Nee Sonna Oor Vaarthaikaga! 14
Updated: Mar 17
பகுதி - 14
ஏழு மணிக்கு வந்து சேர வேண்டிய இரயில் மாழையினால் தாமதமாக ஏழு நாற்பதுக்குத்தான் பழவந்தாங்கல் இரயில் நிலையத்தை அடைந்தது!
மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க இரயிலிலிருந்து இறங்கி நடைமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த ஸ்வேதா பத்திரமாக இரயில் நிலையம் வந்து சேர்ந்துவிட்டதாக அண்ணனுக்கு மெசேஜ் செய்துவிட்டு, மழை அதிகரிப்பதற்குள் வீட்டிற்குச் செல்ல முடியுமா? என யோசிக்க, கையில் வைத்திருந்த அவளது கைப்பேசி நழுவிக் கீழே விழுந்து சிதறியது.
சிதறிய பாகங்களனைத்தையும் எடுத்து பொருத்தியவள் மின்வெட்டினால் வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் தனியே போய் விழுந்திருந்த சிம்கார்டை கவனிக்கத் தவறினாள்.
இரயில் நிலையமே வெறிச்சோடி ஆளரவம் இ.ன்றி இருந்ததை அப்பொழுதுதான் உணர்ந்தாள் ஸ்வேதா.
ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததால் அதன் பிறகு வரவேண்டிய அனைத்து இரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சூழ்நிலையே கொஞ்சம் கிலியைக் கிளப்ப அங்கிருந்து அவள் செல்ல எத்தனிக்க, யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்
அங்கே அந்த மனோஜும் அவனுடன் மேலும் இருவரும், அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர் முழு போதையில் தள்ளாடியபடி!
அவர்களைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தவள் எதிர்புறமாக நடக்கத்தொடங்கினாள்.
நந்தா அலுவலகம் சென்றுவிட்டதால் பாலுவிற்கு அழைக்கலாம் என கைப்பேசியைப் பார்க்க அது சிம்கார்ட் இல்லை என்பதைத் தெரிவித்தது. பயந்துதான் போனாள் ஸ்வேதா.
அதற்குள் மூவரும் அவளை நெருங்கியிருந்தனர்.
"இவதான்! மச்சி அன்னைக்கு என்னை மிரட்டினவ" என அருகில் இருந்தவனிடம் அவளைச் சுட்டிக்காட்டிய மனோஜ், "அவ ஓகே ஆகியிருப்பாடா! இவதான் குறுக்க பூந்து கட் பண்ணி விட்டுட்டாடா மச்சான்" என்றவன்,
"அந்தப் பெண்ணே வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கும்போது நீ என்னடி ரொம்ப ஓவரா ஆடற?" என நிதானமில்லாமல் ஒருமையில் தாறுமாறாகப் பேசத்தொடங்கினான்.
சற்று நிதானித்தவள் தைரியத்தைக் கூட்டி, "ஏய்! மரியாதையா பேசு இங்கேயே இரயில்வே போலீஸ் இருப்பாங்க" என எச்சரிக்க, அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு மேலும் ஆத்திரம்தான் கூடியது.
"கொஞ்சம் கூட பயமே இல்லாம எவ்ளோ திமிரா பேசறா பாருடா! இவளையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா மச்சான்!'' என மற்ற இருவரும் அந்த மனோஜை உசுப்பேற்றி விட, கையில் வைத்திருந்த மது பாட்டிலை ஓங்கி அவளது தலையில் அடிக்க அவன் எத்தனிக்க அதிலிருந்து தப்புவதற்காக கொஞ்சம் பின்வாங்கினாள் ஸ்வேதா.
மழை நீரினால் ஈரமாக இருந்த நடைமேடையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவள் அதைக் கவனிக்காமல் ஒரு எட்டு பின்னே வைக்க, கால் வழுக்கிப் பிடிமானமும் இல்லாமல் நிலை தடுமாறி தண்டவாளத்தில் போய் விழுந்தாள்.
அதற்குள் அங்கே ஏதோ அரவம் கேட்க அவர்கள் மூவரும் அங்கிருந்து நழுவி வேகமாக ஓடத்தொடங்கினர்.
கீழே விழுந்த வேகத்தில் நெற்றியில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருக்க ஸ்வேதா மெதுவாக எழ முயற்சிச் செய்ய, பசியும் சோர்வும் சேர்ந்துகொண்டதால் அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்றாலும் அவள் எழுப்பிய குரல் அவளுக்கே கேட்கவில்லை.
இருள் சூழ்ந்த பகுதியில் அவள் அங்கே விழுந்து கிடந்தது அந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு சிலருக்கும் கூடத் தெரிந்திருக்கவில்லை.