பகுதி - 16
பெண் பார்க்க வந்த எல்லோரும் அமர்ந்திருப்பது தெரியவும் அவளால் எதையும் சொல்லக்கூட முடியவில்லை.
சத்தம் செய்யாமல் பூனை நடையுடன் அவளை முதல் தளத்தில் இருந்த அவளது அறைக்கு அழைத்து வந்த தரணி, "சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு ரெடியா இரு, இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவளைத் தடுத்த ஸ்வேதா, "அண்ணி! நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீங்க எல்லாரும் ஏன் இப்படி செய்யறீங்க?" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்கவும்,
"என்னனு தெரியல ஸ்வேதா, உன் அண்ணாதான் திடீர்னு இந்த ஏற்பாட்டைச் செய்துட்டார். நீ எது கேக்கறதுன்னாலும் எல்லாரும் போன பிறகு அவர் கிட்டயே கேட்டுக்கோ!! பொண்ணு பார்க்கத்தான வந்திருக்காங்க, மாப்பிளை கூட இன்னும் வரல தெரியுமா? உனக்குப் பிடிக்கலைன்னா உன்னை யாரும் கட்டாயப்படுத்தப் போறதில்ல. அதனால நோ ஒரீஸ்" என்று சொல்லிவிட்டுப் போனாள்.
"வெளியில் சென்று அனைத்தையும் சொல்லிவிடலாம்!" என்று எண்ணியவாறு ஒரு முடிவுக்கு வந்தவளாக அவளது பிறந்தநாளன்று ஹரி அவளுக்குப் பரிசளித்த புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள் ஸ்வேதா.
கதவைத் தட்டிவிட்டு அவளுடைய அம்மா லதாவுடன் உள்ளே நுழைந்த தரணி அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் சில நகைகளை அணிவித்து எளிமையான ஒப்பனைகளையும் செய்துவிட்டு மல்லிகை சரத்தையும் கூந்தலில் சூட்டினாள்.
பிறகு அவளைக் கீழே வருமாறு அழைக்கவும் சில நிமிடங்களில் தானே வருவதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு கைப்பேசியை எடுத்து ஹரிக்கு அழைக்க, அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை. அதில் கொஞ்சம் பதட்டமானவள் வாட்ஸ்ஆப்பில் குறுந்தகவல் அனுப்பவும் அதையும் அவன் பார்க்கவில்லை.
வேறு வழியில்லாமல் அவள் கீழே இறங்கி வரவும் மாடிப் படியின் அருகிலேயே நின்றிருந்த தரணி அவளை அழைத்துச் சென்று வெங்கட் மற்றும் நந்தாவுடன் பேசிக்கொண்டிருந்த அந்தப் புதியவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவங்கதான் மாப்பிள்ளையோட அப்பா! மாப்பிள்ளையோட அம்மா! அவரோட அக்கா மாமா!" என அனைவரையும் இவளுக்கு அறிமுகப்படுத்த, மரியாதை நிமித்தம் இரு கரம் குவித்து தலை அசைத்தாளேத் தவிர மாப்பிள்ளை என்ற வார்த்தையே அவளுக்கு அத்தனைக் கசப்பாக இருந்தது.
ஆனால் அனைவருமே ஸ்வேதாவைப் பார்த்த பார்வையில் அதீத அன்பும் நட்புணர்வும் கலந்திருந்தது அவளுக்குப் புரிந்தது.
அவர்களது பார்வையே அவர்களுக்கு இவளைப் பிடித்திருப்பதை சொல்லாமல் சொல்ல, அதுவேறு இவளைக் கொல்லாமல் கொன்றது.
செய்வதறியாமல் தவித்துப்போய் அவள் நின்றிருக்க, அன்றைய காலை முதலே அவளுடன் கலந்திருந்த ஹரி உபயோகிக்கும் வாசனைத் திரவியத்தின் மணம் அவளது நாசியைத் தீண்ட, "ஹரி!" என்று மெல்லிய குரலில் சொல்லியவாறு அவசரமாகத் திருப்பினாள் ஸ்வேதா.
கைகளில் சிவப்பு நிற ரோஜாக்கள் நிறைந்த மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றை ஏந்தியவாறு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஹரி. மூச்சு விட மறந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா.
அவனைக் கண்ட அந்த நொடி அவளது மனதில் இருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி தெளிவடைந்தது.
அதற்குள் ‘ஹரிப்பா!’ என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்ட விஜயா, "இவன்தான் எங்க ஹரி கிருஷ்ணா!" என்று அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தினார்.
நந்தா, "வெல்க்கம் மாப்ள" என்றவாறு, அவனுடன் கைக் குலுக்க, வெங்கட்டும் கை குலுக்கி பின்பு அவனை அணைத்துக்கொண்டார்.
அந்த மலர் கொத்தை தன் அக்கா கபிலாவிடம் கொடுத்து அதை ஸ்வேதாவிற்குக் கொடுக்கச் சொல்லவும், இளையவர்கள், "ஓஹோ!" என்று குரல் எழுப்ப, அந்த இடமே மகிழ்ச்சியால் நிறைந்தது.
ஆச்சரியத்தில் விழி விரித்து கண்களே தெரித்துவிடும்போல் அவர்களைப் பார்த்த ஸ்வேதாவை நோக்கி யாரும் அறியாதவாறு கண்களைச் சிமிட்டி எப்பொழுதும்போல் புருவத்தைத் தூக்கி என்ன? என்று ஹரி பார்க்க,
சிறிது நேரத்திற்குள் அவளைப் படுத்தி எடுத்தக் கோபத்தில் கண்களில் கணலைத் தேக்கி நோக்கு வர்மத்தில் அவனைத் தாக்கியவள் பிறகு அனைவரிடமும் இயல்பாகப் பேசத் தொடங்கினாள் ஸ்வேதா
"இவர்தான் ஆக்ஸிடன்ட் நடந்த சமயம் நம்ம ஸ்வேதாவ அடையாளம் கண்டு பிடிச்சு நமக்கெல்லம் தகவல் சொன்னவர்!" என்று இரகசியமாக வெங்கட்டிடம் சொன்னார் லதா. அதைக் கேள்விப்பட்டதும் மேலும் மகிழ்ச்சிதான் ஏற்பட்டது வெங்கட்டிற்கு.
பிறகு ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணனுடன் கலந்து பேசி, மறுநாள் எளிமையாகத் திருமணத்தை நிச்சயம் செய்துகொள்ளலாம் என்றும் ஸ்வேதாவின் படிப்பு முடிந்து அவள் வந்தவுடன் ஆறு மாத்திற்குப் பிறகு திருமணத்தை நடத்தலாம் என்றும் வெங்கட் தெரிவிக்க அனைவருமே அதை ஏற்றுக்கொண்டனர்.
"இதெல்லாம் ரொம்ப அநியாயம், என்னோட சம்மதத்த யாருமே கேட்கவே இல்லையே அண்ணி!" என்று இரகசியமாக ஸ்வேதா தரணியிடம் அலுத்துக்கொள்ள,
"அப்படினா உனக்கு விருப்பமில்லைனு அப்பாட்ட சொல்லிடவா" என்று தரணி அவளை மடக்க,
ஸ்வேதா "ஐயோ, அண்ணீஈஈஈஈ!" என்று அசடு வழிய,
"என்ன தரணி? என்ன சொல்றா என் மருமக?" என உரிமையுடன் கேட்டார் விஜயா.
"ஒண்ணுமில்லம்மா, உங்க மகனோட அவ கொஞ்சம் தனியா பேசணுமாம்!" என்று அவளை வகையாக மாட்டிவிட்டாள் தரணி.
"அவ்வளவுதான! தாராளமா பேசட்டுமே, இதுல என்ன இருக்கு?" என்று, ராகம் போட்டு கிண்டலாக கபிலா சொல்லவும்,
"அண்ணீஈஈஈ" என்று தரணியைப் பார்த்து பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது ஸ்வேதாவால்.
பிறகு ஸ்வேதா அவளது அறையில் ஹரியுடன் பேசுவது என்பது முடிவாகவும் அவனை அழைத்துக்கொண்டு அங்கே சென்றவள், "என்ன நடக்குது இங்க... ஃபிராடு! ஃபிராடு! பக்கா ஃபிராடு!" என அவனை அங்கே இருந்த தலையணையால் தாக்கத் தொடங்க,
அவளைத் தடுத்து, "ஏய்! யார பார்த்துடி ஃபிராடுங்கற? நான்தான் இன்னைக்கு காலையிலேயே இதைச் சொல்ல வந்தேன், நீ காது கொடுத்து கேட்டாதான!" என்றவன்,
"உங்க அப்பாதான் லவ் மேரேஜ்னா ஒத்துக்கமாட்டாரே, அதனால இந்த பாலுதான் என்னையே என் கம்பெனில வேலை செய்யறவன்னு சொல்லி இந்த ஜிகினா வேலையெல்லாம் செஞ்சு என் ப்ரொஃபைலை உங்க அப்பாவுக்கு அனுப்பியிருந்தான்.
நீ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன கோவத்துல, உன்னை நேரில் பார்த்து ஒரு வழி செய்யற எண்ணத்துலதான் நான் கோவிலுக்கே வந்தேன்! நீ அங்கப் போயிருக்கற தகவல் கூட பாலுதான் என் கிட்ட சொன்னான்! நீ அந்த ப்ரோஃபைலைப் பார்க்கவே இல்லைனு உன் கூட பேசின பிறகுதான் எனக்குப் புரிஞ்சுது" என்று மேலும் மேலும் ஆச்சரியத்தில் அவளை மூழ்கடித்தான் ஹரி.
"தேங்க்ஸ் ஹரி! எனக்காக இவ்வளவு செஞ்சிருக்கீங்க, நீங்க மட்டுமில்ல பாலு அண்ணா, வர்ஷினி எல்லாருமே!" என அவள் நெகிழ்ச்சியுடன் சொல்ல,
"இதுல நந்தாவும் உன் அண்ணி தரணியும் கூட உதவி செஞ்சிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா!" என்றவனிடம்,
“இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருந்தால அதையும் சொல்லிடுங்க ஹரி! இதுக்கு மேல என்னால எதையும் தாங்க முடியாது!" என அவள் போலியாய் கோபித்துக்கொள்ள,
"அவ்வளவதுதான்! இதுக்கு மேல எதுவுமே இல்ல, ஓவர்" என்றவன், "எனக்காக இவ்வளவு செஞ்சிருக்கீங்கன்னு சொன்ன இல்ல? அதுக்கு எனக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப் போற ஸ்வீட்?" என ஹரி அவளை நெருங்கி வர,
அதைச் சற்றும் சட்டை செய்யாமல் ஏதோ நினைவு வந்தவளாக அவசரமாக அங்கே இருந்த அவளது வார்டுரோப்பைத் திறந்து சிறிய பெட்டியை எடுத்து அதிலிருந்த ஒரு அழகிய மோதிரத்தை அவனது விரலில் அவள் அணிவிக்க அது கச்சிதமாய் அவனுக்குப் பொருந்திப்போனது.
நெகிழ்ச்சியில் தொண்டை அடைக்க, "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹரி!" என்றவாறு அவனது விரல்களில் லேசாகத் தனது இதழைப் பதித்தவளின் கண்கள் கலங்கிப்போனது.
அடுத்த நொடியே ஹரியின் இறுகிய அணைப்பிற்குள் வந்திருந்தாள் ஸ்வேதா.
"என் பர்த்டேவ இன்னுமா ஞாபகம் வச்சிருக்க? மறந்துட்டியோன்னு நினைச்சேன் ஸ்வேதா! சாரிடி!!" என்றவனது கண்களும் கலங்கிப்போயின.
"அதை எப்படி மறப்பேன்? உங்க பர்த்டேங்கறதாலதான் இன்னைக்கு கோவிலுக்கே போனேன்! நீங்க செஞ்ச கலாட்டாவாலதான் மார்னிங்கே விஷ் பண்ண மறந்துட்டேன்!!" என்றாள் ஸ்வேதா.
"ஹேய்! எனக்காக அப்ப நீ வாங்கின மோதிரம்தான இது?" என ஹரி கேட்க
"ஆமாம்" என்றாள் ஸ்வேதா.
"நல்ல வேளை இப்ப கொடுத்த, நீ இந்த மோதிரத்தை அப்பவே கொடுத்திருந்தன்னு வை, இதுவும் உன்னை மாதிரியே இருந்திருக்கும்!!" என ஹரி சொல்லவும்,
என்ன சொல்கிறான் எனப் புரியாமல் ஸ்வேதா அவனைப் பார்க்க,
"லூசா!" என்றவனை அடிக்கத் தலையணையை ஸ்வேதா எடுக்க "மீ எஸ்கேப்!" என்றவாறு அவளிடமிருந்து தப்பித்துக் கீழே ஓடிச் சென்றான் ஹரி!
ஹரியை, பின் தொடர்ந்து கீழே வந்த ஸ்வேதா அங்கே உட்கார்ந்திருந்த பாலு மற்றும் வசுதாவைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சிக்கே போனாள்.
அவர்களது குட்டி இளவரசி ஸ்ரவணியைக் கைகளில் ஏந்தி கொஞ்சிக் கொண்டிருந்தார் விஜயா.
அருகில் விரித்து வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியின் திரையில் சலசலத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி, லதா மற்றும் விஜயா இரண்டு பேருடனும்.
“நம்ம ஸ்வேதா அன்னைக்குப் பத்திரமா நமக்குக் கிடைக்க காரணம் கபிலா அக்காதான். மேற்கொண்டு அவளோட ட்ரீட்மெண்ட்க்கு ஏற்பாடு செஞ்சது சஞ்சய் மாமாதான்” என்று அவர்களைப் பற்றி புகழ்த்துக் கொண்டிருந்தான் பாலு லதாவிடம்.
"ப்ளீஸ்! அதெல்லாம் ஒண்ணும் இல்ல! நான் அப்ப ஷிஃப்ட்ல இருந்ததால சின்னதா ஹெல்ப் பண்ண முடிஞ்சுது" என்றாள் கபிலா தன்னடக்கத்துடன்.
"நான், பாலு... வசுதா... வர்ஷினி... எல்லாரையுமே, பார்த்திருக்கேன். ஆனா ஸ்வேதாவ மட்டும் பார்க்கவே முடியாம போயிடுச்சு!" என்று சொல்லிவிட்டு,
"அவளே எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு இருக்கே, அதனாலதான் போலிருக்கு!" என்று முடித்தார் விஜயா.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கட் இரகசியமாக மகனைத் தனியே அழைத்துச் சென்று, "இங்க எல்லரும் பேசறத பார்த்தா... இது மேட்ரிமோனில பார்த்து அமைஞ்ச சம்பந்தம் போல தோனலையே நந்தா!
மாப்பிளை ஏதோ பெரிய போஸ்ட்ல இருக்கான்னுதான போட்டிருந்துது? ஆனா போன வாரம் அவருடைய பேட்டி கூட பிசினஸ் மேகசின்ல வந்திருந்ததே! அவர் ஹரிதா குரூப்ஸ் மொத்தத்துக்கும் எம்.டி..ன்னு அதுல போட்டிருந்தாங்களே! ஆனா அவரை நேர்ல பார்த்த பிறகுதான தெரியுது!
அத்தோட காலேஜ்ல இவங்க எல்லாரும் ஒண்ணா பழகியிருப்பாங்க போல இருக்கே! இன்னைக்கு காலைல வரைக்கும் கல்யாணம் வேண்டாம்னு அடம் பிடிச்சிட்டு இருந்தவ இப்ப எப்படி திடீர்னு சம்மதிச்சா? அப்ப இருந்தே இவங்க ரெண்டு பேருக்கும் அது இதுன்னு விருப்பம் இருந்திருக்குமோ?" என காதல் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தயங்கியவாறு அவனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார் அவர்.
"அப்பா எப்படி இருந்தா என்ன? அவங்க நம்ம கிட்ட முறைப்படிதான பெண் கேட்டு வந்திருக்காங்க? நம்ம ஸ்வேதவைப் பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கா! இதை விட நமக்கு வேற என்ன வேணும்? அதனால இதைத் தோண்டித் துருவாம அப்படியே விட்டுடுங்கப்பா" என்று முடித்தான் நந்தா.
அவன் சொன்னதும் சரியாகப் படவே அதை அப்படியே இயல்பாக ஏற்றுக்கொண்டார் வெங்கட்.
அவர்கள் பேசிக்கொண்டது போல் அடுத்த நாள் எளிமையாக ஸ்வேதா ஹரியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அடுத்த நாளே அவளது படிப்பை முடிக்கவென ஸ்வேதா அமெரிக்கா சென்றுவிட, அந்த ஆறு மாதமும் பத்து முறைக்கு மேல் அங்கே சென்று ஸ்வேதாவை மட்டுமல்லாது வர்ஷினியையும் அதிர வைத்தான் ஹரி.
"அடப்பாவி ஹரி அண்ணா! நான் எத்தன தடவ உங்கள இங்க வரச் சொல்லி கூப்பிட்டிருப்பேன், ஒரு தடவையாவது வந்தீங்களா? இப்ப இந்த ஸ்வேதாவால மாசத்துக்கு இரண்டு தடவ வாறீங்களே இது நியாயமா?" என அவனை வறுத்து எடுத்து ஸ்வேதாவிடம் செல்ல அடிகளையும் வாங்கிக் கொள்வாள் வர்ஷினி. ஏனென்றால் அவர்களது மீட்டிங் ஸ்பாட் வர்ஷினியின் வீடாக இருந்தது.
அவள் படிப்பு முடிந்து தாய் நாடு திரும்பவும் அவளுடைய விருப்பப்படி மிகப் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தாள் ஸ்வேதா. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவளுடைய அந்த ஆசைக்குத் தடை போடவில்லை ஹரி!
பிறகு ஒரு சுப யோக சுப தினத்தில் உற்றார் உறவினர் ஆசிர்வதிக்க திருமணப் பந்தத்தில் இணைந்தனர் இருவரும்.
காதலும் மகிழ்ச்சியாக அவர்களது இல்வாழ்க்கை அத்தனை அழகாய் ஆரம்பமானது.
சுபம்
***
コメント