top of page

Nee Sonna Oor Vaarthaikaaga! 8

Updated: Mar 17

பகுதி -8


அதன் பிறகு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை ஹரி. வண்டியை ஓட்டும் நிலையில் கூட அவன் இல்லை என்பதால் கால் டாக்ஸி புக் செய்து அப்படியே மருத்துவமனை கிளம்பிவிட்டான்.


வழியிலேயே பாலுவைக் கைப்பேசியில் அழைத்தவன், "பாலு! ஒரு மெடிக்கல் எமெர்ஜன்சி, ஜி.ஹெச். போயிட்டு இருக்கேன். என்ன ஏதுன்னு கேட்காம உடனே கிளம்பி நேரா அங்க வந்துடு" என்று மட்டும் சொல்லிவிட்டு அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கட் செய்துவிட்டான்.


நேரமோ இரவு பதினொன்றை நெருங்கியிருக்க, அவனது அப்பாவிடம் மட்டும் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை உடனே போகவேண்டும் என்று தகவல் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான்.


வெளியிலேயே அவனுக்காகக் காத்திருந்தான் பாலு. அவனது ஓய்ந்து போன தோற்றத்தைக் கண்டு பதறியவன், "என்ன ஆச்சுடா?" என்று கேட்க,


அவனிடம், ‘கொஞ்சம் இரு’ எனக் கைகளால் ஜாடை செய்தவன், கைப்பேசியில் அவனது அக்காவை அழைத்து ஸ்வேதா அனுமதிக்கப் பட்டிருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கான இடத்தை விசாரித்து அங்கே பறந்தடித்துச் சென்றான்.


***


அங்கே மயக்க நிலையில் ஸ்ட்ரெக்ச்சரில் கிடத்தப்பட்டிருந்தது ஸ்வேதாவேதான். கபிலா அங்கேயேதான் இருந்தாள்.


நெற்றியில் பலமாக அடிப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது. இரு கைகளிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.


ஹரிக்குத் தெரிந்திருந்த தகவல் கூட அறிந்திராததால் பாலுதான் பதறித் துடித்தான்.


கண்கள் கலங்கி மூளை மரத்துப் போய் அமைதியாக நின்றிருந்த ஹரியைப் பார்த்த கபிலா, "ஹரி இந்தப் பொண்ணு உன் ஃப்ரெண்ட்தானா?" என்று கேட்க, அவள் பேசியது அவனைச் சென்றடைந்ததாகவே தெரியவில்லை.


அவள் அவனை உலுக்கியபடி, “ஹரீ” என்றழைக்க,


"ஹான், என்ன சொன்னக்கா" என்றவனிடம்,


"இந்தப் பொண்ண உனக்குத் தெரியுமா?" என்று கேட்க,


"இவ என்னோட ஸ்வேதா" என குரல்வளை அடைப்படச் சொன்னவனை அவள் ஒரு புரியாப் பார்வை பார்க்க,


உணர்வுக்கு வந்தவன், "இவ என்னோட ஃப்ரண்ட் ஸ்வேதா..க்கா" என்று சொல்ல,


“தேங்க் காட், நல்லதாப் போச்சு” எனச் சற்று ஆசுவாசமடைந்தாள் கபிலா.


அதற்குள் பாலு நந்தாவை அழைத்து ஸ்வேதாவின் நிலையைச் சொல்லியிருந்தான்.


"பழவந்தாங்கல் இரயில்வே ஸ்டேஷன்ல அடிபட்டுக் கிடந்தவள நூத்தியெட்டுல கொண்டுவந்து இங்க சேர்த்திருக்காங்க” என்று சொல்லி விட்டு, “எக்ஸ்ரே மட்டும் எடுத்திருக்கோம் ஹரி, வலது புருவத்துக்கு மேல சின்னதா எலும்பு உடைஞ்சு உள்ளே குத்தி இருக்கற மாதிரி தோனுது.


சீடீ இல்லன்னா எம்.ஆர்.ஐ. கூட தேவைப் படலாம். சின்னதா ஒரு சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். அவளோட குடும்பத்துல யாராவது வந்தா அடுத்துச் செய்ய வேண்டியதைப் பத்தி முடிவு பண்ணலாம்” என்றாள் கபிலா.


"அவளோட அம்மா அப்பா ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்க. அவ அண்ணனுக்குத் தகவல் கொடுத்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான்” என்றான் பாலு.