பார்வையில் இந்தக் காட்சி விழ, ஏற்கனவே அவளது மனதுக்குள் கனன்று கொண்டிருந்த ஆத்திரம் இரட்டிப்பாகிப் போனது.


அடர்ந்த சிவப்பு, பிங்க் வெள்ளை என மூன்று வர்ணங்களில் பூத்துக் குலுங்கிய மலர்கள், அவர்களது வன்முறைத் தாகுதலில் தரை எங்கும் சிதறி கிடக்க, அதைப் பார்க்கும்போதே அவளுடைய மனதை பிசைந்தது.


பேச வந்த விஷயமே மறந்து போய் இது அவளுக்கு முக்கியமாகிப் போனது.


இன்னும் ஏதெதற்கெல்லாம் இவனிடம் போய் கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டுமோ என்கிற சலிப்பு தட்ட, எதை பேசுவது எதை விடுவது என்று புரியாமல், தான் சொல்ல வருவதை அவன் காது கொடுத்தாவது கேட்பானா என்கிற சந்தேகத்துடன் தயங்கித் தயங்கி மாடிப்படி ஏறினாள்.


அந்த நேரம், தன் மடிக்கணினியை தட்டியபடி, தான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு தன் முழு விசுவாசத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான் தாமோதரன்.


எப்பொழுதுமே அவர்கள் வீடே அதிரும்படி, நடக்கும் நடையில் கலீர் கலீர் என ஒலிக்கும் அவளது கொலுசு சத்தம் கொஞ்சம் நிற்க நிதானிக்க பதவிசாய் தன்னை நெருங்கி வரவும், 'அட கல்யாணம்னு முடிவானதும் இந்த மங்கைக்கு கூட நிதானம் வந்துருச்சாங் காட்டியும்! ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே?' என்று எண்ணியவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன.


வாயிற் கதவு வரை வந்தவள் அவனை முறைத்தபடி அப்படியே நிற்க, அவளை உணர்ந்தவனாக சூழல் நாற்காலியிலிருந்து அப்படியே திரும்பியபடி, "கல்யாணம்னு சொன்ன உடனே, ஒனக்குங்கூட இந்த வெக்கம், நாணம் இதெல்லாம் வந்திடுச்சாங்காட்டியும்" என்றான் கிண்டலாக.


"என்ன தாமு, கொழுப்பா" என் அவள் கடுப்பாகவும், "அய்யயோ, அதெல்லாம் இல்லையா? நான்தான் தப்பா நினைச்சிட்டேனா" என ஏமாற்றமாக சொல்வது போல் கிண்டலைத் தொடரவும், எரிச்சலுற்றவளாக தடகடவென அவனை நோக்கி வரவும், "சூப்பரு, இதுதான் அசல் மங்க! நீ வெக்கப் பட்டுட்டாலும்" என்றான் குதூகலமாக.


"போதும் நிறுத்து தாமு! உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா" என்று அவள் சீரவும், "இப்ப என்ன திடீர்னு இந்த ஆராய்ச்சி? என்ன கொற வந்துச்சாம் என் மனசாட்சிக்கு" என்றான், குதர்க்கமாக.


"பூத்துக் குலுங்கற கொடிய யாரவது இப்புடி புடுங்கி போடுவாங்களா? பாக்கும்போதே மனசு பதறிப்போச்சு" என்றாள் வருத்தம் மேலிட.


"இதுதான் உம்பிரச்சனையா? நீ வேற ஏதோ பேச வந்துருக்கங்காட்டியுன்னு நெனச்சுட்டேன்" என்று விடாப்பிடியாக அவன் அவளை வம்பிழுக்க, "தாமு" எனக் கனன்றாள்.


"நாளைக்கே கல்யாணம் முடிச்சா, இந்த சிங்கள் பேச்சிலர் ரூம வெச்சிட்டு என்ன செய்ய? அதான், கார் ஷெட்ட பிரிச்சிட்டு தளம் போட்டு, அட்டாச்ட் பாத்ரூமோட எக்ஸ்டரா ஒரு ரூம் போடலாம்னு! இந்த செடி கொடியெல்லாம் கழிச்சு கட்டாம என்ன செய்ய முடியும்?" என்ற அவனது விளக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்டிப்போனது.


அங்கே இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தபடி, "நான் உன்கிட்ட முக்கியமா பேசணும் தாமு" என்றாள் தீவிரமாக.


கூர்மையாக அவளைப் பார்த்தபடி, "சொல்லு” என்றான் தன் கிண்டல் கேலி அனைதையும் கைவிட்டு.


"கொஞ்ச வருஷமாவே, எவனெவனோ... நம்ம சுத்துப்பட்டு வெவசாய நெலத்தையெல்லாம் ஒண்ணுக்கு ரெண்டா வெல கொடுத்து வாங்கி, தண்ணி கம்பெனி, கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி, சாராய கம்பெனின்னு ஆரம்பிச்சு நாசம் செஞ்சிட்டே போயிட்டு இருக்கானுங்க.


நிலத்தடி நீர் வத்திப் போயி விவசாயம் செய்யற பூமியெல்லாம் மலடா போயிட்டு இருக்கு. போறாத கொறைக்கு ஃபார்ம் ஹவுஸ் வெக்கறேன், சாமியார் ஆசிரமம் காட்டேறேன்னு ஒரு கும்பல் அலையுது!


யாரு என்னன்னு பார்த்தாக்க, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... ஸ்டேட்டு… சென்ட்ரல்…ன்னு சொல்லி பின்னால பெரிய பெரிய அரசியல் கையெல்லாம் இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே போனாள்.


“ஏய், இரு… இரு…” என அவள் பேச்சுக்கு ஆணை போட்டவன், “ஆமாம், சம்மந்தா சம்மந்தமே இல்லாம இப்ப இன்னாத்துக்கு இதெல்லாம் என்னாண்ட சொல்லினு கெடக்க” என்று அவன் கேட்க, “ப்ச்… குறுக்க பேசாம, நான் சொல்ல வரத முழுசா கேளு தாமு” என பிடிவாதமாக சொல்லிவிட்டு தொடர்ந்தாள்.


“நம்ம கூழாங்கல்லூர்ல இல்ல, அங்க ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னால சாராய கம்பெனில இருந்து கழிவுகள எடுத்தாந்து காலி பொறம்போக்கு நிலத்துல மொத்தமா கொட்டிட்டு பூட்டானுங்க. அத துண்ணுட்டு ஒழவு மாடு, பசுன்னு மொத்தமா ஒம்பது மாடுங்க செத்துப்போச்சு. அதுல ஒன்னு செனையா வேற இருந்துச்சு, தெரியுமா? ஒவ்வொரு வெவசாயியும் வாயிலையும் வவுத்துலயும் அடிச்சினு அழுததுதான் மிச்சம். அப்பதான் பொருக்க முடியாம திருன்னு ஒரு அண்ணன், 'அறநெறி இயக்கம்'னு ஒண்ண ஆரமிச்சாங்க.


ஏற்கனவே தனி ஆளா இந்த மாதிரி பிரச்சனைக்கெல்லாம் குரல் கொடுத்துட்டு இருந்தவங்க, தீவிரமா இறங்கவும், கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஜனங்க இந்த இயக்கத்துல சேர ஆரமிச்சாங்க.


அந்த ஒரு ஊர்ல தொடங்கி, இப்ப மொத்தம் எழுபது கிராமத்துல இந்த இயக்கம் செயல்பட்டுட்டு இருக்கு.


ரெண்டு வருஷத்துக்கு முன்னால, நம்ம ஊர்ல இந்த தண்ணி கேன் கம்பனி வந்தப்ப, உதவி கேட்டு போனப்பத்தான் அவங்க அறிமுகம் கெடச்சுச்சு.


அதுக்கு பொறவுதான் இப்படி ஒரு இயக்கம் நம்ம ஊருக்கும் தேவைன்னு, நானும் செல்வம் அண்ணனுமா நம்ம ஜனங்க கிட்ட பேசி, இங்கயும் கொண்டாந்தோம்.


நல்லது கேட்டது தெரியாம, அவசர தேவைக்கு துட்டுக்கு ஆசப்பட்டு, அர ஏக்கரா, கால் ஏக்கரா வெச்சிருக்கறவங்க எல்லாம், வந்த வேலைக்கு வெளைச்சல் நெலத்த வித்து துன்னுட்டு, மெட்ராஸ்ல போய் கட்டட வேல பாக்குதுங்க. அதுக்கு வழி இல்லாம போனா இருக்கவே இருக்கு நூறு நாள் வேல.


அதுனால யாருக்கும் இந்த மண்ண பத்தின கவலையே இல்லாம பூடுச்சு.


உனக்கு தெரியாது தாமு, இதெல்லாம் நாம்ம ஜனகளுக்கு புரிய வெச்சி, இப்படி ஒரு மக்கள் இயக்கத்த இங்க கொண்டு வர நாங்க அவ்வளவு பாடு பட்டிருகோம்.


இப்பப்பதான் இதெல்லாம் நம்ம ஜனங்களுக்கே புரிய ஆரம்பிச்சிருக்கு. ஆரம்பத்துல, நாங்க நடத்துற மீட்டிங்குகெல்லாம் நாலஞ்சு பேரு வந்தாலே பெருசு. இப்பதான் எழுபது எண்பது பேர் வர ஆரமிச்சிருகாங்க, அன்னைக்குதான் நீயே பாத்த இல்ல!


எல்லாமே என்ன நம்பி சேர்ந்த கூட்டம், தாமு. என் பேச்ச நம்பி போராடிட்டு இருக்கு.


இந்த ஊர பொறுத்தவரைக்கும் நான்தான் இந்த இயக்கத்தோட ஆக்டிவ் ஹெட். செல்வண்ணன் எனக்கு தொணையா எல்லாமே செய்யுமே தவிர அதுக்கு தனியா செய்லபடத் தெரியாது.


நான் கண்டி பாதில வுட்டுட்டு உம்பின்னால வந்தேன்னு வை, இங்க இருக்கற கூலிப்படைங்க இந்த ஜனங்களுக்கு பல தொல்லைகளை கொடுப்பானுங்க. இதுங்க உசுருக்கே கூட ஆபத்தா போவும்.


உன் வழி வேற, என் வழி வேற, புரிஞ்சுக்க. தயவு செஞ்சு கல்யாணம்... கருமந்தரம்னு எனக்கு நெருக்கடி கொடுக்காத! அது எனக்கும் நல்லதில்ல, உனக்கும் நல்லதில்ல" என்று தான் சொல்ல வந்ததை திட்டவட்டமாக சொல்லி முடித்தாள்.


அவள் சொன்ன எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை அவனால். உன்மையில் உள்ளுக்குள்ளே சிரிப்புதான் வந்தது தாமோதரனுக்கு. புரட்சி என்கிற பெயரில் கண்டதையும் படித்துவிட்டு, சுற்றி இருக்கும் விபரீதம் புரியாமல், வயதுக்கு கோளாறில் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறாள். இப்படியே விட்டுவைத்தால் அது ஆபத்தில்தான் போய் முடியும், பக்குவம் வந்தால் தானே புரிந்துகொள்வாள் என்பதாகத்தான் அவனால் நினைக்க முடிந்தது .


"இப்ப என்ன... என்ன செய்ய சொல்ற" எனக் கேட்டான் கூர்மையாக.


"நான் என்னவோ வந்து, 'என்ன கட்டிக்கோ... கட்டிக்கோ...'ன்னு கேட்ட மாதிரி என்ன கேக்கற, நீதான தொடங்கி வெச்ச, நீயே எதையாவது செஞ்சி இதெல்லாம் வேணாம்னு முடிச்சி வையி... உனக்கு இதெல்லாம் புதுசா என்ன?" என்றாள் எகத்தாளமாக.


அவள் பவ்யாவைத்தான் நடுவில் இழுக்கிறாள் என்பது உரைக்க, அது அவனுடைய அகங்காரத்தை நன்றாகக் கிளறிவிட்டது.


"நான் எதுக்குடி வேணாம்னு சொல்லி முடிச்சு வைக்கணும். உன்ன கட்டிட்டு நல்லபடியா குடும்பம் நடத்தணும். எனக்கு இந்த ஒரு எண்ணத்த தவற வேற எதுவுமே கிடையாது. இது மாறவும் மாறாது. உனக்கு வோணுமுன்னா, உன் தாத்தா கிட்ட பேசி அது வாயாலயே வேணாம்னு சொல்ல வெச்சிக்கோ. நான் பேசாம என் வேலைய பார்த்துட்டு போய்கினே இருக்கேன்" என்றான் தெனாவெட்டாக.


எப்பொழுதுமே தாத்தாவுக்கு இவனை பிடிக்கவே பிடிக்காது என்பது இவளுக்கு நன்றாகவே தெரியும். நடந்த விபத்தில் இவளுக்கு பெரிதாக காயம் பட்டிருக்க மனம் குழம்பிப் போயிருக்கிறார், அதனால்தான் தவறான ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். மீண்டும் பொறுமையாகப் பேசிப் பார்த்தால் அவர் மனதை மாற்றிவிடலாம் எனத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.


மனம் சற்றுத் தெளிய, 'எங்கிட்டயா சவால் விடற?' என்கிற இறுமாப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்தவள், 'போய் வருகிறேன்' என சொல்லிக்கொள்ளக் கூட மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினாள் தன் முயற்சியைத் தொடர.


******



© KPN NOVELS COPY PROTECT
bottom of page