top of page

Nee Sonna Oor Vaarthaikaga! 10

Updated: Mar 17, 2023

பகுதி - 10


ஸ்வேதாவின் சிந்தனை மொத்தமும் ஹரி என்பவன் மட்டுமே ஆக்கிரமித்திருக்க, அவர்களது வீட்டிற்குள் நுழைந்தாள்.


அவளது அப்பாவும் அண்ணி தரணியும் ஹாலில் உட்கார்ந்து மடிக்கணினியில் தீவிரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருக்கவும் வந்து அவர்கள் அருகில் உட்கார்ந்தவள், "இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா அப்படி என்னப்பா பார்த்துட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்று கேட்க,


"வேற என்ன, உனக்கு மாப்பிள்ளைத் தேடிட்டு இருக்கோம்" என்று வெங்கட் குதூகலமாகச் சொல்லவும்,


"என்னப்பா சொல்றிங்க?" என்று ஸ்வேதா அதிர,


"மேட்ரிமோனியல் சைட்ல உன்னோட ப்ரொஃபைல் ரெஜிஸ்டர் செஞ்சு வெச்சிருந்தோம் ஸ்வேத், இங்க பாரு, ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்திருக்கு" என்ற தரணி கணினியை ஸ்வேதாவின் புறமாகத் திருப்பினாள்.


அதை இலட்சியம் செய்யாமல், "என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் அண்ணி? இன்னும் ஆறு மாசப் படிப்பு பாக்கி இருக்கே" என்று கேட்க,


அங்கே வந்த லதாவோ, "என்ன அவசரமா? இப்பவே உனக்கு இருபத்தி ஏழு வயசு ஆகுது. இதுவரைக்கும் உன் போக்குல விட்டதே தப்பு" என்று கடிந்துக் கொண்டு,


"உன் படிப்பு சம்பந்தப்பட்ட எல்லாத் தகவலையும் சேர்த்துத்தான் தரணி போஸ்ட் பண்ணி இருக்கா. அப்பாவும் அவளுமா சேர்ந்து பொருத்தமா சில வரன்களையும் செலக்ட் பண்ணி வெச்சிருக்காங்க. முதல்ல, அதுல நீ உனக்குப் பிடிச்சதை செலக்ட் செய்யற வழியைப் பாரு" என்றார் கறாராக.


அதற்குள் தரணி, “உனக்குப் பொருத்தமா ஒரு மூணு நாலு அலையன்ஸ் நாங்க பார்த்து வெச்சிருக்கோம் ஸ்வேத். உன் வாட்சாப்க்கு எல்லா டீட்டைலேஸையும் அனுப்பறேன். நீ பார்த்து ஃபைனலைஸ் பண்ணு... ஓகேவா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.


வெங்கட்டோ, "அதுல பெரிய மல்டி நேஷனல் கம்பெனி ஒண்ணுல கீ போஸ்ட்ல இருக்கற பையனோட டீட்டைல்ஸ் இருக்கும். நல்ல சம்பளம், நல்ல ஃபேமலி பேக்கிரவுண்ட்னு எனக்கு அது ரொம்பவே திருப்தியா இருக்கு. நீ அதை முதல்ல பாரு" என்று தன் பங்கிற்கு சொல்ல, பதில் ஏதும் சொல்லாமல் மனம் அலைப்புற அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா.


ஹரியின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள். அன்றொருநாள், வாழ்க்கை இலட்சியம் என்று சராசரியாக எல்லோரும் சொல்வதையே அவனும் சொல்லவும் ஏனோ அதைக் கொஞ்சமும் இரசிக்கவில்லை அவள்.


அவளுக்கு வரப்போகும் வாழ்கை துணை எப்படி இருக்க வேண்டும் என தன் மனதில் உள்ளதை ஹரியிடம் சொன்னபொழுது கூட அதை அவன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்வான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.


அவனது பத்திரிக்கை பேட்டியில் தன் மனைவி பற்றி அவன் சொல்லியிருந்ததைக் கொண்டு அவள் அடைந்த வேதனைக் கொஞ்சம் நஞ்சமல்ல.


அவள் அமெரிக்கா செல்வதற்கு முன் ஒரே ஒரு முறை அவனைச் சந்தித்தால் போதும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவனைச் சென்று சந்தித்து வந்தாள்.


மற்றபடி, அவனை மறந்து வேறு ஒருவரை மணக்க அவளால் நிச்சயமாக முடியாது. கடைசி வரை இப்படியே இருந்துவிடலாம் என்பதுதான் அவளது தீர்மானமான முடிவு. ஆனாலும், இனி எக்காரணம் கொண்டும் ஹரியைச் சந்திக்கவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள்.


அடுத்து வந்த நாட்களில், ஹரி அவளிடம் சொன்னதைப் போலவே விவேக் அவளது பாஸ்போர்ட் சம்மந்தமான வேலையை முடித்திருந்தான். பாஸ்போர்ட்டை கூரியரில் அனுப்பிவிடுவதாகவும் சொல்லி அவளது வேலையை மேலும் குறைத்திருந்தான்.


அதைத் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும், அவள் அமெரிக்கா செல்வதற்குத் தேவையான பேக்கிங் வேலைகளில் தீவிரமாய் இருப்பதை கவனித்த வெங்கட் தனது பொறுமையைக் கைவிட்டு அவளைப்பிடி பிடியென பிடித்துக் கொண்டார்.


"நீ சீக்கிரம் மாப்பிள்ளையை செலக்ட் பண்ணா, இப்பவே பேசி முடிச்சுடலாம். படிப்பு முடிஞ்சு நீ இங்க வந்தவுடனே கல்யாணத்த முடிக்க எனக்கு வசதியா இருக்கும்" என்று அவளை வற்புறுத்தவும் இதற்கு மேல் தள்ளிப்போட இயலாது என ஒரு முடிவுக்கு வந்தவளாக,


"எனக்கு கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. படிப்பு முடிஞ்சதும் இங்க வந்து ஒரு வேலை தேடிக்கலாம்ங்கற முடிவுலதான் இருக்கேன். நீங்க இப்படி என்னை கம்பல் பண்ணா, நான் அங்கயே ஏதாவது ஒரு வேலைல ஜாயின் பண்ணிடுவேன். அப்பறம் இன்னும் நாலஞ்சு வருஷத்துக்கு இந்தப் பக்கமே வர முடியாது சொல்லிட்டேன்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, தனது கைப்பையுடன் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு எங்கோ சென்றுவிட்டாள் ஸ்வேதா.


இதுவரை தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியறியாத தன் மகள் இப்படிப் பேசியதில் திகைத்துப் போனார் வெங்கட்.


எப்படி அவளை அணுகுவது என்றே அவருக்குப் புரியவில்லை. லதாவும் பேச்சற்று நின்றிருந்தார் மகளின் இந்தப் புதிய செய்கையில். பிறகு நந்தாவை அழைத்து, அவனிடம் நடந்ததைச் சொன்னார் வெங்கட்.


"அவளோட படிப்பு முடியறவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்பா. இப்போதைக்கு அவசரப் படவேண்டாம்! யோசிச்சு ஒரு முடிவெடுப்போம்" என்று சொன்ன நந்தாவின் வார்த்தை அவருக்கும் சரியாகத் தோன்றவே "சரிப்பா வேற வழி" என்று முடித்துக்கொண்டார் அவர்.


தரணிதான் மணமகன் பற்றிய தகவல்களை அவளுக்கு அனுப்பிவிட்டதாகச் சொன்னாளே! பிறகு ஏன் இவள் இவ்வளவுத் தீவிரமாகத் திருமணத்தை மறுக்கிறாள் என்ற கேள்வி மட்டும் நந்தாவைக் குடைந்துகொண்டிருந்தது.


அடுத்த நாள் காலை புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு மலையிலிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.


அவளை வழிமறிப்பதுபோல், அங்கே வந்து நின்றது ஒரு கார். அவள் ஒரு நொடி திடுக்கிட்டு நிற்க, காரின் கண்ணாடியை இறக்கிவிட்ட ஹரி அவளை நோக்கி உள்ளே வந்து உட்காருமாறு சைகை செய்யவும்,


'சரியாக இந்த நேரத்தில் இவன் எப்படி இங்கே வந்தான்?' என யோசித்தவள், ஜன்னல் அருகில் குனிந்து, "என்னால வர முடியாது ஹரி. என்னோட ஸ்கூட்டிய அங்க பார்க் பண்ணியிருக்கேன்" என்று அவள் அதைச் சுட்டிக் காட்ட, அங்கே நின்று கொண்டிருந்த தன்னுடைய வாகன ஓட்டுநரைக் கைக் காட்டிய ஹரி, "சாவியை அவர் கிட்ட குடு, வண்டிய பத்திரமா உன் வீட்ல விட்டுடுவார்" என்றான் கட்டளை போல.


"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ஹரி? வண்டியை அவர்கிட்ட கொடுத்து அனுப்பிட்டு வீட்டுல எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. அதனால தயவு செஞ்சு என்னைப் போக விடுங்க" என்று படபடத்தாள்.


அவளிடம் இப்படி நிதானமாகப் பேசி பயன் இல்லை என்று உணர்ந்தவன், "உனக்கு உன் பாஸ்போர்ட் வேணுமா வேண்டாமா? வேணும்னா பேசாம வந்து உள்ள உட்காரு" என்று கொஞ்சம் கடுமையாகச் சொல்ல, அவனது மிரட்டலில் "என்ன?" என்று ஸ்வேதா அதிரவும், ஹரி தன் காரின் கதவைத் திறந்து விட்டு, அவளை உள்ளே உட்காருமாறு சைகை செய்ய, அவனை முறைத்துக்கொண்டே ஏறி உள்ளே உட்கார்ந்தாள்.


பின்பு அவளது கையில் வைத்திருந்த சாவியைப் பிடுங்கி அந்த ஓட்டுநரிடம் கொடுத்து அவனிடம் தகவல் சொல்லி அனுப்பி வைத்தான் ஹரி.


பின்பு அவன் காரைக் கிளப்பிச்செல்ல, அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாகவே உட்கார்ந்திருக்க, அந்த அமைதி பிடிக்காமல் எம்.பி.த்ரீ. ப்ளேயரில் பாடலை ஒலிக்கவிட்டான். அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் ஒலித்தது அந்தப் பாடல்.


மறு வார்த்தை பேசாதே!


மடிமீது நீ தூங்கிடு!


இமை போல நான் காக்க..


கனவாய் நீ மாறிடு !மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!


மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..


விழிநீரும் வீணாக


இமைத்தாண்டக் கூடாதென..


துளியாக நான் சேர்த்தேன்..


கடலாகக் கண்ணானதே..!மறந்தாலும் நான் உன்னை


நினைக்காத நாளில்லையே..!


பிரிந்தாலும் என் அன்பு..


ஒருபோதும் பொய்யில்லையே!பாடல் வரிகளின் கனம் தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் திரையிட வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஸ்வேதா.


அதன் பிறகு ஒலித்த பாடல்கள் எதுவும் அவள் மனதைச் சென்றடையவேயில்லை.


'ப்ச்சு இவளுக்கு எப்பவும் இதே வேலைதான்' என்று மனதில் எண்ணிச் சலித்துக்கொண்டான் ஹரி.


அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து சேரும் வரையிலுமே ஸ்வேதா அவனிடம் ஏதும் பேசவில்லை. குறைந்தபட்சம் அவளை எங்கே அழைத்துச் செல்கிறான் என்று கூட கேட்க எத்தனிக்கவில்லை அவள்.


அவனும் அதைக் கண்டுகொண்டாலும் அதை அவளிடம் வெளிக்காண்பிக்கவில்லை.


படப்பை அருகில் உள்ள புஷ்பகிரி என்னும் இடத்தில் அவன் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் பண்ணை வீட்டிற்க்குத்தான் அவளை அழைத்து வந்திருந்தான்.


மிகப் பெரிய கேட்டைத் தாண்டி அவனது கார் உள்ளே நுழைய, இரு மருங்கிலும் வரிசையாக வளர்ந்து நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களைக் கடந்து சென்று வண்டியை நிறுத்தியவன், மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டி முடிக்கப்பட்டுக் குடி புகத் தயாராக இருந்த அந்த வீட்டின் உள்ளே அவளை அழைத்துச் சென்றான்.


உள்ளே நுழைந்ததும், அங்கே வரவேற்பரையில் மாட்டப்பட்டிருந்த மிகப்பெரிய புகைப்படம்தான் முதலில் அவளது பார்வையைப் பறித்தது.


அதைக் கண்டு மூச்சுவிடவும் மறந்துபோய் சிலையென நின்றுவிட்டாள் ஸ்வேதா.


ஏழு வருடங்களுக்கு முன், அவளுடைய பிறந்தநாளன்று நண்பர்கள் நால்வரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது.


"ஸ்வேதா" என்ற ஹரியினுடைய கோவமான அழைப்பில் உணர்வுக்கு வந்தவள், இங்கிருக்கும் எதுவும் தனக்கு சொந்தமானது இல்லை என்ற எண்ணம் தோன்றவும், மொத்தமாகத் தோற்றுப்போன ஒரு உணர்வு தலை தூக்க, "ஏன் ஹரி இப்படியெல்லாம் செய்யறீங்க? இப்ப என்னை ஏன் இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க. இன்னும் த்ரீ டேஸ்ல நான் யூ.எஸ் போகணும். எனக்கு நிறைய வேலை இருக்கு" என்று கேட்டாள் இயலாமையுடன்.


அதில் அவனது கோவம் எல்லையைக் கடக்க, "என்னடி பெரிய யூ.எஸ்.? அன்னைக்கு என்கிட்டே அப்படி பேசினவளாடி நீ? வெளிநாட்டுல வேலைப் பார்க்கறவன்னா பிடிக்காது அது இதுன்னு சொன்னவதான நீ? இன்னைக்கு எதுக்குடி அமெரிக்கா அமெரிக்கான்னு குதிக்கற?" என்று ஹரி பொரியவும்,


எப்பொழுதுமே புன்னகை முகமாக இருக்கும் அவனது இந்தக் கோபமும், 'டி' என்ற இந்த விளிப்பும் அவளுக்குப் புதிதாகத் தோன்றவே நிலை தடுமாறித்தான் போனாள் ஸ்வேதா.


"என்ன இப்படி பேசறீங்க ஹரி?" என்று அழுகையை அடக்கி அவள் கேட்க,


துளியும் கோபம் தணியாமல், "எதுக்குடி கல்யாணம் வேண்டாம்னு வீட்ல சொல்லிட்டு வந்திருக்க?" என்ற அவனது கேள்வியில்,


என்ன சொல்வது என்று குழம்பியவள், "எங்க வீட்டுல நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.


"முதல்ல நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லு" என்று அவனும் அதிலேயே நிற்க,


"இப்படி கேள்வி கேட்கறது, மிரட்றது எல்லாத்தையும் உங்க பொண்டாட்டிகிட்ட வெச்சுக்கோங்க! எங்கிட்ட வேண்டாம்!" என்று தன்னையும் மறந்து ஒரு ஆவேசத்துடன் குரலை உயர்த்தி அவள் கத்தவும்,


"கல்யாணம்னு ஒண்ணு நடந்து, பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததுக்கு பிறகு அவளை மிரட்டறதோ கொஞ்சறதோ என் இஷ்டத்துக்கு நான் பண்ணிக்கறேன்! இப்ப நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு" என ஹரி சொல்லவும்,


அதில் விழிகளே தெறித்து விழும்படி வியப்புடன் அவனைப் பார்த்தவள், "உங்களுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல!" என்று வியந்து கேட்கவும், "எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு உன்கிட்ட எவன்டி சொன்னான்?" என்றான் எரிச்சல் மேலிட.


"நீங்கதான! அந்தப் மேகசின்ல கொடுத்த பேட்டில சொல்லியிருந்தீங்க?" என்று உள்ளே போன குரலில் கேட்டவளைக் கேலிப் பார்வைப் பார்த்தவன்,


"நான் உன் கிட்ட வந்து, ஸ்வேதா... ஸ்வேதா... எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... அப்படிச் சொன்னேனா? உங்கிட்ட சொன்னதைப் பத்தி மட்டும் என்னைக் கேள்வி கேளு, நான் வேற யார் யார்கிட்டயோ என்னவோ எதுக்காகவோ சொன்னதுக்கெல்லாம் நீ என்னைக் கேள்வி கேட்காத! சரியா!" என்று அவன் சொல்லவும்,


"அப்படின்னா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?" என மகிழ்ச்சியும் வியப்புமாகக் கேட்டாள் ஸ்வேதா.


"இல்ல" என்ற ஹரி, "ஆமாம் அதுல உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்?" என்று அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே கேட்டான் உதடுகளுக்குள்ளேயே அடக்கப்பட்ட சிரிப்புடன்.


தன்னைக் கண்டுகொண்டானே என்று வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் ஸ்வேதா


நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றாய்...


என் உயிருக்குள் புகுந்த உன்னை...


அறிவாயா நீ?செவி வழி புகுந்து...


என் உயிர்வரை நுழைந்திட்ட உன் குரலின் இனிமேயை...


அறிவாயா நீ?என் இதய அறையின் பெட்டகங்களை.


நிறைத்திருக்கும் உன் நினைவுகளை...


அறிவாயா நீ?எனையே வரமாய் நினைத்து நீ தவமிருக்க...


கலவரமாக மாறியிருந்த என் முகத்தால்...


நான் மறைத்த என் காதல்...


அறிவாயா நீ?என் வாழ்க்கை புத்தகத்தில்...


நீ அறியாப் பக்ககங்கள்...


பல கடந்து வந்துவிட்டேன்...நீ அறியும் நன்னாளில்....


உன் கை பிடிப்பேன் காதலுடன்...


நீ அறிவாய் மன்னவனே...


ஹரியாகிய என்னவனே...ஸ்வேதா...0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page