top of page

Nilamangai - 12 (1) FB

Updated: Sep 27

நிலமங்கை - 12 (1)


நினைவுகளில்


(மே 2014)


பொன்மருதத்தின் ஏரிக் கரையோரம் அமைந்திருக்கும் பெரிய ஆலமரத்தின் அடியில்தான் ஊர் பஞ்சாயத்து கூடுவது வழக்கம்.


மென்காற்று சுகமாகத் தழுவி அனைவரையும் ஆசுவாசப் படுத்தும் பொன் மாலை நேரமதில், பாலின பாகுபாடின்றி, வயது வித்தியாசம் இல்லாமல் அந்த ஊரின் ஏழை எளிய மக்கள் அனைவரும் அங்கே ஒன்று கூடி அமர்ந்திருக்க, அவர்களை அங்கே ஒருங்கிணைத்த செல்வம் எல்லோருக்கும் தேநீரும் பன்னும் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தான்.


“பொன்மருதம் கிராமத்தின் விவசாய பெருமக்களான உங்க எல்லாரையும் அன்புடன் வரவேற்கிறோம். நாங்க கூப்பிட்டதுக்கு மதிப்பு கொடுத்து இங்க வந்திருக்கற எல்லாருக்கும் எங்க நன்றி’ என ஒலித்த கணீர் குரல் அனைவரின் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி தன் பால் ஈர்த்தது.


"நம்முடைய தேவைக்காக எப்பொழுது சமரசம் ஆகிறோமோ அப்பொழுதுதான் தீயவற்றின் பாதையில் நாம் கால் வைக்கிறோம்ன்னு சொல்றாங்க நம்ம நம்மாழ்வார்.


ஆனா நாம என்ன செஞ்சிட்டு இருக்கோம்? நம்ம தற்காலிக தேவைக்காக கொஞ்சம் கொஞ்சமா நம்ம நிலங்களை வித்து தின்னுட்டு இருக்கோம்.


பசிக்குது, சாப்பிட சோறில்லன்னு நம்ம கைய நாமளே கடிச்சி தின்னுவோமா, அப்படித்தான் பணத் தேவைக்காக நம்ம நிலத்த அசலூர் காரனுக்கு நாம விக்கறதும், அத நாம முதல்ல புரிஞ்சிக்கணும்.


நாம பயிர் வெக்கற சமயத்துல கூட, பக்கத்துக் கழனிக்காரன் என்ன பயிர் வெக்கறான்னு பார்த்து, நாம வெக்கற பயிர் அவனோட விளைச்சலை பாதிக்க கூடாது, புழு பூச்சி வரக்கூடாது, கிடைக்கற தண்ணிய சமமா பகிர்ந்துக்கணும்னு ஒத்த சிந்தனையோட பார்த்துப் பார்த்து செயல் பட்டுட்டு இருக்கோம். சரிதான" என உணர்ச்சி ததும்பப் பேசிக்கொண்டிருந்த நிலமங்கை விட்ட இடைவெளியில் பன்னை தேநீரில் தோய்த்து சுவைத்தபடி எதிரில் அமர்ந்திருந்த சிறு கூட்டத்திலிருந்த பலரும் தம்மையும் அறியாமல் தலை அசைக்க,


"நம்ம அப்பன், பாட்டன்னு பாடுபட்டு கட்டிக்காத்த பூமி, புருசனும் பொண்டாட்டியுமா பாடுபட்டு விவசாயம் பார்த்த காடு-கழனி, நான் செத்தா கூட இங்கதான் என் உடம்ப புதைக்கணும்னு வைராக்கியம்மா வாழ்ந்து செத்த, நாம சாமியா கும்புடற நம்ம குடும்பத்து மனுஷங்கள புதைச்ச நிலம், இப்படிப்பட்ட நம்ம மண்ணோடக் கூட நமக்கு ஒரு உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கா இல்லையா" என்ற அவளது கேள்விக்கு, "இருக்கு, இருக்கு' என வேகமாக பதில் வந்தது, குறிப்பாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த பூங்காவனத்தம்மாளின் குரல் ஓங்கி ஒலித்தது.


"சூப்பரு, ஆனா இதே மாதிரி ஒரு பிணைப்பு அசலூர் காரனுங்களுக்கு இருக்குமா? ஊர் வயித்துல அடிச்சு, பொய் சொல்லி, ஏமாத்தி, எப்படியெப்படியோ சம்பாதிச்ச பணத்த கொடுத்து நம்ம பூமிய வாங்கற பட்னத்தானுகங்களுக்கு நம்ம பூமித்தாயோட மகத்துவம் எங்கயாவது புரியுமா?" என்று கேட்க, "புரியாது... புரியாது...?' எனக் கூட்டத்திலிருந்து ஆதரவுக் குரல்கள் ஒலித்தன.


"அப்படி வாங்கற நிலத்துல விவசாயம் செஞ்சாலும் பரவாயில்ல, கல்ல இல்ல நட்டுட்டு போறானுங்க. போன வருஷம் நம்ம கண்ணப்ப நாயக்கர் நெலத்த வாங்கினானுங்களே, கடைசில என்ன செஞ்சானுங்க, மினரல் வாட்டர் பாக்டரி இல்ல போட்டுட்டானுங்க.


'தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து! அதை வானத்திலிருந்து வரவழைக்கச் செய்'ன்னு சொன்னார் நம்ம நம்மாழ்வார். அப்படி கிடைக்கற மழை நீரை வீணாக்காம, ஏறி, குளம், குட்டைன்னு முறையா சேமிச்சாலே போதுமே. நாம நிம்மதியா விவசாயம் செய்யலாமே! ஆனா இங்க என்ன நடக்குது?


நோண்டி நோண்டி போர் போட்டுட்டு, கேன் கேனா தண்ணிய புடிச்சி விக்கறானுங்க. இப்பவே, நம்ம கிணத்துல தண்ணி நிக்க மாட்டேங்குது! இதே மாதிரி நிலத்தடி நீர மொத்தம் உறிஞ்சினா நாம எப்படி விவசாயம் பண்ண முடியும்?" என, எதிரே கூடி இருந்த மனிதர்களின் உணர்வுகளைத் தூண்டும்படி அவள் பேசிக்கொண்டே போக, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அங்கே வந்து ஓரமாக நின்றான் தாமோதரன்.


அடுத்த நொடி அவளது பார்வை அவன்மீது பாய்ந்திருக்க, அவளது முகத்தில் படர்ந்த வியப்பும், மின்னல் கீற்றாய் கண்களில் மின்னி மறைந்த மகிழ்ச்சியும் அவளது ஆழ்மன இரகசியத்தை அவனுக்குப் பறைசாற்றி முடித்திருக்க, மனம் முழுவதும் பொங்கிப் பிரவாகித்த காதலுடன், ‘ஹாய்’ என உதடு குவித்து கை அசைத்தான். தன் பேச்சு தடைப்படா வண்ணம் விழி மூடித் திறத்து அவள் அதை ஏற்க்க, அதன் பிறகுதான் அவளுக்குப் பின்னால் கைக்கட்டி நின்ற கதிரே அவன் பார்வையில் விழுந்தான். யோசனையில் அவனது நெற்றி சுருங்கினாலும், கதிர் அவனை அதிகம் பாதிக்கவில்லை.


“கண்ணப்ப நாயக்கர் பெத்த பிள்ளைங்க மாதிரி, ஏக்கர் கணக்குல நிலம் வெச்சிருக்கறவங்க வேணா, நம்ம ஊரையும் விவசாயத்தையும் பத்தி கவல படாம, லம்பு லம்பா நிலத்தை தூக்கி கொடுத்துட்டு போகட்டும். நம்மள மாதிரி ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் நிலம் வெச்சிருக்கறவங்க எந்த நிலைமை வந்தாலும் நிலத்தை விக்கக் கூடாது.


அப்பத்தான் மத்த நிலத்துல ஒழுங்கா விவசாயம் செய்வாங்க. இல்லனா எல்லா நிலமும் ஒரே கைக்கு போகும். பிறகு அதுல சாராய பேக்டரியோ இல்ல ஏதாவது கெமிக்கல் பேக்டரியோ ஆரம்பிச்சு, இந்த பூமிய நாசம் செஞ்சிடுவாங்க. நம்ம அடுத்த தலைமுறை வாழ இங்க ஒரு பொட்டு நிலம் மிச்சம் இருக்காது!


எந்த ஒரு அரசாங்கமும் நம்ம பத்தி கவலை படாது. உள்ளாட்சி தேர்தல் கூட ஒழுங்கா நடக்கல பாருங்க. நம்ம குறையை யார் கிட்ட போய் சொல்லுவோம்! அதனால நமக்கானத நாமளே காப்பாத்திக்க வேண்டிய நிலைமையிலதான் இருக்கோம்.


'விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை'ன்னு சொன்ன நம்ம நம்மாழ்வார் இப்ப நம்ம கூட இல்ல. அவர் நம்ம விட்டு போய் நாலஞ்சு மாசம் ஆனாக் கூட, அவரோட இழப்பு ஒரு பெரிய வலிய கொடுத்துட்டுதான் இருக்கு.


கெமிக்கல் போடாம இயற்கை முறைல விவசாயம் செய்ய முடியுங்கற நம்பிக்கையை நமக்கு கொடுத்தவர். கால போக்குல நாம தொலைச்ச அற்புதமான நல்ல நெல் வகைகளை நம்மக்கு மீட்டு கொடுத்தவர். அவர் வார்த்தைகள்ல நம்பிக்கை வெச்சாலே போதும், நாம விவசாயம் செஞ்சு உயர்ந்த நிலைக்குப் போக முடியும்.


மறுபடியும் மறுபடியும் சொல்றேன், இந்த தேவி பொண்ணோட அப்பா கோவிந்தன் மாமா மாதிரி ஆளுங்க பேச்சை கேட்டுட்டு நம்ம நிலத்தை யாருக்கும் தாரவார்த்துடாதீங்க" என அவள் சொல்லி முடிக்கும் பொது, "மாட்டோம், மாட்டோம்" என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.


அடுத்ததாக அனைவர்க்கும் நன்றி நவின்று விட்டு பதிலுக்கு அங்கே ஒலித்த கரகோஷங்களுடன் அந்த கூட்டம் முடிய, அனைவரும் கலைந்து சென்றனர்.


தாமுவை பார்த்துவிட்டு சிலர் அவனிடம் நலம் விசாரித்துவிட்டுப் போக, அவனை நோக்கி வந்தாள் நிலமங்கை.


கூடவே வந்த செல்வத்துக்கு வியப்பு தாங்கவில்லை. “ண்ணா, எப்பண்ணா வந்த, உன் வூட்டுல நீ வரபோறேன்னு யாரும் ஒரு வார்த்த கூடச் சொல்லவே இல்லையேண்ணா” என மகிழ்ச்சியுடன் அவன் குறைபட்டுக்கொள்ள, “மதியந்தான் வந்தேன். அதோட கூட, எல்லாருக்கும் ஷாக் கொடுக்கலாம்னு, நான் வரத பத்தி வூட்டுல யாருக்கும் சொல்லலடா. சர்ப்ரைஸ் அரைவல்” என்றான் பார்வை முழுவதையும் மங்கையின்மேல் பதித்து. 'ஓவரா சீன போடாத' என்பதாக அவள் அவனை முறைக்க, அவனது இதழ்கள் அடக்கப்பட்ட சிரிப்பில் துடித்தன.


இருவரையும் உணராமல், “இந்த தடவையாவது ஒரு வாரம், பத்து நாள் இருப்பியா இல்ல போன தடவ மாதிரி ஒரே நாள்ல திரும்பி பூடுவியா?’ என உரிமையுடன் செல்வம் கேட்க, ‘ஏங்க வேண்டியவ ஏங்கல, இவன் என்னடான்னா அவ கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் ஏக்கமா கேட்டுட்டு இருக்கான்’ என்று எண்ணியவன், “முழுக்க ரென்ற மாசம் இங்கதான் இருக்கப்போறேன் செல்வம், இந்த தடவ கல்யாணம் முடிச்சி, பொண்டாட்டியோட கூடத்தான் ப்ளைட் ஏறுவேன். கவலையே படாத” என்றான் கிண்டல் இழையோட.


“அப்படி சொல்லுண்ணா, கேக்கவே எவ்வளவு நல்லா இருக்கு, நீ ஊருக்கு போற வரைக்கும் உன்ன விட்டு அங்க இங்க நவுருவனா பாரு” எனச் செல்வம் அப்பட்டமாக தன மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இனம் புரியா ஒரு உணர்வில் மங்கைக்குத்தான் அடி வயிறு சில்லிட்டது.


தூரத்திலேயே நின்றபடி கதிர் வேறு இவர்களையே பார்த்திருக்க, அதை கவனித்த செல்வம், அருகில் வருமாறு அவனை கை காண்பித்து அழைத்தான்.


ஒரு தயக்கத்துடன் அவன் அங்கே வர, "கதிர், நான் அடிகடி சொல்லுவேன் இல்ல, இவங்கதான் தாமுன்னா" என அவனுக்கு அறிமுகம் செய்துவிட்டு, "ண்ணா, இவன்தான் கதிர். நாங்க ஒரு பத்து பேர் சேர்ந்து இங்க சுத்துபட்டு ஊர்ல இருக்கற விவசாயிகளுக்காக 'விவசாயிகள் நல்வாழ்வு மையம்'ன்னு ஒரு தொண்டு நிருவனத்த நடத்தறோம்" என்றான் தகவலாக.


கதிர் யாரென்றே தெரியாத பாவத்தில், "ஹாய்" என அந்த அறிமுகத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டான் தாமோதரன், அவ்வளவுதான். மேலும் செல்வம் ஏதோ பேச வர, "செல்வம், ரொம்ப டயர்டா இருக்கு, நாளைக்கு காலைல வீட்டுக்கு வா, மத்த கதையெல்லாம் பேசிக்கலாம்" என்றவன், "மங்க, வூட்டுக்குதான போகபோற, வா... பேசிட்டே நடத்து போகலாம்" என்று சொல்ல, முன்பெல்லாம் தாமுவிடம் மங்கை எடுத்துகொள்ளும் சலுகையை நன்றாக அறிந்தவன் என்பதால் அந்த நினைப்பில், "மங்க, நீ தாமுண்ணே கூட வா, நான் உன் வண்டிய எடுத்துட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு, "வா கதிரு, நாம கிளம்புவோம்" என்றதுடன் நிற்காமல், அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான் செல்வம்.


அவனைப் பொறுத்தவரை என்றைக்குமே தாமுவின் பேச்சிற்கு மறுபேச்சே கிடையாது!


ஆனால் மங்கை அப்படி இல்லையே! அவனுடைய பேச்சைக் கேட்கவே கூடாது எனச் சபதம் எடுத்திருப்பவள் ஆயிற்றே!


"என்ன தாமு, வந்ததும் வராததுமா உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா" என்று கண்டனமாகக் கேட்டபடி அவள் நடக்கத் தொடங்க, தானும் நடந்தபடி, "ஏன், நான் என்ன உன்ன கம்பல் பண்ணி கைய பிடிச்சி இழுத்துட்டா போறேன்? வர இஷ்டம் இல்லன்னா இல்லன்னு சொல்லியிருக்க வேண்டியதுதான" எனக்கேட்டான் குதர்க்கமாக.


உண்மையில் அவளுக்கு அவனைப் பார்த்ததில் உண்டான வியப்பு இன்னுமே அடங்கவில்லை. அதனால் சட்டென மறுப்பு கூற மறந்தே போயிற்று. அதைப் போய் அவனிடம் சொல்ல இயலுமா?!


அவள் அமைதி காக்க, அப்படியே நின்றவன், அவளுடைய கையைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்ப, சுற்றும் முற்றும் யாரேனும் இவர்களைப் பார்க்கிறார்களா என நோட்டம் விட்டபடி, திகைப்புடன் அவனது முகத்தை ஏறிட்டாள்.


"ஏற்கனவே உன்னைப் பத்தி சொல்லத் தேவையில்ல, சும்மாவே பேச்சா பேசுவ, இப்ப ஆனாலும் பேசறடீ, அப்படியே அசந்து போயிட்டேன் மங்க, நீ கண்டி இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்தன்னு வை, அமெரிக்கா வேலையைத் தூக்கி போட்டுட்டு நானும் விவசாயம் பாக்க இறங்கி இருப்பேன்" என்றான் மெச்சுதலாக.


வியப்புடன் அவள் விழி விரித்து அவனைப் பார்க்க, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று, "என்ன கட்டிக்கோ மங்க, உன்ன என் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்கறேன்" என்றான் அவளது விழிகளில் கலந்து.


அவனையுடைய பார்வையை தவிர்த்தவளாக, "உனக்கு புத்தி கித்தி பேதலிச்சு போச்சா தாமு? இப்படி உளறிட்டு இருக்க" எனக்கேட்டாள் கடுப்புடன்.


"யாருக்கு, எனக்கா புத்தி பேதலிச்சு போச்சு? நீதான் வீண் பிடிவாதமும், திமிரும் பிடிச்சி ஆடிட்டு இருக்க. என்ன மனசுல நெனச்சிட்டு, அத வெளியில தெரியாம கமுக்கமா வெச்சிட்டு, புரட்சி புண்ணாக்குனு பேசிட்டு திரியற" என்றான் கடுமையாக.


அதில் உடல் அதிர, “வேணாம் தாமு, சும்மா ஒளறிட்டு இருக்காத " என்றாள் குரல் நடுங்க.


அதைச் சற்றும் கண்டுகொள்ளாத பாவத்தில், அந்தப் பகுதி முழுவதும் ஆளரவமற்று இருப்பதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இடையுடன் சேர்த்து அவளை தன்னிடம் இழுத்தவன், "இந்த காட்டன் பொடவையில சும்மா கெத்தா இருக்கடி மங்க' என்ற படி தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்ட, அதை வாங்கியபடி அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், கண்கள் நிறைந்த பீதியுடன் அந்த காகிதத்தைப் பிரிக்க, அதில் பால் பாயிண்ட் பேனா கொண்டு அவனது உருவம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்க, தான் அவனிடம் வசமாகச் சிக்கிக்கொண்டிருப்பது புரிந்து அதிர்ந்தே போனாள் நிலமங்கை.


"அப்படினா, என்னோட என்நாடுடைய இயற்கையே போற்றி புக்கு" என அவள் நடுங்கும் குரலில் கேட்க, "பத்திரமா என் கிட்டதான் இருக்கு!" என பதில் கொடுத்தான் தாமோதரன்


*****************************************

Hi Friends,

என்னடா சின்ன பதிவா இருக்கேன்னு நினைக்காதீங்க. சனிக்கிழமை இதன் அடுத்த பகுதி கொடுக்கிறேன்.


இந்த பதிவில் உங்களுக்காக சிறு முயற்சி. கதை விட்டுவிட்டு வருவதால் கதாபத்திரங்கள் குறித்து ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, அத்தியாயத்தின் முடிவில் சிறு நோட் கொடுத்திருக்கிறேன். அந்த பெயரை க்ளிக் செய்தால் அதன் விளக்கம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

கூடவே உங்கள் பொன்னான கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.


******************************************************

கதிர் - சந்தானம், மங்கைக்காக பார்த்திருந்த மாப்பிள்ளை / அவருடைய தமக்கையின் பேரன்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page