மாயா-7
சொன்னது போலவே அவர்கள் வழக்கமாக சந்திக்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் முனையில் அமைத்திருக்கும் நட்சத்திர விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மதுபான அருந்தகத்தில் அதாவது 'பார்'ரில் செல்வம் காத்துக் கொண்டிருக்க தன் அடியாள் பிரபுவுடன் அங்கே வந்து சேர்ந்தான் வீரா.
உடனே தன் பணியைச் சிரமேற்கொண்டு நெருங்கி வந்த 'பேரர்'ரிடம் உணவுக்கு ஆவண செய்தபின் செல்வம், “உணர்ச்சி வசப்பட்டு போனில் இந்த விஷயமெல்லாம் பேசாதீங்க வீரா.
ஏற்கனவே அந்த பொண்ணு கேஸ்ல எல்லாரும் கேக்கற கேள்விக்கே என்னால பதில் சொல்ல முடியாம தவிச்சேன்.
ஒரு வழியா இப்பதான் அடங்கி இருக்கு” எனச் சலிப்பாகக் கூற, வீராவோ, “அதை மறைக்கத்தானே லட்ச லட்சமா கொட்டினோம்.
எப்படி பதில் சொல்லுவீங்களோ அது உங்க பாடு.
ஏற்கனவே என் ஃப்ரண்ட்ஸ் இரண்டு பேர ஆக்சிடண்டுங்கற பேர்ல யாரோ போட்டுத் தள்ளிட்டாங்க.
இப்படியே போனா எங்க இரண்டு பேருக்கும் என்ன ஆகுமோன்னு பயந்து பயந்தே சாக வேண்டியதுதான்.
என்னால சுத்தமா முடியால.
இதுக்கு பின்னால் இருக்கும் நபர் யாருன்னு நீங்க உடனே கண்டுபிடிக்கணும்" என்றான் காரமான குரலில்.
"நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல வீரா" என அழுத்தி சொன்ன செல்வம், "பழி வாங்கற அளவுக்கு அந்த பொண்ணுக்கு அரசியல் பேக்கிரௌண்டோ இல்ல பைனான்ஷியல் பேக்கிரௌண்டோ எதுவும் கிடையாது.
அவங்க ஒரு சாதாரண விவசாய குடும்பம்தான்.
அப்பா கூட ப்ரைவேட்ல நல்ல சம்பளத்துல எதோ வேலைல இருந்தாரு.
அவரும் அந்த யாமினி இறந்த பிறகு வேலையை விட்டுட்டு ஊரோட போயிட்டாரு.
அவளோட தாத்தா அந்த காலத்து தேங்கா மூடி வக்கீலு. அவரே நேர வந்து வாதாடினா கூட யாமினிக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல கொலைதான்னு அவரால நிரூபிக்க முடியாது.
கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா அந்த மாதினி மட்டும்தான்!
ஆனா அந்த பொண்ணு கூட சட்டம் படிச்சு முடிச்சிட்டு இப்ப கொஞ்ச நாளாத்தான் கே.ஆர் சார் கிட்ட ஜூனியரா இருக்கு.
ஆனா அந்த பொண்ணு கூட இதுவரைக்கும் எந்த கேள்வியும் கேக்கல.
இந்த மீடியாலதான் கிளப்பி விட்டுட்டே இருந்தாங்க! வேற வேற சென்சேஷனல் இஷ்யூஸ் வரவே இப்ப இதை மறந்திருக்காங்க!” எனக் கூற அதைக்கேட்ட வீரா, “ஆமா நீங்க அந்த வக்கீல் பொண்ணைப் பார்திருக்கீங்க இல்ல? என்று கேட்க, "அமாம்பா பார்க்க அச்சு அசல் அந்த செத்துப்போன பொண்ணு மாதிரியே இருக்கும் அந்த மாதினி” என்று முடித்தார் செல்வம்.
"இத்தனை நாள் இதைப் பத்தி என் கிட்ட எதுவுமே நீங்க சொல்லல! சதா சொல்லித்தான் எனக்கே தெரியும்!" என்று கடிந்துகொண்ட வீரா இனிமே நானே கவனிசிக்கறேன் என்று சொல்ல, செல்வமோ, "நீங்க ஏற்கனவே செஞ்சதே போதும். மறுபடியும் ஏதையாவதை செஞ்சு ஏழரைய கூட்டாதீங்க.
இனி உங்க சின்னவருக்காகன்னாலும் சரி; எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி; என்னால ஒண்ணும் செய்ய முடியாது வேணா மேலிடத்துல பார்த்துக்கோங்க!" என்று கிளம்பி விட இயலாமையால் எழுந்த ஆத்திரத்துடன் உணவு மேசையை ஓங்கி அடிக்க மட்டுமே முடிந்தது வீராவால்.
"நீ வுடு தல; அந்த ஆளு அப்படித்தான் சொல்லுவான்.
நீ என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு; நம்மளே பார்த்துக்கலாம்" என்று அனைத்தையும் உடனிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரபு கூற, கேள்வியாக அவனைப் பார்த்தவாறு அங்கிருந்து கிளம்பினான் வீரா.
வெகு பணிவுடன் அவனைப் பின்தொடர்ந்து போனான் பிரபு.
அங்கிருந்து ஆவேசமாக அவர்கள் வாகனத்தை கிளப்பிச் செல்வதை எரிமலையாய் குமுறிக்கொண்டிருக்கும் மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மாதினி தன் மஞ்சள் 'நானோ'வில் அமர்ந்தவாறு!
அதே நேரம் அவளது கைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்றவள், "வந்துட்டேன் ஜெய்! வண்டிய பார்க் பண்ணிட்டு மேல வரேன்; ஜஸ்ட் டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க!" என்றாள் அவள்.
***
ஜெய்யின் எதிரில் அவள் வந்து அமரவும், 'பேரர்'ரை அழைத்தவன், "ஒரு செட் சப்பாத்தி அண்ட் ஒரு செட் சாம்பார் இட்லி!" என அவளுக்கும் சேர்த்து 'ஆர்டர்' செய்ய, "இல்லல்ல... எனக்கு வெஜ் பிரைட் ரைஸ்! சொல்லுங்க" என அவசரமாகச் சொன்ன மாதினியை கேளிவியாய் பார்த்தவன், "இந்த டைம்ல ஹெவியா சாப்டா வெயிட் போடும்னு எப்ப வந்தாலும் இட்லிதான ஆர்டர் பண்ணுவ, திடீர்னு என்ன யாமினி பழக்கம்" எனக்கேட்டான் அவன்.
"கொஞ்சம் யாமினியாவும் இருக்கலாம்னுதான்! இப்பல்லாம் யாமினிக்கு என்ன பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடிக்குது!" என்றவள், "சும்மா அவளோட டேஸ்ட்டை ட்ரை பண்ணேன்" என்றாள் மாதினி.
அவளுடைய அந்த பதிலில் அதிர்ந்தவன், 'என்ன இவ லூசு மாதிரி உளர்றா!' என எண்ணியவாறு, "கொஞ்ச நாளா உனக்கு எதோ ஆகிப்போச்சு! இல்லனா தேவை இல்லாம என்னை இந்த கல்யாணத்துல கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருப்பியா?" என அவன் கேட்க, அவள் முகம் தீவிரமாக மாறிப்போனது.
"நான் சொன்னது சாப்பட்ற விஷயத்துல மட்டும் இல்ல ஜெய்! வாழ்க்கையிலயும்தான்!" என்றாள் மாதினி தீவிரமாக.
அதில் கோபம் சுறுசுறுவென ஏற, அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவன் கையை பிடித்துத் தடுத்தவள், "நான் சொல்ல வரத முழுசா கேட்டுட்டுப்போங்க ஜெய்!' என்றாள் பிடிவாத குரலில்.
அதற்குள் உணவு தட்டுகளுடன் அந்த 'பேரர்' வர மற்றவர் பார்வைக்குக் காட்சிப் பொருளாவதைத் தவிர்க்கும் பொருட்டு பேசாமல் உட்கார்ந்தான் ஜெய்.
அவன் முகத்தில் கோபத்தின் சாயல் படர்ந்திருக்க அதைக் கண்டும் காணாதவளாக, வந்த 'பிரைட் ரைஸ்'ஸை எடுத்துச் சுவைத்தாள், அதில் லயித்தவளாக, "வாவ்! என்ன டேஸ்ட்! சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா?" என ரசனையுடன் கேட்டுவிட்டு, "சில் ஜெய்! எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்!
எப்படியும் உங்க வீட்டுல வேற பெண்ணை பார்க்காம விட மாட்டாங்க!
என்னால உங்களை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது!' என்றாள் தீவிரமாக.
பதில் ஏதும் சொல்லாமல் வேகமாகச் சாப்பிட்டு முடித்தவன், அதற்கான பணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, 'என்ன ஜெய் பேசவே மாட்டேங்கறீங்க!" என்றாள் மாதினி.
"ஒரு போட்டோவை கொடுத்து; இந்த பெண்ணை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க! அவ கண்ணுல ஒரு திமிர் இருந்திச்சு; அவளை பிடிச்சுது! ஓகே சொன்னேன்!
ஆனா அன்னைக்கு ஈஸியா அவதான் என்னை ரிஜெக்ட் பண்ணா!
அதோட விடாம இவ வேண்டாம் அவளை பாருன்னு சொன்னாங்க அம்மா அப்பா!
யாமினியை பார்த்து பிடிச்சு கல்யாணத்து ஓகே சொன்னேன்.
புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூட முடியாம திடீர்னு ஒரு நாள் கனவு மாதிரி கலைஞ்சு போயிட்டா!
இப்ப மறுபடியும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்.
என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல!
என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு!
அம்மா அப்பாவுக்குன்னு இருக்கறது நான் மட்டும்தான். அதனால அவங்க மனச கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைக்கறேன்!
அதை அட்வாண்டேஜா எடுத்துட்டு எல்லாரும் கேம் ப்ளே பண்றீங்க இல்ல?
என் மனசை பத்தி யாரும் யோசிக்கவே மாட்டிங்களா?" என உறுமினான் ஜெய் அடிக்குரலில்.
"அப்படி எல்லாம் இல்ல ஜெய்! உங்களுக்காகவும் உங்க மனசை கொஞ்சம் மாத்திக்க ட்ரை பண்ணுங்க!" என அவள் சொல்ல,
"மாசத்துக்கு ஒரு தடவை புதுசு புதுசா மத்தறயே உன்னோட செல் போன் கவர்! என மனசும் அது மாதிரின்னு நினைச்சியா!" என்றவன், "தெரியுமா ஒரு தடவ கண்ட்ரோல் பண்ண முடியாம யாமினியை கிஸ் கூட பண்ணியிருக்கேன்! அந்த அளவுக்கு அவளை பிடிச்சிருந்தது எனக்கு!
உன்னை என்னால அப்படி நினைக்க முடியல!
சொன்னா புரிஞ்சிக்கோ!" என்றவன் கோபம் குறையாமல் எழுத்து சென்றுவிட, அனிச்சை செயல்போல் அவனை பின் தொடர்ந்து சென்றாள் மாதினி. பெருமிதம் ததும்ப உறைந்துபோய் அங்கே எஞ்சி நின்றாள் யாமினி?!
***
அன்று பொங்கல் பண்டிகை.
தன் மாம்பலம் வீட்டில் தனித்திருந்தாள் மாதினி.
முந்தைய வருடத்தின் பொங்கல் தினம் நினைவில் வந்தது அவளுக்கு.
அவள் கோபித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற பிறகு ஜெய்யும் யாமினியும் பேசிக்கொண்டதும் நடந்துகொண்டதும் ஏதோ கனவில் கண்டதை போல தோன்றியது அவளுக்கு.
'ச்ச! ஏன் இப்படியெல்லாம் தோணுது நமக்கு!' என மனதிற்குள் சங்கடமாக உணர்ந்தவள் அன்று நடந்த அனைத்தையும் கோர்வையாக எண்ணிப்பார்க்க அவள் வீட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் ஜெய் யாமினி இருவரும் உள்ளே வர, அதன் பின் அன்றைய தினம் கொண்டாட்டமும் குதூகலமுமாகச் சென்றது.
மாட்டுப்பொங்கல் தின கொண்டாட்டங்கள் அதைவிடக் கோலாகலமாக அமைய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றனர் ஜெய் குடும்பத்தினர்.
அதெல்லாம் கனவாகக் கானல் நீராக மாறிப்போனதே என்றிருந்தது அவளுக்கு.
யாமினி இறந்த துக்கம் காரணமாக அவர்களுக்கு இந்த வருடம் பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லையென்றாலும் மாடுகளுக்காகப் பொங்கல் வைப்பதைக் குறைக்க விரும்பவில்லை அவர்கள்.
கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பியதுதான் அவளுடைய நினைவில் இருக்கிறது.
அவள் மாம்பலம் வீட்டிற்கு எப்போது வந்தாள் என்றே புரியவில்லை அவளுக்கு.
சற்று நேரத்திற்கு முன்பாக வெகு சாவகாசமாகக் கனகா பாட்டி அவளை அழைத்து, "மாதும்மா! சாயங்காலம் நேரத்தோட வீட்டுக்கு வந்துடு! நாளைக்கு உன் கையாலதான் பொங்கல் வைக்கணும் கண்ணு!' என அவளைக் கரிசனையாக அழைத்ததை வைத்து அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் அவளை அவர்கள் தேடவில்லை என்பது புரிந்தது அவளுக்கு.
'அதற்குள் முடிந்தால் ஜெய்யை நேரில் பார்த்துத் தெளிவாகப் பேசவேண்டும்!' என எண்ணிக்கொண்டாள் மாதினி.
யோசனையுடன் அவனுக்கு அழைக்கலாம் என தன் கைப்பேசியை எடுத்தவள் முந்தைய தின 'கால் ஹிஸ்டரி'யை பார்க்க அதிலிருந்து சந்தா பாட்டியின் எண்ணிற்கு 'அவுட் கோயிங் கால்' ஒன்று பதிவாகி இருக்க குழம்பிப்போய் அப்படியே அவள் உட்கார்ந்துவிட, அப்பொழுது பிரபுவுடன் சேர்த்து இன்னும் சில அடியாட்கள் பின்தொடர அடாவடியாக அவளது வீட்டிற்குள் நுழைந்த வீராவைக் கண்டு திடுக்கிட்டு பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அவள்.
வீட்டைச் சுற்றி தன் பார்வையை ஓட்டியவாறு “தனியா இருக்க போல இருக்கு” என்று கேட்டுக் கொண்டே அந்த வரவேற்பறையில் போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் திமிராக அவன் அமர அவனது அடியாட்கள் அவனது பின்னல் வந்து நின்றனர்.
அதற்குள் நிலை உணர்ந்து சுதாரித்துக்கொண்டவள், 'ரத கஜ துரக பதாதிகளோட வர மாதிரி வந்து உட்கார்ந்திருக்கான்! பெரிய மகாராஜான்னு நினைப்பு! இருக்குடா உனக்கு' என மனதிற்குள் அவனை நிந்தனை செய்ய,
அடிக் குரலில் “என்ன உன் தங்கையோட நிலைமை உனக்கும் வரணுமா?" என அவன் கேவலமாக அவளை மிரட்ட, "என்ன மிஸ்டர் வீரா! என்னை என்ன அவளை மாதிரி வாயில்லாத பூச்சினு நினைச்சயா நீ மிரட்டறதையெல்லாம் கேட்டுட்டு பயந்துபோய் பேசாம இருக்க!
நான் பார்க்கத்தான் அவளை மாதிரி! ஆனா வேற!" என்றவள், "எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நீதான் காரணம்னு ரெண்டு நாள் முன்னாலதான் கமிஷனர் ஆபிஸ்ல போய் கம்ளைன்ட் செஞ்சுட்டு வந்திருக்கேன்.
எப்படியும் என்னை தேடி நீ இங்க வருவன்னு எதிர் பார்த்துட்டேதான் இருந்தேன்.
இப்படி தானா வலிய வந்து மாட்ற!" என்றாள் மாதினி.
"ஏய் என்ன பூச்சாண்டி காட்டறியா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என அவன் எகத்தாளமாக கேட்க,
"ஹா ஹா! பயப்பட... மாட்டியா? குட் ஜோக்!" என சிரித்தவள், "வீட்ட சுத்தி சிசி டிவி கேமரா செட் பண்ணி வெச்சிருக்கேன்.
இந்த ரெகார்டிங்ஸ் உடனுக்குடனே என்னோட கூகுள் அக்கௌட்ல ஸ்டோர் ஆகற மாதிரி செட் பண்ணியிருக்கேன்!
இப்ப நீ உள்ள வந்தது! இதோ மிரட்டிட்டு இருக்கறது எல்லாமே பக்கவா எவிடென்ஸ் ஆகிட்டு இருக்கு! இப்ப எனக்கு என்ன நடந்தாலும் நீதான் மாட்டுவ" என்றாள் மாதினி அவன் பேசியதை விடவும் எகத்தாளம் தொனிக்க.
அவள் பேசியதைக் கேட்டு ஆத்திரம் மேலோங்க, நிலைமையின் தீவிரத்தை உணராமல் பிரபு அவளைத் தாக்கும் எண்ணத்தில் மாதினியை நெருங்க, நொடி கூட தாமதிக்காமல் ஒரே அடியில் அவனைத் தூக்கி எறிந்தவள், "என்னடா! இவனோட ஏவல் நாய்தான நீ! அடுத்தது நீ தாண்டா!" எனக் கர்ஜித்தாள் தன் கொஞ்ச நஞ்ச அமைதியையும் கைவிட்டு முற்றிலும் ஆக்ரோஷமாக மாறியிருந்த மாதினி.
வாயிற் கதவில் மோதி அவன் கீழே விழ வீராவுடன் வந்திருந்த அடியாட்கள் நான்குபேரும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தவும், ஏதோ தீயில் கருகும் வாடை அவனது நாசியில் நுழைத்து நுரை ஈரல் முழுதும் பரவ, மூச்சு முட்டுவது போல உணர்ந்தவன், "தல! பிரசினை வேணாம்! வா தல போயிடலாம்! நாம நினைக்கற மாதிரி இது பொண்ணு இல்ல தல! இது ஒரு பேய்!" என நடுங்கும் குரலில் பதறினான் பிரபு.
பிரபுவின் நிலையை உணராதவனாக வீரா குழப்பத்துடன் அவளைத் திரும்பிப் பார்க்க அமைதியே உருவாக நின்றிருந்தாள் மாதினி கேள்வியாகப் பிரபுவையே பார்த்துக்கொண்டு!
அவளுடைய கண்களுக்குள் நிறைந்திருந்தாள் யாமினி!
மிரட்டுவாளா மாயா...
Comments