13. சதிவலை.
1. உதாசீனம்.
நிதரிசனத்தில்…
அமைதியாக அவளைக் கோவிலின் வாயிலில் இறக்கிவிட்டவன், “நான் பொரப்பட்றேன், மங்க. நிறைய வேலை கிடக்கு. முடிச்சிட்டு உன் பொறந்த வீட்டு ஆளுங்க கூடவே திரும்ப வந்துரு” என்று சொல்லிவிட்டு வாகனத்தைக் கிளப்ப, “தாமு” என்ற அவளது அழைப்பில் ‘என்ன?’ என்பதாகத் தேங்கி நின்றான்.
“இம்மாம் வருஷம் போனதுக்கு அப்பாலயும், எந்த நம்பிக்கைல என்னையே நெனச்சிட்டு உன் வாழ்கைய நாசம் செஞ்சுக்கற தாமு நீயி?” எனக் கேட்டாள் வருத்தம் மேலிட.
“நீ இந்த மாதிரி பேசறதே அபத்தம்னு உனக்குப் புரிய மாட்டேங்குது பாரு! நீ இல்லாம எனக்குன்னு தனியா ஏதுடி வாழ்க்க? அது நல்லா இருந்தாலும் உங்கூடத்தான்… இல்ல நாசமாப் போனாலும் நீ இல்லாமத்தான்” என்று அசராமல் அவளுக்குப் பதில் கொடுத்துவிட்டு, வாகனத்தை வேகமாகச் செலுத்திக் கொண்டு அங்கிருந்து சென்று மறைந்தான்.
அவளது வைராக்கியமெல்லாம் அவனுக்கு முன் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து கொண்டிருப்பது அவளது அறிவுக்கு நன்றாகவே புரிந்தது. அது முழுவதும் கரைந்து காற்றோடு போகும் முன் தான் மேற்கொண்டு வந்த வேலை முடிந்துவிட வேண்டுமே என்கிற பயம் அவளது மனம் முழுவதும் பரவியது.
அது மட்டும் நல்லபடியாக முடிந்துவிட்டால், ‘அதன் பின் என்ன?’ என்கிற கேள்விகே இடமில்லை என்பது அவளுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்திருக்க, அதற்கு மேல் சிந்திக்க ஒன்றுமில்லை என்கிற மனநிலையுடன் கோவிலுக்குள் சென்றாள்.
அவளைப் பார்த்தவுடன், “வந்துட்டியாக்கா? பொங்கல் எல்லாம் வெச்சி முடிச்சாச்சு. சாமிக்குப் பூஜை போட ரெடி பண்ணிட்டு இருக்காங்க. எல்லாரும் உனக்காகதாங்கா வெயிட்டிங்” என்றபடி வனா ஓடிவந்து அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, அதன் பின் அந்தச் சூழ்நிலை அவளைத் தன் கட்டுக்குள் பிடித்து வைத்துக் கொண்டது.
எல்லாம் முடிந்த அவர்கள் வீடு வந்து சேரவே மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது.
தாத்தா, சித்தி, வனா, கேசவன் இன்னும் சில பங்காளி உறவினர்கள் எனச் சிறு கும்பலே சேர்ந்து விட்டிருக்க, இந்த நேரத்தில் வாகனம் ஏதும் ஏற்பாடு செய்யாமல் இருந்ததால் எல்லோரும் பேசிக் கொண்டே நடந்தபடி வீடு வந்து சேர்ந்தார்கள்.
மதிய உணவுக்கு ஏற்கனவே வெளியில் சொல்லி வைத்திருக்கவே, வீடு திரும்பிய பின் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. நேராக அப்பாவின் அறைக்குள் போனவள் மின்விசிறியைச் சூழலல விட்டு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவருக்கு அருகில் அமர்ந்தாள்.
அவளை உரசியபடியே உள்ளே நுழைந்த வனா, கையில் எடுத்து வந்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் அவளுடைய அப்பாவின் நெற்றியில் பூசி விட, மெதுவாக ஒரு கையைத் தூக்கி அவளது தலையை வருடினான் வேலு.
அவனது விழிகள் லேசாகக் கலங்க, "என்னப்பா, நம்ம வனாவ கட்டிக் குடுத்து ரொம்ப தொலவு அனுப்பனுமேன்னு வருத்தப்படுறியா?" என்று மங்கை கரிசனமாகக் கேட்க, 'இல்லை' என்பதாகத் தலையசைத்தவன், "இந்த கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு கொஞ்சம் பயமா இருக்கு, அவ்வளவுதான். மனசுக்குப் புடிச்ச பையன கட்டிட்டு இந்தப் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும். மத்தபடி நீதான் இங்கேயே வந்துட்டியே, இனிமே உள்ளூர்ல தான இருக்க போற? எனக்கு வேற என்ன கொற இருக்கு சொல்லு மங்க?" என்று வேலுமணி சொல்ல, ஒரு மாதிரி மனதைப் பிசைந்தது மங்கைக்கு. அவனுடைய கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டாள்.
"அக்கா, முகிலான்னு ஒருத்தங்க கால்ல இருக்காங்க. உங்கிட்ட பேசணுமாம்" என்றபடி சந்தானத்தின் கைப்பேசியை அவளிடம் நீட்ட, வேகமாக அதை வாங்கிக்கொண்டு புழக்கடை நோக்கிப் போனாள்.
சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓட்டியவள், அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கிணற்றடி தொட்டியின் மேல் உட்கார்ந்தபடி, "சொல்லுங்க டாக்டரே, எனி எமர்ஜன்சி, திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க" என்று கேட்டாள்.
"நம்ம ஃபிரெண்ட்ஸ் சில பேர் ஒன்ன நேர்ல பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்க. நாளைக்கு எர்லி மார்னிங் மகாபலிபுரம் வந்துரு. அங்க வெச்சு அவங்கள உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்றேன். ரிலேக்ஸ்ட்டா சூர்யோதயத்த பார்த்துட்டே கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்று எதிர் முனையில் பேசிய முகிலா சொல்ல, அடுத்த நாள் காலை வேறு ஏதும் வேலை இருக்கிறதா என யோசித்தாள்.
மாலைதான் வனாவுக்கு நலங்கும் அதைத் தொடர்ந்த விருந்தும் இருக்க, அதிகாலையே கிளம்பி அங்கே வருவதாக ஒப்புக்கொண்டு வனா திருமணம் பற்றி அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி அழைப்பைத் துண்டிக்க அரை மணிநேரம் கடந்துவிட்டிருந்தது.
அதற்குள் ‘மங்க… மங்க’ என அவளது பெயரைக் கூவிக் கூவி மகேஸ்வரி அவளைத் தேடிக் கொண்டிருக்க, “தோ வரேன், சித்தி” எனக் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தாள்.
“நீ என்ன விருந்தாளியா மங்க? ஒவ்வொரு வேளைக்கும் யாராவது வந்து ஒன்ன அழைச்சாதான் சாப்புட வருவியா? வந்து நேரத்தோட சோத்த துன்னுட்டு அப்பால மத்த வேலைய பார்க்கலாமில்ல” என அழைக்க, அவளுடைய குரலில் வெளிப்பட்ட அதீத உதாசீனம் மங்கையின் மனதிற்குள் ஊசிப் போல சுருக்கெனக் குத்தியது.
அதை வெளியில் காண்பிக்காமல், “அப்பா சோறு துன்னுடுச்சா சித்தி” என்று எதார்த்தமாகக் கேட்டபடி பந்தியில் உட்கார்ந்திருந்த அவளது தாத்தாவுக்கு அருகில் போய் அமர, “எங்க, பசி இல்ல, பசி இல்லன்னு சொல்லி உசுர எடுத்துக்கினு கிடக்கு. அது மனசுல என்ன வேதனையோ, வாய தொறந்து சொன்னாதான தெரியும். உள்ள பூந்தா கண்டுக்க முடியும். கேசவன் ஒரு பக்கம், வேல வேலன்னு அல்லாடினு கெடக்கறான்னு சொன்னா, கல்யாண பொண்ணுன்ற நெனப்பே இல்லாம இந்த வனா பொண்ணுதான் பசி பட்டினியோட அதுங்கூட கெடந்து லோல் பட்டுன்னு கெடக்குது பாவம்” என மகேஸ்வரி அவளுடைய முகத்திலடித்தார்போல சுள்ளென எரிந்து விழ, பட்டென எழுந்தவள், “சரி நான் போயி வனாவ அனுப்பறேன்” என்றபடி விறுவிறுவென அங்கிருந்து அகன்றாள்.
"நீ கொஞ்சம் கூட மாறவே மாட்டியா? என்ன மகேசு இது, இம்மா வருஷம் கழிச்சி அந்தப் பொண்ணே இப்பதான் இங்க வந்துருக்குது. நீ இப்படி அதும் மூஞ்சில அடிச்சா மாதிரி பேசுறியே, ஒனக்கே இது சரியா படுதா?" எனக் கேள்வி கேட்டார் தத்தா.
"உன் பேத்திய சொன்னா உனக்குப் பொத்துக்கினு வந்துருமே. இதாலதான் உன் மச்சான் இப்படி வெசனப்பட்டுகினு கிடக்குது. இது மட்டும் ஒழுங்கா தாமுவோடா போயி நல்லபடியா குடும்பம் நடத்தினாங்காட்டியும் அது ஏன் இப்படி எங்க உசுர எடுக்கப் போகுது? இதெல்லாம் உனக்கு எங்கனா புரியுதா?" என்று அருகில் இத்தனை பேரை வைத்துக் கொண்டே மகேஸ்வரி அவருக்குப் பதில் கொடுப்பது நன்றாகவே மங்கையின் காதில் விழுந்தது.
"மகேசு சொல்றதும் சரிதான மாப்ள, இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் இந்த மங்க பொண்ண அதும்போக்குல உடப் போறீங்க?" என சந்தானத்தை வாய் திறக்க விடாமல் வேலுவின் ஒன்றுவிட்ட பெரியம்மா கேள்வி கேட்பதும் காதில் விழுந்தது.
அதற்கு மேல் எதையும் கேட்க பிடிக்காமல் வேகமாக தந்தை இருக்கும் அறைக்குள் வர, கையில் ஒரு தட்டுடன் வேலுமணியைச் சாப்பிட வைக்க போராடிக் கொண்டிருந்தாள் வனா. சித்தி சற்றுக் கடுமையாகச் சொன்னாலும் அவளுடைய ஆதங்கம் சரி என்றே பட்டது.
"வனா தட்ட என்கிட்ட குடுத்துட்டு நீ போய் சாப்புடு" என அவளது கையில் இருந்து தட்டைப் பறித்துக் கொண்டு நிர்பந்தமாக அவளை அங்கிருந்து அனுப்பினாள்.
"ஏம்பா, ஒவ்வொரு வேளைக்கும் ஒனக்கு சோறும் மருந்தும் கொடுக்க அந்தப் பொண்ணு இவ்வளவு போராடுது இல்ல, நீ கொஞ்சமாவது அனுசரிக்கணும்பா" என மங்கை அவனை இதமாகவே கடிய, "என்னால தான மங்க உனக்கு இந்த அவதி. இல்லன்னா நீ இஷ்டப்பட்ட படி இப்ப இருந்திருப்ப இல்ல?" என வருத்தத்துடன் கேட்டான் வேலுமணி.
"நீ நெனைக்கற மாதிரி எல்லாம் இல்லப்பா, நான் எப்படி இருக்கணும்னு ஆசப்பட்டனோ அதைவிட எனக்குப் புடிச்ச மாதிரி ரொம்ப நல்லாவே வாழ்ந்துட்டு இருக்கேன். நீ கவலையே படாத” என அவனுக்குப் பதில் கொடுத்தபடி உணவை எடுத்து அவன் வாயில் புகட்ட, அடுத்து ஏதோ சொல்வதற்காக அதை அவன் வேகமாக விழுங்கவும் தொண்டையில் சிக்கிக்கொண்டு கமரியது.
"அப்பா, எதுக்கு இந்த அவசரம், மெதுவா சாப்புடு" எனப் பதறியபடி அவனுக்குத் தண்ணீரைப் புகட்டினாள்.
"கண்ணு, நீ தாமுவோட கூட சேந்து குடும்பம் நடத்துறதும் நடத்தாம போறதும் உன் இஷ்டம். ஆனா இந்த ஊர வுட்டு மட்டும் போயிராத கண்ணு. என் கூட என் வூட்டுல இல்லன்னா கூட பரவால்ல, உந்தாத்தா கூவே இருந்துக்க. முன்ன மதிரி ஒரு நாளைக்கு ஒரு தரமாது ஒன்ன கண்ணால பார்த்துட்டு இருந்துட்டா, அதுவே எனக்குப் போதும்” என ஒரு வரமாக அதை அவன் அவளிடம் யாசிக்க, அவனது இந்தப் பேராசையை அவளால் நிறைவேற்றவே இயலாது என்கிற நினைப்பில், கல்லாக்கி வைத்திருக்கும் அவளது நெஞ்சைப் பொத்துக் கொண்டு கசிந்த ஈரம் அவளது கண்களில் உடைப்பெடுத்து. முகத்தைத் தன் தோளில் துடைத்தபடி அவள் பின் புறமாகத் திரும்ப, அந்த அறையின் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான் தாமோதரன்.
தகப்பனுக்குக் காண்பிக்க விரும்பாமல் அவள் திருப்பிய முகத்தை இவன் பார்க்க நேர்ந்துவிட, அவளது உடலில் உண்டான சிறு அதிர்வும் அவனது பார்வைக்குத் தப்பவில்லை.
அதுவும் வேலுமணி பேசியதை முழுவதுமாகக் கேட்டிருந்தவனுக்கு, 'நாமளே இவள கரெக்ட் பண்ணி சுமுகமா குடும்பம் நடத்த என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கோம். அது புரியாம இந்த மாமா என்னடான்னா விவரமே இல்லாம இப்படி பேசுதே' என ஆயாசமாக இருந்தது அவனுக்கு. அவளுடைய முக வாட்டம் வேறு மனதைப் பிசைந்தது.
"இன்னா மாமா பேசிகினிருக்க நீ? உம்பொண்ணே என்ன வெச்சி செய்யுது! இதுல நீ வேற அவள ஏத்து ஏத்துன்னு ஏத்தி வுடுற. பெரிய மனுஷனா இலட்சணமா என் மருமவங்கூட நல்லபடியா சேர்ந்து வாழுன்னு உம்மவளுக்குப் புத்தி சொல்ல வேணாமா?" என இலகுவாகவே கேட்பது போல் கேட்டபடி மங்கைக்கு அருகில் வந்து நிற்க அவளோ அவளைப் பார்த்து முறைக்க, வேலுவின் முகம் இறுகிக் கருத்தது.
"இதோ பாரு மாமா, உம்பொண்ணு இனிமே நம்ம வுட்டு எங்கேயும் போகாது. இத போகவும் நான் உடமாட்டேன். நீயி தேவையில்லாம கவலப்பட்டுக் குட்டைய கொழப்பாத!" என அழுத்தமாக சொன்னபடி அவளை அர்த்தம் பொதிந்த ஒரு பார்வை பார்க்க அவனை முறைப்பதை மட்டுமே தன் வேலையாக செய்து கொண்டு இருந்தாள் மங்கை.
"அதில்ல தாமு, யாரோட நிர்பந்தத்துக்காகவும் இது இங்க இருக்கக் கூடாது. இதோட முழு விருப்பத்தோட சந்தோஷமா நம்ம கூட இருக்கணும். அதுதான் எல்லாத்த விட ரொம்ப அவசியம்" என வேலுமணி குளறலாக என்றாலும் தெளிவாகத் தன் கருத்தைச் சொல்ல,
"எல்லாம் நீ சொல்ற மாதிரியே நடக்கும் மாமா, கவலப்படாத" என இதமாகவே அவனுக்குப் பதில் கொடுத்தவன், "கை காயுது பாரு மங்க. சோத்த எடுத்து எம்மாமனுக்குக் குடு" என அவளைப் பார்த்துச் சொல்ல அவளும் அந்த வேலையைத் தொடர்ந்தாள்.
"மங்க, இந்தப் பாயாசத்த வெக்க மறந்துட்டேன். அப்படியே இதையும் உங்க அப்பாவுக்குக் குடுத்துடு" என்ற படி கையில் எடுத்து வந்த கிண்ணத்தை அவளிடம் நீட்டினாள் மகேஸ்வரி.
எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த தாமு நேராக மங்கை இருக்கும் இடம் பார்த்து வந்து விட, தான் மங்கையிடம் பேசிய அனைத்தையும் அவன் கேட்டு விட்டானோ என்கிற பதற்றம் அவளுக்குள் உண்டாகி இருந்தது. அதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டே ஏதோ ஒரு சாக்கு வைத்துக் கொண்டு இங்கே வந்தாள். அவளுடைய பார்வை தாமுவின் முகத்திலேயே நிலைத்திருக்க அவனது பாவனையில் இருந்து அவளால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
"பால் பாயாசம் ரொம்ப நல்லா இருக்கு தாமு, உனக்கு ஒரு கப் எடுத்தாந்து தரட்டுமா?" என உபசரிப்பாக அவள் கேட்கவும், "என்னக்கா, எனக்கே பாயாசம் போட பாக்கறியா நீயி" எனக் கிண்டலாகச் சொல்ல அவளுடைய முகம் வெளிறிப் போனது.
அதைக் கவனிக்காதவன் போல, "இவ்வளவு அக்கறையா கேக்கற, ஏன் வேணாம்னு சொல்லணும்? நீ போய் எடுத்துட்டு வா" என்று அவளுக்குப் பதில் கொடுக்க, வேகமாக அகன்றாள் மகேஸ்வரி.
உடனே கைப்பேசியை எடுத்து இயக்கி, "கார் பின் சீட்ல ஒரு பேக் இருக்கு பாரு அதை எடுத்துட்டு உடனே கேஸவன் வீட்டுக்கு வா" என்று சொல்லித் துண்டித்தான்.
மங்கை பொறுமையாக வேலு மணிக்கு உணவைப் புகட்டிக் கொண்டு இருக்க, அவளையே யோசனையுடன் பார்த்தபடி நின்றிருந்தான். மகேஸ்வரியும் பாயசத்துடன் வர அதே நேரம் செல்வமும் அவன் கேட்ட பையுடன் உள்ளே நுழைந்தான்.
அதற்குள் வேலு மணியும் சாப்பிட்டு முடித்திருக்க "மங்க நீ போய் சட்டுனு கைக் கழுவிட்டு வா" என்று சொல்ல கண்களாலேயே அவனை எரித்த படி அங்கிருந்து சென்றவள் கையைக் கழுவித் துடைத்த படி திரும்ப வரவும், அந்தப் பையில் இருந்து ஒரு கட்டுப் பணத்தை எடுத்து மங்கையின் கையில் திணித்தவன், "இத உன் சித்தி கைல குடு" என்று சொல்ல அவள் குழப்பத்துடன் கேள்வியாக அவனை ஏறிடவும் மகேஸ்வரிக்குக் கை கால்கள் எல்லாம் நடுங்கி விட்டது.
கொஞ்சமும் ஒத்துழைக்காமல் வேலுமணி செய்யும் பிடிவாதத்தில் வனமலர் அல்லாடிக் கொண்டிருப்பதைப் பார்து உண்டான ஆதங்கத்தில் வாயை அடக்க முடியாமல் மங்கையிடம் அப்படி எடுத்தெறிந்துப் பேசிவிட்டாளே ஒழிய, அடுத்த நொடியே பின் விளைவுகளைப் பற்றிய பயம் அவளுக்கு வந்துவிட்டது என்பதுதான் உண்மை.
"என்ன மங்க, வேடிக்கை பார்த்துனு நின்னுட்டு இருக்க, பணத்தை இதுங்கைல குடு" என தாமு அவளை அவசரப்படுத்த, மகேஸ்வரியிடம் அதை நீட்டவும் கை நடுங்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டாள்.
ஐநூறு ரூபாய் தாள்கள் அடங்கிய அந்தப் பணக்கட்டுகளைப் பார்த்ததும் மங்கைக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
"ஆமா, எதுக்கு தாமு இவ்வளவு பெரிய அமௌன்ட்? அதுவும் நீ இவங்களுக்குக் கொடுக்கிற?" என அவள் சிறு பதற்றத்துடன் கேட்க, "இந்த ரெண்டு இலட்ச ரூபா பணத்தைக் கொடுத்து உன்னை மொத்தமா கிரயம் பண்ணி எழுதி வாங்கிக்க போறேன்" என்று சொல்லி அதில் கொலை காண்டாகி போய் அவள் முறைக்கவும் பக்கென்று சிரித்தவன், "வனா கல்யாண செலவுக்குதான்" என்றான்.
"அதான் அல்மோஸ்ட் எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சே, இப்ப எதுக்கு சித்தி இவ்வளவு பெரிய அமௌன்ட்டு" என்று மகேஸ்வரியாக் கேள்வி கேட்டாள்.
"அது… அது வந்து" எனத் தடுமாறியவளுக்கு அதற்கு மேல் தொண்டையை விட்டு அடுத்த வார்த்தை வெளிவராமல் சிக்கிக் கொண்டது.
எப்படி அவளிடம் சொல்வது எனப் புரியாமல் தடுமாற்றத்துடன் அவள் தாமுவை ஏறிட, 'நீதான இவளை எடுத்தெறிஞ்சிப் பேசின, நீயே பதில் சொல்லு' எனப் பிடிவாதமாக அவன் அசையாமல் நிற்கவும், "அது, நம்ம வனா மாப்ள வூட்ல அஞ்சு லட்சம் ரொக்கம், வரதட்சணையா கேட்டாங்க. நிச்சய தாம்பூலம் செஞ்சப்பவே மூணு ரூபா கொடுத்தாச்சு. இது பாக்கி” என்றாள் குரல் தந்தி அடிக்க.
“அது சரி, அத எதுக்கு தாமு கொடுக்குது” என்று அதிலேயே இவள் நிற்க, “அது வந்து… நம்ம வனா கல்யாணப் பொறுப்பு பூராவும் தாமு தான் எடுத்துட்டு இருக்கு, அதனாலதான்" என்று ஒருவாறு திக்கித் திணறி மகேஸ்வரி அவளுக்குக் கொடுத்த விளக்கத்தில், மங்கைக்கு அப்படியே கூசிப் போய்விட்டது.
'இவ்வளவு பெரிய தொகைய வரதட்சணையா கொடுத்து இப்படி செலவு செஞ்சு உன் பொண்ணுக்கு ஆடம்பரமா ஒரு கல்யாணம் தேவையா?' எனக் கேட்க நினைத்தாலும் அதை அவளால் செய்ய முடியவில்லை. தங்கை மேலிருந்த அக்கறை தடுத்தது. அதுவும் இது அவளது காதல் திருமணம் என்பது ஏற்கனவே தெரிந்திருக்க செய்வதறியாமல் குழம்பிப் போனாள்.
பார்த்த வரையில் மொத்த திருமண செலவும் பல இலட்சங்களைத் தாண்டி இருக்கும். இதையெல்லாம் இவனிடம் எப்படி ஈடு செய்வது? ஆனால் இதையெல்லாம் நேரிலேயே பார்த்த பின்னும் இவளுக்கு மிகப் பெரிய வியப்பு என்னவென்றால், இவை எதைப்பற்றியும் இவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான்!
இதற்கெல்லாம் ஈடு செய்யும் படி கேவலமாகத் தன்னிடம் இந்த தாமோதரன் எதையும் கேட்டு விட மாட்டான் என்கிற நம்பிக்கை அசைக்க முடியாமல் ஆணி அடித்து மனதில் பதிய அவனுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
அவளுடைய பார்வையில் கலந்தபடி, "தோ பாருக்கா… நான் வேற மங்க வேற கிடையாது. நான் உன் குடும்பத்துக்கு எது செஞ்சாலும் அது உனக்காகவோ இல்ல எம்மாமனுக்காகவோ செய்யல. எம்மங்கைக்காக அவ இடத்துல இருந்து நான் செய்யறேன். அத நீ முதல்ல புரிஞ்சுக்க. முன்ன இருந்த அதே நினைப்புல மங்க கிட்ட உன்னோட புத்திய நீ காமிச்சியானா நீ பெத்த புள்ளைங்க ரெண்டும் தான் கஷ்டப்படுங்க. அந்த நினைப்பு உனக்கு எப்பவுமே இருக்கணும்" என மிரட்டலாகவே சொல்ல, பேச்சே வராமல் தலையை மட்டுமே ஆட்டினாள் மகேஸ்வரி.
ஏதோ நடந்திருக்கிறது என்கிற வரையில் வேலுமணிக்குப் புரிய மனைவியை எரிச்சலுடன் பார்த்து வைத்தான்.
"சரி இத இதோட நிப்பாட்டிட்டு, நீ போய் ஆக வேண்டிய வேலைய பாரு" என இலகுவாகவே சொன்னவன், விட்டால் போதும் என அவள் அங்கிருந்து தெறித்து ஓடவும், வெளியில் நின்றிருந்த செல்வத்தைக் குரல் கொடுத்து அழைத்தான்.
அவன் உள்ளே வர, "மங்கையோட திங்ஸ் இங்க என்னென்ன இருக்கோ பார்த்து எடுத்து கொண்டு போயி நம்ம வூட்டு மேல எங்க ரூம்ல வச்சிரு" என்று அவனைப் பணித்தான்.
"தாமு, இப்ப என்ன?" என்று எதையோ சொல்ல வந்தவளை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து, "ஏன் இங்க இருந்துட்டு உனக்கு வண்டி வண்டியா ஏச்சும் பேச்சும் வாங்கணுமா? இன்னைக்கு உன் சித்தி பேசிச்சு, நாளைக்கு ஒன்ன வேற எவனாவது ஏதாவது சொல்லனுமா? அப்புறம் நான் சும்மா இருப்பேன்னு நெனைக்கிறியா? இந்தத் தேவையில்லாத தொல்லையெல்லாம் இந்த நேரத்துல அவசியமா?" என எகிறினான்.
"தாமு சொல்றதுதான் சரி கண்ணு, கல்யாணம் முடியற வரைக்கும் நீ இவங்கூட இருக்கறதுதான் நல்லது" என்று வேலுமணியும் சொல்லிவிட, தானே தனது பொருட்களை எடுத்து செல்வத்திடம் கொடுத்தாள்.
சற்று முன் மகேஸ்வரி பேசிய பேச்சுக்கு, பேசாமல் மேற்கு தெருவில் இருக்கும் அவர்களது குடிசைக்குச் சென்று விடலாம் என்ற எண்ணம்தான் அவளுக்குத் தோன்றியது. ஆனால் அருகிலிருந்து வேலுமணியை பார்த்துக் கொள்வதும் அவசியம் என்று விளங்க தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அதை வேலுமணியை வைத்துக் கொண்டே தாமுவிடம் சொன்னால் இருவருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நேரம் பார்த்து அவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட தற்காலிகமாக அவன் சொல்வதற்கு இணங்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
மேலும் அடுத்த நாள் காலை மகாபலிபுரம் வரை செல்ல வேண்டி இருக்கவே, தாமுவுடன் தங்கும் பட்சத்தில் அவனுக்கு பல விளக்கங்கள் கொடுக்க நேரிடும். அனைத்தையும் யோசித்தபடி அவள் குழம்பிப் போய் நிற்க, "இன்னும் என்ன யோசன, நீ வா நம்மூடுக்குப் போவலாம்" என அவளது கையைப் பிடித்து அவன் இறுக்க, "இரு தாமு, ரொம்ப பசிக்குது. ஒரு வாய் துன்னுட்டு வந்துடறேன்" என்று அவள் யோசிப்பதற்கான அவகாசத்தை எடுத்துக் கொள்ள, "ஏன் நம்மூட்ல சோறு இல்லையா உனக்கு?" எனக் கேட்டான் குதர்க்கமாக.
மகேஸ்வரி பேசியதன் தாக்கம் அவனிடம் அதிகம் இருப்பது புரிய, "சித்தி பேசறது என்ன புதுசா? அது இப்படித்தான்னு உனக்கு தெரியாதா, தாமு! இதை எல்லாம் பெருசா தூக்கிப் பிடிச்சுட்டு முறுக்கிக்கினு போக முடியாது புரிஞ்சுக்க. நான் வரேன்னா வருவேன். இல்ல நீயும் என் கூட ஒக்காந்து துன்னு, ஒண்ணாவே போலாம்" என்று சொல்ல,
"வேணாம் வேணாம் நான் ஏற்கனவே சாப்டுட்டேன். நீ பொறுமையாவே வந்து சேரு" என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்று விட, வனா சாப்பிட்டு முடித்திருக்கவும் அவளை அழைத்து வேலுமணிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்துவிட்டு, தானும் ஒரு வாய் சாப்பிட்டு முடித்து, கேசவனை அழைத்து அடுத்த நாள் மகாபலிபுரம் வரை செல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி, கால் டாக்ஸி புக் செய்து தரும்படி அவனிடம் சொல்லி வைத்தாள்.
அப்படி இப்படி அந்தி சாயும் நேரம் வந்துவிட, தாமுவின் வீட்டிற்கு வந்தவள் நேராக போய் புஷ்பாவையும் கிழவியையும் பார்த்துவிட்டு தாமுவின் அறைக்கு வந்தாள்.
கையில் ஏதோ புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு அவன் உட்கார்ந்திருந்தாலும் அவனது முகம் இறுகிப்போயிருக்க அவளுக்காகவே காத்திருக்கிறான் என்கிற பாவம் அவனிடம் தெளிவாக வெளிப்பட்டது.
'அதான் உன் இஷ்டத்துக்கு என்ன இங்க வர வச்சிட்டியே, அப்பால என்ன வந்துது' என்கிற ரீதியில் அவனைக் கண்டுகொள்ளாமல், செல்வம் கொண்டு வந்து வைத்த பொருட்களை இடம் பார்த்து எடுத்து வைத்துவிட்டு தன் மடிக்கணியுடன் நூலக அறை நோக்கிப் போனாள்.
அதற்கு மேல் தன் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியாமல் அவள் பின்னோடே வந்தவன், "என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல, காலைல மகாபலிபுரம் போனும்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தான! எனக்குத் தெரியாம கேசவன் உனக்கு கால் டாக்ஸி ஏற்பாடு செஞ்சி குடுத்துருவானா?" என்று படபடவெனப் பொரிந்தான்.
'ஓ இதுதான் பிரச்சனையா?' என்ன மனதிற்குள் எண்ணியவள், "ஐயோ இதுக்கலாமா தாமு ஒன்ன தொல்ல பண்ணுவாங்க, தேவையில்லாததுக்கு எல்லாம் நீ மூஞ்சிய தூக்கி வெச்சிகினு இருக்க" என நிதானமாகவே பதில் கொடுத்தாள்.
"பெரிய இவ, போடி சர்தான்" எனச் சுள்ளென விழுந்துவிட்டு, மீண்டும் போய் தன் புத்தகத்துடன் ஒன்றினான்.
அவளும் தான் செய்ய வேண்டிய சிறு வேலைகளை மடிக்கணினியின் துணையுடன் செய்து முடித்து விட்டு அறைக்குள் வர, "எனக்குமே நாளைக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதையும் மகாபலிபுரத்துலயே ஃபிக்ஸ் பண்ணிட்டேன். நானே உன்னைக் காலைல கூட்டிட்டுப் போயிடுறேன்" என்று சொல்லிவிட்டு, "எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்குப் போயிட்டு வரேன், நீ எங்கேயும் போவாம பேசாம ரெஸ்ட் எடு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
இரவு உணவு உண்ண புஷ்பா, தானே அங்கு வந்து அவளை அழைத்துச் சென்றாள். சாப்பிட்டு முடித்து, அவளுடைய பிறந்த வீட்டிற்குச் சென்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவர்களது அறைக்குள் வந்தவள் அசதியில் அப்படியே படுத்து உறங்கிவிட, தாமோதரன் மீண்டும் வீடு திரும்ப நடுநிசி ஆகியிருந்தது.
நேரே தனது அறைக்குள் வந்தவனுக்கு மங்கையை அங்கே காணோவுமே, தனது அறையில் தனது படுக்கையில் உரிமையுடன் அவள் உறங்குவதிலேயே அவனது மனம் நிறைந்து போக, அவளைப் பார்த்தபடியே அருகில் இருந்த சோஃபாவில் போய் அமர்ந்தவன் சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப் போனான்.
super
Extremely excited about your presentation and flow of the story and the way you have described the dialogues reallyawesome mam thank you very much for entertaining us with such excellent experience