பகுதி - 15
ஹரியின் அணைப்பும் விரல்களின் அழுத்தமும் கூடிக்கொண்டே போக, அவன் மனதை உணர்ந்தவள், "பழசையெல்லாம் மறந்திடுவோம் ஹரி! இப்படி இறுகிப்போயிருக்கற உங்களோட முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவே வேதனையா இருக்கு. அன்னைக்கு இருந்த நிலமைல நம்ம ரெண்டு பேருக்குமே சூழ்நிலையை சரியா ஹான்டில் பண்ற அளவுக்கு முதிர்ச்சியும் பக்குவமும் இல்லங்கறதுதான் உண்மை.”
”கல்யாணம் ஆனப் பிறகும் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் சரியான புரிதல் இல்லாம சகிப்புத்தன்மை இல்லாம பொறுமை இல்லாம விவகாரத்துக்காக கோர்ட்டுக்குப் படையெடுத்துட்டு இருக்குற மக்களைப் பார்த்துட்டுதானே இருக்கோம்.
அன்னைக்கு இருந்த சூழ்நிலைல நாம கல்யாணம் பண்ணிட்டு இருந்தாலும் நிறைய மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் ஏற்பட்டிருக்கும். ஆனா இந்த தெனிவான மனநிலைல இப்ப நாம கல்யாணம் செய்துகிட்டா வாழ்க்கை நிச்சயம் ஹாப்பியாத்தான் இருக்கும்!
அதனால முதல்ல எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க" என்று முடித்தாள் ஸ்வேதா.
அப்படியுமே அவன் முகம் தெளிவடையாமல் இருக்கவும், "ப்ச்சு நீங்க இப்படியே இருந்தா நான் பாட்டுக்கு அமெரிக்கா போய் அங்கயே வேலைல ஜாயின் பண்ணிடுவேன். இன்னும் மூணு வருஷத்துக்கு என்னால இங்க வர முடியாது! பரவாயில்லையா?" என மிரட்டுவது போல் கேட்க, கோவத்தில் அவனது முகம் ஜிவு ஜிவு எனச் சிவந்து போனது.
"போவடி போவ! என்ன திமிரா? இவ்வளவு நாள் உன்னை, உன் போக்கிலேயே விட்டு வெச்சதால என்னை கேனையன்னு நினைச்சுட்டியா? நானும் பாக்கறேன் நீ எப்படி யூ.எஸ். போறேன்னு!" எனக் கோபத்தின் உச்சியில் உண்மையிலேயே சிங்கம் போல கர்ஜித்தவனை நன்றாக முறைத்தாள்.
எரிச்சலுடன் அவன் முகத்தைத் திருப்ப, "என்ன இப்படிலாம் மிரட்டினா நான் போகமாட்டேன்னு நினைச்சீங்களா, யாராலயும் என்னைத் தடுக்க முடியாது மிஸ்டர் ஹரி கிருஷ்ணா!" என சவால் விடுவதுபோல் அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுக்குச் சிரிப்பு வந்துவிட,
அவள் கிண்டல் செய்கிறாள் என்பதே புரியாத பாவத்தில், "என்னடீ? என்னால தடுக்க முடியாதா? நான் நினச்சா உன்னை என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா?" எனக் கோபத்துடனே வந்தன அவனது வார்த்தைகள்.
"ஐயோ! இவனை ரொம்பவே டென்ஷன் பண்ணிட்டோமோ?" என்று எண்ணிய ஸ்வேதா பயத்துடனே அவனது முகத்தைப் பார்க்க, அடக்கப்பட்ட சிரிப்பில் அவனது உதடுகள் துடித்துக் கொண்டிருக்க கோபத்திற்குப் பதில் அவனது முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
உஃப்! என்ற நீண்ட பெருமூச்சு எழ, "அப்படினா எப்பவும் இப்படி சிரிச்ச முகமாவே இருக்கணும் மிஸ்டர் ஹரி" என்றாள் ஸ்வேதா அவன் முகம் பிரதிபலித்த மகிழ்ச்சியைக் கண்களின் வழியே தன் மனதில் நிரப்பியவாறு.
"நீங்க என் கூட இருந்தா நான் இப்படியே இருப்பேன் என் ஸ்வீட் ஹார்ட் மேடம்" என்றான் ஹரி புன்னகை மாறாமல்.
அதற்குள் முகம் வாடியவள், "ப்ச்சு ஆனாலும், நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல யூ.எஸ். போய்தான ஆகணும்!" என்று வருத்தத்துடன் சொல்லவும்,
“ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்தான? கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஓடிப்போயிடும்! யாம் இருக்க பயம் ஏன்!" என்றான் ஹரி ஒரு மர்ம புன்னகையுடன்.
அதற்குள் நினைவு வந்தவளாக நேரத்தைப் பார்க்கவென ஹரியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த, அவனது கைப்பேசியை உரிமையுடன் அவள் எடுக்க அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
அதைத் திறந்து பார்த்த ஒரு நொடியில் இன்பமாய் மலர்ந்தாள் ஸ்வேதா. அதில் முகப்புப் படமாக அவள்தான் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள்.
அவள் அந்தப் படத்தை ஆராய அது அமெரிக்காவில் உள்ள வர்ஷினியின் வீட்டில் எடுக்கப்பட்டதெனத் தெரியவும், "அடப்பாவிகளா! அத்தனைப் பேரும் சரியான கூட்டுக் களவாணிங்க! இருக்கு அந்த மாரியம்மாவுக்கு!" என ஸ்வேதா எகிற,
வாய் விட்டுச் சிரித்த ஹரி, “இதுக்கே இப்படின்னா? மொத்தத்தையும் பார்த்தன்னு வை... அவள நீ என்னதான் செய்ய மாட்ட?!" என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்தவாறு வீட்டிற்குள் அழைத்துச்சென்று முதல் தளத்தை அடைந்தான்.
அங்கே இருந்த ஹால் முழுவதிலும் சிறியதும் பெரியதும் புகைப்படங்களாக வேறு வேறு கோணங்களில் ஸ்வேதா! ஸ்வேதா! ஸ்வேதாதான்!
மொத்தமுமே கேண்டிட் ஃபோட்டோக்கள்.
அனைத்துமே வர்ஷினியின் கைவண்ணம் என்பது நன்றாகவே புரிய நெகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அவளை அமரச் சொய்தவன் தானும் எதிரில் அவளைப் பார்ப்பதுபோல் அமர்ந்துகொண்டு ‘சுவீட்’ என அவளை மென்மையாக அழைத்து, "லஞ்ச் சொல்லட்டுமா? மணி ரெண்டு ஆகுது!" என்றான் ஹரி.
"என்ன ரெண்டு மணியா?" எனப் பதறியவள்,
"ஐயோ உடனே வீட்டுக்குக் கிளம்பனும் ஹரி ப்ளீஸ்!" என்றாள்.
"லஞ்ச் சாப்பிட்டுக் கிளம்பலாம்." என ஹரி சொல்ல,
“இல்ல பிரேக்ஃபாஸ்டையே லேட்டாதான சாப்பிட்டோம். எனக்கு பசிக்கல." என்றவள்,
“உங்களுக்குப் பசிச்சா சாப்பிடலாம்" என்று அவனுக்காகச் சொல்ல,
இல்ல! எனக்கும் பசிக்கல!" என்றவன் அங்கே வேலை செய்பவரைத் தனது கைப்பேசியில் அழைத்து காபி எடுத்துவரச் சொன்னான்.
அவரும் சில நிமிடங்களில் காபி அடங்கிய ட்ரேவை அங்கே கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுவிட, கோப்பைகளில் அதை ஊற்றி அவளிடம் ஒன்றை நீட்டியவன் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டவாறே,
"ஆமாம்! உனக்குத்தான் காஃபியே பிடிக்காதே நீ எப்படி அதுவும் இவ்வளவு ஸ்ட்ராங்கா... கசப்பா... என்னோட ப்ளெண்ட்ல சாப்பட்ற" என்று அதற்கான விடையைத் தெரிந்துகொண்டே அவள் வார்த்தையாகக் கேட்கும் ஆவலுடன் கேட்டான் ஹரி.
இப்படியொரு கேள்வியில், "அது!! அது வந்து!!" எனத் தடுமாறியவள் நாணத்துடன்,
"உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ட்ரை பண்ணிப் பார்த்தேனா! அது எனக்கும் பிடிச்சுப் போச்சு" என்றாள் ஸ்வேதா.
மேலும் விடாமல், "எப்படி?" என்றபடி எழுந்து அவளுக்கு அருகில் நெருங்கி உட்கார்ந்தவன்,
அவளது முகத்தை விரலால் அளந்தவாறே, "இந்த மூக்குத்தி, இந்தப் பூரான் தேள் எல்லாம் மாறி இப்படி அழகான இந்தக் குட்டியானப் பொட்டு! இப்படியெல்லாமா?" என்று கேட்க,
அவனது அந்த இயல்பான நெருக்கத்தில் அவளது நாணம் கரை உடைக்க, "போங்க ஹரி! இப்பவே நேரம் ஆயிடுச்சு கிளம்பனும்!" என்று வேகமாகக் கீழே செல்ல எத்தனிக்க, அவளைப் போகவிடாமல் தடுத்து "காபியைச் சாப்பிடு!" என்றான் ஹரி.
அப்பொழுதுதான் கவனித்தாள் அவள், அந்தக் காபி கோப்பையிலும் அவளது படத்தைப் பதிந்து வைத்திருந்ததை.
"ஓ மை காட்! ஹரி" இதையும் விடலியா நீங்க!" என்று அவள் கேட்க,
அவளது கையில் இருந்த கோப்பையைச் சுட்டிக் காண்பித்தவன், "இதுல இருக்கறது யாராம்?" என்று கேட்டான் விஷமமாக.
அதைத் திருப்பிப் பார்த்தவளின் முகம் செக்கச்சிவந்து போனது அவளது இதழ் பதிந்த இடத்திலிருந்த அவனது பிம்பதைக் கண்டு.
அவசரமாக அதில் இருந்த காபியை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டவள், "நான் கீழ போறேன், என்னோட மொபைலைப் பார்க்கணும், எத்தனை மிஸ்ட் கால்ஸ் இருக்கோ?" என்று திரும்பியவளை அவனது குரல் தடுத்தது.
"ம்ஹும்! இன்னும் நீ செய்ய வேண்டியது ஒண்ணு பேலன்ஸ் இருக்கு. அதைச் செஞ்சாத்தான் நான் உன்னை இங்க இருந்து நகர விடுவேன்!!" என்று கறாராகச் சொல்ல, அவனது முகத்தில்லோ குறும்பு கூத்தாடிக் கொண்டிருந்தது.
‘ஐயோ! வில்லங்கமாக எதையாவது சொல்வானோ!’ என்ற பயத்தில் இதயம் இடம்மாறித் துடிக்க, "என்ன? என்ன செய்யணும்?" என்று ஸ்வேதாவின் வார்த்தைகள் தந்தி அடித்தன.
"ஒண்ணும் பெருசா இல்ல! எனக்காக.. நீ ஒரே ஒரு!" என்று நிறுத்தியவனின் பார்வை அவளது இதழ்களில் இளைப்பாற,
"என்ன! ஒரே ஒரு!" திக்கித்திணறி அவள் கேட்க அதைக் கண்டு சிரித்தவன்,
"எனக்காக ஒரே ஒரு பாட்டுப் பாடுன்னு கேட்க வந்தேன் நீ என்ன நினைச்ச?" என்று அவளை மடக்கினான்.
"உஃப்!" என்றவள், "நான் ஒண்ணும் நினைக்கல, ஆனா என்னால இப்ப பாட்டெல்லாம் பாட முடியாது" என்றாள் ஸ்வேதா.
உண்மையில் அவள் இருக்கும் நெகிழ்ச்சியான மனநிலையில் அதுவும் அவன் செய்த சேட்டையில் அவளது இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறி இருக்க அவளால் பேசவே முடியவில்லை. இதில் எங்கிருந்து பாடுவது? அதனால்தான் அவள் அப்படிச் சொன்னது.
ஆனால் ஹரியோ விடாப்பிடியாக, "நான் பாடி நீ கேட்டிருக்கத்தான? ஆனா நீ பாடி ஒரு தடவைக்கூட நான் கேட்டதில்ல! எனக்காகக் குட்டியா ஒரே ஒரு பாட்டுப் பாடு போதும், நாம இங்க இருந்து கிளம்பலாம்" என்றான் ஹரி.
அவனது வார்த்தையில் தொனித்த ஆவல் அவனது கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பு யாவும் அவளது மனதைக் கரைக்க, இருக்கையிலிருந்து எழுந்து சென்று அங்கே மாட்டப்பட்டிருந்த அவளது புகைப்படத்தின் அருகில் சென்று சுவரில் சாய்ந்தவாறு, "நான் பாடியே பல வருஷம் ஆயிடுச்சு ஹரி! அதனால எப்படி இருக்குமோ! உண்மையிலேயே நீங்கப் பாவம்தான்" என்ற ஸ்வேதா ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துத் தன்னைச் சமன்படுத்திகொண்டு, அவளது மன நிலையைப் பிரதிபலிக்கும் வரிகள வரணமாயிரத்திலிருந்து பாடத் தொடங்கினாள். அவனது கைப்பேசி அழகாய் அதனைப் பதிவு செய்தது.
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
இத்தனை அழகாய் தன் மனதின் காதலை, ஏக்கத்தை, தாபத்தை, எதிர்பார்ப்பை ஒரு பெண்ணால் எடுத்துரைக்க முடியுமா என்று மலைக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தப் பாடல் வரிகளை அவள் பாடி முடிக்கவும் அவள் மனம் அவனுக்குப் புரிய ஐஸ்க்ரீம் கலந்த சில்லென அவனை வருடிச்சென்ற அவளது குரலில் இதயம் குளிர்ந்திருந்தான் ஹரி.
அவள் பாடி முடித்து சில நிமிடங்கள் கடந்த பிறகும் மௌனமே அங்கு ஆட்சி செய்ய இருவருமே உறைந்துபோய் அந்தத் தருணத்தை மனதின் ஆழத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
அவனது கைப்பேசி இசைக்கவும் தன் நினைவிற்கு வந்த ஹரி அழைப்பைத் துடித்துவிட்டு அவளை நெருங்கி வந்தவாறு தனது வசீகரிக்கும் குரலில் படத்தொடங்கினான் அவளது பாடலுக்குப் பதில் அளிக்கும் விதமாக,
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ!
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ!
மூத்தவர் சம்மிதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்!
காத்திருப்பேனோடீ இது பார்"!
என்று அந்தப் பாடல் முற்றுப்பெறாமல் அவன் நிறுத்தவும், அதுவரை அவனது குரலில் இலயித்திருந்தவள் பாடல் வரிகளின் அர்த்தம் உணரவும் அவனை அப்படியே தள்ளிவிட்டு, "இதெல்லாம் வேலைக்கே ஆகாது! நான் கால் டாக்ஸி புக் பண்ணி போய்க்கறேன்! நீ ஒண்ணும் என்னை அழைச்சுட்டுப் போக வேண்டாம் போடா!" என்றவாறு ஸ்வேதா கீழே இறங்கி ஓடவும் அவளைப் பின் தொடர்ந்து வந்தவன்,
அங்கே ஒருவரும் இல்லாமல் போகவே அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, "ஏய்! சும்மா கலாட்டாதான் பண்ணேன்! அதுக்காக நீ டா போட்டுப் பேசறதெல்லாம் கொஞ்சம் ஓவர்! அதுக்கு ஒரு சின்ன பனிஷ்மென்ட் கொடுக்க வேணாம்" என விவகாரமாகச் சொல்லி, அவன் பாடாமல் விட்ட அந்த பாரதியின் வரிகளை முடித்து வைத்தான். ஆனால் செய்கையால்!
அதில் அதிர்ந்து போனவள், அவன் இதழ் பதித்த தன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, "நீங்க முன்ன இருந்த மாதிரி இல்ல ஹரி! கெட்டுப் போயிட்டிங்க" என உள்ளே போன குரலில் சொல்லியவாறு அவனைப் பார்த்து முறைத்து வைக்க,
"ஏய் இதுக்கே என்னைக் கெட்டவன்னு சொன்னா எப்படி!? இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கேடீ" என அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன், அவள் முகம் மேலும் கலவரமாவதை உணர்ந்து,
"ஏய்! சும்மா கலாட்டா பண்ணேன்பா! வேணா நீ எனக்காக இவ்வளவு அருமையா பாடினத்துக்கு ஒரு தேங்க்ஸ் கிஸ்ன்னு இத வெச்சுக்கோ!" என்று முடித்தான் ஹரி.
அதில் முகம் சிவந்தவள், "உண்மையாவே ரொ...ம்ப நேரம் ஆயிடுச்சு ஹரி! இதுக்குமேல லேட் பண்ண முடியாது! ப்ளீஸ்!" எனக் கெஞ்சவும்,
"சரி நீ உன் பேக்க எடுத்துட்டு ரெடியா இரு, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.
அவசரமாக ஸ்வேதா அவளது கைப்பேசியை எடுத்துப் பார்க்க அவள் நினைத்தது போல் நத்தாவிடமிருந்தும் தரணியிடமிருந்தும் ஏகப்பட்ட மிஸ்ட் கால்களைத் தாங்கியிருந்தது அது.
"சீக்கிரம் வந்துவிடுகிறேன்" என்று இருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஹரிக்காகக் காத்திருந்தாள் ஸ்வேதா.
சில நிமிடங்களில் வேறு உடைக்கு மாறி மிகவும் கம்பீரமாக வந்தவனை கண் இமைக்காமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க,
"என்ன?" என்பதுபோல் புருவங்களை ஏற்றி இறக்கி அவன் கேட்கவும்,
"ஒன்றுமில்லை!" என்பதாகத் தலையாட்டியவளிடம்,
"கிளம்பலாமா?" என்றான் அவன்.
அதற்கும் "சரி!" என்று அவள் தலையாட்டவும்,
"பூம் பூம் மாடுதான ம்" என்று சிரித்தவனுக்கு ஒரு முறைப்பை மட்டும் பதிலாக வீசிவிட்டு அவனைக் கடந்து போனாள் ஸ்வேதா.
***
அவன் காரை ஸ்டார்ட் செய்யவும் எம்.பி.த்ரீ. மறுபடியும் படத்தொடங்கியது அதே பாடலை.
மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !
பாடல் வரிகளின் பாரம் தாங்காமல் ஸ்வேதா அதை நிறுத்திவிட, "ஏன் ஸ்வேதா பாட்டை நிறுத்திட்ட?" என்று கேட்டான் ஹரி.
"ஒண்ணும் இல்ல ஹரி! அந்தப் பாட்டை கேட்கும்போது மறுபடியும் பழசெல்லாம் ஞாபகத்துல வருது. இன்னைக்கு ஒரு தடவ இதையெல்லாம் நினைச்சதே போதும், அதனாலதான்" என்றாள் ஸ்வேதா.
அவனுக்குமே அவள் சொல்வது சரியென்று தோன்றவும், "நாம பழசையெல்லாம் இனிமேல் எப்பவுமே பேச வேண்டாம் ஸ்வேதா!" என்றான் அவன்.
“ம்ம்... நெகடிவ் சைட் மட்டும்! ஏன்னா அதுல நிறைய ஹாப்பி மொமெண்ட்சும் இருக்கே" என்றவள்,
"அதெல்லாம்தான் ஹரி என்னை இன்னும் உயிரோட வெச்சிருக்கு" என்று அவள் சொல்ல,
அவளது விரல்களைப் பற்றி அதில் இதழ் பதித்தவன், "லவ் யூ டி, இனிமேல இப்படியெல்லாம் பேசித் தொலைக்காத" என்றான் மனதின் ஆழத்திலிருந்து.
பதிலாக அவள் கண்களிலிருந்து உதிர்த்த கண்ணீர் மணிகள் அவளுடைய காதலை அவனுக்குச் சொன்னது.
சில நிமிடங்களில் அவளது குடியிருப்பின் வாயிலில் அவன் தன் வாகனத்தை நிறுத்த, அவனும் தன்னுடன் வீட்டிற்குள் வருவான் என்ற அவளது எதிர்பார்ப்பைப் பொய்யாகி, அவள் இறங்கியதும் ஏதும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டான் ஹரி.
அப்படி அவன் சென்றதன் காரணம் புரியாமல் வெகுவாகக் குழம்பித்தான் போனாள் ஸ்வேதா.
குழப்பமும், தயக்கமுமாக வீட்டிற்குள் நுழைய எத்தனித்தவளை வெளியிலிருந்தே பிடித்துக் கொண்டாள் தரணி.
"உன்னைப் பொண்ணுப் பார்க்க அந்த மல்டி நேஷனல் கம்பெனில வேலை செய்யற பையன் குடும்பத்துல இருந்து வந்திருக்காங்க ஸ்வேத். நீ சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வா" என நிர்ப்பந்தமாகச் சொல்லவும் ஆடித்தான் போனாள் ஸ்வேதா.
Comments