top of page

Mathini Yamini [pre-Final]

மாயா-11


"உடம்பெல்லாம் எரிஞ்சுது ஜெய்! பத்தி எரிஞ்சுது! வலியைத் தாங்கவே முடியல ஜெய்! என்னால கொஞ்சம் கூட தாங்க முடியல!


என்னை காப்பாத்த அப்ப அங்க யாருமே இல்ல ஜெய்! யாருமே இல்ல!" அழுகையினூடே சொல்லிக்கொண்டே போனாள் மாதினிக்குள் நிரம்பியிருந்த யாமினி!


என்ன காரணம் ஏது காரணம் என அறிந்துகொள்ளாமலேயே அந்த துயரத்தை அனுபவித்தவளின் தொண்டைக் குழியிலிருந்து எழுந்த கேவல் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெய்யின் மனதில் வேதனையை மிகைப் படுத்தியது.


மாதினி மூலம் 'கல்லூரியில் நடத்த தீ விபத்தில் யாமினி இறந்துவிட்டாள்" என்ற செய்திதான் அவனுக்கு வந்தது.


அதைக் கேள்விப்பட்டு அவன் துடித்த துடிப்பு கொஞ்சம் நஞ்சமில்லை.


இப்போது அதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் துடித்தான் ஜெய், அவள் அடைந்த வேதனையை தானே அனுபவித்தவன் போல!


"சாரி யாமு! சாரி யாமு! அந்த நேரத்துல நீ ரொம்ப தவிச்சு போயிருப்ப இல்ல! நான் உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனே!


எங்களால உனக்கு எந்த நியாயமும் செய்ய முடியலே யாமு! சாரி யாமு!" எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான் அவன்.


அதைக் கேட்டு, "ஹா! என்ன நீ எனக்கு நியாயம் தேடப்போறியா?” எனப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவள், எனக்கான நியாயத்தை நானே தேடிகிட்டேன்! தேடிகிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் சீற்றத்துடன்.


"யாமினி!" என அவன் அதிர்ச்சியுடன் சொல்ல, அவனது கண்களில் குடிகொண்டிருந்த மிரட்சியை அனுபவித்துக்கொண்டே, "என்னோட முதல் பலி அந்த நர்ஸ் ஜூலி!


அடுத்தது நந்தா!


மூணாவதா சதா!


இன்னும் மீதம் இருக்கறவங்களையும் பழி வாங்க பசியோட காத்துக்கிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் வன்மமாக!


அவளது முகமே களை இழந்து விகாரமாக மாறியிருப்பதுபோல் தோன்றியது ஜெய்க்கு!


"மாது!" என அவளை அழைத்தவன் உடனே மாற்றிக்கொண்டு, "சாரி யாமு! கூல் டவுன்!" என அவளைச் சமாதான படுத்த முயன்றான் அவன்.


"ஷ்.. குறுக்க பேசாத ஜெய்! எனக்கு பிடிக்கல!" என்றவள், "என்னை சமாதான படுத்த உன்னால முடியாது!


அதனால நடுவுல எந்த கேள்வியும் கேக்காம நான் சொல்றத கேளு" எனக் கட்டளையாகச் சொன்னவள், தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.


"அந்த காலேஜ்ல படிக்கறவங்க மட்டும் இல்ல, இன்னும் நிறைய பெண்களை இந்த போதை பழக்கத்துக்கு ஆளாக்கி இருந்தாங்க அந்த சதையை பிச்சி தின்னும் ஓநாய்கள்.


அந்த சதா டிவி சீரியல் எடுக்கறேன்னு சொல்லி நடிக்க சான்ஸ் தேடி வர பொண்ணுங்களை நரேன் மாதிரி ஆளுங்களுக்கு பலி கொடுக்கிறான்.


இதுதான் இவனுங்க பிழைப்பே!


வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்ல ஊனமாஞ்சேரி தாண்டி ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு!


அந்த நந்தாவும் பிரபுவும் அங்க இருந்துதான் அந்த பொண்ணுங்கள பிக் அப் பண்ணிட்டு போய் வீராவோட இன்ச்சார்ஜ்ல இருக்கற பப்ல விடுவான்!


மறுபடியும் அவங்கள அங்கேயே கொண்டுவந்து விட்டுட்டு போயிடுவான்.


நவமபர் பதினாலாம் தேதி, எங்களை அந்த ரூம் குள்ள போட்டு பூட்டிட்டு போனாளே அந்த நர்ஸ் ஜூலி அவளை அந்த இடத்துல ட்ராப் பண்ணிட்டு போனானுங்க.


மிட் நைட் வேற; யாருமே இல்லாம அந்த ரோடே வெறிச்சோடி கிடந்தது.


வெஹிகிள்ஸ் கூட அதிகம் போகல.


அப்படி இருக்கும் பொது நான் அமைதியா அவளுக்கு முன்னால போய் நின்னேன்; அவ்வளவுதான்!


என்னைப் பார்த்ததும் தலை தெறிக்க ஓட ஆரம்பிச்சா அவ!


அப்ப பயங்கர ஸ்பீடா வந்த லாரி அவளைத் தூக்கி எறிஞ்சிட்டு போயிடுச்சு!" என்றவள், அன்னைக்கு அவ மட்டும் எங்களை தப்பிக்க விட்டிருந்தால் எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது.


ஒரு பொண்ணா இருந்தும் கூட அவ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம நடந்துக்கிட்டா இல்ல.


அந்த வெறி என் மனசுக்குள்ள பத்தி எறிஞ்சிட்டு இருந்தது.


அதுக்குதான் அவளை பழி தீர்த்துக்கிட்டேன் ஜெய்.


அடுத்தது...


டிசம்பர் பதினாலாம் தேதி அந்த நந்தா தனியா வந்து என் கிட்ட சிக்கினான்!


அவன் அதே இடத்துல ஒரு பெண்ணை ட்ராப் பண்ணிட்டு திரும்ப போய்ட்டு இருந்த நேரம் நான் அவனுக்கு முன்னால போய் நின்னேன்!


என்ன பார்த்த அடுத்த செகண்ட் அவன் நிலை தடுமாறி பைக்கோட போய் விழுந்தான்.


அதோட அவனோட லைஃப் முடிஞ்சுது.


அடுத்தது அந்த சதா! ஜனவரி பதினாலு அன்னைக்கு அவனையும் முடிச்சேன்!


இன்னும் மிச்சம் இருக்கற அந்த மூணு போரையும் பிப்ரவரி பதினாலுக்குள்ள கொன்னு என் பழியை தீத்துக்க போறேன் ஜெய்!


அதுவரைக்கும் என் ஆன்மா சாந்தி அடையாது!" என்றாள் யாமினி குரோதத்துடன்.


கோபத்தில் அவளது உடல் அதிர்ந்தது.


உள்ளே இருக்கும் ஆன்மா யாமினியுடையதானாலும் அந்த உடல் மாதினியுடையதானதால் அவளுக்கு எதாவது துன்பம் நேர்ந்துவிடுமோ என அஞ்சியவன், அவளை அமைதிப் படுத்தும் விதமாக அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்தான் ஜெய்.


அந்த தீண்டலில் அவளது உடல் அதீதமாகத் தகிக்கவும் மின்சாரம் தாக்கியது போல் அவன் அவளை விட்டு விலக, "நான் இருக்கும் போது மாதினியை தொட முயற்சி செய்யாத ஜெய்! அது அவளுக்குத்தான் ஆபத்து" எனக் கர்ஜித்தாள் அவள்.


நொந்தே போனவனாக இயலாமையுடன் தன் தலையைக் கோதிக்கொண்டான் ஜெய்.


அப்பொழுது அங்கே யாரோ வரும் அரவம் கேட்க, மாதினியின் உடல் சிலிர்த்தது. அடுத்த நொடி அப்படியே மயங்கிச் சரிந்தாள் அவள்.


அவளைத் தொட்டுத் தூக்கவும் பயந்து தயங்கியவனாக ஜெய் ஸ்தம்பித்து நிற்க, அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்தார் மாதினியின் பெரியப்பா கணேஷ்.


அவளைத் தாங்கி பிடித்தவாறே, "என்ன ஆச்சு மாப்ள!" எனப் பதட்டத்துடன் அவர் கேட்க, என்ன சொல்வது என்று தயங்கியவன், "யாமினியை பத்தி பேசிட்டு இருந்தா; ரொம்ப எமோஷனல் ஆகி இவளுக்கு திடீர்னு இப்படி மயக்கம் வந்துடுச்சு" என்றவன், வேகமாக வீட்டிற்குள் போய் அவளது அப்பா குமரேஷை அங்கே அழைத்துவந்தான்.


அண்ணன் தம்பி இருவருமாக அவளை வீட்டிற்குள் தூக்கி வந்து ஊஞ்சலில் படுக்க வைத்தனர்.


வீட்டில் அனைவரும் பதறிப்போய் நிற்க, தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான் ஜெய்.


அதில் மெள்ள அவளுடைய மயக்கம் தெளிந்து அவள் கலவரமாக அனைவரையும் பார்க்க, அருகில் நின்ற சாந்தா பாட்டியிடம், "அவளுக்கு ஜுரம் இருக்கா பாருங்க பாட்டி" என்றான் ஜெய் தயக்கத்துடன்.


அவளது நெற்றியில் கை வைத்து பார்த்த பாட்டி, "சில்லுன்னுதான் இருக்கு மாப்ள!" என்றார் தெளிவற்ற குரலில்.


அதற்குள் அவளுடைய அம்மா ஸ்வர்ணா சூடாகப் பாலை கொண்டுவந்து அவள் கையில் கொடுக்க மறுக்காமல் அதைப் பருகினாள் அவள்.


இதை காரணம் காட்டி அவளை வீட்டை விட்டே வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் கனகா பாட்டியும் அவளது அம்மாவும்.


அத்துடன் சேர்ந்து தன்னை சுற்றி என்னதான் நடக்கிறது என்ற கேள்வியும் குழப்பமும் அவளுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொள்ள தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவளுக்கு.


அத்தனை பேரும் சூழ்ந்திருக்க அங்கே மாதினியிடம் ஏதும் பேச இயலவில்லை ஜெய்யால்.


அவள் மாதினியாக இருப்பாளா அல்லது யாமினியாக மாறிப்போவாளா என்ற நிலையில் அவளிடம் எப்படிப் பேசுவது என்றே புரியவில்லை அவனுக்கு.


விடைகாண முடியாத கேள்விகளுடன் அங்கிருந்து கிளம்பினான் அவன்.


அங்கிருந்து வெளியேறுவதற்கு முன் கணேஷை தனியே அழைத்தவன், அவளது உண்மையான நிலையை அவரிடம் சொல்லி அதன் மூலம் மற்ற அனைவரையும் கலவரப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன், "யாமினியின் ஞாபகத்துல அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா மாமா!


அதனால அவளை கொஞ்சநாள் இங்கேயே வெச்சு பத்திரமா பார்த்துக்கோங்க!


சென்னைக்கு இப்ப அனுப்ப வேண்டாம்!" என்றவன், "நான் சொன்ன பிறகு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சா போதும்! இப்போதைக்கு அவ கிட்ட கல்யாணத்தை பத்தி யாரும் எதுவும் பேசாதீங்க.


இது என்னோட சின்ன ரெக்வஸ்ட். இதை எல்லார் கிட்டயும் சொல்லிடுங்க" என முடித்தான்.


"மாப்ள! இந்த கல்யாணம்?" எனக் கேள்வியாய் அவர் இழுக்க, அவர் மனதின் வேதனை புரிந்தவனாக, "நிச்சயமா நடக்கும் மாமா! ஆனா யாமினிக்கான நியாயம் கிடைச்சதும்" என்று தெளிவாகச் சொல்லிவிட்டு யாமினியின் மஞ்சள் 'நேனோ'விலேயே அங்கிருந்து கிளம்பினான் ஜெய்.


***


கல்லூரியில் நடந்த தீ விபத்தில் யாமினி சிக்கிக்கொண்டாள் என்ற செய்தி அறிந்து, வெளிநாட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஜெய்க்கு தகவல் கொடுத்துவிட்டு, கணேஷ் மற்றும் குமரேஷுடன் மாதினி அங்கே போய்ச் சேருவதற்குள் அனைத்து காவல்துறை நடைமுறைகளும் முடிந்து அவளுடைய சடலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது.


அங்கே சென்று பார்க்க, அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனையும் முடிந்திருந்தது.


இரண்டொரு நாட்களில் அது விபத்துதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டு அனைத்தும் மூடி மறைக்கப்பட்டிருந்தது.


கடைசியாக யாமினியின் கைப்பேசியிலிருந்து வந்திருந்த 'ஹாப்பி பில்ஸ்!' என்ற வார்த்தைகளை பின் தொடர்ந்து செல்ல அதைப் பற்றி இணையம் சொன்ன தகவல்கள் விவகாரமானதாக இருக்கவும், அன்று அங்கே நடந்தது விபத்து இல்லையோ என மாதினிக்கு ஏற்பட்ட சந்தேகம் அவனையும் தொற்றிக்கொண்டது.


ஆனால் அதை நிரூபணம் செய்ய அவர்களுக்குச் சரியான ஆதாரங்கள் இல்லாமல் போகவே எந்த ஒரு கேள்வியும் கேட்க இயலாமல் அவளுடைய சடலத்தை வீட்டிற்குக் கொண்டுவந்தனர்.


செய்வதறியாது அவர்களுடைய மொத்த குடும்பமும் சோகத்தில் இடிந்துபோயிருந்தது.


ஆனால் இத்துடன் முடிந்தது என மாதினியால் இருக்க முடியவில்லை.


யாமினியின் ஈமச்சடங்குகள் முடிந்ததும் ஜெய்யை வந்து சந்தித்தவள் அவள் இறுதியாக அனுப்பிய தகவலை அவனிடம் காண்பித்து அந்த 'ஹாப்பி பில்'ஸை பற்றி அவனிடம் விளக்கமாகச் சொன்னாள்.


ஆடித்தான் போனான் அவன்.


தென்றலாக அவனது வாழ்வில் நுழைத்தவள் இப்படி புயலாக அவனை வேருடன் சாய்த்துவிட்டுச் சென்றதை அவனால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.


அவனது இந்த கோரமான மரணத்திற்குப் பின் யார் இருந்தாலும் அவர்கள் நியாயமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என எண்ணினான் ஜெய்.


அதற்காக மாதினிக்கு பக்கபலமாகத் துணை நிற்க வேண்டும் என முடிவு செய்தான்.


பின் யாமினியிடமிருந்து கடைசியாக வந்த குறுந்தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை உதவியை அவர்கள் நாட, அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.


எனவே இருவரது தொழில் சார்ந்த வேலைகளுக்கு நடுவில் அந்த 'ஹாப்பி பில்ஸ்' போதை மருந்து விற்பனையில் ஈடுபடும் 'நெட்ஒர்க்' தொடர்பான தகவல்களை தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்தனர்.


பலநாள் தேடல்களுக்கு பிறகு 'ஹாப்பி பில்ஸ்' விற்பனையில் ஈடுபடும் நந்தாவை பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைக்க, அவனை அவர்கள் பின்தொடர்வதற்குள்ளாகவே அவன் விபத்தில் இறந்துபோனான்.


அந்த சதாவின் கதையும் அதைப்போலவே ஆனது.


ஆனால் கொஞ்சமும் எண்ணிப்பார்க்க இயலாத ஒரு கோணத்தில், அதற்குப் பின் யாமினிதான் இருக்கிறாள் என்ற உண்மை வெகு பயங்கரமாக இருந்தது ஜெய்க்கு.


அதுவும் இறந்தபின்னும் தன்னை அவளுடைய சொந்த சகோதரிக்குக் கூட விட்டுக்கொடுக்க விரும்பாத யாமினியின் காதல் வியப்பை அளித்தது.


மாதினி அவனை மறுத்ததன் காரணம் அதைவிட வியப்பை அளித்தது அவனுக்கு.


யாமினிமேல் அவள் வைத்திருந்த அன்பின் ஆழம் புரியவும் அவள் பால் அவனது மனம் கொஞ்சம் சரியத்தான் செய்கிறது.


ஆனால் இந்த எண்ணத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல இயலுமா என்ற கேள்வியுடன் நடந்த அனைத்தையும் மனதிற்குள் அசைபோட்டவாறு பலவாறான சிந்தனைகளுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான் ஜெய்.


***


அவர்கள் வழக்கமாக சந்திக்கும் 'பார்'ரில் எதிரெதிராக உட்கார்ந்திருந்தனர் இன்ஸ்பெக்டர் செல்வமும் வீராவும்.


மாதினியின் வீட்டுக்கு சென்றது, அவள் தன் பெயரில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருப்பது என நடந்த அனைத்தையும் கூறி முடித்தான் வீரா.


தான் அவ்வளவு கூறியும் இவன் இப்படி செய்கிறானே என நொந்தே போனார் செல்வம்.


மேற்கொண்டு, என்ன செய்யலாம் என்று வீரா அவரிடம் கேட்க, “முதல்ல நீ அவ வீட்டுக்கு போனதே சரியில்ல வீரா.


அவ கொடுத்த கம்ப்ளைண்ட் ஸ்ட்ராங் ஆக நீயே ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துட்ட. இப்ப நீ அமைதியாக இல்லன்னா வீண் சிக்கல்தான்!" என சற்று கடுமையாக சொன்னவர், "அதான் அடுத்த 14ஆம் தேதிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கில்ல; அதுக்குள்ள என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.


அதுவரைக்கும் நீ என்னை போன்லயோ இல்லை நேர்லயோ காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாத.


அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.


***


குழப்பமும் ஆத்திரமுமாக நேராக அவர்களுடைய 'பப்'பிற்கு வந்து சேர்ந்தவன், அங்கே நரேனுக்கென்று இருக்கும் பிரத்தியேக அறை நோக்கிச் செல்ல, "வா வீரா!" என்ற நரேன், "ஒரு முக்கியமான விஷயம்" என்று சொல்லவும், அவன் தனக்காகவே காத்திருப்பதை உணர்ந்தவன், அவனைக் கேள்வியுடன் நோக்க, “செல்வம் போன்பண்ணி இருந்தார்! நிலைமை கொஞ்சம் கை மீறி போயிட்டு இருக்கு போல!" என்றான் தீவிரமாக.


அவன் ஏதும் பதில் பேசும் முன், "நீ கொஞ்ச நாள் ஏதாவது வெளியூர் இல்ல வெளிநாட்டுக்குப் போய் இருந்துட்டு வாயேன்!


உனக்கும் ஒரு ரெஸ்ட் மாதிரி ஆச்சு” என்று சொல்ல,


“என்ன சின்னவரே? ஒரு பொண்ணுக்கு பயந்துட்டு என்னை ஓடி ஒளியச் சொல்றீங்களா? என்னால முடியாது. எது வந்தாலும் நான் பார்த்துக்கரேன்” என்றான் வீரா வேகமாக.


அவனது அந்த பேச்சு எரிச்சலை மூட்டியது நரேனுக்கு.


"உனக்கு என்ன நடந்தாலும் அது என்னைப் பாதிக்கும் வீரா! சொல்றத மட்டும் செய்!


இல்லனா வேற எதை பதியும் யோசிக்காம நானே உன்னை போட்டுத்தள்ள வேண்டியதா போயிடும்!" என நரேன் உருமாலாகச் சொல்ல, அதிர்ந்தான் வீரா.


"இல்ல சின்னவரே!" என அவன் மறுத்து ஏதோ சொல்ல வர, அதை காதில் வாங்காமல், "ப்ச்... நான் சொன்னதைச் செய்!" என கட்டளையாக சொன்னவன், அதுக்கு முன்னால அந்த சிந்துஜா ஸ்ரீயை ஒரு தடவ அரேஞ் பண்ணி கொடுத்துடு" என முடித்தான்.


ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது வீராவுக்கு.


ஒரு முறை அந்த சிந்துஜாஸ்ரீ நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு, "இவ எனக்கு வேணும்! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அரேஞ் பண்ணு" என நரேன் அவனிடம் சொல்ல, சதா மூலமாக அவளை தங்கள் வலையில் சிக்க வைத்து, 'ஹாப்பி பில்ஸ்' பழக்கத்திற்கு ஆளாக்கி அவளை தங்கள் விருப்பத்திற்கு ஆட்டி படைத்தனர்.


சதா அவளுடைய அந்த ஒப்பந்தப் பத்திரத்தைக் கொளுத்திய பிறகு, அவளை இவர்கள் விருப்பத்திற்கு இணங்க வைக்க இயலவில்லை வீராவால்.


அந்த கசப்பு வேறு அவன் மேல் இருந்தது நரேனுக்கு!


அது தெரிந்திருந்தும் வேறு வழி இல்லாமல், "இல்ல சின்னவரே அவங்கள இனிமேல் மிரட்டி பணிய வெக்க முடியாது! எதாவது பிரச்சனை வரும்!" என்று உள்ளே போன குரலில் அவன் சொல்ல, அதில் அவன் முகம் விகாரமாக மாற, "உன்னால முடியலன்னா பிரபு கிட்ட சொல்லு!" என முடிவாக நரேன் சொல்லிவிட அங்கிருந்து வெளியில் வந்த வீரா பிரபுவை அழைத்து, "எங்க இருக்க பிரபு!" என்று கேட்டான்.


"வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்ல தல! நம்ம பப்புக்குதான் வந்துட்டு இருக்கேன் என பதிலளித்தான் அவன்.


"சரி வா; நேர்ல பேசிக்கலாம்" என அழைப்பைத் துண்டித்தான் வீரா.


நீண்ட நேரம் அவனுக்காக காத்திருந்தும் அவன் வராமல் போக பொறுமை இழந்தவன் அவனது கைப்பேசிக்கு அழைக்க, அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை!


காரணம் அந்த அழைப்பை ஏற்க பிரபு உயிருடன் இல்லை!

© KPN NOVELS COPY PROTECT
bottom of page