top of page
Writer's pictureKrishnapriya Narayan

Nee Sonna Oor Vaarthaikaaga! 2

Updated: Mar 17, 2023

பகுதி - 2


கைப்பேசியின் இசையில் உணர்வு வர, ஸ்வேதா அதன் திரையைப் பார்க்கவும் அவள் அண்ணி தரணிதான் அழைத்திருந்தாள். மணியைப் பார்த்தால் பதினொன்றரை எனக் காட்டியது


"என்ன அண்ணி இந்த டைம்ல கால் பண்றீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா??" என்றவளிடம்,


“இல்ல ஸ்வேதா! ஆஃபிஸ் வேலையை முடிக்காம வீட்டுக்கு எடுத்து வந்துட்டேன், ஒரு ப்ரோக்ராம் ரன் ஆகல. வைஃபை வேற ஸ்லோவா இருக்கு. உன்னால கொஞேசம் ஹெல்ப் பண்ண முடியுமா? நான் அங்கேயே வரேன்" என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் தரணி.


"சரி அண்ணி வாங்க நான் ட்ரை பண்றேன்" என்று சொல்லவும் அடுத்த நிமிடமே தன் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள். தன்னுடைய மொபைல் ஹாட்ஸ்பாட் உதவியுடன் இருபது நிமிடத்தில் அந்த ப்ரோக்ராமை ரன் செய்து கொடுத்தாள் ஸ்வேதா


தரணி அவளைக் கட்டிக்கொண்டு, "ரொம்ப தேங்க்ஸ் ஸ்வேதா! கம்பனில இருந்து ஃபோன் வேற வந்துட்டே இருக்கவும் செம டென்ஷன் ஆயிட்டேன்! எங்க இன்னைக்குத் தூங்கவே முடியாதோன்னு நினைச்சேன் தேங்க்ஸ்! தேங்க்ஸ்!" என்று சொல்ல,


"ஐயோ அண்ணி பரவால்ல விடுங்க. முதல்ல நீங்க போய் தூங்குங்க" என்று சொல்லி அவளை அனுப்பிய ஸ்வேதாவின் தூக்கம்தான் தூரப் போயிருந்தது ஹரியின் நினைவுகளால்.


அதே நேரம் துபாயிலிருந்து சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஹரி. ஸ்வேதாவை முதன் முதலில் சந்தித்த நாளின் நினைவலைகள்தான் சுழன்று கொண்டிருந்தது அவனுடைய மனதிற்குள்ளும்.


தந்தையின் வற்புறுத்தலால் மட்டுமே எம்.ஈ. சேர்ந்திருந்தான். அவன் வீடு என்னவோ திருவள்ளூரில்தான் இருந்தது. ஆனாலும் அவனுக்குத் தன் தந்தையுடன் அடிக்கடி ஏற்படும் உரசலைத் தவிர்க்கவே ஹாஸ்டலில் தங்கியிருந்தான்.


கல்லூரி தொடங்கி ஒரே ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே அவன் வகுப்பில் உடன் படிக்கும் பாலுவுடன், அவனுடைய வெளிப்படையான குணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆழ்ந்தவொரு நட்பு உருவாகியிருந்தது.


***


அப்பொழுது ஒருநாள் கல்லூரி நேரம் முடிந்தவுடன் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த கல் மேடையில் உட்கார்ந்தவாறு பாலுவிற்காக காத்திருந்தான் ஹரி.


அன்றுதான், அங்கேதான் அவன் வாழ்க்கையே மாற்றிப்போட்ட அவனுடைய தேவதைப் பெண்ணை அவன் முதன்முதலில் பார்த்தது.


அழகிய மாம்பழ நிறமும் வயலட் நிறமும் கலந்த சுடிதார் அணிந்து கொடி போன்று மெல்லியளாய் கவிபாடும் கருவண்டு கண்களுடன், வில்லென வளைந்த புருவங்களின் மத்தியில் சிறிய திலகம் இட்டு, கூர் நாசியுடன், சிவந்த உதடுகள் சுழித்திருக்க அங்கே வந்தாள் ஸ்வேதா.


சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவள் பாலுவின் பைக்கைக் கண்டு, "நல்ல வேள" என முணுமுணுத்தவாறே அதன் அருகில் வந்து நின்று கொண்டு தன் கைப்பேசியில், "பாலு அண்ணா நான், காலேஜ் பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன். போகும்போது என்னை வீட்டுல டிராப் பண்ணுவீங்களாம்" எனறு சொல்ல,


அதற்கு அவன் என்ன சொன்னானோ, "ஓய், ஓவரா சீனெல்லாம் போடாதீங்க என்ன, உங்க பைக் பக்கத்துலதான் நிக்கறேன், உங்க ஃபிரண்ட ஒரே ஒரு நாள் நடந்து போகச் சொல்லுங்க. ஹாஸ்டல் இங்க இருந்து அரை கிலோமீட்டர்தான இருக்கும். ப்ளீஸ் அண்ணா" என்று குழைய,


அவன் ஏதோ கூறியிருக்க, குறும்பு கொப்பளிக்கும் குரலில் "ம்க்கும் ரொம்ப தேங்ஸ்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.


‘ஓஹோ 'என் ஃப்ரண்ட் நத்தாவோட தங்கை, இங்கதான் சி.எஸ். செகண்ட் இயர் படிக்கறா, பிளஸ் டூ மாத்ஸ்ல செண்டம், சூப்பரா பாடுவா!’ அப்படில்லாம் நம்ம காதே ஓட்டையாற அளவுக்கு பாலு, புகழ்ந்து பாடிட்டிருக்கற ஸ்வேதா இவதானா?’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்ட ஹரி கண்களை எடுக்க முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


சொல்லப்போனால், அந்தச் சில நிமிடங்களிலேயே, அவளின் எழிலில், அவளுடைய பாவத்தில் தன்னை மொத்தமாகத் தொலைத்திருந்தவன் அவனையும் அறியாமல் மெலிதாகப் பாடத்தொடங்கியிருந்தான்.


"முன் அந்திச் சாரல் நீ


முன் ஜென்மத் தேடல் நீ


நான் தூங்கும் நேரத்தில்


தொலைதூரத்தில் வரும் பாடல் நீ


ஆனால் அங்கே இப்படி ஒருவன் தனக்காக உருகிக் கொண்டிருப்பதைக்கூட கவனிக்காமல், அந்த பைக்கிலேயே சாய்ந்து நின்றவாறு பாலுவிற்காகக் காத்திருந்தாள் ஸ்வேதா!


அதே நேரம் ஹரியை அழைத்திருந்தான் பாலு. "சாரி ஹரி" என அவன் ஆரம்பித்த உடனேயே,


"என்ன உன்னோட பாசமலர வீட்டுல ட்ராப் பண்ணப்போற அதான" என்று கேட்க


"எப்படிடா தெரியும்" என்ற பாலுவிடம்,


“உன் ஃப்ரண்ட் நந்தாவோட தங்கதான அவ? ஃபோன்லல்லாம் பேசியிருக்க வேண்டாம்டா, அப்படியே பேசியிருந்தாலே உனக்குக் கேட்டிருக்கும்" என்ற ஹரி,


"நான் ஹாஸ்டலுக்கு நடந்தே போய்க்கறேன், நீ கிளம்புடா என்று ஃபோனைக் கட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான்.


அன்றிலிருந்து தினமும் ஸ்வேதா கல்லூரிக்கு வரும் பொழுதும், திரும்பச் செல்லும் பொழுதும் தூரத்திலிருந்து அவளை சைட் அடிப்பதை வழக்கமாக்கியிருந்தான் ஹரி.


அவன் படித்தது மொத்தமுமே கோ-எட்தான். நிறைய தோழிகளும் அவனுக்குண்டு. ஆனாலும் இவளைப் போல வேறு யாரும் அவனைப் பாதித்ததில்லை அது ஏனென்றும் அவனுக்குத் தெரியவேயில்லை!


***


அன்று பாலுவிடம் சரியான கோவத்தில் இருந்தான் ஹரி.


"வைரம் தொலைக்காட்சி நடத்தற ‘தமிழ்ப்பாட்டுப் பாட வா’ ப்ரோக்ராமோட செலெக்ஷன், நேரு ஸ்டேடியத்துல நடக்குது, நீயும் வரியா? ஜஸ்ட் ஒரு ட்ரை" என அவன் பாலுவை அழைக்க,


அவனோ, "என்னால அங்க வந்து நாலஞ்சு மணிநேரமெல்லாம் வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்க முடியாது! போன தடவ தெரியாத்தனமா அந்த ஸ்வேதா குரங்கோட நான் போய் மாட்டிட்டது எனக்குதான தெரியும்" என்றதுடன் நில்லாமல் அவனை நன்றாகக் கிண்டலடித்துவிட்டு வேறு சென்றுவிட்டான் பாலு.


அவனைக் கிண்டல் செய்ததோடல்லாமல் அவனுடைய மனதிற்கினியவளை குரங்கு என்று வேறு சொல்லிவிட்டதால் நொந்தே போன ஹரி,


‘மறுபடியும் பிராஜக்ட், அது இதுன்னு நம்மகிட்ட வராமலேயே போயிடுவானா! அப்ப இருக்கு அவனுக்கு’ என மனதிற்குள்ளேயே அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த நேரம் பாலுவே அவனைக் கைப்பேசியில் அழைத்து ஸ்வேதாவை அந்தக் குரல் தேர்வுக்கு ஹரியையே உடன் அழைத்து போகச் சொல்லவும், அவன் பாலுவிடம் கொண்ட கோபமெல்லாம் போன இடம் தெரியாமல் பறந்து போனது.


***


அடர் நீல ஜீன்ஸ், வெள்ளையில் நீல நிறப் பூ வேலை செய்யப்பட்ட குர்த்தி அணிந்து தலைமுடியை கிளிப் போட்டு அடக்கி, ஐ லைனரினால் நெற்றியில் மெல்லிய கிறுக்கலாக வரைந்து எழிலுற இருந்தவளைப் பார்த்தவாறே, மகிழ்ச்சியில் சிறகின்றி பறந்துதான் வந்தானோ! நடந்துதான் வந்தானோ!


சரக்கொன்றை மரத்தடியில், அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.


பாலு அவனைப் பெண்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, மிகவும் முயன்று முகத்தில் உணர்வுகளை வெளிக்காட்டாமல், சகஜமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஸ்வேதவுடன், நேரு ஸ்டேடியம் நோக்கி கிளம்பிச் சென்றான் ஹரி.


அன்றைய நாள் அவனது வாழ்க்கையில் ஒரு பொன்னான நாளாகிப் போனது. ஹாஸ்டல் திரும்பிய பின்னர்கூட அன்றைய தினத்தில் நடந்ததையே நினைத்திருந்தான்.


என்னதான் பாலு சொன்னான் என்றாலும் கூட அன்றுதான் முதல் முதலாகப் பார்த்த தன்னுடன், தன்னை நம்பி வந்திருக்கிறாள் என்பதே அவனை ஆனந்த மழையில் நனைத்தது


அதுவும், அவன் ஹாஸ்டல் போய் சேர நேரமாகும் என்று அவளுடைய உணவை அவனுக்குக் கொடுத்து மேலும் அவனை மகிழ வைத்தாள்.


அவளுக்குப் பிடித்தப் பாடலை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்டான், அவள் என்ன பாடல் பாடப்போகிறாளென்று.


அவள் சொன்னாள், "நின்னை சரணடைந்தேன்" என்று. அவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல். பீ.ஈ. படிக்கும்போது ஒருமுறை இன்டர்காலேஜ் மீட் டில் அந்தப் பாடலைப் பாடி முதல் பரிசும் வாங்கியிருந்தான்.


அவள் நீங்க என்று கேட்கவும் கொஞ்சமும் யோசிக்காமல் "முன் அந்தி சாரல் நீ" என்றான். "வாவ் எனக்கும் அந்தப் பாட்டு ரொம்பவே பிடிக்கும்" என்றவள், “உங்களுக்கு ஏன் அந்தப் பாட்டு பிடிக்கும்" என்று வேறு கேட்க,


"ஏன் எதுக்குனெல்லாம் தெரியாது, ஆனா பிடிக்கும்" என்ற ஹரி, "உன்னால்தானடி பெண்ணே! உன்னை முதல் முதலில் பார்த்தபோது என்னை அறியாமல் இந்தப் பாடலைத்தான் பாடத்தோன்றியது. அதனால்தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இதைச் சொன்னால் இவள் நம்மை ஒரு ஃப்ரண்டாகக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டாளே" என்று மனதினில் நினைத்துக் கொண்டான்,


"உனக்கு ஏன் இந்தப் பாட்டுப் பிடிக்கும்" எனக் கேட்க,


‘ஏன்தான் கேட்டோமோ?’ என அவனை அதிர வைத்தாள் ஸ்வேதா.


"ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் செமையா இருக்கும்ல"


"ம்”


"கார்த்திக் - மேகா வாய்ஸ் சூப்பரா இருக்கும்ல"


அவள் சொல்வதற்கெல்லாம் ‘ம்’ ‘ம்’ என உம் கொட்டினாலும், ‘ஒரு பாட்ட ஏன் பிடிக்கும்ணு கேட்டதுக்கு இவ்ளோ டீடைல்ஸா’ என மைன்ட் வாய்சில் நினைத்துச் சலித்தான்.


"நா. முத்துக்குமார் லிரிக்ஸ் சான்ஸே இல்ல”


"எக்ஸாட்லி"


"பிக்சரைசேஷன் அல்டிமேட்டா இருக்கும்ல. சூர்யா சிக்ஸ் பேக்ஸ்லாம் வச்சு செம்மையா இருப்பார்ல" எனறு அவள் சொல்லிக்கொண்டே போக,


தன்னை மறந்து ஹரி, "அடிப்பாவி" என்றுவிட,


முகத்தைச் சுருக்கி "அடிப்பாவி யா?” என்று அவள் கேட்க,


"பின்ன" என்றவன், "ஆமாம் நீ எப்பவுமே இப்படித்தானா? எக்ஸாம்ல அஞ்சு மார்க் க்வஸ்டின்கு அம்பது மார்க்குக்கு எழுதுவயா என்ன? “என்று கேட்க,


"எழுதலாம்தான், ஆனா மொத்த க்வஸ்டின் பேப்பரையும் முடிக்க டைம் இருக்காதே" என்று அவள் சொன்ன பாவனையில் சிரித்தேவிட்டான் ஹரி.


அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு, "குட்டியா அழகா ஒரு பொட்டு வெச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்! இப்படி பாம்பு தேளையெல்லாம் முகத்துல கிறுக்கி வெச்சிருக்காளே! இந்த அழகான கூர் மூக்குல குட்டியா ஒரு வெள்ளக் கல் மூக்குத்திப் போட்டிருந்தா இன்னும் அழகாக இருக்குமே?" என எண்ணாமல் இருக்க முடியவில்லை.


தனது இரசனையை வெளிப்படையாகக் காண்பிக்காமல் மனதில் எண்ணியதை நாசூக்காக அவளிடம் கேட்கவும் செய்தான் ஹரி.


"ப்ச்சு... எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு" என்ற ஸ்வேதா,


"அதுவும் மூக்கு குத்திக்கறதா? ஐயோ என்னால வலியெல்லாம் தாங்க முடியாது, சான்ஸே இல்ல?" என நொடித்துக் கொள்ள,


"தாயே சும்மாதான் சொன்னேன், ஆளை விடு!" என்றான் ஹரி.


மாரியம்மா என வர்ஷினியை அழைப்பதற்கு அவள் சொன்ன விளக்கத்தை நினைத்து அன்றைக்கெல்லாம் சிரித்துக்கொண்டே இருக்க, அது அவனது ரூம்மெட் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்கும் வரை தொடர்ந்தது. பிறகு ஒரு வழியாக, வடிவேலு காமடி ஒன்றைச் சொல்லி சமாளிக்க வேண்டியதாய் போனது.


இதையெல்லாம் மனதிற்குள் அசைப்போட்டவாறே விமானத்தில் உட்கார்ந்திருந்தவனது முகத்தில் இப்பொழுதும் கூட மென் புன்னகை அரும்பியது.


விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பில் நிகழ்காலத்திற்கு வந்தவன், "இவளைப் பார்க்கறதுக்காகவே எல்லா வேலையையும் தள்ளிவெச்சுட்டு வந்திருக்கோம்! நாளைக்கு நேர்ல பார்க்கும் போது எப்படி ரியாக்ட் பண்ணப்போறாளோ அந்த அழகான இராட்சசி?!" என்று எண்ணியவாறே சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினான் ஹரி.



0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page