நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!
நீச்சல் குளம், ஜிம் என்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பர குடியிருப்பு வளாகம் அது.
ஓட்டி வந்த தனது ஸ்கூட்டியை அதன் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, ‘அம்மா’ என்று அழைத்துக் கொண்டே தங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள் நமது நாயகி ஸ்வேதா.
மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட ட்யூப்ளக்ஸ் வில்லா அவர்களுடையது.
அமெரிக்காவில் பி.ஹெச்.டி. செய்து கொண்டிருப்பவள் ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறாள்.
"என்ன ஸ்வேதா! பாஸ்போர்ட் ரெனீவல் பண்ண யாரோ டிராவல் ஏஜன்ட்ட பார்க்கணும்னு கிளம்பிப் போனியே, அதுக்குள்ள வந்துட்ட?" என்று அவளது அம்மா லதா கேட்க,
"செம்ம டிராபிக் மா, தலை வேற பயங்கரமா வலிக்குது. அதனால நாளைக்குப் போகலாம்னு திரும்ப வந்துட்டேன், எனக்கு ஒரு காபி கொடுங்கம்மா" என ஸ்வேதா சொல்லி முடிப்பதற்குள்,
"ஏன் மா? ரொம்ப வலிக்குதா? டாக்டரைப் பார்க்கலாமா?" எனப் பதறியவாறு லதா கேட்க, "அம்மா! ஏன் டென்ஷன் ஆகறீங்க. நீங்க பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்ல. நம்ம ஊர்லதான் டிசம்பர் மாசத்துலயும் வெயில் மண்டையைத் பிளக்குதே! அதனாலதான்" என்றவள்,
"அம்மா ப்ளீஸ்! காஃபி" எனச் சலுகையாகக் கேட்கவும் அடுக்களைக்குள் சென்றார் லதா.
அப்பொழுதுதான் அவளது கண்களில் பட்டது அந்த மாதாந்திர வணிகப் பத்திரிக்கை.
அதன் அட்டைப் படத்தைப் பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.
கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாய் தொடர்பிலேயே இல்லாத அவளுடைய கல்லூரி தோழன் ஹரி! ஹரி கிருஷ்ணா!!! அதில் அட்டகாசமான போஸில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
ஜெல் தடவிப் படிய வைத்திருந்த அடர் கேசம், எதிரில் இருப்போரின் மனதின் ஆழம் வரை அளவிடும் கூர்மையான பார்வையுடன் வசீகர புன்னகையோடு, கருநீல கோட், அதே நிறத்தில் பேன்ட் அதற்கேற்ற டையுடன் வெள்ளை நிறச் சட்டை அணிந்து, விருது வாங்கியதற்கான அடையாளமாக ஷீல்டை அவனது வலது கையில் ஏந்தியிருக்க, அந்தப் படத்தையே கண்கள் அகற்றாமல் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா
கல்லூரி காலத்தில் இருந்ததை விட அவ்வளவு கம்பீரமாக இருந்தான். "ஸ்வேதா வந்து காப்பியை எடுத்துக்கோடி" என்ற அவளது அம்மாவின் அழைப்பில் தன்நினைவுக்கு வந்தவள், காஃபியைக் கொண்டு வந்து பருகியவறே அந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருந்த அவனது பிரத்தியேக பேட்டியைப் படிக்கத் தொடங்கினாள்.
அந்த வருடத்தின் இளம் தொழிலதிபருக்கான விருதை அவன் வாங்கி இருந்ததைக் கவுரவிக்கும் வகையில் வெளிவந்திருக்கும், முழுக்க முழுக்க அவனது தொழில் சம்பந்தமான பேட்டி அது.
இந்தக் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் அவன் அடைந்திருந்த உயரம் மிக மிக அதிகம் என்பது அந்தப் பேட்டியைப் படிக்கும்பொழுதுதே அவளுக்குப் புரிந்தது.
அதன் கடைசி கேள்வியாக "உங்களின் இந்த வளர்ச்சிக்கான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?" என்ற கேள்விக்கு,
"எனது மனைவி" எனத் தெள்ளத் தெளிவாகப் பதில் சொல்லியிருந்தான். ஆக அவனுக்குத் திருமணமும் முடிந்துவிட்டது.
‘ஏன் திருமணத்திற்குக் கூடத் தன்னை அழைக்கவில்லை?’ என நினைக்கும் பொழுதே அவளுடைய கண்களில் நீர் கோர்த்தது.
கல்லூரியில் படிக்கும்பொழுது, ஸ்வேதா, வர்ஷினி, ஹரி, பாலு என்கிற பால சரவணன் நால்வரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இவளுடைய பக்கத்து பிளாட்டில் குடியிருந்த வசுதா, கல்லூரியில் இவர்களுக்கு ஜூனியர். சிறு வயது முதலே இவளுடைய நெருங்கிய தோழி. அதனால் எல்லோருக்கும் தோழி.
இதில் பாலுவும் வசுதாவும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது.
முந்தைய வாரத்தில்தான் இவள் போய் அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருந்தாள்.
வர்ஷினி திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகியிருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். எந்த நேரத்திலும் ஆன்லைனில் அவைலபிளாக இருப்பாள்.
இவர்கள் அனைவரும் மற்றவருடன் தொடர்பிலேயே இருக்க, ஹரி மட்டும் யாருடனும் தொடர்பிலில்லை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஸ்வேதா. சமூக வலைத்தளங்களிலும் அவன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி ஒதுங்கிப் போனான் என்றும் தெரியவில்லை. பாலுவிடம் எவ்வளவோ முறை கேட்டுப் பார்த்தும் இதற்குப் பதில் இல்லை.
‘ஹரிதா டிரான்ஸ்மிஷன்ஸ் பிரைவேட் லிமிடட்’ அவன் கம்பெனியின் பெயர். அவன் நிறுவனம் மிகப் பிரபலமானதாக இருப்பதால் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள்தான். ஆனாலும் அது அவனுடையதுதான் என்பதே இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஸ்வேதாவிற்கு தெரிய வந்திருக்கிறது.
‘அதிகப்படியாக அவன் சேர்த்து வைத்திருக்கும் பணம்தான் கண்களை மறைக்கிறதோ’? என்று தோன்றியது அவளுக்கு.
’கல்லூரி நாட்களில் அவன் அப்படி இல்லை. அவன் மாறியிருக்கவும் வாய்ப்பேயில்லை. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்!’ என்ற எண்ணமும் அடுத்த கணமே தோன்றியது.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒருமுறை அவனை நேரில் சந்தித்து அவன் திருமணத்திற்கும், விருது பெற்றதற்கும் சேர்த்து வாழ்த்துக் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஸ்வேதா. அந்தளவிற்கு அவனது வளர்ச்சியில் அவளது மனம் நிறைந்திருந்தது.
உடனேயே, அவள் நினைத்ததைச் செயல்படுத்த வேண்டி தன் மடிக்கணினியை எடுத்து அவன் கம்பெனியின் ஃபோன் நம்பர் அறியக் கூகுள் செய்தாள்.
மூவாயிரம் பேருக்கு மேல் வேலை செய்யும் ஃபேக்டரி ஒரகடத்தில் இருந்தது. அதன் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் சில தொழில்நுட்பப் பிரிவுகள் சென்னையின் முக்கிய பகுதியில் இருந்தன.
அவனது அலுவலக எண்ணைக் கண்டுபிடித்து, அதற்கு அழைத்த ஸ்வேதா எதிர் முனையில் பேசிய பெண்ணிடம், "நான் உங்க எம்.டி. மிஸ்டர் ஹரிகிருஷ்ணாவ நேர்ல மீட் பண்ணனுமே! எங்க, எப்ப வந்தா அவர பார்க்க முடியும்?" என்று கேட்க,
"சாரி மேம், ப்ரியர் அபாயின்ட்மென்ட் இல்லாம அவரை மீட் பண்ண முடியாது! அதுவும் ஒன் வீக் அவர் ரொம்ப பிஸி" என்று பதில் வர,
"ஓ... ஓகே... பட் ஒன் கைன்ட் ஃபேவர், என் நேம் ஸ்வேதா, நான் அவரோட காலேஜ்மெட். நீங்க வேணா அவர் கிட்டயே கேட்டுப் பாருங்களேன்" என்று கூறவும்,
"ஓகே! மேம், நீங்க எதுக்கும் அவரோட பி.ஏ. மிஸ்டர் விவேக் கிட்ட பேசிப் பாருங்க, ஒன்லி ஹீ கேன் ஹெல்ப் யூ!" என்று கூறி அவரது எண்ணைக் கொடுத்தாள் அந்தப் பெண்.
ஸ்வேதா அந்த எண்ணிற்கு அழைத்து ஹரியுடைய பி.ஏ.விடம் விவரம் கூற, அவர் சிறிது நேரத்தில் அழைப்பதாகக் கூறி கட் செய்தார்.
பிறகு அவளுடைய அண்ணன், அண்ணி, அப்பா, என அனைவருமே ஹாலில் குழுமியிருக்க, அவர்களுடன் பேசியபடி இரவு உணவையும் உண்டு முடித்து, முதல் தளத்தில் இருக்கும் அவளது அறைக்குள் வந்தவள், ஃபோனில் வந்திருந்த மெசேஜைப் பார்த்தாள். அதில் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு ஹரியை, அவனுடைய அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறப்பட்டிருந்தது.
மறுநாள் அவனைப் பார்க்கப்போகும் ஆவலுடன் படுத்திருந்தவளுக்குத் தூக்கம்தான் வருவதாக இல்லை. எண்ணங்கள், மழையும் வெயிலும் போன்று இன்பமும் துன்பமும் கலந்த அவளது கல்லூரி நாட்களை நோக்கிப் பயணப்பட்டது
***
அப்பா வெங்கட், அம்மா லதா, அண்ணன் நந்தகுமார் மற்றும் ஸ்வேதா என அழகிய சிறு குடும்பம் அவளுடையது. வெங்கட் ஒரு தனியார் வங்கியில் வேலையில் இருந்தார், மிகவும் கண்டிப்பானவர். லதா, ஒரு சராசரிக் குடும்பத்தலைவி. தன் கணவரை மீறி எதுவுமே செய்யமாட்டார். பிள்ளைகளும் அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள்.
நங்கநல்லூரில் இரண்டு படுக்கையறைக் கொண்ட சொந்த ஃபிளாட்டில் அவர்களது வாழ்க்கை அழகாய் சென்றுக்கொண்டிருந்தது. அண்ணன் தங்கை இருவருமே நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். நந்து கடந்த ஆண்டில்தான் ஈ.சி.ஈ முடித்தான். கேம்பஸ் செலெக்ஷனில் வேலையும் கிடைத்துவிட, ட்ரைனிங்கிற்காக பெங்களூரில் இருந்தான்.
ஸ்வேதா, நந்தா படித்த, வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் அமைத்திருந்த மிகப் பிரபலமான பொறியியல் கல்லூரியிலேயே, மெரிட்டில் சீட் கிடைத்து, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
பாலு நந்தாவின் உயிர் நண்பன். இருவரும் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். நந்தா வேலையில் சேர்ந்துவிட, பாலுவோ அதே கல்லூரியிலேயே மேற்படிப்பைத் தொடர்ந்தான்.
அவனுடைய அப்பா கோவையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் டிபார்ட்மென்டல் ஸ்டார் வைத்திருந்தார். அவனுக்கு இரண்டு அண்ணன்கள். நங்கநல்லூரில் அவனுடைய அத்தையின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். வெங்கட்டும் பாலுவின் மாமாவும் நெருங்கிய நண்பர்கள்.
பாலுவும் இவர்கள் வீட்டிலேதான் பெரும்பாலும் இருப்பான். அவனை அவளது அப்பா வெங்கட்டிற்கு மிகவும் பிடிக்கும்.
***
தன்னைச் சுற்றி அழகான மஞ்சள் நிறப் பூக்களை இறைத்து, இலைகளே இல்லையோ எனும் அளவிற்கு, மஞ்சள் மலர்களைப் போர்த்தியவாறு காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்த சரக்கொன்றை மரத்தினடியில் வர்ஷினியுடன் அமர்ந்திருந்தாள் ஸ்வேதா.
"ஏய் மாரியம்மா!, அப்பாகிட்ட ரொம்ப கெஞ்சி பெர்மிஷன் வாங்கி இருக்கேன்டி, ப்ளீஸ் டீ செல்லம் இல்ல, இன்னைக்கு மட்டும் எங்கூட வாடி" என்று அவள் கெஞ்ச,
"நீ சும்மாவே கேட்ருந்தாக் கூட என்னால ஒருநாள் முழுக்க அங்க வந்து உன்னோட வெட்டியா உட்கார்ந்திருக்க முடியாது! இதுல என்னை மாரியம்மானு வேற சொல்லிட்ட இல்ல, கண்டிப்பா நான் வரமாட்டேன்!!" என வர்ஷினி நொடித்துக் கொள்ள,
"போடி ரொம்பதான், நந்து அண்ணா மட்டும் இங்க இருந்தா உங்கிட்டல்லாம் நான் ஏன் வந்து கெஞ்சப் போறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான் பாலு.
அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவாறே "ஆஹான்!! வலிய வந்து சிக்குதே கொங்கு நாட்டுச் சிங்கம்" என்றாள் வர்ஷினி.
"ஏன்? என்ன நடந்தது?" என்று கேட்டவனிடம், "அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாலுண்ணா!! வைரம் டிவி நடத்தற தமிழ் பாட்டுப் பாடு ப்ரோக்ராமோட செலெக்ஷன் நேரு ஸ்டேடியத்துல நடக்குது. அதுல கலந்துக்க அப்பா கிட்ட ரொம்ப கெஞ்சி கூத்தாடி, பர்மிஷன் வாங்கி இருக்கேன்ணா! தனியா போனா போரா இருக்குமேன்னு, இவளைக் கூப்பிட்டா ரொம்பதான் பண்றா. அதுவும் இன்னைக்கு முக்கியமான கிளாஸ்ஸஸ் கூட எதுவும் இல்ல" என ஸ்வேதா படபடக்க,
"அய்யோடா!!! நானே இப்பதான் ஒருத்தங்கிட்டயிருந்து தப்பிச்சு வந்தேன், இப்ப இவகிட்ட மாட்டிட்டனா", என அலுத்துக்கொண்டான் பாலு.
"ஏன்? என்ன ஆச்சு பாலுண்ணா?" எனக் கேட்டாள் வர்ஷினி. எதுவும் பேசாது உர்ர், என்று உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா.
"அட ஒண்ணுமில்லமா, என் ஃப்ரண்ட் ஹரின்னு சொல்லியிருக்கேன்ல, அவனும் இதே ப்ரோக்ராமுக்குத்தான் போகணும்னு என்ன மொக்கப் போட்டுட்டு இருந்தான். நான் எஸ் ஆகி இங்க வந்தா இந்த ஸ்வீட்டாவுமா? ஐயோ! ஆள விடு, மீ பாவம்" என்று பாலு வடிவேலு பாணியில் கெஞ்ச, வர்ஷினியோ நக்கலாகச் சிரித்து வைத்தாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஸ்வேதா, "அண்ணா, யார்ணா ஹரி!! ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கற உங்க ஃப்ரண்ட்னு சொன்னீங்களே அவரா?" என்று ஆர்வமாகக் கேட்டாள்.
"ஆமாம்" என்ற பாலா, "ஹேய் ஸ்வீட் நீ வேணும்னா அவனோட போயிட்டுவரியா?" என கேட்கவும்,
"போலாம்ணா, ஆனா, அப்பா ஒத்துப்பாங்களா தெரியலியே" என்று ஸ்வேதா இழுக்க, "சரி நான் உங்கப்பாகிட்ட பேசறேன்" என்று சொல்லிவிட்டு அவளுடைய அப்பாவிடம் அதற்கு அனுமதியும் வாங்கிக் கொடுத்து, பிறகு ஹரியைக் கைப்பேசியில் அழைத்து அங்கே வரச் சொன்னான் பாலு.
மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்துடன் உயரமாக, அதற்கேற்ற அளவான உடல்வாகுடன் கண்களில் குறும்பு மின்னப் புன்னகை முகமாக அங்கு வந்தவனைப் பெண்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
கலகலப்பாகவும் அதேசமயம் கண்ணியமாகவும் பேசிக்கொண்டிருந்த ஹரியை, அவன் அங்கே இருந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர்களுக்குப் பிடித்துப் போனது.
பிறகு இருவரும் கிளம்பி பேருந்து மூலமாகப் போட்டிக்கான, தேர்வு நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
அந்த அரங்கமே மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இவர்களுக்குக் கிடைத்த டோக்கன் எண் 1115 மற்றும் 1116. ஆனால் கடந்திருந்ததோ, வெறும் 347வது டோக்கன்தான்.
"அய்யய்யோ!" என்ற ஸ்வேதா, "இது ஒண்ணும் வேலைக்கே ஆகாது போலிருக்கே" என்று கூற,
ஹரியோ, "இப்ப நாம மட்டும் திரும்பப் போனோம் பாலா நம்மள ஓட்டியே கொன்னுடுவானே!" என்று அங்கலாய்த்தான்.,
"ஐயோ, பாலு அண்ணாவாவது பரவால்ல! ஆனா இந்த மாரியம்மா இருக்காளே, இத காலேஜ் முழுக்கப் பரப்பி என் மானத்தையே வாங்கிடுவா. ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணி பாக்கலாம். அப்பவும் சரியா வராதுன்னா திரும்பிப் போயிடலாம்" என்றாள் ஸ்வேதா.
"ஓகே!" என்ற ஹரி, "அது என்ன வர்ஷினியை மாரியம்மான்னே சொல்லிட்டு இருக்க" என்று கேட்க,
சிறு வெட்கத்துடன், “மாரின்னா மழைதான?" எனக் கேட்டாள் ஸ்வேதா.
விளங்காத பாவத்தில் அவன் "ஆமாம்!" என்றதற்கு,
"வர்ஷினின்னாலும் மழைதான, அதனாலதான் அவளை வெறுப்பேத்த சும்மா அப்படிக் கூப்பிடுவேன்” என அவள் முடிக்க,
"ஐயோ!!! முடில" என்று சிரித்தான் ஹரி.
பிறகு அங்கேயே ஓரமாக ஒரு இடம் பார்த்து வசதியாக அமர்ந்து கொண்டு அவர்கள் கல்லூரி பற்றி, ஹாஸ்டல் பற்றி, புதிதாக வந்திருந்த திரைப்படம் பற்றி, ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
எப்படியோ நேரத்தை நெட்டித்தள்ளி, ஒரு மணிநேரம் கழித்துச் சென்று பார்த்தால் வெறும் 447வது டோக்கன் வரைதான் நகர்ந்திருந்தது. மணி வேறு மதியம் இரண்டைத் தாண்டியிருக்க அதற்குமேல் அங்கே இருக்க ஸ்வேதாவிற்குப் பொறுமை இல்லை.
அதில் பங்கு கொண்டு பரிசு வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலெல்லாம் அங்கே வரவில்லை. நன்றாகப் பாடவரும், ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் மட்டுமே.
‘ஆனால் ஹரி ஒருவேளை இதில் தீவிரமாக இருப்பானோ?’ என நினைத்தவள் திரும்பப் போகலாம், என்று எப்படிச் சொல்வது என்று யோசிக்க,
அவனே "உனக்கு இதுல கண்டிப்பா பார்ட்டிசிபேட் பண்ணனுமா இல்ல கிளம்பிடலாமா?” என்று கேட்கவும்,
அவள், "ஐயோ, இப்ப இங்கேயிருந்து போனா மட்டும் போதும்" என்றாள்.
இருவருக்குமே பசி வேறு வயிற்றைக் கிள்ளவும், அவள் எடுத்துச் சென்றிருந்த எலுமிச்சை சாதத்தையும் உருளைக்கிழங்கு பொரியலையும் கொஞ்சமாக லஞ்ச் பாக்ஸ் மூடியில் போட்டு தனக்கு எடுத்துக்கொண்டு பாக்ஸை அவனிடம் நீட்டினாள்.
“ஹேய், நீ சாப்பிடு. நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்" என்றவனிடம், "நான் சீக்கிரமா வீட்டுக்குப் போயிடுவேன். நீங்க ஹாஸ்டல் போகத்தான் லேட்டாகும், பரவால்ல." என்றவள்,
அவனை வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லவும், வாங்கிக் கொண்டவன், "ஆமாம்! நீ என்ன பாட்டு பாடலாம்னு இருந்த" என்று கேட்க,
"நின்னைச் சரண் அடைந்தேன், அது எனக்கு ரொம்ப பிடிச்ச பாரதியார் பாட்டு" என்றவள், "நீங்க?” என்று கேட்க, "முன் அந்தி சாரல் நீ,. அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாட்டு" என்றான் விழிகள் மின்ன.
அவனை முதல் முதலில் சந்தித்த நாளை நினைத்துக் கொண்டிருந்தவளின் நினைவலைகளைக் கலைக்குமாறு ஸ்வேதாவின் கைப்பேசி ஒலித்தது. "முன் அந்திச் சாரல் நீ" என்று,
Comments