top of page

Nee Sonna Oor Vaarthaikaaga! 11

Updated: Mar 17, 2023

பகுதி - 11


ஸ்வேதாவின் வெட்கச் சிரிப்பில் அவனது கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, "இப்ப சொல்லு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?" என்று ஹரி தணிந்து கேட்க,


"என்னால வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது ஹரி" என்ற ஸ்வேதாவின் பதிலில்,


"வேற யாரையும்னா? புரியலையே" என்று அவளை மடக்கினான்.


மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள் ஸ்வேதா.


அதற்குள் இன்டீரியர் டெகரேஷன் செய்யும் ஆட்கள் ஒவ்வொருவராக அங்கே வரத்தொடங்கவும், "அவங்க வேலையைப் பார்க்கட்டும் வா, நாம வெளியில போய் பேசலாம்" என்று ஹரி முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்து வெளியில் வந்தாள்.


முதலில் உள்ளே நுழைந்த பொழுது அவள் இருந்த மனநிலையில் அந்த இடத்தின் சூழலைக் கவனிக்கவில்லை. இப்பொழுதுதான் அவளது கண்ணில் படுகிறது அங்கே நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு பலவண்ணங்களில் பூத்துக் குலுங்கிய அழகிய மலர்ச் செடிகள்.


விழி விரித்து அவள் சுற்றிலும் பார்க்க, இயற்கை அழகு மொத்தமும் கொட்டிக்கிடக்க அக்கறையுடன் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்தது அந்தத் தோட்டம்.


மா, பலா, மாதுளம், சப்போட்டா, கொய்யா, நாவல் எனப் பலவகை மரங்கள் நன்கு வளர்ந்திருந்தன. விழி விரிய அவற்றைப் பார்த்தவாறே நடந்தாள்.


அவளது பார்வையிலிருந்த இரசனையைக் கண்ட ஹரி, "இது நாலு ஏக்கர் நிலம் ஸ்வேத்! அஞ்சு வருஷத்துக்கு முன்னால வாங்கிப் போட்டது. இங்க இந்தப் பண்ணையைப் பராமரிக்க ஆட்கள் போட்டிருக்கேன்" என்று பெருமை பொங்கச் சொன்னான்.


"ரொம்ப அழகா இருக்கு" என்றவள், "வீட்டையும் ரொம்ப அழகா இரசிச்சு இரசிச்சு கட்டியிருக்கீங்க" என்றாள் பிரமிப்புடன்.


"உனக்குப் பிடிச்சிருக்கா?"


"ம்ம் ரொம்ப... நான் ஒரு தடவ உங்ககிட்ட சொல்லியிருக்கேன் இல்ல!" என்று தொடங்கியவளின் மனதிற்கு உண்மை விளங்கவும் அவளது கண்களில் நீர் கோர்த்தது.


"அதுக்காகத்தானா ஹரி இதெல்லாம்" என்றவளுக்கு மகிழ்ச்சியில் மூச்சு முட்டியது.


"ம்ம், உன் பிறந்தநாள் அன்னைக்கு" என்று சொல்லிவிட்டு, "இது புரிய உனக்கு இவ்வளவு வருஷம் ஆச்சு இல்ல ஸ்வேதா? உண்மையிலேயே நீ டியூப் லைட்தான்" என்று அவன் சிரிக்க, கோவமாக அவனை முறைக்க முயன்று அதில் தோற்றுப்போய் சிரித்தாள் ஸ்வேதா.


அவளுடைய பிறந்தநாளன்று ஹரி, 'காணி நிலம் வேண்டும்' பாடி முடித்தவுடன் வர்ஷினி அங்கிருந்து செல்ல பாலுவும் அவளைப் பின் தொடர்ந்து சென்றுவிடவும், ஹரியுடன் அங்கே தனிமையில் உட்கார்ந்திருந்த ஸ்வேதா தனக்காகவே அவன் பாடிய அந்தப் பாடலிலும் அவனது குரல் தந்த இனிமையிலும் மூழ்கிப்போயிருக்க,


"என்னைக்குமே என்னால இந்த நாளை மறக்க முடியாது ஹரி! என்ன ஒரு மேஜிக்கல் வாய்ஸ் தெரியுமா உங்களுக்கு! அதுவும் இந்தப் பாட்டு எனக்கு எந்தளவுக்குப் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா ஹரி!? உண்மையாவே அப்படி ஒரு காட்சி என் கற்பனையில் வந்துடும்.”


”பாரதியார் தென்னை மரம் வேணும்னு தான பாடினார்? ஆனா எனக்குக் கொஞ்சம் ஆசை அதிகம். மா.. பலா.. வாழைன்னு எல்லா மரமும் இருக்கணும். குயில் மட்டுமில்ல, அப்பத்தான் அங்க மைனா, கிளி, அணில்ணு எல்லாமே வரும். கீச்கீச்னு சத்தம் நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கும். கலர்புல்லா நல்ல வாசனையான பூச்செடில்லாம் நிறைய இருக்கணும். அதைச் சுத்தி நிறைய பட்டாம்பூச்சி பறந்துட்டே இருக்கனும்! இந்த ஃபிளாட் வாழ்க்கையெல்லாம் கொஞ்சம் போர்தான்?" எனப் பேசிக்கொண்டே போனவளை இரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் வேண்டுமென்றே,


"போதும் விட்டுடு அழுதுடுவேன்" என வடிவேலு போல அவளைக் கிண்டல் செய்து சிரித்தான்.


அந்த நிகழ்வு அவள் மனக்கண்ணில் விரியவும், 'அன்று அவள் ஒரு கற்பனையில் சொன்னதை இன்று செயலில் செய்துவிட்டானே!' மகிழ்ச்சியில் அப்படியே அசையாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் ஸ்வேதா.


அவளது முகத்துக்கு நேரே சொடுக்குப் போட்டு அவள் உறை நிலையைக் கலைத்தவன், “இதுக்கே இவ்வளவு எமோஷனல் ஆனா எப்படி? நீ பார்க்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கே" என்று அவளைப் பார்த்து அவன் விஷமமாகக் கண் சிமிட்டவும் உண்மையிலேயே அவனை முறைத்தாள்.


“ஏய் நீயே வேணா வந்து பாரேன்" என்று அவளது கையைப் பற்றிக் கொண்டவன், அவளை அங்கே பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தின் அருகில் அழைத்துச் சென்றான்.


அந்த நீச்சல் குளத்தை ஒட்டி தனது கிளைகள் முழுதும் மஞ்சள் வண்ண மலர்களை நிரப்பி வைத்து அவளுக்காகவே காத்திருந்தது ஒரு சரக் கொன்றை மரம்.


மெல்லியதாகக் காற்று வீசவும் அந்த மலர்கள் பறந்து வந்து நீச்சல் குளத்தில் விழுந்து, அழகிய ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தது.


மகிழ்ச்சியில் கண்கள் குளமாகக் கால்கள் தள்ளாட, நிற்க முடியாமல் அந்த மரத்தைப் பிடித்துக் கொண்டாள் ஸ்வேதா.


அருகில் வந்து அவளுடைய தோளில் தட்டிய ஹரி, “நீ பேலன்ஸ்க்கு என்னைக் கூட பிடிச்சுக்கலாம். நான் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டேன்" என்றவாறே அவளது கையை எடுத்து தன் தோளைச் சுற்றிப் போட்டவன், அவளை அந்த மரத்தின் மீதே சாய்த்து, அவனது மூச்சுக்காற்று அவளது கன்னம் தீண்ட, "இப்பவாவது சொல்லு ஸ்வேதா" என்றான் கிறக்கமாக.


"என்ன... என்ன சொல்லணும்?" என அவனது அந்தச் செய்கையில் அவளுக்கு உதறல் எடுக்க, அவளது குரலும் நடுங்கியது.


அதை இரசித்தவாறே, "உன்னால வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொன்னியே! அது ஏன்?"


அவன் வேண்டுமென்றே அப்படிக் கேட்க, "ஏன்னா... என் மனசு முழுக்க ஹரின்னு ஒருத்தன் இருக்கான்! அவனைத் தவிர வேற யாரையும் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது"


உள்ளே போன குரலில் அவள் சொல்ல, அவள் உரைத்த அந்த வார்த்தைகள் தந்த உவகையில் தன்னை மறந்தவன், காற்றுகூட இடையில் செல்ல இடம் கொடுக்காமல் அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தான் ஹரி.


அவனது காதலில் மொத்தமாக அடங்கியிருந்தவளுக்கு அவனை விட்டு விலகும் எண்ணமே இல்லாமல் போனது.


வேகமாகக் காற்று வீசவும் அந்த மரத்தில் பூத்திருந்த மஞ்சள் நிற மலர்கள் மொத்தமாக அவர்கள் மீது மழையாகப் பொழிய நிகழ்வுக்கு வந்தார்கள் இருவரும். அங்கே போடப்பட்டிருந்த கல்மேடையில் அவளை இருத்தி தானும் அருகில் உட்கார்ந்தான்.


"இப்ப சொல்லு, இப்பவாவது உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியுதா?" என ஹரி கேட்கவும், தன் மோன நிலையிலிருந்து சற்றும் கலையாதவளாக, "ம்ம்" என்றாள் ஸ்வேதா.


"உனக்கு என்னைப் பிடிக்கும்தான?"


"ம்ம்"


"நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா?"


"'ம்ம்" என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன்,


"என்ன ம்.. ம்? இது ஒரு பதிலா?" என்று குரலை உயர்த்த,


"இல்ல, ம்ம்" எனத் தவிப்புடன் பதில் சொல்ல முடியாது முகம் சிவக்க, முழுதும் நேசம் பொங்க தன் கண்களை அவனது கண்களில் கலந்து அவனை நோக்கினாள் ஸ்வேதா.


அதில் தடுமாறித்தான் போனான் ஹரி.


"ம்ம் அப்படினா ஆமாம் தான?" அவன் கேட்கவும்,


ஸ்வேதா ஆமாம் என்பதுபோல் தனது தலையை ஆட்ட, "நல்லா பூம்பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டு. அப்பறம் ஏன்டி என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்க?" என்று ஹரி கேட்கவும், குழம்பித்தான் போனாள் ஸ்வேதா.


"நான் எப்ப உங்களை வேண்டாம்னு சொன்னேன்?" என்று அவள் வியப்புடன் கேட்கவும்,


"நீ நேத்து உங்க அப்பாகிட்ட அப்படிச் சொன்னதா உன் அருமை அண்ணன்தான் சொன்னான்" என ஹரி சொல்லவும்,


"யாரு நந்து அண்ணாவா? அவன் எப்படி உங்க கிட்ட வந்து சொன்னான்?" என்று அவள் கேட்க,


அதில் கடுப்பான ஹரி, "சொன்னா உனக்கு கோவம் வரும், ஆனா என்னால சொல்லாம இருக்க முடிலடி" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளிப்போய் நின்று, "நீ நிஜமாவே ஒரு குழல் விளக்குதான் ஸ்வேதா" என்றான் கடுப்புடன்.


முதலில் அவன் சொன்னது புரியாமல் விழித்தவள், பிறகு அவன் சொன்னதன் அர்த்தம் புரியவும் ,"வேண்டாம் ஹரி! நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா இந்த ஸ்விமிங்பூல்லேயே உங்களைத் தள்ளி விட்டுடுவேன் ஜாக்கிரத" என்று அவள் மிரட்டவும்,


"நீ செஞ்சாலும் செய்வ தாயே" என்றவன் கொஞ்சம் தீவிரமாக, "ஏய் லூசு எனக்கு நந்தா க்ளோசா இல்ல பாலு க்ளோசா?" என்று கேட்கவும்,


"என்ன? அப்ப நீங்க பாலு அண்ணாவோட கான்டாக்ட்லதான் இருக்கீங்களா?" என்று கோபத்தின் உச்சிக்கேச் சென்றவள்,


"நீங்க எல்லாரும் திட்டம் போட்டுத்தான் என்னை ஏமாத்தி முட்டாளா ஆகியிருக்கீங்க? இனிமேல் நான் இங்க ஒரு செகண்ட் கூட இருக்க மாட்டேன்" என்று அங்கிருந்து போக எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்திய ஹரி,


"ஏய்! முழுசா எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டுப் போ, நானே உன்னைப் பத்திரமா உங்க வீட்டுல ட்ராப் பண்றேன்" என்று சொல்லவும்,


மறுபடியும், போய் அந்தக் கல்மேடையில் உர்ர்.. என்று உட்கார்ந்தாள் ஸ்வேதா. அதன்பின் அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள்.


அவளது முகவாயில் விரல் பதித்து முகத்தை நிமிர்த்தி அவளது கண்களில் கலந்தவாறே, "என்னப் பார்த்தாக்க உன்னை ஏமாத்தறவன் மாதிரி தோனுதா ஸ்வேதா?" என்று கேட்ட ஹரியின் பாவனையில் கரைந்தவள்,


இல்லை என்பது போல் தலை ஆட்டி, "அப்பறம் ஏன் என்னை விட்டுட்டு இவ்வளவு நாள் எங்கயோ போய்ட்டீங்க ஹரி" எனத் துயரத்துடன் கேட்கவும்


அதில் முகம் மாறியவன், "அதுக்கு காரணம் நீதான் ஸ்வேதா" என்று சொல்ல அவனை வலியுடன் பார்த்து "நானா?" என்றாள்.


"ஆமாம் நீயேதான்" என்று சொல்லி விட்டு, "காதலுக்கு அடிப்படையா ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நம்பிக்கை தேவை ஸ்வேதா! அந்த நம்பிக்கை உனக்கு என்கிட்ட கொஞ்சமும் உண்டாகல! அது எனக்குப் புரிஞ்சதாலதான் நான் ரொம்ப தள்ளிப் போயிட்டேன்" என்றான் அவன்.


அதில் அதிர்ந்த ஸ்வேதா, "என்ன சொல்ல வரீங்க ஹரி! எனக்குப் புரியல" என்று பதறினாள்.


"உனக்கு ஆக்சிடன்ட் நடந்த அன்னைக்கு ஜீ.ஹெச்ல இருந்து வேற ஒரு ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ்ல கொண்டு போகும்போது, அந்த மயக்க நிலைலயும் நீ என்ன சொன்ன தெரியுமா?" என்று அவன் கேட்க, விடை தெரியாமல் அவள் அவனைப் பார்க்கவும், அன்று நடந்ததைச் சொல்லத் தொடங்கினான்.


ஆம்புலன்ஸில் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது ஸ்வேதா ஏதோ முனகுவதுபோல் கேட்கவும், ஹரி அவள் என்ன சொல்கிறாள் என்பதை அறிய அவளுக்கு அருகில் குனிந்து அவளது முகத்தின் அருகே காதைக் கொண்டு செல்ல முதல் முறை அவள் சொன்னது ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.


மறுபடி கூர்ந்து கவனிக்கவும், "ஹரி எங்க இருக்கீங்க? ஐ மிஸ் யு ஹரி!" என்று உளறலாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.


அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரியின் உயிர் கரைந்து கண்களில் கண்ணீராக வழிந்தது.


'சுயநினைவே இன்றி இருக்கும் அந்த நிலையிலும் கூட அவள் தன்னைத் தேடுகிறாள்?' என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது அவனுக்கு. அந்தக் கணம் தன்னிடம் அவள் கொண்ட காதலை முதன் முதலாக உணர்ந்தான் ஹரி.


அவள் குணமாகிக் கல்லூரிக்கு வரத்தொடங்கிய பிறகு அவளது நடவடிக்கைகள் மாறிப்போய் அவள் அவனை வேண்டுமென்றே தவிர்ப்பது ஹரிக்கு நன்றாகவே புரிந்ததும் அவன் மனம் மிகவும் புண்பட்டுப் போனது.


அதுவும் அன்று, பேருந்திலிருந்து ஸ்வேதாவும் வசுதாவும் இறங்கி வரும்பொழுது, தூரத்திலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஹரி.


ஸ்வேதா சற்றுத் தள்ளாடுவதுபோல் அவனுக்குத் தோன்றவும்தான் அவளை நோக்கி வேகமாக வந்தான்.


அப்பொழுதுதான் வசுதா, "என்னாலே தானக்கா உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு" என்று சொன்னதை அவன் கேட்க நேர்ந்தது.


அவளுக்கு நடந்தது விபத்து இல்லை என்பது ஹரிக்குத் தெரிய வரவும் அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளவே, "என்ன ஸ்வேதா நடந்தது? இவளாலதான்னா அது ஆக்சிடென்ட் இல்லையா நீ இருந்த நிலைமைல உன்னை ஒண்ணும் கேட்கக் கூடாதுன்னு விட்டது தப்பா போச்சே, போலீஸ்ல கூட விபத்துன்னுதானே ஃபைல் பண்ணி இருக்காங்க" என்று கொஞ்சம் வேகமாக அவன் கேட்கவும்,


"விடுங்க ஹரி ஒரு பிரச்சினையும் இல்ல. அது அன்எக்ஸ்பெக்ட்டட்லி, ஃபுல் அன்ட் ஃபுல் என்னோட கேர்லஸ்நெஸ்ஸால நடந்த ஆக்ஸிடன்ட்தான்" என்று ஸ்வேதா சொன்ன பதிலில் அவனுக்கு வந்த கோபம், அவள் தள்ளாடிய படி வருவதைக்கூடக் கவனிக்காமல் உடன் வந்த வாசுதாவின் மீது திரும்ப,


"ஏய், நீ சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது?" என்று மிரட்ட தொடங்கினான்.


"நீங்க யாரு இவளைக் கேள்வி கேட்க? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க" என்று வசுதாவை அருகில் வைத்துக்கொண்டே ஆத்திரத்துடன் ஸ்வேதா அலட்சியமாகச் சொல்லவும்,


கொஞ்சம் கூட தன்னிடம் நம்பிக்கை இல்லாதது போல் ஸ்வேதாவின் நடவடிக்கைகள் அவனுக்குத் தோன்றிவிட, அதுவும் காதலிப்பது பற்றிக் கண்டபடி முன்பு அவள் பேசிய பேச்சுக்கள் அவனுக்கு நினைவில் வரவும் அவள்மேல் தான் கொண்டிருக்கும் காதலால் தனது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டிக்கும் பொழுது இவள் இப்படி நடந்து கொள்கிறாளே என்ற ஆதங்கத்தில் அவள் மேல் கொண்ட அன்பையும் காதலையும் தாண்டி அவனது சுயம் கொஞ்சம் தலை தூக்கிவிடவே,


"இனி நீயா வந்து என்கிட்ட என்ன நடந்ததுன்னு சொன்னாதான் நான் கூட பேசுவேன்! இல்லலன்னா உன் விஷயத்துல எக்காரணம் கொண்டும் நான் தலையிட மாட்டேன்! உனக்கு நான்" என்றவன் அதைத் திருத்தி "என்னோட ஃப்ரண்ட்ஷிப் வேணும்னா நீயேதான் என்னைத் தேடி வரணும்" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் அவளைக் கடந்து போனான் ஹரி.


அதன் பிறகு அவளும் அவனை நெருங்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அது ஹரியை இன்னும் அதிகமாகவே இறுகச் செய்துவிட, எந்த நினைவுமே அவனைப் பாதிக்காதவாறு முழுவதுமாக வேலையில் தன்னைப் புதைத்துக் கொண்டான்.


ஸ்வேதாவே தன்னைத் தேடி வரவேண்டும் என்று நினைத்தான் ஹரி.


வர்ஷினியோ இல்லை பாலுவோ நடுவில் வந்து இவனுக்காக, இவனுடைய காதலுக்காக அவளிடம் பேசினால் ஏதோ இவனுக்காக அவர்கள் சிபாரிசு செய்வதுபோல் ஆகிவிடும் என அவனுக்குத் தோன்றவும் அதைக் கொஞ்சமும் விரும்பாத ஹரி அவர்களிடம் இதுபற்றி எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான்.


வர்ஷினியின் திருமணத்தில் அவளைப் பார்க்கும் வரை அவனிடம் இருந்த உறுதி, பொலிவிழந்துபோய் இருந்த ஸ்வேதவைக் கண்டவுடன் ஆட்டம் காணத் தொடங்கியது. அதன் பிறகு வர்ஷினியின் மூலம் அவளது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.


அவள் விரும்பியது போல் யூ.எஸ். சென்று எம்.எஸ். படித்து முடித்து அவள் வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம் என அவன் இருக்க திடீரென ஸ்வேதா பி.ஹெச்.டியில் சேர்ந்தது வர்ஷினியே அறியாத ஒன்று. அதனால் அவளது வருகை மேலும் மூன்று நெடிய ஆண்டுகள் தாமதமானது.


ஹரி அவன் பக்க நியாயங்களைச் சொல்லிக்கொண்டே போனான்.


"இப்ப சொல்லு, நீ அப்ப நடந்துட்ட விதம் சரியா இருந்துதா?" எனக் குற்றம்சாட்டி அவன் கேள்வி கேட்கவும்,


"எனக்குன்னு ஒரு மனசும் அதுல எண்ணங்களும்... அதுக்கு பின்னால சில நியாயங்களும் இருக்கும் தான? அது உங்களுக்குப் புரியலையா?" என்று அவள் பதில் கேள்வி கேட்க,


"அதை நீ இன்னும்கூட என்கிட்டே சொல்லல தான? அப்பறம் எனக்கு எப்படி புரியணும்னு நீ எதிர்பார்க்கற" என்று அவளது கேள்வியை அவள் பக்கமே திருப்பினான் ஹரி.


சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா தன் பக்க நியாயங்களை.0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page