top of page

Mathini-Yamini 5*

மாயா-5


"ஏண்டி! பெரியவங்க சொல்றத கேக்கவே மாட்டியா! தாத்தா பாட்டி இவ்வளவு ஆசையா சொல்ராங்க இல்ல?" என ஸ்வர்ணா மாதினியிடம் கோபப்பட, "ஏன் மாது இப்படி சொல்ற!" என கிசுகிசுப்பாக அவளைக் கடிந்துகொண்டாள் யாமினி.


"ப்ச்.. என் ப்ரஃபஷன்ல இருக்கற ஒருத்தர நான் எதிர்பார்க்கறதுல தப்பு ஒண்ணும் இல்லையே யாமு?" எனக் கேட்டவள்,


"உனக்கும் அந்த ஜெய்யை பிடிக்கலன்னா வேண்டாம்னு சொல்லிடலாம்" என்றாள் மாதினி அடாவடியாக.


அதில் யாமினியின் முகம் கருத்துப்போக, அந்த சம்பந்தத்தை விட்டுவிட பெரியவர்களுக்கும் மனம் இல்லாமல் போகவே, "உன் போட்டோவைதான் அவங்களுக்கு அனுப்பி இருக்கோம் மாது!


பேசி பாக்கறேன்.


ஒத்து வந்தால் முடிக்கலாம்!" என்ற சிவராமன் தாத்தா ரத்தினம் தாத்தாவையும் பாட்டியையும் அங்கே வரச்சொல்லி அழைத்தார்.


மேலும் அவருடைய இரண்டு மகள்களும் மாப்பிள்ளைகளும் அங்கே வந்துவிட, அதற்குள் ஜெய்யின் அப்பாவுடன் பேசி இருந்தவர், "ரத்தினம்! மாதினி அந்த பையனை வேண்டாம்னு சொல்லிட்டா! நானும் அவளை கம்பெல் பண்ண விரும்பல!


அதனால நான் மாப்பிளை வீட்டுல பேசிட்டேன்; அவங்க பையன் கிட்ட நம்ம மாதுவோட போட்டோவை காமிச்சிருக்காங்க!


அவரும் பிடிச்சிருக்குனு சொல்லியிருக்கார்.


இப்ப யாமினிக்கு பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு, 'இன்னும் பெண்ணை நேரில் கூட பார்க்கல இல்ல; மோர் ஓவர் ரெண்டு பேரோட ஜாதக அமைப்பும் ஒண்ணுதானே! அதுவும் ரெண்டு பேரும் பார்க்கவும் ஒரே மாதிரி இருக்கறதால பரவாயில்லைன்னு சொல்லிட்டார் பையனோட அப்பா ஸ்ரீதர்.


நம்ம குடும்பத்துமேல அவங்களுக்கு இருக்கற மரியாதையும் ஒரு காரணம்!" என்றவர், "அந்த பையனை நம்ம யாமினிக்கே முடிச்சிடலாம்! உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே?" எனக் கேட்டார்.


"எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம். இதுல வேண்டாம்னு சொல்ல என்ன இருக்கு?" என்ற ரத்தினம், "நீ என்ன சொல்ற கனகம்?' என்று மனைவியிடம் கேட்க,


உடனே கனகவல்லி பாட்டி யாமினியின் முகத்தைப் பார்க்க, அவள் பதட்டத்துடன் மாதினியைப் நோக்கவும், "அவளை என்ன பார்க்கற யாமு! உனக்கு ஓகேவா; அதை சொல்லு!" என்றார் சந்தா.


"உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு யாமு! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல!" என மாதினி சொல்ல, மகிழ்ச்சி பூக்கள் முகத்தில் பூக்கச் சம்மதமாகத் தலையை அசைத்தாள் யாமினி.


***


அடுத்த நாளே அவர்கள் யாமினியைப் பெண் பார்க்க வருவதாகச் சொல்ல, அவர்கள் வீடே கல்யாண களை காட்டியது.


அதற்குள் ஒரு முக்கிய வழக்கு விஷயமாக உடனே சென்னை புறப்பட்டு வரும்படி கோதண்டராமன் மாதினியை அழைக்கவும் அவள் அந்த நேரத்தில் அங்கே இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் அதையே சாக்காக வைத்து அங்கிருந்து கிளம்பிச்சென்றாள் அவள்.

***


அவர்கள் பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு மாதினியை கைப்பேசியில் அழைத்த யாமினி, "மாது; தேங்க்ஸ்!" என மெல்லிய குரலில் சொல்ல, "எதுக்கு இந்த தேங்க்ஸ் எல்லாம்?" எனக் கேட்டாள் மாதினி ஒன்றுமே தெரியாதது போல்.


"எனக்குத் தெரியும் மாது; எனக்ககத்தானே நீ ஜெய்யை வேண்டாம்னு சொன்ன?" என யாமினி வருந்தும் குரலில் சொல்ல, "லூசு மாதிரி பேசாத!


உண்மையிலேயே எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்ல; அது உனக்கே தெரியும் இல்ல.


மாஜிஸ்ட்ரேட் எக்ஸாம் எழுதணும்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன் யாமு!


அதுக்கு எந்த குறுக்கீடும் வரக்கூடாது.


எங்க அந்த ஜெய்யை நேரில் பார்த்தால் என் எண்ணமெல்லாம் மாறிப்போயிடுமோன்னு பயம் வந்துடுச்சு!


அதே நேரம் அவரை உனக்கு பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிது. உன்னை அதுல கோத்து விட்டுட்டு நான் எஸ் ஆகிட்டேன்!" என்ற மாதினி, "அதெல்லாம் இருக்கட்டும் விடு; நேரில் எப்படி இருக்கார் உன் ஹீரோ! முதல்ல அதை சொல்லு!" என்று அவள் கேட்க, எதிரில் குடிகொண்ட மவுனம் அவளது வெட்கத்தை மாதினிக்குச் சொல்ல, "ஓ..ஹோ!" எனக் குதூகலமானவள், 'சொல்லு சொல்லு எப்படி இருக்காரு!" என்று விடாமல் அவளை ஓட்ட, "சூப்பரா! கெத்தா இருக்கார்! மாது" என்றாள் அவள் திக்கித் திணறி.


"பார்றா!" என்றவள், "உண்மையிலேயே ஹி இஸ் லக்கி யாமு! உன்னை மாதிரி ஒரு பொண்ணு அவருக்கு கிடைக்க.


மோஸ்ட் ஆஃப் தி மென் உன்னை மாதிரி பெண்ணைத்தான் விரும்புவாங்க.


நானெல்லாம் செட்டே ஆக மாட்டேன்.


இப்படி வெக்க படவெல்லாம் எனக்கு வராது!" என்றாள் மாதினி.


அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல், "அவங்களுக்கும் என்னை பிடிச்சிருக்காம்; சொல்லிட்டு போயிட்டாங்க!


அடுத்த வாரம் நிச்சயதார்தத்துக்கு நாள் குறிச்சிருக்காங்க!


மார்ச் மாசம் கல்யாணத்துக்கு நாள் பார்த்திருக்காங்க மாது.


நிச்சயதார்தத்துக்கு நீ இங்க கண்டிப்பா இருந்தே ஆகணும்!" என்றாள் யாமினி கண்டிப்புடன்.


"டன்!" என்று முடித்தாள் மாதினி அதற்கு அடிபணிந்து.


மாதினி அழைப்பைத் துண்டிக்க, அடுத்த நொடியே மறுபடியும் அவளை அழைத்த யாமினி, "மாது இந்த நேரம் பார்த்து எனக்கு நான் படிக்ச காலேஜ்ல இதே வேலைல ஜாயின் பண்ண சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு.


ஜனவரி ஃபர்ஸ்ட் வீக் வந்து ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க! என்ன பண்ணலாம் சொல்லு?" என யாமினி கேட்க, "ப்ச்.. இதையெல்லாமா என்னை கேப்ப! நீதான் முடிவு பண்ணனும் யாமு!' என அவள் சொல்ல, "இல்ல மாது! வேலைக்கு போறதா வேண்டாமான்னு குழப்பமா இருக்கு.


சந்தா பாட்டி வேலைக்கு போ! அதுதான் சரின்னு சொல்றாங்க! கனகா பாட்டியை கேட்டா கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சமயத்துல இதெல்லாம் தேவையான்னு கேக்கறாங்க!" என அவள் தயக்கமாகச் சொல்ல,


"இனிமேல் நீ என் முடிவையோ இல்ல இந்த கிழவிங்க முடிவையோ கேக்கறது தப்பு யாமு.


ஒண்ணு நீயே சுயமா ஒரு முடிவை எடு; இல்லனா உனக்குத்தான் ஒரு ஹீரோ வந்துட்டாரே அவர்கிட்ட கேளு!" என மாதினி சொல்ல அதற்கும், "ஐயோ! சான்ஸே இல்ல!" என அவள் பதறவும், "ஓ மை கடவுளே!" என அலுத்துகொண்டவள், "ஒண்ணு பண்ணு; இப்போதைக்கு இந்த வேலைல ஜாயின் பண்ணு.


உனக்கு பிடிச்சிருந்தா கன்டின்யூ பண்ணு; இல்லனா விட்டுட்டு பதி சேவை செய்!" என அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைச் சொன்னாள் மாதினி அதனால் புதிதாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகப்போவதை அறியாமல்.


***


நிச்சயித்த நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறியது ஜெய் - யாமினி நிச்சயதார்த்தம்.


சிவராமன் வீட்டில் சாப்பாட்டுப் பந்தியும் ரத்தினத்தின் வீட்டில் நிச்சயதார்த்த விழாவும் அமர்க்களப் பட்டது.


மாப்பிள்ளை வீட்டுச் சீராக வந்த ஆரஞ்சு நிறத்தில் பச்சை சரிகை போட்ட காஞ்சி பட்டில் பொன்னாலான நகைகள் மின்ன ஜொலிஜொலித்தாள் யாமினி.


அம்மா, பாட்டிகள் என வற்புறுத்த மாதினியும் பச்சையில் மெல்லிய 'ஸெல்ஃப்' பார்டர் இட்ட பட்டுப்புடவையில் எளிய நகைகள் அணிந்து வந்த விருந்தினர்களை ஓடி ஓடி உபசரித்துக்கொண்டிருந்தாள்.


தாத்தா, ஸ்ரீதர் குடும்பத்தினர் அனைவருக்கும் அவளை அறிமுகப் படுத்த முதலில் அவள் ஜெய்யை மறுத்தது எதையும் மனதில் கொள்ளாமல் அகிலா உட்பட எல்லோருமே இயல்பாகவே அவளிடம் நடந்துகொண்டனர்.


ஜெய் யாமினி இருவரும் அதற்கு முன்னதாகவே கைப்பேசியில் பேசத் தொடங்கி இருக்க, அன்று அவர்கள் பழகிய விதத்தைப் பார்த்து அழகிய புரிதலுடன் ஒரு மெல்லிய காதல் அவர்களுக்குள் உருவாகி இருந்தது புரிந்தது மாதினிக்கு.


மனதிற்குள்ளேயே அதை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.


அதுவும் நண்பர்கள் வற்புறுத்தலின் பெயரில், ஜெய் மண்டியிட்டு, மலர்க்கொத்தை யாமினியின் கரங்களில் கொடுத்து, "அழகியே மேரி மீ!" என்று சொல்லி அவளது மெல்லிய விரலில் மோதிரத்தை அணிவிக்க, அங்கே இருந்த அவர்களது நண்பர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, நாணத்தால் சிவந்துபோனாள் யாமினி.


அந்த கட்சியை வெளிப்படையாக தன் கைப்பேசியிலும் ரகசியமாக தன் மன பெட்டகத்திலும் பதிவு செய்துகொண்டாள் மாதினி.


முதலில் அறிமுகப்படும்போது ஒரு 'ஹை!' சொன்னதுடன் சரி, அதற்கு பிறகு அவளிடம் ஒரு வார்த்தைகூட பேச எத்தனிக்கவில்லை ஜெய்.


அவளது நிராகரிப்பு ஒரு ஆண் மகனாக அவன் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டாள் மாதினி.


ஆனால் யாமினியினுடனான அவனது உறவு நன்றாக இருந்தால் போதும் என்று மட்டும் தோன்றியது அவளுக்கு.


ஏதோ சொல்லத் தெரியாத ஒரு பாரம் அவள் மனதை அழுத்த அங்கே இருக்க முடியாமல் தனிமை வேண்டி மழிழ மரத்தடிக்கு வந்தவள், "ஹேய் வகுளாம்மா எனக்கு ஏன் இப்படி தோணுது.


யாமி இனிமேல் வேற யாருக்கோ சொந்தமாகப்போறான்னு இப்படி இருக்கா.


இல்ல இவங்க ரெண்டுபேரையும் பார்க்கும்போது எனக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சா!


இது வயசு கோளாறுன்னு சொல்லுவாங்களே அதுவா?அது தப்பாச்சே!" என அவள் மென் குரலில் அந்த மரத்திடம் புலம்ப, மாதினி தனித்து வருவதைக் கவனித்து பின் தொடர்ந்து வந்தவள் அவள் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு, பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டாள் யாமினி.


"மாது! நான் உனக்குக் கெடுதல் செஞ்சுட்டானா?" என அவள் தயக்கமாகக் கேட்க, "லூசு மாதிரி உளறாத; யாராவது கேட்டல் தப்பா ஆகிட போகுது!" என்றவள், "அம்மா வயத்துல இருந்து நாம ஒண்ணாவே இருக்கோம் யாமு! வேற வேற இடத்துல இருந்தாலும் நீயும் நானும் வேற வேற இல்லங்கற ஒரு பீல் எனக்கு இருக்கும்.


இனிமேல் அதைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும் இல்ல? மனசுல ஒரு வெற்றிடம் உருவாகறத தடுக்க முடியல!" என்றாள் மாதினி.


சொல்லும்போதே அவள் குரல் தழுதழுக்க, கண்களின் ஓரம் கண்ணீர் திரண்டது.


அதிர்ந்தாள் யாமினி.


மாதினியின் கண்களில் கண்ணீர் என்பதை அவள் கற்பனையிலும் கூட கண்டதில்லை.


"இங்க யாரும் யாரையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை! இப்ப இருக்கற மாதிரியே எப்பவும் இருக்கலாம்னு உன் உடன்பிறப்புகிட்ட சொல்லு யாமி!" என்ற குரலில் சகோதரிகள் இருவரும் திடுக்கிட்டுத் திரும்ப, அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ஜெய் கிருஷ்ணா.


அவர்களுடைய தலையில் தன் இலைகளை மகிழ்வாய் உதிர்த்தது அந்த வகுள மரம்.


அதைப் பார்க்கும் போது அந்த மரம் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பதுபோல் இருந்தது.


***


நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. மாதினி அவளுடைய அன்றாட பணிகளுடன் மேற்படிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்தாள்.


தினமும் ஜெய்யுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க, இடையில் ஒரு முறை அவன் வற்புறுத்தி அழைத்ததன் பெயரில் அவனுடன் ஒரு 'ஷாப்பிங் மால்' முழுவதையும் சுற்றிவிட்டு வந்தாள் யாமினி.


கனகா பாட்டிக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் மற்ற எல்லாரும் அவரை சமாதானப்படுத்தியிருந்தனர்.


சில பரிசுகளுடன் அவளை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனான் ஜெய். அந்த சின்ன சின்ன விஷயங்கள் அவளுக்கு மலை அளவு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.


நாட்கள் அழகாகச் செல்ல, அவள் படித்த 'என்.கே.காலேஜ் ஆப் என்ஜினியரிங்' பொறியியல் கல்லூரியிலேயே 'அசிஸ்டன்ட் பிரஃபஸர்'ஆக வேலையில் சேர அங்கே வந்திருந்தாள் அவள்.


அவள் படிக்கும் வரை வேறு ஒருவருக்குச் சொந்தமாக இருந்த அந்த கல்லூரி இப்பொழுது புதிதாக வேறு கைக்கு மாரி இருந்தது.


அவளது 'அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்'ரை எடுத்துக்கொண்டு அவள் வரவேற்பு பகுதியிலிருந்த பெண்ணிடம் சொல்ல, "நரேன் சாரை மீட் பண்ணிட்டு ஜாப்ல ஜாயின் பண்ணிக்கோங்க மேம்!" என்றாள் அவள்.


'நரேன் செல்வகுமார். சேர் பெர்சன்' எனப் பொன்னாலான எழுத்துக்கள் பொருத்தப்பட்ட அறை வாயிலில் சில நிமிடங்கள் காத்திருக்க, அழைப்பு வரவும் உள்ளே சென்றாள் அவள்.


நாற்பதைக் கடந்த வயதிலிருந்தான் அந்த நரேன் செல்வகுமார்.


கண்ணாடி அணிந்து பருத்த உடலால் அந்த இருக்கை முழுவதையும் நிரப்பி இருந்தான்.


அவனது தொப்பை மேசையைத் தள்ளிக்கொண்டிருந்தது.


அவன் தன் வழுக்கையை மறைக்க 'விக்' அணிந்திருப்பது நன்றாகப் புலப்பட்டது.


அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படிப்பதுபோல் பாவனை செய்தவனின் பார்வை அவளை அளவெடுக்க, அந்த விபரீதப் பார்வை அவளை ஊசியாய் குத்தியது.


ஏற்கனவே புதிய வேலையில் சேரும் பயத்தின் பிடியிலிருந்தவள் மேலும் பயந்துதான் போனாள் யாமினி!



0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page