top of page

Nee Enbathe Naanaga - 16

16 - இணக்கம்


விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன்.


ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே வலித்தது. அதை ஏற்க முடியாமல் அவன் ரொம்பவும் மனதளவில் அவதியுற்றான்.


இரு வாரங்கள் இப்படியே கடந்து சென்றுவிட்டன.


அப்போதும் செழியனுக்கு ஏனோ அவள் முகம் பார்த்து பேச சஞ்சலமாக இருந்தது.


அவளின் நட்பை தான் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வா அல்லது அவளை மீண்டும் ஒரு தடவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்துவிடுவோமா என்ற பயமா?


ஏதோ ஒன்று அவனிடமிருந்து அவளை விலகி நிற்க செய்தது. நேருக்கு நேராக முகம் பார்த்து பேசாமல் முடிந்தவரை அவளை தவிர்த்தான்.


அதுவும் இரவு நேரங்களில் குழந்தைகளை அவர்களோடு உறங்க வைத்து கொள்வதில் கறாராக இருந்தான். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி மீனாவையும் அன்புவையும் அவர்களோடே படுக்க வைத்துகொண்டான்.


அவன் மீதே அவனுக்கு உண்டான அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது.


ஆனால் ஜானவி தான் சங்கடப்படுகிறோம் என்பதால் அவன் அப்படி செய்கிறான் போலும் என்று எண்ணி கொண்டாள்.


செழியனின் மனநிலை ஜானவிக்கு தெரியவில்லை. அவன் விலகி நிற்க முயன்றாலும் அவள் அவனிடம் எப்போதும் போலவே இயல்பாக நடந்து கொண்டாள். பேசினாள்.


இந்த இரண்டு வாரத்தில் ஜானவி செழியன் வீட்டில் ரொம்பவும் இயல்பாக பழகிவிட்டிருந்தாள். பாண்டியனும் சந்தானலட்சுமியும் அந்தளவுக்கு அவளிடம் நெருக்கமானதும் கூட ஒரு காரணம்.


அதேநேரம் அவள் அலுவலக வேலைகள் செய்ய எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டி, அவள் முன்பு குடியிருந்த எதிர்வீட்டில் சரவணனையும் ரேஷ்மாவையும் வைத்து தம் அலுவல்களை பார்த்து கொண்டாள்.


அன்று சனிக்கிழமை செழியன் பள்ளிக்கு போய்விட்டு திரும்ப, கதவு திறந்திருந்தது. வீட்டின் வாசல் கேட் மட்டும் பூட்டியிருந்தது.


அதுவும் வீட்டில் ஆள்அரவமே இல்லை.


"அன்புக்குட்டி.... மீனும்மா..." என்று அவன் அழைக்க பதில் குரலே இல்லை.


செழியன் புரியாமல், 'என்ன? வந்ததும் இரண்டு பேரும் எகிறிட்டு ஓடி வருவாங்க... எங்கே போனாங்க? என்று யோசித்து கொண்டே அவன்,


"ம்மா" என்று அழைத்தான்.


ஜானவி சமையலறையிலிருந்து, "இதோ வரேன்" என்று குரல் கொடுத்துவிட்டு சாவியை எடுத்து வந்து பூட்டை திறக்க,


"எங்க? வீட்டில யாரையும் காணோம்" என்று வினவினான்.


"எல்லோரும் பக்கத்தில பெருமாள் கோவில் போயிருக்காங்க... அவங்க தாத்தா பாட்டி கிளம்பினதை பார்த்ததும் இந்த வாலுங்களும் கூடவே கிளம்பிடுச்சு" என்று சொல்லி கதவை திறந்துவிட்டு அவள் உள்ளே செல்ல பின்னோடு வந்தவன்,


"அப்போ வீட்டில யாருமே இல்லையா?" என்று அழுத்தமாக கேட்டான்.


"என்னை பார்த்தா ஆளா தெரியலயா உங்களுக்கு?" என்று ஜானவி திரும்பி நின்று புருவத்தை உயர்த்த,


அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தபடி, "சேச்சே.... அப்படி இல்ல.... பசங்க இல்லையான்னுதான்... அவங்க இல்லாம வீடே அமைதியா இருக்கே" என்று சமாளித்தான்.


"அதென்னவோ உண்மைதான்... அவங்க இரண்டு பேரும் கிளம்பனதும்... எனக்கே இது நம்ம வீடான்னு சந்தேகம் வந்திருச்சு" என்று அவள் முறுவலித்து சொல்ல,


செழியன் முகத்திலும் புன்னகை அரும்பியது.


"டீதான் போட்டுட்டு இருக்கேன்... உங்களுக்கும் போட்டு எடுத்துட்டு வரேன்... இரண்டு பேரும் ஒண்ணா குடிக்கலாம்" என்று சொல்லி கொண்டே அவள் உள்ளே சென்றுவிட செழியனுக்குதான் உள்ளூர தடுமாற்றம்!


என்னதான் அவளை விட்டு விலகி நிற்க அவன் நினைத்தாலும் அவளின் இயல்புத்தன்மையும் அவள் அந்த வீட்டையும் அவனையும் ஒரு குடும்பமாக பாவித்து பேசும் விதமும் நாளுக்கு நாள் அவளை மனதளவில் அவனிடம் நெருக்கமாக்கி கொண்டே இருந்தது.


ஜானவி இரண்டு கோப்பையில் தேநீரை நிரப்பி கொண்டு அறை வாசலில் வந்து, "செழியன்" என்று அழைக்கவும்,


"வாங்க ஜானவி" என்று அழைத்தவன் ஃபார்மல்ஸிலிருந்து டிரேக்ஸுக்கும் டீஷர்ட்டுக்கும் மாறியிருந்தான்.


அதோடு மேஜையில் அமர்ந்து கொண்டு தேர்வு தாள்களை திருத்த அவன் கையிலெடுத்து கொள்ள,


"வந்ததும் வேலையா? இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா டீ குடிக்கலாம்னுதானே சொன்னேன்" என்று ஜானவி முகத்தை சுருக்கினாள்.


"இல்ல ஜானவி... பேப்பர் கரெக்ஷன்ஸ்... நாளைக்கே முடிக்கணும்... பசங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள கொஞ்சமாச்சும் முடிக்கலாம்" என்று அவன் காரணங்கள் சொல்ல,


ஜானவி தேநீர் கோப்பையை அவன் அருகில் வைத்தபடி, "முன்ன மாதிரி நீங்க என்கிட்ட பேசறது இல்ல செழியன்... ஏதோ மாதிரி நடந்துக்கிறீங்க... முகத்தை கூட பார்த்து பேச மாட்டிறீங்க... உங்களுக்கு என்னதான் ஆச்சு... நான் ஒருவேளை ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டேனா? இல்ல உங்க ப்ரைவஸிக்குள்ள நான் அத்துமீறி நுழையறேனா" என்று

அவள் வருத்தத்தோடு பொரிந்து தள்ளினாள்.


"சேச்சே அப்படி எல்லாம் இல்ல ஜானவி" என்று அவன் பதறி கொண்டு மறுக்க,


"நீங்க பொய் சொல்றீங்க" என்று சொல்லி அவனுக்கான தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவள் திரும்ப,


"ஜானவி ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று செழியன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து ஸ்டிக்கை ஊன்றி எழுந்து கொள்ளும் போது அது தடுமாறி கீழே விழுந்தது.


ஜானவி அந்த சத்தத்தில் பட்டென திரும்பியவள் அவன் நிற்க தடுமாறுவதை பார்த்து


வேகமாக தன் கையிலிருந்து ட்ரேயை கீழே வைத்துவிட்டு, "பார்த்து செழியன்" என்று பதறியபடி அவனிடம் நெருங்கி வந்து பிடித்து கொள்ள,


அவனும் தடுமாற்றத்தில் அவள் தோள் மீது தன் வலது கரத்தை தாங்கி கொண்டு நின்றான்.


ஆனால் அடுத்த நொடியே அவன் கரத்தை விலக்கி கொள்ள பார்த்த போது, அவள் கரம் அவன் இடையை வளைத்து பிடித்து கொண்டு அவனுக்கு துணையாக அவள் தாங்கி நின்றதை!


மனம் நெகிழ்ந்து அவள் முகத்தை பார்த்தான்.


தனக்காக பதறிய அவள் விழிகளிலிருந்த தவிப்பு அவனுக்கு பிடித்திருந்தது.


துணைவியாக அவள் உடன் நின்ற விதத்தில் இப்படியும் அப்படியுமாக ஊசலாடி கொண்டிருந்த அவன் மனது அவளிடம் மொத்தமாக சாய்ந்திருந்தது.


"செழியன்" என்றவள் அழைப்பை அவன் செவிகள் கேட்டறிந்தாலும் அவன் மனமும் விழிகளும் அவளை விட்டு நகர்ந்தபாடில்லை.


"செழியன்" என்றவன் அழுத்தம் கொடுத்த அழைக்க அவன் தன்னிலை மீட்டு கொண்டு அவள் தோள் மீதிருந்த கரத்தை மேஜை மீது ஊன்றி கொள்ள,


ஜானவியும் தன் கரத்தை விலக்கி கொண்டு குனிந்து அவன் ஸ்டிக்கை எடுத்து கொடுத்தாள்.


அதனை அவன் பெற்று கொண்டு மௌனமாக அவள் முகத்தை பார்த்தான்.


இத்தனை நாளாக தனக்கென்று ஒரு துணை தேவையென்று அவன் மனம் கருதியதேயில்லை.


ஆனால் மனம் இன்று அவள் துணையை விரும்பியது. அவள் தனக்காக பதறி நின்றது பிடித்திருந்தது. அவள் மீது அவன் கொண்ட நட்புணர்வு தகர்ந்திருந்தது.


"பார்த்து எழுந்திருக்க கூடாதா?" என்று அக்கறையாக கேட்டாள் அவள்!


"நீங்க கோபப்பட்டு போகாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது" என்று அவன் அவளை பார்த்து சொல்லவும்,


"என் கூட நீங்க ஒரு டீ குடிச்சிருந்தா... இப்படி எல்லாம் நடந்திருக்காது" என்று சொல்லி அவனை பதில் பார்வை பார்த்தாள்.


அவன் சிரித்துவிட்டு, "சரி குடிப்போம்" என்று சொல்ல இருவரும் பால்கனி கதவை திறந்து கொண்டு தேநீர் அருந்த,


"நீங்களும் அவங்க கூட கோவிலுக்கு போயிருக்கலாமே" என்று இயல்பாக கேட்டான் செழியன்.


"நீங்க வீட்டுக்கு வர நேரமாச்சா... அதான் போகல" என்றவள் சொல்ல,


அவன் பார்வை என்னவோ இம்முறை அவளையே பார்த்து கொண்டிருந்தது. இவளுக்கு தன் மீது இருப்பது வெறும் நட்புணர்வு மட்டும்தானா என்ற கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.


அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்குமா என்ற எதிர்பார்ப்புதான்.


"செழியன்" என்றவள் அழைக்க, "ஹ்ம்ம்" என்றான்.


"உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் என் மேல வருத்தம் இல்லையே?" என்றவள் வருத்தமாக கேட்க,


"அப்படி எல்லாம் இல்ல ஜானவி" என்று அவன் ரொம்பவும் சாதாரணமாக கூற,


"நிஜமா?" என்றவள் அழுத்தி கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


அவர்கள் இருவருமே அறியாத வண்ணம் அவர்கள் இருவருக்குமிடையில் ஓர் இணக்கம் உருவாகியிருந்தது.


தேநீரை பருகி முடித்த பின்பும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க,


வெளியே மீனா, அன்புக்குட்டியின் குரல் ஒலித்தது.


"வந்துட்டாங்க போல... சரி நீங்க கப்பை கொடுங்க" என்று அவன் கரத்திலிருந்த தேநீர் கோப்பையையும் வாங்கி கொண்டு வெளியேறினாள்.


'வரவங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வர கூடாதா?' செழியனுக்கு அவளுடன் இன்னும் சில நிமிடங்கள் தனிமையில் பேசி கொண்டிருக்க கூடாதா என்ற எண்ணத்தின் எதிரொலி!


ஜானவி வேகமாய் சென்று வாசல் கேட்டை திறந்துவிட்டு கொண்டே, "சாமியெல்லாம் கும்பிட்டாச்சா?" என்று குழந்தைகளிடம் கேட்டாள்.


அப்போது பாண்டியன் சந்தானலட்சுமியை முந்தி கொண்டு மீனா உள்ளே வந்து, "ம்மா... தாத்தா" என்க,


"தாத்தாவுக்கு என்னடி ?" என்று கேட்டு கொண்டே ஜானவி பாண்டியனை பார்த்தாள். அப்போது அவர்கள் பின்னோடு சங்கரன் நுழைந்தார்.


அவரை பார்த்ததும் ஜானவிக்கு சீற்றம் உண்டாக அவள் அவரை பார்த்த கணமே விறுவிறுவென படுக்கையறைக்குள் சென்றுவிட்டாள்.


உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்த செழியன் அவள் கோபத்தையும் வேகத்தையும் புரியாமல் பார்த்தான்.


அவன் வெளியே வந்த போது சங்கரன் முகப்பறையில் நிற்க,


"ஜானவியோட அப்பா" என்று அவரை அறிமுகப்படுத்தினார் பாண்டியன்.


ஜானவியின் கோபம் இப்போது புரிந்தது செழியனுக்கு!


அவன் புன்னகையான முகத்தோடு, "உட்காருங்க ப்பா" என்று சங்கரனிடம் சொல்ல பாண்டியனும் அவரை அமர சொன்னார்.


சந்தானலட்சுமி, "நான் போய் காபி எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே செல்ல சங்கரன் ரொம்பவும் சங்கடமான நிலையில் நின்றிருந்தார்.


சங்கரன் கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு தனியே ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த சமயத்தில் பாண்டியன் சந்தானலட்சுமியோடு வந்த மீனா அவரை கண்டறிந்து, "தாத்தா" என்று அவரிடம் ஓடி செல்ல,


பேத்தியை பார்த்து அவருக்கு அத்தனை ஆனந்தம்.


பாண்டியனுக்கும் சந்தானலட்சுமிக்கும் அப்போதுதான் அவர் ஜானவியின் அப்பா என்றே தெரியும்.


சங்கரன் மீனாவை தூக்கி கொண்டு அவர்களை புரியாமல் பார்க்கும் போது பாண்டியன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அதேநேரம் செழியனுக்கும் ஜானவிக்கும் நடந்த திருமணத்தை பற்றி சொல்லி அனைத்து விஷயங்களை விவரமாக விளக்கினார்.


அப்போதுதான் சங்கரனுக்கு மகளின் மீது அவதூறாக அவர்கள் பழிப்போட்ட விஷயமே தெரியவந்தது. மனமுடைந்து குற்றவுணர்வோடு மகளை பார்த்து மன்னிப்பு கேட்கவே அவர் அங்கே வந்திருந்தார். ஆனால் ஜானவி அவரை பார்க்க கூட விருப்பமின்றி அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.


"ம்மா தாத்தா வந்திருக்காரு" என்று மீனா அழைக்க,


"அவரு உனக்கு தாத்தா... அவ்வளவுதான்" என்று ஜானவி கோபித்து கொண்டு முகத்தை திருப்பி கொள்ள, "ம்மா" என்று அழைத்தாள்.


"போடி" என்று ஜானவி மீனாவிடம் கோபம் மாறாமல் சொல்ல, அங்கே செழியன் வந்து நின்றான்.


மீனா அவனிடம், "அம்மா திட்டிறாங்க" என்க,


"கோபத்தில இருக்காங்கடா... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போங்க" என்றான்.


செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், "ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க" என்றாள்.


"அதெப்படி ஜானவி... வீட்டுக்கு வந்தவரை போய்... அதுவும் அவர் உங்களோட அப்பா" என்று செழியன் தாழ்வான குரலில் சொல்ல,


"அப்பா... அந்த உறவுக்கெல்லாம் அந்த மனுஷனுக்கு அர்த்தம் தெரியுமா?" என்றவள் கடுகடுப்பாய் கேட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.


"உங்க கோபம் புரியுது... ஆனா இப்போ அவர் நடந்ததுக்காக எல்லாம் மனசை வருந்தி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கலாம்னுதான் வந்திருக்காரு" என்றவன் பொறுமையாக எடுத்துரைக்க,


"அதெப்படி? என் கனவு சந்தோஷம் சுயமரியாதைன்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிட்டு... இப்போ மன்னிப்பு கேட்கலாம்னு வந்திருக்காராமா... நான் என்ன மனுஷியா இல்ல ஜடமா?" என்றவள் உச்சபட்ச கோபத்தோடு கேட்ட அடுத்த நொடி உடைந்து ஆழ ஆரம்பித்தாள்.


"ஜானவி ப்ளீஸ் அழாதீங்க" என்றான் அவனும் மனவருத்தத்தோடு!


அவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு, "முடியல செழியன்... அன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா வீட்டுக்கு போனேன் தெரியுமா... எல்லோரும் சேர்ந்து என்னை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி அசங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க... அதுவும் குழந்தைங்க முன்னாடி...


ஏன்... அப்போ இந்த மனுஷனும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொல்லி... ச்சே! இப்படி எல்லாம் பேசினவங்கள எப்படி மன்னிக்க சொல்றீங்க... என்னால முடியாது... சத்தியமா முடியாது... நான் சாகிற வரைக்கும் இந்த அவமானத்தை என்னால மறக்கவும் முடியாது... மன்னிக்கவும் முடியாது" என்றவள் தீர்க்கமாக உரைக்க,


செழியன் மௌனமாக அவள் வேதனையை உள்வாங்கினான்.


மனதளவில் அவள் ரொம்பவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு அத்தனை சீக்கிரத்தில் அவள் கோபம் சரியாகாது என்பது புரிய மேலே எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்தான்.


முகப்பறையில் பாண்டியன் சங்கரனோடு சோபாவில் அமர்ந்து உரையாடி கொண்டிருக்க செழியன் தயக்கத்தோடு அவர்கள் முன்னே வந்து,


"ஜானவி கோபமா இருக்காங்க"என்று பேச ஆரம்பிக்கும் போதே,


"எனக்கு தெரியும் தம்பி... அவ நிச்சயம் என்னை மன்னிக்க மாட்டா... ஏன்னா நாங்க செஞ்ச காரியம் அப்படி" என்று அவர் தலைகுனிவாய் பதில் உரைத்தார்.


அவர் அருகில் அமர்ந்திருந்த பாண்டியன், "விடுங்க சம்பந்தி... எல்லாம் காலப்போக்கில சரியாகிடும்" என்க,


"அப்பா சொல்றதும் சரிதான்... கொஞ்ச நாள் போனா ஜானவி மனசு மாறும்" என்றான் செழியன்.


சங்கரன் தலையசைத்து அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டாலும் மனதளவில் அவருக்கு அந்த நம்பிக்கை இல்லை.


அப்போது சந்தானலட்சுமி காபியோடு வர, "இல்லங்க எனக்கு வேண்டாம்... நான் கிளம்பறேன்" என்று சங்கரன் சொல்லி மறுக்க,


"அப்படி எல்லாம் சொல்ல கூடாது... சம்பந்தி நீங்க முதல் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க" என்றார் பாண்டியன்.


அதேசமயம், "எடுத்துக்கோங்க" என்று செழியனும் சந்தானலட்சுமியும் சொல்ல சங்கரனுக்கு சங்கடமாய் போனது.


பாண்டியன் உடனே அந்த காபியை எடுத்து அவர் கையில் திணித்து,


"ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உறவு விட்டு போகுமா? நீங்க ஜானவியோட அப்பா... எனக்கு சம்பந்தி... அப்படி எல்லாம் எதுவும் சாப்பிடாம உங்களை அனுப்ப முடியாது... அது மரியாதையும் இல்ல" என்று பாண்டியன் முடிவாய் உரைக்க அதன் பின் சங்கரனும் மறுக்க மனமில்லாமல் வாங்கி பருகினார்.


அதேநேரம் செழியனின் குடும்பம் பழகும் விதத்தை பார்த்து சங்கரனுக்கு பெருமதிப்பு உண்டானது. செய்த தவறு ஒரு புறம் அவரை உள்ளூர வாட்டி வதைத்தாலும் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு இருக்கிறாள் என்று மனதில் நிம்மதி உண்டாகியிருந்தது.


சங்கரன் புறப்படும் தருவாயில் ஜானவியை எதிர்பார்த்தபடியே வீட்டின் வாயிலை தாண்டினார். ஆனால் அவள் அறையை விட்டு வெளியேவே வரவில்லை.


செழியன் அவரை வழியனுப்பும் போது, "நீங்க கவலைப்படாதீங்க ப்பா... நான் ஜானவியை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்" என்று சொல்ல,


சங்கரன் கண்களில் நீர் தளும்பி நின்றது.


"இல்ல தம்பி... அவ என்னை மன்னிக்கலானாலும் பரவாயில்லை... அவ சந்தோஷமா இருந்தா போதும்" என்றவர் செழியன் கரத்தை பற்றி கொண்டு,


"ஜானுவை நல்லா பார்த்துக்கோங்க தம்பி... இனிமேயாச்சும் அவ சந்தோஷமா இருக்கட்டும்" என்று கண்ணீர் மல்க உரைத்தார்.


செழியனுக்கு என்ன பதில் சொல்வதேன்றே தெரியவில்லை. ஒரு நொடி திகைத்து நின்றவன் பின் அவர் முகம் பார்த்து, "நிச்சயம் நான் ஜானவியை சந்தோஷமா பார்த்துப்பேன் ப்பா" என்று உறுதியளித்தான்.


சங்கரன் சென்ற பிறகும் ஜானவி இயல்புநிலைக்கு திரும்பவில்லை. யாரிடமும் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை. குழந்தைகளிடம் கூட!


செழியனும் அவள் மனமறிந்து தன் தந்தை தாயிடம் இது குறித்து ஜானவியிடம் பேச வேண்டாமென்று சொல்லியிருந்தான்.


எப்போதும் போல் உறங்கும் முன்னர் அன்புவும் மீனாவும் தங்கள் அரட்டைகளை செய்துவிட்டு உறங்கி போயினர்.


ஆனால் ஜானவி அவற்றையெல்லாம் கண்டும் காணாதவளாக திரும்பி படுத்து கொண்டிருக்க, குழந்தைகள் உறங்கிவிட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு செழியன்,


"ஜானவி" என்று மெதுவாக அழைத்தான். பதிலில்லை.


அவன் மனதிற்கு என்னவோ அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்றே தோன்றியது.


அந்த அறையே மௌனத்தை சுமந்து கொண்டிருந்த போதும் மெலிதாக அவள் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.


"அழறீங்களா ஜானவி" என்று அவன் வினவ அப்போதும் அவளிடமிருந்து பதிலில்லை. ஆனால் அவள் படுத்திருந்தபடியே தன் விழிகளை அவசரமாக துடைத்து கொண்டாள்.


"ஜானவி" என்றவன் அழுத்தமாக அழைக்க,


அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்தமர்ந்து, "சொல்லுங்க" என்றாள் கம்மிய குரலில்.


இருவரும் படுக்கையில் அவரவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, "என்னாச்சு ஜானவி?" என்றவன் கேட்க,


"உம்ஹும் ஒண்ணும் இல்லயே" என்று தலையசைத்து மறுத்தாள் அவள்!


"அப்புறம் ஏன் அழறீங்க?" என்று கேட்டான்.


"அதெல்லாம் இல்லையே" என்று அவள் மீண்டும் தன் முகத்தை துடைத்து கொள்ள,


"என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?" செழியன் இறக்கமாக கேட்டான்.


"என்ன சொல்லணும்?"


"என்ன கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க... ஏன் உங்களுக்குள்ளயே எல்லா கஷ்டத்தையும் போட்டு புழுங்குக்கிறீங்க" என்றவன் கேட்கவும் அவனை மௌனமாக பார்த்துவிட்டு அவள் தலையை திருப்பி கொண்டாள்.


"சந்தோஷத்தில மட்டும் பங்குப்போட்டுக்கிறது இல்ல நட்பு... கஷ்டத்திலயும் பங்கு போட்டுக்கிறதுதான் உண்மையான நட்பு" என்று இடைவெளிவிட்டவன்,


"அதுவுமில்லாம நான் உங்க பெட்டர் ஹாஃவ் இல்லையா ஜானவி?!" என்று அவன் மெல்லிய புன்னகையோடு வினவ ஜானவி அவன் புறம் அதிர்ச்சியாக திரும்பினாள்.


"இல்ல... நம்ம பொறுப்புகளையும் கடமைகளையும் பங்குப்போட்டுக்கிட்ட விதத்தில நாம இப்போ பெட்டர் ஹாஃவ்தானே... அதை சொன்னேன்" என்று செழியன் சொல்ல,


ஜானவி சலிப்பாக முகத்தை திருப்பி கொண்டு, "ப்ச்... எனக்கு எந்த கஷ்டமும் இல்ல... நான் இங்கே சந்தோஷமாதான் இருக்கேன்... மாமாவும் அத்தையும் என்னை அந்தளவுக்கு நல்லா பார்த்துக்கிறாங்க... இன்னும் கேட்டா முன்ன விட நான் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்..." என்றவள் சொல்லும் போதே செழியன் முகத்தில் புன்னகை அரும்பியது.


ஜானவி மேலும், "இந்த மனுஷன் அதை கெடுக்க வந்துட்டாரு" என்று பல்லை கடித்து கொண்டு உரைத்தாள்.


"அப்படி சொல்லாதீங்க ஜானவி... என்னதான் இருந்தாலும் அவரு உங்க அப்பா"


"உங்களுக்கு தெரியாது செழியன்... அவராலதான் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு" என்று ஜானவி வெறுப்பாக பதிலுரைக்க,


"தப்பு ஜானவி... எந்த அப்பாவும் பொண்ணோட வாழ்க்கையை நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க... ஏதோ சூழ்நிலை... அப்படி ஒருத்தரை நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு... அவரு மட்டும் என்ன தெரிஞ்சா அப்படி ஒரு கல்யாணத்தை உங்களுக்கு செஞ்சி வைச்சாரு" என்று பொறுமையாக எடுத்துரைத்தான்.


"சரி... எனக்கு நடந்த கல்யாணத்தை என் தலைவிதின்னு நான் நினைச்சுக்கிறேன்... ஆனா பெத்த பொண்ணை அப்பாவும் அம்மாவும் சந்தேகம் படலாமா செழியன்?" என்று அவள் நிதானமாக கேட்க,


"அது தப்புதான்... நான் இல்லைங்கல... ஆனா அதுக்காக அவங்க உறவே வேண்டாம்னு சொல்றதெல்லாம்" என்றவன் பேசி கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள்.


"வேண்டாம் செழியன்... எனக்கு அவங்க யாரும் வேண்டாம்... எனக்கு என் பசங்க மட்டும் போதும்" என்று சத்தமாக உரைக்க அன்புச்செல்வி தூக்கத்திலிருந்து சிணுங்கி,


"ஜானும்மா" என்றாள்.


"ஒண்ணும் இல்லடா நீங்க தூங்குங்க" என்று ஜானவி அவளை தட்டி மீண்டும் உறங்க வைத்தாள்.


செழியன் மௌனமாக அமர்ந்திருக்க, "படுங்க செழியன்... அன் ப்ளீஸ் இனிமே நாம இதை பத்தி பேச வேண்டாம்" என்றாள்.


"சரி பேச வேண்டாம்... ஆனா ஒரு விஷயம்" என்றவன்,


"ப்ளீஸ் உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோங்க... இப்படி தனியா ஆழாதீங்க" என்றான்.


ஜானவி திகைப்போடு அவனை பார்க்க


செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, "உங்களுக்கு பசங்க மட்டும் போதுமா இருக்கலாம்... ஆனா எனக்கு நம்ம பசங்களோட சேர்த்து நீங்களும் வேணும் ஜானவி...


இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்... இனிமே நீங்க சந்தோஷமா இருக்கணும்... நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களை சந்தோஷமா பார்த்துப்பேன்... நீங்க தண்ணியை குடிச்சிட்டு நிம்மதியை படுத்து தூங்குங்க" என்றான்.


அவன் பேசி முடிக்கும் வரை இமைக்காமல் அவனையே பார்த்திருந்தவள் அவன் சொன்னது போல தண்ணீரை அருந்திவிட்டு படுத்து கொண்டாள்.


செழியன் அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு படுத்து விழிகளை மூடி கொள்ள ஜானவிக்கு உறக்கம் வரவில்லை. வெறும் நட்போடு மட்டும் சொன்ன வார்த்தைதானா என்ற யோசனை அவளுக்குள்!


அவன் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். தனிமையும் வெறுமையும் அவளுக்கு பழகி போன ஒன்றுதான். ஆனால் திடீரென்று துணையாகவும் ஆதரவாகவும் அவன் நிற்கிறேன் என்று சொன்னது அவள் மனதை நெகிழ செய்தது.


'எப்பவும் என் கூடவே இருப்பாங்களா செழியன்' என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்காய் கேட்டு கொண்டாள்.


அவன் காதல் ரஞ்சனிக்கு மட்டுமே உரியது என்று தீர்க்கமாக தெரிந்த போதும் அவள் மனம் அவன் மீது காதல் வயப்படுவதை அவளால் தடுக்க முடியவில்லை.


ரஞ்சனியின் இடத்தை பிடிக்க முடியாமல் போனாலும் மனைவி என்ற ஸ்தானத்தோடு அவனுடன் இருப்பதே தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று மனதை தேற்றி கொண்டு கண்ணயர்ந்தாள்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page