top of page

Nee Sonna Oor Vaarthaikaga! 7

Updated: Mar 17, 2023

பகுதி - 7


"அவளைப் பார்த்தியா ஹரி!! இன்னும் ஒரு குழந்தை மாதிரியே இருக்கா. அவ நல்லா இருந்தா அதுவே எங்களுக்குப் போதும்! இப்ப இருக்குற இதே மன நிலையோட காலம் முழுக்க இவளை நீ சந்தோஷமா வச்சுப்பன்னா, நான் உன் காதலுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்!


அவ படிச்சு முடிக்கற வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையாய் இரு. அதுக்குள்ள நீயும் செட்டில் ஆயிட்டன்னா, நானே நந்தாகிட்ட சொல்லி அவங்க வீட்டுல பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்" என்றான் பாலு ஸ்வேதாவைப் பார்த்தபடியே.


"நிச்சயமாடா மச்சான்" என்று நண்பன் தன்னைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொண்டான் ஹரி.


அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வரவே பெண்கள் இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சாப்பிடத் தொடங்க, "பாலுண்ணா இந்த ஹரி அண்ணாவைப் பார்த்தீங்களா? ஸ்வேதாவுக்கு என்னலாம் பிடிக்கும்ணு தெரிஞ்சு வச்சிருக்காங்க" என்று வர்ஷினி சொல்ல, அதே நேரம், ஒரு வேகத்தில் மிகவும் சூடாக இருந்த சூப்பை ஸ்வேதா சாப்பிட்டுவிட அது அவள் நாக்கை நன்று பதம் பார்த்தது.


"ஸ்ஸ்ஸ்!" என்றவள் சூடு தாங்காமல் தவிக்க, அருகிலிருந்த குளிர் நீரை அவளிடம் நீட்டிய பாலு, "நீ என்ன சின்னக் குழந்தையா ஸ்வேதா? கொஞ்சம் பார்த்து சாப்பிடக்கூடாது?" என்று அவளைக் கடிந்து கொள்ள,


"டேய் மச்சான் இப்பதானடா நீ அவளை குழந்தைன்னு சொல்லிட்டு இருந்த, அதுக்குள்ள இப்படி மாத்தி மாத்திப் பேசற?" என்று ஹரி அவன் காதில் கிசுகிசுத்தான். வந்த சிரிப்பை அடக்க முடியாமல் பாலுதான் தவிக்க வேண்டியதாயிற்று.


மறுபடியும் வர்ஷினி ஏதோ பேச வர, பேசாதே என பாலு ஜாடை செய்ததில் அவள் வாயை மூடிக்கொண்டாள்.


பிறகு உணவு உண்டு முடித்து அதற்கான பணத்தைச் செலுத்திவிட்டு, கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஓய்வாக அமர்ந்தவாறு கதை பேசத் தொடங்கினர் நண்பர்கள் நால்வரும்.


கடல் அலைகள் எழுப்பிய ஓசையைத் தவிர வேறு சப்தங்கள் இல்லாமல் அந்த இடமே ஆள் அரவமற்று மிக அமைதியாக இருந்தது. "நீ நல்லா பாடுவ இல்ல, இப்ப ஒரே ஒரு பாட்டுப் பாடேன், ஸ்வேத்" என்று ஹரி கேட்க,


“நீங்களும் பாடுவீங்கதான? முதல்ல நீங்க ஒரு பாட்டு பாடுங்க, அதுதான் உண்மைல நீங்க எனக்குக் கொடுக்கற பர்த் டே கிஃப்ட், அப்பறம் நான் பாட ட்ரை பண்ணறேன்!" என்று அவனை மடக்கினாள் ஸ்வேதா.


‘பர்த் டே கிஃப்ட்’ என்று அவள் கேட்டதனால் மறுக்கத் தோன்றாமல் ஹரியும் பாடத் தொடங்கினான் அந்தப் பாரதியின் பாடலை.


காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;


காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்… என்று.


அவன் பாடி முடிக்கும் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாய் இரசித்திருந்தனர் மற்ற மூவரும். ஸ்வேதா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.


"அப்பா... என்னமா படறீங்க ஹரி! இந்தப் பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியாது!” என்று அவள் சொல்லவும், ‘எனக்கா தெரியாது’ என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டான் ஹரி.


"எல்லாத்தையும் விட, த பெஸ்ட் பர்த் டே கிஃப்ட் எனக்கு இதுதான்" என்று குதூகலித்தாள் ஸ்வேதா. அதே நேரம் சற்றுத் தொலைவில் போய் நின்று கடலை வெறிக்கத் தொடங்கினாள் வர்ஷினி.


அவள் எழுந்து போவதைப் பார்த்து பாலு அவளின் அருகில் வர, "ஸ்வேதா ரொம்ப லக்கி இல்ல பாலுண்ணா? ஹரி அண்ணா அவளை லவ் பண்றாங்கன்னு நினைக்கறேன்! இந்தப் பாட்டு அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? உண்ணி கிருஷ்ணன் வாய்ஸ்ல இதை அவ ஃபோன்ல சேவ் பண்ணி வச்சிருக்காண்ணா. ரிப்பீட்ல போட்டுக் கேட்டுட்டே இருப்பா! இதெல்லாம் எப்படி ஹரி அண்ணா நோட் பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்!”


”அவளோட இஷ்ட தெய்வம்! அவளுக்குப் பிடிச்ச கலர் காம்பினேஷன்ஸ்! அவளுக்குப் பிடிச்ச ஃபுட் ஐட்டம்ஸ்! ஐஸ்கிரீம் ஃபிளேவர்! எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க! சான்ஸே இல்ல!" என்று நெகிழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டே தூரத்திலிருந்தே ஸ்வேதாவைப் பார்த்தபடி,


"அவளுக்கு இதெல்லாம் புரிஞ்ச மாதிரியே தெரியலையே" எனக் கவலையுடன் வர்ஷினி சொல்ல, “பரவாயில்ல வர்ஷி, இதுவும் நல்லதுக்குதான். அவசரப் பட்டு நீ அவகிட்ட எதுவும் சொல்லி வைக்காதே" என்ற பாலு, ஹரியிடம் பேசியது அனைத்தையும் சொல்லி முடித்தான்.


பிறகு இருவரும் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றனர்.


"இதுக்கு மேல என்னால பாட முடியும்ணு தோனல ஹரி, நான் இன்னொரு நாள் படறேனே ப்ளீஸ்” என்று ஸ்வேதா சொல்லிவிட அவளை யாரும் வற்புறுத்தவில்லை. ஆனால் ஹரிக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.


நான்கு பேரும் சேர்ந்து கடல் அலைகளின் முன் நின்றவாறு செலஃபீ ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த நாள் தந்த இனிமையை மனதில் சேகரித்தவாறு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.


***


அதற்குப் பின் வந்த நாட்கள் அவர்களுக்கு தேர்வு விடுமுறை அதைத் தொடர்ந்து தேர்வுகள் என இறக்கைக் கட்டிப் பறந்தது.


அதிகம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட சந்தர்ப்பம் அமையவில்லை.


அதன்பின் விடுமுறை தொடங்கி விட பாலு கோவை சென்றுவிட்டான்.


வங்கிக் கடன் முழுவதும் கிடைத்துவிட, ஹரி அவனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக விடுமுறை முழுவதையும் பயன்படுத்திக் கொண்டான்.


இதற்கிடையில் நந்தாவும் பயிற்சி காலம் முடிந்து சென்னையிலேயே வேலையில் சேர்ந்திருந்தான்.


***


அடுத்த ஆண்டு தொடங்கியதிலிருந்து ஹரி கல்லூரிக்கு வீட்டிலிருந்தே வரத்தொடங்கினான். பயண நேரம் அதிகமாயிருந்தாலும் நிறுவனத்தைக் கவனிக்கும் பொருட்டு அவன் அந்த முடிவை எடுத்திருந்தான்.


அவன் எப்பொழுதாவதுதான் ஸ்வேதாவையும், வர்ஷினியையும் சந்திக்கச் செல்வான். பெரும்பாலும் மதிய உணவையும் வகுப்பறையிலேயே முடித்துக்கொள்வான்.


அந்த நேரத்தையும் பயண நேரத்தையும் அவன் படிக்க உபயோகப்படுத்திக் கொண்டான். மற்ற எந்த விஷயமும் தன்னைப் பாதிக்காதவாறு முழுவதுமாகப் படிப்பு தொழில் என்று ஹரி தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.


ஹரியின் செயல்பாடுகள் எல்லாம் பாலு நன்கு புரிந்து வைத்திருந்தான். ஹரி ஸ்வேதா இருவருடனுமே சரிசமமாக மாறி மாறிக் கிடைக்கும் நேரத்தைப் பகிர்ந்துகொண்டான், நல்ல அண்ணனாகவும் நல்ல நண்பனாகவும்.


***


ஸ்வேதாவை சந்தித்து சில வாரங்கள் ஆகியிருந்த நிலையில் ஒருநாள் வாகன நிறுத்தத்தில் இருக்கும் கல் மேடையில் அமர்ந்து ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான் ஹரி. அவள் அங்கே முதலாம் ஆண்டு எம்.ஈ. சேர்த்திருக்கும் மாணவி.


"என்ன ஹரி உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்குனு பேசிக்கறாங்க, உண்மையா?" என்று ஆர்வமாகக் கேட்பது போல் அவள் கேட்க,


அவளுடைய பதைபதைப்பு வெளிப்படையாகவே தெரிய, "ஆமாம் நேஹா! உங்களுக்கு யார் சொன்னாங்க?" என கேட்டான் ஹரி.


"கிளாஸ்ல கேர்ள்ஸ் எல்லாரும் பேசிக்கிறாங்க" என்றாள் அந்த நேஹா துயரம் மேலிட. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் ஸ்வேதா.


"ஹாய்... ஹரி, ரொம்ப பிஸி போலிருக்கு" என்றவாறே அவன் அருகில் நெருங்கி உட்கார்ந்துகொண்டு, "இந்த அக்கா யாரு? உங்க புது ஃப்ரெண்டா?" என்று அவள் கேட்ட அடுத்த நொடி, "ஓகே! ஹரி! அப்பறம் பார்க்கலாம் பை" என்று நழுவி ஓடினாள் அந்தப் பெண் ஸ்வேதாவை முறைத்துக்கொண்டே!


அடக்கப்பட்ட சிரிப்புடன் ஸ்வேதாவைப் பார்த்து, "வந்த வேலை முடிஞ்சுதா?" என்று ஹரி கேட்க,


“என்ன, கிண்டலா? உங்க ப்ரைவசிய கெடுத்துட்டதா நினைச்சு அவ ஓடினா, அதுக்கு நானா பொறுப்பு” என முறைத்தவள்,


"அது, உங்களுக்குத்தான் புது புது ஃப்ரெண்ட்ஸ்லாம் கிடைச்சுட்டாங்களே! நாங்களெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிவோமா? உங்களுக்குக் கல்யாணம் வேற முடிவாகி இருக்கு. அதைக்கூட எங்க கிட்ட சொல்லணும்னு தோனல!" என்று படபடவெனப் பொரியத் தொடங்கினாள்.


‘அடிப்பாவி எனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்குன்னு கேள்விப்பட்டு இந்தப் பொண்ணு என்ன டென்ஷன் ஆகி வந்திருக்கு? நீ என்னடான்னா உங்கிட்ட சொல்லலன்னு சண்டை போடற, எல்லாம் என் நேரம்" என உள்ளுக்குள்ளே பொருமியவனுக்கு சுள்ளென்று கோபம் வர,


"எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட யார் சொன்னாங்க இப்ப?" என்றான்.


அதில் திடுக்கிட்டவள், "இப்ப நீங்கதானே அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிட்டு இருந்தீங்க" என்று சந்தேகமாக ஸ்வேதா இழுக்க,


"நான் உங்கிட்ட சொன்னேனா? உன்கிட்ட சொல்ற விஷயத்தைப் பத்தி மட்டும் என்னைக் கேள்வி கேளு, நான் யார் யார்கிட்டயோ எதுவோ சொல்றதுக்கெல்லாம் என்னைக் கேள்வி கேட்காத என்ன" என்று அவன் கோபமாக முடிக்க,


"அப்ப ஏன் அப்படி சொன்னீங்க?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க, கோபம் போய் அவனுக்கு சிரிப்பே வந்து விட்டது.


"அதைப் போய் உன் அருமை அண்ணங்கிட்ட கேளு" என்று ஹரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இதைக் கேட்டுச் சிரித்தவாறே அங்கே வந்தான் பாலு.


"ஹேய் லூசு இங்க ஒரு செட் ஆஃப் கேர்ள்ஸ் இருக்காங்க, பாடத்துல ஏதாவது சந்தேகம்னு சும்மா வந்து இவனை மொக்கைப் போடுறதே அவங்களுக்கு வேல, இவனே நேரத்தைக் கொஞ்சம் மேனேஜ் பண்ணித்தான படிக்கறான், அதனாலதான் நான் சும்மா அப்படிச் சொல்லி வச்சேன். இப்ப ப்ராப்ளம் சால்வ்ட்!" என்று பாலு சட்டை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள,


ஸ்வேதாவோ, "பாவம் பாலு அண்ணா அந்தப் பொண்ணுங்க. பாடத்துல சந்தேகம் கேட்டா சொல்லித்தரலாம்ல? எதுக்கு இப்படி பண்ணனும்? ஆமாம் இவருக்குக் கல்யாணம்னு சொன்னா அந்தப் பொண்ணுங்க ஏன் ஓடணும்" என்ற அவளது சந்தேகங்களை ஒவ்வொன்றாய் அடுக்க, சிரித்தேவிட்டான் ஹரி.


"பாலு இந்த டியூப் லைட்ட இங்கேந்து இழுத்துட்டுப் போடா, என்னால முடில" என்றவனை எரிப்பது போல் பார்த்து,


"என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கறாரு உங்க உயிர் நண்பர்?" என நொடித்து,


"வாங்க பாலுண்ணா நாம போகலாம்" என்றவாறு அவனது பைக்கை நோக்கிப் போனவள், மறுபடியும் ஹரியை நோக்கி வந்து,


"ஹரி! நீங்க வேணா ஒண்ணு செய்ங்க. உங்ககிட்ட டவுட் கேக்கறாங்க இல்ல, அந்தப் பொண்ணுங்களையெல்லாம் என்கிட்ட அனுப்புங்க. நான் அவங்க டவுட்ஸ் எல்லாத்தையும் தெளிவா கிளியர் பண்றேன்" என ஸ்வேதா மிகவும் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும்,


ஹரியை பார்த்து, ‘பாவம்டா நீ!’ என்று ஜாடைக் காட்டியவாறே அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் பாலு.


***


நாட்கள் அதன் போக்கில் இனிமையாய் நகர டிசம்பர் மாதம் தொடங்கி இருந்தது. ஹரியின் பிறந்தநாள் அந்த வாரத்தில் இருந்ததால் மற்ற மூவரும் அதைப் பற்றி திட்டமிடத் தொடங்கியிருந்தனர். தொடர் மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.


இரவு நேரம் ஹரி வீட்டில் படித்துக்கொண்டிருந்த சமயம் அவனது கைப்பேசி ஒலித்தது. அவனது அக்கா கபிலா அழைத்திருந்தாள்.


"ஹாய் அக்கா! எப்படி இருக்க, மழையெல்லாம் எப்படி இருக்கு?" என ஹரி உற்சாகத்துடன் அவளை நலம் விசாரிக்க,


"ஐ ஆம் ஓகேடா ஹரி! ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்" என்றவளின் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு தானும் பதறியவன்,


"மாமா நல்லாத்தானே இருக்காங்க?” என்று படபடத்தான்.


"ப்ச்சு... எங்களுக்கு ஒண்ணுமில்ல, ரிலாக்ஸ்” என்றவள், “எனக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட்...டா ஹரி, ஜீ.ஹெச்ல தான் இருக்கேன். இங்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்திருக்காங்கடா, ஆக்ஸிடன்ட்ல அடிப்பட்டு மயக்கமா இருக்கா! அவ உன்னோட ஃப்ரெண்ட்ணு நினைக்கறேன்! அவளோட ஃபோன் டிஸ்ப்ளேல இருக்கற போட்டோல, அவ பக்கத்துல் நீயும் நின்னுட்டு இருக்க! அதனாலதான் உன்னைக் கூப்பிட்டேன்! அவளோட சிம் ஆக்சிடன்ட் நடந்த இடத்துல மிஸ் ஆகியிருக்கும்னு நினைக்கறேன்.


ஃபோனை பாஸ்வோர்டு போட்டு லாக் பண்ணியிருக்கா. நீ கொஞ்சம் வந்தா அவ வீட்டுக்குத் தெரியப்படுத்தலாம்" என்று மூச்சுவிடாமல் கபிலா சொல்லவும், அதிர்ந்தான் ஹரி.


அவனுக்கு அருகில் நிற்கும் பெண் என்றால் அவள் ஸ்வேதாவேதான் என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது!



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page