top of page

Nee Sonna Orr Vaarthaikaaga! 6

Updated: Mar 17, 2023

பகுதி - 6


தன்னவளின் பிறந்தநாளின் முதல் வாழ்த்து தன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பிடிவாதத்துடன், சரியாக இரவு பன்னிரண்டாக சில நொடிகளே இருக்கும் நேரம் ஸ்வேதாவின் எண்ணிற்கு அழைத்தான் ஹரி.


எதிர்முனையிலோ, "தேங்க் யூ டா என் செல்ல அண்ணா" மிக மகிழ்ச்சியுடன் ஒலித்தது அவளது குரல்.


‘மற்றவர்களைப் போலவே தன்னையும் ஒரு நண்பனாக மட்டுமே நினைக்கிறாளே, அதுவும் முதன் முதலாக வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் அழைத்த இந்த நேரத்திலும், கைப்பேசியின் திரையைக் கூட பார்க்காமல் இப்படியா பேசுவாள் இவள்?’ என்று அவளது கவனக்குறைவை எண்ணி மனதுக்குள்ளேயே அவளை வறுத்தெடுத்தவாறு சில நொடிகள் மௌனமாகவே இருந்தவனை,


"ஹலோ! ஹலோ!" என்ற அவளுடைய அழைப்பு கலைக்க,


"பிறந்தநாள் வாழ்த்துகள்! ஹாப்பி பர்த்டே ஸ்வேதா!! ஹரி ஹியர்" என்றான் அவன்.


"நன்றி! நன்றி! நன்றி ஹரி! ஃபர்ஸ்ட் விஷ் உங்களோடதுதான், ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என்றவளின் குரலில் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் ஆச்சர்யமும் கலந்திருந்ததோ?


"எப்பவும் அண்ணாதான் முதல்ல விஷ் பண்ணுவான், அவன் இல்லாம நான் ஒரு பிறந்தநாள் கொண்டாடறதே இதுதான் ஃபர்ஸ்ட் டைம், அவன்தான் கூப்பிட்டான்னு நினைச்சுட்டேன், சாரி" என்றாள் தொடர்ந்து.


"சரி விடு, பிறந்தநாளும் அதுவுமா நீ சாரி எல்லாம் கேட்க வேண்டாம், காலைல ஏழு மணிக்கு ரெடியாகி காலேஜ் பஸ் நிற்கற இடத்துக்கு வந்திடு போதும். நாளைக்குப் பார்க்கலாம் பை" என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவனிடம் அவசரமாக, "நீங்க கிஃப்ட் பண்ண புடவை ரொம்ப சூப்பரா இருக்கு, இந்தக் கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும், மத்த நெக்லெஸ் செட், வளையல் எல்லாமே செம்மயா இருக்கு தேங்க்ஸ்" என்று சொல்ல,


"இட்ஸ் ஓகே ஸ்வேதா! புடவைய அம்மா செலக்ட் பண்ணாங்க, மத்ததெல்லாம் வர்ஷியும் பாலுவும்தான் வாங்கினாங்க, உனக்குப் பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம், பை" என்ற ஹரியிடம்,


"ஒரே ஒரு நிமிஷ்ம் ஹரி! நாளைக்கு எங்கதான் போகப் போறோம்? இப்பவாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்று, ஸ்வேதா கெஞ்சலாகக் கேட்க,


"அது சஸ்பென்ஸ், நாளைக்குத் தானாகவே உனக்குத் தெரியத்தான் போகுது, இப்பவே என்ன அவசரம்” என்று அழைப்பைத் துண்டித்தான் ஹரி.


‘பரவாயில்ல, அவ கொஞ்சம் சொதப்பினாலும் நாம முதல்ல விஷ் பண்ணதுல அவ ஹாப்பிதான், நாம வாங்கிக் கொடுத்த புடவையும் அவளுக்குப் பிடிச்சிருக்கு. உஃப்... அவ ஜாலியாதான் இருக்கா, மனசல இருக்கற ஃபீலிங்ஸை மறைக்க முடியாம இவ படிப்பு முடியறதுக்குள்ள நாமதான் ஒரு வழி ஆயிடுவோம் போலிருக்கு’ என மனதிற்குள்ளேயே புலம்பித் தவித்தபடி உறங்கிப் போனான் ஹரி.


அடுத்த நாள் அவர்களுக்காய் அழகாக விடிந்தது


***


அவன் பரிசளித்த புடவையில், வர்ஷினி தேர்வு செய்திருந்த அணிகலன்களை அணிந்து அழகுற, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஸ்வேதாவை தன் விழிகளால் பருகியவாறு அவனது காரை ஓட்டி வந்து அவளுக்கு அருகில் நிறுத்தினான் ஹரி.


பாலுவை எதிர்பார்த்திருந்த ஸ்வேதாவோ, அருகில் வந்து நின்ற காரைக் கண்டு, ஒரு நொடி திடுக்கிட்டுப்போனாள்.


"பிறந்தநாள் வாழ்த்துகள் சுவீட்டா" என்றவாறே காரிலிருந்து இறங்கிய பாலுவைக் கண்டதும் நிம்மதியுற்றவள்,


"தேங்ஸ் பாலுண்ணா! நீங்க என்ன கார்ல வந்து இறங்கறீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,


காரின் பின் கதவைத் திறந்தவாறே, "நீ முதல்ல உள்ள வந்து உட்கார்ந்துட்டு மத்த கேள்விலாம் கேளு பர்த்டே பேபி" என்றான் பாலு.


உள்ளே அமர்ந்த ஸ்வேதா வண்டியை ஓட்டி வந்த ஹரியைக் கண்டு புன்னகைத்தவாறே, ‘ஓஹோ, ஹரியோட கார்தானா இது’ என்று மனதிற்குள் நினைத்தவள் எப்பொழுதும்போல் விளையாட்டாக,


"ஆஹான்!! எப்படியோ என்னால, வீக் எண்ட்ல கூட நம்ம ஹரியோட காத்து இந்தப் பக்கம் அடிச்சிருக்கு" என்று கிண்டலுடன் சொல்ல,


"அஃப்கொர்ஸ் நோ டௌவ்ட், ஒன்லி ஃபார் யூ ப்ரின்ஸ்ஸ்!" என்று புன்னகையுடன் அவனும் தன்னை மறந்து உல்லாசமாகச் சொல்லி வைக்க,


வியப்பு மேலிட விழி விரித்து அவனைப் பார்த்து, "வாவ்! தேங்ஸ்" என்று அவனுக்குப் பதிலை திருப்பிக் கொடுத்தவளோ வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.


முன்புறக் கண்ணாடியின் வழியே அவளது முகத்தைப் பார்க்க முயன்ற ஹரி அது முடியாமல் போகவே, அவளிடம் பேசுவது போல் திரும்பி அவளைப் பார்த்து, "ஸ்வேதா பிரேக் பாஸ்ட் சாப்பிட்டியா?" என்று கேட்க,


கொஞ்சமும் திரும்பாமல் வேடிக்கை பார்த்தவாறே, "ஆச்சு, இட்லி சாம்பார் வித் லதாவோட ஸ்பெஷல் காரட் ஹல்வா" என்றாள் ஸ்வேதா.


‘ஒரு கேள்வி கேட்டா பத்து பதில் சொல்லு! இங்கே ஒருத்தன் உன் முகத்தைப் பார்க்க ஆர்வமா துடிச்சிட்டு இருக்கான், அது புரியாம குட்டி பாப்பா மாதிரி நல்லா வேடிக்கை பாரு!’ என மனதிற்குள்ளேயே புலம்பினான் ஹரி.


ஹரியின் கண்களில் வழிந்த காதல் யாருக்குப் புரிய வேண்டுமோ அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த பாலுவிற்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்துபோக, ‘என்னடா நடக்குது இங்க?’ என்று குழம்பினான்.


***


அவர்களது கல்லூரி அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாள் வர்ஷினி. அவளை ஏற்றிக்கொண்டு அந்த கார், போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாத அந்தச் சாலையில் காற்றைக் கிழித்துப் பறந்ததது.


பாலு ஹரியை நோக்கி, "இப்பவாவது சொல்லுடா நாம எங்கதான் போறோம்?" என்று ஆர்வமாய் கேட்க,


"இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம்தான், வெயிட் பண்ணு உனக்கே தெரியும்" என்று சொன்ன ஹரி சொன்னதுபோல் பதினைந்து நிமிடத்தில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையிலிருந்து திரும்பி அங்கே நிறுவப்பட்டிருந்த மிகப் பெரிய ஆஞ்சநேயரின் சிலை ஒன்றை தாண்டிச் சென்று காரை நிறுத்திய இடம் 'கஜகிரி' என்ற அழகிய ஒரு சிறு மலை அடிவாரம்.


இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அந்தக் குன்றின் மேல் கோவில் ஒன்று இருந்தது.


"வாவ் இது புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில்தான?" எனக் கேட்ட பாலு, "செம்ம டா, நானே இங்கே வரணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்" என்றான் மகிழ்ச்சியுடன்.


வர்ஷினியோ, "ஹரி அண்ணா நீங்கதான் கோவிலுக்கெல்லேம் போக மாட்டீங்கன்னு சொல்லுவிங்களே, இன்னைக்கு இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க?" என்று வியந்தாள்.


“சின்ன கரக்ஷன் வர்ஷ்” எனத் திருத்தியவன், "அம்மா கூப்பிட்டா மட்டும் போவேன், இன்னைக்கு ஸ்வேதாவுக்காக. அவதான் பரம அனுமார் பக்தையாச்சே" என்று அவன் தான் அங்கே வந்த காரணத்தைச் சொல்ல, மறுபடியும் அதிர்ந்தான் பாலு.


ஸ்வேதாவோ அவன் சொன்ன எதையும் கவனித்ததுபோலவே தெரியவில்லை. அவள் கொஞ்சம் தள்ளிப்போய் நின்றுகொண்டு அங்கிருந்த சூழலில் இலயித்திருந்தாள்.


"ஸ்வேதா!" என்று ஹரி, அவளைக் கூப்பிட, அவன் அழைத்ததில் சற்றும் கவனமின்றி மலையின் மேலே இருந்த கோவிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளருகில் சென்று தோளில் தட்டிஅவளை அழைத்த வர்ஷினி, "ஸ்வேதா, ஹரி அண்ணா உன்னைக் கூப்பிடுறாங்க பாரு!" என்று சொல்லவும்தான்,


"ஆங், சாரி! ஹரி! கவனிக்கல சொல்லுங்க எதுக்குக் கூப்பிட்டீங்க" என்று கேட்டாள் ஸ்வேதா.


"இல்ல மலைக்கு மேல கார்லயே போகலாமா? இல்ல படில நடந்து போகலாமா? இதைக் கேட்கத்தான் கூப்பிட்டேன்" என்றான் ஹரி.


மற்ற இருவரின் வசதியை அறிந்துகொள்ளும் பொருட்டு அவள் வர்ஷினியையும் பாலுவையும் ஒரு பார்வை பார்க்க, நடந்தே போகலாம் என்றனர் இருவரும்.


முதலில் மலை அடிவாரத்தில் வீற்றிருந்த விநாயகரை வணங்கிவிட்டு, குறைந்த படிக்கட்டுகளே இருக்க, அனைவரும் விருப்பமுடன் நடந்தே மலையேறிப்போய், அங்கே குடிகொண்டிருக்கும் சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீராமபிரானையும், வீர ஆஞ்சநேயரையும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மலையின் சூழல் அவ்வளவு இனிமையாய் இருந்தது.


நான்கு பேரும், கோவிலில் பிரசாதமாகக் கொடுத்த சர்க்கரைப் பொங்கலை எடுத்துக்கொண்டு அங்கே இருந்த ஒரு மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர, "உண்மையாவே, இந்த இடம் அவ்வளவு அருமையாக இருக்கு. இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஹரி. இந்த அட்மாஸ்ஃபியர் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் இது வரைக்கும் இந்தக் கோவிலைப் பத்தி கேள்விப்பட்டதே இல்ல. ஒரு தடவ அம்மா அப்பாவ அழைச்சிட்டு வரணும்" என நெகிந்தாள் ஸ்வேதா.


அவளுடைய மகிழ்ச்சியை அவனுடைய கண்களும் அப்படியே பிரதிபலித்ததை ஸ்வேதாவைத் தவிர மற்ற இருவரும் நன்றாகவே கவனித்தனர்.


அடுத்து அவர்களை அவன் அழைத்துச் சென்ற இடம் கோவளத்தில் அமைத்திருக்கும் ஒரு பிரபல நட்சத்திர விடுதி.


அங்கே கடற்கரை ஓரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த உணவகத்தில், எல்லோருக்கும் பிடித்தமான உணவை ஆர்டர் செய்துவிட்டு, அலைகளில் நிற்கலாம் என வர்ஷினியும் ஸ்வேதாவும் கடலை நோக்கிப் போக, ஹரியும் பாலுவும் அங்கே அமைக்கப்பட்டிருந்த குடிலில் அமர்ந்திருந்தனர்.


அங்கே உணவு மேசையில் வைக்கப்பட்டிருந்த மென்தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் ஹரி. "என்ன ஹரி, பேங்க் லோன் சாங்க்ஷன் ஆயிடுச்சா?" என்று பாலு கேட்க,


"இந்த டிரீட் ஸ்வேதா பிறந்தநாளுக்காக மட்டும்னு நினைச்சியா? லோன் கிடைச்சு, முதல் படியா முக்கியமான மெஷின் ஒண்ணும் வாங்கிட்டோம்" என்ற ஹரியின் கண்கள் ஸ்வேதாவையே தொடர்ந்து கொண்டிருந்தன.


பாலுவிற்கு ஒரு நண்பனாக ஹரியை மிகவும் பிடிக்கும்தான். ஆனால் ஸ்வேதா விஷயத்தில் ஹரியின் இந்த மாறுதல்களை ஏற்க அவனுக்கு மனமில்லை.


அவள் அவனுடைய நண்பனின் தங்கைதான். அண்ணனின் அதே இடத்தை அவள் தனக்கும் கொடுத்திருப்பதில் அவனுக்கு எப்போதும் ஒரு கர்வமுண்டு.


அவனுக்குச் சகோதரிகள் கிடையாது. ஸ்வேதா ஆறாவது படிக்கும் பொழுதிலிருந்து அவளை அவனுக்குத் தெரியும்.


நந்துவுடனான அவளது பிணைப்பைப் பார்த்து பலமுறை பொறாமைகூடபட்டிருக்கிறான். காலப்போக்கில் அவர்களுள் அவனும் ஒன்றிப்போனான். ஸ்வேதா அவளது அன்பால் அவனை ஒன்றச் செய்திருந்தாள் என்பதே உண்மை.


அவளை ஒருவன் வேறு பார்வை பார்ப்பதை, அது ஹரியே என்றாலும் கூட, அவனுக்கு அச்செயல் பிடித்தமற்ற ஒன்றுதான். மனம் குறுகுறுக்க ஹரியையே அமைதியாகப் பார்த்திருந்தான் பாலு.


பாலுவின் அமைதி மனதில் உரைக்க, அவனைத் திரும்பிப் பார்த்த ஹரி, அவன் முகம் இறுகி இருப்பதைக் கவனித்து, "என்ன பாலு திடீர்னு சைலன்ட் அகிட்ட" என்று கேட்க,


"நீ ஸ்வேதாவை லவ் பண்றியா ஹரி?" என நேரடியாகவே கேட்டுவிட்டான் பாலு.


அவனும் பாலுவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னான், "ம்.. ஆமாம்."


அவ்வளவு கர்வத்துடன் ஒலித்தது அவனது குரல்.


ஹரியின் சட்டையைப் பிடிக்கும் அளவிற்குக் கோபம்தான் வந்தது பாலுவிற்கு. பெண்கள் இருவரும் பார்த்துவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், அமைதியாகவே கேட்டான், "உன்னை நம்பி அவ கூட பழகவிட்டதாலதான இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்துது?"


"இல்ல, எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு போனதாலதான் அவ கூட பழகவே ஆரம்பிச்சேன்"


கல்லூரி பார்க்கிங்கில் அவளை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளுக்காக அவன் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலையும் சொன்னான் ஹரி. பாலுவிற்கும் முதலில் இருந்த கோபம் கொஞ்சம் மட்டுப்படவே அவளுக்காகப் பார்த்துப் பார்த்து செய்யும் ஹரியுடைய மனதும் புரிந்தது. காலையிலிருந்து அவனும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்? ஹரி, கல்லூரியில் மற்ற பெண்களிடமெல்லாம் எப்படிப் பழகுகிறான் என்பதும் அவனுக்குத்தான் தெரியுமே!


‘பெரியவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்தாலும் ஹரியைப் போன்ற ஒரு துணை ஸ்வேதாவிற்குக் கிடைக்க வாய்ப்பில்லையோ?’ என்ற எண்ணம்தான் தோன்றியது.


"சரி, நந்தா கிட்ட சொல்லி அவங்க அப்பாகிட்ட பேச சொல்லவா? படிப்பு முடிஞ்ச உடனே அவள கல்யாணம் பண்ணிக்கறியா?" என்று பாலு கேட்க,


"யார் படிப்பு" என வேகமாக வந்தது ஹரியின் பதிலான கேள்வி.


"ஏன்? உன் படிப்புதான்" என்றான் பாலு.


தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான் ஹரி.


"நான் சொன்னது உனக்கு காமெடியா இருக்கா?" என்று பாலு காய,


"உன் பாசமலருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்! அவ அப்பாவுக்கு ஃபாரின்ல வேலை செய்யற மாப்பிளைத்தான் வேணும்! என்னோட அப்பாவுக்கு அவரோட வியாபாரத்தை மகன் வளர்த்துவிடணும்னு ஆசை. இப்ப உனக்கு நான் உடனே அவளக் கல்யாணம் பண்ணிக்கணுமா? நான் வெளிநாடு போகவா இல்ல இங்க வியாபாரத்தைக் கவனிக்கவா? இப்ப போய் பெண் கேட்டால் அவளோட அப்பா சம்மதிக்க மாட்டார்னு உனக்குத் தெரியுமா தெரியாதா?”


இத்தனை தொடர் கேள்விகள் ஆற்றாமையுடன் வந்து விழுந்தன ஹரியிடமிருந்து.


அவன் சொன்ன நியாயம் புரியவே, பாலு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.


"எனக்குக் கொஞ்சம் டைம் வேணும், பாலு. குறைந்தபட்சம் அவ படிப்பு முடியுற வரைக்கும். தேவப்பட்டா அவ எம்.எஸ். படிக்கட்டும். நான் வெய்ட் பண்றேன். இதுக்குமேல இதை இப்படியே விடறதும், இல்லை பிரச்சினை ஆக்கறதும் உன் இஷ்டம். ஆனா எந்தக் காரணத்துக்காகவும் ஸ்வேதாவ என்னால விட்டுக்கொடுக்கவே முடியாது" என்று முடித்தான் ஹரி.


அந்தக் கணத்தில் அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.


அப்பொழுது ஹரி எழுதிக்கொண்டிருந்த அந்தக் காகிதம் பறந்து வந்து பாலுவின் மேல் ஒட்டிக்கொண்டது. அதைப் பிரித்துப் பார்க்க அது ஒரு கவிதை.


‘ஹரி எழுதியதா இது?’ என வியப்புடன் அதைப் படிக்கத் தொடங்கினான் பாலு!


மஞ்சள் மலர்களின் நடுவே


மலர்ச் செண்டென உனைக் கண்டேன்!


என்னவளே!


மனம் முழுதும் உனைக் கொண்டேன்!உன் பார்வை...


உன் சிரிப்பு...


உன் கோபம்...


உன் குறும்பு...


துளித் துளியாய் சேகரிக்கிறேன்!


என் நெஞ்சமெனும் பேழைக்குள் சேமிக்கிறேன்!சிறு துளியிலேயே மூழ்கிப்போகிறேனடி...


வெள்ளமென நீ வந்தால்??


என்னவாகும், என் நிலைமை!காமம் மட்டுமே, இலக்கென்றால்


காதலென்று பெயர்ச் சொல்லி…


யாசித்திருப்பேன் உன்னை!யாசிப்பதும்...


இலக்கு மாறிப் பயணப்படுவதும்...


பழக்கமில்லை எனக்கு!தவமிருக்கிறேனடி!


என் இதயம் முழுதும் உனை நிரப்பி...


நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!வரம் கொடுக்கவும்...


வரமாகவும்...


நீயே வா நம் காதலுடன்!போராடுகிறேனடி...


எனக்கு நானே பந்தயம் வைத்து…


நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!வெற்றிபெறும் நாளில்…


பரிசளிக்கவும்…


பரிசாகவும்…


நீயே வா… நம் காதலுடன்!


ஹரி…அந்தக் கவிதையின் வரிகளில், அவன் கொண்ட காதலின் ஆழம் மனதைத் தாக்கியதில், கண்களில் நீர் கோர்க்க, அதை ஹரிக்குக் காண்பிக்க இயலாது, கடல் அலைகளின் புறம் தன் முகத்தைத் திருப்பிய பாலு, அங்கே சிறு பிள்ளை போல் கிளிஞ்சல்களைப் பொறுக்கியவாறே வர்ஷினியுடன் சலசலத்துக் கொண்டிருந்த ஸ்வேதாவைக் கண்டு கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.


ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஹரியைப் திரும்பிப் பார்க்க, வர்ஷினியுடன் வளவளத்தபடி ஸ்வேதா கிளிஞ்சல்களைச் சேகரிக்கும் அந்தக் காட்சியையே இரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி!0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page