top of page

Nilamangai - 12 (2) FB

Updated: Feb 29


2. ஒருவழிப்பாதை


எந்த ஒரு பொருளுமே எடுத்தாள எளிதாக நம் கைக்கருகிலேயே இருக்கும்போது அதன் மேல் நமக்குப் பற்றுதல் ஏற்படாது. ஆனால் அது நம் கைவிட்டுப் போய்விடும் என்ற சூழ்நிலை உருவாகும்போது அதுவும் யாராவது அதை நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச் செல்ல முயலும் போது அதன்மேல் ஒரு அதீத உரிமை உணர்வும் அதைத் தக்க வைத்துக்கொள்ளும் வேகமும் உண்டாகும்.


இதே நியதி நம் மனித உறவுகளுக்கும் பொருந்தும்.


எதார்த்தமாக நம் வாழ்வுடன் கலந்திருக்கும் மனதிற்கு நெருக்கமான ஒருவரை நிரந்தரமாக நாம் இழக்கும் சூழல் உருவாகும்போதுதான் அவரை நம்முடன் தக்க வைத்துக் கொள்ளும் வேட்கை அதிகமாகும்.


அப்படித்தான், தாமோதரனை இலகுவாக அணுகும் சூழல் இருந்தவரை அவன் மீதான உரிமை உணர்வு நிலமங்கைக்கு உண்டாகவே இல்லை.


ஆனால் பவ்யாவுடன் அவனுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு அவளால் அதை மனதார ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. 


சிறுமியாக அவன் கைப் பிடித்து நடந்த நாட்கள் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றிற்கும் அவனது துணை நாடிய சமயங்கள், திரைப்படம் போல மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.


புத்தி தெரிந்த காலம் தொட்டு பாசத்திற்கும் பரிவுக்கும் புஷ்பாவை நாடினாள் என்றால், அவளது அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்பவனாக அவன் மட்டுமே இருந்திருக்கிறான்.


யாரிடமும் சொல்ல முடியாத சில சிக்கல்களைக் கூட அவனிடம் வெளிப்படையாகச் சொல்லித் தீர்வு காணும் அளவுக்கு அவளுக்குப் பெருந்துணையாக பல சமயம் அவனே நின்றிருக்கிறான்.


கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்வதில் தொடங்கி, எதிலும் முதன்மையாகத் திகழ வேண்டும் என்கிற மனோபாவம், எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன், யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க வேண்டும் என்கிற பிடிவாதம் என ஒவ்வொன்றிலும் அவன்தான் அவளது முன்மாதிரி என்றாகிப்பபோயிருக்கிறான்.


ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சுயமாக அவள் தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளும் உளியாக அவனே திகழ்கிறான் என்றால் அது மிகையில்லை.


தன் வாழ்க்கையில் அப்படி ஒரு அத்தியாவசியமான இடத்தில் இருப்பவனை இனி உரிமையுடன் அணுகவே முடியாது என்ற எண்ணமே அவளது மனதைக் கிழித்துக் கூறு போட்டது.


'அத்தான் என்று கூப்பிடு' என அவன் அவளை வற்புறுத்திய சமயத்திலோ அல்லது வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட அவளது மனதில் இத்தகைய ஒரு சஞ்சலம் ஏற்பட்டதில்லை. மேற்படிப்பு, இலட்சியம் என அவள் தனக்கான பாதையை வகுத்துக் கொண்டு அதில் சென்று கொண்டிருந்தாளே தவிர, அவன் சொல்கிறான் என்பதற்காகக் கூட தன் முடிவுகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு வேளை அவன் சொல்பேச்சுக் கேட்டுப் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டிருப்பானோ என்று கூட மருகினாள்.


ஆனால் அவன் முழுமனதுடன் அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறான் என்பது அவளது அறிவுக்குப் புரிய, தங்களுக்குள் எந்த ஒரு பொருத்தமும் இல்லை என்பது நன்றாகவே விளங்கியது.


தெளிவற்ற ஒரு மனநிலையில் அவள் தத்தளித்துக் கொண்டிருந்த இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளது தாத்தாவாவது கொஞ்சம் பக்குவமாக அவளிடம் நடந்திருக்கலாம்.


பேரன் திருமணம் முடிவானதும் உச்சபட்ச மகிழ்ச்சியில் தேன் குடித்த நரியாக வரலட்சுமி அவரிடம் ஆடிய ஆட்டம் கொஞ்சம் அதிகம்தான். புஷ்பா வேறு மங்கையை மனதில் வைத்து முறுக்கிக் கொண்டு திரிய, அதில் காண்டாகி அவர் அவளிடம் பேசிய ஜாடை பேச்சிலும், செய்த உதாசீனத்திலும், அவற்றை நேரில் பார்த்துவிட்டு உள்ளுக்குள்ளே கொதித்துப் போயிருந்த சந்தானம், 'இனி நீ புஷ்பாவின் வீட்டிற்குப் போகவே கூடாது' எனத் தடை விதித்து, பதின்வயதின் விளிம்பில் நின்ற மங்கையின் சஞ்சலத்தைக் கிளறி விட்டிருந்தார்.


இவை அனைத்தையும் தாண்டி, இதெல்லாம் இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் பருவ வயது கோளாறு, இவ்வளவு வருடங்களாக அவளுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒருவன் அவன் மட்டுமே என்பதால் அவன் மீது ஏற்பட்டிருக்கும் அதீத பற்று அவ்வளவுதான் மற்றபடி இந்த உணர்வுக்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை என அவளுடைய அறிவு முதிர்ச்சி அவளது மனதை அவளுக்கே புரிய வைத்திருக்க, தானே வருந்தி, தேற்றுவாரின்றி தனியாக அழுது, தானே தெளிந்து, தன்னைத் தானே மீட்டுக் கொண்டாள். 


எல்லாவிதத்திலும் அவனுக்குப் பொருத்தமாக இருக்கும் பவ்யாவை மணந்துகொண்டு, தாமோதரன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிடுவான் என்கிற புரிதல் அவளுக்கு உண்டாகியிருக்க, இப்படி ஒரு நிரந்தர பிரிவுக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டாள்.


ஆனாலும் அந்த மன அழுத்தத்திலிருந்து அவள் முழுவதுமாக மீண்டிருக்க வில்லை எனும் நிலையில்தான் அந்த வருடத்துக்கான பொன்னேர் பூட்டும் நிகழ்வுக்கு ஊர் கூடி நாள் குறித்தனர்.


ஒவ்வொரு வருடமும் இப்படி நாள் குறித்த உடனேயே தாமுவின் கழனியில் பூஜை போட அவளை வரச்சொல்லி புஷ்பா ஆள் அனுப்பிவிடுவாள்.


அதுவும் நடக்காமல் போக, தன்னுடைய உரிமையே பறிபோனதாக அவள் மனதிற்குள்ளேயே குமுற, எரிகிற தீயில் எண்ணை வார்ப்பது போல அவளுடைய சித்தி மகேஸ்வரியும் பேச்சுவாக்கில் அதைச் சொல்லிக் காண்பித்துவிட்டாள். தான் ஒருத்தி இருக்கும் போது மங்கை புஷ்பாவையே அதிகம் நாடுவதால் உண்டான பொச்சரிப்பில் அவள் இப்படிப் பேசுவது வழக்கம்தான் என்றாலும், வழக்கத்துக்கு மாறாக இது அவளைச் சற்று அதிகமாகவே பாதித்தது.


அதைக் கண்டித்தாலும் சந்தானமும் முணுமுணு வென்று வரலட்சுமியையும் புஷ்பாவையும் திட்டித் தீர்க்க, அதுவும் அவளுக்கு மன உளைச்சலைத்தான் கொடுத்தது.


எப்படியோ ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டுதான், பூஜை போடவே அன்று கழனிக்கு வந்திருந்தாள். 


ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் அங்கே தாமுவைக் கண்டதும் நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ள, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.


சுயக் கட்டுப்பாட்டை இழந்து, பூஜையில் படைத்த காப்பரிசிக் கலவையைத் தூக்கிக் கொண்டு அவனை நோக்கி எது அவளை ஓட வைத்தது என்ற கேள்விக்கு அவளிடம் இன்று வரை பதிலில்லை. 


அதை மட்டும் அவள் செய்யாமலிருந்திருந்தால், இப்படி ஒரு கேள்வியையே அவளிடம் அவன் இன்று கேட்டிருக்க மாட்டானோ என்னவோ?


அவனைப் பார்த்ததால் உண்டான பதட்டத்தில் அவளது கால்கள் கூட தரையில் பதியவில்லை. அதில் கடுப்பாகி அவன் எரிந்து விழுந்தாலும் கூட, அவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அவனது திருமணத்துக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, அவளுடைய தாத்தா அவன் வீட்டிற்குப் போகத் தடை விதித்திருப்பதையும் உளறி வைக்க, அதன் பின் அவன் இயல்பாகப் பேசத் தொடங்கவே, தன் மனக்குமுறல்கள் அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்தாள், அவளுடைய ஒரே வடிகால் அவன் மட்டுமே என்றாகிப் போனதால். 


அதன்பின் நடந்த ஒவ்வொன்றுமே விதியின் விளையாட்டாகிப் போனது.


"பேசாம என்னைக் கட்டிக்கோ மங்க, அதுக்கு மேல நீ எங்கிட்ட வரத யாரு தடுக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்" எனப் பகடி பேசினானோ, அல்லது உண்மையாகத்தானோ சொன்னானோ, ஆனால் அந்த நொடி அவள் உணர்ந்தது 'இந்த தாமோதரனைத் தவிர தன் வாழ்க்கைக்குள் வேறொருவனுக்கு இடமே இல்லை' என்கிற ஒன்றே ஒன்றைத்தான்.


இன்னும் ஒரு நொடி அங்கே நின்றால் கூட, தன் வசமிழந்து எங்கே சரி என்று சொல்லி தன் மனதை அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுவோமா என்கிற பீதியில், அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பித்து ஓடித்தான் வந்தாள்.


அதற்குப் பின்னுக்கும் அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திராணியற்றவளாக வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடந்தாள்.


ஓரிரு நாட்களுக்குள்ளேயே, அவளுடைய தாத்தா சொல்லி, அவனுக்கு நிச்சயித்திருந்த திருமணம் நின்றுவிட்டது என்று தெரியவந்ததும், அவளுக்கு அது பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.


'அப்படியென்றால் அன்று 'என்னைக் கட்டிக்கோ' என்று அவன் சொன்னது உண்மைதானா?' என்ற கேள்வி மட்டும் அவளைக் குடையத் தொடங்க, விடை தேடி அவனை நாடிச் சென்றாள். நேரடியாக அவளுக்குப் பதில் சொல்லாமல், சுற்றி வளைத்து இல்லை என்பதாக அவன் முடித்தாலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


அப்போதைக்குச் சலிப்புடன் அங்கிருந்து வந்துவிட்டாலும், அவனுடைய மனதிற்குள் ஏதோ ஒரு திட்டத்துடன்தான் இருக்கிறான், இன்றில்லை என்றாலும் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் தன்னைத் தேடிவந்து, 'என்ன கட்டிக்கோ' என மறுபடியும் தீர்மானமாகச் சொல்லுவான் என்பதையும் உறுதியாக நம்பினாள்.


அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தன் பதில் என்னவாக இருக்கக்கூடும் என்று ஆற அமர யோசித்த பொழுது, எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் 'சரி' என அதற்கு ஒப்புக்கொண்டுவிடுவோம் என்று தோன்ற, தானே தன் மனதை எண்ணி மிகவும் பயந்துபோனாள்.


அவன் இதே ஊரில் இதே போன்றதொரு வாழ்க்கையை நிரந்தரமாக வாழப்போகிறான் என்கிற பட்சத்தில் அவளுக்கு எந்த ஒரு மனத்தடையும் இல்லை.


ஆனால் 'இவனைத் திருமணம் செய்துகொண்டால் அந்நிய தேசத்தில் போய் வேரூன்ற வேண்டிய கட்டாயம் தனக்கு நிச்சயம்  ஏற்படும், அதை மட்டும் இவன் விட்டுக்கொடுக்கவே மாட்டான்' என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக விளங்க, உணர்ச்சிவசப்படாமல் நன்கு சிந்தித்து தெளிவான ஒரு முடிவை எடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள்.


தாமோதரனின் அருகாமை கிடைக்காமல் போனாலும் கூட , விவசாயம் செய்துகொண்டு  தன் சொந்த மண்ணில் தன் மக்களுடன் கலந்து அவளால் வழ்ந்துவிட்டுப் போய்விட முடியும்.   


அம்மா என்கிற முதல் உறவையே புகைப்படத்தில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டவள் இவள். மனம் முழுவதும் அன்பும் அக்கறையும் மிகுந்திருந்தாலும், எல்லோருடைய நிம்மதியையும் கருத்தில் கொண்டு அப்பா, சித்தி, தம்பி தங்கை என முக்கிய உறவுகளிடமிருந்தே சற்றுத் தள்ளி நிற்பவளுக்கு அவனிடமிருந்து விலகி இருப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை.


ஆனால், கணினிகளாலும், செயற்கை நுண்ணறிவு சாதனங்களாலும் நிரம்பி வழியும் வேறொரு செயற்கை உலகத்துக்குள் நுழைந்து, பொங்குவதையும் தின்னுவதையும் தவிர வேறேதும் சிந்திக்காமல், உடல் சார்ந்த தேவைகளுக்கு முதன்மைக் கொடுத்து, அந்நிய நாட்டுக் குடியுரிமைக்காக அங்கேயே பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்குவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோ பத்து வருடங்களுக்கு ஒரு முறையோ நேரம் ஒதுக்கி, பயணத்தில் நசுங்கிக் கோணலாகிப்போன சாக்கலேட் பொதிகளுடன் சொந்த ஊரையும் சொந்தபந்தங்களையும் எட்டிப் பார்த்து, காலப்போக்கில் அதுவும் மறைந்து நிரந்தரமாக அங்கேயே மூழ்கிப்போய், நரை கூடி கிழப் பருவம் எய்தி அங்கேயே உயிர்விட்டு, சொந்த அடையாளம் மறந்த ஒரு வாழ்க்கை வாழ அவள் தயாராகவே இல்லை.


வாழ்ந்தாலும் இங்கேதான் செத்தாலும் இங்கேதான், மண்ணோடு மண்ணாகி மட்கிப்போனாலும் இந்த மண்ணுக்கு மட்டுமே தன்னைத் திண்ணும் உரிமை!  காதலா, அன்பா, நட்பா, உரிமையுணர்வா, இந்த உறவுக்கு எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் தனக்குத் தாமோதரனிடம் உண்டாகியிருக்கும் பிணைப்பு என்றுமே மாறாது! அதை மாற்றிக்கொள்ளவும் தன்னால் இயலாது! இது நாள் வரை, காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவைப் போல தன் இருப்பே தெரியாவண்ணம் அவன் எப்படி தன் வாழ்க்கைக்குள் இருந்தானோ அதே போலவே இனிமேலும் இருப்பான்! அது யாருடைய பார்வைக்கும் புலப்படாமலே போகட்டும்! என்ற ஸ்திரமான முடிவுக்கு வந்த பின்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விடக்கூட முடிந்தது.


இடையில் வந்து போன ஓரிரு தினங்கள் தவிரக் கடந்த மூன்று வருடங்களாக அவன் இங்கே இல்லாமல் போனது, அதுவும் எந்த விதத்திலும் அவன் அவளை அணுகாமல் எட்டியே நின்றது, தன் மனதைப் பக்குவப்படுத்த அவன் அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த பெரும் வாய்ப்பாக அமைந்தது.


இடைப்பட்ட இந்த காலத்தில், இங்கே உருவாகியிருக்கும் ஒருவித அசாதாரண சூழ்நிலையால் அவளுக்கு இந்தப் பூமியுடனான பிணைப்பு கூடிக்கொண்டே போனதுதான் காலத்தின் கட்டாயம் போலும்! 


கழனி வேலைகள் படிப்பு எனச் சலனமில்லாமல் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அத்தகைய பிணைப்பால் இவள் தானே இழுத்துவிட்டுக் கொண்ட சிக்கல்கள்தான் அதிகம்.


கண்ணப்ப நாயக்கருடைய மரணத்திற்குப் பிறகு அவரது நிலங்களை அவருடைய பிள்ளைகள் விற்க முடிவு செய்த பின் மங்கை அடைந்த பதட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை.


அதுவும் அதை வாங்கப் போகிறவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பது தெரியவந்த பின், அதனால் விளையக்கூடிய விபரீதங்களை யோசித்து பலவிதமாகக் கணக்குப்போட்டவளுக்கு உறக்கம் கூட வரவில்லை .


நட்பு அடிப்படையில் கண்ணப்பனின் கடைசி மகன் தேவாவிடம் அந்த நிலங்களை தனக்குக் குத்தகைக்குக் கொடுக்கும்படி அவள் கேட்கப்போக, அதுவும் தேவையில்லாத சிக்கலில் போய் முடிந்தது.


அது அரசல் புரசலாக அவளுடைய தாத்தாவின் காதுகளுக்குப் போக, இவள் மீது அப்படி ஒரு கோபம் அவருக்கு.


போதாத குறைக்கு தாமுவின் அப்பா ஜனாவிடம் இவள் போய் பேசி அதுவும் தோல்வியில் முடிந்துவிட, தாத்தா கொலை காண்டாகிப்போனார்.


இதுபோன்ற விவகாரங்களில் ஆண்களே தலையிட அஞ்சும் போது, சிறு பெண் இவளுக்கு இதெல்லாம் தேவையா என்றுதான் அவருக்குத் தோன்றியது. அதுவும் இந்த விஷயத்தில் அவருடைய கண்டிப்பு அவளிடம் எடுபடாமல் போக, அடிக்கடி இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது.


அந்த நேரம் பார்த்து இவருடைய அக்கா பேரன் கதிருக்கு இவளைப் பெண் கேட்டு வர, அவர் வரை அதற்குப் பரிபூரண சம்மதம். ஆனால் மங்கை அதற்குப் பிடிகொடுக்காமல் போக, அவருக்கு இவள்மேல் அளவுகடந்த எரிச்சல்.


அதுவும் கதிருடைய தங்கை திருமணத்தில் இவள் கதிரிடம் நடந்துகொண்ட விதமும், அங்கே வந்த தாமு பேசிவிட்டுப் போன பேச்சும்  அதையும் தாண்டி அவன் வீட்டிற்கே வந்து அவர்களுடைய நிலத்தை யாருக்கும் கிரயம் செய்து கொடுக்கக் கூடாது என அதிகாரமாகச் சொல்லிவிட்டுப் போன முறையும் அவரை உச்சபட்ச கோபத்திற்கு ஆளாகியிருக்க, அனைத்தும் முழுதாய் அவள் மீது திரும்பியிருக்க அவளைக் கண்டித்து அறிவுரை சொன்னவருக்கு அவள்  பதிலுக்குப் பதில் பேசப்போக,  அவளது இத்தகைய நடவடிக்கைகளுக்கு அவள் படிக்கும் புத்தகங்களே காரணம் என அனைத்தையும் ஒரு பையில் போட்டுக் கட்டி, தாமுவின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் மகளுடைய வீட்டின் பரணில் கொண்டுபோய் போட்டுவிட்டார்.


இந்தக் குழப்பங்களுக்கு நடுவில் 'எந்நாடுடைய இயற்கையே போற்றி' புத்தகத்தை தாமு கையுடன் எடுத்துப் போனதை அவள் அறியவேயில்லை.


மற்ற புத்தகங்களோடு அதுவும் பரணுக்குப் போய்விட்டதாகவே எண்ணியிருந்தாள்.


சமீபமாக ஒருநாள், தாத்தா நல்ல ஒரு மனநிலையில் இருக்கும் சமயமாக அவரிடம் இதமாகப் பேசி மீண்டும் அந்த புத்தகங்களைக் கீழே இறக்கியவளுக்கு அந்தப் புத்தகம் அதில் இல்லை என்பது தெரியவர, அப்படி ஒரு அதிர்ச்சி உண்டானது,


காரணம்! அந்தப் புத்தகத்திற்குள் தானே அவள் தன் மனதை மறைத்து வைத்திருந்தாள்!


மனக்குழப்பத்தில் இருந்தாலோ அல்லது அதீத யோசனையில் இருந்தாலோ, பேனாவோ அல்லது பென்சிலோ கையில் வைத்திருக்கும் ஏதோ ஒரு எழுதுகோல் கொண்டு கிடைக்கும் காகிதத்தில் கிறுக்கத் தொடங்குவாள் நிலமங்கை. அது ஒரு அழகான மலராக மலரலாம்! வாஞ்சையுள்ள கார்டூனாக கொஞ்சலாம்! பயங்கர காட்டு விலங்காக உறுமலாம்! அவளுடைய அம்மாவின் நினைவு நெஞ்சை முட்டும் போது அது இராஜேஸ்வரியாக மாறும். மகேஸ்வரியின் மேல் கோபத்தில் கொந்தளித்தால் அவளுடைய சாயலில் ஒரு பிசாசாக உருவெடுக்கும். மற்றபடி வேறு யாரையும் அவள் இப்படி கோட்டோவியமாகத் தீட்டியதில்லை.


ஆனால் இப்படி தாமோதரனாகக் காதலாகிக் கசிந்துருகி அவள் தீட்டியிருந்த ஓவியம், கிடைக்கக் கூடாத கைகளில் கிடைத்து அவளை வசமாக சிக்க வைத்துவிட்டது. 


போதாத குறைக்கு, நிலமங்கைக்கு இருக்கும் இந்த விசித்திர பழக்கம் பற்றித் தெரிந்துவைத்திருக்கும் ஒரே நபர் தாமோதரன் மட்டுமே எனும் பொழுது 'இல்லை' என மறுதலிக்கும் ஒரே வாய்ப்பும் அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. 


அவள் எதிர்பார்த்தது போலவே மீண்டும் அவன் 'என்ன கட்டிக்கோ' என்று அவளிடம் சொல்லும் இந்த நேரத்தில் 'மாட்டேன்' என்று அவள் பிடிவாதமாக மறுக்கும் பட்சத்தில் அவள் மீது தனக்கிருக்கும் உரிமையை நிலை நாட்ட எந்த எல்லை வரைக்கும் போவான் இவன் என்பது புரிய, உணர்வற்று அவனைப் பார்த்திருந்தாள் நிலமங்கை.


அவளை வென்றுவிட்ட மிதப்பில், புன்னகையுடன் அவளைப் பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் தாமோதரன்.  


“ஆமா, இன்னாத்துக்கு என்ன பாத்து இப்புடி ஈன்னு இளிச்சிக்கினு கெடக்க நீயி! இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட புடிக்கல சொல்லிட்டேன், ஆமா! மொதல்ல எப்பவும் போல சாதரணமா நடந்துக்க” என அதட்டியவள், அவன் அலட்சியமாக அவளை ஏறிட, “எனக்கு ஒன்ன புடிக்குமா புடிக்காதான்னு கேட்டா, புடிக்காதுன்னு சொல்லுவேன்னு நினைச்சியா? மெய்யாலுமே எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும்! ஆனா கல்யாணம் கட்டிக்கற அளவுக்குப் புடிக்கும்னு அதுக்கு அர்த்தமில்ல? தெரியாமத்தான் கேக்கறேன், இந்த மாதிரி நான் டிராயிங் பண்றது உனக்கு தெரியவே தெரியாது பாரு! எப்பவோ உம்மேல கோவமா இருக்கும்போது வரைஞ்சதா இருக்கும். எப்ப வரைஞ்சேன்னு எனக்கே நினைப்புல இல்ல! இதப் போய் தூக்கினு வந்து என்ன கேள்வி கேக்கற! வெவரமான ஆளுதான தாமு நீயி, இதை வெச்சி நீயே ஒன்னு நினைசுக்குவியா?” என்று படபடத்தாள் நிலமங்கை தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொண்டு.


"என்னாது, இந்தப் படத்தை நீ எப்பவோ என் மேல கோவமா இருக்கும்போது வரஞ்சியா… இது அக்மார்க் புளுகுன்னு உனக்கே தெரியல! இந்த ட்ராயிங்ல என்னோட கண்ண பாரு, அதுல இருக்குற போதைய பாரு. இப்படி ஒரு பார்வை உன்னை நான் பார்த்தனான்னு கூட எனக்குத் தெரியல. மே பி, முன்ன ஒரு தடவை இதே மாதிரி என்னைக் கட்டிக்கோன்னு சொன்னேன் இல்ல, அப்ப பார்த்திருப்பேன்…னு நினைக்கறேன். ஆனா அதை இவ்ளோ ஃபீல் பண்ணி நீ வரஞ்சிருக்க பாரு அங்க தெரியுதுடீ உன் மனசு! கோபமா இருக்கும்போது வரஞ்சியாம்… போடி.”


”இதுல இருக்குற இன்னொரு ஹிட்டன் ட்ரூத், நான் ஃபீல் பண்ணது என்னன்னா, என்னோட மனசு உனக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு… சரிதான" என அவன் அவளது மனதைப் புட்டுப் புட்டு வைக்க, என்ன பதில் பேசுவது என்று கூட புரியாமல் தவித்துதான் போனாள்.


"என்ன மங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால மீட்டிங் போட்டு அந்தப் பேச்சுப் பேசின, இப்ப எங்க போச்சு அந்த வாயி. வெளிப்படையா ஒடச்சு பேசு" என்று அவளது பொறுமையைச் சோதித்தான் தாமு.


தன்னுடைய இந்தச் சிறு மௌனம் கூட அபாயத்தின் அறிகுறி ஏற்று உணர்ந்து கொண்டவள், "இதோ பாரு தாமு, இப்ப கூட சொல்றேன், எனக்கு ஒன்ன புடிக்கும், ஆனா நீ சொல்லிட்டு இருக்குற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. ஒன்ன கட்டிக்கிற எண்ணம் எனக்கு ஒரு துளி கூட கிடையாது. அப்படி நடந்தா அது உனக்கும் நரகமா போகும். எனக்கும் நரகமா போகும். இதோட இந்தப் பேச்சை விட்ரு" என்றாள் தீர்மானமாக.


"ஏன்?"


"ப்ச், ஏன்னெல்லாம் என்னால விளக்கமா சொல்லிட்டு இருக்க முடியாது. விட்ருனா விட்ரு" 


"அப்படி எல்லாம் என்னால விட முடியாது மங்க, நான் சேட்டிஸ்ஃபை ஆகற மாதிரி ஒரே ஒரு ரீசன் சொல்லு போதும், நான் அப்புடியே திரும்பி போயினே இருக்கேன்" என அவளது வார்த்தையைப் பிடுங்குவதிலேயே அவன் குறியாக இருக்க, நிச்சயமாக என்ன பேசியும் அவனைத் திருப்தி படுத்த முடியாது என்பது மங்கைக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் கூட முயற்சி செய்யாமல் இருக்க முடியவில்லை.


"தாமு புரிஞ்சிக்க, வெளிநாட்டுல வேலை பார்க்கணும், அங்கேயே கிரீன் கார்டு வாங்கிட்டு செட்டில் ஆகணும்ன்றத இலட்சியமா வெச்சி இருக்குற ஆளு நீ. அதுக்காக உன்னை நீ தயார் பண்ணிக்க எவ்வளவு மெனக்கெடுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதே மாதிரி நீ போயிட்டு இருந்தா உன் ஆசைப்படி, சுந்தர் பிச்சை மாதிரி நீ பெரிய ஆளா வருவ.”  


”ஆனா எனக்கு வெளிநாட்டுல வந்து வாழறதுல ஒரு துளி இஷ்டம் கூட இல்ல. அப்படி பார்க்கும்போது, நம்ம ரெண்டு பேரோட இலட்சியமும் வேற வேற திசையில பயணிக்குது. என் வழியில உன்னை இழுக்கிறதோ இல்ல உன் வழிக்கு நான் வரதோ ரெண்டுமே நடக்காத காரியம். இதுல யாராவது ஒருத்தர், அவங்க இலட்சியத்த இழந்தா மட்டும்தான் நாம ஒண்ணு சேர்ந்து ஒரு வாழ்க்கை வாழ முடியும்.”


”அப்படி நடந்தா ஒண்ணு நீ நிம்மதி இல்லாம வாழணும், இல்லன்னா நான் நிம்மதி இல்லாம வாழணும். இன்னும் சரியா சொல்லனும்னா, நிச்சயமா உன்னால என் வழிக்கு வரவே முடியாது. அதனால என்னதான் உன் வழிக்கு இழுக்க  நீ முயற்சி செய்வ. என்னோட உணர்வுகள தொலைச்சிட்டு ஒரு ஜடமா உன் கூட அங்க வந்து என்னால குடும்பம் நடத்த முடியாது.” 


”இதுல யாருக்கும் சந்தோஷம் கிடைக்காது. அதைவிட அவங்கவங்க பாதைல போறது, ரெண்டு பேருக்குமே நல்லது" என நிறுத்தி நிதானமாக அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.


"ஸோ, இவ்வளவு டீப்பா நீ இந்த விஷயத்தைப் பத்தியெல்லாம் யோசிச்சி, இதோட சாதக பாதகங்கள ஆலசி ஆராய்ஞ்சு தெளிவா இருக்க, அப்படித்தான மங்க?" என்று அவன் இலகுவாகக் கேட்கவும் ஆடித்தான் போனாள்.


“உனக்கு என்ன கட்டிக்கற அளவுக்குப் பிடிக்கலன்னும்போது எதுக்கு இவ்வளவு தூரம் யோசிச்சிருக்க நீயி?” என அவன் மறுத்து வேறு சொல்ல கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அவளை நெருக்க, மங்கையின் பதற்றம் உச்சத்தைத் தொட்டது.


அவனுக்குப் பதில் சொல்ல இயலாமல் கொந்தளித்துப் போனவள், "ஆமா நீ என்ன, என்ன இவ்வளவு கேள்வி கேக்கறது? எனக்கு இஷ்டம் இல்ல, ஒன்ன கட்டிக்க மாட்டேன்னு சொன்னா அதோட விட்டுட்டு போ. அத உட்டுட்டு இப்புடி நொய்யி நொய்யினு புடுங்குற வேலையெல்லாம் வெச்சுக்காத. இப்புடி என் உயிரை எடுக்கதான் இப்ப அமெரிக்காவுல இருந்து வந்து சேந்திருக்கியா?" என ஆத்திரத்துடன் குரலை உயர்த்தினாள்.


"ப்ச்… கூல் மங்க,  எதுக்கு இப்படி கத்தற!  'நீ என்ன கட்டிக்கிறியா?'ன்னு நான் உன்கிட்ட சம்மதம் கேட்டு நிக்கல. கட்டிக்கோன்னு ஒரே ஒரு ஆப்ஷன மட்டும் தான் உனக்குக் குடுத்திருக்கேன். நீ அதை இன்னும் சரியா கவனிக்கல போல இருக்கு! இந்த விஷயத்துல உன் சம்மதம் மட்டும் இல்ல வேற யாரோட சம்மதமும் எனக்கு தேவையில்ல. யார் மறுத்தாலும் நம்ம கல்யாணம் நடக்கும். அதை எப்படி நடத்திக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் இப்ப அமெரிக்காலருந்து வந்திருக்கிறது உன்னைக் கட்டிக் கையோட ஒன்ன எங்கூட இட்னு போகத்தான். அதுல உனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வேணாம்!”


”ஒன்ன தவர வேற ஒருத்தியக் கட்டிக்கிட்டு என்னால குடும்பம் நடத்த முடியும்னு சொன்னா, அப்பவே அந்த பவ்யா பொண்ண கட்டிக்கிட்டு, இந்நேரம் நான் ஒண்ணு ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பனாகியிருப்பேன். ஆனா அது என்னால முடியாது, என் வாழ்க்கைல ஒன்ன தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் என்னால எடம் கொடுக்க முடியாது. அதுக்கான காரணத்த கேட்டா எனக்குப் பதில் சொல்ல தெரியல. இந்த விஷயத்துல என் மனச என்னாலயே மாத்திக்க முடியல. முயற்சி செஞ்சு தோத்துட்டேன்னு தான் சொல்லணும். இதையெல்லாம் வார்த்தையால சொல்லி உனக்கு விளங்க வெக்க முடியாது. நீயே புரிஞ்சிட்டாதான் உண்டு.”


”வேணா, உன் பக்கத்துல இருந்து உனக்காக ஒண்ணு செய்யறேன். உன் ஆசப்படி, இங்க இருக்கிற நிலப் புலன்கள அப்படியே விட்டுவெக்கறேன். வேணும்னா இன்னும் கூட நிறைய வாங்கிப் போடுறேன். எல்லா வேலைக்கும் ஆளுங்கள போட்டு மெயின்டைன் பண்ணிக்கலாம்.”


”முதல்ல ஒரு பத்து பதினஞ்சு வருஷம் என் இஷ்டப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு, அதுக்குப் அப்பால இங்க வந்து நீ ஆசைப்படுற வாழ்க்கைய வாழலாம். இதுவும் நான் உனக்குக் கொடுத்திருக்கற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான். பர்மிஷன் எல்லாம் கேட்கல புரிஞ்சுக்க!" எனது தன் பக்கம் நியாயத்தை மட்டுமே அவன் பேச அவளுக்கு ஆயாசமாக இருந்தது. 


இவன் சொல்லும் வாழ்க்கை முறை என்பது ஒரு வழிப் பாதை. அதன் உள்ளே நுழைந்தவர்களால் அதிலிருந்து மீண்டும் திரும்ப வரவே இயலாது. இவனுடைய வற்புறுத்தலுக்குப் பலியாகி இவனைத் திருமணம் செய்து கொண்டு அங்கே போனால், தனக்கே கூட தன் இலட்சியங்கள் மறந்து போகும் அபாயம் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் இதற்கு அடிபணியவே கூடாது என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். 


இதைக்கூட வெளியில் சொல்ல அவளுக்கு அவ்வளவு பயமாக இருந்தது. காரணம், எதிரில் நிற்கும் இந்த தாமோதரன், மனிதர்களை விழுங்கும் ஒரு பிரம்மராட்சதனைப் போல அவளது கண்களுக்குத் தெரிந்தான். 


இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறோம் எனத் திகிலாக இருக்க உடலின் சக்தி மொத்தம் வடிந்து போய் இப்படியே தொய்ந்து நின்றாள். இங்கிருந்து வீடு வரையிலும் நடந்து செல்லக் கூட முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.


அவளது செயலற்ற நிலையை உணர்ந்தவனாக, "பயப்படாத மங்க, கனவுல கூட நான் உனக்கு எந்த ஒரு கெடுதியும் நினைக்க மாட்டேன். என்னோட பாதி உசுரு உன்கிட்டதான் இருக்கு. அத புரிஞ்சுக்க முயற்சி பண்ணு" என்றபடி அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். துவண்டு போய் அவனுடைய இழுப்புக்கு வந்தவளால் அவனை உதறித் தள்ள இயலவில்லை. அவளின் உடலில் ஓடிய நடுக்கமும் அதி வேகமாக தடதடக்கும் அவளது இதயத்துடிப்பும் அவளுடைய நிலையை அவனுக்குச் சொல்லாமல் சொல்ல, அவளது கூந்தலை வருடி ஆதுரமாக அவள் நெற்றியில் இதழ் பதித்து, அடுத்த நொடி தன்னிடமிருந்து தானே அவளைப் பிரித்தவன், "ச்சீ லூசு" என்றபடி, உச்சபட்ச மன அழுத்தத்திலும், இயலாமையிலும் அவளது விழியின் ஓரம் கசிந்த கண்ணீரை இதமாகத் துடைத்து விட்டு, "ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு, தோ வந்துட்றேன்" என அங்கிருந்து சென்றான்.


சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட, இருள் கவிழ்ந்து, நிலவொளி நாலாபுறமும் நன்றாக ஊடுருவியிருந்தது. “ச்ச, இவன் கூபிட்டான்னு இவன் கூட நடந்து வர ஒத்துகிட்டதே பெரிய தப்பு!! ரொம்ப நாள் கழிச்சு இவன பார்க்கவும் புத்தி பேதலிச்சு போச்சாங்காட்டியும். இன்னும் ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கப் போறேன்…ன்னு சொன்னானே! அதுக்குள்ள வேற என்னல்லாம் செய்யப்போறானோ?! இவனோட நினைப்பே இல்லாம, நாம வேற என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கோமே! அதெல்லாம் பாதில நின்னுபோனா, நம்ம நம்பி இருக்கற சனங்களோட நெலம என்ன ஆகும்?’ என நினைத்து, மனம் பதறிப் போனது. 


வேறே ஏதும் சிந்திக்கத் தோன்றாமல், ஆளரவமற்ற அந்தச் சாலையில் மெள்ளமாக நடக்கத் தொடங்கினாள். பழகிய பாதையில் கால்கள் தானாக அவளை இட்டுச் செல்ல, தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து அவளுக்கு அருகில் நிறுத்தி, “நாந்தான் ஒன்ன அங்கயே நிக்கச் சொன்னேன் இல்ல, எதுக்கு மங்க இப்படி தனியா போய்ட்டு இருக்க?” என அவன் கண்டனமாகச் சொன்னபோதுதான் சுற்றுப்புறமே அவளுக்கு உரைத்தது.


ஆக, இருசக்கர வாகனத்தில்தான் இங்கே வந்திருக்கிறான். வேண்டுமென்றே ‘பேசிட்டே நடக்கலாம்’ எனத் தன்னை அழைத்திருக்கிறான் என அவன் மீது உண்டான ஆத்திரத்தில் அவனை ஏரெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்து அவள் தன் நடையைத் தொடர, "வூடு வரைக்கும் நிச்சயமா உன்னால நடந்து போவ முடியாது, ரொம்ப பிகு பண்ணாம ஒழுங்கு மரியாதையா பின்னால ஏறி உக்காரு. பத்திரமா உன் வூட்டுல எறக்கி உட்டுட்டுப் போறேன். இல்லனா இன்னைக்கே ஒன்ன எங்கூட்டுக்குத் தூக்கிக்கினு போயிருவேன்" என அதிகாரமாகத் தொடங்கி இலகுவான சிரிப்புடன் அவள் முடிக்க, உண்மையில் அவளுக்குமே நடக்கத் தெம்பில்லாமல் போயிருக்க, அமைதியாக அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.


ஒரு பக்கமாகக் காலைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தவளின் கையைப் பற்றி தன் வயிற்றைச் சுற்றிப் போட்டவன், "கெட்டியா பிடிச்சுக்கோ மங்க, பேலன்ஸ் இல்லாம கீழ விழுந்துற போற" என்று சொல்ல அப்படியே தொய்ந்து அவன் முதுகில் தலை சாய்த்தாள். 


'சாரி மங்க, உன் விஷயத்துல என்னால விட்டுக் கொடுக்கவே முடியாது. இப்ப உனக்கு என்னோட இந்த முடிவு கஷ்டமாக இருந்தாலும் எதிர்காலத்துல இதை நினைச்சு நீ சந்தோஷப்படத்தான் போற' என்றெண்ணிய படி அவளது அருகாமையை மிகவும் இரசித்தவனாக வாகனத்தை ஓட்டி வந்து அவளுடைய வீட்டு வாயிலில் நிறுத்தினான். அதன் பின்னும் கூட இறங்கத் தோன்றாமல் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, "என்ன மங்க, இப்படியே ஒன்ன எங்கூடுக்கு இட்னு போயிறவா?" என்று அவன் கிறக்கமாகக் கேட்க அதன் பின்புதான் வண்டி நின்றதையே உணர்ந்தாள். 


அனிச்சையாக அவளது பார்வை வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில் போட்டு அதில் படுத்திருந்த அவளது தாத்தாவின் மீது பாய, அரவம் கேட்டு அவரும் எழுந்தமர்ந்து நெற்றியின் மேல் கையைக் குவித்து வைத்து கண்களைச் சுருக்கி இவர்களைப் பார்க்க, இவளது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. ஆனால் தாமோதரனோ வம்பை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் மனநிலையுடன் கையை ஆட்டி அவருக்குத் தன் இருப்பைத் தெரியப்படுத்திவிட்டு, வாகனத்தை கிளப்பிக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று மறைந்தான். 


இந்த இரு ஆண்களின் உணர்வுகளுக்கு இடையில் சிக்கிப் பரிதவித்துப்போனவளாக, தளர்ந்த நடையுடன் அவளுடைய தாத்தாவை நெருங்க, “ஒனக்கு உடம்புல கொஞ்சமாவது ஒணக்க இருக்கா மங்க? பொட்டபுள்ள வூடு வர நேரமா இது?” எனக் குத்தலாகத் தொடங்கியவர், “ஆமாம், உன் வண்டி எங்க?” என்று கேட்க, “செல்வண்ணே எடுத்துட்டுப் போயிருக்கு” என உள்ளே போன குரலில் முணுமுணுத்தாள்.


“அப்படின்னா ஒன்ன எறக்கி உட்டுட்டு போனது?” என இழுத்தவர், “கதிரா இருக்க வாய்பில்ல, அப்பால யாரு மங்க?” எனக் கேட்டார் பதட்டத்துடன்.


“தாமு” என்றாள் குரலே எழும்பாமல்.


“புரில, தெளிவா சொல்லு”


மீண்டும் அவள் “நம்ம தாமுதான் தாத்தா, அமரிக்கால இருந்து வந்திருக்கு” என்றாள் சத்தமாக.


“நம்ம தாமுவாம் நம்ம தாமு! இந்த நெனப்ப நீ இன்னும் விட்டுத் தொலைக்கலியா? அவனெல்லாம் அசலூர் காரனா போயி எவ்வளவோ வருஷம் ஆச்சு” என அவர் சொன்ன விதமே அவரது எரிச்சலை சொல்லாமல் சொல்ல, “அவன எங்க பார்த்த நீயி” என தன் விசாரணையைத் தொடர்ந்தார்.


அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச இயலாத மனநிலையில், “பஞ்சாயத்து போர்டு ஆஃபீசாண்ட வந்திருந்துது தாத்தா” எனப் பதில் கொடுத்தாள், வேறு வழி இல்லாமல்.


அதீதமாக கண்டிப்பு காண்பித்தாலும், “இனிமேல் இப்படி அவங்கூட ஜோடி போட்டுட்டு சுத்தாத மங்க, அப்பால தேவையில்லாத தொல்லையா பூடும்” என எச்சரிக்கும் விதமாகச் சொன்னவர், “களைப்பா தெரியற, சோறாக்கி வெச்சிருக்கேன், போய் மூஞ்சி கைகால் கழுவிகினு வந்து போட்டுத் துண்ணு’ என்றார் கரிசனையுடன்.


நேராகப் போய் கிணற்றடி தொட்டியில் அவர் நிரப்பி வைத்திருந்த தண்ணீரில் முகம் கை கால் கழுவி வந்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.


அவளை விட்டுவிட்டு அவரும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெரிந்து, மரத்தடியிலேயே ஒரு பாயை விரித்தவள், உணவுப் பாத்திரங்களைக் கொண்டுவந்து அதில் வைத்துவிட்டு இருவருக்கும் தட்டை எடுத்து வைத்தாள்.


மண் சட்டியில் சூடாகச் சோறு இருந்தது. பூண்டு வெங்காயத்துடன் காராமணியும் கத்தரிக்காயும் போட்டு காரக் குழம்பு வைத்திருந்தார். அதற்குத் தொட்டுக்கொள்ள தோதாக முட்டையைப் பக்குவமாக பொரித்திருந்தார். கமகமவென எழுந்த அவற்றின் மணமே பசியைக் கூட்டியது.


 அந்த வேகத்தில் தட்டில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றி அவசரமாகப் பிசைந்து, அள்ளி ஒரு வாய் உள்ளே போட, அப்படியே அந்தச் சோறு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. அதில் புரை ஏறிவிட, தலையில் தட்டியபடி, “என்ன பொண்ணு நீயி, பார்த்து நிதானமா துண்ணக் கூடாது” என பதறிப் போனார் தாத்தா.


அப்படியும் அவள் திணற, வேகமாகப் போய் ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து வந்தவர், “சோறு துண்ணும்போது பக்கத்துல தண்ணி எடுத்து வெச்சிக்கன்னு சொன்னா கேக்காத, இந்தக் கிழவனுக்கே தொண்ட விக்கிக்கினா தனியா இன்னா செய்வ நீ?” என அவளை திட்டியபடி அதை அவளுக்குப் புகட்ட, அவளது கண்களில் நீர் வழிந்தது.


அதன் பின் அசுவாசமடைந்து இருவருமாக சாப்பிட்டு முடிக்க, பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு வீட்டிற்குள் போய் பாயை விரித்து, தாத்தாவின் பழைய வேட்டியை அதன் மேல் போட்டு, தலையணைப் போர்வையுடன் அப்படியே முடங்கினாள்.


பொதுவாக, கோடை காலங்களில் தாத்தா மரத்தடியில்தான் படுப்பார். பாதுகாப்பு காரணங்களால் மங்கைக்கு அனுமதி இல்லை. அவள் இப்படி தனியாக உறங்குவது வழக்கம்தான் என்றாலும் அன்று அவளுக்கு இந்தத் தனிமை ஒருவித வெறுமையைக் கொடுத்தது.


முகம் புதைத்து ஒரு குறை அழுதுத் தீர்க்க அன்னையின் மடி இல்லாமல் போனதின் துயரத்தைப் பரிபூரணமாக அனுபவித்தாள். 


அப்பா, தாத்தா என்ற உறவுகள் என்னதான் அன்பைப் பொழிந்தாலும், ஓரடி தள்ளி நின்றே அதை அனுபவிக்க இயலும். ஆரத் தழுவி, கட்டி அணைத்து, மடியில் உறங்கி என எதுவும் பழக்திலேயே இல்லை. பெண் பிள்ளைகளைத் தொட்டுப் பேசக் கூடாது என ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லித்தான் வளர்ப்பார்கள்.


'இது நம்ம தாமுக்கு மட்டும் எப்புடி தெரியாம போச்சு? இல்ல வெளியூர் வெளிநாடுன்னு போனதுல எல்லாம் மறந்து போச்சா? இல்ல என்ன மட்டும்தான் இப்படி தொட்டுப் பேசுதா?' எனத் தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அதுதான் உண்மை என்று தோன்றியது!


அவனுடைய அணைப்பும் காமக் கலப்பில்லா முத்தமும் நினைவில் வர, அவளுடைய மனம் ஆறுதல் தேடி அவனிடமே தஞ்சம் புகுந்தது! ஆனால் அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிவது போல் ஆகும் என்பதும் புரிய, முன்னம் செய்த அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்ய அவள் தயாராகவே இல்லை. மனதிற்கு கடிவாளமிட்டு லகானை அறிவினிடம் ஒப்படைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்! 


இவள் இப்படி விசனப்பட்டு கொண்டிருக்கும் இதே நேரம் தாமோதரனும் கூட உறக்கம் வராமல்தான் புரண்டு கொண்டிருந்தான்.


மங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை, நோட்டுப்புத்தகத்திலிருந்து கிழித்து நான்காக மடித்த காகிதம் ஒன்றை அவனிடம் நீட்டி, "இந்த தேவா பையன பாரு தாமு, கொஞ்சம் கூட அறிவு இல்லாம எனக்குப் போய் லவ் லெட்டர கொண்டு வந்து கொடுக்கறான்" எனக் கண்ணப்ப நாயக்கரின் கடைசி மகனைப் பற்றிய ஒரு புகாருடன் இவனை நாடி வந்திருந்தாள்.


அதைப் பிரித்து படித்தவனுக்குச் சிரிப்பு பொங்கியது. அவ்வளவு இரசனையாக கவிதை நடையில் அதை எழுதியிருந்தான் தேவா.


அவன் அதை பார்த்து வாய்விட்டு சிரிக்க, "இன்னா தாமு நீயி, நான் இத பாத்து எம்மா பயம் பயந்து போய் கெடக்கேன் தெரியுமா? அந்த நாயி இன்னாடானா, நான் சொல்ற எதையும் காதுல வாங்காம பொழுதுக்கும் என் பின்னாலயே சுத்திக்கினு கிடக்குது. இத பத்தி தாத்தாவுக்குத் தெரிஞ்சா என்ன பள்ளிக்கூடத்த விட்டே நிறுத்திபுடும். சித்திக்குக் கண்டி தெரிஞ்சுதுன்னு வை, வேற வெனையே வேணாம். ப்ளீஸ் தாமு, நீ அவனைக் கூட்டு ரெண்டு தட்டுத் தட்டி பயம் வராப்பல சொல்லு தாமு" என உண்மையான அச்சத்துடன் சொல்ல, அந்தக் காதல் கடிதத்தை மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவன், சரி என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.


அதேபோல தேவாவைக் கூப்பிட்டு அவன் தலையில் தட்டி, "தம்மாத்தூண்டு பையன் நீ, எங்கூட்டுப் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கறியா? எவ்வளவு நல்லா தெளிவா இந்த லெட்டர எழுதி இருக்க, இந்த அறிவ, போய் உன் படிப்புல காமி, இப்புடி பொண்ணுங்க பின்னால சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாத, மறுபடியும் இப்படி செஞ்சன்னு வையி, உன் கைய கால ஒடச்சிட்டுதான் மறு வேல பார்ப்பேன்" என அவனை மிரட்டி அறிவுரை சொல்லி, அனுப்பி வைத்தான்.


அதன் பின் தேவா என்பவன் அவன் நினைவிலிருந்து மறைந்தே போனான் என்றுதான் சொல்லவேண்டும்.


ஆனால், ‘இது என்ன இது? ஒரு பையன் தொரத்தி தொரத்தி லவ் லெட்டர் கொடுக்கற அளவுக்கு இந்த மங்க பொண்ணு அவ்வளவு பெரிய மனுஷி ஆயிடுச்சா என்ன?’ என்ற வியப்பு மனம் முழுதும் வியாபிக்க, அதன் பிறகுதான் அவளை உற்று கவனிக்கவே தொடங்கினான்.


அது உண்மைதான் என அவன் முழுமையாக உணர்ந்த தருணம் அவளுக்காக வாங்கி வந்த அந்த புத்தகத்தை அவளிடம் அவன் கொடுக்கப் போன தருணம்தான்.


கடந்த முறை இங்கே வந்த போது அவளுடைய பொக்கிஷமான அந்தப் புத்தகத்தைத் தன்னையும் அறியாமல் கொண்டு வந்தவன் அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்து சற்றுக் குழம்பித்தான் போனான். 


இப்படி ஒரு படம் அவளுடைய கைக்கு எப்படி வந்திருக்கும் என்ற யோசனையுடன் அவன் அதைத் திருப்பிப் பார்க்க, கல்யாண அல்பத்திலிருந்து அதை அவள் பிய்த்து எடுத்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தது. 


கூடவே, அந்தப் படத்தில் அவளுக்கு அருகில் நிற்கும் தேவாவும் அவனுடன் இணைந்த அந்தச் சம்பவமும் நினைவில் வந்துத் தொலைய, பழைய கதை தொடர்கிறதோ என்ற சந்தேகம் மூளைக்குள்ளே தீப் பற்றி எரிந்தது.


மங்கை கதிரை மறுக்கக் கூட இதுதான் காரணமோ என்று அவனுடைய மூளை விபரீதமாக யோசிக்க, அமெரிக்கா திரும்பிய உடனேயே கைப்பேசியை எடுத்து, தேவாவின் அண்ணனுக்கு அழைத்தான்.


அவன் இவனுடன் தொடக்கப் பள்ளியில் படித்தவன், இன்று வரை பட்டும் படாமலும் இவனுடன் தொடர்பிலும் இருப்பவன். 


கண்ணப்ப நாயக்கர் இறந்த தகவல் இப்பொழுதுதான் அவனுக்குத் தெரியவந்ததாக காண்பித்துக் கொண்டு, அவனுடைய அப்பாவின் இறப்புக்குத் துக்கம் விசாரிப்பது போலத் தொடங்கி, இயல்பாகப் பேச்சை வளர்க்க, இவன் போட்டு வாங்கியதில் பல விஷயங்களை உளறிவைத்தான் அவன்.


முதலில் இங்கே இருக்கும் சொத்துக்களை விற்க தேவா சம்மதிக்கவே இல்லை. அவன் பங்கைப் பிரித்து தரச்சொல்லித்தான் கேட்டானாம். ஆனால் மொத்தமாகக் கொடுத்தல் மட்டுமே அந்த நிலத்தை வாங்கிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் சொந்தக்காரர் தயாராக இருக்க, அவனிடம் கெஞ்சி, ஆசை காட்டிப் பலவாறாகப் பேசிப் பார்த்தும் பலனில்லாமல் போயிருக்கிறது.


அந்தச் சமயத்தில்தான் நிலமங்கை அவனிடம் வந்து, அந்த நிலங்களைத் தனக்குக் குத்தகைக்குத் தரச்சொல்லிப் பேசியிருக்கிறாள். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அவள் தன்னை மணந்துகொண்டால் அந்த நிலத்தை விற்காமல் இங்கேயே இருந்துவிடுவதாக அவன் அவளிடம் பேரம் பேசி இருக்கிறான்.


அதற்கு அவள் உடன்படாமல் மறுத்துவிட்டு போய்விட, அவள் இனி தனக்குக் கிடைக்கவே மாட்டாள் என்பது தெளிவாக தெரிந்துபோக, அதில் உண்டான ஆத்திரத்தில் அந்த நிலத்தை விற்க ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டான் தேவா.


இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, ‘அப்பாடா என ஆசுவாசப் பட்டுகொண்டலும், அந்த ஃபோட்டோவை அவள் ஏன் எடுத்து வைத்திருக்கிறாள் என்ற கேள்வியுடன், அந்தப் புத்தகத்தை எடுத்து ஒவ்வொன்றாக அதன் தாள்களைப் புரட்ட, அவள் அவனை வரைந்திருந்த ஓவியம் கிடைக்க, அவனது கேள்விக்கும் விடை கிடைத்தது.


அதாவது அந்தப் புகைப்படத்தை அவள் கவர்ந்தெடுத்து வந்ததே அதில் ஒரு ஓரத்தில் இவனும் இருக்கும் காரணத்தால்தான் என்பதுதான் அந்த விடை.


பார்த்த நொடியே அந்தக் கோட்டோவியம் அவனைப் பித்துபிடிக்க வைத்துவிட்டது என்றால் அது மிகையில்லை.


இனி வாழ்ந்தாலும் இந்த நிலமங்கையுடன்தான், செத்தாலும் அவள் மடியில்தான், தன்னை முழுவதுமாக ஆட்கொள்ளும் உரிமை அவளுக்கு மட்டுமேதான், இதை ஆதிக்க புத்தி என யாரேனும் தூற்றினால் கூட கவலையில்லை, அவளிடம் உருவாகியிருக்கும் இந்தப் பிணைப்பைத் தன்னால் மாற்றிக்கொள்ளவே இயலாது எனப் பரிபூரணமாக உணர்ந்தான் தாமோதரன்.


‘என்ன செய்தும் அவளை என் உரிமை உள்ள மனைவியாக அடைந்து என் ஆயுளுக்கும் என்னுடன் கட்டிவைத்துக் கொள்வேன்’ என்ற எண்ணத்துடன்தான் இங்கே வந்து இறங்கியிருக்கிறான்.


அதுவும் அவள் இவ்வளவு தீவிரமாக தன் மறுப்பைப் பதிவு செய்த பின், அவளைத் தன் வழிக்குக் கொண்டு வர என்னவெலாம் செய்யலாம் எனத் திட்டமிடத் தொடகிவிட்டான். அது அறப்போராட்டமாகவும் இருக்கலாம் அல்லது அடக்குமுறை சர்வதிகரமகவும் மாறலாம்! இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் அது அவள் எடுக்கும் முடிவைச் சார்ந்தே அமையப் போகிறது!


© KPN NOVELS COPY PROTECT
bottom of page