top of page

Nee Sonna Oor Vaarthaikaaga! 13

Updated: Mar 17

பகுதி - 13


ஹரியுடனான அந்தத் தருணம் தந்த இனிமையை அனுபவித்தவாறே சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா வசுதாவுடனான அவளது பிணைப்பிற்கான காரணத்தையும் அந்தப் பிணைப்பே தன் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்ததையும்.


ஸ்வேதா இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம் அவர்களது பக்கத்து ஃப்ளாட்டை விலைக்கு வாங்கி அங்கே குடி வந்தனர் ராஜன் சரஸ்வதி குடும்பம்.


அவர்களது மூத்த மகள் ஜெயசுதா ஆறாம் வகுப்புப்பிலும் இளையவள் வசுதா முதல் வகுப்பிலும் ஸ்வேதா படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்தனர்.


ஸ்வேதாவின் வயதை ஒத்திருந்த வசுதா அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். ஆனால் ஜெயசுதாவிடம் எப்பொழுதும் ஒரு ஒதுக்கம் இருக்கும்.


இரண்டாவதும் பெண் குழந்தையாகப் போன ஏமாற்றத்தால் மூத்தவளைப் பிடிக்கும் அளவிற்கு வசுதாவை ராஜனுக்குப் பிடிப்பதில்லை. அவளிடம் எப்போதுமே கோபமும் கண்டிப்பாகவுமே இருப்பர்.


அவர் இருக்கும் சமயம் வாய் திறந்து பேசவே பயப்படுவாள் வசுதா. சரஸ்வதியும் இளைய மகளுக்கு ஆதரவாகப் பரிந்து எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்தார்.


இயல்பிலேயே சுயநலவாதியான ஜெயசுதாவும் அந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கையிடம் நன்கு தன் ஆதிக்கத்தைச் செலுத்துவாளே தவிர துளியும் அன்பு பாராட்டுவதில்லை.


அந்தக் காரணத்தினாலோ என்னவோ பள்ளி முடிந்து வந்ததும் வராததுமாக வீட்டுப்பாடம் செய்யவென ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள் வசுதா.


ஸ்வேதாவின் அன்பான நடவடிக்கை அவள் மனதிற்கு இதம் தர, அவள் ஸ்வேதாவுடனேயே அதிகமாக நேரம் செலவழிக்கத் தொடங்கினாள். மற்றபடி வேறு யாருடனும் அவள் எளிதில் பேசுவதோ பழகுவதோ இல்லை.


எப்பொழுதும் பயம் தயக்கம் எனத் தாழ்வு மனப்பான்மையால் நத்தை போல் சுருண்டுக் கொள்வாள். நாளடைவில் அது அவளுடைய குண இயல்பாகவே மாறிப்போனது.


சிறு வயதில் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல ஸ்வேதாவிற்கு நன்றாகவே புரிந்தது. அதனால் வசுதாவிடமான அக்கறை மேலும் கூடித்தான் போனது. எனவே, எந்த நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டாள்.


வசுதாவைப் பொறுத்தமட்டில் படிப்பில் ஸ்வேதா அவளுடைய முன் மாதிரி. அவள் செய்வதைப் பின் பற்றித் தானும் அதுபோலவே செய்வாள். அப்படித்தான் அவள் ஸ்வேதா படித்த கல்லூரியிலேயே, அவள் படித்த அதே படிப்பைத் தேர்வு செய்ததும்.


மற்றபடி, ஸ்வேதா எவ்வளவு சொல்லியும் வசுதா தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. அவளது தயக்கமும் பயமும்தான் பின்னாளில் ஸ்வேதாவை ஆபத்தில் சிக்க வைத்தது.


ஸ்வேதா முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் ஜெயசுதா பொறியியல் முடித்து மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலையில் சேர்ந்திருந்தாள்.


அப்பொழுதுதான் உடன் வேலை செய்பவரைக் காதலிப்பதாகச் சொல்லி ஜெயசுதா ராஜனிடம் பிடிவாதம் பிடிக்கவும், அவர் கொஞ்சமும் வீட்டுக் கொடுக்காததுடன் விரைவிலேயே அவர்கள் சொந்தத்திலேயே மாப்பிள்ளையும் பார்த்து, இலட்சக் கணக்கில் செலவு செய்து திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார்.


தந்தையை மீறி ஏதும் செய்ய முடியாத நிலையில், திருமணம் செய்துகொண்ட ஜெயசுதா தன் வன்மத்தையெல்லாம் அவள் கணவனிடம் காண்பிக்கத் தொடங்கினாள். அது ஒரு கட்டத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு சாகும் நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது.


மகளின் உண்மை நிலை அறியாத ராஜன் அவளை தன்னுடனேயே அழைத்து வந்துவிட்டார். ஒரு சில மாதங்களிலேயே வீட்டினருக்குத் தெரியாமல் ஜெயசுதா, அவள் முன்பு காதலித்தவனையே பதிவுத் திருமணம் செய்துகொண்டு கணிசமான நகைகளைளுடன் சென்று விட, சொந்தக்காரர்கள் நடுவில் மிகவும் அவமானமாகிப் போனது ராஜனுக்கு.