top of page

Nilamangai - 11

Updated: Feb 25

11. விஷக்கன்னியோ! வனதேவதையோ!


நிதரிசனத்தில்...


இரவு நேர மின்வெட்டில் ஊர் முழுவதும் இருளில் மூழ்கிப் போயிருந்தது.


சுவர்க்கோழியின் ரீங்காரம் எங்கும் எதிரொலிக்க, கூட்டமாகப் பறந்து கொண்டிருந்த மின்மினிப் பூச்சிகள், தரையில் இறங்கி வந்திருக்கும் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் கூட அந்த இருளை விரட்டும் வல்லமை அவற்றுக்கு இல்லாமல் போனது.


அந்தப் பூச்சிகளைத் துரத்தியபடி தூரத்துப் புள்ளியாகத் தெரியும் ஏதோ ஒரு மாய ஒளியை நோக்கி நடந்து கொண்டே இருந்தான் தாமோதரன். அருகே நெருங்க நெருங்க, அவனுக்குப் போக்குக் காண்பித்தபடி அந்த ஒளியோ எட்டி எட்டி வெகு தூரமாகப் போய்க்கொண்டே இருக்க, அவனது தேடல் முற்றுப் பெறாமல் தன் நடையின் வேகத்தைக் கூட்டியவனின் கரங்களைப் பிடித்திழுத்து நிறுத்தினாள் ஒரு வனதேவதை.


அடர்ந்த அந்த இருளுக்குள் அவனது பார்வைக்கு அவள் புலப்படாமல் போக, அங்கே சூழ்ந்திருந்த அமைதியைக் குலைக்க மனமில்லாமல், மௌனமாக அவளது கையை உதறிவிட்டு அந்த ஒளியை நோக்கி நகர எத்தனித்தான்.


அதில் பிடிவாதத்துடன், தன் கைப்பிடியைச் சற்றும் தளர்த்தாமல் பலம் கொண்ட மட்டும் அவனைத் தன் பக்கமாக அவள் இழுக்கவும், தடுமாறி அவள் மீதே சரிந்தான். அவன் மீது படர்ந்த அவளது ஈரக் கூந்தல் அவனுடைய மனதின் வெம்மையைத் தணிக்க, சற்றுப் பதட்டம் தணிந்தான். மல்லிகையும், சீயக்காயும், கஸ்தூரி மஞ்சளும் கலந்து அவள் மீதிருந்து கமழ்ந்த நறுமணம் அவனது சிந்திக்கும் திறனை மொத்தமாக மழுங்கடிக்க, மேலும் மேலும் அவளுக்குள் புதைந்தவன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தான். பீரிட்டுக் கிளம்பிய உணர்வு பிரவாகத்தில் அவனது கண்களிலிருந்து கண்ணீர் கசிந்து அவளை நனைத்திட, இன்னும் இன்னும் அவனைத் தனக்குள் அவள் புதைத்துக்கொண்டாள். மூங்கில்களின் உரசலில் தீப்பற்றிக் கொள்வது போல, அவள் மீதிருந்து ஜுவாலைகள் மூண்டு  அதுவரை அவன் தேடி அலைந்த ஒளியாகத் தானே மாறிப்போனவளுள் இரண்டற கலந்து தானும் ஒளிப் பிழம்பாகிப் போனான் தாமோதரன்.


அவளைப் பிரிந்து வேறாக அவனால் இயலவில்லை.


அவளைப் பிரிந்து வேறாகிட அவனுக்கு விருப்பமும் இல்லை.


அதனால் அவளைப் பிரிய அவன் முயலவும் இல்லை.


அவளது அணைப்பிலேயே ஆயுள் முழுவதும் இருந்திடும் தாபம் உருவாகிப் போக அவளது முகத்தைப் பார்க்கும் பேராவல் மட்டுமே உண்டானது. லேசாக பின் சாய்ந்து விழித் திறக்க முயன்றான். தீக்கங்குகள் தெறித்து விழுந்து விழிகளிரண்டும் எரிச்சலில் தவித்தன.


'நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து ஒளி வீசு' என தூரத்திலெங்கோ ஒலித்த இசையில் மின்சாரம் தாக்கியது போல உடல் அதிர்ந்து அவளிடமிருந்து பிரித்துத் தூக்கி வீசப்பட்டான் தாமோதரன்.


அது அவனுடைய மங்கையின் அழைப்பிற்காக அவன் வைத்திருக்கும் பிரத்தியேக பாடல் என்பதால் மைக்ரோ வினாடிக்குள் சுயநினைவுக்கு வந்தவனுக்குத் தெளிவாகப் புரிந்தது அது அவனது சுகமான கனவு என்று. நாற்பட்ட நினைவுகளின் தாக்கம், முந்தைய தின நிகழ்வின் எதிரொலி எல்லாம் சேர்ந்ததுதான் இந்தக் கனவு என எண்ணிக்கொண்டவன், கடிகாரத்தைப் பார்க்க, மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.


'இந்த நேரத்துல எதுக்குக் கூப்பிட்றா இவ?' என்ற வினாவுடன், "சொல்லு மங்க" என்று அந்த அழைப்பை ஏற்றான்.


"கொஞ்சம் வந்து கதவைத் தெறந்துவுடு, தாமு" என்று மட்டும் சொல்லி அவள் அழைப்பைத் துண்டிக்க, அன்றைய தினம் ஆனந்தமாகவே அவனுக்குத் தொடங்கிவிட்டது.


வேகமாக வந்து வரவேற்பறை மின்விளக்கை ஒளிரவிட்டு கதவைத் திறந்தவனுக்கு விரித்து வைத்தமடிக்கணினியை கையில் பிடித்தபடி தரிசனம் தந்தாள் அவனுடைய வனதேவதை.


கனவின் தாக்கத்தில் அவனது உடல் முழுதும் தகித்திருக்க, வேண்டுமென்றே வழி மறித்து நின்றான், உறக்கம் தெளியாத பாவனையில்.


ஏதோ அவசரத்தில் இருந்திருப்பாள் போலும், அவனை உரசித் தள்ளிக்கொண்டு அவள் உள்ளே நுழைய, அவனது எண்ணமும் பலித்துப்போனது.


"தாமு, வைஃபை பாஸ்வர்ட் கொஞ்சம் சொல்லேன்" என்று அவள் பரபரக்க, "என்ன மங்க, இவ்வளவு அவசரம், அதுவும் இந்த நேரத்துல?" எனக் கேட்டான் மனதிற்குள் ஏதோ கணக்கு செய்தவனாக.


ஒரே ஒரு நொடி திகைத்தவள், "அர்ஜன்ட்டா யூனிவெர்சிட்டிக்கு ஒரு மெயில் பண்ணனும். கேசவனோட டேட்டா காலி ஆயிடுச்சு, ப்ளீஸ் சொல்லு" எனறு பதைத்தாள்.


"சொல்றேன், பதிலுக்கு நீ என்ன தருவ?" எனப் பேரம் பேசினான் விஷமமாக.


சரியான வில்லங்கம் பிடித்தவன், ஏதோ காரியம் சாதிக்க அடிகோலுகிறான் என்பது புரியவே செய்தது. அவள் அதீத அவசரத்திலிருக்கவும், நிலைமை புரியாமல் இவன் விளையாடும் ஆட்டத்தில் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் தேவையில்லை என முறுக்கிக்கொண்டு போகும் சூழ்நிலையும் இல்லை. இயலாமையுடன், "என்ன தரணும்?" எனக் கேட்டாள் பற்களைக் கடித்தபடி. 


"ஒவ்வொரு வேர்டுக்கும் ஒண்ணு, அதுவும், போனா போகுதுன்னு இங்கதான் கேட்கறேன்" என தன் கன்னத்தைச் சுட்டிக்காண்பிக்க, அவளுக்குப் படபடப்பு அதிகமானது.


அவனிடம் மறுத்துப் பேசி வாக்குவாதம் செய்யவும் அவளுக்கு நேரமில்லை. அவசரமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவள், “ஓகே தாமு, ஆனா நான் முதல்ல என் வேலைய முடிக்கணும், அதுக்கு அப்பால நீ சொல்ற படி செய்யறேன்” எனத் தடுமாற்றத்துடன் சொல்லி முடிக்க, “யாரு, நீயா போடி” என்றான் விட்டுக்கொடுக்காமல்.


“நம்பு தாமு, நான் பேச்சு மாற மாட்டேன், அது உனக்கே தெரியும்” எனத் தீவிரமாகச் சொன்னவள், அந்த மடிக் கணினி வேறு அபாய மணி அடிக்கவும், “ஐயோ, சார்ஜ் வேற தீர போவுது” என்றபடி அலறி அடித்துக்கொண்டு அவனது அறைக்குள் நுழைந்து, கதவைத் தள்ளி உள்ளே இருந்த நூலகத்தினுள் போனாள். அங்கிருந்த மேசையில் அந்த மடிக்கணினியை வைத்து வேகமாக சார்ஜில் போட்டுவிட்டு, அவளைப் பின்தொடர்ந்து வந்தவனை அவஸ்தையுடன் ஏறிட்டாள்.


“மை வெனமஸ் வைஃப் ஐ” என்றான் மனமிரங்கி.


‘‘இது என்ன இப்படி ஒரு பாஸ் வேர்ட் வெச்சிருக்கான்’ எனத் திகைத்தவள், சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டு, படபடவென கீபோர்டைத் தட்டி தன் மடிக்கணினியை அவனுடைய வைஃபையுடன் இணைத்து, தன் வேலையில் மூழ்க, அங்கிருந்து சென்றவன், பல் துலக்கிவிட்டு, அங்கிருக்கும் சமையலறையிலேயே தனக்கு காஃபியும் அவளுக்குத் தேநீரும் தயாரித்து எடுத்து வந்தான்.


அவன் கையில் குவளைகளுடன் வருவதைக் கவனித்தவள் நேராக நிமிர்ந்து உட்கார, அவளுக்கான குவளையைக் கணினிக்கு அருகில் வைத்துவிட்டு அறைக்குள் வந்து அவனது கட்டிலில் அமர்ந்தவன் இயல்பாகக் கைப்பேசியை குடைந்தபடி காபியைப் பருகத்தொடங்கிவிட்டான்.


அவள் ஏதோ ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறாள் என்பது புரிந்தே இருக்க, அவளையே பார்த்தபடி அவளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த அவன் விரும்பவில்லை.  


               ஆனாலும், இடையிலிருந்த கதவு திறந்தே இருக்க, அவளது பார்வையில் படும்படி அவன் வந்து அமரவும், அவளது கவனம் சிதறத்தான் செய்தது. தேநீரை எடுத்துப் பருகியபடி தன்னை சமன் செய்ய முயன்றவள், அவனை ஒரு ஓரப் பார்வை பார்த்தபடியே ஒற்றைக்கையால் கணினியை இயக்கிக்கொண்டிருந்தாள். 


சில நிமிடங்களில், அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது பிடிபட, முழுவதுமாக வேலையில் மூழ்கிப்போனாள்.


முக்கிய தகவல் பரிமாற்றங்கள், பணப் பரிவர்த்தனைகள் என அவள் செய்தாக வேண்டிய சில முக்கிய வேலைகள் தங்குதடையின்றி முடிந்துவிட, எதிர் முனையில் அவளுக்கு உதவிய நபருக்கு நன்றி சொல்லும் பொருட்டு, அவரது பிரத்தியேக உள்பெட்டிக்குள் நுழைத்தவள், ‘‘தோழர் நான் உங்களுக்குக் கால் பண்ணலாமா?’ என டைப் செய்து தட்டிவிட, உடனே அவனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. 


ஆனந்த அதிர்ச்சியில் அவள் துள்ளிக் குதிக்காத குறைதான்.


ஏற்கனவே, தயக்கமும் பயமுமாக அவள் தொடங்கிய ஒரு வேலை வெற்றிகரமாக முடிந்த களிப்பிலிருந்தவளுக்கு, அவனுடைய துரிதமான செயல் எக்கச்சக்க மகிழ்ச்சியைக் கொடுக்க, அவசரமாக ஹெட் ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டவள், மெல்லிய குரலில் பேச்சைத் தொடங்கினாள் ‘ஓ, மை காட்… திஸ் இஸ் அன் எக்ஸ்பெக்டட் தோழர், தேங்க் யூ ஸோ மச்… நீங்க உடனே லைன்ல வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல’ 


“நீங்க மட்டும் என்ன சாதாரண ஆளா? நீங்களே பேசணும்னு சொல்லும்போது நான் அவாய்ட் பண்ண முடியுமா?’’ 


 “ஓஹ் நோ தொழர், நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்ல. எல்லாமே தோழர் ரெஜினா ஏற்படுத்திக் குடுத்த வாய்ப்புதான். உங்க கூட பேசினத பத்தி அவங்க மட்டும் கேள்விபட்டாங்கன்னா மொத வேலையா இந்தியா வந்துடுவாங்க, தென் உங்கள நேர்ல பார்க்காம திரும்ப போக மாட்டங்க” 


“தெய்வமே, என் பொண்டாட்டிகிட்ட என்னை அடி வாங்கி வைக்காம விட மாட்டீங்க போல, அப்படி எதையும் செஞ்சு வெச்சிடாதீங்க”


“பார்ரா, தி கிரேட் டீபீ கூட பொண்டாட்டிக்குப் பயபடறாரு”


“யோவ், அதுக்கு பேர் பயம்லாம் இல்ல”


“ஓஹோ, அப்படின்னா வேற என்னவாம்?”


“ம்ம், ரெஸ்பெக்ட்… லவ்… இப்படியெல்லாம் கூடச் சொல்லலாம், சும்மா சொல்லல ஐ மீன் இட்”


இதைச் சொல்லும்போதே எதிர்முனையில் இருந்தவனின்  குரல் இனிந்து ஒலிக்க, அனிச்சையாக அவளது பார்வை தாமுவிடம் திரும்பியது. காலியான காபி கோப்பைத் தரையில் இருக்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.


“சாரி தோழர், ஒரு ஃப்ளோல உங்க பேரைச் சொல்லிட்டேன்”


               “நோ இஷ்யூஸ், உங்க பக்கத்துல யாரும் இல்லாத வரைக்கும் ஓகே தான்”


               தான் பேசியது நிச்சயம் தாமுவின் செவியை எட்ட வாய்ப்பில்லை என்கிற நம்பிக்கையில், ‘இல்ல தோழர்’ என்றவள், “சொல்ல வந்த விஷயத்த விட்டுட்டு, ஏதேதோ பேசிட்டு இருக்கேன், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், உங்க சப்போர்ட் இல்லாம இங்க எங்களால செயல்படவே முடியாது, இதை சொல்லாம என்னால இருக்க முடியல” என நெகிழ்ந்தாள்.


“நீங்க செய்யற அசாதரணமான ஒரு பெரிய செயலுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன பங்களிப்பு” எனறு அவன் தன்னடகத்துடன் சொல்ல, ‘என்ன… இதுவா சின்ன பங்களிப்பு, எவ்வளவு பெரிய உபகாரம் தெரியுமா?’ என பிரமித்தவள், “தேங்க்ஸ் அகைன், நீங்க இருக்கற பிசிக்கு இந்தளவுக்கு நீங்க பேசினதே… கிரேட். இதுக்கு மேல உங்க நேரத்தை வீணடிக்க கூடாது, பை” என அவள் முடித்துக்கொள்ள, “ஆல் த பெஸ்ட்மா, பை, டேக் கேர்’ என்றபடி அந்த இணைய அழைப்பிலிருந்து விலகினான் கருப்பு இணைய உலகில் பிரலபமாக இருக்கும் டீ.பீ என அனைவராலும் அழைக்கப்படும் தீபப்பிரகாசன். (என் பூவும் நானும் வேறு படித்தவர்களுக்கு இவனைத் தெரியும்)


ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் மடிக்கணினியை அணைத்து மூடும் போது மணி ஆறாகி இருந்தது.              


அதேநேரம் தாமுவின் கைப்பேசி இசைத்ததில் உறக்கம் கலைந்து, “சொல்லு கேசவா” என அவன் அந்த அழைப்பை ஏற்க, “சாரி அத்தான், மொதல்ல தாத்தா நம்பருக்குதான்  கூப்டேன். ரிங்கு போயினே இருக்கு. கைல வெச்சிருக்கற போன கூட எடுக்காம அக்கா என்ன செஞ்சிகினு இருக்குது? பாரு ஒன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு” என்றான் சங்கடத்துடன். 


அனிச்சையாக தாமுவின் பார்வை அவளிடம் செல்ல, “ஏன்டா, இதுல என்ன இருக்கு. யூனிவர்சிடிக்கு ஏதோ மெயில் அனுப்பனும்னு லேப்டாப்ல வேலை பார்த்துட்டு இருக்கு. அதனால சைலன்ட்ல போட்டு வெச்சிருக்கும். என்ன விஷயம் சொல்லு” என்றான் அவளை விட்டுக்கொடுக்காமல்.


“ஒண்ணும் இல்ல அத்தான், இன்னைக்கு எட்டியம்மன் கோவில்ல பொங்கல் வைக்கறோம், தெரியும் இல்ல? நேரம் ஆயிடுச்சு, அதனால நாங்கல்லாம் முன்னால போயி பொங்க வெக்கறோம், அது, அபிஷேகம் முடிஞ்சு சாமி கும்புட வந்தா போதுமாம். ஒரு ஒம்பது மணிக்கா நீயே அக்காவ அங்க இட்னு வந்துட்றியா?” என்று கேட்டான்.


சரியாக அதே நேரம் மங்கை அவனை நோக்கி வரவும், “உங்கக்கா எங்கூட வந்தா, இட்னு வரேன், இல்லன்னா நீயே வந்து இட்னு போ” என்றான் குரலை உயர்த்தி, வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கும் நோக்குடன்.


“என்ன?” என அவள் புரியாமல் கேட்க, “ஒரு செகண்ட் இருடா” என அழைப்பை மியூட்டில் போட்டுவிட்டு கேசவன் சொன்னதை அவளிடம் சொன்னவன், “அவனையே வந்து இட்னு போக சொல்லவா? என்ன, அவன் அரக்கப்பரக்க ஒரு தடவ ஓடியாரணும், பாவம். நமகென்ன அதைப் பத்தி?” என்றான். 


“இங்க வந்ததுல இருந்து உங்கூடவேதான் சுத்திக்கினு இருக்கேன், என்னவோ ஓவரா சீன் போட்ற, உனக்கு முக்கியமா வேல எதுவும் இல்லன்னா நீயே கூட்டிட்டுப் போ” என்றாள் அதிகாரமாக.


அடக்கப்பட்ட சிரிப்பில் அவளது விழிகள் ஜொலிக்கவும், இதழ் மலர்ந்த புன்னகையுடன், “சரிங்க மகாராணி” எனக் கிண்டலுடன் சொல்லிவிட்டு, “நானே இட்னு வரேன் கேசவா, முடிஞ்சு சாமி கும்புட சொல்ல கால் பண்ணு’ என அந்த அழைப்பைத் துண்டித்தவன், முடிந்தது என்கிற பாவத்தில் அவனைக் கடந்துபோக எத்தனித்தவளின் கையைப் பிடித்துத் தடுத்தான்.


“என்ன?” என்ற அவளது கேள்விக்கு, 


“என்ன, நைசா நழுவற?” எனக் கேட்டான் இடக்காக.


உண்மையில் அவனது நிபந்தனையை மறந்திருந்தாள். அவள் மறப்பாள்! அவன் மறப்பானா? இல்லை அவளை மறக்கத்தான் விட்டுவிடுவானா?


நிதானமாக எழுந்து நின்றவன், அவள் உயரத்துக்குக் குனித்து தன் கன்னத்தை அவளது முகத்துக்கு நேராகத் திருப்ப, அவன் எங்கு வருகிறான் என்பது விளங்க, தடுமாறிப் போனாள்.


“இல்ல தாமு, நான் போய் குளிச்சு ரெடி ஆகி வரணும், இத அப்பால பாத்துக்கலாமே!” என அவள் பின்வாங்க,


“இதெல்லாம் செல்லாது, சொன்ன சொல்லு மாறாதவதான நீயி, அப்பால ஏன் இப்படி பேக் அடிக்கற, ஃபர்ஸ்ட் வேர்ட் மை” என அவன் கராராக வசூல் வேட்டையில் இறங்க, கண்களை இறுக மூடிக்கொண்டவள் வேகமாக அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.


“வெனமஸ்… வைஃப்…” என அவன் ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாகச் சொல்லச் சொல்ல, மூடிய விழிகளை அவள் திறக்கவே இல்லை.


அடுத்த வார்த்தைக்காக அவள் காத்திருக்க, அதை அவன் சொல்லாமல் போக, மெள்ள விழிகளை அவள் திறக்கவும், “ஐ” என அவன் முடிக்கவும் சரியாக இருக்க, அவசரமாக அவள் இதழ் பதிக்க, இம்முறை அம்முத்தம் முற்றுப்பெற்ற இடமோ அவனது இதழ்களாகிப்போனது, அவன் செய்த தந்திரத்தால்.


பதறி அவனைத் தள்ளியவள், தீயாக அவனை முறைத்து வைக்க, முக்குளித்துக் குளிர்ந்திருந்தவனோ, “கூல், கூல், மை வெனமஸ் பொண்டாட்டி, தெரியாம நடந்துபோச்சு, இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக்கூடாது” எனக் கொஞ்சல் மொழி பேச, “ரொம்ப ஓவரா போற தாமு” என்றாள் கடுப்புடன்.


“சரி இத வுடு, உன்னோட அடுத்த பிளான் என்ன, அத சொல்லு மொதல்ல, அதுக்கு நான் பிரிப்பேர் ஆவணும் இல்ல?” என்று அவன் பேச்சை மாற்ற, “என்ன, இன்னாத்த பத்தி கேக்கற நீ” எனத் தடுமாறினாள்.


“என்ன, ஏதோ மேல் படிப்புக்கு அப்ளை பண்ற, அதான? இந்த தடவ எவ்வளவு நாளு, மூணு வருஷமா? இல்ல அஞ்சு வருஷமா? எந்த கன்ட்ரின்னு அதையும் சொல்லிடு, நானும் உங்கூடவே வந்துட்றேன்” என்றான் சற்றுக் கொதிப்பாகவே.


“அதெல்லாம் எதுவும் இல்ல தாமு, நீ பாட்டுக்கு எத்தையானா கற்பன பண்ணிக்காத” என உள்ளே போன குரலில் பதில் கொடுத்தவள், “நாம்போயி, குளிச்சி ரெடி ஆகி வரேன்” என்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.


“ஒன்னியும் தேவையில்ல, நம்மூட்டுல பாத்ரூம் இல்லையா? இங்கயே குளிச்சிட்டு ரெடி ஆவு. ப்ரேக் பாஸ்ட்டுக்கு அம்மா ஏதாவது டிஃபன் செய்யும், துன்னுட்டுப் போவலாம்” என்று அவன் முடிவாகச் சொன்னான். 


அவனை முறைத்தபடியே அவனைத் தள்ளிக்கொண்டு அவள் செல்ல எத்தனிக்க, “ஏய், நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்குப் போயிட்டே இருக்க! அவ்ளோ தேனவெட்டாடி உனக்கு” என அவன் சீர, “தோ பாரு தாமு, இப்படி ஓவரா அதிகாரம் செய்யற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத” எனப் பதிலுக்கு எகிறியவள், “அத்தைக்கு எதுனா ஒத்தாச செய்யலாம்னுதான் போறேன், முடிச்சிட்டு வந்து ரெடி ஆவரேன், அங்கயும் பின்னாலயே வந்து என் உசுர எடுக்காத” என்றபடி அவள் படி இறங்கினாள். 


“நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவடீ… யாரு யார் உசுர எடுக்கறாங்க, நீயா இல்ல நானா?” என அங்கிருந்தபடியே குரல் கொடுத்தான், கோபமாகவெல்லாம் இல்லை, கொஞ்சலும் கெஞ்சலுமாகத்தான். அவளும் ஒரு புன்னகையுடனேயேதான் கீழே இறங்கிச் சென்றாள்.


அவள் போய் கீழ் வீட்டிற்குள் நுழையும் வரை பொறுத்திருந்தவன் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, அங்கே இருந்த அவனது கணினியை உயிர்ப்பித்து வைஃபையின் பயன்பாட்டு விவரங்களை ஆராய்ந்தான். அது அவனது பார்வையை ஏமாற்ற அவனுடைய மனதிற்குள் துளிர்த்த சந்தேகம் சரியென்று பட்டது.


உடனே கைப்பேசியை இயக்கி விக்ரமை அழைக்க, “பரவாயில்ல மாமா, சேதாரம் எதுவும் இல்லாம உருப்படியா நடமாடிட்டு இருக்க போலிருக்கு” என்றபடி அழைப்பை ஏற்றான் அவன். 


“மவனே வாங்கப்போற” என்றவன், “எனக்கு அர்ஜன்ட்டா டீ.பீய மீட் பண்ணுமே, ஏற்பாடு பண்ண முடியுமா?” என்று கேட்டான் தாமோதரன். 


“என்ன மாமா ஷாக் குடுக்கற? எவ்வளவு பெரிய டீலிங் எல்லாம் முடிச்சிருகோம், அப்பல்லாம் கூட நீ இப்படி கேட்டதில்லையே” என ஒரு சிறு மௌனத்திற்குப் பிறகே அவனிடமிருந்து பதில் கேள்வி வந்தது. 


அதிலிருந்தே அவனது அதிர்வு புரிய, “இல்ல மச்சான், மேட்டர் கொஞ்சம் பெரிசு! ஃபோன்ல எதையும் சொல்ல முடியாது, நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம். அதுக்குள்ள நீ விசாரிச்சு சொல்லு” என்று சொல்ல, “ஓகே, டன்’ என முடித்துக்கொண்டான் விக்ரம்.


தீவிர யோசனையோடே குளித்து தயாரானான் தாமோதரன். சில நிமிடங்களில் மங்கை வந்து கதவைத் தட்ட, திறந்தவன் அவளை உள்ளே விட்டுவிட்டுத் தான் கீழே சென்றுவிட்டான். எளிமையாகத் தயாராகி அவளும் வந்துவிட, குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டு முடிக்க, மகனையும் மருமகளையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனாள் புஷ்பா.


உண்டு முடித்து வெளியில் வர, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து அவளுக்கு அருகில் நிறுத்தினான் தாமு.


“ஏன் தாமு, கார எடுத்திருக்கலாமில்ல” என அவள் நல்ல பிள்ளை போலக் கேட்டுப் பார்க்க, “நாலு தெரு தள்ளி இருக்கற கோவிலுக்கு எதுக்கு காரு? வெயில் ஏற ஆரம்பிச்சிடுச்சு, இல்லன்னா பேசிட்டே காலாற நடந்து கூட போயிருக்கலாம்” என அவனுமே நல்லவன் போல பதில் கொடுக்க, அதற்கு மேல் மறுத்து ஏதும் பேச இயலாமல் அவனுடன் கிளம்பினாள் மங்கை.


‘சரியான வில்லன், கார்ல இட்னு வரும்ன்னு நம்பி கெளம்பி வூட்டு வாசலுக்கு வந்தா, புல்லட்ட கொண்டாந்து நிறுத்துது. இந்த அத்தையும் கெழவியும் வேற தெரு வரைக்கும் வந்து டாட்டா காமிக்குதுங்க. போறாத கொறைக்கு, அக்கம்பக்கத்து வூட்டுப் பக்கிங்க வேற, எட்டி எட்டிப் பார்த்துகினு… ஊர் வம்புக்குன்னே அலையுதுங்க’ என மனதிற்குள்ளேயே புலம்பியபடி அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்தாள். 


தீவிர யோசனையில் இருக்கவே அவளிடம் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அவன் வாகனத்தைச் செலுத்த, திடீரென்று அவனுடைய வைஃபையின் பாஸ் வேர்ட், குறிப்பாக வெனமஸ் என்கிற வார்த்தை நினைவில் வந்து மண்டைக்குள் குறுகுறுக்க, “தாமு, ஒரு டவுட்டு, வண்டிய கொஞ்சம் ஓரமா நிறுத்தேன்” என்றாள். 


வீதியின் ஓரமாக இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவன் காலை ஊன்றி நிற்க, இறங்கி வந்து அவனது முகம் பார்த்து நின்றவள், “அது என்ன தாமு, உன் வைஃபை பாஸ் வேர்ட்ல வெனம்..ன்னு வெச்சிருக்க” என்று கேட்டாள் கொஞ்சமும் சுற்றி வளைக்காமல்.


“வெனம் இல்லையே, மை வெனமஸ் வைஃப் ஐ…ன்னுதான வெச்சிருக்கேன்” என்றான் அவளது ஆர்வத்தை மிகைப் படுத்தி.


“படுத்தாத தாமு” என்று அவள் சலிக்க, 


“ப்ச்… என் பொண்டாட்டி ஒரு விஷம்னு அர்த்தம், இது கூட புரியலியா?” என்று அவளை மேலும் சீண்டிப் பார்த்தான். 


“இல்ல... வெனம், உனக்கு பிடிச்ச ஆத்தர்தான அவங்க? முந்தாநாளு அவங்கள நீ என்னன்னு சொன்ன, அமுதம்னுதான? இதுல ஏதோ உள்ளர்த்தம் இருக்குன்னு படுது, உள்ளது உள்ளபடி சொல்லு தாமு” என அவள் வற்புறுத்த,


“லூசு, அவங்களுக்கும் இதுக்கும் எந்த கனெக்ஷனும் இல்ல” என்று அவளுடைய அதீத கற்பனையை எண்ணி சிரித்தவன், “அது இருக்கட்டும், நீ விஷக் கன்னிகள பத்தி கேள்விபட்டிருக்கியா மங்க?” எனக் கேட்டபடி வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவளருகில் வந்து நின்றான்.


‘இல்லை’ என அவள் தலை அசைக்க, அந்தக் காலத்துல எதிரிகளை அழிக்க, பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் விஷக் கன்னிகைகள உருவாக்கி வெச்சிருப்பாங்களாம். சின்ன குழந்தையா இருக்கும் போதுல இருந்தே பெண் கொழந்தைங்களுக்கு ரொம்ப மினிமம் டோசா பாம்போட பயங்கரமான விஷத்தைக் குடுத்து, கூடவே அதுக்கு மாத்து மருந்தையும் குடுத்து அவங்கள முழுசா விஷம் உள்ளவங்களா மாத்திருவாங்க. இதுல நிறைய கொழந்தைங்க இறந்து போயிடுவாங்க. ரொம்ப அதிகமா இம்யூனிட்டி இருக்கறவங்க மட்டும் பிழைச்சு விஷக்கன்னியா மாறிடுவாங்க. தேசப் பக்தி முத்திப் போய், பெத்தவங்க குழந்தைகளை இப்படி வளர்க்க அரசாங்கத்துக்குக் கொடுத்துடுவாங்க, இதைப் பத்தி சாணக்கியர் அவரோட அர்த்தசாஸ்த்திரம்ன்ற புக்ல விளக்கமா எழுதி இருக்காரு” எனக் கதை போல் அவன் சொல்லிக்கொண்டே போக, “ம்ம்..” என அதிர்ச்சியும் ஆர்வமுமாகக் கேட்டு நின்றாள்.


“இவங்க குடிச்சிட்டு வெச்ச எச்சில் கிளாஸ்ல குடிச்சா, ஒருத்தங்க மேல இவங்க எச்சில் பட்டாலோ, இல்லன்னா காலைல நீ பண்ணியே அந்த மாதிரி கிஸ் பண்ணாலோ, இவங்க கூட செக்ஸ் வெச்சிட்டாலோ, இன்னும் சொல்லப்போனா சமயத்துல இவங்க லேசா தொட்டா கூட சாவு நிச்சயம்” என்று அவன் சொல்ல, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. 


“அது மாதிரி எனக்கு நானே உருவாக்கி விட்டுட்ட விஷக்கன்னி நீ… ஒரே ஒரு நாளானாலும் உன் கூட வாழ்ந்து உயிரை விட்டுட்டா கூட எனக்கு போதும் மங்க, அந்த அளவுக்கு நீ என்னை முழுசா மோகினி பிசாசு மாதிரி பிடிச்சி ஆட்டிட்டு இருக்க.” என்று முடித்தவன், அவன் கொடுத்த விளக்கத்தில் உறைந்து போய் நின்றவளைச் சூறாவளியாகச் சுழற்றி தன் கை வளைவுக்குள் சிறைப் பிடித்தான் தன் கட்டுப்பாடுகளை முற்றிலும் இழந்தவனாக. 


சூழ்நிலை உணர்ந்து உதறி விலகும் நேரத்திற்குள் அவளிதழில் விஷமருந்தி, உடனே அவளை விட்டு விலகிய நொடி ஒன்று மட்டும் அவனுக்குப் புரிந்தது, இந்த விஷம் மட்டுமே அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று. 


அவனை விட்டு விலகி, “ஏன் தாமு, அந்தப் பொண்ணுங்களோட விருப்பு வெறுப்பு பத்தி ஏதாவது எழுதி வேச்சிருகாரா அந்த சாணக்கியரு? அப்படி எதுவும் இருக்காதில்ல, இப்ப நீ செஞ்ச மாதிரிதான அவங்களும் அந்தப் பொண்ணுங்களுக்கு செஞ்சிருப்பாங்க?” என உணர்வற்ற குரலில் அவள் கேட்ட கேள்விக்குப் பதில்சொல்லும் நிலையிலெல்லாம் அவன் இல்லை என்பது மட்டுமே அந்த நொடி அவள் உணர்ந்த உண்மை.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page