top of page

Nee Sonna Orr Vaarthaikaaga! 9

Updated: Mar 17, 2023

பகுதி - 9


சரியாகக் காலை பத்து மணிக்கு, சிவப்பு நிற ரோஜாக்கள் நிறைந்த அழகிய பூங்கொத்து ஒன்றை வலது கையில் ஏந்தியவாறு பொன்னிற எழுத்துகளில் ‘ஹரிதா குரூப் ஆஃப் கம்பனிஸ்’ என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா.


அங்கே வரவேற்புப் பகுதியில் இருந்த பெண்ணிடம் சென்று, "நான் மிஸ்டர். ஹரி கிருஷ்ணாவ பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,


அவளது காதின் ஓரம் ஒலித்த "வெல்கம் ஸ்வேதா!" என்ற ஹரியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், அவன் மீதே மோதி தடுமாற அவளது கையைப் பற்றி அவளை நிறுத்தினான்.


வெள்ளை நிறத்தில் சிறிய பிங்க் நிற பூக்களிட்ட ஜார்ஜெட் புடவை அணிந்து, கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும், கைகளில் மெல்லிய வளையல்களும் காதில் சிறிய வெள்ளைக் கல் பதித்த தோடும் மூக்கில் சிறிய வெள்ளைக்கல் மூக்குத்தியும் அணிந்து, பளிங்கு போன்ற முகத்தில் சிறிய பொட்டு வைத்து வேறு ஒப்பனை ஏதுமின்றியிருந்தாலும் பொன்னென மின்னியவளின் அழகை விழிகளால் பருகியவன், பேச்சற்று இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றவளின் கையைப் பிடித்தவாறே அவனது அலுவலக அறை நோக்கி அழைத்துச் சென்றான்.


அதற்குள் சுற்றுப்புறம் உணர்ந்தவள், தனது கையை விடுவித்துக்கொள்ள முயல, அவள் கையில் ஏந்தியிருந்த மலரினும் மெல்லிய அவளது விரல்களின் மென்மையில் தன்னைத் தொலைத்திருந்தவனின் பிடி மேலும் இறுகியதே தவிர தளரவில்லை.


அவனது என்ட்ரி கார்டைப் பதித்து அங்கேயிருந்த கதவைத் தள்ளியபடி, "இது நம்ம கம்பெனியோட 'ஆர் அண்ட் டி' செக்ஷன். இங்க வேலை செய்யறவங்க தவிர, மத்த டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்ஸ் கூட உள்ள நுழைய முடியாது” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றான்.


உள்ளே தனித்தனியாக கணினிகளுடன் கூடிய கேபின்களில் கிட்டத்தட்ட நாற்பது பேர் வேலை செய்துகொண்டிருந்தனர்.


"ஹாய் கைஸ்!' என்றவாறே அவர்களைத் தாண்டிச் சென்ற ஹரியையும் அவனுடன் கைகோர்த்துச் சென்ற ஸ்வேதாவையும் அவர்கள் விசித்திரமாகப் பார்த்து வைக்க, அதில் கலவரமடைந்தவள், "ஹரி ப்ளீஸ்" என கிசுகிசுத்தவாறு தன் கையை மெதுவாக இழுக்க,


"ப்ச்சு... நீ கொஞ்சம் பேசாம வரியா" என்றவனிடம்,


"பிடிச்சா குரங்குப் பிடிதானா?" என்றாள் கிண்டலாக.


"ஏய்... யாரைப் பார்த்து குரங்குன்னு சொன்ன?" என்று ஹரி கோபம் போல் கேட்க,


அடக்கப்பட்டச் சிரிப்புடனேயே, "எல்லாம் இந்த ஹரிதா குரூப் ஆஃப் கம்பெனிஸோட எம்.டி. ஹரியைதான்" என்றவள் தொடர்ந்து,


"தெரியுமா சான்ஸ்க்ரிட்ல ஹரின்னா குரங்கு" என முடிக்க,


"அடிப்பாவி எவ்வளவு நாளா என்னை இப்படி சொல்லணும்னு காத்துட்டு இருந்த?" என்று கேட்டான் நக்கலாக.


"இப்பதான், ஜஸ்ட் ரெண்டு நாளா" என்ற அவளது கிண்டலான பதிலில் சிரித்தவாறே அவனது கேபினுக்குள் நுழைந்து, அதன் பிறகே அவளது கையை விட்டான் அதுவும் மனமே இன்றி.


தனது இருக்கையில் போய் அமர்ந்தவன் அவளையும் எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்காருமாறு கையைக் காட்ட, "கங்கிராட்ஸ் ஹரி" என்று சொல்லித் தனது கையில் வைத்திருந்த பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு அங்கே உட்கார்ந்தாள் ஸ்வேதா.


எதற்காக வாழ்த்தினாள் என்று இவளும் சொல்லவில்லை, அதை "நன்றி" என்று பெற்றுக்கொண்ட ஹரியும் எதற்கு என்று கேட்க இல்லை.


"எப்படி இருக்கீங்க ஹரி" என்று ஸ்வேதா இயல்பாக விசாரிக்க,


இருக்கையிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்து, மேசை மீது சாய்ந்து நின்றவாறே, "பார்த்து நீயே சொல்லேன், நான் எப்படித்தான் இருக்கேன்? என அவளை அதிகம் வசீகரித்தான்.


அவனது கம்பீரமான தோள்களை எடுப்பாகக் காட்டும் வெள்ளை நிற சட்டையும் கரும் பச்சை நிற பேன்ட்டும் அணிந்து அடர் கேசம் நெற்றியில் புரள உதடுகளோடு சேர்ந்து கண்களும் புன்னகைக்க நின்றித்தவனை நிமிர்த்து பார்க்கக் கூட முடியாமல் பிஞ்சுக் குழந்தையின் பாதம் போன்று முகம் சிவந்து போனாள் ஸ்வேதா.


‘ஐயோ, காலேஜ்ல படிக்கும் போதெல்லாம் இவன் இப்படி இல்லையே! அதுவும் இவன் கல்யாணமானவன் வேற! தென் ஏன் இப்படி விசித்திரமா நடந்துக்கறான்?’ என்று எண்ணிய ஸ்வேதா, ஒரு தெளிவுக்கு வந்தவளாக "நீங்கதான் ரொம்பப் பெரிய ஆளா ஆயிட்டிங்களே! அவார்டெல்லாம் வேற வாங்கியிருக்கீங்க! உங்களோட அப்பாயின்மென்ட் கிடைக்கறதே கஷ்டம் போலிருக்கே? அதனால நீங்க எப்படி இருக்கீங்கன்னு நீங்கதான் சொல்லணும்" என்று முடிக்க,


அவளுடைய வெட்கச் சிவப்பை இரசித்துச் சிரித்தவாறே, "நான் நல்லா இருக்கேன் சுவீட்" என்று சொல்லிவிட்டு ஃபோன் மூலம் அவனது உதவியாளரை அழைத்த ஹரி,


"சாப்பிட ஏதாவது அனுப்புங்க விவேக்" என்று பணித்தான்.


"உங்களோட கம்பனிஸ் பத்தி கூகிள்ல பார்த்தேன். ரியலி எப்பேர்ப்பட்ட வளர்ச்சி இது. சான்ஸே இல்ல ஹரி. ரொம்பவே சந்தோஷமா இருக்கு!" என்றவளிடம்,


"இந்த ப்ளோர்ல ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் விங் மட்டும் இருக்கு. இங்க ஐம்பத்து நாலு பேர் வேலை செய்யறாங்க. அக்கௌன்ட்ஸ் ஹெச்.ஆர். எல்லாம் மேல இருக்கு. ஃபேக்டரி தனியா இருக்கு. இது இல்லாமல அப்பாவோட ஆர்.கே எண்டர்ப்ரைசஸ் கம்பெனியை எக்ஸ்டன்ட் பண்ணியிருக்கேன். அது தனியா திருவள்ளூர்ல முன்ன இருந்த அதே இடத்திலயேதான் இருக்கு. என் வீடும் அதே இடத்துலதான் இருக்கு” என்று சொன்னவனின் குரலில், ‘நீ நினைத்திருந்தால் என்னை நேரில் வந்து சந்திருக்கலாம்’ என்ற குற்றச்சாட்டு அப்பட்டமாகத் தொனித்தது.


அதற்குள் பணியாளர் ஒருவர் அவளுக்கு ஹாட் சாக்லேட்டும் அவனுக்குக் காஃபியும் வைத்துவிட்டுச் செல்ல, "வாவ்! நான் ஹாட் சாக்லேட்தான் சாப்பிடுவேன்னு இன்னுமா நினைவில் வெச்சிருக்கீங்க! தேங்க்ஸ்" என்ற ஸ்வேதா,


"ஆனா நான் இந்தக் காஃபியை எடுத்துக்கறேன்" என்று அதை எடுத்துக்கொள்ள,


"ஹேய் உனக்குத்தான் காஃபி பிடிக்காதே" என்றான் ஹரி.


"இல்ல இப்பல்லாம் நான் காஃபிதான் சாப்பட்றேன். அதுவும் இந்த நேரத்துல காஃபி சாப்பிடலன்னா எனக்கு தலை வலியே வந்துடும்" என்று காபியை எடுக்க,


"ஆனா இது அதிக ஸ்ட்ராங்கா சர்க்கரை கம்மியா கசப்பா இருக்கும். இரு உனக்கு வேற சொல்றேன்" என்ற ஹரியிடம்,


"இல்ல நானும் இந்த பிளென்ட்லதான் காஃபி சாப்பிடுவேன். நீங்க உங்களுக்கு வேற காபி சொல்லிடுங்க" என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன், தோள்களை குலுக்கி, "ஓகே எனக்கு இதுவே போதும்" என்று அந்த சாக்லேட் பானத்தை எடுத்துப் பருக, இப்போது வியப்பது ஸ்வேதாவின் முறையானது.


அவளின் வியந்த பார்வையில் இலயித்தவனாக, "ஸ்வேதா! நீ அவசரமா எங்கயாவது போகணுமா?” என்று கேட்க,


"அவசரம்னு எதுவும் இல்ல, தாம்பரத்துல ஒரு ட்ராவல் ஏஜன்சி வரைக்கும் போகணும்!" என்று ஸ்வேதா இழுக்க,


"சரி நீ அங்க போயிட்டு, வேலை முடிஞ்சதும் எனக்கு மெசேஜ் பண்ணு. நான் அங்கயே வந்து பிக் அப் பண்ணிக்கறேன். உன்ன ஒரு முக்கியமான இடத்துக்கு அழைச்சிட்டுப் போகலாம்ன்னு நினைக்கறேன்" எனச் சொன்ன ஹரியை யோசனையாகப் பார்த்தாள் ஸ்வேதா.


அவனுடைய செய்கை பேச்சு என எல்லாமே விசித்திரமாகவே இருக்கவும் அவனுடன் செல்ல அவளுக்குக் கொஞ்சம் தயக்கமாக வேறு இருந்தது.


எனவே அவனைத் தவிர்க்கும் பொருட்டு, "இல்ல ஹரி! அங்க கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகலாம். நான் வேற ஒரு நாள் வரட்டுமா?" என அவள் இழுக்க,


"வேற ஒரு நாள்னா, என்னைக்கு என்னோட வருவ? ஆறு மாசத்துக்கு அப்பறமாவா?" என்று அவன் சற்றுக் குரலை உயர்த்திக் கேட்கவும், இன்னும் ஆறு மாதம் அவளது பி.ஹெச்.டி. படிப்பு மீதம் இருக்கிறது. அடுத்த வாரத்திலேயே அவள் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ‘அது இவனுக்கு எப்படித் தெரியும்?’ என அதிர்ந்தாள் ஸ்வேதா.


அவள் நினைத்ததை அவனிடம் கேட்பதற்குள் கொஞ்சம் தணிந்திருந்தவன், "இப்பவே நம்ம ஃபேக்டரிக்கு என் கூட வா! தென் நானே உன்ன வீட்டுல ட்ராப் பண்றேன். நீ எந்த ட்ராவல் ஏஜன்சிக்கும் இப்ப போகத் தேவை இல்ல. விவேக்கிட்ட எல்லா டீட்டைல்ஸையும் கொடுத்துடு. அவர் பார்த்துப்பார்" என்று கட்டளையாகவே அனைத்தையும் சொல்லி முடித்தான் ஹரி.


‘இவன் என்ன நம்மை இப்படி டாமினேட் பண்றான்! ஓ மை காட்!’ என்று மனதில் எண்ணினாலும், மேலும் ஏதும் மறுத்துக் கூறத் தோன்றாமல் அவனுடன் தொழிற்சாலைக்குக் கிளம்பிச் சென்றாள் ஸ்வேதா.


ஒரகடம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான தொழிற்சாலையை நிறுவியிருந்தான் ஹரி.


மூவாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் மிகப் பிரம்மாண்டமான தொழிற்சாலை, அதி நவீன இயந்திரங்கள் எனப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.


தொழிலாளர்களுக்கான உணவுக் கூடம் மருத்துவமனை என எல்லா வசதிகளும் செய்யப்பட்டு மிக நேர்த்தியுடன் பராமரிக்கப்பட்டிருந்தது.


'விஜயா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய படிப்பிற்கு எனத் தனியாக உதவிகள் செய்து கொண்டிருந்தான்.


மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு இடத்தையும் அவளுக்குக் காண்பித்து ஹரி விளக்கிக் கொண்டே வர ஸ்வேதா வியப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.


அவனைக் காணும் பொழுது அங்கே வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அவ்வளவு மரியாதை தெரிந்தது.


அங்கே இருந்த அவனுடைய அலுவலக அறைக்குள் ஹரி அவளை அழைத்துச் செல்ல அங்கேயே உணவு வரவழைத்து இருவரும் உண்டு முடித்தனர்.


பிறகு ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு போய் அவளது குடியிருப்பின் வாயிலிலேயே அவளை இறக்கி விட்டு அவன் கிளம்ப எத்தனிக்க, "வீட்டுக்கு வாங்க ஹரி, உங்கள பார்த்தா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று அழைக்க,


"அர்ஜன்ட்டா துபாய் போறேன், இன்னும் ஒருமணி நேரத்துக்குள்ள நான் ஏர்போர்ட்ல இருக்கணும் ஸ்வேதா. இன்னும் நாலு நாள்ல திரும்ப வந்துடுவேன். தென்... கண்டிப்பா உன்னோட அப்பாயின்மென்ட் எனக்குத் தேவைப்படும்" என்று சொல்ல, அதில் வியப்பின் உச்சிக்கே போய்விட்டாள் ஸ்வேதா.


முந்தைய நள்ளிரவில்தான் அவன் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்தான் என்பதை அவனுடைய உதவியாளர் விவேக்குடனான அவனது உரையாடல் மூலம் அறிந்திருந்தாள்.


‘அன்று முழுவதும் அவளுடன்தான் இருந்திருக்கிறான்! அன்றைக்கே மறுபடி துபாய்க்குத் திரும்புகிறான் என்றால்? ஆக அவளைச் சந்திக்க மட்டுமே அவன் இங்கே வந்திருக்கிறானா? அப்படியானால் அவனுடைய திருமணம்?’ எனப் பலவாறான யோசனையுடன் நின்றிருந்தவள்,


"ஸ்வேதா ஒரு நிமிஷம்!" என்ற ஹரியின் அழைப்பில் கேள்வியுடன் அவனுடைய முகத்தைப் பார்க்க,


"இப்ப சொல்லு நான் எப்படி இருக்கேன்? சிங்கத்தோட வால் மாதிரியா? இல்லை எலியோட தலை மாதிரியா?" என்றவனின் கேள்வியில், அவளது வினாக்களுக்கெல்லாம் விடை கிடைத்த மகிழ்ச்சியில் கண்கள் குளமாக,


"உங்க பேருக்குத் தகுந்த மாதிரி சிங்கம் போல! ஹரின்னா சிங்கம்னும் ஒரு மீனிங் இருக்குத் தெரியுமா?!" என்று பெருமைப் பொங்கச் சொன்னாள் ஸ்வேதா.


அவள் சொன்ன ‘சிங்கம் மாதிரி’ என்ற வார்த்தையில் ஹரியின் மனம் நிறைந்திருக்க, அது கொடுத்த மகிழ்ச்சியில், "முதல்ல குரங்கு, இப்ப சிங்கமா? ம்ம்... எப்பதான் நீ என்னை ஒரு மனுஷனா பார்க்கப்போற?" என்று அவன் கிண்டலாகக் கேட்க,


விளையாட்டாகவே சொல்வதுபோல் என்றாலும் அவளுடைய மனதிலிருந்து, "யூ ஆர் எ கம்ப்ளீட் மேன் ஹரி! ரேமண்ட் மாடல் மாதிரிதான இருக்கீங்க? இதுல சந்தேகம் வேறயா?” என்று ஸ்வேதாவும் அவனுக்குப் பதில் கொடுத்தாள்.


அவள் கண்களில் வழிந்த இரசனையையும் அவன் மீதான காதலையும் மறைக்க முயன்றாலும் அது அவளால் முடியாமல் போக அதை நன்றாகவே உள்வாங்கியவன், 'ஹரி! இவளைப் பார்த்துட்டே இருந்த உன்னோட எல்லா வேலையும் கெட்டுப்போகும், விடு ஜூட்' என்ற எண்ணத்துடன்,


"ஆஹா... இது வேறயா?!” என்று சிரித்தவன், “ஓகே ஸ்வீட்! நேரம் ஆயிடுச்சும்மா... பை" என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பிச் சென்றான்.



அவனது கார் கண்களை விட்டு மறையும் வரை அது சென்ற திசையையே பார்த்திருந்தவளின் இதயமோ 'ஐ லவ் யூ ஹரி! ஐ மிஸ் யூ ஹரி!' என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே வேகமாகத் துடித்தது காதலுடன்.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page