top of page

Nee Sonna Orr Vaarthaikaga! 3

Updated: Mar 17

பகுதி -3


ஹரி விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே நேரம், அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது. அவனுக்காக ஓட்டுநருடன் காத்திருந்த மகிழ்வுந்தில் ஏறியவன், திருவள்ளுரில் இருக்கும் வீட்டிற்குச் செல்வதை விடக் கிண்டியிலுள்ள அலுவலகத்திற்கே சென்று விடலாம் என முடிவு செய்து அங்கேயே வந்து சேர்ந்திருந்தான். அந்தப் பலமாடிக் கட்டடத்தில் இரண்டு தளங்களில் அவனுடைய அலுவலகம் இயங்கி வந்தது.


அங்கேயே தங்கி வேலை செய்வதற்காகப் பிரத்தியேகமாக ஒரு அறையைத் தனக்காக தயார் செய்து வைத்திருந்தான்.


ரெஃப்ரஷ் செய்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தவனின் நினைவுகள் கடந்த காலதிலிருந்து வெளிவர முடியாமல் அதிலேயே சிக்கிச் சுழன்றன.


***


ஸ்வேதாவுடனான அந்த அறிமுகத்திற்குப் பிறகு, பாலுவுடன் சேர்ந்து ஹரியும் அடிக்கடி அவர்களைச் சந்திக்க வருவான்.


பெரும்பாலும் மதிய உணவு அனைவரும் ஒன்றாகவே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தார்கள். நாட்கள் அதன் வேகத்தில் ஓட, ஹரியும் அவர்களுள் ஒருவனாகிப் போனான்.


ஸ்வேதாவை தன் இதயம் முழுவதிலும் நிறைத்து வைத்திருந்தாலும், நட்பு என்னும் எல்லைக் கோட்டைத் தாண்டி அவளை நெருங்க விரும்பவில்லை ஹரி.


அவள் மற்ற எல்லோரிடமும் எப்படிப் பழகுகிறாளோ அப்படியேதான் தன்னிடமும் பழகுகிறாள் என்பதையும் நன்றாக அறிந்திருந்தான்.


இப்பொழுது போன்றே படித்தாள் என்றால் கோல்ட் மெடல் வாங்கும் வாய்ப்பும் அவளுக்கு உள்ளதால் அவள் மனதைக் குழப்ப அவன் விரும்பவில்லை.


பாலு உடனில்லாமல் தனிமையில் அவளை அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்க முயன்றதுமில்லை. ஆனால், ஒருநாள் அப்படி ஒரு வாய்ப்பு தானாகவே அவனுக்கு அமைந்தது. அந்த நாள்தான் அவனை முழுவதுமாக மாற்றிப்போட்டது.


***


ஒருநாள் மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரம் அவர்களுக்கு அருகில் வராமல், சற்றுத் தூரத்திலேயே நின்றுகொண்டு ஸ்வேதவைத் தன்னருகில் வருமாறு ஜாடை செய்தாள், வசுதா.


அவள் ஸ்வேதாவைத் தனியாக அழைத்ததில் சற்றுக் கோபம் கொண்ட பாலு, "ஏன் மகாராணி நாங்கல்லாம் இருந்தால் இங்க வர மட்டாங்களாமா? ரொம்ப ஓவரா பண்றா" என்று எகிற,


அவளிடம் வருவதாக ஜாடை செய்துவிட்டு, "ஐயோ பாலுண்ணா, அவ நிலமதான் உங்களுக்குத் தெரியும் இல்ல? ப்ளீஸ் கோவப்படாதீங்க. நான் அவகிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்" என்று பாலுவிடம் அவள் சொல்லிவிட்டுப் போக,


"இவ அடங்கவே மாட்டாடா, இவள பார்த்தா மட்டும் நம்மளயே கட் பண்ணி விட்டுட்டுப் போயிடுவா" என்று அவன் ஹரியிடம் அங்கலாய்க்கவும்,


"அவளப் பத்திதான் உனக்குத் தெரியுமில்ல, அந்தப் பொண்ணுக்கு ஏதாவது உதவி தேவையா இருக்கும், அதுதான் போயிருப்பா. நீ விடு மச்சான்" என்று அவனை சமாதானப்படுத்த முயன்றான் ஹரி.


இதையெல்லாம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியோ, "இனிமே ஸ்வேதா மேடம் நேரா கிளாஸுக்குதான் வருவாங்க, நான் போறேன்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட,


"பெருசா ஒண்ணுமில்லடா, இந்தம்மாதான் சரியான படிப்பாளி ஆச்சே! அந்த வசுதா இவகிட்ட லசன்ல ஏதாவது டவுட் கேட்டிருப்பா, ஆனா எதுக்கு இவள தனியா அழைச்சிட்டுப் போகணும்? அதத்தான் கேட்கறேன். இங்க நம்ம முன்னாலயே சகஜமாகக் கேட்கலாமா இல்லையா? காலேஜ் வரும்போதும் சரி திரும்பிப் போகும்போதும் சரி ஸ்வேதாவோட ஒட்டிட்டே திரிவாளாம், ஆனா நம்ம யாரோடவும், ஏன் வர்ஷினியோடக் கூட சகஜமா பேசமாட்டாளாம்! இவ இப்படி இன்சல்ட் பண்றா, ஆனா இவ விஷயத்துல மட்டும் ஸ்வேதா நம்ம பக்கம் இருக்கவேமாட்டா" என புலம்ப,