மாயா-3
அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உஷ்ணம் தகிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது மாதினிக்கு. கூடவே மகிழம் பூவின் மணம் வேறு சேர்ந்துகொள்ள யாமினியின் நினைவு வந்தது அவளுக்கு.
அவர்கள் கிராமத்து வீட்டில் மிகப்பெரிய மகிழ மரம் ஒன்று உண்டு. அதில் உதிரும் பூக்களை அள்ளி வந்து, வாயிற் திண்ணையில் உட்கார்ந்தவாறு ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டே அழகாகக் கோர்ப்பது அவர்களுடைய சாந்தா மற்றும் கனகா என இரண்டு பாட்டிகளுக்கும் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
அதைப் பேத்திகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் அலாதி ஆனந்தம் அவர்களுக்கு.
சிறு வயதில் அவர்கள் சொற்படி கேட்டு நடந்தவள், வளர வளர தனது விருப்பப்படி தன் பாதையை வகுத்துக்கொண்டாள் மாதினி.
அவளுடைய வேகத்துக்கு நீண்ட கூந்தலைப் பராமரிப்பது ஒத்துவராமல் போகவே, அவள் அதைக் குட்டையாக வெட்டிக்கொள்ள குடும்பத்தில் அவளை யாரும் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டார் சந்தா.
கனகா பாட்டியின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போன்று யாமினி இருக்கவே அவர் மாதினியை கொஞ்சம் கண்டுகொள்ளவில்லை அவ்வளவே.
ஆனால் யாமினியின் நீண்ட கூந்தலை மகிழம்பூ சரம் மேலும் அழகாக்கிக் காண்பிக்க அதனைத் தினமும் சூடிக்கொள்வாள் அவள்.
அதனால்தானோ என்னவோ அவளிடம் அந்த மகிழம் பூவின் மணம் எப்போதுமே இருப்பதுபோல் தோன்றும் மாதினிக்கு.
அந்த மணம் நொடிப் பொழுதிற்குள் அவளை ஏதேதோ நினைவுகளுக்குள் இழுத்து சென்றிருக்க, எதிரே நின்றவனின் நிலையைச் சற்று தாமதமாகவே உணர்ந்தாள் மாதினி.
'யா.. யா..' என்றவாறு அவன் ஏதோ சொல்ல வர, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டதற்காக அவன் பதில் சொல்கிறான் என்றே எண்ணினாள் அவள்.
எனவே, "எங்க கே.ஆர் அஸோஸியேட்ஸ்தான் சீரியல் ஆக்டர் மிஸ்.சிந்துஜாஸ்ரீயோட லீகல் அட்வைசர்ஸ்!
உங்களுக்கும் அவங்களுக்குமான காண்ட்ராக்ட் பத்தி பேசத்தான் நான் வந்திருக்கேன்!" என்று அவள் சொல்ல, "ஓ" என வியந்தான் அவன்.
அவன் முகத்தில் தெரிந்த மிரட்சிக்கான காரணம் புரியாமல், "நான் ஒரு தடவ அதோட ஒரிஜினல்ஸ பார்க்கலாமா!" என அவள் நிதானமாகக் கேட்க, எந்த பதிலும் சொல்லாமல், அனிச்சை செயல் போன்று அங்கே இருந்த 'பீரோ'வை திறந்தவன், அந்த காகிதங்களை எடுத்துவந்து அவளிடம் நீட்டினான்.
அவனது பார்வை ஒரு குழப்பத்துடன் அவள் பின்புறமாகவே வெறித்திருக்க, பின்னல் திரும்பி கதவைப் பார்த்தவள், "நான் கூப்பிடாம மிஸ்டர் மனோகர் உள்ள வரமாட்டார். நீங்க டென்ஷன் ஆக தேவையே இல்ல!" என்றாள் எகத்தாளமாக.
அதில் அவன் நெற்றி சுருங்க, "யா.. யா.." என்றான் மறுபடியும்.
'இவன் என்ன லூசா' என்ற எண்ணம் எழ அந்த காகிதங்களைப் புரட்டியவள், "எப்படி மிஸ்டர் மனசாட்சியே இல்லாம உங்களால இப்படியெல்லாம் செய்ய முடியுது!
ஊர் மொத்தம் குழந்தை குட்டிகளோட குடும்பமா உட்கார்ந்து பார்க்கும் டீவீ சீரியல்ல போய் படுக்கை அறை காட்சியெல்லாம் வெக்கணுமா உங்களுக்கு!
அதுல நடிக்க சொல்லி ஒரு பொண்ணை இப்படி ப்ளாக் மெயில் பண்ணுவீங்களா!
அந்த கேவலத்துக்கு ஒத்துக்கலன்னு சொல்லி அந்த அப்பாவி பொண்ணு கிட்ட ஐம்பது லட்சம் காம்பன்சேஷன் வேற கேக்கறீங்க!
அவங்களுக்குன்னு மக்கள் மத்தியில ஒரு மரியாதை இருக்கு இல்ல; அதை கெடுக்க நினைக்கறீங்க!
உங்களுக்கே இது கேவலமா இல்ல!
நான் உங்களையெல்லாம் சும்மாவே விடமாட்டேன் பார்த்துக்கோங்க!
கோர்ட்டுக்கு இழுத்து உங்களை கதற வெக்கல என் பேர் மாதினி இல்ல!" அவள் ஆக்ரோஷமாகச் சொல்ல, மறுபடியும் அந்த நிழல் உருவம் அவன் முன் தோன்றி, 'உங்க எல்லாரையும் கதரவெக்கல நான் யாமினி இல்லடா!" என்றது மாதினியின் குரலுடன் ஒன்றியவாறு.
விதிர் விதிர்த்துப்போய் அவனது உடல் தொய்ந்து போக, அவசரமாக அவள் கையிலிருந்த அந்த ஒப்பந்தப் பத்திரத்தைப் பிடுங்கியவன், தன 'பேண்ட் பாக்கெட்'டில் கையை விட்டு 'சிகரெட் லைட்டர்'ரை எடுத்து அவசரம் அவசரமாக அதைப் பற்றவைத்தவாறு, "வேண்டாம் நான் இதை கொளுத்திட்டேன்! என்னை ஒண்ணும் செய்யாத விட்று! ப்ளீஸ் என்னை விட்டுடு!" என நடுங்கும் குரலில் கெஞ்சிக்கொண்டே அதைக் கீழே போட்டுவிட்டு, அவனது இருக்கையில் போய் 'தொப்' என விழுந்தான் சதா.
என்ன நடக்கிறது என ஒன்றும் புரியாமல், அவள் அவனிடம் ஏதோ கேட்க வரவும், கரம் குவித்து அவளை கும்பிட்டவன், 'வேளியே போ!' என்பது போல் வாயிற்புறமாகச் சுட்டிக்காட்ட, ஒன்றுமே விளங்காமல் வெளியில் வந்தவள், "என்ன ஆச்சு மாதி! அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட்டுக்கு ஒத்து வருவானா இல்ல லீகலா போக வேண்டியிருக்குமா!" என ஆர்வத்துடன் ரகசிய குரலில் கேட்ட மனோவிற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அவனுடைய கையை பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்தாள் மாதினி.
அந்த மகிழம் பூவின் மணமும் அவளைப் பின்தொடர்ந்தது.
***
கோதண்டராமனின் இடி முழக்கம் போன்ற சிரிப்பொலி அந்த அறை முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருந்தது.
மாதினிக்கு பின்புறமாக எட்டிப்பார்த்தவர், கண்ணடி வழியே தெரிந்த மனோகரைப் பார்த்துவிட்டு, "இதே மாதிரி அங்கேயும் கிளாஸ் பார்ட்டிஷன் இருந்துதா மாதும்மா?" இந்த மனோவை பார்த்துத்தான் அவன் மிரண்டிருப்பானோ?
இவனும் பார்க்க நல்ல வாட்டச் சட்டமா பீம் பாய் மாதிரிதானே இருக்கான்!" என்று அவர் கேட்க, "சீனியர்! வேண்டாம்; அப்பறம் காணடாயிடுவேன்!
இவன் பார்க்கத்தான் பீம்பாய்! நிஜத்துல சோட்டா பீம்! குட்டி குழந்தை கூட இவனைப் பார்த்து பயப்படாது!" என அவள் படபடக்க, மேலும் சிரித்தவர் உள்ளே வருமாறு மனோகரை ஜாடை செய்து அழைத்துவிட்டு, "நீ சொன்னதை அப்படியே அவன் கிட்ட சொல்லட்டுமா?" எனக் கேட்க, "ஐயோ மாம்ஸ்! வேணாம் ப்ளீஸ்! சின்ன பையன்! பொழைச்சு போகட்டும்! சொன்னா ரொம்ப வருத்தப்படுவான்!" என அவள் சொல்ல, "கோவம் வந்தா சீனியர்! காரியத்தை சாதிச்சுக்கணும்னா மாம்ஸா?" என அவர் தீவிரமாய் கேட்க, அதற்குள் மனோகர் உள்ளே வந்துவிடவும் அந்த பேச்சை நிறுத்திவிட்டு, "மனோ! நீ ஏன் இவ கூட உள்ள போகல?
அது அவனோட ஆபீஸ்!
அவனே கொளுத்திட்டு இவளை வம்புல மாட்டிவிட்டா என்ன செய்யறது?" என அவர் கண்டன குரலில் கேட்க, "முந்திட்டு உள்ள போனது அவ; ஆனா கேள்வி கேக்கறது என்கிட்டே" என அவன் வாய்க்குள்ளேயே முனகியவாறு நிற்கவும், "என்னடா கேட்டுட்டு இருக்கேன்! இப்படி மரம் மாதிரி நிக்கற!" என அவர் அதட்ட, "இவதான் சீனியர்! சொல்ல சொல்ல கேக்காம உள்ள போனா; அந்த நேரத்துல நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க!" என அவன் உள்ளே போன குரலில் சொல்ல, "சரி! சரி! ஒழிஞ்சு போ! இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோ!" என அவர் சொல்லவும், விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடியே போனான் மனோகர்.
"யாமி போன தூக்கமே துக்கமே இன்னும் மறையல மாது! உனக்கு எதாவது ஒண்ணுன்னா உங்க தாத்தாவுக்கு யார் பதில் சொல்றது!
பார்த்து கவனமா நடந்துக்கோ!" என எச்சரித்து அவளை அனுப்பினார் கே.ஆர்.
'எது எப்படியோ அந்த சிந்துஜாஸ்ரீ இப்ப இந்த பிரச்சனைல இருந்து வெளியில வந்துட்டாங்க! அது போதும்' என்ற நிறைவுடன் அங்கிருந்து சென்றாள் மாதினி.
***
வார இறுதி என்பதால் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அந்த கேளிக்கை விடுதி உல்லாச விரும்பிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
எந்த பக்கம் திரும்பினாலும் மது! அதன் போதையும் திருப்தி அளிக்காத நிலையில் தடை செய்யப்பட்ட கோகைன் போன்ற போதைப் பொருட்களின் ஆதிக்கத்தில் ஆங்காங்கே சரித்துக்கிடக்கும் இளவட்டங்கள்.
எல்லாருமே மேல்தட்டு வர்க்கத்து இளம் தலைமுறை.
கணக்கு வழக்கில்லாமல் சொத்துக்களைக் குவித்துவிட்டு மேலும் மேலும் குவித்துக்கொண்டிருக்கும் பேராசை பிடித்த அப்பன்களுக்கு அவன் குவிக்கும் பணத்தை அப்படியே அழிக்கப் பிறந்திருக்கும் தறுதலைகள்.
அவர்களுடைய வக்கிரங்களைத் தணித்துக்கொள்ள வழிவகை செய்துகொடுக்கும் ஒரு விடுதிதான் அது.
அங்கே இருந்த பிரத்தியேக அறையில் கொதி நிலையில் எகிறிக்கொண்டிருந்தான் அந்த விடுதியின் சொந்தக்காரன் வீரா.
காரணம் சதா!
"என்ன அறிவுகெட்ட காரியத்தை பண்ணிவெச்சிருக்க சதா நீ!
அந்த சிந்து பொண்ண வெச்சு எவ்வளவு பிளான் பண்ணிவெச்சிருந்தேன் தெரியுமா!
கொஞ்சம் கூட யோசிக்காம அந்த காண்ட்ராக்ட கொளுத்தியிருக்க.
அதுவும் போயும்போயும் ஒரு பொண்ணை பார்த்து பயந்துபோய்! ச்ச!
மறுபடியும் சின்னவர் அந்த பொண்ண கேட்டா என்ன செய்யறது!" என அவன் பொரிந்து தள்ள,
"என்ன சொன்ன; போயும் போயும் ஒரு பொண்ணா! டேஏஏஏய்... அது ஒரு பேய் டா! பேய்!
நான் கண்ணால பார்த்தேன் டா!
அந்த பேய் தான் நம்ப நந்தாவை போட்டு தளியிருக்கணும்!" என அவன் முழு போதையிலும் தெளிவாக விவிரிக்க, "திரும்ப திரும்ப இதையே உளறிட்டு இருந்தேன்னு வை; நானே உன்ன போட்டு தள்ளிடுவேன் பார்த்துக்க.
நான் நல்லா விசாரிச்சுட்டேன்; போன வாரம் உன் ஆஃபிசுக்கு வந்தது மாதினி; அவ அந்த யாமினியோட ஐடென்டிக்கல் ட்வின்!
அவ்ளோதான்!
அவளை பார்த்ததும் குழம்பிப்போய் பயத்துல உனக்கு என்னென்னவோ தோணியிருக்கு; தட்ஸ் இட்!
போ... அந்த சிந்துவை எப்படி மறுபடி ட்ராப்(Trap) பண்றதுன்னு யோசி!" என வீரா சொல்ல, தன் பேச்சை அவன் நம்பவில்லையே என்ற வெறுப்புடன் தள்ளாடியபடி அங்கிருந்து கிளம்பினான் சதா!
அங்கிருந்து வெளியே வந்தவன் அந்த விடுதியைத் திரும்பிப் பார்க்க, அந்த இடம் முழுவதுமே தீ பற்றி எறிவதுபோன்ற மாயை உண்டானது அவனுக்கு!
நெருப்பு உமிழும் கரிய புகை அவனது நுரை ஈரல் முழுவதும் நிரம்பி வழிவதுபோல் மூச்சடைக்க உச்சபட்ச பயத்துடன் அப்படியே மயங்கிச் சரிந்தான் சதா!
***
ஓட்டி வந்த அவளுடைய நானோவை ஓரமாக நிறுத்திவிட்டு, மார்கழி குளிரில் உடல் நடுங்க அவர்கள் வீட்டை நோக்கிப் போனாள் மாதினி!
வீட்டு வாசலில் சாணம் மட்டும் தெளிக்கப்பட்டிருக்க, அதில் கோலமும் அதன் நடுவே சாணத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பூசணி பூவும் இல்லாத வெறுமை யாமினியின் பிரிவை அதிகம் சொல்ல, 'அவ இருந்தா இங்க அழகா பெரிய கோலம் போட்டிருப்பா! ப்ச்' என்ற எண்ணம் மனதை அழுத்த வீட்டிற்குள் நுழைத்தாள் மாதினி!
அவளைப் பார்த்ததும், 'கனகா! நம்ம வக்கீலாம்மா வந்திருக்கு பாரு! ஓடி வா!' என உற்சாகமாகக் குரல் கொடுத்தார் அவளுடைய தந்தை வழி தாத்தா மாணிக்கம்!
"ஆமாம்! எனக்கு அப்படியே ஓடி வர வயசு பாருங்க ம்கும்!' என நொடிந்தவாறு அங்கே வந்தவர், "மாது குட்டி! மாடு இப்பதான் கறந்துது! பால் காய்ச்சி தரேன் சாபிடறியா!' எனப் பேத்தியிடம் கரிசனையாகக் கேட்டார் கனகா.
"பெரியம்மா இல்லையா பாட்டி!" என அவள் கேட்க, "சாந்தாவை பார்த்துட்டு வரேன்னு போயிருக்கா! இப்ப வந்துடுவா!' என்றார் கனகா பாட்டி.
"சரி பாட்டி! நீங்க இருங்க நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்!" என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் மாதினி.
அவள் சென்றதும் பாட்டியின் கண்கள் கலங்கவும், "ப்ச்.. கனகம்! தேவை இல்லாம அழுது எல்லாரையும் கலவரம் பண்ணாத" என அதட்டினார் மாணிக்கம் தாத்தா.
சில நிமிடங்களில் பால் குவளைகளுடன் வந்தவள் தாத்தா பாட்டிக்குக் கொடுத்துவிட்டு தானும் ஒரு குவளையை எடுத்துப் பருக, அங்கே வந்த அவரது மூத்த மருமகள் தங்கம், "மாது குட்டி! வந்துட்டியா! நல்லதா போச்சு! நீ வந்த உடனே சிவா தாத்தா உன்னை அங்க வரச் சொன்னாரு!" என்றவர் மாமியாரை நோக்கி, "முடிஞ்சா உங்களையும் மாமாவையும் கூட அங்க வர சொன்னார் அத்தை!" என மாதினியை ஒரு ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே சொல்ல, அவர் எதற்காக அழைக்கிறார் என்பது கொஞ்சமாகப் புரியவும், "பெரியம்மா! எல்லாரும் சேர்ந்து எதோ கூட்டுச் சதி செய்யற மாதிரி தெரியுதே!" எனக் கோபமாக அவள் கேட்க,
"மாது! இது கோர்ட் இல்ல; நம்ம பரம்பரை வீடு; உனக்கு முன்னால நிக்கறது உன்னோட பெரியம்மா; அது ஞாபகம் இருக்கட்டும்; பணிவா நடந்துக்கோ!" என அவளைக் கனகா பாட்டி கடிந்துகொள்ளவும், 'சாரி பெரிம்மா!" என்று இறங்கிய குரலில் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டை நோக்கிப் போனாள் மாதினி!
அங்கே ஊஞ்சலின் அருகில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி 'வாடா மாது கண்ணா! வா வா!" எனப் புன்னகையுடன் அவளை வரவேற்ற அவளுடைய தாய்வழி தாத்தா சிவராமன், ஊஞ்சலை நோக்கி கை காண்பிக்க, அதில் அவர் கடைவிரித்திருந்த புகைப்படங்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.
"எல்லாம் மாப்பிள்ளை போட்டோஸ்! உனக்கு பிடிச்ச பையனை நீ செலெக்ட் பண்ணலாம்!" என்றார் அவர்களை நோக்கி வந்த சாந்தா பாட்டி தோரணையாக.
ஏனோ அந்த நொடி அவள் மனதிற்குள் 'சம்மன்' இல்லாமலேயே 'ஆஜர்' ஆனான் ஜெய் கிருஷ்ணா!
மிரட்டுவாள் மாயா!
Yorumlar