top of page

Nee Sonna Oor Vaarthaikaga! 4

Updated: Mar 17

பகுதி -4


ஹரியைப் பொறுத்தவரை, அவன் ஒன்றை நினைத்துவிட்டால், அவனது சிந்தனை செயல் என அனைத்தும் அதை நோக்கியே ஒருமுகப்பட்டிருக்கும்!


அதுபோல், ஒரு செயலில் இறங்கிவிட்டான் என்றால் முழு மூச்சாக அதில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டான். அவனுடைய அந்தக் குணமே படிப்பிலாகட்டும், பங்குபெறும் போட்டிகளிலாகட்டும் அவனை முதல் இடத்தில் வெற்றிப் பெறச் செய்தது.


ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணன் தனது சொந்த முயற்சியால் ஆர்.கே. என்டர்ப்ரைசஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். அம்மா விஜயா ஒரு அன்பான குடும்பத்தலைவி. இனிமையாகப் பாடுவார். கணவர் மற்றும் குழந்தைகளே உலகம் என்று வாழும் ஒரு வெகுளியவர்.


ஒரே ஒரு சகோதரி, மருத்துவர். சமீபத்தில்தான் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கிறார். அவருடைய கணவரும் ஒரு மருத்துவர்தான்.


ஹரி அவனுடைய அப்பாவிற்கு அவ்வளவு செல்லம்! அவரும் அவனை ஒரு நண்பனைப்போலதான் நடத்துவார்.


சமீபமாகவே தொழில் சார்ந்த கருத்து வேறுபாடுகளால் பனிப்போர் மூண்டிருந்தது இருவருக்குள்ளும்.


இதுவரையிலும் கூட மகன் ஒன்று சொல்லி அவர் அதை மறுத்ததே இல்லை. அதுபோல்தான், அவனது அப்பா ஒன்றைச் சொல்லிவிட்டார் என்றால் ஹரியால் அதை மீறவே முடியாது. அவரிடம் அவ்வளவு அன்பும் மரியாதையும் அவனுக்கு உண்டு


இருவரில் யாருடைய கருத்து முதலில் சொல்லப்படுகிறதோ அதுவே செயல்வடிவம் பெரும். பல சமயங்களில், முதல் வார்த்தை யாருடையது என்ற போட்டியே வந்துவிடும் இருவருக்கும். அந்தக் கூற்றின்படி ராதாகிருஷ்ணன் முந்திக் கொண்டதால்தான் ஹரி மறுக்க முடியாமல் எம்.ஈ. சேர வேண்டியதாக ஆகிப்போனது.


ஒரு ஆர்வமேயின்றி, தன் தந்தைக்காக கல்லூரி வரத் தொடங்கியவனை முழு ஆர்வத்துடன் தனக்காகக் கல்லூரிக்கு வரச் செய்திருந்தாள் ஸ்வேதா.


எது எப்படியோ அவனது தந்தையின் தொழிலை முயன்று பார்க்கலாம் என்றுதான் நினைத்தானே தவிர முழுமனதுடன் அவனால் அதில் ஈடுபடமுடியுமா என்று அவனுக்கே தெரியவில்லை.


தனது வெளிநாடு வாழ் ஆசையைத் துறக்கவும் அவனுக்கு மனமில்லை. மேலும் ஒன்றரை வருடப் படிப்பு மீதம் இருப்பதால் பக்குவமாக ஸ்வேதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி அவளது மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஓர் ஓரத்தில் இருக்கவே செய்தது.


அதற்கு முன் ஒரு முறை அவர்கள் தொழிற்சாலைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அவ்வளவுதான்.


அவன் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கிய பின், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை என்றால் திருவள்ளூர் சென்றுவிடுவான் ஹரி.


எக்காரணம் கொண்டும் ஃபேக்டரிக்கு வரும்படி அவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அப்பாவிடம் அவன் முன்பே சொல்லியிருந்த காரணத்தினால் அவர் அவனை அங்கு அழைப்பதும் இல்லை. தொழில் பற்றி அவனிடம் எதுவும் பேசுவதும் இல்லை.


இந்த முறை சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே வெள்ளி மதியமே கிளம்பி அவன் நேராகப் போய் நின்றது அவர்களுடைய தொழிற்சாலைக்குதான்.


வெறும் எழுபதுபேர் மட்டுமே வேலை செய்யும் தொழிற்க்கூடமும் அதை ஒட்டிய சிறிய அலுவலகமும் அங்கே அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.


அதனுள்ளே நழைந்ததும் அவன் கண்ட காட்சி அவன் மனதை மிகவும் நெகிழ செய்துவிட்டது.


தான்தான் அங்கே முதலாளி என்கிற தோரணையெல்லாம் இல்லாமல் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து பழுதுபட்டிருந்த ஒரு இயந்திரத்தைச் சரி செய்ய போராடிக்கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.