Nilamangai - 1
Updated: Dec 27, 2022
நிலமங்கை-1
நினைவுகளில்...
ஆதவனின் கிரணங்கள் மிக மிக மென்மையாக நில மடந்தையை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இளம் காலை நேரமது.
சற்று தூரத்தில் ஒரு ட்ராக்டர் இயங்கும் படபடவென்ற ஒலி மெல்லியதாகக் கேட்டுக்கொண்டிருக்க, நன்கு உழுது பதப்பட்டிருந்த நிலத்தில் சீரான இடைவெளியில், முதுகை நன்கு வளைத்து குனிந்தவண்ணம் பெண்டிரெல்லாம் நெல் நாற்றுகளை நடவு செய்துகொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான் பூஜை போட்டு நடவை தொடங்கியிருப்பார்கள் போலும். மிகச் சிறிதளவேதான் நாற்றுகள் நடப் பட்டிருந்தன.
புடவை அணிந்த பெண்களுக்கு இடையிடையே சில பாவாடை தாவணி பெண்களும் கலந்திருக்க, ஒருவரைப்போல அனைவருமே ஆண்கள் அணியும் சட்டையை மேலே அணிந்திருந்தனர்.
அந்த சிறு குழுவுக்குள் ஒருத்தியைத்தான் தேடிக்கொண்டிருந்தன வரப்பின் மீது வந்து நின்ற தாமோதரனின் கண்கள்.
அப்பொழுதுதான் நடுவிலிருந்து கணீரென்று ஒலித்தது அவன் தேடிய அவனது நிலமங்கையின் இனிமையான குரல்.
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...
ஈசானி மூல பார்த்து... மொழுகி மாக்கோலமிட்டு...
மஞ்சளிலே பிடிச்ச பிள்ளையாரை முன்ன வெச்சு...
மூணே மூணு கைப்பிடி நாத்த...
எண்ணி எண்ணி எடுத்து வெச்சு...
என இன்ய நாட்டுப்புற பாடலொன்றை அவள் பாடத் தொடங்க, அதை அப்பிடியே லாவகமாக பிடித்து, தொடர்ந்து பாட ஆரம்பித்தனர் மற்ற பெண்டிரெல்லாம்.
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...
ஈசானி மூல பார்த்து... மொழுகி மாக்கோலமிட்டு...
மஞ்சளிலே பிடிச்ச பிள்ளையாரை முன்ன வெச்சு...
மூணே மூணு கைப்பிடியாம் நாத்த எண்ணி எடுத்து வெச்சு...
அருகம்புல்லு பூவோட பூஜை செஞ்சோம், பூஜை செஞ்சோம்...
தொந்தி கணபதியே தொண நிக்க வேணுமய்யா!
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...
ஏழே ஏழு செங்கல்ல எண்ணி எண்ணி எடுத்து வெச்சு...
தண்ணியில நீராட்டி பசு மஞ்சள் பூசி வெச்சு...
குங்குமத்தில் பொட்டும் வெச்சு கூட பூவில் சிங்காரிச்சு...
பூஜை போட்டு தொடங்கி வெச்சோம்,
பிராம்மி... மகேஸ்வரி... கவுமாரி... வைஷ்ணவி... வராகி... இந்திராணி... சாமுண்டி...
ஏழு கன்னிமாரும் வந்து எங்க கொலங்காக்க வேணுமம்மா...
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...
இந்த உலகத்து உசுரையெல்லாம் உமக்குள்ள வெச்சிருக்கும்...
நிலம்... நீர்... வானம்... காத்து... அக்கினியாம்...
அஞ்சு சாமிமாரும் வந்து எங்க பயிர் காக்க உதவுமய்யா...
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...
கட்டு கட்டா கட்டி வெச்ச நாத்தெல்லாம் காத்திருக்கு...
குலவையிட்டு பொண்ணுகல்லாம் ஒண்ணா சேர்ந்து நட்டு முடிப்போம்...
தன்னானே தான...னன்னே...
தன்னானே தான...னன்னே...