top of page

Nilamangai - 15 (2) (FB)

Updated: Sep 27

நிலமங்கை 15 (2)


காலை ஆறு மணி வாக்கில் கைபேசியில் ஏதோ அழைப்பு வரவும் அதை ஏற்று தனியாக போய் பேசி விட்டு வந்த நிலமங்கை, என்ன செய்தி என்று கேட்ட சந்தானத்திடம், உண்மையை சொன்னால் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட விடமாட்டார் என்பதனால், எந்த ஒரு பதற்றத்தையும் முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல், பூங்காவனத்தம்மாள் ஏதோ உதவிக்காக அழைக்கிறார் என்பதை மட்டும் பட்டும் படாமலும் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிச் சென்றாள்.


சில நிமிடங்களுக்கெல்லாம், "தாத்தா… தாத்தா… செல்வண்ணே கழனியாண்ட நம்ம மங்க அக்காவுக்கும் தண்ணி கம்பெனி காரனுங்களுக்கும் ஏதோ தகராறு, சண்டையில அக்காவோட கையை வெட்டிப்புட்டானுங்க" என தலையுமில்லாமல் வாலுமில்லாமல் ஒரு சிறுவன் வந்து அவரிடம் தகவல் சொல்லவுமே என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் பதறி அடித்துக் கொண்டு மருமகனைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வந்த சந்தானம் ஆற்றாமையுடன் கதறி தீர்க்க, அவரை சமாதானப்படுத்தக்கடத் தோன்றாமல் வேலுவுமே அதிகம் பதறிப்போனான். போதும் போதாததற்கு மகேஸ்வரி வேறு ஒப்பாரி வைக்க, அக்கம் பக்கத்து ஜனமெல்லாம் அவர்கள் வீட்டு வாயிலில் கூடி விட்டது.


அப்பொழுதுதான் விழித்தெழுந்து கீழே இறங்கி வந்தான் தாமோதரன். பின்னோடே செல்வமும் வர, இந்தக் கூத்தை எல்லாம் பார்த்துவிட்டு என்னவோ ஏதோ என்று பதறியபடி அங்கே வந்து விஷயத்தை கேள்விப்பட அவனுமே கலங்கித்தான் போனான்.


ஆனாலும் தன்னை சமாளித்துகொண்டு, "நீ கவலப்படாத பெரிப்பா, நான் இப்பவே கிளம்பி போயி என்ன ஏதுன்னு பார்க்கறேன்" என்றான் அவரை சமாதானப்படுத்தும் விதமாக.


தானும் கூடவே வருவதாக கிளம்பியவரை, அவர் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு, பத்திரமாக வீட்டிலேயே இருக்கும் படி சொல்லி செல்வத்தை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


நேரே சம்பவம் நடந்த இடத்தில் போய் பார்க்க, அதற்குள்ளாகவே அங்கிருந்த இளவட்டங்கள் மங்கையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பி இருப்பது தெரிந்தது. தலையில் அடித்துக் கொண்டு ஓவென்று அழுது கொண்டிருந்த பூங்காவனத்தம்மாளிடம் விசாரித்துப் பார்க்க, பதற்றத்தில் கோர்வையாகப் பேசக்கூட வரவில்லை அவருக்கு. முன்னுக்குப் பின் முரணாக வாயில் வந்ததை அவர் உளறித் தள்ள, தானாகவே ஒரு அனுமானத்தில் கிளம்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றான் தாமோதரன். அங்கே அவளை பத்திரமாகப் பார்த்த பிறகுதான் போன உயிரே அவனுக்குத் திரும்ப வந்தது.


எல்லாம் முடிந்து- காவல் நிலையத்திலிருந்து கிளம்பிய வாகனம் நேராக வேலுச்சாமி வீட்டு வாயில்தான் வந்து நின்றது. ஒருவேளை நேராக அவனுடைய வீட்டிற்கு செல்கிறானோ என்று அதுவரை அமைதியாக இருந்தவள், "வம்ப வெலை கொடுத்து வாங்கவா? இங்க ஏன் தாமு இட்னு வந்த? என்ன தெரு முக்குல எறக்கி விட்டிருந்தன்னா கூட நான் எங்கூட்டுக்குப் போயிருப்பேன் இல்ல?" என்று புலம்பினாள் மங்கை.


"அங்க யாரு இருக்காங்கன்னு உன்ன அங்க கூட்டிட்டு போவ சொல்ற? சமாச்சாரத்த கேள்விப்பட்டதும் உன் தாத்தாவுக்கு படபடன்னு ஆகி போயி இங்க தான் வந்து ஒக்காந்துட்டு இருக்கு" என அவளுக்கு பதில் கொடுத்தவாறு அவன் வாகனத்திலிருந்து இறங்கிவிட, சத்தம் கேட்டு வெளியில் வந்த வனமலர், "ம்மா, ஓடியா… ஓடியா… அக்கா வந்துடுச்சு, வந்து பாரு… ஐயோ, கையில எம்மாம்பெரிய கட்டு போட்டுருக்கு" என்று குரல் கொடுத்தபடி மீண்டும் வீட்டிற்குள்ளேயே ஓடினாள்.


தன் இக்கட்டான சூழ்நிலையை எண்ணி மனதிற்குள் நொந்து போனவள் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் வேறு வழியின்றி வீட்டிற்குள் சென்றாள்.


அதற்குள் அவசராவசரமாக வெளியில் ஓடி வந்திருந்தாள் மகேஸ்வரி. அழுது அழுது அவளுடைய முகமே சிவந்து வீங்கி இருந்தது.


மங்கையின் கையையும் முகத்தையும் பார்த்தபடி, அவளிடம் முகம் கொடுத்து பேசக்கூட பிடிக்காத பாவத்தில் பின்னால் வந்த தாமோதரனை பார்த்து, "வா தாமு" என்று மட்டும் அழைத்துவிட்டு மறுபடியும் திரும்பி உள்ளே சென்றாள்.


கூடத்தில் ஓரமாக பாய் விரித்து சந்தானம் படுத்திருக்க அவருக்கு அருகில் சுவறில் சாய்ந்தவாறு நெஞ்சை பிடித்தபடி, முகத்தை தொங்க போட்டு கோபமா ஆற்றாமையா என பிரித்தறியமுடியாவண்ணம் ஏதோ ஒரு பாவத்தை முகத்தில் தேக்கி அமர்ந்திருந்தான் வேலுமணி.


அவள் உள்ளே நுழைந்ததுமே கையை ஊன்றி வேகமாக எழுந்த சந்தானம் அவளை நெருங்கி வந்து தலை முதல் கால்வரை பார்வையாலேயே அவளை வருடினார். அவளுடைய கையில் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது அவரிடம் இருந்து. சட்டென கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு மறுபடியும் போய் பாயிலேயே அமர்ந்து விட்டார். வேலுவுக்கோ அவளிடம் என்ன பேசுவது என்று கூட புரியவில்லை. மனைவியை எண்ணி அவனுக்கு உளுகுள்ளே பயம் வேறு!


தன்னிடமிருந்தும் அவளைப் பெற்றவனிடமிருந்தும் ஒட்டாமல் தனித்துப்போய் அவள் இப்படி இருப்பதற்கான மொத்த காரணமும் அவர்தான் என்பதாக அப்படியே பழியை தூக்கி அவர் மீதே போட்டு மகேஸ்வரி வேறு பேயாட்டம் ஆடி இருக்க, 'தாயில்லாத பிள்ளை, அதீத புத்திசாலி, சாமர்த்தியசாலி' என்ற பெருமையில் ஊரில் மற்ற பெண் பிள்ளைகளை வளர்ப்பதுபோல அடக்கி வைக்காமல் அவளுக்கு இந்த அளவுக்கு இடம் கொடுத்து விட்டோமே என தன்மீதே கோபம் வந்தது சந்தானத்துக்கு. அதற்கு மேல் அவளிடம் எதையும் பேசக்கூடப் பிடிக்கவில்லை.


அவளுடைய கையின் கட்டையே பீதியுடன் பார்த்தபடி, "உனக்கு ஒண்ணும் இல்ல தானக்கா? என்னவோ கையே ரெண்டு துண்டா பூட்ட மாதிரி இங்க எல்லாரும் பேசிக்கினாங்க தெரியுமா?" என்றாள் வனமலர் கொஞ்சம்கூட கல்மிஷமே இல்லாமல்.


வனா சொல்வது போல உண்மையிலேயே அவளுக்கு வெட்டுப்பட்டு இருக்கிறது என்பது மட்டும் தெரியுமே தவிர அது எந்தளவுக்கு என்று யாருக்குமே புரியவில்லை.


அங்கே இருந்த ஒவ்வொருவரின் மனநிலையையும் உள்வாங்கியபடி, "சின்ன காயம் தான் பெரியப்பா, மத்தபடி நீங்க பயப்படற அளவுக்கு எதுவும் இல்ல. சீக்கிரமே குணமாகிடும், கவலைப்படாத" என்று அவருக்கு சொல்வது போல எல்லோருக்குமே சொல்லி முடித்தான் தாமு.


"செல்வம், கயத்துகட்டில கொண்டு வந்து இங்க போடு" என்று அவனை பணிக்கவும் அவன் வேகமாக போய் வாயிற் திண்ணையில் கிடந்த கயிற்றுக் கட்டிலை கொண்டு வந்து கூடத்தில் போட்டான்.


சூழ்நிலை உணர்ந்து வனா மங்கையை இழுத்து அதில் உட்கார வைக்க, "யக்கா நீ போய் இதுக்கு துன்ன எதுனா எடுத்துட்டு வா" என்றான் மகேஸ்வரியிடம்.


அவன் அறியா வண்ணம் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி நொடித்தபடி சமையல் கட்டை நோக்கிச் சென்றவள் தட்டில் கொஞ்சம் களியையும் காரக்குழம்பையும் போட்டு எடுத்து வந்து மங்கையிடம் நீட்டினாள்.


அதை கவனித்த தாமோதரனின் முகம் சுண்டிப் போனது. ஆனாலும் இந்த சூழ்நிலையில் எதுவும் ரசாபாசம் செய்ய அவன் விரும்பவில்லை.


உண்மையில் இவ்வளவு காயத்திற்கு வேறு ஒருவராக இருந்திருந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.


அப்படி ஏதும் செய்து வைத்தால் அது விபரீதத்தில் போய் முடியும் என பல்லை கடித்துக் கொண்டு மங்கை வலியை பொறுத்துக் கொண்டிருபதை அவளுடைய முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்டான்.


'இங்கே இருக்கும் ஒவ்வொருவருடைய மனநிலையும் இவளுக்கு மட்டுமென்ன புரியாமலா இருக்கும்? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி கண்டும் காணாதவள் போல அசட்டையாக இருப்பாள்?' என யோசித்தவாறு பார்த்த விழி பார்த்தபடி அவன் அவளையே பார்த்திருக்க, பசியின் வேகமோ என்னவோ அதை ஒரே வாயில் சாப்பிட்டு முடித்துவிட்டாள் மங்கை.


யாருக்காகவும் காத்திருக்காமல் எழுந்து போய் அந்த ஒற்றை கையாலேயே தட்டை கழுவி வைத்து விட்டு அவள் வந்து உட்காரவும், வனாவை அழைத்து தண்ணீர் எடுத்து வர சொன்னவன் மாத்திரைகளை பிரித்து அவளுடைய கையில் கொடுத்து சாப்பிடச் சொல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்தானமே ஆடிப் போய்விட்டார். 'இதுநாள் வரை இவனைப் பற்றி, தான் நினைத்திருந்த நினைப்பெல்லாம் பொய்யோ?' என்ற எண்ணம் தொன்றியது.


இதெல்லாம் நடந்து முடியும் நேரம், மணி ஒன்றைத் தொட்டிருக்க, உட்கொண்ட மாத்திரையின் வீரியமும் சேர்ந்து கொள்ள ஏற்கனவே ஒரு அரை மயக்க நிலையில் இருந்தவளுக்கு கண்களை சுழற்றியது.


தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படியே சரிந்து அவள் படுத்து விட, "சும்மா இவள இந்த கேள்வியும் கேட்டு யாரும் கொடசல் கொடுக்காதீங்க, என்ன ஏதுன்னு நானே பார்த்துக்கறேன்" என்று பொதுவாகச் சொன்னவன் பார்வையாலேயே மகேஸ்வரியை எச்சரிக்க, எக்குத்தப்பாக ஏதேதோ கணக்குகளை போட்டது அவளுடைய புத்தி.


வழக்கமாக இதையெல்லாம் பார்த்தால் அதிகமாக எரிச்சல் அடையும் சந்தானமோ, ஒரு மாதிரியான மோன நிலைக்கே சென்று விட்டார். எந்தவித சூட்சமம் அறியாத வேலுமணி மட்டும் மகளுடைய ஆரோக்கியத்தை எண்ணி மனதிற்குள் வேதனை பட்டுக்கொண்டிருந்தான்.


*****


வலி, வலி நிவாரணிகள் கொடுத்த மயக்கம் என அன்றைக்கு ஒரு நாள் மட்டுமே மகேஸ்வரியின் ஜாடைமாடையான குத்தல் பேச்சுக்களை பொறுத்துக் கொள்ள முடிந்தது நிலமங்கையால். இவளை குற்றம் குறை சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் வேலுமணியையும் சந்தானத்தையும், போதும் போதாத குறைக்கு பாதியிலேயே போய்ச் சேர்ந்த ராஜேஸ்வரியையும் பூங்கொடியையும் வேறு வருத்து வாயில் போட்டுக்கொள்ள, அதற்கு மேல் தாக்கு பிடிக்க இயலவில்லை, இரண்டு பேருக்கும் நேருக்கு நேர் வாய் வார்த்தைகள் தடிக்கத் தொடங்கியது.


தன் இளைய மகள் பேத்தியை செய்த உதாசீனத்தில் சந்தானத்திற்கே நெஞ்சு கொதித்து போனது.


அடுத்த நாள் பொழுதுவிடிய, அவர்களுடைய விளைநிலத்தில், அருகருகே புதையுண்டிருந்த அவளுடைய அம்மா, பாட்டி இருவரின் சமாதியிலும் விளக்கேற்றி வைத்துவிட்டு ராஜேஸ்வரியின் சமாதியின் மீது, அமைதியாக தலை சாய்ந்து படுத்திருந்தாள் நிலமங்கை.


நிலத்தை பதப்படுத்தும் வேலை இருக்கவே,சீக்கிரமே கிளம்பி அங்கே வந்த சந்தானம் அந்த காட்சியை பார்த்துவிட்டு மிகவும் துயரப்பட்டு போனார். மனதில் இருப்பதை வாய் வார்த்தையாகச் சொல்லி, கண்ணீர் விட்டு அழுது எதையுமே செய்ய மாட்டாள் இந்த மங்கை. ஆனால் அவள் மனம் முழுவதும் தேங்கி கிடக்கும் பாரத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.


அவள் நியாயம் என்று நினைத்து செய்வது அனைத்துமே சந்தேகத்திற்கு இடமில்லாமல் உன்னதமான விஷயம்தான். தான் தன் இளமைக் காலத்திலும் இப்படித்தானே இருந்தோம் என்று நினைத்தவர் இவள் மட்டும் ஆண் பிள்ளையாக பிறந்து தொலைத்திருக்கக் கூடாதா என்று வருத்தம் கொண்டார். அப்படி மட்டும் நடந்திருந்தால் முழுக்க முழுக்க அவளுக்கு பக்கபலமாக நின்று இருப்பார். இவளிடம் இருக்கும் இந்த துணிச்சலும் இந்த அற உணர்வும் வீட்டில் மற்ற யாரிடமும் இல்லை என்பது அவர் மனதுக்கு வேதனையைக் கொடுத்தது.


நாலையும் யோசித்தபடி அவளை நெருங்கி வந்தவர், "கண்ணு மங்கை, கை ரொம்ப வலிக்கிதா பாப்பா?" என்று வாஞ்சையுடன் வினவ, நிதானமாக திரும்பி, தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், "அதெல்லாம் ஒண்ணும் இல்ல தாத்தா, தூக்கம் வரல, அதுதான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்" என்றாள் சமாளிப்பாக.


அது எப்படி வலி இல்லாமல் இருக்கும்! கத்தி கிழித்த வேகத்திற்கு நரம்புகள் அறுபடாமல் இருந்ததே யாரோ செய்த புண்ணியம்தான். மணிக்கட்டிற்கு சற்று மேலே தொடங்கி முட்டிக்கு கீழ் வரை பெரிதாகக் கிழித்திருக்க ஏகப்பட்ட தையல்கள் போடப்பட்டிருந்தன.


"சரி வா நம்மூட்டுக்கு போகலாம்" என்று அவர் அழைக்க, மறுப்பேச்சு பேசாமல் அவருடன் இணைந்து நடந்தாள்.


வீடு வந்து சேர்த்ததுமே ஒரு தேநீரை கொதிக்க வைத்து அவளுக்கும் கொடுத்துவிட்டு தானும் பருகியவர் அவளுக்கு சாப்பிடத் தோதாக புழுங்கல் அரிசி கஞ்சி வண்ணத்தையும் வெங்காய சட்டினியையும் செய்து, அவளை சுடச் சுட சாப்பிட வைத்தார்.


உருட்டி மிரட்டி அவளை வயிறார சாப்பிட வைத்த பிறகும் கூட கண்கள் லேசாக சொருகியபடியிருக்க அளதிது முகம் தெளிவில்லாமல் இருக்கவும், உள்ளுக்குள்ளே பதறி அவளுடைய நெற்றியில் கை வைத்து பார்க்க ஜுரம் நெருப்பாகக் கொதித்தது.


மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் காண்பிக்கலாமா என அவர் எண்ணிக் கொண்டிருக்க, "மங்க, உள்ள வரலாமா" என்று குரல் கொடுத்த படி வீட்டிற்குள் நுழைந்தாள் புஷ்பா.


"வா புஸ்பா… மழதான் வரப்போவுது போ! ரொம்ப நாளைக்கு பொறவு எங்கூட்டுக்கு வர ஒனக்கு வழி தெரிஞ்சிட்டாப்ல இருக்கு" என அவளை வரவேற்றார் சந்தானம்.


"இதுக்கே மழை வரப்போகுதுன்னு சொல்லுறியே அத்தான், வெளியில் போய் பாரு… புயலும் சேர்ந்து அடிக்கப் போகுதாங்காட்டியும்" என்று புதிர்போட்டபடி, சுவறில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த மங்கையின் அருகில் போய் உட்கார்ந்தவள், "காயம் ரொம்ப பெருசுன்னு சொல்லி தாமு சொல்லுச்சு. இப்ப எப்படி இருக்கு மங்க. நோவு கொஞ்சமாச்சும் கொறஞ்சுதா?" எனக் கேட்டாள் கரிசனத்துடன்.


"பரவால்லத்த, நோவாம இருக்க மாத்திரை எல்லாம் குடுத்து இருக்காங்கல்ல" என்று அவள் பதில் கொடுக்கவும், "வாய் தான் அப்படி சொல்லுது புஸ்பா, அனா அதுக்கு எம்மாங்காச்சல் அடிக்குதுன்னு பாரு" என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியில் சென்று எட்டிப் பார்க்க திண்ணையில் அமர்ந்திருந்தார் வரலட்சுமி.


"அட சித்தி நீயா… உம்மருமவ சொன்னது கணக்கா புயலுதான் வீசப் போவுது போலருக்கு" என்ன மெய்யாலுமே வியந்தார் சந்தானம்.


"இதுல என்ன இருக்கு, உன் பேத்தி சொகமில்லாம இருக்கேன்னு சொல்லி பார்க்கலாம்ன்னு வந்தேன். அதோட முக்கியமான ஒரு சமாச்சாரம் வேற பேசணும்" என்று நீட்டி முழக்கி அவர் பீடிகை போட, "எல்லாத்தையும் தெருவுலயே உட்கார்ந்து பேசி முடிக்கலாமா… ஏன் சித்தி, என் குடிசைகுள்ள எல்லாம் நீ வரமாட்டியோ" என்று சந்தானம் அவரிடம் வம்பை கூட்ட, "குடிசையாவது மெத்தவூடாவது, மனசுக்கு புடிச்சு போனா எல்லா எடமும் மாடமாளிகதான் கூட கோபுரம்தான்" என்று வசனம் பேசியபடி எழுந்து வீட்டுக்குள் வந்தார் வரலட்சுமி.


"நல்லாத்தான் பேசற போ, என்ன இருந்தாலும் நீ என் சின்னாத்தாளா பூட்ட, உன் காலு என் வூட்டுல பட்டதே எனக்கு உன் ஆசீர்வாதம் கெடைச்ச மாதிரி" என்று அவர் சொல்லவும்,


"என் ஆசீர்வாதத்துக்கு என்ன கொறை வந்துச்சு… நான் உன் வூட்டுக்குள்ள அடி எடுத்து வச்ச நேரம் உம்பேத்தி அரசாளப்போகுது அஆங்" என்றார் நொடித்தபடி.


"இது இன்னாதிது, ரெண்டு பேரும் இப்படி பொடி வைத்து பேசிக்கினே இருந்தா, பேச வேண்டிய சமாச்சாரத்த எப்ப பேச" என்று புஷ்பா எடுத்துக் கொடுக்க, "பாத்தியா உன் மச்சினிச்சிய, புள்ள அவ பக்கம் சாஞ்சிட்டான் இல்ல… இதுவும் பேசுவா இன்னமும் பேசுவா" என்று எகத்தாளமாக சொல்வது போல் சொன்னாலும் முகம் எல்லாம் மலர்ந்து தான் இருந்தது வரலட்சுமிக்கு.


அதற்குள், "வா… ஆயா, எப்படி இருக்க" என்று மங்கை அவரை நலம் விசாரிக்க, "நானெல்லாம் நல்லாத்தான் இருக்கேன், நீதான் தேவை இல்லாத வம்ப வெலைக்கு வாங்கினு வந்து, தோ… இப்படி ஒக்காந்துருக்க" என அவளை கடிந்து கொண்டார். எதிர்த்து பேச வாய் நமநமத்தாலும், பாட்டனுக்கு பயந்து அமைதிகாத்தாள்.


ஓரமாகக் கிடந்த மடிக்கும் நாற்காலியை பிரித்துப் போட்டு அவரை உட்காரச் சொன்ன சந்தானம், "இரு டீ தண்ணி கொதிக்க வெச்சு எடுத்தாறேன்" என்றபடி சமையற்கட்டிற்குள் செல்ல எத்தனிக்க, "த… சந்தானம்… அதெல்லாம் ஒண்ணியும் வேணாம், நீ முதல்ல ஒக்காரு. முக்கியமா பேசணும்" என்று இழுக்க, விஷயம் ஏதோ பெரியது என்பதை உணர்ந்து பேத்திக்கு அருகில் தரையிலேயே உட்கார்ந்தார்.


நெற்றியில் கைவைத்து பார்ப்பதும் தலையை கோதுவதுமாக புஷ்பா மங்கை மீதே கவனமாக இருக்க, "தோ பாரு சந்தானம், சுத்தி வளச்சி எல்லாம் நான் பேச இஷ்டப்படல, மூஞ்சிக்கு நேராவே கேக்கறேன், உன் பேத்திய என் பேரனுக்கு கட்டி வெச்சு முகூர்த்தம் முடிஞ்ச அடுத்த நாளே இவ கைய கால கட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிற வழிய பாரு. அப்பதான் இந்த மாதிரி ஊர் வம்ப வேலைக்கு வாங்கிட்டு வராம இருப்பா! இல்லனா இவள வச்சு மேய்க்கிறதே உனக்கு பெரும்பாடாகிப்பூடும் சொல்லிட்டேன்" என்று வரலட்சுமி தான் வந்த விஷயத்தை போட்டு உடைக்க தூக்கி வாரிப்போட்டது நிலமங்கைக்கு.


ஆனாலும் கூட தன் தாத்தா இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என திடமாக நம்பியவள் அலட்சியமாக அந்த கிழவியை ஏறிட, "என்னா சித்தி, சின்ன புள்ளைங்க விளையாட்டா இது? பொம்பளைங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து கல்யாண பேச்சு பேசறீங்களே, இதெல்லாம் வேலைக்கு ஆவுமா" என்று சந்தானம் கேள்வி கேட்கவும் உள்ளுக்குள்ளே லேசாக உதறல் எடுத்தது அவளுக்கு.


"எல்லாம் வேலைக்கு ஆவும், நீ மட்டும் ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு, நாளைக்கே என் புள்ள பேரனோட சேத்து ஊருசனம் மொத்தத்தையும் இட்டாந்து உன் வூட்டுல வெச்சே ஒப்புத்தாம்பூலம் செய்யறேன்" என்று வரலட்சுமி அடித்துப் பேச, ஒரு விதத்தில் இதை எதிர்பார்த்தே இருந்தவர் போல, "இவளோட அப்பன், சின்னாத்தா ரெண்டுபேராண்டயும் பேசி முடிவு செஞ்சி அவங்கள இட்டுனு வந்து முறையா உன் வீட்டுல பேசறேன், அதுக்கு பொறவு ஒப்பு தாம்பூலமோ இல்ல நிச்சய தாம்பூலமாவோ செஞ்சுக்கலாம். அதுக்கு முன்னால ஜனாவோட சம்மதத்த தீர கேட்டுக்கோ" என்று சந்தானம் தெளிவாகச் சொல்லவும், “எம்புள்ள சம்மதம் இல்லாமதான் நான் இம்மாந்தூரம் வந்து உங்கூட சம்மந்தம் பேசிகினு இருக்கனாமா?” என்று நோடித்தார் வரலட்சுமி.


‘இதென்ன இது, யார்யாரெல்லாம் இதற்கு முட்டுக்கட்டையாக நின்றார்களோ அப்படிப்பட்ட ஒருவரிடமிருந்தும் கூட சிறு எதிர்ப்பும் கிளம்பவில்லையே!’ என உண்டான அதிர்ச்சியில் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது நிலமங்கைக்கு.


ஆனாலும் தன்னை சமாளித்தபடி, "தாத்தா, இருக்கிறவங்க எல்லாராண்டயும் பேசி சம்மதம் வாங்கணும்னு சொல்றியே, சம்பந்தப்பட்ட நான் ஒருத்தி இங்க குத்துக்கல்லாட்டமா ஒக்காந்துட்டு இருக்கேன், யாராவது என்ன ஒரு வார்த்த கேட்டீங்களா" என்று இடக்காகக் கேள்வி கேட்டவள், "நீங்க யாரும் கேக்கலன்னாலும் சொல்றேன், எனக்கு தாமுவ கட்டிக்க கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல" என்றாள் மங்கை பிடிவாதம் மேலோங்க.


எங்கவாது இவளுடைய இந்தப் பிடிவாதம் தாமோதரனிடம் செல்லுபடியாகுமா? இவளைப் பற்றி நன்கு உணர்ந்தவனாக இவளை தன் வழிக்குக் கொண்டுவர அவன்தான் ஏற்கனவே ஒரு துருப்புச் சீட்டை தயார் செய்து வைத்துவிட்டானே! இவள் என்றுதான் அவனை உணரப்போகிறாளோ? ஒரு வேளை அந்த நாள்தான் இவள் வென்று அவன் தோற்கும் நாளாக அமையுமோ என்னவோ!© KPN NOVELS COPY PROTECT
bottom of page