top of page

Nilamangai - 15 (1) (FB)

Updated: Sep 27

நிலமங்கை - 15 (1)


நினைவுகளில்…


"நிக்காம ரத்தம் வந்துக்குனே இருக்கு, பிளீஸ் டாக்டர், நீங்க உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க. நான் இப்பவே போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரேன்" என கெஞ்சிக் கொண்டிருந்தான் கதிர்.


குருதி பெருகுவதை கட்டுப் படுத்தும் பொருட்டு வலது கையில் ஈரத்துணி சுற்றப்பட்டிருக்க, இடது கையால் அந்தக் கையை தாங்கிப் பிடித்தபடி வலியை பொறுத்துக் கொண்டு, உட்காரக் கூட இடம் கிடைக்காமல், அவனுக்கு அருகில் நின்றிருந்தாள் நிலமங்கை. அவளுடைய நெற்றியிலும் அடிபட்டு புடைத்துக் கன்றியிருந்தது.


"நாங்க ஏதாவது செய்யப் போக, தேவை இல்லாத பிரச்சனை வரும் புரிஞ்சுக்கங்க, ப்ரொசீஜரா போகலன்னு சொல்லி மேலதிகாரிங்க கேள்வி கேட்டா நாங்கதான் பதில் சொல்லணும், மொதல்ல போய் புகார் கொடுத்துட்டு போலீஸ் மூலமாவே கூட்டிட்டு வாங்க" என கரராக அவனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் அங்கே பணியிலிருந்த பெண் மருத்துவர்.


அதேநேரம் அந்த அரசு பொது மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினான் தாமோதரன். காரின் கதவை அவன் அடித்து மூடிய வேகத்திலேயே அவனுக்கு உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த கோபத்தின் அளவு புரிந்தது செல்வத்துக்கு.


"ண்ணா… எடம் பார்த்து வண்டிய நிறுத்திட்டு வந்துட்ரேன் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுணண்ணா" என அவன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கூட காதிலேயே வாங்காமல் தடதடவென அந்த வளாகத்தின் உள்ளே நுழைந்தான்.


பழக்கப்பட்ட இடம் என்பதால் நேராக அவசர சிகிச்சை பிரிவுக்கு வர, அங்கே நின்றிருந்த நிலமங்கையின் கோலத்தை பார்த்துவிட்டு அவரது ஆத்திரம் இன்னும் பல்கிப் பெருகியது. போதும் போதாததற்கு அருகில் நின்ற கதிர்வேறு எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான்.


திரும்பத் திரும்ப கதிர் கெஞ்சிக்கொண்டு நிற்க, "ஏம்பா உனக்கு சொன்னா புரியாது, இங்க நின்னு என் டயத்த வேஸ்ட் பண்ணாத. சிஸ்டர், யாரையாவது கூப்ட்டு இவங்கள புடிச்சு வெளிய தள்ள சொல்லு" என்று அந்த மருத்துவர் அலட்சியமாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே அங்கே வந்தவனுக்கு சூழ்நிலை புரிய, "என்ன டாக்டர், இதுதான் நீங்க படிச்சிட்டு வந்த படிப்புக்கு செய்யற மரியாதையா? ரத்தம் பாட்டுக்கு போயிட்டு இருக்கு, ஃபர்ஸ்ட் எய்ட் கூட செய்யாம இப்படி நிக்க வெச்சு பேசிட்டு இருக்கீங்க?" என அந்த மருத்துவரிடம் குரலை உயர்த்தினான்.


அதற்கெல்லாம் சற்றும் அசராதவராக, "வரும்போதே கும்பலோடதான் உள்ள நுழைஞ்சாங்க! ஊர் தகராறு, எவனோ வெட்டிட்டான்னு சொல்றாங்க, போலீஸ் கேஸாச்சே, அதான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வர சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு? இங்க வந்து ஏதாவது பிரச்சனையாச்சுன்னா என்னதான் கேள்வி கேப்பாங்க" என அந்த மருத்துவர் தெனாவெட்டாகவே பதில் கொடுக்க, "என்ன டாக்டர், நான் உங்க மேல ஏதாவது போலீஸ் கேஸ் கொடுக்கணுமா? போலீஸ் கேஸ் குடுத்துட்டு வந்துதான் ட்ரீட்மென்ட் பண்ணிக்கணும்னு சொல்லி எந்த ஊர் சட்டத்துல சொல்லி இருக்கு. இன்னும் பலமா அடிபட்டு உசுரு போற நெலமைல இருந்தாலும் கூட இப்படித்தான் பதில் சொல்வீங்களா? நீங்கல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க! நேரா உங்க டீன் கிட்டயே பேசிக்கறேன்" என்றவன், தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க எத்தனிக்க, அடுத்த நொடியே சுதாரித்து சற்று பம்மிய அந்த மருத்துவர், "விடுங்க விடுங்க… நான் இப்போதைக்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்றேன். உடனே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடுங்க. எனக்கு ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா உங்கள தான் சொல்லுவேன்" என முனகியபடி, "ஐயோ, இது எதுக்கு இப்ப இங்க வந்துச்சு. இருக்கற பிரச்சன பத்தாதுன்னு இது வேறயா' என மனதிற்குள் சலித்தபடி மிரட்சியுடன் அவனைப் பார்த்து நின்ற நிலமங்கையை அழைத்துச் சென்று அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர வைக்க, ஓடி வந்த செவிலியர் அவளது கையில் இருந்த ஈரத்துணியை அவிழ்க்கவும் குபுகுபுவென்று ரத்தம் வழிந்தது. உடனே ஊசியை செலுத்தி, ஒரு விரல் நீளத்திற்கு கிழிந்திருந்த அவளது தசையை சேர்த்து தையல் போட தொடங்கினர் மருத்துவர். அந்தக் காட்சியை காணவே சகிக்க முடியாமல் தவித்துப் போனான் அவளுக்கு அருகிலே போய் நின்ற தாமோதரன்.


அவனுடைய இந்த ஆவேசத்தை பார்த்து முகம் வெளிறிப் போய் அப்படியே உறைந்து நின்றான் கதிர்.


அதற்குள் செல்வம் அங்கே வந்து சேர, "வேற எவனெல்லாம் வந்து இருக்காங்கடா இங்க" என்று தாமோதரன் கேட்க, சிலரின் பெயரைச் சொன்னவன், "எல்லாரும் வெளியில மரத்தடியில நிற்கறாங்கண்ணா" என்றான் செல்வம்.


"ஆஊன்னா கும்பல் கூடிட்டு ஓடி வந்துடுவானுங்க, உருப்படியா ஒரு வேலை செய்யறதுக்கு ஒருத்தன் கூட லாயக்கில்லை. இவனுங்க வாயெல்லாம் வூட்டுல இருக்குற பொம்பளைங்க கிட்ட மட்டும்தான்" என நக்கலாக மொழிந்தவன், "மனசுல பெரிய ராணி மங்கம்மான்னு நெனைப்பு. அருவா வெட்டு வாங்கிட்டு வந்து உட்கார்ந்து இருக்கு எரும"என முணுமுணுப்பாக நிலமங்கையை கடிய, வலியில் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசக்கூட முடியாத நிலைமையில் இருந்தவள் அவனைப் பார்த்து நன்றாக முறைத்து வைத்தாள்.


சில நிமிடங்களில் அவளுக்கான மருத்துவம் முடியவும், ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அதை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பும்படி அந்த மருத்துவர் சொல்ல, "அவ்வளோதானா முடிஞ்சிடுச்சா" என வியந்தவன், "நிறைய பிளட் போனாப்பல இருந்துச்சே, ரத்தம் ஏத்த தேவை இல்லையா" என்று கேட்டுவைக்க எக்கச்சக்கமாக கடுப்பாகிப் போனார் அந்த மருத்துவர்.


"அந்த அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல தாமு, வா கிளம்பலாம்" என மங்கை அவனை அவசரப்படுத்த, "பயப்படற படியா ஒண்ணும் இல்ல, போதும் நீங்க கிளம்புங்க" என்று அவர்களை விரட்டாத குறையாக உடன் இருந்த செவிலியர் வேறு சொல்ல ஆத்திரத்தில் பற்களை கடித்த படி அவளது மற்றொரு கையை பற்றி கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான் தாமோதரன்.


செல்வமும் கதிரும் பின்னாலேயே ஓடி வர, அவர்கள் ஊர் ஆட்கள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தவன், "ஆமா வரும்போது யார் கூட வந்த?" என்று அவளிடம் கேட்க, "டாட்டா ஏஸ்ல தான் இட்னு வந்தேன் அண்ண" என பதில் கொடுத்தான் அவர்கள் ஊரைச் சேர்ந்த குமார் என்பவன்.


அங்கே நின்றிருந்த இன்னும் சில ஊர்க்காரர்களும் உதவிக்காக அதே வண்டியில் வந்திருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டான்.


"இவர் நம்ம ஊர் காரு கிடையாதே, இவர் எப்படி இங்கு வந்தாரு" என்று கதிரை பற்றி கேள்வி கேட்க, "வர வழியில மங்கதான் தகவல் கொடுத்துச்சு அண்ண, அதான் கதிர் அண்ணன் நேரா இங்க வந்துடுச்சு" என்றான் குமார்.


"சரி, மங்கைய நானே ஜாக்கிரதையா கார்ல கூட்டிட்டு வரேன் நீங்க எல்லாரும் கிளம்புங்க" என்றவன் தன் சட்டை பையில் இருந்து சில ரூபாய் தாள்களை எடுத்து குமாரின் கையில் திணித்துவிட்டு, "காலைல இருந்து இங்க காஞ்சிட்டு கிடக்கறீங்க, வயிறு நிரம்ப சாப்பிட்டுட்டு பொறவு வூட்டுக்கு போங்க" என்று சொல்லிவிட்டு, "போகலாமா மங்க?" என்று கேட்க, அனுமதி கேட்பது போல தோன்றினாலும் கட்டளையாகவே அவளை அழைப்பது புரிய, "இல்ல தாமு, நீ பொறப்படு! நான் கதிரோட கூட போய், போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு பொறவு வூட்டுக்கு போய்க்கறேன்" என்று கத்தரிப்பது போல அவள் சொல்லவும், அதை காதிலேயே வாங்காமல், "செல்வம் இவரை வூட்டுக்கு போக சொல்லு, மங்கைய நாமளே போலீஸ் ஸ்டேஷனுக்கு இட்னு போவலாம்" என்றவன் அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் அங்கிருந்து வெளியேற, அந்த சூழலில் அதற்கு மேல் அவனிடம் விதண்டாவாதம் செய்து கொண்டு நிற்க அவளுக்கும் தெம்பில்லாமல் போனதால் ஊராரிடமும், கதிரிடமிருந்தும் விடைபெற்று செல்வத்துடன் இணைந்து நடந்தாள்.


"இன்னா மங்க இது, எங்கூட்டு கிழவிதான் நேரம் காலம் இல்லாம உன்னை கூப்பிட்டுச்சுன்னா, நீ பாட்டுக்கு இப்படியா கிளம்பி போவ" என்று செல்வம் அங்கலாய்க்க, "என்ன இன்னா பண்ண சொல்ற செல்வண்ணே. நீ எங்க போற எங்க வரன்னு அந்த கெழவியாண்ட சொல்லிக்கினு போவணுமா வேணாமா? உன் டப்பா போன் வேற சுச் ஆப் ஆகி கெடந்துதாங்காட்டியும். ராப்பூரா நீ வூட்டுக்கே வரலன்னா அது இன்னான்னு நினைக்கும், பாவம். உங்க நொண்ணன பார்த்ததும் உம் புத்தி என்ன கிறுக்கிக்கிச்சா" என்று அவனை நன்றாக கடிந்து கொண்டவள், "அந்த கம்மனாட்டி பசங்க, கருக்கல்லயே சோலிய ஆரம்பிச்சுட்டானுங்க. இப்படியே அர அடி அர அடியா வரப்ப ஒதுக்கிகினே போனா உனக்கு கடைசில பயிர் வைக்க காக்காணி கூட மிஞ்சாது… மானங்கெட்ட பயலுக, கெழவி கிட்ட போய் வீரத்த காமிச்சிக்கினு நின்னுனு கிடந்தானுங்க. யார கூப்பிட்டு உடறதுன்னு தெரியாம பாவம் அது எனக்கு போன் போட்டுச்சு. அங்க போய் பார்த்தா, தண்ணி கேன் கம்பெனி காரணுங்க ரவுடித்தனம் பண்ணிட்டு கெடக்கானுங்க. ‘ஏன் இப்படி செஞ்சி குடியானவங்க வவுத்தெரிச்சல கொட்டிக்கறீங்க’ன்னு கேட்டுட்டே வரப்ப ஒதுக்கினு இருந்தவன் கையில இருந்த மம்முட்டிய புடுங்கி தூர எரிஞ்சேன். பக்கத்துல நின்னுட்டு இருந்தவன் வேற கைல ஒரு கத்திய வெச்சிக்கினு ஓவரா சீன் காமிச்சிக்கினு கெடந்தானா. அந்தப் பாவி எக்கு தப்பா புடிச்சு என்னை தள்ளவும் இவம்மேல போய் விழ, கத்தியை இழுத்துட்டான். அதுதான் கையில் காயம் பட்டுருச்சு. வலி தாங்காம தல சுத்தி பக்கத்துல இருந்த பனமரத்துல போய் முட்டிக்கினேன்" என விளக்கம் கொடுத்தவள், "ஆமா நீ எங்க போயிருந்த முதல்ல அதை சொல்லு" என்று அவனைக் கேள்வி கேட்க, "ஏதோ ஜெட்டு லாக்கோ புட்டு லாக்கோ என்னமோ சொல்லுச்சு தாமு அண்ணன். அதனால ராவெல்லாம் தூக்கம் வராம முழிச்சுக்கினு கெடக்கணும்னு சொல்லுச்சு. பேச்சுத் துணைக்கு கம்பெனி கொடுக்கலாமேன்னு அது வூட்லதான் போய் உட்கார்ந்து இருந்தேன். விடிய காலைல வூட்டுக்கு வந்துரலாம்னுதான் நெனச்சிட்டு இருந்தேன். பார்த்தா பொழுது விடிய தூங்கிபுட்டேன்" என அசடுவழிந்தான்.


பேசிக்கொண்டே இருவரும் வாகனம் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வர, இருவரையும் பார்த்து உக்கிரமாக முறைத்த படி, "எரும, அன்ன நட போட்டுனு ஆடி அசஞ்சுட்டு வர" என செல்வத்தை திட்டுவது போல பொதுவாக இரண்டு பேரையுமே ஏசினான் தாமு.


"அவ்வளவு அவசர வேல இருந்தா, நீ ஏன் இங்க வந்த? சும்மா, இருக்கிறவங்க எல்லாரையும் மிரட்டிக்கினு" என்று மங்கை எகிற, "என்னடி திமிரா, எவனோ கத்தியால வெட்டிடான்னு சொல்லி கேள்விப்பட்டதும் உசுரே போயிடுச்சு தெரியுமா? எந்த ஊரு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கீங்கன்னு கூட தெரியாம உன் தாத்தாவும் அப்பனும் தவிச்சுப்புட்டாங்க. பூங்காவனம் கெழவி சொன்னத வச்சு ஏதோ தோராயமா இங்க வந்தோம். பாத்தா ட்ரீட்மென்ட் கூட குடுக்காம நிக்க வச்சிருக்கானுங்க" என்று பொங்கியபடி முன்னிருக்கையில் போய் அமர்ந்தவனை வாய் பிளந்து பார்த்தான் செல்வம்.


"ஏன் மங்க, தாமு அண்ணன் பேசற விதத்த பார்த்தா, வேற தினுசா இல்ல இருக்கு. என் மண்டையில இப்பதான் பல்பு எரியுது" என்று அவன் மங்கையின் காதில் கிசுகிசுக்க, "அண்ணே வேணாம், கொன்னுருவேன்" என்றபடி அவள் போய் பின் இருக்கையில் அமர, வாகனத்தை கிளப்பினான் செல்வம்.


காவல் நிலையத்தில் போய் புகார் கொடுக்கும் அளவுக்கெல்லாம் தாமோதரனுக்கு. பொறுமையே இல்லை என்றாலும், அவளை நிர்பந்தப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவன் விரும்பவில்லை.


அவர்கள் பகுதிக்கான காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.


உள்ளே நுழைந்ததுமே, "என்ன மங்க இந்த மாச கோட்டாவா" என என அவளிடம் உரிமையுடனான கிண்டலுடன் கேள்வி கேட்ட தலைமைக் காவலர், அவளை பின்தொடர்ந்து வந்த தாமோதரனை பார்த்ததும் சற்று அதிர்ந்துதான் போனார்.


"அடடே, நீங்க ஜனா அண்ணன் பையன்தானே, உட்காருங்க தம்பி" என்று எழுந்து நின்று அவனை வரவேற்க, "ஆமாங்க சார், அமெரிக்கால இருந்து நேத்துதான் வந்திருக்காரு" என்று அவருக்கு பதில் கொடுத்தான் செல்வம்.


தாமோதரனை பொருத்தவரை இதெல்லாம் சற்று சங்கடமாக இருக்க, "சீக்கிரமா என்ன செய்யணும் செஞ்சு முடிச்சிட்டு கிளம்புங்க" என்று செல்வத்திடம் சொன்னான்.


"என்ன பிரச்சனை" என்று பொதுப்படையாக அந்த காவலர் விசாரிக்கவும், நடந்ததை தெளிவாகச் சொல்லி முடித்த நிலமங்கை, "இவங்களோடது ஃபிரென்டேஜ் நெலமா இருக்கிறதால, இந்த தண்ணி கம்பெனி காரனுங்க கூட தினம் தினம் பிரச்சன தான் சார். எங்களுக்கு நிரந்தரமா ஒரு சொல்யூஷன் கிடைக்கவே கிடைக்காதா? எப்ப வந்தாலும் எஸ்,ஐ இன்ஸ்பெக்டர் யாரையுமே பார்க்க முடிய மாட்டேங்குது" என்று அவள் அங்கலாய்க்க,


"தம்பி, இதெல்லாம் ரொம்ப பெரிய எடத்து விவகாரம். இந்த நெலத்தை எல்லாம் வாங்கி போட்டிருக்கிறது ஆளுங்கட்சி மினிஸ்டரோட பினாமி. இந்த பொண்ணு கிட்ட சொன்னா புரிஞ்சுக்காம சண்ட போட்டுட்டு நிக்குது. பாருங்க வயசு பொண்ணு கையில வெட்டு வாங்கினு வந்து நிக்குது. இதோட இல்ல, இதுக்கு மேலயும் போவானுங்க. போலீஸ்காரனா இருந்துட்டு இதையெல்லாம் நான் சொல்ல கூடாதுதான். ஆனா என்ன செய்ய? எங்களுக்கும் குடும்பம் இருக்குல்ல. எங்க டிபார்ட்மெண்டுகாரங்களே எதிர்த்து நிற்க பயப்படுறோம். உங்கள பாத்தா விவரமானவரா தெரியுது! நீங்களாவது கொஞ்சம் சொல்லி இந்த பொண்ணுக்கு புரிய வைங்க தம்பி" என்று தாமுவிடம் அவர் புலம்பித் தள்ள, "இப்போதைக்கு இந்த கம்ப்ளைன்ட்ட எழுதி வாங்கிக்கங்க, நான் இவகிட்ட பேசிக்கறேன்" என்று அவருக்கு பதில் கொடுத்தான் தாமோதரன்.


"ஏட்டையா, இவரே ஒன்னு ரெண்டு மாசத்துல திரும்பவும் வெளிநாடு போயிடுவாரு. இவரை போய் கூட்டு சேர்த்துக்கறீங்க பாருங்க" என கிண்டல் செய்த படி மேசை மேல் இருந்த காகிதத்தை தானே உருவி எடுத்து, ஓரமாக இருந்த பெஞ்சில் போய் அமர்ந்தபடி புகாரை எழுதத் தொடங்கினாள்.


"அவ சொல்றத எல்லாம் நீங்க காதுல வாங்காதீங்க, இந்த தடவ நான் அமெரிக்கா போகும் போது இந்த மங்கை கழுத்துல ஒரு தாலிய கட்டி இவள கூடவே கூட்டிட்டு போயிடுவேன்" என்று புன்னகையுடன் அவரிடம் சொன்னான் தாமோதரன். அந்தக் காவலரோ, “ரொம்ப நல்லது தம்பி” என்றார் மனம் நிறைந்த புன்னகையுடன்.


இதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற செல்வத்திற்குதான், 'ஐயோ, இந்த அண்ணன் ஏன் இப்படி உளறிட்டு இருக்கு' என தலையே சுற்றிப் போனது. காரணம் நிலமங்கை தற்சமயம் ஏற்றிருக்கும் பொறுப்புகள் அப்படி!


********வணக்கம் அன்புத் தோழமைகளே!


காட்டுமல்லிக்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


உண்மையில் இப்பொழுது ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருகிறேன் மக்களே. அதனால்தான் நிலமங்கை இவ்வளவு தாமதமாகிறது, மன்னிக்கவும்.


சூழ்நிலை எனக்கு சாதகமாக அமைந்தால் விரைவாக எழுதி முடிக்கிறேன்.


உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.


இந்த எபி பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


நட்புடன்,

KPN

© KPN NOVELS COPY PROTECT
bottom of page