top of page

Nilamangai - 13 (2)

Updated: Mar 7

13. சதிவலை.

2.  நிச்சலம்


"மங்க, எழுந்துரு. இப்பவே கிளம்பினா தான் நீ சொன்ன நேரத்துக்கு மகாபலிபுரம் போய் சேர முடியும்" என்ற தாமுவின் குரலில் அடித்துப் பிடித்த அவள் எழுந்து அமர, கையில் காஃபி குவளையுடன் அவளுக்குத் தரிசனம் தந்தான் அவளை ஆட்டிப் படைப்பவன்.


"தேங்க்ஸ் தாமு" என்றபடி அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டுப் போய் அவள் பல்துலக்கி விட்டு வர, "தேங்க்ஸ் மங்க" என்றான் தாமோதரனுமே. 


இந்த 'தேங்க்ஸ்' எதற்காக என்பது புரியவும் ஒரு அழகான புன்னகை அவளது முகத்தில் வந்து ஒட்டிக்கொள்ள காஃபியை எடுத்து பருகியவள், "வெரி நைஸ் தாமு" என்றாள் இரசனையுடன்.


அதே இரசனையுடன் அவனுமே, "வெரி நைஸ்… மங்க" என்று இதழ் விரிந்த புன்னகையுடன் சொல்ல, இந்த 'நைஸ்' எதற்கு என்பதும் புரிந்ததால் அவளுடைய முகம் சிவந்து போனது. 


மேலும் மேலும் மோகத் தீ அவள் மீது கொழுந்து விட்டு எறிய, மனதை இழுத்துப் பிடித்து தன்னை இயல்பாக வைத்துக்கொள்ள மிகவும் போராடித்தான் போனான் தாமோதரன்.


அதன் பின் இருவரும் அவசர அவசரமாகக் கிளம்பி மகாபலிபுரத்தை நோக்கிப் பயணப்பட்டனர். 


அவள் கேட்டுக்கொண்டதன் படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவன் வாகனத்தை நிறுத்த அவள் கீழே இறங்கவும், "முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு, வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று அவன் அக்கறையுடன் சொல்ல அவள் தலையசைக்கவும் அதற்குள் அவளை நோக்கி ஓடி வந்தாள் அவளுக்காகவே அங்கே காத்திருந்த முகிலா. 


தாமுவுக்கு கையசைத்து விட்டு, மங்கை அவளுடன் சென்றுவிட அவன் காருக்குள் அமர்ந்தபடியே அவளைப் பார்த்திருந்தான். இன்னும் நான்கு ஐந்து பேர் தூரத்தில் இவளுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. மிகவும் குறைவான வெளிச்சத்தில் யாரையும் அடையாளம் காண இயலவில்லை. 


மனதிற்குள் லேசாக பயம் கவ்வினாலும், தன் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.


ஏற்கனவே அன்றைய தினம் விக்ரமை நேரில் சந்தித்துப் பேச அவன் முடிவு செய்து வைத்திருக்க மங்கையைப் பாதுகாப்பாக இங்கே அழைத்து வர வேண்டிய சூழல் உருவானதால் அவனை அங்கேயே இருக்கும் அவனுக்குச் சொந்தமான விடுதியிலேயே சந்திப்பதாகச் சொல்லி இருந்தான்.


நேராக அவன் அங்கே செல்ல, அவனுக்காக அங்கே காத்திருந்தான் விக்ரம்.


காஃபியை வரவழைத்துப் பருகியபடி தாமு யோசனையுடனே அமர்ந்திருக்க, "என்னடா மாமா, திடீர்னு டீ.பிய மீட் பண்ணனும்னு சொல்ற என்ன விஷயம்?" என்று விக்ரம் கேட்க, "நேத்து மங்க டீ.பி கிட்ட பேசிட்டு இருந்தாடா மாமா, அதான் என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கணும்னு பாக்கறேன்" என்று நேரடியாக விஷயத்தைச் சொல்ல, "ஹேய் காமெடி பண்ணாத தாமு" எனச் சிரித்தான் விக்ரம்.


"இல்லடா மாமா, ஐ ஆம் சீரியஸ், நேத்து எர்லி மார்னிங் மங்க இன்காக்னிட்டோ விண்டோக்குள்ள போய், பிரவுசிங் ஹிஸ்டரி தெரியாம ஏதோ சைட் அக்சஸ் பண்ணிட்டு இருந்தா!” 


 ”எல்லாத்தையுமே வைஃபை ஹிஸ்டரி வச்சு பாத்துட்டேதான் இருந்தேன். அட்வான்ஸ்ட் சர்ச் பார்த்தப்ப கூட என்ன செய்யறான்னு கண்டுபிடிக்க முடியல. அவ டார்க் வெப் எல்லாம் ஆக்சஸ் பண்ணுவான்னு சத்தியமா நான் நம்பல. ஆனா பண்ணி இருக்கா, யூ நோ! அவ ஒரு வாய்ஸ் கால் பேசினா, அவ பேசிட்டு இருக்கிறது டீ.பி கூடத்தான்னு அப்பதான் தெரிஞ்சுது" என்று தாமு சொல்ல உண்டான வியப்பை விக்ரமால் மறைக்கவே முடியவில்லை.


"சத்தியமா சொல்றேன்டா மாமா, நிச்சயமா மங்க மேட் பார் தாமுதான்" என்று சொல்லி அவன் சிரிக்க, "அட போடா நீ வேற!" என்று சலித்தபடி, "இத பத்தி என்ன ஏதுன்னு விசாரி, முடிஞ்சா டீ.பியோட எனக்கு ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு" என்று தீவிரமாகச் சொல்ல, "டன்" என அதற்கு ஒப்புக் கொண்டான் விக்ரம்.


அதன்பின் வேறு ஏதோ கதைகளைப் பேசியபடி நேரத்தைத் தள்ள, இறக்கி விட்ட அதே இடத்திதுக்கு வந்து அழைத்துச் செல்லுமாறு மங்கை அவனைக் கைப்பேசியில் அழைத்துச் செல்லவும், நண்பனிடம் விடை பெற்று கிளம்பினான் தாமு.


அவன் அங்கே வந்தபோது மங்கை மட்டும் அவனுக்காகக் காத்திருக்க, அவளுடைய தோழர்கள் அனைவரும் தூரத்திலேயே நின்று வழி அனுப்பும் விதமாக அவளுக்குக் கைக் காண்பித்தனர். அவர்களுக்குள் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தியும் கருப்பின ஆண் ஒருவனும் இருப்பது போல் தோன்றியது.


அவள் படித்தது மொத்தம் வெளிநாட்டில் என்பதனால் அது அவனுக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை என்றாலும், ஏன் அவர்களை இவள் தன்னிடம் அறிமுகப்படுத்தவில்லை என்கிற கேள்வி உள்ளுக்குள்ளே எழுந்தது. ஆனாலும் அதைக் கேட்காமல் வாகனத்தைக் கிளப்பியவன், "பசிக்குதா மங்க, வழில எங்கயாவது பிரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டுப் போலாமா? இல்ல நேரா வூட்டுக்குப் போயிடலாமா?" என்று அவன் கேட்கவும்,


"ஒனக்கு பசிச்சா சாப்பிடலாம், இல்லன்னா வூட்டுக்குப் போயிடலாம். ஃபிரண்ட்ஸ் ஃப்ரூட்ஸ், ஜூஸு எல்லாம் எடுத்துட்டு வந்திருந்தாங்க, சாப்டேன். அதனால எனக்குப் பசிக்கல" என்று அவள் பதில் கொடுக்க அவனுமே விக்ரமுடன் கொஞ்சமாகக் கொறித்து விட்டு வந்திருக்க, வீட்டிற்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்து வாகனத்தை வேகமாகச் செலுத்தத் தொடங்கினான்.


காலை நேரம் என்பதினால் கடற்கரை சாலை, அதிகப் போக்குவரத்து இல்லாமல் அமைதியாக காட்சியளித்தது. மோகனமான அந்த கார் பயணம் மனதை மயிலிறகால் வருட, தனது பார்வையைத் தாராளமாக அவள் மீது படரவிட்டான்.


முந்தைய இரவு முதலே மனதிற்குள் மையமிட்டிருந்த தாபத்தைக் கட்டி வைத்திருந்தவனின் பிடி தளர்ந்து போனது.


அதிகாலை அவசரவசரமாகக் கிளம்பி வந்திருந்ததில் அவளைக் கவனித்து ஒரு பார்வை பார்க்கக்கூட அவகாசம் கிட்ட வில்லை. காரில் ஏறி அமர்ந்த பிறகும் கூட தொடர்ந்து கைப்பேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, சிறிதும் தன் கவனத்தை அவள் மீது திருப்ப இயலவில்லை.


இப்பொழுது பார்க்க, இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்திருந்தவள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்க அவளது பார்வை சாலையையே வெறித்திருந்தது.


அவளுக்காகவே அவன் பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்த அடர் நீல ஜீன்ஸையும் அதற்கு தோதான ஆகாய நீல வண்ண குர்த்தியையும் அணிந்திருந்தாள்.


அதற்கு மேல் பெரிதாக ஒப்பனை செய்ய அவளுக்கு அவசியமே இருக்கவில்லை. அவளுடைய இந்தத் தோற்றத்தைப் பார்த்து பழகிவிட்டிருக்க, இப்படியும் அவளை அவனுக்குப் பிடிக்கவே செய்தது.


மனதிற்கு கடிவாளமிட முடியாமல் அப்படியே சரிந்து அவளது கன்னத்தில் இதழ் பதித்து, "லவ் யூ மங்க" என்றபடி நிமிர, அவனது அந்த ஒரு நொடி நேர தடுமாற்றத்திற்குள் அனாயாசமாக அவனது காரை உரசிவிட்டு அதி வேகமாக அவர்களைக் கடந்து போனது, கன்டைய்னர் லாரி ஒன்று. நொடி நேரத்திற்குள் அவன் மட்டும் சுதாரிக்காமல் விட்டிருந்திருந்தால் அடுத்த நொடி இருவருமே உயிர்த்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.


எப்படியோ சமாளித்து, ஒரு கையை அவளுடைய கழுத்தில் போட்டு அவளைக் குனிய வைத்து தானும் குனிந்து வாகனத்தை அவன் நன்றாக வளைத்திருக்க சரிவில் இறங்கி தடுமாறி அந்த கார் நிற்பதற்குள், அதன் முன்புற கண்ணாடி தூள் தூளாக உடைந்து போய் ஏர் பேர்க்கும் திறந்து கொண்டது.


அவனது இரண்டு கைகளிலும் கண்ணாடி துண்டுகள் குத்திக் கிழித்திருக்க இரத்தம் கசியத் தொடங்கியது. அப்பட்டமான உயிர் பயத்துடன், "மங்க, ஆர் யூ ஆல்ரைட்" என அருகில் இருந்தவளின் நிலையைப் பார்க்க, "ஐம் ஓகே தாமு" என திடமாக ஒலித்த அவளது குரலில் சற்றே ஆசுவாசம் அடைந்தவன் சமாளித்துக் கொண்டு கீழே இறங்கி அவள் பக்க கதவைத் திறந்து கீழே இறங்க அவளுக்கு உதவினான்.


தடுமாறி நின்றவளை, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கலங்கிய கண்களால் அளவெடுக்க, கண்களுக்குப் புலப்படும் இடங்களில் தெரிந்த சிறு சிறு கீறல்களில் மெல்லியதாக உதிரம் கசிய, நெற்றி எதிலோ முட்டி லேசாக புடைத்து கன்றியிருந்தது. மற்றபடி பெரிதான பாதிப்பு எதுவும் இல்லை என்பது புரிய, அதே கரிசனையுடன் அவளும் இவனை ஏறிடுவது புரிந்த கணம், அப்படியே தாவி அவளது கழுத்தைக் கட்டி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


அவளுடைய் கைகளும் அவனைச் சுற்றி வளைக்க, "ஐ டூ லவ் யூ, தாமு" என அவளது கட்டுப்பாடுகளை உடைத்து அனிச்சையாக அவளது இதழ்கள் முணுமுணுத்த தேன் தெறிக்கும் வார்த்தைகள் அவனது உயிர் வரை தொட்டு மீண்டது.


அவனது அணைப்பிலிருந்து விலகத் தோன்றாமல், “நீ ஓகேதான?” என்று கேட்க, ‘ம்ம்’ என அவன் முணுமுணுக்கவும், “பயபடாத தாமு, எனக்கும் ஒண்ணும் இல்ல” என்றாள் அவனை அமைதிப் படுத்தும் வண்ணம்.


இறுகிக்கொண்டே போன அவளது அணைப்பில் சற்றே மனம் தெளிந்து அமைதியுற்றாலும், இவ்வளவு பெரிய விபத்துக்குப் பின்னும் பதற்றமே அடையாத நிலமங்கையின் இந்த அதீத நிதானம் தாமோதரனையே அதிர வைத்தது!


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 17, 2023
Rated 5 out of 5 stars.

Awesome epi... Very eager to know more about mangal activities in the back end

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page